22 ஜூன், 2012

புதைக்கப்படுகிறது புரட்சி?


எண்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக உலகப் பொதுவுடைமை சிந்தனையாளர்களின் புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் ரஷ்யத் தலைவர் லெனின் காலமானார். இத்தனை ஆண்டுகளாக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல், பதப்படுத்தி ரஷ்ய அரசால், மாஸ்கோவில் செஞ்சதுக்கம் எனும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவ்வுடலை இப்போது அடக்கம் செய்யவேண்டும் என்கிற குரல் ரஷ்யாவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

பல்வேறு தடைகளை தாண்டி, இடையறாப் போராட்டங்கள் மூலம் ஒரு யுகப்புரட்சியை முன்னெடுத்ததால் ஏற்பட்ட உச்சக்கட்ட மனக்களைப்பு. ஆட்சியாளராக ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர கடும் உழைப்பு. புரட்சிக்கு முன்பாக உள்நாட்டுப் போர்களில் பங்கெடுத்ததால் ஏற்பட்ட உடல்நல குறைபாடுகள். பலமுறை இவர் மீது பிரயோகிக்கப்பட்ட கொலைமுயற்சிகள். அதுபோன்ற ஒரு முயற்சியின் போது இவரது தொண்டையில் சிக்கிய துப்பாக்கிக் குண்டு. அதை நீக்க ஒரு அறுவை சிகிச்சை. இன்னும் ஏராளமான காரணங்கள். புரட்சி மூலமாக 1917ல் ஆட்சிக்கு வந்த லெனினின் உடல், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக சீர்க்குலைவு அடைந்துக்கொண்டே போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

1924, ஜனவரி 21 அன்று தனது ஐம்பத்து மூன்றாவது வயதில் லெனின் காலமானார். ‘நியூரோசிபிலிஸ்’ எனப்படும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகளே அவரது மறைவுக்கு காரணமென்று மருத்துவர்களால் சொல்லப்பட்டது. லெனின் மறைந்தபோது ரஷ்யப்புரட்சியை கடுமையாக எதிர்த்தவரும், லெனினின் எதிரியாக கருதப்பட்டவருமான பிரிட்டிஷ் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சிலின் அஞ்சலி சுவாரஸ்யமானது. “ரஷ்யர்களின் துரதிருஷ்டம் லெனினின் பிறப்பு. அதைவிட மோசமான படுமோசமான துரதிருஷ்டம் அவருடைய இறப்பு”. சம்பிரதாயத்துக்காக சொல்லாமல், சர்வநிச்சயமாக சொல்லலாம். ரஷ்யர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு லெனின்.

எனவேதான் அவரது உடலை புதைக்க அப்போதிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்களுக்கு மனமில்லை. எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியில் எது வேண்டுமானால் சாத்தியமாகலாம் என்று கூறி, லெனினின் உடலை பதப்படுத்தி பாதுகாக்க முடிவெடுத்தார்கள். ஒருவேளை இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வருமேயானால், லெனினை உயிர்ப்பிக்க வைக்கலாம் என்றுகூட அவர்கள் நம்பியிருக்கலாம்.

மூன்று நாட்கள் லெனினின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பத்து லட்சம் பேர் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் பதப்படுத்தப்பட்டு நிரந்தர காட்சியாக மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த இடத்துக்கு லெனின் மாஸோலியம் என்று பெயர் சூட்டப்பட்டது. ‘மாஸோலியம்’ என்றால் கல்லறை என்று பொருள். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக பல கோடி உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் லெனினின் உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரஷ்யாவில் நாத்திகம் ஒரு மதமாகவே நிலைநின்று விட்டாலும், கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு செல்வாக்கு அதிகம். அவ்வப்போது கிறிஸ்தவ குருமார்கள் லெனின் உடல் முறையாக அடக்கம் செய்யப்படாதது குறித்து முணுமுணுத்தாலும், வெளிப்படையாக குரல் கொடுக்க தைரியமின்றி கிடந்தார்கள்.

