22 ஆகஸ்ட், 2012

ஜாக்கியா? கேபிளா?


இரண்டாயிரங்களின் மத்தியில் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் ஓட்டலில் போண்டாக்களை பிரதானப்படுத்தி தொடங்கிய பதிவர் சந்திப்புகள் இப்போது கல்யாண மண்டபத்தில் மாநாடு நடத்தக்கூடிய அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆரம்பத்தில் நடந்த சந்திப்புகளில் போலி டோண்டுவை ஒழிப்பது எப்படி, இந்தியா வல்லரசு ஆவது எப்படி போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பேசப்பட்டன. பிற்பாடு தி.நகர் பூங்காக்களிலும், கடற்கரையிலும், சாந்தோம் டீக்கடையிலுமாக நடந்த சந்திப்புகளும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, எல்லாருமாக ஒன்றுசேர்ந்து ‘எங்கள் பிளாக்கில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று குழுவாக பாடுமளவுக்கு உறுதிபெற்றது. யார் கண்பட்டதோ, அந்த சந்திப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போதெல்லாம் ஏதாவது புத்தக வெளியீடு, புதுப்படம் ரிலீஸ் போன்ற இடங்களில்தான் பதிவர்கள் சந்தித்துக்கொள்ள முடிகிறது. அந்த குறையைப் போக்கும் வகையில்தான் சென்னையில் தமிழ் வலைப்பதிவர் மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டு நிகழ்ச்சிகளில் ‘கவியரங்கம்’ மாதிரியான கவர்ச்சியான அம்சங்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். ஒருவழியாக தமிழ்வலைப்பதிவர் சந்திப்புகள் தமிழரது மரபார்ந்த மேடைகலாச்சாரத்துக்கு திரும்புவது என்பது தமிழன் என்கிற வகையில் பெருமிதத்தையும், பெரும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது. குறிப்பாக குடிவெறிக்கு ஆதரவான பதிவுகளை பதிவர்கள் இடக்கூடாது என்கிறரீதியில் உருப்படியான ஒரு தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்படலாம் என்கிற சேதி காதில் தேனாய் பாய்கிறது. தோழர் மணிஜியோடு இணைந்து இந்த தீர்மானத்தை கண்மூடித்தனமாக வரவேற்கிறோம். சீயர்ஸ்!

இக்கலாச்சாரம் இத்தோடு நின்றுவிடாமல் எதிர்காலத்தில் ‘பட்டிமன்றம்’ மாதிரியான தமிழரின் பாரம்பரிய கலாச்சாரச் செயல்பாடுகளுக்கு அடிகோல் நாட்டவேண்டும் என்பதே நம் விருப்பம். அவ்வாறு நடத்தப்படும் பட்டிமன்றம் எவ்வகையில் அமையலாம் என்கிற நமது ஆசையை இங்கே ட்ரைலர் ஓட்டுகிறோம். இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த அல்ல என்றெல்லாம் டிஸ்க்ளைமர் போட விரும்பவில்லை. எனவே யார் மனதாவது புண்பட்டு விட்டால், புண்பட்ட இடத்துக்கு டிஞ்சர் தடவவும் நாம் தயாராகவே இருக்கிறோம்.

பட்டிமன்றத்தின் தலைப்பு : ஜாக்கியா? கேபிளா?

நடுவர் : வடகரை வேலன்

ஜாக்கி அணியில் வாதாடுபவர் : மணிஜி

கேபிள் அணியில் வாதாடுபவர் : அப்துல்லா

பலத்த கரகோஷத்துடன் பட்டிமன்றம் தொடங்குகிறது.

நடுவர் வடகரை : ‘ஜாக்கியா? கேபிளா?’ என்கிற இந்த புதுமையான தலைப்பில் தமிழ் வலைப்பதிவுலகில் தொன்றுதொட்டு வரும் பிரச்னைகளை குறித்து இருதரப்பு காரசாரமாக மோதிக்கொள்ள இருக்கிறார்கள். முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா இல்லை மொட்டையா என்று கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

(பலத்த கைத்தட்டல்)

ஜாக்கி இல்லாமல் காருக்கு பஞ்சர் போட முடியாது. கேபிள் இல்லாமல் டிவியிலே படம் பார்க்க முடியாது. ரெண்டுமே நமக்கு அவசியம்தான். எனவே டஃப் ஃபைட்டுதான். வா முனிம்மா வா.. வா முனிம்மா வா.. நீயும் நானும் ஜோடி.. சும்மா பீச்சு பக்கம் வாடி என்று பாடினான் அந்தகால கவிஞன். அதே பாடலை பாடி ஜாக்கி அணிக்காக வாதாட அணியின் தலைவர் நாவுக்கரசர் மணிஜியை அழைக்கிறோம்.

