27 செப்டம்பர், 2012

வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்


அம்மா என்றால் அன்பு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அம்மா என்பவள் தன் மகன் மீதுதான் அன்பு செலுத்துவாள் என்பது உலக வழக்கு. ஆனால் நம் புரட்சித்தலைவி அம்மாவோ அண்ணாமீதும் அன்பு செலுத்துபவர் என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா மீதான அம்மாவின் இந்த அன்பு ஏற்கனவே தெரிந்ததால்தானோ என்னமோ, புரட்சித்தலைவர் தன்னுடைய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தீர்க்கதரிசனமாக பெயர் வைத்திருக்கிறார்.

மேலைநாடுகளில் எல்லாம் ஆற்றைக் கடக்கதான் பாலம் கட்டுவார்கள். ஸ்ரீமான் ராமபிரான் ஒருவர்தான் கடலை கடக்க அணிலின் உதவியோடு பாலம் கட்டினார். ஆனால் நம்மூர் தீயசக்தி திம்மிகளோ சாலையைக் கடக்கவே பாலங்களைக் கட்டி கமிஷன் பார்த்தார்கள். அவ்வாறாக திம்மியின் கமிஷன் பாலம் ஒன்றின் விவகாரத்தில் புரட்சித்தலைவர் கண்ட அம்மாவின் கண்களாம் நம் கழகத்துக்கு ஏற்பட இருந்த அழியாக்கறையை துடைத்தெறிந்திருக்கிறார் நம் வீரத்தாய்.

கடந்த மே மாதம் பத்தாம் தேதி அன்று சென்னை மாநகராட்சியில் மேம்பாலம் கட்ட வசதியாக அண்ணா அலங்கார வளைவு இடிக்கப்படுமென மாநகரத் தந்தை ஸ்ரீமான் ஷைதை துரைஷாமி அவர்களால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தித்தாள்களில் செய்திகள் வந்தது. அந்த தீர்மானத்தை அம்மாவின் அரசும் ஏற்றுக்கொண்டதாக அதே செய்தித்தாள்களில் மீண்டும் செய்திகள் வந்தன. இதை நம்பிய அரசு அதிகாரிகள் உண்மையை அறிந்துகொள்ள ஆர்வம் செலுத்தாமல், அவசரப்பட்டு அலங்கார வளைவை இடிக்கத் தொடங்கிவிட்டார்கள். விஷயம் கேள்விப்பட்ட அம்மா தன்னுடைய இதயத்தையே அதிகாரிகள் இடிப்பதாக மனம் வருந்தினார். ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்என்கிற குறளை வாசிக்காதவரா நம் புரட்சித்தலைவி? உடனடியாக இடிப்பதைத் தடுக்க தாயுள்ளத்துடன் ஆணையிட்டார்.

பின்னணியில் என்ன நடந்தது என்றும் விசாரணை நடத்தினார். அப்போதுதான் தீய்சக்திகளின் திருகுத்தாளம் வெளிச்சத்துக்கு வந்தது. உண்மையில் சென்னை மாநகராட்சியில் அண்ணா வளைவை இடிக்கச்சொல்லி தீர்மானமே நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு செய்தித்தாள்களுக்கு செய்தி அளித்தவர்கள் திம்மிகள். அதுபோலவே அரசும் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. திம்மிகளே அதுபோல ஒரு போலி கோப்பு தயார் செய்து ஊடக நண்பர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். மேலும் அண்ணா வளைவை இடித்தவர்களும் அரசு அதிகாரிகள் அல்ல, அவர்களும் மாறுவேடத்தில் இருந்த திம்மிகளே என்கிற அதிர்ச்சிச் செய்தியையும் அம்மாவுடைய விசாரணையில் அறிந்துகொள்ள முடிந்தது. ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம் செய்யும் இந்த திம்மிகள் ஆட்சியில் இருந்திருந்தால் இன்னும் எதை எதை இடித்திருப்பார்களோ என்று வேதனை அடைந்தார் உலகம் போற்றும் ஒப்பற்ற தங்கத்தாரகையான நம்முடைய அம்மா.

இதையெல்லாம் விட பெரியசஸ்பென்ஸ்ஒன்று இருக்கிறது. மே பத்தாம் தேதி மேயரைப் போலவே மாறுவேடத்தில் மாநகர மன்றத்துக்கு வந்தவர் திம்மிகளின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராம். அவர்தான் இடிப்பு தீர்மானத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்தவராம். நம்முடைய மேயர் மக்கள் பணி செய்ய வெளியே கிளம்பிப் போனதை சாக்காக வைத்து, மாறுவேடத்தில் நுழைந்து இந்த குழப்படியை செய்திருக்கிறார்கள் தீயசக்திகள். அகிலாண்டப் பரமேஸ்வரியிடம் நடக்குமா?

