25 பிப்ரவரி, 2013

கிராந்திவீரா சங்கொலி ராயண்ணா

கர்னாடகாவில் கித்தூர் என்றொரு சமஸ்தானம் இருந்தது. அதன் ராஜா மறைந்ததுமே பிரிட்டிஷார் அந்த சமஸ்தானத்தை தாங்கள் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ராணி சென்னம்மாவோ வெள்ளையர்களுக்கு ஒரு பிடி மண் தரமாட்டேன் என்று வீரமாக போரிடுகிறார். 1824ல் நடந்த போரில் ராணி சென்னம்மா தோற்று பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு, ஒரு கோட்டையில் சிறை வைக்கப்படுகிறர்.


ராணி மீது விசுவாசம் கொண்டோர் சிலர் வெளியே பிரிட்டிஷாருக்கு எதிராக தொடர்ச்சியாக கலகம் விளைவித்து வந்தனர். அவர்களை ஒன்றிணைத்துப் போராடிய மாவீரன்தான் சங்கொலி ராயண்ணா. உள்ளூர் மக்களை திரட்டி வெற்றிகரமான கொரில்லா ராணுவம் ஒன்றினை உருவாக்கினார். பிரிட்டிஷாரின் அரசு அலுவலகங்களை, குறிப்பாக கஜானா இருக்கும் அலுவலகங்களை திடீர் திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தி ஸ்தம்பிக்க செய்வார். பிரிட்டிஷ் படையினரை குழப்பி, மறைந்திருந்து தாக்கி சிறுசிறு குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இந்நிலை நீடித்தது. வெள்ளை இராணுவம் இவரைப் பிடிக்க தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் கொரில்லா படை அமைத்த முன்னோடியாக இவரை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 1830ஆம் ஆண்டு இவர் வெள்ளையரிடம் பிடிபட்டார். தூக்கில் தொங்கவிடப்பட்டார். நம்மூரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் இங்கே போற்றப்படுவதைப் போல, கர்னாடகாவில் சங்கொலி ராயண்ணா.

akkam in
தமிழில், தெலுங்கில், மலையாளத்தில் எல்லாம் அவ்வப்போது சரித்திரப் படங்கள் பிரும்மாண்டமாக தயாரிக்கப்படும் போது கர்நாடகத்தில் இருப்பவர்கள் மட்டும் வாயில் குச்சி ஐஸ் வைத்துக்கொண்டு ஏக்கமாக வேடிக்கை பார்ப்பார்கள். கர்நாடகாவின் சினிமா எல்லை மிகச்சிறியது என்பது முதல் காரணம். ஓவர்சீஸ் மார்க்கெட் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. எனவே ஏழு, எட்டு கோடியில் படம் எடுத்தாலே பட்ஜெட்டை வசூலிப்பதற்குள்ளாகவே தாவூ தீர்ந்துவிடும்.


நம்மூர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு ராயண்ணாவாக நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. தமிழிலும், தெலுங்கிலும் பிரபலமான நடிகராக இருந்தாலும் அவரது தாய்மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏதாவது செய்ய ஆசைப்பட்டது இயல்புதான். விலங்குகளை துன்புறுத்தியதாக கூறி இம்சை அரசன் படத்துக்கு பிரச்சினை வந்தபோது, எதற்கு வம்பு என்று ராயண்ணா ஆசையை அர்ஜூன் ஏறக்கட்டினார்.

ஆனாலும் அர்ஜூன் கிளப்பிவிட்ட ஆசைப்பொறி தீயாய் நிறைய பேருக்கு பரவ ஆரம்பித்தது. தயாரிப்பாளர் ஆனந்த் அப்புகோல் துணிச்சலாக செலவு செய்ய முடிவெடுத்தார். கிட்டத்தட்ட 30 கோடி செலவாகும் என்று தெரிந்தாலும் ராயண்ணா முதலுக்கு மோசம் செய்ய மாட்டார் என்று நம்பினார்.

kranthi-01
நிறைய படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், குறிப்பிடத்தக்க ஹிட்கள் கைவசமிருந்தாலும், தனக்கான நிலையான இடத்தை தக்கவைக்க போராடிக் கொண்டிருந்த நடிகர் தர்ஷன் ராயண்ணாவாக நடிக்க முன்வந்தார். இந்த படம் தன்னுடைய வாழ்வை மட்டுமின்றி கன்னட சினிமாவின் தலையெழுத்தையே புரட்டிப் போடப்போகிறது என்றும் அவர் தீவிரமாக நம்பினார். இயக்குனர் நாகன்ணாவோடு சேர்ந்து கேசவாதித்யாவும் ராயண்ணாவின் வாழ்க்கையை கச்சிதமான சினிமாவாக எழுதத் தொடங்கினார்கள்.


ஹீரோயினாக நடிக்க ப்ரியாமணியை அணுகினர். ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டவர், பிற்பாடு ஏனோ சரித்திரப் படத்தில் நடிப்பது தனக்கு ஒத்துவராது என்று விலகிவிட்டார். அந்த கேரக்டருக்கு நிகிதாவை ஒப்பந்தம் செய்தார்கள் (சரோஜாவில் கோடான கோடிக்கு குத்தாட்டம் போட்டவர்). ராணி சென்னம்மா கேரக்டரில் ‘கித்தூர் சென்னம்மா’ (1963) என்கிற படத்தில் சரோஜாதேவி சிறப்பாக நடித்திருந்தார். எனவே அதைவிட சிறப்பாகவோ அல்லது அதற்கு இணையாகவோ சென்னம்மாவாக நடிப்பவர் செய்யவேண்டும். எனவே கொஞ்சம் தாராளமாக பட்ஜெட்டில் இந்த கேரக்டருக்கு இடஒதுக்கீடு செய்து, ஜெயப்ரதாவை அணுகினார்கள். அவரும் மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டார். படப்பிடிப்பு முடிந்ததும் ஜெயப்ரதா சொன்னதுதான் ஹைலைட். “இதுவரை சுமார் 700 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தென்னிந்தியாவில் இருந்து இவ்வளவு பிரும்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படத்தில் நான் நடிப்பது இதுவே முதன்முறை”

