June 21, 2012

குமுதம் பிரார்த்தனை கிளப்


போன ஞாயிறு கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். வீட்டு லைப்ரரியில் சேகரிப்பில் இருந்த பழைய புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்று கிடைத்தது. எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே அட்டையிலோ, முதல் பக்கத்திலோ தன்னுடைய கையெழுத்தை போட்டு வைத்துக் கொள்வது அப்பாவின் வழக்கம். அதுபோலவே புத்தகத்தில் அவரை கவர்ந்த வாசகங்கள் ஏதேனும் இருந்தால் அடிக்கோடிட்டு வைத்திருப்பார். கட்டுரைகள் அருகே அப்பிரச்சினை குறித்த அவரது கருத்தை சுருக்கமாக (வாசகர் கடிதம் மாதிரி) எழுதிவைப்பார். இதழைப் புரட்டும்போது உள்ளே ‘பிரார்த்தனை கிளப்’ பகுதியில் prayed என்று எழுதி கீழே கையெழுத்திட்டிருந்தார். நீண்டநாள் கழித்து அவரது அழகான கையெழுத்தை கண்டது மகிழ்ச்சியை தந்ததோடு, வேறு சில சிந்தனைகளையும் கிளறியது.


குமுதம் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற பகுதியை இந்த தலைமுறை குமுதம் வாசகர்கள் எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆசிரியர் எஸ்.ஏ.பி-க்கு கூட்டுப் பிரார்த்தனையில் நம்பிக்கை அதிகம். பிரார்த்தனை மூலமாக இறைவனிடம் எதையும் சாதித்துவிடலாம் என்கிற கருத்தை கொண்டிருந்தவர். எனவேதான் தன்னுடைய இதழில் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற வாசகர்கள் அமைப்பை உருவாக்கியிருந்தார். நோய் நொடியில் இருப்பவர்கள், அறுவைச்சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் என்று இன்னலில் இருப்பவர்கள் குமுதத்துக்கு கடிதம் எழுதிப் போடுவார்கள். பிரார்த்தனை கிளப் பகுதியில் அக்கடிதம் பிரசுரிக்கப்படும். கீழே ஆசிரியர் ‘இவருக்காக இன்ன நேரத்தில் அனைவரும் அவரவர் வழிபடும் இடத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்று வாசகர்களை கோருவார்.

சிறுவயதில் அப்பகுதியை வாசிக்கும்போது ‘டைம் வேஸ்ட்’ என்று நினைப்பேன். எங்கோ இருக்கும் யாருக்கோ எதற்காகவோ யார் மெனக்கெட்டு பிரார்த்திப்பார்கள் என்றெல்லாம் கருதியிருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பாவே அதை தொடர்ச்சியாக பின்பற்றி வந்திருக்கிறார் என்பது எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்தது. பிற்பாடு நானெடுத்த குட்டி கணக்கெடுப்பு ஒன்றில் அப்போதிருந்த குமுதம் வாசகர்கள் (பிரார்த்தனையில் நம்பிக்கை கொண்டவர்கள்) பெரும்பாலான பேர் நேரமெடுத்து, மெனக்கெட்டு இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். உள்ளகரம் ஆயில்மில் அருகே ஒரு யாக்கோபு சர்ச் உண்டு. ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்துக்கு சென்றபோது, குமுதம் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு அன்பர் மனமுருக ‘யாருக்கோ’ பிரார்த்திருத்துக் கொண்டிருந்ததை கூட கண்டிருக்கிறேன்.

