5 அக்டோபர், 2012

இந்தியாவின் ஹெர்குலிஸ்


மனோகர் ஆயிச்சை உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சூப்பர் ஹீரோ. பாடிபில்டரான மனோகர் வங்கமாநிலத்தில் தம்தி என்கிற ஊரில் பிறந்தார் (இப்போது பங்களாதேஷில் இந்த ஊர் இருக்கிறது). 1950ஆம் ஆண்டு ‘மிஸ்டர் ஹெர்குலிஸ்’ பட்டம் வென்றவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியவர் இவர்தான். மூன்று முறை ஆசியப் போட்டிகளில் ‘பாடி பில்டிங்’ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர். ஆணழகரான மனோகருக்கு ஒரே ஒரு குறை. அவரது உயரம். நான்கு அடி பதினோரு அங்குலம் மட்டும்தான். எனவே அந்தக் காலத்தில் ‘பாக்கெட் ஹெர்குலிஸ்’ என்று ஊடகங்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

சிறுவயதிலேயே மனோகருக்கு உடல் ஆரோக்கியத்தில் பெரும் ஆர்வம் உண்டு. ஒருமுறை மல்யுத்தப் போட்டிகளை நேரில் கண்டபோது, வீரர்களின் திறமை கண்டு அதிசயித்து, இந்த ஆர்வம் அவருக்குள் துளிர்விட்டது. மல்யுத்தம், பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டார். பண்ணிரெண்டு வயதில் அவருக்கு ஒரு மர்மக்காய்ச்சல் வந்தது. இதன் காரணமாக முற்றிலும் உடல்நலம் குன்றினார்.

வறுமை, தீவிரமான வாழ்க்கைப் போராட்டங்கள் எதுவுமே மனோகரின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. விசித்திரக் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவர் கடுமையான உடற்பயிற்சிகள் மூலமாக மீண்டும் ஆணழகன் ஆனார். டாக்கா நகரில் இருந்த ஒரு பள்ளியில் படித்தார். இந்த காலத்தில் டாக்காவில் பிரபல மேஜிக் நிபுணரான பி.சி.சர்க்காரின் மேஜிக் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் உடல் அழகை பார்வையாளர்களுக்கு வெளிக்காட்டும் நிகழ்வுகளில் மனோகரும் இடம்பெற்றார்.

1942ஆம் ஆண்டு ராயல் ஏர்ஃபோர்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி மனோகருக்கு உதவினார். நவீனப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தினார்.

அந்தக் காலத்து இளைஞர்களுக்கு இருந்த சுதந்திர தாகம் மனோகருக்கும் இருந்தது. வெள்ளையர் ஆட்சியை எதிர்க்கும் போராட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இதனால் வெள்ளையரான தனது மேலதிகாரியை ஒருமுறை கன்னத்தில் அறையவேண்டிய சூழலும் வந்தது. உடனடி தண்டனையாக பணிநீக்கம். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிந்து, சிறைத்தண்டனையும் மனோகருக்கு கிடைத்தது. சிறையிலும் கூட தனது உடற்பயிற்சிகளை மனோகர் தொடர்ந்தார். இவரது பயிற்சியை கண்டு வசீகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகள், மனோகருக்கு என்றே சிறப்பு உணவினை ஏற்பாடு செய்தார்கள்.

சிறை சென்றதற்காக நான் வருத்தப்படவில்லை. உலக ஆணழகன் போட்டியில் பட்டம் வெல்வதே என்னுடைய அப்போதைய லட்சியமாக இருந்தது. எந்த உபகரணங்களின் துணையுமின்றி தீவிரமான பயிற்சிகளை அப்போது மேற்கொண்டேன். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பண்ணிரெண்டு மணி நேரத்தை பயிற்சி செய்வதிலேயே செலவிட்டேன்” என்று இன்று மலரும் நினைவுகளில் மூழ்குகிறார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபிறகு மனோகருக்கும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. கையில் வேலை இல்லை. நான்கு குழந்தைகள். வாழ்வின் மிக மோசமான காலக்கட்டத்தில்தான் முதல் பாராவில் சொல்லப்பட்ட சாதனைகளை அவர் நிகழ்த்திக் காட்டினார்.மிஸ்டர் ஹெர்குலிஸ்பட்டம் வெல்லும்போது அவரது வயது முப்பத்தியேழு. 1952ஆம் ஆண்டு மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர், 1955ல் இதே போட்டியில் மூன்றாவது இடம் பெற்றார். 1960ல் கடைசியாக இதே போட்டியில் நான்காவது இடம் வந்தபோது அவருக்கு வயது நாற்பத்தியேழு.

