22 பிப்ரவரி, 2013

பைக் கொடுத்த லைஃப்

கடைசியாக ராகுலனிடம் இருந்தது பெட்ரோல் நிரப்பிய ஒரு பைக். நிறைய தன்னம்பிக்கை. சிறுவயதிலேயே தந்தையின் பணி காரணமாக மும்பைக்கு இடம் பெயர்ந்திருந்தார். தந்தையின் மரணம் காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வாழ்க்கையை நகர்த்த எடுத்த சில முயற்சிகள் எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. கையில் எதுவுமே மிஞ்சவில்லை. அடுத்தது என்ன?
பைக்கை ஓட்ட ஆரம்பித்தார். பெட்ரோல் தீர்ந்து வண்டி எங்கே நிற்கிறதோ, அங்கே வாழ்க்கையை தொடங்கலாம் என்பது திட்டம். வண்டி நின்ற இடம் கரூர். அந்நகரில் அப்போது ஏற்றுமதித் தொழில் கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்ததை கண்டார். சில நிறுவனங்களில் சிலகாலம் பணியாற்றிவிட்டு, சொந்தமாகவே ஓர் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இம்முறை அதிர்ஷ்டத் தேவதை ராகுலன் பக்கம் இருந்தாள். ஹாலந்து நாட்டிலிருந்து நிறைய ‘ஆர்டர்கள்’ இவரது நிறுவனத்துக்கு கிடைத்தது.
ஒருகட்டத்தில் வணிகத்தைப் பெருக்க ஹாலந்துக்கே குடிபெயர வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. மனைவி, மகன், மகளோடு குடும்பமாக புலம் பெயர்ந்தார். அந்நாட்டின் குடியுரிமையும் அவருக்குக் கிடைத்தது.
இப்போது நாற்பத்தியோரு வயதாகும் ராகுலனின் பின்புலம் இதுதான். ஹாலந்தில் அவரது வாழ்க்கை நிலைபெற்று விட்டாலும், தாய்மண்ணான கும்பகோணம் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது. கும்பகோணத்துக்கு அருகில் திருப்பனந்தாள் என்கிற கிராமம். விடுமுறைக்காக ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்தோடு இங்கே வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இம்மாதிரி வந்தபோதுதான் சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்தார். குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரம் குறைந்துவருவதாக நினைத்தார். விவசாயத்தை நம்பி மக்கள் வாழ்ந்திருந்த காலக்கட்டம் மாறியிருந்தது. விவசாய நிலங்களில் பணிக்குச் சென்றதால் பணம் சம்பாதித்து, குடும்பத்தை கவுரவமாக நடத்திக் கொண்டிருந்த பெண்கள் அப்போது மிகச்சிரமமான நிலையில் இருந்ததை உணர்ந்தார்.
விளைநிலங்கள் பெருமளவில் ரியல் எஸ்டேட் கபளீகரங்களுக்கு விலைபோன பின்னர், விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பலரும் வேறு வேறு பணிகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனவே வேலையிழந்து கொடுமையான வறுமைக்கு ஆளானார்கள். அடிப்படைச் செலவுகளுக்கும் மீண்டும் குடும்பத்து ஆண்களையே நாடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். தன் சொந்த மண்ணின் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இதை கருதினார் ராகுலன்.
ஹாலந்து திரும்பிய பிறகும் இதே நினைவுகள் அவரை வருத்திக்கொண்டே இருந்தன. பகுத்தறிவுச் சிந்தனைகள் நிரம்பியவரான ராகுலனுக்கு பெண்கள் வெறுமனே அடுப்பூதி வாழ்க்கையை கட்டாயத்தின் பேரில் வாழ்ந்து முடிப்பதில் ஒப்புதல் இல்லை. என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தவர் தன்னுடைய துறை தொடர்பான பணிகளை, தமது ஊர் பெண்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்க ஒரு திட்டம் தீட்டினார்.
இப்படித்தான் ‘க்ரீன் இன்னோவேஷன்ஸ்’ நிறுவனம் தொடங்கியது.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உலகை குப்பைக்கூடை ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று குற்றவுணர்ச்சி உண்டு. எனவே சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பொருட்களையே கூடுதல் விலையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹாலந்தில் வசிக்கும்போது இந்நிலையை உணர்ந்தார் ராகுலன். அவருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறை தோன்றியது.