மணிஜி : நடுவர் அவர்களே, எதிரே என் பேச்சை கேட்க குவிந்திருக்கும் வாசக நண்பர்களே, இந்நிகழ்ச்சியை வலைத்தளத்தில் வாசிக்கவிருக்கும் ஆயிரக்கணக்கான ரத்தத்தின் ரத்தமான என் வாசகப்பெருங்‘குடி’மக்களே! உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ‘ஒத்தா’

(ஜாக்கியின் மந்திரகோஷத்தை மணிஜி உச்சரிக்க, பார்வையாளர் மத்தியில் பலத்த கரகோஷத்துடன், விசில் சத்தமும் கூரையைப் பிளக்கிறது)


நடுவர் வடகரை : தேவையாய்யா நமக்கு?

(அரங்கில் சிரிப்பு)

மணிஜி : நடுவர் அவர்கள் ஜாக்கியை வைத்து காருக்கு பஞ்சர் ஒட்டமுடியுமென்று மட்டும்தான் சொன்னார். ஜாக்கி இல்லாமல் குதிரைகூட பந்தயத்தில் ஓடாது என்பதை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குங்ஃபூ மன்னனின் பெயரும் ஜாக்கி. அது மட்டுமின்றி ஜட்டிகளில் சிறந்தது ஜாக்கி


நடுவர் வடகரை (அவசரமாக குறுக்கிட்டு சிரித்துக்கொண்டே) : நாங்கள்லாம் அந்த காலத்து ஆளுங்கய்யா.. கோவணம் பார்ட்டி!


(பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு)

மணிஜி : நடுவர் அவர்களே! கோவணம் மட்டும் இளப்பமா என்ன? ஒரு கவிஞன் பாடினான். ‘எங்கோ மனம் பறக்குது.. எங்கோ மனம் பறக்குது’. இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு டாஸ்மாக்குக்கு தண்ணியடிக்கப் போன மூதேவி ஒருத்தன் வேகமா போதையில் இதே பாட்டை பாடினான் ‘என் கோமணம் பறக்குது.. என் கோமணம் பறக்குது’

(பலத்த கைத்தட்டல்)

ஆகையால் நடுவரே! (ராகத்துடன்) நாட்டாமை பாதம் பட்டா, இங்கே வெள்ளாமை வெளையுமடி. நாட்டாமை கை அசைச்சா அந்த சூரியனும் மறையுமடி (ராகத்தை நிறுத்தி, தீவிரமான குரலில்) என்றுகூறி ஜாக்கிதான் சிறந்தவர். ஜாக்கிதான் நல்லவர். ஜாக்கிதான் வல்லவர் என்கிற தீர்ப்பினை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

(பலத்த கைத்தட்டல்)

நடுவர் வடகரை : அபாரம்யா.. அபாரம்.. அதுவும் கடைசியா வெச்சீங்க பாருங்கய்யா ஒரு பஞ்ச். என் மனசு பஞ்சு பஞ்சா பறந்துடிச்சி. பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி பட்டுவண்ண லவிக்கை போட்டு, கஞ்சிகொண்டு போறபுள்ளே என்று கூறி, வெள்ளை மனசுக்காரர், வெள்ளை உடுப்புக்காரர், சுருக்கமாக வெள்ளைக்காரர் அப்துல்லா அவர்களே வருக, வருக.. கேபிள் பற்றிய உங்கள் வாதங்களை வறுத்து வறுகடலையாக தருக, தருகவென அழைக்கிறேன்.

(பலத்த கைத்தட்டல்)

முழுக்க வெள்ளையாக ஜெகன்மோகிணி, நவமோகிணி படங்களில் வரும் வெள்ளைக்கலர் குட்டிச்சாத்தான் மாதிரி (ஆனால் கொஞ்சம் உயரமாக) கருப்பு, சிவப்பு கரைவேட்டியோடு கைகூப்பியபடியே, கைகூப்பி முடித்ததும் வலதுகையால் உதயசூரியனை காட்டியவாறே வருகிறார் அப்துல்லா.

அப்துல்லா : நடுவர் அண்ணே, எம்பேச்சை கேட்குற பார்வையாளர் அண்ணே எல்லாத்துக்கும் வணக்கம் அண்ணே!

