22 ஜனவரி, 2013

இண்டர்நெட்டுக்கு வயது முப்பது


ஜனவரி 1, 1983. இண்டர்நெட் பிறந்தது. அமெரிக்க அதிபரில் தொடங்கி ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு ஏழைநாட்டு குடிமகன் வரை இன்று இண்டர்நெட்டை ஏதோ ஒரு வகையில் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.உலகம் ஒரே கிராமம்எனும் கோஷம் தற்போது ஓங்கி ஒலிப்பது இண்டர்நெட்டால்தான்.
இண்டர்நெட் வருவதற்கு முன்பாக கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள அதுவரை இருந்த நெட்வொர்க் முறைகள் சிக்கலானதும், சிரமமானதும் ஆகும். அவற்றை எளிமைப்படுத்தி, TCP, IP என்கிற இரண்டு நெட்வொர்க் முறைகளை இணைத்து TCP/IP (Transmission Communications Protocol over Internet Protocol) என்று ஒரேமுறையாக அன்றுதான் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப கட்டமைப்பு, பிற்பாடு www எனப்படும் wordwide web மூலமாக உலகமயமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாடுகளையும், மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது.
1974ஆம் ஆண்டு முன்வரைவாக வின்டன் செர்ப் மற்றும் ராபர்ட் கான் ஆகியோரால் TCP/IP முறை பரிந்துரைக்கப் பட்டது. அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி அமைப்பு, இத்திட்டத்தை (DARPA) 1981ல் அங்கீகரித்ததோடு, 1983 ஜனவரி 1ல் அமல்படுத்த காலக்கெடுவும் விதித்தது.
அந்நாளை வின்டன் செர்ப் நினைவு கூர்கிறார். “கம்ப்யூட்டர் வல்லுனர்களின் உதவியோடு பல்லாண்டுகாலம் மல்லுக்கட்டிய வேலை முடிவுக்கு வந்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தேன். இண்டர்நெட் பிறந்ததை யாரும் விமரிசையாக எல்லாம் கொண்டாடவில்லை. ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை. ‘ரெடி’ என்றதுமே TCP/IP பின்னை ஒரு கம்ப்யூட்டரில் நான் சொருகியதுதான் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய அந்த தருணம்”
TCP/IPயின் பயன்பாடு உலகத்துக்கு கிடைத்த நாள்தான் இண்டர்நெட்டின் பிறந்தநாள் என்பதை மறுப்பவர்களும் உண்டு. ARPANET (Advanced Research Projects Agency Network) எனும் திட்டம் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் 1969லேயே ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலமாக அமெரிக்க பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றை ஒரே வலையில் இணைத்தது இந்த திட்டம். ஆனாலும் TCP/IP பிறப்பைதான் இண்டர்நெட்டின் பிறப்பாக பெரும்பான்மையானவர்கள் ஒத்துக்கொள்ளும்போது நாமும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது.
85ல் முதன்முதலாக ஒரு டொமைன் பதிவு செய்யப்பட்டது. 89ல் வணிகம் இண்டர்நெட்டில் நுழைய கதவு திறக்கப்பட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் மக்களின் வாழ்க்கைக்குள் சுனாமியலையாய் நுழைந்தது இண்டர்நெட்.
இண்டர்நெட் அறிமுகமான ஆரம்ப வருடங்களில், இந்தியா உடனடியாக அதில் பங்கேற்று விடவில்லை. உண்மையில் அப்போது கம்ப்யூட்டர்மயத்தை எதிர்த்து, நம் நாட்டில் போராட்டங்கள் கூட நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் வரப்போகும் முப்பது வருடங்களில் இண்டர்நெட்டை ஆளப்போகிறவர்கள் இந்தியர்கள்தான் என்று நிபுணர்கள் ஜோசியம் கூறுகிறார்கள். வருடா வருடம் ஒரு கோடியே எண்பது லட்சம் இந்தியர்கள் புதியதாக இண்டர்நெட்டுக்குள் குதிக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இண்டர்நெட்டை இந்தியா கொண்டாடிய அளவுக்கு வேறு எந்த தேசமும் கொண்டாடியதில்லை. இத்தனைக்கும் தொடர்ச்சியாக மின்சார இணைப்பு கிடைக்காதது, மோசமான தொலைத்தொடர்பு கட்டமைப்பு போன்றவற்றைத் தாண்டியும் இணையப் பயன்பாட்டில் இன்று இந்தியர்கள் ஆர்வம் செலுத்துகிறார்கள்.
கம்ப்யூட்டருக்கென்று உருவான இணையம் இன்று பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களிலும் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டது. குறிப்பாக மொபைல்போன் இண்டர்நெட் பயன்பாட்டை இன்றியமையாததாக நிலை நிறுத்திவிட்டது. வெறும் முப்பது ஆண்டுகளிலேயே மனிதகுலத்தின் வாழ்க்கைப் போக்கை முற்றிலுமாக இண்டர்நெட் மாற்றியமைத்திருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
கடந்த நூற்றாண்டில் தகவல் பரிமாற்றம்தான் மனிதனுக்கு பெரிய சவாலாக இருந்தது. இண்டர்நெட் வருவதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், வளர்ச்சி ஆகியவற்றை அறிந்துக் கொள்வது சாமானியமான வேலை அல்ல. இன்று ஒரு அறைக்குள் அமர்ந்துக் கொண்டே உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடப்பவற்றை நாம் அறிந்துகொள்ளலாம். சமூக வலைத்தளங்கள் இன, மத, மொழி வேறுபாடுகளை புறந்தள்ளி உலகெங்கும் இருக்கும் மக்களை ஒருவருக்கொருவரை நெருக்கமாக்கியிருக்கிறது. தகவல் தொடர்பை எளிமையாக மட்டுமின்றி, விரைவாகவும் இன்று மேற்கொள்ள முடிகிறது. அறிவுப் பரவல் ஜனநாயகமாகியிப்பது குறிப்பிடத்தக்க முக்கியமான மாற்றம்.
இண்டர்நெட்டின் பிரதானமான பயனாக வணிகம் எளிமையாகியிருப்பதை சொல்லலாம். எந்த ஒரு நிறுவனமும் இன்று தன் வாடிக்கையாளர்களையோ, சக நிறுவனங்களையோ மிக சுலபமாக தொடர்புகொள்ள முடிகிறது. பணப்பரிமாற்றம் எளிமையாகியிருக்கிறது. கரன்சி நோட்டே தேவையில்லை. ஒரு வங்கியிலிருக்கும் பணத்தை, இன்னொரு வங்கிக் கணக்குக்கு ஐந்து நிமிடத்தில்         கைமாற்றிவிடலாம். ரயில், சினிமா டிக்கெட்டுகளை வாங்கக்கூட கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்றிருக்கத் தேவையில்லை. இணையம் பார்த்துக் கொள்கிறது.
இன்று இணையத்தின் சாதகங்களை நாம் பட்டியலிட்டு சொல்ல வேண்டியதே இல்லை. அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். பாதகங்கள் என்று சொல்ல வேண்டுமானால், எதுவெல்லாம் சாதகமோ அதுவெல்லாம் ஒருவகையில் பாதகமும் கூடத்தான்.
கடிதம் என்கிற விஷயமே வழக்கொழிந்துப் போய்க் கொண்டிருக்கிறது. ஊரிலிருந்து உறவினரிடமோ, நண்பரிடமோ இருந்து வரும் கடிதத்தைப் பிரித்து வாசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியான அனுபவம் இன்று ஈமெயில் வாசிக்கும்போது கிடைக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கும்போது இல்லை. பத்தாவது, +2 முடிவுகளுக்காக சஸ்பென்ஸோடு பேப்பருக்கு காத்திருந்த காலம் மலையேறிவிட்டது. இதுபோன்ற ஏராளமான சுவாரஸ்யமான தருணங்களை இணையத்தால் இழந்துவிட்டோம். எதையோ ஒன்றை பெற, எதையோ ஒன்றை இழந்துதான் ஆகவேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)

