16 ஜூன், 2012

வாய்ப்பும், யோக்கியதையும்


ஓகில்வி & மாதர் (ஓ & எம்) என்பது ஓர் உலகளாவிய விளம்பர நிறுவனம். உலகம் முழுக்க 450 அலுவலகங்கள். 120 நாடுகளில் இயங்குகிறது. சுமார் இருபதாயிரம் ஊழியர்கள். விளம்பரம் என்றாலே உங்களுக்கு நினைவு வரும் விளம்பரங்கள் பத்து என்றால், அதில் குறைந்தபட்சம் ஐந்தாவது ஓ & எம் நிறுவனம் எடுத்தவையாகதான் இருக்கும். நம்மூரிலேயே ஃபெவிகால், ஹட்ச் என்று பேசப்பட்ட அவர்களது விளம்பரங்கள் ஏராளம். சினிமாவில் ‘வார்னர் பிரதர்ஸ்’ எப்படியோ, விளம்பரத்துறையில் இவர்கள் அப்படி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த நிறுவனம் ஒரு விளம்பரப்படம் இயக்கச் சொல்லி ஒரு இயக்குனரை கேட்டுக்கொண்டால் அவரால் மறுக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.

அவ்வாறு மறுக்கக்கூடிய ‘தில்’ இருப்பவர்கள், ‘அக்கிரகாரத்தில் கழுதை’ மாதிரி ஆர்ட் படங்கள் எடுத்துதான் காலத்தை ஓட்ட முடியும். ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த இயக்குனராவது, “ரஜினி தமிழனுக்கு எதுவும் செய்யவில்லை. மைசூரில்தான் தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்” என்கிற கருத்தையையோ, தமிழ்தேசிய-திராவிட-இடதுசாரி-லொட்டு-லொசுக்கு கொள்கைகளையோ முன்வைத்தோ இங்கு மறுக்கக்கூடிய சூழல் இருக்கிறது என்று யாரேனும் நினைக்கிறீர்களா?

நல்லதோ, கெட்டதோ. உலகமயமாக்கல் சூழலில் யாரும் வாய்ப்புகளை தவறவிட விரும்புவதில்லை. ஆனானப்பட்ட அறிவுப்பேராசான் மார்க்ஸே கூட ‘பொதுவுடைமை’ எழுதவும், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான கருத்துகளை சிந்திக்கவும் பொருளாதாரரீதியாக ஏங்கெல்ஸ் என்கிற முதலாளிதான் உதவியிருக்கிறார். தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பொருளுதவி செய்தவர்களுள் சில பார்ப்பனர்களும் அடக்கம். நாமெல்லாம் எம்மாத்திரம்?

ஓரிரு விதிவிலக்குகள் நிச்சயமாக இருக்கலாம். எல்லா இயக்கங்களிலுமே கொள்கை சமரசத்துக்கு துளியும் ஆட்படாதவர்கள் நான்கைந்து பேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். கிட்டத்தட்ட இது துறவி மனநிலை. துறவியாக வாழ நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேரால் முடியாது. இதற்காக இந்த தொண்ணூற்றி ஒன்பது பேரும் அயோக்கியர்கள் என்று பொருளல்ல. வாய்ப்புகளுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கும் அல்பஜீவிகள்தான் எல்லாருமே. இதில் யார் சின்ன அல்பம், யார் பெரிய அல்பம் என்று பட்டிமன்றம் வைப்பதைவிட அபத்தமான செயல்பாடு வேறொன்று இருக்க முடியாது.

யாரோ ஒருவர் மாட்டிக் கொண்டால், ஒட்டுமொத்தமாக சூழ்ந்து அவரை சாத்துவது என்பதை நம்முடைய பண்பாட்டுச் செயல்பாடாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு, நாம் எந்தவகையிலும் எங்குமே சமரசமே செய்துக் கொண்டதில்லை என்று சீதை மாதிரி தீக்குளித்து நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்? சிறு சமரசங்கள் பரவாயில்லை. பெரிய சமரசம்தான் தப்பு என்று சப்பைக்கட்டு கட்டித்தானே நம்முடைய யோக்கியதையை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்?