நடுவர் வடகரை : பொம்மனாட்டிகளை கூட அப்துல்லாண்ணே அக்கா, தங்கச்சின்னு ன்னு கூப்பிடாம அண்ணேன்னுதான் கூப்பிடுவாருன்னா பார்த்துக்கங்களேன்

(மொக்கை ஜோக்காக இருந்தாலும் பார்வையாளர்கள் தலையெழுத்தே என்று சிரித்துத் தொலைக்கிறார்கள்)

அப்துல்லா : எல்டாம்ஸ் ரோடு முனையிலே சிக்னல் கிட்டே ஒரு சின்னப் பையன் அண்ணன் மூத்திரம் போயிக்கிட்டிருந்தான். நான் போயி அவங்கிட்டே சொன்னேன். தம்பியண்ணே! இங்கிட்டு மூத்திரம் போவக்கூடாது. பக்கத்துலேதான் போலிஸ் ஸ்டேஷன். அவங்க பார்த்தாங்கன்னா பிடிச்சிக்கிட்டு போயிடுவாங்கன்னு. அவன் சொன்னான். வீணா வேஸ்டாப் போறதுதானே, வேணும்னா அவங்க புடிச்சிக்கிட்டுப் போவட்டும்..


(சொல்லிவிட்டு கூட்டத்தைப் பார்க்கிறார். அண்ணன் கைத்தட்டலை எதிர்ப்பார்க்கிறார் என்பதை புரிந்துக்கொண்ட கூட்டம் பலத்த கைத்தட்டலோடு, ஆயிரம் முறை கேட்டுவிட்ட இந்த ஜோக்குக்கு இன்னொருமுறையும் தலையெழுத்தே என்று சிரிக்கிறது)

இப்படித்தான் ஒருவாட்டி கேபிளண்ணன் சொன்னார். என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான், ஊர்லே நாலு பேரு சிரிக்கிற மாதிரி எந்த காரியத்தையும் அவன் பண்ணவே மாட்டான்.

நடுவர் வடகரை : ஊரு சிரிக்கலேன்னா என்னய்யா, நான் சிரிக்கறேன். நானும் ஊர்லே ஒருத்தன்தான்

(நடுவர் பலமாக சிரிக்கிறார். வேறு யாரும் சிரிக்கவில்லை)

அப்துல்லா : அப்படி என்ன வேலையை அண்ணே உங்க ஃப்ரெண்டண்ணன் செய்யுறாருன்னு கேட்டேன். அதுக்கு கேபிளண்ணே சொன்னார். அவன் மெகாசீரியல் டைரக்டரா இருக்கானுன்னு...

(பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு)

நீங்கள்லாம் சிரிக்கறீங்கண்ணே. ஆனா நான் இந்த ஜோக்கை கேட்டதும் அழுதுட்டேன். அதான் கேபிளண்ணன். ஒரு முறை அண்ணன், ’கேட்டால் கிடைக்கும்’னார். நான் என்னத்தை கேட்டா என்னத்தை கிடைக்கும்ணேன். உன் எண்ணத்தை கேட்டா, உனக்கு என்னென்னவோ கிடைக்கும்னார்.

(பலத்த கைத்தட்டல்)

ஆகவே, நடுவர் அண்ணன் அவர்களே! நடுவர் என்பவர் நடுவில் இருக்க வேண்டும். காவிரியில் நடுவர் மன்றம் அமைய காரணமாக இருந்தது கழக அரசு. எனவே நீங்கள் செசன்ஸ் நீதிமன்ற நடுவராக இல்லாமல், ஐ.நா.மன்ற நடுவராக நினைத்து கேட்கிறேன். ஜாக்கியண்ணனை விட கேபிளண்ணன் சிறந்தவர் என்று தீர்ப்பளித்து, தேர்தலில் எனக்கு டெபாசிட்டு மட்டுமின்றி வெற்றியையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


(கரகோஷம்)


நடுவர் வடகரை : கடைசி பத்தியிலே அண்ணன் வெச்சாரு பாருய்யா ஐஸூ. உள்ளூர் நாட்டாமையை உலக நாட்டாமையாக்கிட்டாரே. இதுக்காகவே இவருக்கு தீர்ப்பை மாத்தி தந்துடலாமான்னு தோணுது. ஆனாலும் சொம்பு, ஜமக்காளம் சகிதமா உட்கார்ந்திருக்கிற பொறுப்பான நாட்டாமைங்கிறதாலே பொருத்தமான தீர்ப்பு சொல்றதுதான் முறை.