இப்போது குமுதத்தில் ‘பிரார்த்தனை கிளப்’ வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை ஒன்பது முதல் ஒன்பது மணிக்குள்ளாக வாசகர்கள் ஒட்டுமொத்தமாக முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்களா என்பதற்கு நிச்சயமுமில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் மனிதநேயம் நிறைய வளர்ந்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் நிறைய உருவாகியிருக்கின்றன. சாதி, சமய, இன, தேச வேறுபாடுகள் குறித்த பிரக்ஞை குறைந்திருக்கிறது. அடுத்தவர் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. அதேநேரம் ஆன்மீகமும் பல்வேறு வடிவங்களில் முன்பிலும் அதிகமாக மக்களை ஈர்க்கிறது. இப்படியெல்லாம் ஒரு தோற்றம் எனக்குள் இருக்கிறது. சமகால தலைமுறை குறித்து சமகாலத்தில் வாழும் யாருக்கும் இருக்கும் பெருமிதம்தான் இது. ஆனால், போன தலைமுறையிடம் இருந்த ஏதோ ஒன்று, இன்றைய தலைமுறையிடம் ‘மிஸ்’ ஆகிறது என தோன்றுகிறது. முந்தையத் தலைமுறை அதற்கு முந்தையத் தலைமுறையோடு ஒப்பிட்டு இவ்வாறாக ‘ஃபீல்’ செய்ததாக தெரியவில்லை.

என் அப்பாவை விட நான் அறிவாளி. என் அப்பாவுக்கு கிடைத்த வாய்ப்புகளைவிட எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவரைவிட வசதியாக வாழ்கிறேன். அவர் நினைத்தே பார்க்க முடியாத உயரங்களை நான் அனாயசமாக அடைகிறேன். ஆனால் அவரளவுக்கு நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை. சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.

கடந்த தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான மரபுத்தொடர்ச்சியில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இப்போதையத் தலைமுறைக்கும் தொடர்ச்சியே இல்லாத விரிசலுக்கும் வாய்ப்பிருக்கிறது. எதை, எங்கே தொலைத்திருக்கிறோம் என்பதைக் குறித்து கொஞ்சம் துல்லியமாகவே ஆராய வேண்டும்.


22 comments:

 1. நூறு சதவீதம் உண்மை தான்.இன்றைய அவசர உலகமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  ReplyDelete
 2. மனிதன் வளர்கிறான்.. மனிதம் தேய்கிறது.. அருமையான பதிவு..

  ReplyDelete
 3. அந்த ஏதோ ஒன்று வேறெதுவுமல்ல. புனிதம். நானும் உங்கள் தலைமுறைதான். நமது தலைமுறையில் எந்த ஒரு விஷயமும் புனிதமல்ல. புனிதத்தைவிட இப்போது புதுமைக்குத்தான் முக்கியத்துவம். வேகம், பரபாப்பு, restlessness இவைதான் புதுமை என்று அறியப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒரு விஷயம்: ராணுவம் என்பது குறித்து நாம் குழந்தைகளாக இருந்த போது கண்ட கதைகள், சினிமாக்களில் ஓரேயடியாக துதிபாடுகிற மாதிரி காட்சிகள் இருக்கும். ராணுவ வீரர்கள் சொந்த வாழ்க்கையிலும் தியாகிகளாக கடவுள் போல சித்தரிக்கப்படுவர். இன்று? ராணுவத்தில் சேர்பவர்கள் சரக்குக்காகவே சேர்வதாக வசனங்கள் சகஜம். புனிதமான விஷயங்கள் சீன் என்று எள்ளப்படுகின்றன. இதற்கு மீடியா தான் காரணம். எதையும் புதிதாக சிந்திப்பதாகக் காட்டிக் கொண்டால்தான் விற்பனை/டி ஆர் பி ரேட்டிங் அதிகரிக்கும் என்று எல்லாப் புனிதங்களையும் உடைத்தெறிந்து விட்டார்கள். தாய்மை, காதல், நேர்மை, தியாகம், முதல் தேச பக்தி வரை எதற்கும் புனிதம் இல்லை. எதிலும் புனிதம் இல்லை என்று அந்நாளில் இளமை முடிந்து முதுமையின் விளிம்பில் நுழையும் ஒரு நாற்பது வயதுக்காரர் உணர்ந்திருக்கக் கூடும். இன்று ஒரு ஏழெட்டு வயதுக் குழந்தைக்கே அப்படி ஒரு எண்ணம் வந்து விடுவதால் இன்றைய குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். குழந்தைகளுக்கே உரிய அப்பாவித்தனம், கனவு, அழகுணர்ச்சி கலந்த கவித்துவப் பொய்மை எல்லாம் தொலைந்து விட்டதாக எனக்கு அடிக்கடித் தோன்றும். இந்த ஒட்டுமொத்த மன வெறுமை பற்றி நான் அடிக்கடி உணர்வதை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். அதிலும் எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் குமுதம் பிரார்த்தனை கிளப் பற்றி உங்களைப் போலவே நானும் யோசித்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. இந்த 'பிரார்த்தனை கிளப்' விஷயத்தை 'காலமெல்லாம் காதல் வாழ்க' க்ளைமாக்ஸில் உபயோகப்படுத்திய ஞாபகம்.
  மற்றபடி சக மனுஷன் மேலுள்ள அக்கறையே மிஸ்ஸிங் என நினைக்கிறேன்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