அடிக்கடி அறிவுஜீவிகள் ‘நடுத்தர வர்க்கத்து மனோபாவத்தை’, சாதாரண லவுகீக செயல்களில் எல்லாம் கண்டுபிடித்து கிண்டலடிப்பதும், கண்டிப்பதும் வழக்கம். அறிவுசார் செயல்பாடுகளில் அறிவுஜீவிகளின் நடவடிக்கையும் அச்சு அசலாக நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையோடே இருப்பதை பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிகிறது. நம் சூழலில் செயல்படும் பெரும்பாலான அறிவுஜீவிகள் அல்லது அறிவுஜீவி ஜீப்பில் தாமாக வந்து ஏறிக்கொண்ட கோமாளிகளும் எவ்வகையிலும் நடுத்தர மனப்பான்மையை தாண்ட முடியாதவர்கள் என்பதே உண்மை. நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பொறாமை, பொச்சரிப்பு, புறம் பேசுதல் என்று எல்லா நடவடிக்கைகளையும் கைக்கொள்ளும் இவர்கள் எப்படி அறிவுஜீவிகளாக இருக்கமுடியும்?

பைபிளை எனக்கு ஏன் பிடிக்குமென்றால் “உங்களில் யார் யோக்கியரோ, அவர் முதல் கல்லை எறியலாம்” என்கிற வசனத்துக்காக. நம்மூரில் எப்போதும், யார்மீதாவது லோடு, லோடாக கல் எறியப்படுவது வாடிக்கை. முதல் கல்லை எறிந்தவரிடம் மட்டுமல்ல, கடைசிக்கல்லை எறிந்தவர் வரை யாரிடமும் யோக்கியதையை எதிர்பார்க்க முடியவில்லை.

42 கருத்துகள்:

 1. " இவர்களில் எத்தனை பேர் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு, நாம் எந்தவகையிலும் எங்குமே சமரசமே செய்துக் கொண்டதில்லை என்று சீதை மாதிரி தீக்குளித்து நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்? "
  - - மிகச் சரியாக சொல்லி இருக்கின்றீர்கள். என் மனதில் அடிக்கடி எழுகின்ற கேள்வி இது.

  -Priya S

  பதிலளிநீக்கு
 2. தேவரீர் என்ன சொல்ல வருகிறீர் என்பது புரியவில்லை....

  பதிலளிநீக்கு
 3. /நம்மூரில் எப்போதும், யார்மீதாவது லோடு, லோடாக கல் எறியப்படுவது வாடிக்கை. முதல் கல்லை எறிந்தவரிடம் மட்டுமல்ல, கடைசிக்கல்லை எறிந்தவர் வரை யாரிடமும் யோக்கியதையை எதிர்பார்க்க முடியவில்லை./ ...'நச்'

  பதிலளிநீக்கு
 4. /கடைசிக்கல்லை எறிந்தவர் வரை யாரிடமும் யோக்கியதையை எதிர்பார்க்க முடியவில்லை./

  'நச்'

  பதிலளிநீக்கு
 5. எங்கையோ ஆரம்பித்து விவகாரத்தில் முடித்து இருக்கிறீர்கள். ஒன்று மட்டும் புரியுது..ஏதோ உள்குத்து என்று!!!மற்றபடி பத்தி செம அருமை!!

  பதிலளிநீக்கு
 6. லக்கி ,

  ஆமாம் நீங்க சொல்லிட்டே அப்பீல் ஏது.கொள்கை கொத்தவரங்காய்னு பேசுறவங்க எல்லாம் கோமாளிங்க தான் :-))

  engels co autherd das capitaal along with karl marx , அவர் பணக்கார குடும்பத்தில் பிறந்து கம்யூனிச கொள்கைக்குள் வந்தவர்,எனவே எல்லாப்பணக்காரர்களும் கம்யூனிஸ்ட் என சொல்லாத வரையில் சந்தோஷம். எதை எதுக்கு ஒப்பு நோக்க என்று உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் :-))

  டாடா செய்கிற அயோக்கியத்தனத்தினை மறைக்க உதவ விளம்பரப்படம் எடுக்க அடுத்த வாய்ப்பு உமக்கு கிடைக்க வாழ்த்துகள் :-))

  வருங்காலத்தில இப்படியும் எழுதலாம் ...

