28 செப்டம்பர், 2012

துரத்துதலும், ஓட்டமும்!


புலிகள் துரத்துகின்றன. கனவில் அல்ல. எருமைமாடு அளவில் ஒன்பது புலிகள். மஞ்சள் உடலில் கறுப்பு கோடுகள். ஒன்பதுமே அச்சு அசலாக ஒரே மாதிரி. நேற்று துரத்திய புலி இன்றைய கூட்டத்தில் இருக்கிறதா என்று அடையாளம் தெரியவில்லை. பெண் புலி தன் கணவனையும், மகனையும் எப்படி பிரித்தறிந்து அடையாளம் காணும்? ஓடுவதிலோ, துரத்துவதிலோ சுணக்கம் ஏற்பட்டால் ஒரு தரப்புக்கு வெற்றி. ஒரு தரப்புக்கு தோல்வி. வெற்றி, தோல்வி இரண்டுமே தவிர்க்க முடியாதது.

ஓடிக்கொண்டேயிருக்கிறேன். ஸ்பார்ட்டாவிலிருந்து ஒலிம்பியாவுக்கு ஓடிய கிரேக்க வீரனை போல். அடர்கானகத்தில் நான் மட்டும் மனிதன். என்னை துரத்துவது ஒன்பது புலிகள். என்னுடைய பூட்ஸ் சத்தம் நாராசமாக கேட்கிறது. கீச் கீச்சென்று அசந்தர்ப்பமாக கத்தும் பட்சிகள் எங்கே போனது. புலிகளின் குளம்புச் சத்தம் துளியும் கேட்கவில்லை. குதிரை ஓடினால் மட்டும் எப்படி டக் டக்கென்று சத்தம் வருகிறது? குதிரைக்கு லாடம் அடிக்கலாம். புலிகளுக்கு யார் அடிப்பது?

நான் ஓடுவதின் நோக்கம் உயிர்வாழ்வது. துரத்தும் புலிகளின் நோக்கமும் அதுதான். அடுத்த சில நாட்கள் உயிர்வாழ நான் மட்டுமே அவற்றுக்கு இரை. ஒளிபுகமுடியா கானகத்தில் நான் மட்டுமே மனிதன். எஞ்சியிருந்த மான்களையும், காட்டெருமைகளையும் இந்த அடாத புலிகள் ஏற்கனவே புசித்து விட்டது. புதர்களுக்குள் ஒளிந்திருந்த நான்கைந்து நரிகளும் நாட்டுக்கு போய்விட்டது. மிஞ்சியிருப்பது நானும், ஒரு சில முயல்களும். புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, முயலையும் தின்னாது. புலிப்பசிக்கு சோளப்பொறி போல முயல்கறி. கட்டுப்படியாகுமா?

உயிர்வேட்கையில் ஓடிக்கொண்டிருக்கிறேன். புலிகள் என்னை துரத்துவது போல நான் புலிகளை துரத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? யோசித்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புலிகள் போல எனக்கு கூரிய பற்களும், நகங்களும் இல்லையே? ஒரு நரியை கூட துரத்திப் பிடிக்க என்னால் ஆகாது. ஆயினும் இன்று புலிகளை விட வேகமாய் ஓடுகிறேன். துரத்துதலும், ஓடுதலும் தவிர்க்க முடியாதது. துரத்தும்போது இருப்பதை காட்டிலும் ஓடும்போது உடலில் சக்தி அபரிதமாக அதிகரிக்கிறது.

