29 டிசம்பர், 2012

என்றும் முதுமை அடையாத கன்னி

படம் : முருகு

தாவணிக் கனவுகள்’ படத்தில் சிவாஜி ஒரு டயலாக் சொல்வார். “சிந்துபாத் கதையா? நான் பட்டாளத்துலே சேர்ந்தப்போ ஆரம்பமாச்சி. இப்போ ரிட்டையரும் ஆயிட்டேன். கதை மட்டும் முடிஞ்சபாடில்லே”.

தாவணிக் கனவுகள் திரைப்படம் வந்தே இருபத்தெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இடையில் நடிகர் திலகம் சிவாஜி கூட காலமாகி விட்டார். ஆனால் சிந்துபாத்தின் கன்னித்தீவுக்கு மட்டும் முடிவேயில்லை.

கன்னித்தீவு கதையை எழுதுபவரின் பெயரை சஸ்பென்ஸாக, சர்ப்ரைஸாக வைத்திருக்க ‘தினத்தந்தி’ விரும்புகிறது. கோகோ கோலா ஃபார்முலா மாதிரி இது டாப் சீக்ரெட். ஐம்பத்தி மூன்று ஆண்டுகளாக ஒரே கதாசிரியர்தான் எழுதி வருகிறார் என்கிறார்கள். ஆனாலும் இதை எழுதுவதற்காக அவர் ஒருமுறை கூட சலிப்பு கொண்டதே இல்லையாம். இத்தனைக்கும் அவர் பத்திரிகையுலக ஜாம்பவான்களில் ஒருவர். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரங்கள் போதாமல் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தவர். கன்னித்தீவுக்கு படம் வரையும் ஓவியர்கள் மட்டும் மாறி வருவதை தொடர்ந்து வாசிக்கும் நாமே அறியமுடியும்.

முடிவே இல்லாத சமாச்சாரங்களுக்கு கன்னித்தீவை ஒப்பிட்டு ஜோக் அடிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம்.

நிருபர் : உங்க வயது பதினாறுன்னு நீங்க சொல்றது அப்பட்டமான பொய்.

நடிகை : எப்படி சொல்றீங்க?

நிருபர் : தினத்தந்தியில் கன்னித்தீவு கதையை ஆரம்பத்திலே இருந்து படிச்சிட்டு வர்றதா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கீங்களே?

1982ஆம் ஆண்டு ‘சாவி’ பத்திரிகையில் வெளிவந்த ஜோக் இது. ஒருவகையில் சொல்லப் போனால் இப்போதெல்லாம் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் இப்போது ஒளிபரப்பப்படும் மெகாசீரியல்களுக்கு முன்னோடியே நம் ‘கன்னித்தீவு’தான்.

நம்முடைய இந்த கிண்டலையெல்லாம் தினத்தந்தி சீரியஸாக பொருட்படுத்தாமல், ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வதால்தான் கன்னித்தீவு பத்தொன்பதாயிரமாவது நாளை நெருங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. “உலகளவில் எந்த ஒரு ‘காமிக்ஸ்’ தொடரும் இத்தனை நாட்களாய் தொடர்ந்ததில்லை. அந்த வகையில் இது ஒரு உலகசாதனை. தினத்தந்தி நிர்வாகம் இந்த சாதனையை கின்னஸுக்கு விண்ணப்பித்தால், நிச்சயம் அப்புத்தகத்திலும் ‘கன்னித்தீவு’ இடம்பெறும்” என்கிறார் காமிக்ஸ் ஆர்வலரான விஸ்வா.

கன்னித்தீவின் கதைதான் என்ன?

