July 11, 2012

இந்த காதலுக்கு எத்தனை கோணம்?


சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து ஏதாவது ஒன்று இருக்கும்தானே? வேதாளம் சொன்ன கடைசிக் கதைக்கு விக்கிரமாதித்தனால் விடை சொல்ல முடியவில்லையாம். நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பஞ்சாயத்து ஒன்று அப்படிப்பட்டது. கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனரோ, கூடுதல் கமிஷனர்களோ மக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறுவது ஒரு சடங்கு. அந்த சடங்கின்படி நேற்று கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் புகார்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

பரங்கிமலையிலிருந்து ஓர் நடுத்தர வயது ஆள் புகார் கொடுக்க வந்திருந்தார்.

“என்ன பிரச்சினை?” கமிஷனர் கனிவாக கேட்டார்.

“என் கூட இருந்த பொண்ணை ஒருத்தன் தள்ளிக்கிட்டு போயிட்டான்”

“கூட இருந்த பொண்ணுன்னா.. மனைவியையா?”

“இல்லை. என் மனைவியை அவன் எப்பவோ தள்ளிக்கிட்டுப் போயிட்டான்”

“அப்போ உன் கூட இருந்த பொண்ணு”

“அவனோட மனைவி”

“புரியலை”

“நான் வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்த பொண்ணை அவளோட முன்னாள் கணவன் கூட்டிக்கிட்டுப் போயிட்டான். அவ இல்லாமே என்னாலே வாழ முடியாது. நீங்கதான் பெரிய மனசு பண்ணி எங்களை சேர்த்து வைக்கணும்”

கூடுதல் கமிஷனருக்கு ‘கிர்’ரடித்திருக்கிறது. கொஞ்சம் தெளிவாக பின்கதைச் சுருக்கத்தை எடுத்தியம்புமாறு அந்த மறத்தமிழனிடம் கெஞ்சியிருக்கிறார்.

பரங்கிமலையில் வசிக்கும் அவர் இண்டீரியர் டெக்கரேஷன் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு திருமணம் ஆகியிருக்கிறது. மனைவியோடு இல்லறத்தில் இன்பமாக வாழ்ந்துக் கொண்டிருந்தவருக்கு, திடீரென ‘இடி’ விழுந்தது பக்கத்துத் தெரு இளைஞர் ஒருவரால். இளைஞரின் கவர்ச்சியில் மயங்கிவிட்ட இவரது மனைவி அவரோடு ஓடிவிட்டார்.

இனிய இல்லறம் புயலாய் தடைபட்ட விரக்தியில் வாடிய நம் ஹீரோவின் வாழ்வில் மீண்டும் தென்றல் வீசத் தொடங்கியது. பக்கத்துத் தெரு பைங்கிளி ஒன்று இவருக்கு ஆறுதலாய் அமைந்தது. அது வேறு யாருமல்ல. இவருடைய மனைவியை தள்ளிக்கொண்ட சென்ற இளைஞரின் மனைவி. எனக்கு நீ துணை. உனக்கு நான் துணை என்று பாதிக்கப்பட்ட இருவரும் இணைந்து புது அத்தியாயம் எழுதத் தொடங்கினார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, மீண்டும் புயல். இவர் வேலைக்குச் சென்றிருக்கும் நேரத்தில், அதே இளைஞர் பூர்வாசிரம நினைவு வந்து அவ்வப்போது வந்துச் சென்றிருக்கிறார். பைங்கிளியும் தன் முன்னாள் கணவரின் கவர்ச்சிக்கு முன்பாக மதியிழந்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் இவரும் அவருடனேயே ஓட்டம் பிடித்தார்.

அடுத்தடுத்து இரண்டு துணைகளையும் ஒரே இளைஞரிடம் பறிகொடுத்த ஆற்றாமை தாங்காமல் உள்ளூர் பஞ்சாயத்து, போலிஸ் ஸ்டேஷன் என்று தனக்கு சாத்தியப்பட்ட எல்லா இடங்களுக்கும் சென்று தன் பிரச்னையை தீர்த்துவைக்குமாறு கோரியிருக்கிறார் நம் ஹீரோ. இவருடைய கதையை கேட்ட எல்லோருமே “நீ ஹாலிவுட்லே பொறந்திருக்க வேண்டிய ஆளு” என்று பாராட்டினார்களே தவிர, தீர்வுக்கு முன்வரவில்லை. கடைசியாகதான் கமிஷனர் ஆபிஸ் கதவைத் தட்டியிருக்கிறார்.