பிறந்ததிலிருந்து ஓடிக்கொண்டு தானிருக்கிறேன். இப்போது ஓடுவதை விட முன்னெப்போதும் வேகமாக ஓடியதில்லை. காடதிர, நிலம் குலுங்க உறுமும் புலிகள் இன்று சத்தமில்லாமல் ஏன் துரத்துகிறது? உறுமி நேரத்தை வீணடிப்பானேன்? துரத்துவதில் உன்னிப்பாக இருக்கலாம், வேட்டையை விரைவில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கலாமோ? என் பூட்ஸ் ஒலி மட்டும் எனக்கு கேட்கிறது. புலிகளின் வேகத்தால் காற்று தடைபடும் விஸ்ஸென்ற மெல்லிய ஓசை மட்டுமே புலிகள் என்னை துரத்துவதற்கு அடையாளம். இரண்டு புலிகள் நெருங்கி விட்டிருக்கலாம். நான்கு புலிகள் பரவி ஓடி என்னை மடக்க முயற்சிக்கலாம். மூன்று புலிகள் பின் தங்கியிருக்கலாம். கிழட்டுப் புலிகள்.

பிறந்த மேனியாய் ஓடுவது அசவுகரியம். குளிர் காற்று உடலை ஊடுருவுகிறது. இடுப்பு வரை வளர்ந்த மயிர் அவ்வப்போது முகத்தில் விழுந்து பார்வையை மறைக்கிறது. தாவரங்களின் முள் மார்பையும், இடையையும், இடைக்கு கீழான பகுதிகளையும் இரக்கமின்றி குத்தி ரணமாக்குகிறது. இந்த பூட்ஸ் கூட எனக்கு எங்கேயோ மலைப்பிரதேசத்தில் எப்போதோ கிடைத்தது. ஒரு எலும்புக்கூட்டின் காலெலும்பில் கண்டெடுத்தேன். இதன் பெயர் பூட்ஸ் என்று கூட எனக்குத் தெரியாது. இடதுபூட்ஸை இடது காலுக்கும், வலது பூட்ஸை வலது காலுக்கும் போடவேண்டும் எனுமளவுக்கும் எனக்கு அறிவு கிடையாது. நகர மனிதனுக்கும், காட்டுமிராண்டிக்கும் இதுதான் வித்தியாசம். ஆனால் காடு சொர்க்கம், நகரம் நரகம் என்றே எண்ணுகிறேன்.

நகரத்திலும் ஓடுவார்களா? அவர்களை புலி துரத்துமா? புலிகள் வசிக்க நகரத்தில் குகையுண்டா? அங்கு முயல்கள் இருக்குமா? மரங்கள் இருக்குமா? மரத்தில் பழங்கள் காய்க்குமா? நீரருந்த குளங்கள் இருக்குமா? நகரம் எப்படியிருக்கும்? அங்கு யார் ஓடுவார்கள்? யார் துரத்துவார்கள்? ஓடுவதும், துரத்துவதும் உயிர்கள் பிறந்ததிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அங்கும் யாராவது ஓடுவார்கள். அல்லது விரைவாக நடப்பார்கள். யாராவது துரத்துவார்கள். அல்லது மெதுவாக துரத்துவார்கள். காட்டு மனிதனாகட்டும், நாட்டு மனிதனாகட்டும். உயிர் வாழ்வது அவசியம் தானே?

புலிகள் துரத்துகின்றன. நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

பேட்மேன்

ஒலி மூலமாக ஒளி காண்கிறார் ஓர் அமெரிக்கர்
நம் எல்லோருக்குமே தெரிந்த அறிவியல் உண்மை இது. வவ்வால்களுக்கு பார்வை இல்லை. ஆனாலும் அவை அடர்த்தியான இரவுகளில் கூட, அனாயசமான வேகத்தில் இரைதேடி பயணிப்பதை கண்டிருக்கிறோம். ஒலி அலைகளை எதிரொலித்து தன்னுடைய புவியியல் சவாலை அவை எதிர்கொள்கின்றன. இதை ஆங்கிலத்தில் echolocation என்கிறார்கள்.

நாற்பத்தியாறு வயது டேனியல் கிஷ் அமெரிக்கர். இவர் பிறந்து பதிமூன்றே மாதங்கள் ஆனபோது கேன்சர் நோயால் முற்றிலும் பார்வை இழந்தார். எக்கோலொகேஷன் முறையில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வியலை மேற்கொள்கிறார். இவரே தன்னிச்சையாக, யாருடைய ஆலோசனையுமின்றி பார்வை சவாலை எதிர்கொண்ட முறை இது. இவரது இந்த தன்மையை ஒரு சினிமா ஹீரோவுக்கு சித்தரித்து, தமிழில் ‘தாண்டவம்’ என்கிற படம் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார் டேனியல்.