  "யாரோ ஒருவர் ஊழல் செய்து மாட்டிக் கொண்டால், ஒட்டுமொத்தமாக சூழ்ந்து அவரை சாத்துவது என்பதை நம்முடைய பண்பாட்டுச் செயல்பாடாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு, நாம் எந்தவகையிலும் எங்குமே ஊழலுக்கு துணைப்போகாமல் சமரசமே செய்துக் கொண்டதில்லை என்று சீதை மாதிரி தீக்குளித்து நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்? சிறு லஞ்சம் பரவாயில்லை. பெரிய ஊழல் தான் தப்பு என்று சப்பைக்கட்டு கட்டித்தானே நம்முடைய யோக்கியதையை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்? எனவே ஆ.ராசா போன்றவர்கள் எல்லாம் ஊழல் செய்வது அரசியலில் சகஜமப்பா என்று எடுத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். :-))"

  பதிலளிநீக்கு
 7. பொன்.முத்துக்குமார்2:47 முற்பகல், ஜூன் 17, 2012

  வெளிப்படையாகவே லீனா மணிமேகலை மேல் வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களின் மேல் வைக்கப்படும் விமர்சனம் இது என்று குறிப்பிட்டே செய்திருக்கலாமே, எதற்கு இவ்வ்வளவு பூடகம் ?

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்

  பதிலளிநீக்கு
 8. அகிடிசித்தர்7:00 முற்பகல், ஜூன் 17, 2012

  லீனா மணிமேகலை டாட்டாவுக்காக எடுத்த விளம்பர படம் பற்றி தான் பேசுகிறீர் என நினைக்கிறேன்.பழங்குடியினர் வாழ்விடத்தில் அவன் தொழிற்சாலை கட்டுவான், மண்ணின் மைந்தருக்கு செக்யூரிட்டி வேலையோ, டிரைவர் வேலையோ தருவான்.அந்த ஊரை சுற்றி விலை நிலங்கள் எல்லாம் கட்டடங்கள் ஆகும்,அடிமாட்டு ரேட்டுக்கு நிலம் வாங்கி தரும் வேலையை அங்கேயே ரெண்டு எட்டப்பன் செஞ்சு அந்த ரெண்டு பேர் மட்டும் வீடு கட்டிப்பான் மத்தவன் எல்லாம் வெளியூரில் பிச்சை எடுப்பான்.இதற்காக போலி புரட்சிவாதிகளை வைத்து பின்னணியில் தேச பக்தி பாடல் ஒலிக்க பழங்குடியினர் அனைவரும் அம்பானி ஆகிவிட்டதை போலவும் அதை பார்த்து அவுங்க அப்பா அம்மா ஆனந்த கண்ணீர் விடுறா மாதிரியும் படம் எடுக்க சொல்வான் அதை நீங்கள் பாராட்டுவீர்கள் நாங்களும் படிப்போம்.இதுவும் கடந்து போகும்.

  பதிலளிநீக்கு
 9. நம்மில் தவறு செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்ன ஏசு, தானும் கல்லை எறியாமலே போய்விட்டது ஏன் என்பதன் பொருளை சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். தன்னையே அவர் தவறு செய்யாதவராகக் கருதவில்லை என்றே அதற்குப் பொருள்.