1989ஆம் ஆண்டு ரஷ்ய பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர், “லெனின் தனது உடலை தனது தாயாரின் சமாதிக்கருகில் புதைக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே செஞ்சதுக்கத்தில் இருக்கும் அவரது உடலை செயிண்ட் பீட்டஸ்பர்க்கில் புதைக்க வேண்டும்” என்று சொன்னார். நாடு முழுக்க அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

1990ஆம் ஆண்டு லெனினால் உருவாக்கப்பட்ட சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு (யு.எஸ்.எஸ்.ஆர்) சிதறியது.கம்யூனிஸம் தோற்றுவிட்டதுஎன்று கூறி, ரஷ்யப் புரட்சியின் அடையாளங்களாக இருந்த நினைவுச்சின்னங்கள் பலவும் அப்போது அழிக்கப்பட்டது. பொதுமக்களே இந்த அழிப்புப் பணியில் ஆர்வமாக இருந்தார்கள். ரஷ்யாவின் அசைக்கமுடியாத சர்வாதிகாரியாக திகழ்ந்த ஸ்டாலினின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் அப்போதும் கூட லெனினின் உடலை அடக்கம் செய்வது குறித்து யாரும் நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. ஏனெனில் ரஷ்யர்களிடம் அவருக்கு இருந்த இமேஜ் அந்தளவுக்கு அசைக்க முடியாததாக இருந்தது.

காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. எழுபதுகளிலும், எண்பதுகளில் பிறந்து வளர்ந்த தலைமுறைக்கு முந்தையத் தலைமுறை மாதிரி பெரியளவில்லெனின் செண்டிமெண்ட்இப்போது இல்லை. இந்த சூழலைப் புரிந்துகொண்ட மிக்கேல் கோர்ப்பச்சேவ் (சோவியத் ரஷ்யா சிதற காரணமாக இருந்தவர்) சில ஆண்டுகளுக்கு முன்பாக, யாரும் பேச விரும்பாத இந்த விஷயத்தை பேசத் தொடங்கினார். “புதைந்துப்போன விஷயங்களை தோண்டியெடுக்கும் நிலையில் நாம் இப்போது இல்லை. இன்னமும் லெனின் உடலை நாம் பதப்படுத்தி, பாதுகாத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. அவரது குடும்பத்தினர் விரும்பியபடி முறையாக மரியாதை செய்து அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றார்.

கோர்ப்பச்சேவின் இந்தப் பேச்சுக்கு கம்யூனிஸ்ட்டு ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியபோதிலும், அவரது கருத்துக்கும் நிறைய பேர் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட நான்கைந்து காலமாக எதிரும், புதிருமாக வரிந்து கட்டிக்கொண்டு ரஷ்யர்கள் இந்த விஷயத்தை விவாதித்து வருகிறார்கள். ரஷ்ய ஆளுங்கட்சி இந்த விவகாரத்தை முள் மேல் பட்ட சேலையாக மிகக்கவனமாக கையாண்டு வருகிறது. அதே நேரம் லெனினின் உடல் புதைக்கப்பட வேண்டும் என்கிற மனவோட்டத்தை மக்களிடம் ஏற்படுத்தும் பணிகளையும் மறைமுகமாக செய்துவந்தது. கடந்த ஆண்டு லெனினின் உடலை புதைக்கலாமா என்று மக்களிடம் கருத்துகோரி ‘குட் பை லெனின்’ என்கிற இணையத்தளத்தை கூட உருவாக்கி இருந்தது.

மூன்றாவது முறையாக விளாதிமீர் புடின் ரஷ்ய அதிபராகிவிட்ட நிலையில் மீண்டும் ‘லெனின் உடல் புதைப்பு’ விவகாரத்தை தீவிரமாக்கியிருக்கிறார். குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல சில நாட்களுக்கு முன்பாக புடினுக்கு நெருக்கமானவரும், ரஷ்ய கலாச்சார அமைச்சருமான விலாடிமீர் மெடின்ஸ்கியை வைத்து ஒரு கருத்து கூற வைத்திருக்கிறார்.

