November 14, 2012

துப்பாக்கி

Wait is over.

தேசத்துரோகியான ஒரு காவல்துறை அதிகாரியை, நேர்மையான உளவுத்துறை அதிகாரியான விஜய் விசாரணை செய்கிறார். அவருடைய அலுவல்ரீதியான துப்பாக்கியையும், ஒரு இல்லீகல் துப்பாக்கியையும் டேபிள் மீது எடுத்து வைக்கிறார். உளவுத்துறை அதிகாரி ஏதாவது ‘பஞ்ச்’ டயலாக் அடித்துவிடுவாரோ என்கிற மரண அச்சத்தில், தேசத்துரோகி இல்லீகல் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார். க்ளைமேக்ஸிலும் நேர்மையற்ற ஒரு மிலிட்டரி அதிகாரி, இதே பஞ்ச் டயலாக் பயத்தில் இதே போல தற்கொலை செய்துக் கொள்கிறார். சூப்பர் ஸ்டார் சிவாஜியின் ‘ஆபிஸ் ரூம்’ காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

வழக்கமான விஜய் ஃபார்முலா படமல்ல இது என்பதற்கு இக்காட்சிகளே அத்தாட்சி. திருப்பாச்சி காலத்தில் தனக்கே தனக்கென்று உருவான தனித்துவ ஃபார்முலாவை உடைக்கும் துணிச்சலான முயற்சியை ‘நண்பன்’ ஒப்புக்கொண்டபோதே விஜய் தொடங்கிவிட்டார். துப்பாக்கியில் இது முழுமை பெற்றிருக்கிறது. எவ்வளவு நாளைக்குதான் தமிழ்நாட்டிலேயே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருப்பது என்கிற அலுப்பு அவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். துப்பாக்கி தெலுங்கிலும் ஹிட் அடிக்கும் என்கிற செய்தி தேனாக காதில் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படலாம். கேரளாவிலும் ஹிட். இந்திய தேசிய உணர்வுகொண்ட திரைப்படம் என்பதால் எஃப்.எம்.எஸ்.ஸிலும் கதறக் கதற கல்லா கட்டப்போகிறது. இந்த தீபாவளி ‘தள’தீபாவளி.

இளையதளபதிக்கு வருடா வருடம் வயது குறைந்துக்கொண்டே போகிறது. மிக விரைவில் அவர் குழந்தை நட்சத்திரமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்மார்ட்டில் கில்லி, ஆக்‌ஷனில் போக்கிரி என்று துப்பாக்கி முழுக்க முழுக்க விஜய் ஷோ. முழுநீஈஈஈள திரைப்படமென்றாலும், இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தளபதியை ஸ்க்ரீனில் பார்த்துக்கொண்டே இருக்கமாட்டோமா என்று படம் முடிந்ததும் ஏக்கம் பிறக்கிறது.

ஏழாம் அறிவு மொக்கையாகி விட்டதால், துப்பாக்கியின் திரைக்கதையை சிரத்தையெடுத்து செதுக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக் மரண மாஸ். ஒரு காட்சியில் நாயை ஸ்க்ரீனில் பார்த்து தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. இராம.நாராயணனின் முந்தைய  நாய், குரங்கு, பாம்பு ரெக்கார்டுகளை எல்லாம் இக்காட்சியில் அசால்ட்டாக உடைத்து எறிந்திருக்கிறார் முருகதாஸ். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி ஹீரோவுக்கும், இயக்குனருக்குமே ஒதுக்கப்பட்டு விட்டதால், பிரும்மாண்டமான ஸ்க்ரிப்டுக்கு கருக்காக செலவு செய்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் பிரதிபாகாவேரி மாதிரியான பெரிய கப்பல் வெடிக்கும்போது, ஊசிப்பட்டாசு வெடிப்பதைப் போல ஃபீலிங். போலவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஏனோதானோவென்று இருக்கிறது. நேற்று வந்த நாளைய இயக்குனர்களே இந்த மேட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும்போது, தமிழின் சுபாஷ்கய்யான முருகதாஸ் இன்னமும் ரமணா, கஜினி காலத்திலேயே தேங்கிப் போய் கிடக்கிறார்.
ஹீரோயின் காஜல். வழக்கம்போல தொட்டுக்க ஊறுகாய்தான். இருந்தாலும் மணம், குணம், நெடி நிரம்பிய காரமான மிளகாய் ஊறுகாய். எப்போதும் ‘ஹாட்’டாக சுர்ரென்று இருக்கிறார். முதல் இரவில் புதுக்கணவன் உதடை கடித்து வைத்துவிடுவானோ என்று பதட்டப்படும் புதுப்பொண்ணை மாதிரியே எல்லா சீனிலும் பரபரவென்று ரியாக்‌ஷன். முத்தத்துக்கு தயாராகி உதடுகளை தயார்படுத்தும் அழகுக்காகவே காஜலுக்கு பாரதரத்னா வழங்கலாம். இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா?’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் ‘ஒரிஜினல் டெவலப்மெண்ட்’தான் என்பதை இறுதியில் ஊர்ஜிதம் செய்துக்கொள்ள முடிந்தது. சந்தேகம் கிளப்பிய தோழரை 66-ஏவில் உள்ளே தள்ளலாம்.