‘புதிய தலைமுறை’ உடனான பிரத்யேக உரையாடலுக்கு ஒப்புக்கொண்டவரை நட்சத்திர ஓட்டல் அறையில் சந்தித்தோம். யாருடைய உதவியுமின்றி டேனியல் தனியாகதான் தங்கியிருக்கிறார். துணைக்கு யாரையும் ஊரில் இருந்து அழைத்து வரவில்லை. அவர் பார்வையற்றவர் என்கிற எண்ணமே ஓட்டல் பணியாளர்களுக்கு சற்றும் ஏற்படவில்லை. பார்வையற்றவர்கள் வழக்கமாக குளிர்கண்ணாடி அணிவார்கள். அவர்கள் மற்றவர்களை பார்த்து பேசும்போது விழி வேறு திக்கை நோக்கும் என்பதால் உரையாடல் சிரமமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு. டேனியல் நம் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுகிறார். “நீங்கள் ஒளி மூலமாக உலகை எதிர்கொள்வதைப் போல, நான் ஒலி மூலமாக எதிர்கொள்கிறேன். இரண்டுமே ஆற்றல்தான். இவற்றுக்கிடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒளிக்குப் பதிலாக ஒலி. அவ்ளோதான்”
பார்வையற்றவர் என்று நினைத்து அவரை யாரேனும் தொட்டுப் பேசினால் கோபப்படுகிறார். “எப்போதும் மற்றவரை இப்படி தொட்டு தொட்டுதான் பேசுகிறீர்களா? நீங்கள் எதிரே சோஃபாவில் அமர்ந்திருப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. அங்கிருந்தே பேசுங்கள்” என்று செல்லமாக கடிந்துக் கொள்கிறார். புகைப்படங்களுக்கு இயல்பாகவே ‘போஸ்’ கொடுக்கிறார். “இடது பக்கம் திரும்புங்கள், லேசாக வலது பக்கம்” என்று நம் புகைப்படக்காரரின் கோரிக்கைகளுக்கு மிகச்சரியாக செவிசாய்க்கிறார்.

“சிறுவயதில் தூக்கம் எனக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. பார்வையற்றவனுக்கு எது பகல், எது இரவு என்று தெரியாது இல்லையா? பல நாட்களில் என் பெற்றோர் இரவுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் கேட்கும் ஒலி மிக மிக துல்லியமானதாக இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு வித்தியாசம் உணர்ந்து, ஒவ்வொரு ஒலிக்கும் கற்பனையில் ஒரு தோற்றம் கொடுக்க ஆரம்பித்தேன். எதையாவது கண்டதுமே உங்கள் மூளைக்குள் ஒரு ‘இமேஜ்’ எப்படி தோன்றுகிறதோ, அதுமாதிரியே எதையாவது கேட்டதும் என் மூளைக்குள்ளும் ஒரு ‘இமேஜ்’ உருவாகிறது.