கதையின் மூலம் மட்டுமே அரபுக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது. மற்றபடி கதையின் போக்கு முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனைதான். நாயகன் சிந்துபாத் ஓர் அரசனின் தளபதி. கன்னித்தீவு என்பது அழகிகள் நிறைந்த தீவு. உலகின் சிறந்த அழகிகளையெல்லாம் சிறைபிடித்து இத்தீவில் அடைத்து, உல்லாசமாக இருப்பது வில்லனான மந்திரவாதி மூசாவின் பொழுதுபோக்கு. சமகால உலக அழகி யாரென்று அறிய அவன் ஒரு மந்திரக்கண்ணாடி பயன்படுத்துவான். அந்த கண்ணாடி ஒருமுறை கதையின் நாயகி லைலாவை காட்டுகிறது. லைலாவை வழக்கமான முறையில் சிறைபிடிக்க முடியாத மூசா, கடுப்பில் மந்திரசக்தி கொண்டு அவளை அளவில் சிறியவளாக மாற்றி விடுகிறான். மீண்டும் லைலா பழைய உருவத்தை அடையவேண்டுமானால் கன்னித்தீவுக்கு போய் மந்திரவாதி மூசாவை பிடிக்க வேண்டும். இந்த பொறுப்பு அரசனால் தளபதி சிந்துபாத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. முடிவில்லா பயணத்தை நோக்கிச் செல்கிறான் சிந்துபாத். இந்தப் பயணத்தில் அவனுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள்தான் கதை.மொத்தம் ஏழு பயணம். ஒவ்வொரு பயணத்திலும் துண்டு துண்டாக கிளைக்கதைகள் நிறைய தோன்றும். இந்த ஒவ்வொரு கதைக்கும் ஏதோ ஒரு தொடர்ச்சி இருக்கும். இதுதான் கன்னித்தீவின் வடிவம்.

யாரேனும் தொடர்ச்சியாக கன்னித்தீவைப் படிக்கிறார்களா?

“குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து ஒரு சுற்றாக திரும்பத் திரும்ப நடப்பதாக கதை கொண்டுச் செல்லப் படுகிறது. தொடர்ந்து வாசிக்கும்போது ஏற்கனவே வாசித்த நிகழ்வுகள் மீண்டும் வருவதைப் போல இருக்கும். இதனால்தான் பலருக்கும் தொடர்ச்சியாக படிக்க ஆர்வம் இருப்பதில்லை. அதனால் என்ன? என் தாத்தாவும் கன்னித்தீவு படித்திருப்பார். என் அப்பாவும் படித்தார். இப்போது நானும் படிக்கிறேன். கன்னித்தீவு தலைமுறைகளை கடந்தது. அதுதான் இத்தொடரின் மகத்தான சாதனை” என்கிறார் கன்னித்தீவு வாசகரான அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன். கன்னித்தீவு உருவானதில் தொடங்கி, அதன் பின்னணித் தகவல்களையும், எழுத்தாளரையும், ஓவியர்களையும் பற்றிய விவரங்களோடு தனியொரு புத்தகமாக தினத்தந்தி வெளியிட வேண்டும் என்பது இவரது கோரிக்கை.

தினத்தந்திக்கு சிந்துபாத் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு நிகழ்வு சான்று. அப்பத்திரிகையின் நிறுவனர் ஆதித்தனார் காலமானபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கருத்துப்படம் 1981ல் வெளியானது. அதில் ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை போட்டு, தினத்தந்தியின் சாகாவரம் பெற்ற பாத்திரங்களான சாணக்கியன், ஆண்டியார் ஆகியோரோடு சிந்துபாத்தும் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக வரையப்பட்டிருந்தது.
கன்னித்தீவுக்கு இத்தனை கெளரவம் கிடைப்பதற்கு  முக்கியமான காரணம்  வாசகர்களிடம் அது ஏற்படுத்தியுள்ள மகத்தான தாக்கம் இலக்கியவாதிகளும் கூட இதற்கு தப்பவில்லை. வைரமுத்து எழுதிய ஒரு கவிதையில் ‘கன்னித்தீவு முடியும்வரை ஆயுள் இருக்க வேண்டுமென்று ஆசை பலர்க்கு இருக்கிறது’ என்கிற வரிகள் இடம்பெறுகிறது.