வாராது வந்த மாமணியாய் இளையதளபதி ஓர் ஒரிஜினல் ஹிட் அடிக்கும்போது திருஷ்டிப் படிகாரமாய் ஹாரிஸ் ஜெயராஜ். ‘கூகிள் கூகிள்’ (இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) பாடலைத் தவிர்த்து, வேறெதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. கூகிள் பாடலில், ஷங்கர் ஸ்டைலில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். விஜய் படமாச்சே என்று, க்ளைமேக்ஸுக்கு முன்பு குத்து, குத்துவென ஒரு குத்துப்பாட்டை எதிர்ப்பார்த்தால், ஒரு சோகையான டூயட். மெலடியான தேசபக்திப் பாடலும் (ஜேசுதாஸ்?) படம் முடிந்தபிறகே வருகிறது. எவ்வளவு மரணமொக்கையான விஜய் படமென்றாலும் பாடல்கள் மட்டும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும். துப்பாக்கியில் பாடல்களும், பின்னணி இசையும் பரிதாபம். முருகதாஸின் ரமணாவுக்கு இசைஞானியின் பின்னணி இசை நினைவுக்கு வந்து ஏங்கவைக்கிறது.

வில்லன் வெயிட் என்பதால் ஹீரோ அதைவிட வெயிட்டாகிறார். கடைசியில் ‘என்னை அடிச்சியே கொல்லு’ என்று விஜய் சவால்விட, வில்லனுக்கு பக்கத்தில் இருப்பவர் ‘வேணாம். ஏதோ தந்திரம் செய்றான். அவனை உன்னாலே அடிக்க முடியாது’ என்று தரும் பில்டப்தான் ஒரிஜினல் ஹீரோயிஸம். இத்தனை காலமாக விஜய் பக்கம் பக்கமாக பேசிய பஞ்ச் டயலாக்குகள் எவ்வளவு வீண் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.

இஸ்லாமியத் தீவிரவாதம், இந்திய தேசப்பக்தி என்று வழக்கமான பலகீனமான ஜல்லிதான். என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் பரபரப்பான திரைக்கதை, விஜய்யின் பெர்ஃபாமன்ஸ் என்று ’போர்’ அடிக்காமல் துப்பாக்கியை பார்க்க முடிகிறது. பொதுவாக விஜய் படங்களை குழந்தைகள் வெகுவாக ரசிப்பார்கள். இப்படம் இளைஞர்களை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ‘வயலன்ஸ்’ கொஞ்சம் அதிகமென்றும் தோன்றியது. முந்தைய விஜய்யின் வயலண்ட் படங்களிலெல்லாம் ஆக்‌ஷன் ரசிக்கவைக்கும், திகில்படுத்தாது. துப்பாக்கியில் வெளிப்படும் ரத்தமும், புல்லட் சத்தமும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. விஜய் படத்துக்குதான் கொஞ்சம் புதுசு.

