25 ஜனவரி, 2013

ஒன்மேன் ஷோ!


தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் தொடங்கி ஆபிஸ்பாய் பணி வரைக்கும் ஒரே மனிதரின் உழைப்பிலும், சிந்தனையிலும் உருவாகிறது ஒரு சினிமா. உலகிலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்படும் இம்முயற்சிக்கு சொந்தக்காரர் நம்மூர்க்காரர் என்பதால், நாம் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
சினிமா என்பது கூட்டுமுயற்சி. தயாரிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, பாடல்கள், கலை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், எடிட்டிங், சண்டைப்பயிற்சி, ஒப்பனை என்று பல்வேறு துறைகளில் ஏராளமானோர் இரவும், பகலுமாக உழைத்து எடுப்பது. இதில் அத்தனை பொறுப்புகளையும் வேறொரு இரண்டாம் மனிதரின் துணையின்றி தானே சுமந்து ஓர் ஆச்சரியப் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
ஸ்டுடியோக்களாலும், பெரிய தயாரிப்பாளர்களாலும், இத்தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாலும்தான் சினிமா எடுக்க முடியும் என்கிற வழக்கம் சமீபகாலமாக உடைந்து வருகிறது. இண்டிபெண்டன்ட் சினிமா எனப்படுகிற சாதாரண மனிதர்கள் உருவாக்கும் திரைப்படங்கள் ஹாலிவுட்டில் சகஜம். இப்போது இந்த பாணி நம் தமிழுக்கும் வந்துவிட்டது. சங்ககிரி ராஜ்குமாரின் முந்தையப் படமான ‘வெங்காயம்’ அம்மாதிரி உருவான படம்தான். தொழிற்முறை கலைஞர்களை தவிர்த்து, அவரது ஊரில் வசிப்பவர்களையே நடிக்க வைத்து எடுக்கப்பட்ட அப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வெங்காயத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் எடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘ஒன்’. ஆங்கிலத்தில் உருவாகும் முழுநீளத் திரைப்படம். எவர் உதவியுமின்றி ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் இவரே செய்திருக்கிறார். முன்பாக ஜாக்கிசான் கடைசியாக எடுத்த திரைப்படமான சைனீஸ் ஸோடியாக் (CZ12) திரைப்படத்தில் நடிப்பில் தொடங்கி மொத்தம் பதினைந்து துறைகளில், ஜாக்கி ஈடுபட்டதுதான் உலகசாதனையாக கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ‘ஒன்’ திரைப்படத்தில் ராஜ்குமார் எத்தனை துறைகளுக்கு பொறுப்பேற்கிறார் என்பதை எண்களில் வரையறுப்பதே கடினம்.
ஒரே மனிதரின் உழைப்பில் தயார் ஆகிறது என்பதால் வழக்கமான கலைப்படமாக வறட்சியாக இருக்குமா?
இல்லை. வழக்கமான வணிகப்படத்துக்கான அத்தனை கலர்ஃபுல் அம்சங்களும் இருக்கிறது. படத்தில் வரும் எல்லா மனிதர்களுமே (பெண்கள் உட்பட) சங்ககிரி ராஜ்குமாராகதான் இருக்கிறார்கள். முன்னூறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வருகிறது. வேறு வேறு உடைகளில், வேறு வேறு மேக்கப்களில் ராஜ்குமாரே கேமிராவுக்கு முன்பாக நின்று படம் பிடித்து, கிராஃபிக்ஸ் மூலம் முழுமையாக்கி இருக்கிறார். குறிப்பாக தியேட்டரில் ஐநூறு பேர் படம் பார்க்கும் காட்சி ஒன்று இருக்கிறது. இந்த ஐநூறு பேராகவும் அவரேதான் தோன்றுகிறார். ஆனால் ஒரு பாத்திரத்துக்கும், இன்னொரு பாத்திரத்துக்கும் லேசாக முகச்சாயல் பொருந்துகிறதே தவிர.. வேறெந்த ஒற்றுமையும் இருக்காது.
ஒரே ஆள் இத்தனை சுமைகளையும் தாங்கி ஏன் படம் செய்யவேண்டும்.. சாதனைதான் நோக்கமா?
இல்லையென்று அடித்துப் பேசுகிறார் ராஜ்குமார்.
“அடிப்படையில் நான் விவசாயி. சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு அருகிலிருக்கும் நெடும்பாறைக்காடு என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவன். பரம்பரையாக எங்களுக்கு விவசாயம்தான் தொழில். விவசாயம் செய்யப்போக மீதியிருக்கும் நேரத்தில் படம் எடுக்கிறேன்.
என்னுடைய தாத்தா வேலைநேரம் போக மீதி நேரத்தில் தெருக்கூத்து கட்டினார். தொடர்ச்சியாக அப்பாவும் மேடைநாடகங்கள் எடுத்தார். இந்த கலைப்பாரம்பரியம் விட்டுப்போகாமல் நான் சினிமா எடுக்க வந்திருக்கிறேன்.
இப்போதிருக்கும் சூழலில் படத்தயாரிப்புக்கு ஆகும் பெரும் பொருட்செலவை விவசாயத்தில் வரும் பணம் மூலமாக சரிகட்ட முடியாது. எனவே முதல்படமான ‘வெங்காயம்’ எடுக்கும்போது எவ்வகையில் எல்லாம் செலவை குறைக்க முடியுமோ, அவ்வகையில் எல்லாம் குறைத்தேன். என் ஊர் ஆட்களையே படத்தயாரிப்பில் ஈடுபடுத்தியதால் குறைந்த செலவில் பேர் சொல்லும்படியான படமாக எடுக்க முடிந்தது. இருந்தாலும் வணிகரீதியாக சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றுமில்லை.
எனவே யாருக்கும் சம்பளம் கொடுக்காமல், என்னால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் படமெடுக்கும் முயற்சியாகதான் ‘ஒன்’ படத்தை எடுக்க ஆரம்பித்தேன். இது சாதனையா என்றுகூட எனக்கு தெரியாது” என்கிறார் ராஜ்குமார்.
பட்ஜெட்தான் பிரதானக் காரணம் என்றாலும், அடிப்படையில் பெரியாரிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டிருக்கும் ராஜ்குமாருக்கு அதிகபட்ச தனிமனித முயற்சியை முயற்சித்துப் பார்த்துவிடுவதும் இன்னொரு நோக்கம்.
சரி, யாருடைய உதவியுமின்றி ராஜ்குமாரே முழுப்படத்தையும் உருவாக்கினார் என்பதை எப்படி நம்புவது?
“இதற்குதான் படப்பிடிப்பு, அதற்குப் பின்னான என்னுடைய பணிகள் அத்தனையையும் நானே இன்னொரு கேமிராவில் படம் பிடித்திருக்கிறேன். 12,500 ஜி.பி. அளவுள்ள வீடியோ காட்சிகளாக அவற்றை தனியாக எடுத்து வைத்திருக்கிறேன். யாருக்கு சந்தேகம் வந்தாலும் போட்டுக்காட்ட தயாராக இருக்கிறேன்”
சினிமா எடுப்பதிலேயே இருப்பதில் மிக சிரமமான வேலை எது?
“தயாரிப்புதான் என்று முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன். மொத்த வேலையையும் நானே இழுத்துப்போட்டு செய்ததில் எல்லா துறையுமே அது அதற்குரிய உழைப்பை கோருகிறது. இருந்தாலும் என் அனுபவத்தில் இருப்பதிலேயே கஷ்டமாக நான் உணர்ந்தது படப்பிடிப்புக்கு தேவையான பொருட்களை சுமந்துச் செல்வதுதான். குளிரூட்டப்பட்ட நவீன அரங்குகளில் நாம் பார்க்கும் ஆடம்பர சினிமாக்களை அத்தொழிலாளர்கள்தான் படமெடுக்கும்போதே தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களில் ஒருவரின் பேரை கூட படம் பார்க்கும் ரசிகன் அறிந்திருக்க மாட்டான்”
தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு சவால் விடும் காலம் வருமா என்றெல்லாம் இனி நாம் ஏங்கவேண்டியதில்லை. ஹாலிவுட்டில் நடைபெறும் ஏதோ ஒரு பார்ட்டியில் நம்மூர்க்காரரின் சாதனையை அந்த ஊர் ஜாம்பவான்கள் வியந்து, மெச்சி பேசப்போகிறார்கள். இன்னொரு முறை காலரை தூக்கிவிட்டுக் கொள்வோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

