February 6, 2013

சாதி இனிஷியல் மாதிரி

“லக்கிலூக். ஏதோ பேசணும்னு தோணித்து” இப்படித்தான் ஒவ்வொரு முறையும் பேசும்போது ஆரம்பிப்பார் டோண்டு ராகவன். இப்படி ஆரம்பித்தாலே நம்மை திட்டி எங்காவது எழுதியிருப்பார். அல்லது பின்னூட்டம் போட்டிருப்பார்.

ஏப்ரல் 2006ல் இருந்து பழக்கம். முதன்முதலாக ஒரு வலைப்பதிவில் நான் கமெண்ட் இட்டது என்றால் அது டோண்டுவின் பதிவில்தான். அவரது சஷ்டியப்த பூர்த்தி பதிவில் வாழ்த்துகள் தெரிவித்திருந்தேன்.

லக்கிலுக் said...

வணக்கம் டோண்டு...
நான் உங்கள் பக்கத்து ஊர்க்காரன் தான்... மடிப்பாக்கம்...
உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்!

உடனே செல்போன் எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டு பேசினார். அதிலிருந்து பொதுவாக இந்த ஏழு ஆண்டுகளில் அதிகபட்சம் பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு முறையாவது பேசிவிடுவார். பொதுவாக அவர் பேசிக்கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன்.

மதம், சாதி விவகாரங்களில் மிக மோசமான அடிப்படைவாதி. கிட்டத்தட்ட இந்து தாலிபான் என்றே சொல்லலாம். அதை தவிர்த்துப் பார்த்தால் அவர் பக்காவான ஜெண்டில்மேன். தான் பழகும் யாரிடமும் அவர்களுடைய சாதியை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார். பார்ப்பனர் என்றால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் கூட வேற்றுமை காட்டாமல் பழகக்கூடியவர்தான்.

“நீ அய்யர்தானே? எதுக்கு அவாளையே திட்டுற?” லைட்டாக போட்டு வாங்குவார்.

“மடிப்பாக்கத்துலே இருந்தா அய்யரா சார்? கடைசி வரைக்கும் உங்களாலே என்னோட அந்த அடையாளத்தை மட்டும் கண்டுபிடிக்கவே முடியாது”

“சாதியை மறைக்கறது பாவம்பா. அதுவும் இனிஷியல் மாதிரி நம்மோட அடையாளம்தான்”

அவரோடு சாதி, மதம் பற்றியெல்லாம் விவாதித்தால் அலுப்பாகவும், அயர்ச்சியாகவும், அதே நேரம் கோபமாகவும் இருக்கும். ஒருமுறை கண்டிப்பாகவே சொல்லிவிட்டேன். “நமக்கு பேச நிறைய விஷயம் இருக்கு சார். இது மட்டும் வேணாம். வேணும்னா நெட்லே சண்டை போட்டுக்கலாம்”

வாக்கிங் என்கிற பெயரில் அராஜகம் செய்வார். சாதாரணமாக ஏழு, எட்டு கிலோ மீட்டர் நடப்பார். “உங்க வீட்டு பக்கத்துலே பொன்னியம்மன் கோயில் கிட்டே இருக்கேன் லக்கிலூக்” என்பார். “சார். டைம் இப்போ ஒன்பதரை. நான் ஆபிஸ் வந்துட்டேன்” என்பேன்.

ஒரே ஒருமுறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன்.

“இந்து காலனி பிள்ளையார் கோயில் கிட்டே இருக்கேன் சார்”..

“அப்படியே இரு...”

பதினைந்து நொடி கழித்து...

“யூ டர்ன் அடிச்சி திரும்பிப் பாரு” சட்டை போடாத வெற்றுடம்புடன் நின்றிருந்தார்.

மிகத்தீவிரமான வைணவர். நங்கநல்லூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் வைணவ கோயில்கள் அத்துணையும் அத்துபடி. அவர் வீட்டுக்கு சிறிது தூரத்தில் இருக்கும் பெருமாள் கோயிலில் சிலமுறை என் அப்பாவைப் பார்த்துப் பேசியிருக்கிறார். “நெத்தியிலே விபூதி, குங்குமத்தோட வீரசைவர் மாதிரி இருப்பாரு. கருணாநிதிக்கு ரொம்ப வக்காலத்து வாங்கிப் பேசுவாரு. உன்னோட அப்பான்னு எனக்குத் தெரியாது”. டோண்டு சார் தன்னை வீரவைணவராக –ஆழ்வார்க்கடியானின் அடுத்த பிறப்பாக- தீவிரமாக நம்பியவர்.