ஸ்ரீமான் தா.பாண்டியனார் மாற்றுக் கட்சியில் இருந்தாலும், அவர் இதுவரை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கால்களில் விழுந்தவர் அல்ல என்பதைத் தவிர்த்துப் பார்த்தோமானால், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் ஸ்ரீமான் .பன்னீர்செல்வம் அவர்களைப் போலவே அம்மாவின் தீவிர தொண்டராக பணியாற்றுபவர். அன்னாருக்கு எண்பதாவது பிறந்தநாள் விழா என்பதால் தொண்டர்கள் மீது பாசத்தைப் பொழியும் புரட்சித்தாய் நேரில் சென்று அவருக்கு ஆசி வழங்கியிருக்கிறார். வரும் வழியில் திம்மிக்களின் சூழ்ச்சியால் பாதி இடிக்கப்பட்ட அண்ணா வளைவை கண்டிருக்கிறார். மனம் பதறி நம்முடைய மேயர் ஸ்ரீமான் துரைஷாமியை அழைத்து மீண்டும் சீர்படுத்தித் தருமாறு ஆணையிட்டிருக்கிறார். இம்முறை வந்தவர் ஒரிஜினல் துரைஷாமிதானா, அல்லது அவர் வேடத்தில் திம்மிக்கள் யாராவது மாறுவேடம் இட்டுவந்தனரா என்பதை காவல்துறை ஆணையர் ஸ்ரீமான் ஜார்ஜ் மூலமாக தெளிவாக அறிந்தபிறகே இந்த ஆணையை புரட்சித்தலைவி வழங்கியிருக்கிறார்.

இதையடுத்தே நேற்றைய மாநகர மன்றக் கூட்டத்தில் அம்மாவின் ஆணைக்கேற்ப அண்ணா வளைவை இடிக்கும் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. நாம் நிறைவேற்றாத ஒரு தீர்மானத்தை திம்மிகள் நிறைவேற்றியதாக காட்சிப்பிழையை தோற்றுவித்ததாலேயே, நிறைவேற்றாத தீர்மானத்தை திரும்பப் பெறுவதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவலச்சூழல் ஏற்பட்டது. இந்த அபாக்கியவாத நிலைமையை கருத்தில் கொண்டே அம்மா சொன்ன கருத்துரைகளை மனதில் கொண்டு, “வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்என்று அறிவித்திருக்கிறார் மேயர். அதைகூட கிண்டலும், கேலியுமாக எதிர்கொள்கிறார்கள் திம்மிகள்.

மின்வெட்டுப் பிரச்சினையிலும் கூட திம்மிக்களின் கை இருக்குமென்றே தோன்றுகிறது. இவர்களே ஆங்காங்கே இருக்கும் டிரான்ஸ்ஃபார்மர்களை ஃப்யூஸ் போகவைத்து மக்களிடம் அம்மாவின் ஆட்சிக்கு கெட்டபெயர் வாங்கிக் கொடுக்கிறார்களோ என்று நினைக்கிறோம். ஏனெனில் புரட்சித்தாயின் ஆலயம் அமைந்திருக்கும் போயஸ்கார்டனில் கூட ஒருமணி நேரத்துக்கு மின்சாரம் இல்லை. ஆனால் மூத்தத்திம்மி வசிக்கும் கோபாலபுரத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது. நாம் ஐயம் கொள்ள இது ஒன்று போதாதா? அல்லது மின்சாரவாரியத்தில் பணிபுரிபவர்கள் எல்லாருமே திம்மிகளா? மிக விரைவில் தாயுள்ளம் கொண்ட தலைவி இதற்கும் தீர்வு காண்பார்.

எது எப்படியோஆயிரம் கைகள் இடிக்கவந்தாலும், அண்ணா வளைவு இடிவதில்லைஎன்பதை புரட்சிக்கே புரட்சியை சேர்க்கும் புரட்சித்தலைவி நிரூபித்திருக்கிறார்.  ‘அண்ணாவைக் காத்த அம்மாஎன்கிற புதிய பட்டத்தை சமூகநீதி காத்த வீராங்கனைக்கு, அவரது பாதம் பணிந்து நம் முதுகு வளைந்து ஸ்ரீமான் சீமான் சார்பாக வழங்குவதில் அம்மாவின் அணில்கள் பெருமை கொள்கிறோம்.

13 கருத்துகள்:

 1. திம்மின்னு சொல்லியே அம்மியிலே வச்சு அரைச்சு எடுத்டுடேலே....பேஷ்!

  பதிலளிநீக்கு
 2. Cant stop laughing.

  எழுத்து நடை மிகவும் அருமை. மூத்த திம்மி கஜானாவை காலியாக்கியதை விட்டுவிட்டிர்களே?

  பதிலளிநீக்கு
 3. :) "News paper la varratha appadiye nambaathe" nu sollikitte''thaan ippallaam paper padikkiren!

  பதிலளிநீக்கு
 4. Ayya sami sirichi mudiyala.The best is \\ sriman pandiyanaar//. sirichi sirichi nonthutten.

  Neeyellam nalla varuvade

  பதிலளிநீக்கு
 5. bayangaram...
  awe'sh'ome man..
  its good that now u r writing everyday..

  பதிலளிநீக்கு
 6. யுவா நண்பா,
  உங்கள் பதிவுகள் அவ்வப்போது தவறாமல் படிப்பேன். ஆனால் கமெண்ட் எதுவும் போட்டதில்லை.
  முதல்முறையாக உங்கள் பதிவுக்கு என்னோட பின்னூட்டம். உங்கள் பதிவு காமெடி கலந்த உண்மையை வெளிப்படுத்தினாலும், இந்த காமெடி எல்லாம் நம்ம ஊர்லதான் நடக்கிறது என்பதை நினைக்கும்போது, உண்மையிலேயே வெட்க்கபடுகிறேன், வேதனைபடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. சூப்பர் யுவா...இப்படியொரு பதிவை ஒரு தடவையாவது நான் எழுதிடணும்...

  பதிலளிநீக்கு
 8. hai yuva
  Thimmi nu dmk karangalai solreenganu teriyuthu....
  but....
  thimmini thittureengalaa?
  parattureengalaa?

  பதிலளிநீக்கு