ரெண்டு தரப்பும் முட்டையாவோ, மொட்டையாவோ, கொட்டையாவோ இல்லாம பட்டையாவே மோதிக்கிட்டாங்க. அவங்களோட வார்த்தைச் சாட்டையில் பட்டை பட்டையா வீங்கிடுச்சி என் மூளை.


சக்தி இல்லாமல் சிவனில்லைம்பான். சிவனில்லாம சக்தி இல்லைம்பான். அம்மாதிரி ஜாக்கி இல்லாம கேபிளில்லை. கேபிளில்லாம ஜாக்கி இல்லைன்னு சொல்லி இந்த பட்டிமன்றத்தை முடிச்சிக்கறேன்.

(சிரிப்பு. கைத்தட்டல். கரகோஷம் என்று கலவையான சத்தம்)

தீர்ப்புக்காக காத்திருந்த ஜாக்கியின் வாசக நண்பர்களும், கேபிளின் ஐம்பத்து ஐந்து லட்ச ஹிட்ஸ் வாசகர்களும் ஆனந்தத்தால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ‘உம்மா’ கொடுத்துக் கொள்கிறார்கள்.

நடுவர் வடகரை மேடையிலிருந்து கம்பீரமாக இறங்க ‘ஹோ.. ஹோ... ஹோஹோஹோ’ என்று கோரஸைத் தொடர்ந்து, ‘நாட்டாமை பாதம் பட்டா’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.


நாட்டாமையை இடைமறித்து யாரோ ஒரு புதுப்பதிவர் : நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு.

(அரங்கம் முழுக்க நிசப்தம்)


ஒற்றுமையாக கும்மியடித்துக் கொண்டிருந்த கேபிள்-ஜாக்கி ரசிகர்கள் ஆக்ரோஷமாக அந்தப் பதிவரை முற்றுகையிடுகிறார்கள்.

நாட்டாமை வடகரை (குறுக்கிட்டு) : அவனை அப்படியே விடுங்க. இவ்ளோ நேரம் இந்த மொக்கை போஸ்ட்டை படிச்சானே, இதுதான் அவனோட முந்திரிக்கொட்டைத் தனத்துக்கு நான் அவனுக்கு கொடுக்குற தண்டனை...

‘நல்ல தீர்ப்பு, நல்ல தீர்ப்பு’ என்று நாடகத்தனமாக சொல்லியவாறே பார்வையாளர்கள் அரங்கத்தைவிட்டு வெளியேறி, எதிரே இருக்கும் டாஸ்மாக்குக்கு கும்பல், கும்பலாகச் செல்கிறார்கள்.

18 கருத்துகள்:

 1. யுவ சார் இப்பவே கண்ண கட்டுது இன்னும் எத்தனை பதிவர்கள் உங்க வலையில சிக்கபோறங்களே

  பதிலளிநீக்கு
 2. வ.வா.சங்கத்து டைப்பு போஸ்டு,.ஞாபகப் படுத்திட்டேய்யா

  பதிலளிநீக்கு
 3. லக்கி :-)))) கலக்கல். ஜாக்கி அணி தான் வெற்றி !

  பதிலளிநீக்கு
 4. தம்பியண்ணன் நல்லா பேசுனாரு, யுவாண்ணே !

  பதிலளிநீக்கு
 5. மிக மிக அருமையான பட்டி மண்டபம்
  குறிப்பாக இடையிடையில் புகுந்த நடுவர்
  அவர்களின் கமெண்ட்டுகள் பிரமாதம்
  முடித்தவிதம் வெகு சிறப்பு
  அதிக சந்தோஷத்தைவேறு எப்படித்தான்
  கொண்டாடுவதாம்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. // வ.வா.சங்கத்து டைப்பு போஸ்டு,.ஞாபகப் படுத்திட்டேய்யா
  //

  yes :))

  பதிலளிநீக்கு
 7. ஆஹா... சிரிப்போ சிரிப்பு.... ஜாக்கி அணி வாதாடியது செம! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. ஆஹா... கலக்கலான பதிவு!

  பதிலளிநீக்கு
 9. Jacky m illa...Cable m illa..Win pannunathu Lucky than ya...super post...especially parvaiyalargal ehtukku sirithanga ...ethukku sirikkalainu correct a solliyiruntheenga...

  ----Selvakumar V

  பதிலளிநீக்கு
 10. இப்பதான் வாசிச்சேன் யுவா.. எல்லை மீறாத நடை. சான்சே இல்லை..வயிறு வலிக்க சிரிச்சேன்

  பதிலளிநீக்கு