முடிவேயில்லா கதை பற்றிய கட்டுரையை எப்படி முடிப்பது? ஓர் ஒருவரி கதையோடு இக்கட்டுரையை முடிக்கிறோம்.

‘உலகத்தின் கடைசி தினமன்று சிந்துபாத், கன்னித்தீவை வாசித்துக் கொண்டிருந்தான்’.

(நன்றி : புதிய தலைமுறை)

9 கருத்துகள்:

 1. அருமை. இன்னும் எழுதியிருக்கலாம்

  பதிலளிநீக்கு
 2. நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது, தேநீர் கடையில் சிந்துபாத் படிக்க ஆரம்பித்தான். அது தான் முதல்படி. அதற்கு பிறகு அம்புலிமாமா, பாக்கெட் நாவல், ராஜேஷ்குமார், பிகேபி, சுஜாதா, பாலகுமாரன், பிறகு கார்க்கி, டால்ஸ்டாய் என வளர்ந்தேன். சிந்துபாத் கதைகள் இன்னும் நிழலாடுகின்றன.

  பதிலளிநீக்கு
 3. கன்னிதீவை பற்றிய அருமையான பதிவு.
  கூடவே நண்பர் விஸ்வாவின் இளமைகால புகைப்படத்துடன்.

  பதிலளிநீக்கு
 4. // வாசகர்களிடம் அது ஏற்படுத்தியுள்ள மகத்தான தாக்கம் இலக்கியவாதிகளும் கூட இதற்கு தப்பவில்லை. // மிகைப்படுத்துதலின் உச்சம் . நீண்டு தொடரும் முடிவு தென்படா விஷயங்களை குறிப்பிடஒரு உவமையாகப் பயன்படுவதன்றி வேறெந்தத் தாக்கமும் இருக்க முடியாது. ஒரு விழாவில் அமீர் சொன்னார். கன்னித்தீவில் வரும் கதையின் பகுதி எத்துனை சிறியதென்று ..'ஆஆஆ....ஐயோ ...பூதம் ...செத்தேன்.....' இவ்வளவுதான். அர்த்தமில்லாத எதற்கும் பயன்படாத நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. இதும் அதில் ஒன்று - சுதாமன்

  பதிலளிநீக்கு
 5. எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால் சுவாரசியம் இருக்க வேண்டும் என்பதற்கு உங்களின் இந்தக் கட்டுரை சாட்சி.
  மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. இரண்டு ஜாம்பவான்களின் புகைப்படம் மிக அருமை! கன்னித்தீவு கதை கின்னஸில் இடம்பெறக்கூடிய தரம் வாய்ந்ததே! சித்திரங்களை இன்னும் கவனமாகப் படைக்கலாம்! கடிதமழை பொழியுங்கள் ரசிக உள்ளங்களே!

  பதிலளிநீக்கு
 7. கன்னித்தீவு போன்ற குப்பைகளை promote பண்ணாதீர்கள்.

  இதனை பற்றி பெருமை பேசுவதற்கு முன், ஒரு மாதம் இதனை படிக்கவும்.
  Don't know about the initial stages of this strip. But past 20+ yrs
  are pure crap.

  பவர் ஸ்டார் இதனை விட மேல்.

  நல்ல தமிழ் காமிக் ஸ்ட்ரிப் எதுவும் இல்லாதது வருத்தமான விஷயம்.

  இதனால் குழந்தைகள் வசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

  இங்கிலீஷ் காமிக் strip எதாவது படிக்கும் போது தான் , தமிழ் காமிக் ஸ்ட்ரிப் நிலை புரியும்.

  தினத்தந்தி , கை துடைகவோ,கால் கடனை துடைக்கவோ அருகதை இல்லாத நாழிதழ்.

  பதிலளிநீக்கு