  ReplyDelete
 5. சிந்திப்பவன்2:29 PM, June 21, 2012

  அன்று..
  அடுத்தவீடு அருகாமையிலும், அமெரிக்கா வெகுதொலைவிலும் இருந்தன.
  இன்றோ...
  நிலைமை தலைகீழ்.

  பசி மட்டுமல்ல பணம் வந்தாலும் பத்தும் பறந்துபோம்

  நண்பர் பூர்ணம் கருத்துக்கள் அருமை;உண்மை..

  ReplyDelete
 6. அட, அட, அட... என்ன ஒரு கச்சிதம், என்ன ஒரு துல்லியம். அப்படியே குமுதம் செட்டியார் மாதிரியே அடுத்தடுத்த பதிவுகள்ல ஒவ்வொரு மசாலாவா சரியாச் சேக்குறீங்களே! குமுதத்தின் அந்நாளைய அமோக விற்பனைக்குக் காரணம் "பிரார்த்தனை கிளப்" அல்ல. அதன் கவர்ச்சிப் படங்கள்தான். அதுவே அதன் அடையாளமும்கூட. தமன்னா, அஞ்சலியின் பேரெழில் இடுப்புப் பகுதிகளைப் பற்றிய உங்களது அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. "நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை "


  இதை தனியாக சொல்லித்தான் தெரியனுமா என்ன ?


  மற்றபடி அருமையான பதிவு . .

  நன்றி

  ReplyDelete
 8. //என் அப்பாவை விட நான் அறிவாளி. என் அப்பாவுக்கு கிடைத்த வாய்ப்புகளைவிட எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவரைவிட வசதியாக வாழ்கிறேன். அவர் நினைத்தே பார்க்க முடியாத உயரங்களை நான் அனாயசமாக அடைகிறேன். ஆனால் அவரளவுக்கு நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை. சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.//

  மறுக்கமுடியாத உண்மை.

  ReplyDelete
 9. உண்மை யுவகிருஷ்ணா.. எதையோ தொலைத்துவிட்டு எதையோ தேடுகிறோம்.

  ReplyDelete
 10. நல்ல தகவல் தந்தமைக்கு வாழ்த்துகள்

  உங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி ! நீங்கள் வாழும் காலம் இப்படி !
  அன்று வாய்ப்புகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . கிடைத்ததை வைத்து நிம்மதியாக,மகிழ்வாக வாழ்ந்தார்கள்.
  குற்றம் செய்ய தூண்டுதலும் இல்லை அதற்கு அவசியமும் மற்றும் வாய்ப்புமில்லை அதனால் தவறு செய்துவிட்டு வருந்த வேண்டிய அவசியமுமில்லை. குற்றம் செய்தாலல்லவா குற்றவுணர்வு இருக்கும் .
  இக்காலம் குற்றம் செய்துவிட்டு பெருமையாக பேசி மகிழும் காலம் . உத்தமன் என்ற போலி வேடம் போடும் காலம்.
  குற்றம் செய்வது இயல்பு அதனை நினைத்து வருந்தி திருந்தி வாழ்வது உயர்வு. சமூகம் ஒரு நல்ல சமூகமாக அமைய வழி நடத்துபவர் உயர்வானவராக இருப்பது அவசியம் . நாம் தேர்ந்தெடுப்பதெல்லாம் ஒரு சார்புடைய நல்ல கண்ணோட்டத்தில் இல்லை . மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர். "உலகம் ஒரு நாடக மேடை அதில் ஒவ்வொரு மனிதனும் நடிகன்"

  ReplyDelete
 11. சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ !
  Please visit
  http://nidurseasons.blogspot.in/2012/06/blog-post_3875.html

  ReplyDelete
 12. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே... பூரணம் சொல்வதையும் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்... (ஒருவேளை நாம்மளுக்கு வயசாகிறதால... அதாவது நாற்பதை நெருங்குவதால் இப்படி தோன்றுகிறதோ...)

