5 செப்டம்பர், 2012

வாலிபன் சுற்றும் உலகம்


யார் யாரோ எம்.ஜி.ஆர் படம் எடுத்திருக்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்ளும் காலம் இது. எம்.ஜி.ஆர் படத்தை எம்.ஜி.ஆரின் ரசிகனால் மட்டுமே எடுக்க முடியும். ஒரு ரசிகர் எடுத்திருக்கிறார். ‘புரட்சித்தலைவரின் பாணியில் எடுக்கப்பட்ட புதிய படம்’ என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு ஊரில் ஒரு அப்பா, ஒரு அம்மா. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்கிற பூவை செங்குட்டுவனின் பாட்டு அவர்களது குடும்பப்பாட்டு. அப்பாவாக நடிப்பவர் எம்.ஜி.ஆர் பாணி உடை அணிந்திருக்கிறார். முகம் மட்டும் ஓ.ஏ.கே தேவர் மாதிரியிருக்கிறது. கொஞ்சம் கருப்பு. அப்பாவின் பெயர் கோபாலன். அம்மா பெயர் சத்யா. மகன்களின் பெயர் ராமன், சந்திரன்.

‘நின்னுக்கோரீஈஈ வரண்ணும்’ என்று கவுண்டமணியிடம் பாட்டு கற்றுக் கொண்டவர் டாக்டராக நடித்திருக்கிறார். அவர் ஏதோ ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிக்கிறார். நம்பியார் அந்த ஃபார்முலாவை வெளிநாடுகளுக்கு விற்று கோடி, கோடியாய் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.
மாறாக கோபாலனோ அது இந்திய மக்களுக்கு உதவவேண்டும். இந்திய அரசிடம்தான் ஃபார்முலாவை ஒப்படைக்க வேண்டும் என்று போராடுகிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த டாக்டர், அந்த ஃபார்முலாவை மறைத்து வைத்திருக்கும் மேப்பை வரைந்து ஒரு நெக்லஸ் டாலரில் மறைத்து கோபாலனிடம் கொடுத்துவிடுகிறார். விஷயம் தெரியாத நம்பியார் ஆட்கள் டாக்டரை கொலை செய்துவிட்டு, ஃபார்முலாவை தேடி அலைகிறார்கள். டாக்டரை கொன்றது கோபாலன்தான் என்று போலிஸ் தேடுகிறது. ஃபார்முலா கோபாலனிடம்தான் இருக்கும் என்று நம்பியார் ஆட்களும் தேடுகிறார்கள். கோபாலன் தப்பிக்கும் போது அவரது குடும்பம் மூன்றாக பிரிகிறது.

இங்கேதான்டைட்டில்போடுகிறார்கள்.

டைட்டில் முடிந்ததுமே புரட்சித்தலைவர் மாதிரியே உடை, மேக்கப் போட்டிருக்கும் சந்திரன்வெற்றி, வெற்றி, வெற்றிஎன்று முழங்கிக்கொண்டே வந்து தன் தாயிடம் ஆசிபெறுகிறார். சந்திரன் தன் தாயோடு வளர்ந்துவாத்யார்ஆகிறார். கோபாலனுடன் அவரது மகள் மலேசியாவில் இருக்கிறார். ராமன், விசுவாசமான வேலைக்காரனுடன் வளர்ந்து டாக்டர் ஆகிறார். ஆனால் ராமனும், சந்திரனும் டபுள் ஆக்ஷன் புரட்சித்தலைவர் இல்லை என்பது பெரிய குறை. சந்திரன் மட்டும்தான் புரட்சித்தலைவராக நடித்திருக்கிறார். குடும்பம் எப்படி சேர்கிறது, ஃபார்முலாவின் கதி என்ன ஆனது என்று கதறக்கதற படமெடுத்து ராவடி செய்திருக்கிறார் இயக்குனர் .ஆர்.லலிதசாமி.

ஹீரோ எம்.ஜி.ஆர்.சிவா லாங்ஷாட்டில் தலைவர் மாதிரிதான் இருக்கிறார். ஆனால் க்ளோஸப்பில் பார்க்கும்போது தாங்கமுடியவில்லை. படம் பார்க்கும் மக்கள் திலகத்தின் ரசிகன் ஒவ்வொருவனும் இந்தக் காட்சிகளில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறான். ‘லுக்தான் ஒருமாதிரி இருக்கிறதே தவிர நடனம், பாட்டு, மேனரிசம் ஆகியவற்றில் குறைவைக்கவில்லை ஹீரோ. குறிப்பாக ஒரு காட்சியில் கருப்பு பேண்ட், சிகப்புச் சட்டை, கூலிங் க்ளாஸ் அணிந்து வரும்போது நாமே சிலிர்ப்படைந்துவிட்டோம். பழைய எம்.ஜி.ஆருக்கும், புது எம்.ஜி.ஆருக்குமான வித்தியாசம் என்னவென்றால் புதியவர் செல்போன் உபயோகிக்கிறார்.