“சார்! லஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு ஒய்ஃப்போட வந்தேன்”

“அங்கே நம்ம ஃப்ரெண்டுதான் அர்ச்சகர். உங்க அப்பாவுக்கும் தெரிஞ்சவர்தான்”

ஏதாவது கோயிலுக்குப் போனால் டோண்டு சாரிடம் ‘அப்டேட்’ செய்துவிடுவேன்.

“பார்த்தசாரதி உக்கிரமானவராச்சே... பொண்டாட்டியோட போற கோயிலா அது? அதுக்கெல்லாம் வேற வேற கோயிலு இருக்குப்பா...”

போனமாதம் சோளிங்கர் போய்விட்டு வந்து மறுநாள் அவரோடு பேசினேன். “நானும் போகணும்னு நெனைச்சிக்கிட்டிருக்கேன். ஆனா அவ்ளோ படி ஏறமுடியுமான்னு தெரியலை. வருஷத்தோட முதநாளே நரசிம்மரை பார்த்திருக்கே. நல்லா வருவே”

நீண்டநாட்களாக மனைவி, குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஜனவரி இரண்டு அன்று பேசும்போது “குழந்தைகளை கூட்டிக்கிட்டு வந்து உங்க கிட்டேயும், மாமி கிட்டேயும் பிளெஸ்ஸிங் வாங்கணும் சார்” என்றேன். ஏனோ கடைசிவரை போகமுடியாமலேயே போய்விட்டது.

“பேஷா வா. வர்றதுக்கு முன்னாடி ஒரு போன் மட்டும் பண்ணிடு”

தொழில் விஷயத்தில் ரொம்ப கறார். ரெண்டு மூன்று மொழிப்பெயர்ப்பு அசைண்மெண்ட் கொடுத்தபோது அவரது ஃபீஸ் செட் ஆகவில்லை. ஒரு சொல்லுக்கு மூன்று ரூபாய், நான்கு ரூபாய் கேட்பார். “உனக்கும் கட்டணும். எனக்கும் கட்டணும். அப்படியில்லாமே வேலை பார்க்கக்கூடாது”

கடைசியாக ஷாஜி மூலம் வந்த ஒரு துபாஷி வேலைக்கு அணுகியபோது, “உடம்பு முடியாம இருக்கேன். இப்பல்லாம் அவ்வளவா வெளிவேலைக்கு போறதில்லை” என்று மறுத்தார்.

இடையில் ரொம்பநாள் இடைவெளி ஏற்பட்டது. ஒரு விழாவில் திடீரென்று பார்த்தபோது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தார். “உடம்புக்கு என்ன” என்று விசாரித்தபோது, “வயசாயிடிச்சில்லே” என்றார். பின்னர் தனக்கு தரப்படும் ட்ரீட்மெண்ட் என்னவென்று விலாவரியாக விளக்கினார். “இந்த ட்ரீட்மெண்ட் எந்த நோய்க்குன்னு உனக்கே தெரியுமில்லே?” அவருக்கு ‘கேன்சர்’ என்பதை நேரடியாக சொல்ல சங்கடப்பட்டார்.

நேற்று காலை பேசினார். குழந்தையை பள்ளிக்கு கிளப்பும் அவசரத்தில் இருப்பதாக சொன்னேன். “உன்னோட பதிவிலே ஒரு கமெண்ட் போட்டிருக்கேன். உனக்கு ஆதரவாதான் போட்டிருக்கேன். பார்த்து ரிலீஸ் பண்ணிடு” என்று ஷார்ட்டாக முடித்துக் கொண்டார். இன்று காலை அவரது வீட்டுக்கு இறுதிமரியாதை செலுத்த போனேன். இருபத்தி நான்கு மணி நேர இடைவெளிதான் எத்தனை கொடூரமானது?