  பதிலளிநீக்கு
 10. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின், திமுகவின் பொருளாளர் பதவி மட்டுமின்றி ஒரு விளம்பரப் பட இயக்குனராகவும் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தனது ஓராண்டு சாதனைகள் என்று விளம்பரப் படம் எடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது. அதற்காக ஓகில்வி & மாதர் (ஓ & எம்) நிறுவனத்தை அணுகுகின்றது. அவர்களும் அதனை இயக்கும் வாய்ப்பை ஸ்டாலினைக் கூப்பிட்டு கொடுக்கின்றார்கள்.

  அந்த நிறுவனம் அளிக்கும் வாய்ப்பை ஸ்டாலினால் மறுக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படி மறுத்தால் 'திமுகவில் ஜனநாயகம்' மாதிரி ஆர்ட் படங்கள் எடுத்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான். நல்லதோ, கெட்டதோ உலகமயமாக்கல் சூழலில் ஸ்டாலின் போன்றோர் வாய்ப்புகளை தவறவிட விரும்புவதில்லை. இதற்காக ஸ்டாலின் அயோக்கியர் என்று பொருளல்ல. வாய்ப்புகளுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கும் அல்பஜீவிதான்.

  தாம் பிரச்சாரம் செய்யும் விஷயத்திற்கும், தனது கட்சிக்கும் எதிராக இருக்கும் ஒரு கட்சியின் பொய்களை பட்டியலிட்டு விளம்பரப் படம் எடுப்பது என்பது ஒரு 'சாதாரண லவுகீக செயல்" என்பதை புரிந்துகொள்ளாதவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கக்கூடும்?


  இதுபோன்றுதான் நாம் விஷயங்களை புரிந்துகொள்ளவேண்டும் என்று லக்கிலுக் விரும்புகின்றார். ஏனெனில் அவர் உடன்பருப்பு மட்டுமல்ல, தனக்குத் தெரிந்தவர்கள் என்றால் மட்டும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்னும் அறத்தின் அடிப்படையில் செயல்படுபவர். மேலும் பேசப்படும் விஷயத்தை விடவும் குற்றம் சுமத்தும் நபரை பற்றி பேசுவதே தனது முதன்மையான பணியாக கருதி செயல்படுபவர்

  பதிலளிநீக்கு
 11. //தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பொருளுதவி செய்தவர்களுள் சில பார்ப்பனர்களும் அடக்கம். //

  பெரியார் எந்த நாளும் யாரிடமும் பிச்சையெடுத்ததில்லை. சுயமரியாதை இயக்கத்துக்காக தன் சொந்தக் காசைத்தான் செலவழித்திருக்கிறார். யாரிடமும் கையேந்தியதில்லை. உங்கள் போதைக்கு பெரியாரை ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ள வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 12. நல்ல பதிவு . ஆனா ஏன் எதற்கு என்று தான் புரியவில்லை!!

  பதிலளிநீக்கு
 13. So you will not criticize ADMK for any corruption issue hereafter, I hope.

  பதிலளிநீக்கு
 14. கட்டுரை இன்னும் வெளிப்படையாகவே இருந்திருக்கலாம். இதில் விவாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது. இன்னொரு முறை மேலும் அலசுங்கள்.

  பதிலளிநீக்கு
 15. //gnani said...
  நம்மில் தவறு செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்ன ஏசு, தானும் கல்லை எறியாமலே போய்விட்டது ஏன் என்பதன் பொருளை சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். தன்னையே அவர் தவறு செய்யாதவராகக் கருதவில்லை என்றே அதற்குப் பொருள்.//

  ஹஹா.... யாருக்கும் தோன்றாத, யாரும் இதுவரைக்கும் சொல்லாத சிந்தனை ஞானி... thought provoking....Nice. நன்றி.