என் வீட்டுக்குப் பின்னால் நான் விளையாட நீளமான வராந்தா மாதிரியான பகுதி இருந்தது. அது என்னுடைய ராஜ்ஜியம். அந்த வராந்தாவுக்கு அந்தப் பக்கமாக பெரிய காம்பவுண்டுச் சுவார். இங்கே விளையாடும்போது ‘சீட்டி’ அடித்து ஒலியெழுப்பி, அது சுவரில் பட்டு எதிரொலிப்பதை ஆர்வமாக கவனிப்பேன். நாளாக நாளாக இம்மாதிரி சீட்டியடித்து, எனக்கும் எதிரில் இருக்கும் ஏதோ பொருட்களுக்குமான தூரத்தையெல்லாம் சுலபமாக கணிக்க ஆரம்பித்தேன். நாளாக, நாளாக இந்த திறமை எனக்குள் வளர்ந்துக் கொண்டே போனது. பெற்றோரின் அபரிதமான ஆதரவும் இருந்ததால் ஒரு கட்டத்தில் நான் இந்த விஷயத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டேன்.
பள்ளி, கல்லூரிகளுக்கு போகும்போதெல்லாம் நான் மற்ற மாணவர்களைப் போல சாதாரணமாகவே இருந்தேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் தேர்ந்தெடுத்து சிறப்பாக தேறினேன். எனக்கு கார், மோட்டார் பைக் ஓட்டத் தெரியாதே தவிர, சைக்கிளை சிறப்பாக ஓட்டத் தெரியும். சைக்கிளை வைத்து மலைகூட ஏறுவேன் தெரியுமா?”

பேசிக்கொண்டே லேப்டாப்பை திறந்து வேகமாக ஏதோ பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.

“லேப்டாப்பெல்லாம் பயன்படுத்துகிறீர்களா?”

“இரண்டுவகையான லேப்டாப்புகளை பயன்படுத்துகிறேன். ஒன்று நீங்கள் பயன்படுத்தும் அதே ஆப்பிள் வகை லேப்டாப். இதில் ஆணைகளை எல்லாம் ஒலியாக மாற்றும் சிறப்பு மென்பொருள் இருக்கிறது. இதைவைத்துதான் என் வேலைகளை பார்த்துக் கொள்கிறேன். ‘தாண்டவம்’ படம் தொடர்பாக உங்கள் ஆட்கள் என்னோடு முழுக்க முழுக்க ஈமெயில் மூலமாகதான் பேசினார்கள். இது தொடர்பாக மட்டுமே கிட்டத்தட்ட இருநூறு ஈமெயில்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். இன்னொரு வகை லேப்டாப் பார்வையற்றவர்களுக்கானது. இது எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை”

“இந்த லேப்டாப்பின் வடிவத்தை நீங்கள் மனதுக்குள் எப்படி உணர்கிறீர்கள்?”

“ஒரு வடிவத்தை நீங்கள் உணர்வதற்கும், நான் உணர்வதற்கும் நிச்சயமாக வித்தியாசமிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல செவ்வகம், சதுரம், வட்டம் என்றெல்லாம் நான் உணர்ந்துக் கொள்வதில்லை. என் மனதுக்குள் ஒவ்வொரு பொருளுக்கும் நான் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜ்’ வேறானது. தனித்துவமானது. ஆனால் செயற்கையாகவோ, இயற்கையாகவோ உலகில் அமைந்திருக்கும் எல்லாவற்றையுமே நான் உங்களுக்கு இணையாக புரிந்துகொள்கிறேன் என்பதுதான் மேட்டர்”

“பேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சமூகவலைத் தளங்களில் இயங்குகிறீர்களா டேனியல்?”

“உருப்படியாக பயன்படுத்துவதற்கே நேரம் போதவில்லை. இதெல்லாம் வேறா? மின்னஞ்சலை வாசித்து பதில் சொல்லவே சரியாக இருக்கிறது. ஆனால் எனது நிறுவனத்துக்கு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கணக்கு உண்டு”

‘வேர்ல்ட் ஆக்சஸ் ஃபார் ப்ளையண்ட்’ என்கிற லாபநோக்கில்லாத நிறுவனத்தை பண்ணிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் டேனியல். உலகமெங்கும் வாழும் பார்வையற்ற குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம். சுயமாகவே தான் கண்டறிந்த எக்கோலொகேஷன் முறையை, இதுவரை குறைந்தபட்சம் 500 பார்வையற்றவர்களுக்கு போதித்திருக்கிறார் இவர். வாழும் அதிசயம் என்பதால் இவரது முறை குறித்து பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, இவரது மூளை எக்கோலொகேஷன் க்கு ஏற்றவாறாக மாற்றம் கண்டிருப்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
“எங்கள் ஊர் எப்படியிருக்கிறது?”