கொஞ்சநாள் முன்பாக பேசும்போது விஸ்வரூபம் பற்றி பேச்சு வந்தது. “சுஜாதாவுக்கு கடைசிக்காலத்தில்தான் புரிஞ்சது. கமல்ஹாசனுக்கு இப்போ புரியும். தன்னோட சொந்த சாதியை மறுக்கிறவனுக்கெல்லாம் கடைசியிலேதான் புத்தி வரும்” என்றார். ஆனாலும் விஸ்வரூபம் பார்க்க ஆவலாக இருந்தார். “நம்ம தியேட்டருலே போடுவானில்லே?” என்று விசாரித்தார்.

நம்ம தியேட்டர் என்றால் நங்கநல்லூர் வெற்றிவேல். அத்தியேட்டரின் பூர்வாசிரமான பெயரான ‘ரங்கா’வைதான் உச்சரிப்பார். வீரவைணவர் ஆயிற்றே? அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவு. அரிதாகதான் படம் பார்ப்பார். அதையும் அங்கே மட்டும்தான் பார்ப்பார். நாளை வெற்றிவேலில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்.

டோண்டு சார் என்றால் உடனடியாக அவரது முரட்டு உழைப்புதான் நினைவுக்கு வரும். இரண்டாவது குழந்தை பிறந்தபோது பேசினார். “ரெண்டுமே பொண்ணா? போச்சி போ. நீ சாகுறவரைக்கும் உழைச்சிக்கிட்டே இருக்கணும் லக்கிலூக். ரிட்டயர்மெண்ட் என்கிற பேச்சே இருக்கப்படாது”. இன்று முழுக்க ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கப் போகிறேன். அவருக்கு என்னால் செலுத்தப்படக்கூடிய அஞ்சலி இதுதான்.

அவர் உயிரைவிட மேலாக நேசிக்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை சமீபத்தில்தான் தரிசித்துவிட்டு வந்தார். வைகுண்டத்திலாவது அவருக்கு மகரநெடுங்குழைகாதன் ஓய்வு தரட்டும். Bye.. Bye Dondu sir…

டோண்டு குறித்து எழுதிய பழைய பதிவு : டோண்டுல்கர்

56 comments:

 1. Hats off Dondu Sir!!! அவருடைய போஸ்டுகளை எப்போதும் விரும்பிப் படிப்பவன் நான்...As you said அவர் யாருடனும் compromise பண்ணாத ஒரு தீவிரவாதிதான் (எழுத்திலும், கருத்திலும்)....அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.!!!

  ReplyDelete
 2. :(

  ஒளிவு மறைவின்றிய பதிவு.

  டோண்டு இராவகன் வடகலை ஐய்ங்காருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 3. ஆழ்ந்த இரங்கல்கள் :-(

  ReplyDelete
 4. இதைவிட அருமையான tribute இருக்க முடியாது. டோண்டு சாருடைய பதிவுகளை ரொம்ப மிஸ் பண்ணுவோம்.

  ReplyDelete
 5. முதலில் டோண்டு இராகவனுக்கு அஞ்சலி!

  நேர்மையான இரங்கற் பதிவு.

  ReplyDelete
 6. //இன்று முழுக்க ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கப் போகிறேன். அவருக்கு என்னால் செலுத்தப்படக்கூடிய அஞ்சலி இதுதான்.//

  This is the real tribute to him. Well written as always.

  RIP Dondu Sir.

  ReplyDelete
 7. அவரை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ... படித்ததில்லை... உங்கள் பதிவை படிக்கும் போது அவரை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.... அவரின் அன்னமா சாந்தி அடிய என் பிராத்தனைகள்

  ReplyDelete
 8. அருமையான பதிவு.

  டோண்டு சார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். :(

  RIP Dondu sir :(

  ReplyDelete
 9. அவரை இதுவரை பார்த்ததோ பேசியதோ இல்லையென்றாலும் , ஒரு நண்பரை இழந்தது போல இருக்கிறது.
  ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 10. விவாதக்களத்தை தாண்டி ப்ளாக்கராக உள்நுழைந்த காலத்தில் டோண்டுவை பார்த்திருக்கிறேன்... பேசியதில்லை... லக்கிலுக் - டோண்டு சண்டைகள் பிரசித்தம் தான்...

  ReplyDelete
 11. ஒரு பதிவு அவரைப்பற்றிய என்னுடைய ஒட்டு மொத்த observationயும் மாத்திடுச்சு.. இரங்கல் பதிவுன்னா இதைத்தான் செய்யணும்..

  ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 12. அருமை...அருமை...ஆழமான இரங்கல் தெரிவித்திருக்கிறீர்கள்... 'மேகங்கள் மோதிக்கொண்டாலும் வானம் அசைவற்றிருக்கிறது' என்று உபநிஷத் வரிகள் ஒன்று உண்டு...எண்ணங்கள் மோதிக்கொண்டாலும்...மோதாத ஒன்று உண்டு...எதிர்க்கருத்துகள் இருந்தாலும் அது மாறாத ஒன்று...

  ReplyDelete
 13. டோண்டு அவர்கள் மரணம் அதிர்ச்சியாக தான் உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிவு நெகிழ்வு.

  இணையத்தில் எதிர் எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள் எப்படி பழகலாம் என்பதற்கு உதாரணமாக இந்த நட்பை நிச்சயம் சொல்லலாம் !

  ReplyDelete
 14. ஆழ்ந்த இரங்கல்கள் :-(

  ReplyDelete
 15. ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 16. எதிரெதிர் கருத்துகள் இருந்தாலும் நட்பை பேணியுள்ளீர்கள்.

  ஒரு முறை தான் அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். சந்தித்ததில்லை.

  தமிழ் பதிவுலகிற்கு பேரிழப்பே.

  ஆழ்ந்த அஞ்சலி.

  ReplyDelete
 17. கொழுவி என்றொரு வலைப்பதிவு தொடங்கவே காரணமாயிருந்தவர். ஆரம்பத்தில் அதனை மஸ்ட்டு என்றுதான் தொடங்கியேயிருந்தோம். அவரது ஈழ நிலைப்பாடுகளுக்கெதிராக 2004 களில் கடுமையாக சண்டையிட்டும் நக்கலடித்தும் வந்திருக்கிறேன். ஒன்றிரண்டு தடவைகள் ஜடோக்கில் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் ஜெர்மனில் எழுதும் வரிகளை கூகுள் ட்ரான்சிலேட்டரில் மாற்றி பதில் சொல்வதற்குள் தாவு தீர்ந்திருக்கிறது.

  முன்பு நடக்கிற வலைப்பதிவர் சந்திப்புக்களில் அவர் இறுதியாக சமோசா சாப்பிட்டது வரை எழுதுவார். அதிலும் பங்கீட்டு முறையில் அனைவரும் பணம் செலுத்த வேண்டுமென்பார். சுண்டெலி.. சமீபத்தில் 1960 இல் எல்லாம் அவரது பிரத்தியேக வார்த்தைகள்.

  துயரமாயிருக்கிறது. நான் நினைக்கிறேன், வன்மம் அற்ற நேர்மையான கருத்துச் சண்டையின் உச்ச விழுமியமே இப்படியொரு அஞ்சலி பிறப்பதுதான்.. என..

  ReplyDelete


 18. அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு

  http://suvanappiriyan.blogspot.com/2013/02/blog-post_6.html

  ReplyDelete
 19. ஆழ்ந்த இரங்கல்கள். அவரது நினைவாக மகர நெடுங்குழை காதர் பாசுரம் இதோ:

  நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்!

  சிகரம் அணிநெடு மாடம் நீடு தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,

  மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,

  நிகரில் முகில்வண்ணன் நேமி யானென் னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே?

  ReplyDelete
 20. டோண்டு அவர்கள் மரணம் அதிர்ச்சியாக தான் உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள் உங்கள் பதிவை படித்ததும் மனம் நெகிழ்ந்துவிட்டது

  ReplyDelete
 21. அவர் மறைந்த செய்தி அறிந்து வருந்திய அடுத்த சில நிமிடங்களிலிருந்து, உங்கள் அஞ்சலிப்பதிவைத்தான் எதிர்பார்த்திருந்தேன். என்னை ஏமாற்றவில்லை லக்கி நீங்கள். உண்மையான அஞ்சலி என்பது இதுதான்.

  வி மிஸ் யூ டோண்டு சார்.

  ReplyDelete
 22. :(

  டோண்டு சார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய என் பிராத்தனைகள்!