துப்பாக்கி : குறி கச்சிதம்

22 comments:

 1. இளையதளபதிக்கு வருடா வருடம் வயது குறைந்துக்கொண்டே போகிறது. மிக விரைவில் அவர் குழந்தை நட்சத்திரமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது

  என்ன ஒரு ஸ்டைலான எழுத்து....
  யுவா ராக்ஸ்..

  ReplyDelete
 2. //குறி கச்சிதம் //

  :-)) நல்லா இருங்கடே!!

  ReplyDelete
 3. இணைய உலகின் வெண்ணிற ஆடை மூர்த்தியான ஆசிப் அண்ணாச்சிக்கு ‘குறி’ மட்டும்தான் கண்ணில் படுது :-(

  ReplyDelete
 4. யோவ் லக்கி! விமர்சனம் நல்லாத்தான்யா இருக்கு நல்லா இல்லைன்னாதானே ஏதாவது சொல்ல முடியும்? ஆனாலும் அந்தக் கடைசி வரி வந்ததும் சிரிப்பை அடக்க முடியலை கருமம் புடிச்சவன் - என்னைச் சொன்னேன் :-)

  ReplyDelete
 5. வழக்கம் போல கலக்கலான நடை...ஆனால் என்ன மாதிரியான கதையென்றே சொல்லவில்லையே...///இஸ்லாமியத் தீவிரவாதம், இந்திய தேசப்பக்தி என்று வழக்கமான பலகீனமான ஜல்லிதான்./// இதை கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாமே...

  ReplyDelete
 6. பிடிக்காத ஹீரோ நடிச்ச நல்ல படத்துல எப்படி குறை கண்டு பிடிக்கலாம்னும் (துப்பாக்கி ),
  பிடிச்ச ஹீரோ நடிச்ச மொக்கை படத்தை எப்படி பாரட்டலம்னும் உங்க கிட்ட தன் கத்துக்கணும் (பில்லா 2)

  ReplyDelete
 7. கூகிள் கூகிள்’ (இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) -----This is Yuva style...Super sir

  ReplyDelete
 8. // இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா?’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் //
  புடிங்க... ஸார் அந்த ஆளை ...புடிச்சி ஜெயில்ல போடுங்க ஸார் :)

  ReplyDelete
 9. Climaxla hindila oru periya vasanam pesuvare. 100 punchuku samam

  thalapathykku viral kooda thuppaki (climax scene)

  :))

  ReplyDelete
 10. நல்லவேளை, எனக்கு இந்தி தெரியாது கார்க்கி. தப்பிச்சிட்டேன் :-)

  ReplyDelete
 11. இஸ்லாமியத் தீவிரவாதம், இந்திய தேசப்பக்தி என்று வழக்கமான பலகீனமான ஜல்லிதான்.குழந்தைகள் வெகுவாக ரசிப்பார்கள்.குழந்தைகள் கெட்டு சீரழிவதற்கு ஒரு படம். தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தில் ஏற்றி கொண்டு இருக்கும் SLOW POISON. குண்டு வைப்பவன் அது முஸ்லிம் பெயர் உள்ளவன் மட்டும்தான் அவன் மாற்று மதத்தினராக இருந்தாலும். தீவிரவாதி என்றால் இஸ்லாமியன் . காஸ்மீரில் ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிமை கொன்றால் முஸ்லிம் தீவிரவாதி. மற்ற இடத்தில் ஒரு முஸ்லிமை மற்ற இனத்தவர் கொன்றால் அவன் கொலையாளி . இதுதான் நடப்பது .ஜிகாத் என்றால் மனதை கட்டுப்படுத்துவது ஆனால் இவர்கள் கொடுக்கும் பெயர் ஜிகாத் என்றால் தீவிரவாதம் என்னும் முத்திரை. ஒரு இஸ்லாமியன் அழகு தமிழில் பேசத் தெரியாது அவன் தமிழனாக இருந்தாலும் .இதுதான் தொடர்ந்து வரும் செயல். பணத்திற்காக அறிவு போகும்,உண்மை மறையும் நினைத்தபடி எழுதி தருவான் நினைத்தபடி நடிப்பான். இவர்கள் நடிகர்கள் தானே ! சமுதாயத்திற்குள் குழப்பம் உண்டாக்கி தான் உயர வர நினைக்கும் கேடுகெட்ட மனிதர்கள்.