“பார்ப்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்பவரிடம் கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். ஏற்கனவே ஒருமுறை கொல்கத்தா சென்றிருக்கிறேன். மற்ற நகரங்களை ஒப்பிடும்போது உங்கள் சென்னை ரொம்ப அமைதியான நகரம். ஒலிமாசு குறைவு. அன்பாகவும், பண்பாகவும் நடந்துக் கொள்கிறீர்கள். கய்யா முய்யாவென்று கத்தாமல் அமைதியாக பேசுகிறீர்கள். சாந்தமான சுபாவம் கொண்டவர்கள் தமிழர்கள்” ஜில்லென்று நம் தலையில் டன் கணக்காக ஐஸ் வைத்தார் டேனியல்.

(நன்றி : புதிய தலைமுறை)

27 செப்டம்பர், 2012

வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்


அம்மா என்றால் அன்பு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அம்மா என்பவள் தன் மகன் மீதுதான் அன்பு செலுத்துவாள் என்பது உலக வழக்கு. ஆனால் நம் புரட்சித்தலைவி அம்மாவோ அண்ணாமீதும் அன்பு செலுத்துபவர் என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா மீதான அம்மாவின் இந்த அன்பு ஏற்கனவே தெரிந்ததால்தானோ என்னமோ, புரட்சித்தலைவர் தன்னுடைய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தீர்க்கதரிசனமாக பெயர் வைத்திருக்கிறார்.

மேலைநாடுகளில் எல்லாம் ஆற்றைக் கடக்கதான் பாலம் கட்டுவார்கள். ஸ்ரீமான் ராமபிரான் ஒருவர்தான் கடலை கடக்க அணிலின் உதவியோடு பாலம் கட்டினார். ஆனால் நம்மூர் தீயசக்தி திம்மிகளோ சாலையைக் கடக்கவே பாலங்களைக் கட்டி கமிஷன் பார்த்தார்கள். அவ்வாறாக திம்மியின் கமிஷன் பாலம் ஒன்றின் விவகாரத்தில் புரட்சித்தலைவர் கண்ட அம்மாவின் கண்களாம் நம் கழகத்துக்கு ஏற்பட இருந்த அழியாக்கறையை துடைத்தெறிந்திருக்கிறார் நம் வீரத்தாய்.

கடந்த மே மாதம் பத்தாம் தேதி அன்று சென்னை மாநகராட்சியில் மேம்பாலம் கட்ட வசதியாக அண்ணா அலங்கார வளைவு இடிக்கப்படுமென மாநகரத் தந்தை ஸ்ரீமான் ஷைதை துரைஷாமி அவர்களால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தித்தாள்களில் செய்திகள் வந்தது. அந்த தீர்மானத்தை அம்மாவின் அரசும் ஏற்றுக்கொண்டதாக அதே செய்தித்தாள்களில் மீண்டும் செய்திகள் வந்தன. இதை நம்பிய அரசு அதிகாரிகள் உண்மையை அறிந்துகொள்ள ஆர்வம் செலுத்தாமல், அவசரப்பட்டு அலங்கார வளைவை இடிக்கத் தொடங்கிவிட்டார்கள். விஷயம் கேள்விப்பட்ட அம்மா தன்னுடைய இதயத்தையே அதிகாரிகள் இடிப்பதாக மனம் வருந்தினார். ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்என்கிற குறளை வாசிக்காதவரா நம் புரட்சித்தலைவி? உடனடியாக இடிப்பதைத் தடுக்க தாயுள்ளத்துடன் ஆணையிட்டார்.