“இப்போ என்னய்யா பிரச்னை? உன் பொண்டாட்டியை உன் கூட சேர்த்து வைக்கணுமா?” கூடுதல் கமிஷனர் கொஞ்சம் டென்ஷனாகவே கேட்டிருக்கிறார்.

ஹீரோ உடனே மறுத்திருக்கிறார். தனக்கு தன்னுடைய மனைவி வேண்டாம். அவளைவிட அவனுடைய மனைவியைதான் பிடித்திருக்கிறது. அவளோடு மட்டும் சேர்த்துவைத்தால் போதுமென கேட்டுக் கொண்டார்.

கமிஷனர் ஆபிஸே கதிகலங்கிப் போய்விட்டது. நூற்றாண்டு கண்ட சென்னை ஆணையாளர் அலுவலகம் எத்தனையோ விசித்திர வழக்குகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. ஆனால் இப்படியொரு வழக்கு வருவது வரலாற்றில் இதுதான் முதன்முறை.

சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையாக திடீரென ஒரு சுவையான ட்விஸ்ட். ஹீரோ கமிஷனர் ஆபிஸுக்குப் போயிருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட வில்லன், வள்ளி தெய்வானை சமேதரராய் திடீரென்று ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். “அவருக்கு ஏதாவது ஒண்ணு வேணும்னா, இந்த ரெண்டுலே எது இஷ்டப்படுதோ அது அவராண்ட போய்க்கட்டும்” என்று பெருந்தன்மையும் காட்டியிருக்கிறார். ஆனால் ரெண்டுக்குமே ஹீரோவைவிட வில்லனைதான் ரொம்பவும் பிடித்திருக்கிறது. ரெண்டுமே அவரோடு போக இஷ்டப்படவில்லை. ஒற்றுமையாக வில்லனோடேயே உன்னதமாக வாழ விருப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கண்ணகிகள் இருப்பதால் இந்தியா இரண்டாயிரத்து இருபதுக்கு முன்பாகவே வல்லரசு ஆகிவிடுமென்ற நம்பிக்கை நமக்கு இயல்பாகவே பிறக்கிறது.

ஆனால், நம் ஹீரோவோ தீர்வு கிடைக்காமல் இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று ஒற்றைக்காலில் தவம் நின்றார். முக்கோணக் காதலை கேள்விப்பட்டிருக்கிறார் கூடுதல் கமிஷனர். நான்கு பேர் பங்கு கொண்டிருக்கும் இந்த விசித்திரமான காதலுக்கு எத்தனை கோணங்கள் என்று புரியாமல் தாவூ தீர்ந்துப்போய் டரியல் ஆகிவிட்டவர், இந்தப் பஞ்சாயத்துக்கு நான் தீர்ப்பினை சொல்லுவதைவிட, பரங்கிமலை உதவி கமிஷனர் தீர்வு சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது அவருடைய ஏரியா என்று நைஸாக பாலை அந்த சைடு ஒரு தட்டு தட்டிவிட்டார்.

இன்று விடிகாலையிலேயே தினகரன் நாளிதழில் இச்செய்தியை வாசித்த பரங்கிமலை உதவி கமிஷனர், கூடங்குளத்துக்கு அந்தப்பக்கமாக எங்காவது தண்ணியில்லாத காட்டில் போஸ்டிங் கிடைக்குமாவென்று டிரான்ஸ்பருக்கு அலைந்துக் கொண்டிருப்பதாக பராபரியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 comments:

 1. நல்ல வேளை நான் அந்த உதவி கமிஷனராக இல்லை.
  கடவுள் காப்பாற்றினார்.

  ReplyDelete
 2. இது மாதிரி ஊருபட்ட மேட்டர்கள் நிறைய வரும் ..

  ReplyDelete
 3. அந்த வில்லன் அட்ரஸ் கிடைக்குமா? டியூசன் எதாவது எடுப்பாரா என்று கேட்கத்தான்!!

  ReplyDelete
 4. என்னமா எழுதியிருக்கீங்க ..சிரிச்சு மாளலை !

  இது போன்ற செய்திகளை பேப்பரில் வெளியிடும் போதும் நீங்கள் எழுதிய பாணியில் வெளியிட்டால் நன்றாயிருக்கும். அவர்கள் வழக்கமான பத்திரிக்கை பாணியில் தான் எழுதுகிறார்கள்

  ReplyDelete
 5. இது புனைவா? புனைவா செயதியா என்று குழப்பம் ஏற்படுகிறது.

  ReplyDelete
 6. அனானிமஸ் சார்!