அவர் சொல்வது உண்மைதான். போர்க்காட்சிகளுக்காக மட்டுமே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை தண்ணீராக செலவழித்திருந்தார் தயாரிப்பாளர் ஆனந்த் அப்புகோல். ஆயிரம் பேர் கொண்ட டீம் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் போனது. முப்பது யானைகள். நூற்றுக்கணக்கான குதிரைகள். நன்கு பயிற்சி பெற்ற முன்னூற்றி இருபது ஸ்டண்ட் கலைஞர்கள். ஏழு கேமிராக்கள். அதில் ஒன்று லேட்டஸ்ட் மாடலான போட்டோஜெனிக் 500. இடையில் மனைவியுடனான தகராறு, போலிஸ் கம்ப்ளையண்ட், கைது என்று தர்ஷன் பிஸியாகிவிட்டதால் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமானது. ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிப்பின் போது, ஓடிக்கொண்டிருந்த குதிரையிலிருந்து பழம்பெரும் நடிகர் ஸ்ரீனிவாசமூர்த்தி எதிர்பாராவிதமாக விழுந்தார். படத்தின் ஹீரோவே நிஜ ஹீரோவாகவும் மாறி அவரை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா சிரமங்களையும் மீறி படம் தயாரானது. எதிர்ப்பார்த்த பட்ஜெட்டை விட பத்து கோடி அதிகமாகவே செலவாகியது என்றும் சொல்கிறார்கள். தலையில் துண்டு போட்டுக்கொண்டு தயாரிப்பாளர் படத்தை கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்தார். பொதுவாக கன்னடப் படங்கள் வெள்ளிக்கிழமைதான் வெளியாகும். கிராந்திவீரா சங்கொலி ராயண்ணா வியாழக்கிழமை களமிறக்கப்பட்டார். அன்று அரசு விடுமுறை தினம் என்பது முக்கியமான காரணம். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ ஹீரோ தர்ஷன் குதிரையில் தியேட்டருக்கு வந்தார்.
 sangolli_rayanna                              
பெங்களூர் நகரத்தில் மட்டுமே 20 மல்டிப்ளக்ஸ்களில் வெளியானது. ஒட்டுமொத்தமாக 130 தியேட்டர்கள். ரசிகர்கள் தங்கள் அபிமான வரலாற்று வீரனை கைவிடவில்லை. ஓப்பனிங் மட்டுமே பதினாறு கோடி. கன்னட சினிமா வரலாறு இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொகை. வெளியாகிய தியேட்டர்களில் 43 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது. செகண்ட் ரிலீஸாக வெளியாகிய ‘பி’ மற்றும் ‘சி’ சென்டர் தியேட்டர்களிலும் இப்போது வசூல் சுனாமி. கன்னட பாக்ஸ் ஆபிஸின் மிகப்பெரிய சாதனையான ‘முங்காருமலே’வின் சாதனையை அனாயசமாக உடைத்தெறிந்தது சங்கொலி ராயண்ணா. இதுவரை தோராயமாக 50 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். கன்னட சினிமா அடைந்திருக்கும் அதிகபட்ச உயரம் இதுதான்.

படத்தின் பட்ஜெட்டை வைத்து கணக்கிடும்போது இந்த வசூல் ஆஹா ஓஹோ என்றில்லை என்றாலும், கன்னட சினிமாவாலும் மற்ற தென்னிந்திய சினிமாக்களோடு போட்டி போட இயலும் என்கிற தன்னம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சங்கொலி ராயண்ணா உருவாக்கியிருக்கும் இந்த புதுப்பாதையை, அடுத்த தலைமுறை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்வார்கள். முன்னோடிகளை வரலாறு மறப்பதில்லை, மறுப்பதுமில்லை.

(நன்றி : cinemobita.com)

3 கருத்துகள்:

  1. 'சங்கொள்ளி ராயண்ணா' என்றே கன்னடத்தில் குறிப்பிடுகிறார்கள். 'சங்கொள்ளி' என்றால் என்னவென்று தெரியவில்லை. சங்கொலி நமக்கு வசதி.

    பதிலளிநீக்கு
  2. நீ ஒரு கன்னடக்காரன் என்பதை நிரூபித்துவிட்டாய். புட்டண்ணா கனகல் தொடங்கி கிரீஸ் கர்னாட், அவ்வப்போது பிரகாஷ் ராஜ், ரஜினிகாந்த், அர்ஜுன், நான் ஈ - சுதீப், வெண்ணிலா க.கு. ஹரிதாஸ் நாயகன் வரை எல்லோரையும் சகட்டு மேனிக்கு புகழும் பொழுதே நினைத்தேன். ஆனாலும் பரவாயில்லை.. உண்மை தானே. தமிழில் அதைப்போல் நடிக்க ஒன்றிரண்டு பேர் தானே இருந்தார்கள். இப்பொழுதும் ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள். theatarical பெஸ்ட் actors in india are only from marathi, kannada, malayalam and nowadays from delhi. Good one Dude.

    பதிலளிநீக்கு