  ReplyDelete
 13. உண்மை. நானும் பிரார்த்தனை கிளப் வாசிப்பவன் தான் ஆனால் அத்தினை தரம் பிரார்த்தனை பண்ணி இருப்பேன் என்று யோசித்தால் கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது.

  Gajan, Sri Lanka

  ReplyDelete
 14. மிக அருமை. பிரார்த்தனை கிளப்பை பற்றி தெரியும் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் நினைத்து பார்க்கவேண்டிய விசயமிது. நாம் என்ன தொலைத்தோம் என்பது தெரியுமோ தெரியாதோ , ஆனாலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதைதெரிந்து கொள்ளநேரமும் இல்லாமல் ஓடிகொண்டிருக்கிறோம், பணத்தையும், நிம்மதியையும் தேடி. மறந்தது மனிதநேயம், அடைந்தது பணம், மேலும் அடைய நினைப்பதும் பணம். நான் உட்பட நன்றி யுவ, இந்த கட்டுரையும், கட்டுரையின் நடையும், நடை வர வர மெருகு கூடிவருகிறது. திட்டச்சேரி ச முருகவேல், ஆழ்வார்பேட்டை , சென்னை 18

  ReplyDelete
 15. hey....u r correct.i am 63 years old.i find the people smart and intelligent than our generation.but as u had said,some thing is missing.some innocense,trust may be....

  ReplyDelete
 16. அடுத்த தலைமுறைக்கும், இப்போதையத் தலைமுறைக்கும் தொடர்ச்சியே இல்லாத விரிசலுக்கும் வாய்ப்பிருக்கிறது.

  நாங்களும் பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்த்னை ஆத்மார்த்தமாக செய்திருக்கிறோம்..

  ReplyDelete
 17. ஏன் யுவகிருஷ்ணா அவர்களே !
  நீங்களே புதிதாக லக்கிலுக் பிரார்த்தனை கிளப் ஆரம்பிக்கக்கூடாது?
  Facebook Twitter என நவீன சமசாரங்களின் மூலம் இதனை தொடரலாமே ?
  உங்களுக்குள்ள ஏரளமான வாசகர்கள் பிரார்த்திக்க தயாராய் இருப்பார்களே .

  இதோ என் முதல் பிரார்த்தனை வேண்டுகோள்

  பிரார்த்தனை கிளப் மறுபடியம் யுவகிருஷ்ணா அல்லது அவரைப் போன்ற
  பிரபல எழுத்தர்கள் மூலம் மறுபடியும் தொடரப்பட்டு நமது சமுதாயம் வளமுடன் வாழ
  நாம் அனைவரும் பிரார்த்திப்போம்

  ReplyDelete
 18. வேலு சார்!

  நல்ல யோசனைதான். ஆனால் எனக்கு பிரார்த்தனையிலோ, இறை மீதோ நம்பிக்கை எதுவுமில்லை. ஆனால் நம்பிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வெளி அவசியம் தேவை என்று விரும்புகிறேன்.

  சுவாமி ஓம்கார், அப்துல்லா, கேபிள்சங்கர், சவுமியன் போன்ற நண்பர்கள் முன்னெடுத்து இந்த பிரார்த்தனை க்ளப்பை உருவாக்கலாம். அவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 19. நூறு சதவீதம் உண்மை

  poornam comments also super

  ReplyDelete
 20. ரஜினியின் உடல் நலமில்லாத சென்ற ஆண்டிலும் கு.பி.கி. சில வாரங்கள் வந்ததே, ஞாபகமில்லையா யுவகிருஷ்ணா?

  ReplyDelete