“லெனினின் உடல் இத்தனை காலமாக அடக்கம் செய்யப்படாமல் இருப்பது அபத்தமானது. மரியாதைக்குரிய தலைவரான அவரது உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட வேண்டும். தனது உடல் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது அவரது கடைசி ஆசை. அதைகூட இத்தனை ஆண்டுகளாக நாம் செய்யாமல் இருப்பது வெட்கத்துக்குரியது. தற்போது அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சோவியத் வரலாற்று நினைவிடமாக மாற்றிவிடலாம்” என்று ரஷ்ய வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பொரிந்து தள்ளியிருக்கிறார் மெடின்ஸ்கி.

முன்பு 89ல் லெனின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக அமைச்சர் ஒருவர் பேசியபோது எழுத கடும் எதிர்ப்பெல்லாம் இப்போது இல்லை. மாறாக இணையத்தளத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 56 சதவிகிதம் பேர் லெனினின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள். முந்தையக் கணக்கெடுப்பில் 48 சதவிகிதம் பேர் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். வருடா வருடம் லெனினின் உடலை அடக்கம் செய்யவேண்டும் என்கிற கருத்துக்கு ரஷ்யர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. நடப்பு நிலவரத்தை பார்த்தால் விரைவில் லெனினின் உடல் அடக்கம், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவரது தாயாரின் சமாதிக்கருகே நடக்கும் என்றுதான் தெரிகிறது.

இந்த விவகாரங்கள் சூடு பிடிப்பதற்கு முன்பாக ரஷ்ய கம்யூனிஸ்ட்டு கட்சி தன் கவலையை தெரிவித்திருந்தது. “சோவியத்தின் வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறார்கள். புரட்சித் தலைவர் லெனினின் நினைவுகளை மக்கள் மனதில் இருந்து முற்றிலுமாக அகற்ற நினைக்கிறார்கள்” என்று அக்கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

புரட்சியை புதைக்க முடியுமா என்கிற கேள்விக்கு காலம்தான் விடையளிக்க வேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)

9 கருத்துகள்:

 1. சுயநல மனிதனுக்கும் போதுயுடைமை என்றும் பொருந்தாத ஒன்று. இந்த சுயநல மனிதனின் அதிகார ஆதிகத்தைதான் மனித வரலாறு பதிவு செய்திருக்கிறது. புரட்சி சில தீவிர காலத்தில் உதவி செய்யலாம். ஆனால் கால போக்கில் அதே புரட்சியாளர்கள் ஆதிக்கயுணர்வுடந்தான் செயல்படுகிறார்கள். அவர்களே சமுதாய சுரண்டல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 2. சே எங்கே அடக்கப்பட்டார் என்பது எவருக்கு தெரியும் ஆனால் அவர் எல்லோர் மனதில் வாழ்கிறார்'Good bye lenin'
  எங்கள் மனதில் இருந்து உன்னை எப்போதும் புதைக்கவியலாது ...

  பதிலளிநீக்கு
 3. அவர் புரட்ச்சித்தலைவர் சரி. இங்குள்ளவர்களும் புரட்ச்சித்தலைவர் என்றும் புரட்ச்சித்தலைவி என்று போட்டுக்கொள்வதுதான் ஆபாசமாக உள்ளது

  பதிலளிநீக்கு
 4. கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கையுள்ள எல்லோர் மனதிலும் லெனின் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர் பூத உடலை புதைப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை ...

  பதிலளிநீக்கு
 5. தலைப்பும் , பதிவும் அருமை ...