பின்னணியில் என்ன நடந்தது என்றும் விசாரணை நடத்தினார். அப்போதுதான் தீய்சக்திகளின் திருகுத்தாளம் வெளிச்சத்துக்கு வந்தது. உண்மையில் சென்னை மாநகராட்சியில் அண்ணா வளைவை இடிக்கச்சொல்லி தீர்மானமே நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு செய்தித்தாள்களுக்கு செய்தி அளித்தவர்கள் திம்மிகள். அதுபோலவே அரசும் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. திம்மிகளே அதுபோல ஒரு போலி கோப்பு தயார் செய்து ஊடக நண்பர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். மேலும் அண்ணா வளைவை இடித்தவர்களும் அரசு அதிகாரிகள் அல்ல, அவர்களும் மாறுவேடத்தில் இருந்த திம்மிகளே என்கிற அதிர்ச்சிச் செய்தியையும் அம்மாவுடைய விசாரணையில் அறிந்துகொள்ள முடிந்தது. ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம் செய்யும் இந்த திம்மிகள் ஆட்சியில் இருந்திருந்தால் இன்னும் எதை எதை இடித்திருப்பார்களோ என்று வேதனை அடைந்தார் உலகம் போற்றும் ஒப்பற்ற தங்கத்தாரகையான நம்முடைய அம்மா.

இதையெல்லாம் விட பெரியசஸ்பென்ஸ்ஒன்று இருக்கிறது. மே பத்தாம் தேதி மேயரைப் போலவே மாறுவேடத்தில் மாநகர மன்றத்துக்கு வந்தவர் திம்மிகளின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராம். அவர்தான் இடிப்பு தீர்மானத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்தவராம். நம்முடைய மேயர் மக்கள் பணி செய்ய வெளியே கிளம்பிப் போனதை சாக்காக வைத்து, மாறுவேடத்தில் நுழைந்து இந்த குழப்படியை செய்திருக்கிறார்கள் தீயசக்திகள். அகிலாண்டப் பரமேஸ்வரியிடம் நடக்குமா?

ஸ்ரீமான் தா.பாண்டியனார் மாற்றுக் கட்சியில் இருந்தாலும், அவர் இதுவரை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கால்களில் விழுந்தவர் அல்ல என்பதைத் தவிர்த்துப் பார்த்தோமானால், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் ஸ்ரீமான் .பன்னீர்செல்வம் அவர்களைப் போலவே அம்மாவின் தீவிர தொண்டராக பணியாற்றுபவர். அன்னாருக்கு எண்பதாவது பிறந்தநாள் விழா என்பதால் தொண்டர்கள் மீது பாசத்தைப் பொழியும் புரட்சித்தாய் நேரில் சென்று அவருக்கு ஆசி வழங்கியிருக்கிறார். வரும் வழியில் திம்மிக்களின் சூழ்ச்சியால் பாதி இடிக்கப்பட்ட அண்ணா வளைவை கண்டிருக்கிறார். மனம் பதறி நம்முடைய மேயர் ஸ்ரீமான் துரைஷாமியை அழைத்து மீண்டும் சீர்படுத்தித் தருமாறு ஆணையிட்டிருக்கிறார். இம்முறை வந்தவர் ஒரிஜினல் துரைஷாமிதானா, அல்லது அவர் வேடத்தில் திம்மிக்கள் யாராவது மாறுவேடம் இட்டுவந்தனரா என்பதை காவல்துறை ஆணையர் ஸ்ரீமான் ஜார்ஜ் மூலமாக தெளிவாக அறிந்தபிறகே இந்த ஆணையை புரட்சித்தலைவி வழங்கியிருக்கிறார்.

இதையடுத்தே நேற்றைய மாநகர மன்றக் கூட்டத்தில் அம்மாவின் ஆணைக்கேற்ப அண்ணா வளைவை இடிக்கும் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. நாம் நிறைவேற்றாத ஒரு தீர்மானத்தை திம்மிகள் நிறைவேற்றியதாக காட்சிப்பிழையை தோற்றுவித்ததாலேயே, நிறைவேற்றாத தீர்மானத்தை திரும்பப் பெறுவதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவலச்சூழல் ஏற்பட்டது. இந்த அபாக்கியவாத நிலைமையை கருத்தில் கொண்டே அம்மா சொன்ன கருத்துரைகளை மனதில் கொண்டு, “வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்என்று அறிவித்திருக்கிறார் மேயர். அதைகூட கிண்டலும், கேலியுமாக எதிர்கொள்கிறார்கள் திம்மிகள்.