நம்மூரில் உரமூட்டை, டீத்தூள் சாக்கு, ஃபயர் சர்வீஸில் பயன்படுத்தி காலாவதியான ஓஸ் பைப் போன்றவற்றை குப்பையில்தான் எறிகிறார்கள். இவற்றை காயலான் கடைகள் மற்றும் குப்பைப் பொறுக்கும் தொழிலாளர்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி ‘உயர்சுழற்சி’ (upcycling) முறையில் லேப்டாப் பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக் போன்றவற்றை உருவாக்குகிறது க்ரீன் இன்னோவேஷன்ஸ்.
உயர்சுழற்சி என்பது வீணான பொருட்களையும், உபயோகமில்லாத தயாரிப்புகளையும் கொண்டு புதிய பொருட்களை தரமான முறையில் உருவாக்குவது. மறுசுழற்சி (recyling) என்பதற்கும், இதற்கும் பெரியளவில் வேறுபாடு உண்டு. உயர்சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல மவுசு. அதிலும் சமூகநல நோக்கோடு, மகளிர் மேம்பாட்டை முன்னிறுத்தி நடைபெறும் தொழில் என்பதால் ராகுலனின் தயாரிப்புகள் சக்கைப்போடு போடுகிறது. நம்மூரில் ஒரு பொருளை வாங்கும் முன்பாக நுகர்வோர் இதுபோன்ற அம்சங்களை கணக்கில் எடுப்பதில்லை. பெரிய நிறுவனங்களாவது சுற்றுச்சூழலுக்கு ஏதுவான உயர்சுழற்சி, சமூகநலம் ஆகிய காரணிகளை பரிசீலித்து இதுபோன்ற தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்கலாம்.
இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகாலட்சுமிக்கு வயது முப்பத்தியேழு. அவரது கணவர் கட்டிடவேலை செய்கிறார். மகள் கல்லூரியில் படிக்கிறாள். “என் மகளின் கல்விச்செலவு, குடும்பத்துக்கு ஆகும் கூடுதல் செலவுகள் போன்றவற்றுக்கு, கணவரின் கையை மட்டுமே எதிர்ப்பார்க்காமல் இப்போது என்னாலேயே சமாளித்துக்கொள்ள முடிகிறது. கவுரவமான வேலை என்பதால் சுற்றத்திலும் நல்ல மரியாதை கிடைக்கிறது” என்கிறார் இவர்.
க்ரீன் இன்னோவேஷன் நிறுவனத்தில் இப்போது இருபத்தைந்து பெண்கள் பணிபுரிகிறார்கள். விவசாயப் பணிகளிலேயே ஊறிப்போன இப்பெண்களுக்கு ஆரம்பத்தில் புதிய வேலையில் ஈடுபடுவது சிரமமாக இருந்தது. ஆனாலும் காலப்போக்கில் கற்றுக்கொண்டு இப்போது சிறப்பாக செயல்படுகிறார்கள். சிறிய அளவில் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்துக்கு நிறைய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்து, தொழில் பெருகும் பட்சத்தில் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே மகாலட்சுமியைப் போன்ற சில நூறு மகளிருக்காவது வேலைவாய்ப்பினை உருவாக்கித்தர முடியும் என நம்புகிறார் ராகுலன். இவரது நிறுவனத்தில் தொழிலாளர் உரிமை, சம்பளம், நிர்வாக விஷயங்கள் ஐரோப்பிய தர அளவீட்டிலேயே அமைந்திருக்கிறது.
“இதை சமூகச்சேவை என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. என்னுடைய தொழிலை நான் செய்கிறேன். எனக்கு இதில் நல்ல லாபமும் கிடைக்கிறது. இதில் என் ஊரைச் சேர்ந்த பெண்களுக்கும் நல்லது நடக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செய்யும் எதிலும் மறைமுகமான சமூகநோக்கு இருக்க வேண்டுமென்பது எனக்கு ஐரோப்பா கற்றுத்தந்த பாடம்” என்கிறார் இவர்.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானோ?(நன்றி : புதிய தலைமுறை)

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. . செய்யும் எதிலும் மறைமுகமான சமூகநோக்கு இருக்க வேண்டுமென்பது எனக்கு ஐரோப்பா கற்றுத்தந்த பாடம்”
   .

   சிறப்பான சிந்தனை ..!

   நீக்கு
 2. ராகுலனின் இன்னொரு முகம், பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன். பாராட்டுகள் காமிக்ஸ் நண்பரே.

  பதிலளிநீக்கு
 3. அருமையான சிந்தனைகளும் அதற்குறிய வெளிப்பாடுகளும், வாழ்க வளமுடன்.....

  பதிலளிநீக்கு
 4. ஏற்கெனவே வேறெங்கோ படித்தது போல உள்ளது, யுவா!

  பதிலளிநீக்கு
 5. அருமையான கட்டுரை.மக்கள் முன்னேற்றம் பெற ஊக்கம் தரும் கட்டரை
  ராகுலனின் ஊர் எங்கள் ஊர் பக்கம்
  திருப்பனந்தாள் தற்போது பெரிய ஊர். அங்கு ஒரு புகழ் வாய்ந்த மடம் உள்ளது . மனித நேயம் உள்ள ஊர் .

  பதிலளிநீக்கு