1500 பக்க அளவுள்ள புத்தகத்தை அப்படியே காகிதத்தை கிழித்தெறிவது மாதிரி கிழிப்பது மாதிரி ‘ட்ரிக்’குகளில் மனோகர் கில்லாடி. பிற்பாடு கொல்கத்தா நகரில் ‘பிசிக்’ என்கிற பெயரில் உடற்பயிற்சி நிலையத்தை நடத்தினார். இந்த நிலையத்தில் இருந்து சத்யன் தாஸ், சுந்தீபன் சென், சத்யா பால், ஹிதேஷ் சாட்டர்ஜி போன்ற இந்திய அளவிலான ஆணழகர்கள் வெளிவந்தார்கள்.

அவர் உடல் பலத்தில் உச்சத்தை எட்டி அறுபது ஆண்டுகள் கழிந்துவிட்டது. 1912ல் பிறந்த மனோகர், தன்னுடைய நூற்றாண்டு நிறைவினை சில மாதங்களுக்கு முன்பாக கொண்டாடினார். கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறியளவிலான ‘ஹார்ட் அட்டாக்’ தவிர்த்து அவரது உடலில் இன்றும் வேறெந்த குறையுமில்லை. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிற பழமொழிக்கு நல்ல உதாரணம் மனோகர்.

அவரது மகன்கள் இப்போது கொல்கத்தாவில் ‘ஃபிட்னஸ் சென்டர்’ நடத்துகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனோகர் அங்கேபோய் உடற்பயிற்சி செய்கிறார். இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். 
“பால், பழம், காய்கறிகள், அரிசி, தானியங்கள், மீன் இவைதான் என் நீண்டகால ஆரோக்கியத்துக்கு காரணம்” என்று நூறுவயதையும் சிரமமின்றி கடந்த ரகசியத்தை ‘பளிச்’சென்று போட்டு உடைக்கிறார். சிகரெட்டை தொட்டதேயில்லை. மதுபானம் வாய்ப்பேயில்லை.

“எவ்வளவு சிரமமான வாழ்க்கையாக இருந்தாலும், அந்த ‘டென்ஷன்’ உங்கள் கழுத்தை நெரிக்காதது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நெருக்கடியையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்பவனுக்கு தோல்வியே இல்லை. என் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் பணம் சம்பாதிக்க நான் சிரமப்பட்டுக்கொண்டேதான் இருந்திருக்கிறேன். ஆனால் மகிழ்ச்சியை மட்டும்  எப்போதும் கைவிட்டதேயில்லை” என்கிறார்.

நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கும் மனோகருக்கு ஒரு சின்ன ஆசை உண்டு. ஹாலிவுட் நடிகரும், உலகப் புகழ்பெற்ற ஆணழகருமான அர்னால்ட் ஸ்வாஸ்நெகரின் தீவிரமான ரசிகர் இவர். அர்னால்ட் நடித்த அத்தனை படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறார். அர்னால்ட்டும் மனோகரைப் போலவே ‘பாடிபில்டிங்’ பிரிவில் சாதனை மன்னன்.

“ஒரே ஒருமுறை அவரை நேரில் சந்திக்கவேண்டும். கண்ணை மூடுவதற்குள் இது நடக்கவேண்டும்”
சொல்லும்போது மனோகரின் கண்கள் சிறுகுழந்தையின் கண்களாய் மினுமினுக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

3 கருத்துகள்:

 1. இருவரும் முன்னாள் மிஸ்டர் யுனிவர்ஸ் எனும்போது அர்னால்ட் இவரை சந்திக்க விரும்பவும் வாய்ப்பிருக்கிறது.அவர் காதுக்கு கொண்டு செல்வதன் மூலம் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.100 வயது வாழ்வதே மிகப்பெரிய

  சாதனை என்றாகிவிட்ட நிலையில் சாதனைகள் பல புரிந்த இந்த மனிதரின்

  ஆசையை நிறைவேற்ற அனைவரும் முயற்சிப்போம்.

  பதிலளிநீக்கு
 2. இப்ப கூட உடம்பு செம்மையாதான் இருக்கு!!

  பதிலளிநீக்கு
 3. i have know about him, not this much details,i think u don't have time to write more.

  பதிலளிநீக்கு