  நேற்று சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

  ReplyDelete
 7. ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ டைட்டில்ல நம்ம பவர்ஸ்டார், சந்தானம்,நமீதா,சோனா இந்த நாலுபேரையும் வச்சி இந்த சப்ஜெக்டை ரெடிபண்னுங்க.நான் புரடியூஸ் பண்றேன் யுவா.

  ReplyDelete
 8. பவர் ஸ்டார் வில்லனா நடிப்பாரா அண்ணா?

  ReplyDelete
 9. கண்டிப்பா நடிப்பார். அவர் வில்லனா வந்தாலும் நல்லனாதான் ஜனங்க பாப்பாங்க

  ReplyDelete
 10. அவ்வ்வ்வ் - இத கேர்புல்லாதான் ஹேண்டில் பண்ணனும்!

  ReplyDelete
 11. நான்-ஸ்டாப்பாக சிரித்துக் கொண்டிருக்கின்றேன்...

  ReplyDelete
 12. எவ்வளவு சீரியஸான மேட்டரு, இப்படி நகைசுவையாப் போச்சே! 'காதலர் தினம்' அன்னிக்குத் தாலியோட அலையுற காவி இயக்கத்துக்கிட்டப் போயிருந்தா என்ன பண்னி இருப்பாங்க?

  ReplyDelete
 13. இனிமே ஆபீஸ்ல உக்காந்து உங்க பதிவெல்லாம் படிக்கப் படாது எல்லாப் பயலும் திரும்பித் திரும்பி பாக்கறானுங்க இப்படியா சிரிப்பு காட்றது..ஹி, ஹி

  ReplyDelete
 14. பரபரப்பான செய்தி.. இந்த விசயத்துல எல்லாரும் வில்லனாத்தான் இருக்கனும்னு ஆசைப்படுறது பேராசையோ?

  ReplyDelete
 15. சொல்வதெல்லாம் உண்மை நிம்மியக்கா தான் சரி இப்படி பஞ்சாயத்துக்கு :)))

  ReplyDelete
 16. ரொம்ப நாளைக்கு அப்புறமா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருக்கிறோம். அதுவும் ஹீரோ சந்தானம், பவர் ஸ்டார் வில்லனாக, நமீதா, சோனா ஜோடியாக கற்பனையோடு. க்ரேட்.

  ReplyDelete
 17. சிரிச்சு சிரிச்சு முடியல.. அலுவலகமே என்னை ஒரு மாதிரி பார்க்குது... தியாகு

  ReplyDelete
 18. very nice..way of writing.and subject ....

  -by
  Maakkaan

  ReplyDelete
 19. nice narration . . YUVA .......

  ReplyDelete
 20. சூப்பர் கட்டுரை... வாரே வாவ்.. யுவா... செம கலக்கல்!!!!

  ReplyDelete
 21. இந்த கதையை ஆபிஸ், வீடு, இன்று போன சலூன் கடை என பல இடத்தில் சொல்லிட்டேன். கதையை கேட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். போலீசிடம் அந்த ஆளு " என் பொண்டாட்டி வேணாம்; அவன் பொண்டாட்டி தான் வேணும்" என்று கேட்ட இடம் தான் டாப்பு .

  முடி வெட்டும் ரமேஷ் இது பற்றி சொன்னது: " இது நிச்சயம் சினிமாவில் வந்துடும் பாருங்க. போலிஸ் ஸ்டேஷனில் வந்து கம்பிலேயின்ட் தரும் ஆளா வடிவேலு நடிச்சா சூப்பரா இருக்கும் "

  ReplyDelete
 22. மோகன் சார்!

  இன்னிக்கு தினமலரில் ஆவி கதை ஒண்ணு வந்திருக்கு. படிங்க. அதுவும் செம சூப்பர்.

  தமிழன் எப்பவும் கவுண்டமணியாகவே வாழுறான் :-)

  ReplyDelete
 23. முடியலை..வாய் வலிக்குது ஹி ஹி ஹி :D

  ReplyDelete
 24. Bad news: M.Anto Peter died. My deepest condolence.

  www.antopeter.blogspot.com

  ReplyDelete
 25. Sema comedy sir!!

  Vadivelu comedy nyabagathuku varuthu.

  ReplyDelete
 26. haaaaahahahahah......


  sirithi sirithu vayaru valikkuthu sir...

  ReplyDelete
 27. "இப்படிப்பட்ட கண்ணகிகள் இருப்பதால் இந்தியா இரண்டாயிரத்து இருபதுக்கு முன்பாகவே வல்லரசு ஆகிவிடுமென்ற நம்பிக்கை நமக்கு இயல்பாகவே பிறக்கிறது."

  ithu romba suppeerrr..

  ReplyDelete