மின்வெட்டுப் பிரச்சினையிலும் கூட திம்மிக்களின் கை இருக்குமென்றே தோன்றுகிறது. இவர்களே ஆங்காங்கே இருக்கும் டிரான்ஸ்ஃபார்மர்களை ஃப்யூஸ் போகவைத்து மக்களிடம் அம்மாவின் ஆட்சிக்கு கெட்டபெயர் வாங்கிக் கொடுக்கிறார்களோ என்று நினைக்கிறோம். ஏனெனில் புரட்சித்தாயின் ஆலயம் அமைந்திருக்கும் போயஸ்கார்டனில் கூட ஒருமணி நேரத்துக்கு மின்சாரம் இல்லை. ஆனால் மூத்தத்திம்மி வசிக்கும் கோபாலபுரத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது. நாம் ஐயம் கொள்ள இது ஒன்று போதாதா? அல்லது மின்சாரவாரியத்தில் பணிபுரிபவர்கள் எல்லாருமே திம்மிகளா? மிக விரைவில் தாயுள்ளம் கொண்ட தலைவி இதற்கும் தீர்வு காண்பார்.

எது எப்படியோஆயிரம் கைகள் இடிக்கவந்தாலும், அண்ணா வளைவு இடிவதில்லைஎன்பதை புரட்சிக்கே புரட்சியை சேர்க்கும் புரட்சித்தலைவி நிரூபித்திருக்கிறார்.  ‘அண்ணாவைக் காத்த அம்மாஎன்கிற புதிய பட்டத்தை சமூகநீதி காத்த வீராங்கனைக்கு, அவரது பாதம் பணிந்து நம் முதுகு வளைந்து ஸ்ரீமான் சீமான் சார்பாக வழங்குவதில் அம்மாவின் அணில்கள் பெருமை கொள்கிறோம்.

ஹாட் ஆஃப் ஆசியா


ஆசியாவின் ஹாட் நியூஸ் இப்போது இதுதான். பாகிஸ்தானின் கவர்ச்சிகரமான நிதியமைச்சராக இருந்த ஹினா ரபானி  (நம்மூரில் இந்தத்துறைக்கு அமைச்சர் ப.சி., இருவரின் போட்டோவையும் கூகிளில் அடித்துத் தேடி, ஒப்பிட்டு வயிறெரியவும்), அந்நாட்டின் அதிபரின் மகனோடு ரொமான்ஸ் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக நீடிக்கிறார். நம்ம முலாயம் சிங் யாதவின் மருமகளைவிட பன்மடங்கு அழகி இவர்.  ஹினாவை மணந்தே தீருவது என்று ஒத்தக்காலில் நிற்கிராம் அதிபர் சர்தாரியின் மகனான பிலாவல். சர்தாரியின் மகன் என்றில்லாமல் முன்னாள் பிரதமர் பெனசிரின் மகனும் இவர் என்பதால் பாகிஸ்தானுக்கு பிலாவல் செல்லப்பிள்ளை.

ஹினா இந்தியர்களுக்கு நெருக்கமானவர். சில காலத்துக்கு முந்தைய அவரது இந்திய விஜயத்தின் போது, ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து அவரை போட்டோ பிடித்து பத்திரிகைகளில் கவர்ஸ்டோரி எழுதின. 1977ல் பிறந்த இவர் பொருளாதாரத்தில் இளங்கலை படித்தவர். அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தவர். அப்பா பெரிய நிலப்பிரபு. அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பப் பின்னணி. பார்லிமெண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட பட்டம் அவசியம் என்கிற நெருக்கடி வந்தபோது, ஹினாவின் தந்தை வேறுவழியின்றி மகளை அரசியலில் குதிக்க வைத்தார். அங்கேயும் வாரிசு அரசியல்தான். அடித்துப் பிடித்து அமைச்சரும் ஆகிவிட்டார்.