  ReplyDelete
 23. எந்த‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்புன்னாலும் முத‌ல்ல‌ வ‌ந்து நிக்குற‌ சில‌ர்ல‌ அவ‌ரும் ஒருத்த‌ர். கையில‌ சின்ன‌ நோட்டு வெச்சிகிட்டு வ‌ந்த‌வ‌ங்க‌ யார் யார்னு நோட் ப‌ண்ணிட்டு வீட்டுக்கு திரும்பின‌ உட‌னே முத‌ல் வேலையா ப‌திவு போட்டுடுவார்.. ப‌திவுக‌ளில் ச‌ண்டை போட்டுகிட்டாலும், நேரில் அவ‌ர் யாரிட‌மும் விரோத‌ம் பாராட்டிய‌தாவோ அவ‌ரிட‌ம் யாரும் விரோத‌ம் காட்டிய‌தாக‌வோ நினைவில் இல்லை. ப‌திவுல‌க‌த்துக்கு பெரிய‌ இழ‌ப்பு அவ‌ரோட‌ ம‌ர‌ண‌ம்.. :((

  ReplyDelete
 24. நீங்க ஏன் தமிழில் எழுதக்கூடாது என்று என்னை தமிழுக்கு இழுத்துவந்தவர் . . . செல்லா ஜாதி இருந்தா நல்லதுதானே என்று அப்பாவியாய் கேட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் ! அவர் இறந்த செய்தியை தம்பியின் பதிவில் பார்த்து நிச்சயம் அதிர்ந்தேன் ! வி.மிஸ்,யூ டோண்டு ராகவன் சார் ! தமிழ் வலைப்பூவுலக வரலாற்றில் நிச்சயம் உங்கள் பங்கு மகத்தானது ! அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் . . . ;-(

  ReplyDelete
 25. திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

  சினிமா விரும்பி

  http://cinemavirumbi.blogspot.in

  ReplyDelete
 26. யுவா, நெகிழ்ச்சியான பதிவு. இது உண்டாக்கும் வலிகள், அவருக்கான என் அஞ்சலிகள்.

  ReplyDelete
 27. நண்பருக்கு கண்ணீர் அஞ்சலி!!!

  ReplyDelete
 28. ஆழ்ந்த இரங்கல்கள் !

  ReplyDelete
 29. அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 30. உங்கள் அஞ்சலியோடு என்னையும் இணைத்துக்கொள்கிறேன். 2005ம் ஆண்டு அவரை ரத்னா கபேயில் சந்தித்து உரையாடியது நினைவுக்கு வந்தது. எவ்வளவு தனது கருத்தில் எந்த சமரசமில்லாது இருந்தவர். அவர் அரசியல் நிலைப்பாடு தவிர்த்து அவருடைய மொழிபெயர்ப்பு அனுபவங்கள், வாழ்வியல் அனுபவங்கள் பற்றிய பதிவுகள் மிக சிறப்பானவை. முதன் முதலில் ஜெயா தொலைக்காட்சியில் அவரது நேர்காணல் வந்ததை காண அதிகாலை வரை விழித்திருந்து பார்த்தது ஞாபகம் வந்தது. அந்த எத்தனம் அவரது நட்பின் பால் தூண்டப்பட்டது என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். அவர் ஆத்மா அவர் விரும்பிய இறைவனிடம் அமைதியுறட்டும்.

  ReplyDelete
 31. எதிர் துருவங்கள்தான் ஈர்க்கும் என்பது போல , நீங்கள் இருவரும் ஈர்க்கப்பட்டது இயல்பானதுதான்.. வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல் , நீங்கள் உரிமை எடுத்து அவரை சீண்டுவதையும் , அவரும் பதிலடி கொடுப்பதும் இனிமேல் வரவே வராது...
  முதலில் செய்தியை பார்த்தபோது , அவரை வைத்து விளையாடுகிறீர்களோ என்றே நினைத்தேன்..

  அவரைப்போல நம்மால் எல்லாம் உழைக்க முடியுமா என்ற ஏக்கம் பிறக்கிறது..கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்தாரே... முந்தய நாள் வரை உங்களுக்கு பின்னூட்டம் இட்டு இருக்கிறாரே.. என்ன சொல்வதன்றே தெரியவில்லை.. மிக மிக வருந்துகிறேன்.. கண்ணீர் அஞ்சலி...

  ReplyDelete
 32. மனிதர்கள் வெவ்வேறு திசையில் பயணித்தாலும் சந்திக்கும் புள்ளிகள் இருக்கவே செய்கின்றன என்பதற்கு உங்கள் இருவரின் நட்பும் சிறந்த எடுத்துக் காட்டு. நல்ல அஞ்சலிக் கட்டுரை. டோண்டு அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 33. டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேநீபடி தான் வலைத்தளத்தில் சொல்லியிருப்பார்.