  பதிலளிநீக்கு
 16. Gnani sir pinnutath yennakku udan paadu illai. Avar bibleai sariyaga padikkavillai alladhu neengal mearkol kaatia vasagathin situvation avarukku theriya villai. Thayavu seithu idhu pol madha unarvugali punpaduthum pinnootangalai neekavum

  பதிலளிநீக்கு
 17. தான் ஊழலுக்கு மேல் ஊழல் செய்து அதில் குடும்பத்தை கார்ப்பரேட் கம்பெனி ஆக்கி வைத்ததோடு மக்களையும் ஓட்டுக்கு காசு, இலவசம் என்று ஊழல் படுத்தியிருக்கும் தலைவனின் உண்மையான தொண்டன் வேறு எப்படி இருக்க, யோசிக்க முடியும் ? இப்படித்தான் !

  நீர் தேர்ந்த பிழைப்புவாதியாக, நக்கி பிழையும், தத்தி பிழையும்! அதை நியாயப்படுத்தி ஏன் மற்றவர்களை பிழைப்புவாதியாக்க வேண்டும்?

  யார் யோக்கியவானோ அவர்கள் கல்லெறியட்டும் என்று அயோக்கியன் கேட்கலாமோ?
  அல்லது, நான் யோக்கியவான் இல்லை அதனால் இந்த சூழ்நிலையில் எவனும் யோக்கியவனாக இருக்கமுடியாது என்று இறுதி தீர்ப்பெழுதலாமோ?
  அப்படி இறுதி தீப்பெழுத யார் உமக்கு அதிகாரம் அளித்தது?

  நீர் நக்கி பிழைத்தால் அதை உம்மோடு வைத்துக்கொள்ளும்.
  இந்த பூட்ஸ் நக்கிகள் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று நான் அப்படித்தான் விளம்பரப் படம் எடுப்பேன் என்று சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
 18. நமது நாட்டின் பொதுச் சொத்துக்களையும், கனிம வளங்களையும், இயற்கைச் செல்வங்களையும் தட்டிக்கேட்பதற்கு ஆளின்றி கொள்ளையடித்துச் செல்லும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக போராடி வரும் பழங்குடி மக்களை நயவஞ்சகமான முறையில் ஏமாற்றி டாடாவுக்கு மாமா வேலை செய்து நத்திப்பிழைக்கும் லீனாவின் கைக்கூலித்தனத்திற்கு தத்துவ விளக்கமளித்திருக்கும் லக்கிலுக் போன்றோர் தேர்ந்த பிழைப்புவாதிகளாகவும், காரியவாதிகளாகவும் இருப்பதில் நமக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, இந்த சமூகத்திற்கும் கூட பிரச்சினை இல்லை என்று கருதுகிறேன்.

  ஆனால் நாலு காசுக்காக உலகமயமாக்கல் சூழலில் யாரிடமும், டாடாவிடமோ நித்தியானந்தாவிடமோ கூட நத்திப்பிழைப்பதில் தவறொன்றுமில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அறிவிக்கும் லக்கிலுக் தன்னைப் போலதான் இந்த சமூகமும் பிழைப்புவாத சமூகமாக இருக்கிறது என்று தனது கேடுகெட்ட வாழ்க்கையை நியாயப்படுத்த ஒட்டுமொத்த சமூகத்தையும் துணைக்கழைத்துக்கொள்வதுடன் மற்றவர்களையும் தன்னைப்போன்ற பிழைப்புவாதிகளாக மாற்ற முயற்சிப்பது தான் அயோக்கியத்தனம், பிரச்சினைக்குரியது.

  உலகமயமாக்கல் சூழலில் வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்று அறிவுறை கூறும் லக்கி போன்றவர்களும் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் நல்லொழுக்க சீடர்களும் மக்களுக்கு சில விசயங்களை தெளிவுபடுத்திவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  நமது நாட்டின் நீர் ஆதாரத்தை கொள்ளையிடும் கொலைகார கோக்கிற்கும், போபாலில் இருபத்தாயிரத்திற்கும் அதிகமானவர்களை படுகொலை செய்த யூனியன் கார்பைடுக்கும் அதே போல பாசிச மோடிக்கும் ராஜபக்சேவுக்கும் கூட கொள்கை கோட்பாடு லொட்டு லொசுக்கை எல்லாம் பார்க்க முடியாத உலகமய சூழலில் விளம்பரப் படம் எடுத்துத் தருவீர்களா என்பதையும் தெளிவுபடுத்திவிட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  லக்கி எழுதியுள்ள இந்த பதிவை யாரும் லீனாவுக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். புரோக்கர் லீனா மாட்டிக்கொண்ட தருணத்தை பயன்படுத்திக்கொண்டு லக்கி தனது பிழைப்புவாதத்தை கடைவிரித்து நியாயப்படுத்துவதற்காகவே இதை எழுதியுள்ளார்.