போஸ்டரில் லதா படத்தைப் பார்த்து அவர்தான் ஹீரோயினோ என்று கலவரமடைந்து இருந்தோம். நல்லவேளையாக அவர் புரட்சித்தலைவரின் அம்மாவாக நடித்திருக்கிறார். சீரியல் அம்மாக்களின் நடிப்பை விஞ்சும் வகையில் சிறந்த நடிப்பு.

படத்தின் ஆரம்பத்தில் வரும் நம்பியார் படம் முழுக்க வராமல், அவரது மகன் அசோகன்தான் மெயின் வில்லன். அசோகன் தோன்றும் காட்சியில் எல்லாம் ரெண்டு உருட்டுக் கட்டைகள் இடமும், வலதுமாக ஜெயமாலினி பாணி டிரெஸ்ஸிங்கில் கிளுகிளுப்பூட்டுகிறார்கள். அசோகனின் அடியாட்கள் அந்த காலத்திலிருந்தே இன்னமும் படு முட்டாள்களாகதான் இருக்கிறார்கள்.

கலைஞரை எதிர்த்துபஞ்ச்டயலாக்குகளும் உண்டு. “ஊருக்குப் பிரச்சினைன்னா மேலிடத்துக்கு கடிதம்தான் எழுதுவே. உன் பொண்ணுக்கு ஏதாவதுன்னா நேராவே போயிடுவியா?” என்று புரட்சித்தலைவரின் அண்ணன் டாக்டர் ராமன், சக டாக்டரிடம் கேட்கிறார். சக டாக்டருக்கு தலையில் முடி இல்லை. கருப்புக்கண்ணாடி போட்டிருக்கிறார்.

புரட்சித்தலைவர் படங்களுக்கேயான பிரத்யேக கச்சாப் பொருட்களான அம்மா பாசம், தங்கை பாசம், பெரியவர்களுக்கு மரியாதை, அநியாயத்தை கண்டு ஆக்ரோஷமாக கொந்தளிப்பது, ஊருக்கு உழைப்பது, காதல், செக்ஸ் என்று அனைத்தையுமே கனக்கச்சிதமாக கைக்கொண்டுள்ளார் இயக்குனர். சண்டைக்காட்சிகள் சிறப்பு.

குறிப்பாக தங்கையை புரட்சித்தலைவர் மலேசியாவில் கண்டுகொள்ளும் காட்சி அபாரம்.

நீ எந்த ஊரும்மா?”

தமிழ்நாடு

உன் அப்பா

கோபாலன்

உன் அம்மா

சத்யா

உன் அண்ணன்?”

ராமன், சந்திரன்

தங்கச்சீஈஈஈஈஈஈ

நீங்க?”

நான்தாம்மா உன்னோட ரெண்டாவது அண்ணன் சந்திரன்

அண்ணாஆஆஆஆ

தங்கச்சீஈஈஈஈஈஈ

இப்படியான உருக்கமான, புதுமையான காட்சிகள் படம்நெடுக ஏராளமாக உண்டு. அம்மாவைப் பிரிந்த மகனும், மகளும் நீண்டகாலம் கழித்து காணும் காட்சி. அப்பாவைப் பிரிந்த மகன் அவரை காணும் காட்சி. கணவனும், மனைவியும் இணையும் காட்சி என்று நிறைய சொல்லலாம்.

இசை எம்.எஸ்.விஸ்வநாதன். டி.எம்.எஸ், எம்.எஸ்.வி., எஸ்.பி.பி.யெல்லாம் பாடியிருக்கிறார்கள். ‘உன்னை நான் சந்தித்தேன்பாட்டைத் தவிர்த்து மத்ததெல்லாம் டப்பா. பின்னணி இசை படு கோராமை. முத்தமிழ் பாடலின் லிரிக்ஸ் ஓக்கே. ‘உன் விழி முதல் தமிழ். உன் மொழி இரண்டாம் தமிழ். உன் இடை மூன்றாம் தமிழ். உன் நடை முத்தமிழ்என்று போகிறது. வாலி, காமகோடியான் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் ஹீரோயின் மீனாட்சி. ஃபேஸ்கட் அடிப்படையில் சுமாரான ஃபிகர் என்றாலும், சரியான திம்சுக்கட்டை. முதுகு 70 எம்.எம்.மாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இவருக்கு தொப்பையும் சினிமாஸ்கோப். படத்தில் மொத்தமே மூன்றோ, நாலோ காட்சிகள்தான். ஆனால் பாடல்காட்சிகள் அதிகம். ஒரு அருவிப் பாடலில் முழங்காலுக்கு மேலே பாவாடையை தூக்குகிறார். இடுப்புக்கு மேலே கச்சிதமாக உடலைக் கவ்விய மேலாடை அணிந்து, பயங்கர ஆட்டு ஆட்டி நடனமாடுகிறார். இவரது கவர்ச்சியில் மயங்கி காதல்வசப்பட்ட தலைவரும் வாய்ப்பை பயன்படுத்தி செம தடவு தடவியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் ஃபார்முலா எல்லாம் பக்காதான். ஆனால் சிரத்தையே இல்லாமல் சீரியஸாக எடுத்து ஸ்பூஃப் மாதிரி ஆக்கிவிட்டார்கள். பட்ஜெட் சிக்கனம் அநியாயம். மலேசியா காட்சிகளை எல்லாம் உள்ளூர் ஸ்டுடியோவில் படம் எடுத்துவிட்டு, மலேசியா என்று ஸ்லைட் போடுவதெல்லாம் கொடூரம். சீரியஸாகவே சந்தானம் மாதிரி ஹீரோவை வைத்து ஒரு எம்.ஜி.ஆர் ஃபார்முலா படமெடுத்தால் நிச்சயமாக சூப்பர்ஹிட் ஆகும். இந்தப்படம் படுமொக்கை என்றாலும், ஹார்ட்கோர் வாத்யார் ரசிகர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கிறோம்.