  அந்த வலைப்பூ அத்தனையும் அவரின் அனுபவங்கள். சொல்வதை நேராக சொல்லக்கூடிய மனோதிடம் இருந்தது அவரிடம்.

  அவரின் வாடிக்கையாளர்களை அனுகும் முறைகள் பதிவு எனக்கு தொழில்ரீதியாக ஒரு தெளிவைத்தந்தது.

  அவரை நேரில் பார்த்தது கிடையாது போனில் பேசியது கூட கிடையாது ஆனாலும் கூட உற்ற தோழரை இழந்து போலிருக்கிறது.

  டோண்டு அவர்கள் ஆன்மா சந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 34. Lucky, I have never liked any of your posts even though I visit your blog every day. but this is different. What else can I say. It's really unfortunate that I can't post condolences in Dondu's blog for it is not longer up-to-date.

  ReplyDelete
 35. RIP Dondu sir...

  @lucky nice , true from the bottom of heart

  ReplyDelete
 36. நேற்று மதியம் 2 மணி அளவில் தான் அவர் வீட்டிற்கு செல்ல முடிந்தது. அதற்க்குள் சுடுக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள். அங்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடிந்தது.

  ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம்.
  கடந்த வருடம் அவரிடம் பேசாமல் விட்டுவிட்டேன் என்று மிக வருத்தம்.

  எனக்கு தெரிந்த வரை அவர் சாதி வெறியர் அல்ல. ஆனால் சுயசாதி அடையாளங்களை முற்றாக தூக்கிஎறியாதவர் என்று தான் சொல்ல வேண்டும். மிக இனிய நண்பர். என்னை வலையுலகத்தில் அறிமுகம் செய்தவர்.

  ReplyDelete
 37. டோண்டுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அவரைப் பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது நெகிழ்ச்சியாக உள்ளது....அவரது இறப்பு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

  -அப்துஸ் ஸமத்

  ReplyDelete
 38. Condolences to you on your loss of a good friend. I am blaming myself for having not followed his blogs regularly when I note that he has been a hero figure / friend to most of the popular bloggers and the number of condolences from known and unknown people in various blog posts. May his soul rest in peace. - R. J.

  ReplyDelete
 39. டோண்டு சார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய என் பிராத்தனைகள்!

  ReplyDelete
 40. நிறைவான அஞ்சலி யுவா! பதிவுலகில் இருப்பவர்கள் அவரது பதிவை படிக்காமல் இருந்திருக்க முடியாது! அத்தனை அகதளமாக இருக்கும். அவருக்கு எனது அஞ்சலியும் கூட!

  ReplyDelete
 41. எனக்கும் டோண்டு சாரை பற்றி அதிகம் தெரியாது..

  கேள்வி பட்டிருக்கேன்..

  அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை ப்ரார்த்திக்கறேன்..

  ReplyDelete
 42. பதிவை வாசிச்சுக்கிட்டே வரும்போது பாதியில் கண் தெரியலை. கண்ணீரை அடக்க முடியலையேப்பா:(

  ReplyDelete
 43. எனக்கும் டோண்டு சாரை பற்றி அதிகம் தெரியாது..

  கேள்வி பட்டிருக்கேன்..

  அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை ப்ரார்த்திக்கறேன்..

  ReplyDelete
 44. Hi Lucky: I am regular reader of your blog, though I hate many of your posts this one is really ultimate and hats off. This clearly shows how matured you are. I always thought you are baised writer but now I have changed my view. RIP dondu sir..

  ReplyDelete
 45. ஆழ்ந்த வருத்தங்கள்..

  ReplyDelete
 46. தமிழ் பிளாக்குலகத்திலிருந்து உண்மையான அஞ்சலி இந்தபதிவு... RIP டோண்டுசார்

  ReplyDelete
 47. டோண்டு அவர்களின் வலைபதிவு விலாசம் கிடைக்குமா????

  ReplyDelete
 48. ஒரே ஒரு முறை மட்டும் அவர் வீட்டுக்கு போயிருக்கேன். அவர் பதிவுகள் டைப்பும் அந்த கம்யூடர்,நிஜமாகவே ஒரு ஆச்சரியம் தான்.

  ReplyDelete