பாகிஸ்தானின் மல்ட்டி மில்லியனர் பிரோஸ் குல்ஸார்தான் ஹினாவின் கணவர் என்கிற அதிர்ஷ்டத்துக்குரிய பதவியில் இருப்பவர். அனயா, தினா என்று அம்மாவை அழகில் அப்படியே உரித்து வைத்திருக்கும் இரண்டு குழந்தைகள். கணவரை கைவிட்டுவிட்டு, பிலாவலை கைப்பிடிக்கப் போகிறார் ஹினா என்பதுதான் லேட்டஸ்ட் கிசுகிசு.

அதிபருக்கு இது கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அமைச்சரை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்று அவர் நினைக்கிறார். இதனால் அப்பாவுக்கும், மகனுக்கும் கடுமையான பனிப்போர் நிகழ்கிறது. மகனின் அரசியல் எதிர்காலம் அழிவதோடு, தன்னுடைய கட்சியின் இமேஜும் மக்களிடம் சீரழிந்துவிடும் என்றும் அவர் அச்சப்படுகிறார். ஹினா மீது பயங்கர கடுப்பில் இருக்கும் அதிபர் தன்னுடைய உளவுத்துறை செல்வாக்கை பயன்படுத்தி, ஹினாவின் குடும்ப நிறுவனம் 70 மில்லியன் ரூபாய் அளவுக்கு எலெக்ட்ரிசிட்டி பில்களில் மோசடி செய்திருப்பதாக செய்திகளை பரப்பி வருகிறார்.
காதலி ஒரு பக்கம், அப்பா இன்னொரு பக்கம் என்று இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கும் பிலாவல் இதனால் மேலும் கோபமடைந்திருக்கிறார். கட்சிப்பதவியை தூக்கியெறிவேன் என்று அப்பாவை மிரட்டி வருகிறார். “ஹினாவோடு ஸ்விட்சர்லாந்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன். எங்களை விட்டுவிடுங்கள்” என்று அப்பாவிடம் அவர் கெஞ்சியதாகவும் செய்திகள். கணவரோடு விவாகரத்து செய்ய திட்டமிட்டிருக்கும் ஹினா, பிரதியுபகாரமாக தன்னுடைய குழந்தைகளை கணவரிடமே திருப்பித் தந்துவிடுவார் என்று இன்னொரு செய்தி.

தன்னுடைய மகன் காதல்வசப்பட்டிருக்கிறான், அதுவும் அமைச்சரிடம் என்று ஆரம்பத்தில் வந்த செய்திகளை அதிபர் நம்பவில்லையாம். ஆனால் கையும் களவுமாக ஒருமுறை அதிபரின் மாளிகையிலேயே இருவரும் சிக்கிக் கொண்டார்கள் எனப்படுகிறது. பிலாவலோடு, ஹினா பேசிய தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டு அவர்களது காதல் உண்மைதான் என்று அதிபருக்கு ஆதாரங்கள் காட்டப்பட்டிருக்கின்றனவாம். மேலும் பிலாவலது கடந்த பிறந்தநாளன்று ஹினா கைப்பட எழுதிய வாழ்த்து அட்டையும் சிக்கியிருக்கிறது. “நம்முடைய உறவு உண்மையானது. விரைவில் நாம் நமக்காக வாழ்வோம்” என்று கவித்துவமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஹினா. இதற்கிடைய ஹினாபிலாவலின்லிப் லாக்போட்டோ ஒன்று இணையத்தில் வேகமாக உலவத் தொடங்கியிருக்கிறது. இது சிக்கலை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

இதையெல்லாம் கேள்விப்படும்போது கற்பனைக் கதையாக இருந்தாலும் சலீம்-அனார்கலி கதைதான் நினைவுக்கு வருகிறது. பிலாவலை விட ஹினாவுக்கு பதினோரு வயது அதிகம் என்பதுதான் இங்கேஹைலைட்செய்யப்பட வேண்டிய மேட்டர்.