  பதிலளிநீக்கு
 6. ஒரு வரலாற்று பெருமையை அழிக்க நினைப்பது தவறு. லெனின் உடலை பாதுகாக்க விரும்பும் தனியாரிடமோ அல்லது கம்யூனிச நாடுகளிடமோ ஒப்படைத்து விடலாம்

  பதிலளிநீக்கு
 7. ஆகிடிசித்தர்7:10 முற்பகல், ஜூன் 24, 2012

  ஒரு புரட்சி நடந்து இருபது வருடங்களில் அனைத்து துறைகளிலும் அமெரிக்காவை தூக்கி சாப்பிட முடிந்ததே ரஷ்ய கம்யூனிச புரட்சியின் வெற்றிக்கு சாட்சி .ஆனால் தனி மனிதனாக கார் பங்களா கருப்புப்பணம் விபச்சாரம் என்று கொழிக்க முடியாது அதற்கு ஒரு வடிகால் ஏற்படுத்தாவிட்டால் அதை காட்டி மயக்கியே எந்த கட்டுப்பாடான சமூகத்தையும் காலி செய்து விடமுடியும். உதாரணம் வளைகுடா நாடுகள் இப்போ துபாய் போய் பார்த்தால் அமெரிக்கா தேவலாம் என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
 8. //ரஷ்யாவின் அசைக்கமுடியாத சர்வாதிகாரியாக திகழ்ந்த ஸ்டாலினின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன.///

  போகிற போக்கில் தோழர் ஸ்டாலினை சர்வாதிகாரி என்று முத்திரை குத்திச்செல்லும் இந்த பார்ப்பன நரித்தனம் யாருடையது லக்கி ? உங்களுடையதா இல்லை மாலனுடையதா ?

  அவர் சர்வாதிகாரி என்று தெரியாமல் தான் மு.க முட்டாள்தனமாக தன்னுடைய மகனுக்கு ஸ்டாலின் என்கிற பெயரை வைத்தாரோ ? அவர் உங்களுக்கு தலைவர் வேறு, அதற்கென்ன விளக்கம் சொல்கிறீர்கள் ?

  பத்திரிகையில் வேலை செய்தால் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்துவிடுவீர்களா ?

  தோழர் ஸ்டாலினை கண்டு அஞ்சுவது யார் ? உழைக்கும் மக்களா அல்லது உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்கும் ஆளும் வர்க்கங்களா ?

  ஆளும் வர்க்கங்கள் தான். அதாவது முதலாளிகளும் அவர்களைப் போன்ற சுரண்டும் கூட்டமும் தான் ஸ்டாலினை கண்டு அஞ்சி நடுங்குகின்றன.

  ஏனென்றால் முதலாளித்துவத்தின் குரல்வளையை நெரித்துப்பிடித்தவர் ஸ்டாலின். எனவே தான் அவர்கள் ஸ்டாலினை பற்றி விதவிதமான பொய்களை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்கள். ஆனால் அந்த பொய்களை எல்லாம் அப்படியே நம்புபவர்கள் தங்களை அறிவாளிகள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள் என்றால் அது தான் வெட்கக்கேடு !

  ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் உலகம் முழுவதும் ஸ்டாலினை பற்றி திட்டமிட்டு பரப்பிய இத்தகைய பொய்கள் தமிழகம் வரை வேலை செய்கிறது என்றால் அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்திருப்பார்கள், எவ்வளவு ’உழைத்திருப்பார்கள்’ என்கிற விவரங்களுடன் இத்தகைய பொய்களுக்கும் அவதூறுகளுக்குமான பதில்களாக அமைகின்றன கீழ்கண்ட சுட்டிகளில் உள்ள பதிவுகள்.

  நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!
  http://www.vinavu.com/2009/11/07/stalin-dvd-intro/

  ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?
  http://vrinternationalists.wordpress.com/2009/10/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/#comment-1153


  ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 1
  http://vrinternationalists.wordpress.com/2009/08/10/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF/


  ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2
  http://vrinternationalists.wordpress.com/2009/08/31/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF-2/


  ஸ்டாலின் எதிர்ப்பில் ஒரு தமிழ்நாட்டு வானவில் கூட்டணி!
  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3710:2008-09-07-17-16-05&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59


  சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
  http://poar-parai.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D


  தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
  http://poar-parai.blogspot.com/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D

  பதிலளிநீக்கு
 9. padichukutae sidela patha sujatha sirikirar, nadai enodadunu sirikiraro :)

  பதிலளிநீக்கு