  ReplyDelete
 12. அணில் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லையே! 66-ஏ பயமா?

  சரவணன்

  ReplyDelete
 13. அணில் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லையே! 66-ஏ பயமா?

  சரவணன்
  /////

  நிஜ அணில் கேஸ் போட்டுவிடுமோ என்கிற பயமாக இருக்கலாம்

  ReplyDelete
 14. "முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா?’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் ‘ஒரிஜினல் டெவலப்மெண்ட்’தான் என்பதை இறுதியில் ஊர்ஜிதம் செய்துக்கொள்ள முடிந்தது. " இந்த தலைப்பில் ஒரு பதிவு போடலமே. இன்னாருக்கு ஒரிஜினல் இன்னாருக்கு போலி என்று. (ஏற்கனவே போட்டிருந்தால் மன்னிக்கவும்)

  ReplyDelete
 15. // இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா?’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் //...

  அது அதிஷா தானே???!!!?? :-)

  Review supper. Yuva rocks....

  ----By
  மாக்கான்

  ReplyDelete
 16. telugu padam parthavarkalukku intha padam not a matter, oru interview climax impressed to santhosivan (cameraman) but ungalukku ( audience) ethavathu impressed achcha any way not a bad ok but location compare other vijay movies ok

  ReplyDelete
 17. 66a-vin punniyathil Anil Vijay aanadhu

  ReplyDelete
 18. நண்பனுக்கு அடுத்து துப்பாக்கி இன்னும் ஒரு flop படம் தான் விஜய்க்கு. மாயாஜால் திரையரங்கில் காட்சிகளை முதல் வாரத்திலேயே குறைத்துவிட்டார்கள். இந்திய முஸ்லிம்களை தேச துரோகிகளாய் சித்தரித்து கெட்ட பெயர் சம்பாதித்தது தான் மிச்சம்.

  படம் ஒரு மொக்கை. வில்லன் யார் என்று 20 நிமிடத்திலேயே சொல்லிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்துக்கு துரத்தும் படலம் தான் கதை. இதை விட பல மடங்கு சிறப்பாக வால்டர் வெற்றிவேல், புலன் விசாரணை, குருதிப்புனல் திரைக்கதை அமைந்திருக்கும். முருகதாசுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது.

  ReplyDelete
 19. லக்கி,

  உன்னை எத்தனை முறை நான் திட்டி எழுதியிருந்தாலும் உன் எழுத்தாற்றல் தன்னிகரற்றது. படம் எப்படி தெர்லே ஆனா விமர்சனம் தூள் கண்ணா !

  கொஞ்சம் கொனஸ்டைய விட்டால் சிகரம் தொடுவாய்....

  ReplyDelete
 20. மக்கள் விரோத வெகுஜன ஊடகங்களில் எழுதிடும் விமர்சனம் போல இருக்கிறது.. இது லக்கியின் எழுத்துமாதிரி இல்லை, ஓரிரு இடங்களைத்தவிர.. :((

  ReplyDelete
 21. வெகுஜனங்களைப் போய்ச் சேரும் எழுத்தை எழுதும் உம் போன்றவர்களிடமிருந்து இப்படி வரும் விமர்சனங்களாலேயே முருகதாசும் விஜயும் தைரியமாக இப்படிப்பட்ட படம் எடுக்கிறார்கள்...எடுப்பார்கள். நான் சொல்ல வருவது உம் மரமண்டைக்கு ஏற இன்னும் பல வருடங்கள் ஆகும்...பேரன் பேர்த்தி எடுக்கும் வயதில் வரும் புத்தி அதற்கு முன்பே நிகழ்ந்த பல ஆக்கங்கெட்ட நிகழ்வுகளுக்கு பரிகாரம் ஆகாது என்பதே இங்கு நிதர்சனம்!

  -பாலா.

  ReplyDelete