க்ளைமேக்ஸில் முதல்வராக புரட்சித்தலைவி வருகிறார். ஒரிஜினல் புரட்சித்தலைவி மட்டும் இந்தப் படத்தை பார்த்தாரென்றால் படமெடுத்த இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின், கேமிராமேன், எடிட்டர், லைட் பாய்ஸ், ஆபிஸ் பாய்ஸ் என்று யூனிட்டில் இருந்த அத்தனை பேர்மீதும் அவதூறு வழக்கு தொடுத்துவிடுவார்.

13 கருத்துகள்:

 1. யுவா, வரிக்கு வரி சிரித்துக்கொண்டே படித்தேன். செம.

  பதிலளிநீக்கு
 2. ..“தங்கச்சீஈஈஈஈஈஈ”

  “நீங்க?”

  “நான்தாம்மா உன்னோட ரெண்டாவது அண்ணன் சந்திரன்”

  “அண்ணாஆஆஆஆ”..

  Super.

  பதிலளிநீக்கு
 3. //“தங்கச்சீஈஈஈஈஈஈ”

  “நீங்க?”

  “நான்தாம்மா உன்னோட ரெண்டாவது அண்ணன் சந்திரன்”

  “அண்ணாஆஆஆஆ”// - Super..

  பதிலளிநீக்கு
 4. உண்மையிலேயே இப்படி ஒரு படம் வந்துருக்கா இல்ல இது நீங்க எழுதின கதையா? எப்படி இருந்தாலும் என்னை சிரிக்க வைத்து அலுவலகத்தில் காட்சி பொருள் ஆக்கிட்டீங்க போங்க!

  பதிலளிநீக்கு
 5. யுவா,

  அட்ட‌காச‌ம்..

  "எதையும் தாங்கும் இத‌ய‌ம்" உங்க‌ளோட‌து.. சான்ஸே இல்ல‌..

  பதிலளிநீக்கு
 6. வெண்பூவை வழிமொழிகிறேன்.

  இருந்தாலும் இரும்பு இதயம்ங்க உங்களுக்கு!

  பதிலளிநீக்கு
 7. //சீரியஸாகவே சந்தானம் மாதிரி ஹீரோவை வைத்து////

  மிக சரியான கூற்று....

  பதிலளிநீக்கு
 8. எப்ப்டித்தான் இந்த மாதிரி படம் பார்க்க மனசு வருதோ போங்க பாஸ்!!

  பதிலளிநீக்கு
 9. யுவா சார்,

  இந்தப் படத்தைப் பார்த்தா 'வாத்யார்' படம் பார்க்கிற மாதிரி இருக்காது! ஏதோ விஜய் டிவியில் 'லொள்ளு சபா' பார்க்கிற மாதிரி இருக்கும் !

  நன்றி!

  சினிமா விரும்பி

  http://cinemavirumbi.blogspot.com

  பதிலளிநீக்கு
 10. யுவா சார்!எல்லாருக்கும் கஷ்டம் எவ்வளவோ வர்ரதுதான்.உங்க கஷ்டம் வெளியே தெரியுது. மனுச ஆயுள் 120 வருசம். அதிலே ஒரு ரெண்டரை மணி நேரம் இப்படி நீங்க கஷ்டப்பட்டுட்டீங்க.
  இதுக்குப்பிராயச்சித்தமா உடனே,உடனே ’உலகம் சுற்றும் வாலிபன்’ பார்த்துவிடுங்கள்.
  நான் சொல்லும் இந்த விஷமுறிவு வைத்தியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்.

  பதிலளிநீக்கு