9 கருத்துகள்:

 1. As a software engg., TCP refers to TRANSMISSION CONTROL PROTOCOL... Change it.. Pls don't write worst articles like this...

  Regards,
  'NUDE' NANDU

  பதிலளிநீக்கு
 2. சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி யுவா.

  பதிலளிநீக்கு
 3. @Nandu
  No need to be offensive. Be polite.

  Quie an informaive post.

  Regards,
  Dondu N. Raghavan

  பதிலளிநீக்கு
 4. ஐயா டோண்டு அவர்களுக்கு,
  << ஒரு மென்பொருள் பொறியாளனாக, TCP என்பது TRANSMISSION CONTROL PROTOCOL என்பதைக் குறிக்கிறது. அதை மாற்றுங்கள். தயவு செய்து இது போன்ற மோசமான கட்டுரைகளை எழுதாதீர்கள். >>
  என்று தானே கூறியுள்ளேன். இதில் தாக்குதல் எங்கே இருக்கிறது. BE POLITE என்கிறீர்கள். நாகரீகமற்ற முறையில் நான் இங்கே என்ன கூறிவிட்டேன்? கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை. மேலும் சாதாரண தகவல் பதிவு என்கிறீர்கள் (அதிலே பிழை!). எது சாதாரணம்? இளைய தலைமுறை வாசகர்கள் கொண்ட ஒரு பத்திரிகையில் இப்படிப்பட்ட தகவல் பிழை வருவது சகஜம் என்கிறீர்களா? சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்று எழுதினால் தகவல் பிழைதானே என்று விட்டுவிடுவீர்களா? தவறை சற்றே கடுமையாக சுட்டிக்காட்டுவதில் தவறேதும் இல்லை ஐயா!

  பதிலளிநீக்கு
 5. Al Gore Played a key role in directing DARPA to provide the funding for internet development. In fact, In US the Republicans claim that Al Gore invented Internet to make fun of this Genius Democrat. -Krishnamoorthy

  பதிலளிநீக்கு
 6. @Nandu: There are many ways to point out an error/mistakes, the way you said implies that you know much more than others, this is an attitude.

  Do you accept if your boss says "Quit you job" you know nothing! for a simple honest mistake/error you committed?

  பதிலளிநீக்கு
 7. இண்டர்நெட்டுக்கு வயது முப்பது ஆச்சு . எத்தனையோ பேர் அதன் வழியே திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.அதுக்கு எப்ப கல்யாணம்!

  பதிலளிநீக்கு
 8. //கடந்த நூற்றாண்டில் தகவல் பரிமாற்றம்தான் மனிதனுக்கு பெரிய சவாலாக இருந்தது.

  எப்ப‌வுமே ஒரு ஹிஸ்ட‌ரி ட‌ச்... உங்க‌ளை அடிச்சுக்க‌ முடியாது சார்.

  பதிலளிநீக்கு