7 கருத்துகள்:

 1. lucky,
  namma rasigarkalukku, 300 rs kuduthu 3 naal munbe mundiyathu reserve seithu thambattam adithukkollathaan theriyum. kadaisiyil oru 3 minutes wait seithu full creditssum paarpathumattum pidikkathu. vandi edupparthukkaga porumayillamal oduvargal. kollywoodil than peyar thiraiyil varuvatharkkaga uzhaikkum ethanayo samanya "UNSUNG HEROES" kalukku naam kodukkum mariyathai ithu thaan. athanal thaan peyar petra herokkalum directorgalum thaiyiramaga vetkameillamal copy adithu paerum pugazhum panamum sambathithuvidukirargal. virunthu mattum vendum aduppil venthavargalai patri endravathu ninaikiroma ? saapittu vittu kutram kurai mattume solla theriyum, paratta mattargal. avasiyamaga ungal nadayil sattai adiyaga neengal ithai patri oru pathivu ezhuthavendum. Hats off to the director. (Vendum yendrey avar peyarai naan ingu kurippidavillai)
  anbudan
  sundar g rasanai chennai

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கட்டுரையைப் பார்த்தால் இப்படம் கண்டிப்பாக சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்கும்!

  பதிலளிநீக்கு
 3. உண்மையில் சூப்பர். அசுர பயிற்சி. நல்ல முயற்சி.

  பதிலளிநீக்கு
 4. Intresting concept, I wish him all the best.

  பதிலளிநீக்கு