  தான் பிழைப்புவாதியாக இருப்பதாலும், இருக்க விரும்புவதாலும் ஒட்டு மொத்த சமூகத்தையும் பிழைப்புவாதச் சமூகம் என்று கூறி தனது காரியவாத வாழ்க்கைக்கு நியாயம் கற்பித்துக்கொள்ளும் முயற்சியே இது.

  நீங்கள் லீனாவை விட சிறந்த பிழைப்புவாதியாக இருந்துகொள்ளுங்கள் லக்கி ஆனால் மற்றவர்களையும் உங்களைப்போன்ற பிழைப்புவாதிகளாக வாழ வேண்டும் என்று வலியுறுத்தாதீர்கள்.

  எழுத்தாளராகிவிட்ட உங்களைப் போன்றவர்கள் மக்களிடம் உள்ள தவறுகளை விமர்சித்து சரியானதை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக பிழைப்புவாதத்திற்கு ஒரு புதிய நியாயத்தையும், தத்துவ அடிப்படையையும் உருவாக்கி மக்களை மேலும் மேலும் பிழைப்புவாதச் சகதிக்குள் மூழ்கடிப்பது சரியா ?

  உங்களைப் போன்ற ’எழுத்தாளர்கள்’ மக்களுக்கு எவ்வளவு தவறான பாதைகளை காட்டினாலும், ஊழல்படுத்தினாலும், நாங்கள் அவர்களை சரியான பாதைக்கு அழைத்து வருவோம்.

  உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஓர் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை பெற்றுத்தர நாங்கள் போராடுகிறோம். அத்தகைய போராட்டத்தில் மக்களிடமுள்ள பிழைப்புவாதங்களையும் எதிர்கொள்ளத் தான் செய்கிறோம் ஆனால் அவற்றை நேர்மறையில் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் போது மக்கள் அதை வெட்கமற்ற முறையில் ’எழுத்தாளர்களை’ போல நியாயப்படுத்தாமல் குற்றவுணர்வுடன் தலைகுனிகிறார்கள்.

  பெரும்பாண்மை மக்கள் தவறு என்று ஒன்றை உணர்ந்துவிட்டாலே அதை ஒழித்துக்கட்டுவதற்கான வழியும் பிறந்துவிடுகிறது.

  இந்த பிழைப்புவாத பொழிப்புரையை அங்கீகரிக்காமல் சமூக பொறுப்புணர்வோடு கண்டித்த வவ்வால், அகிடி சித்தர், ஆகாயப்பறவை போன்ற தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. தோழர்களே! இன்னமும் சில நல்லவர்கள் இருக்கிறீர்கள் என்று பின்னூட்டங்களில் தோன்றுகிறது. எனவேதான் சென்னை இன்றும் மப்பும், மந்தாரமுமாய் இருக்கிறது :-)

  தனித்தனியாக பதில் அளிக்கவில்லை என்று பாயவேண்டாம். இப்பிரச்சினையை நான் எப்படி பார்க்கிறேனென்று நேரமிருந்தால் இன்னும் ‘தெளிவாக’ தனி பதிவாக இட முயற்சிக்கிறேன்.

  //நம்மில் தவறு செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்ன ஏசு, தானும் கல்லை எறியாமலே போய்விட்டது ஏன் என்பதன் பொருளை சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். தன்னையே அவர் தவறு செய்யாதவராகக் கருதவில்லை என்றே அதற்குப் பொருள்.//

  ஞாநி சார்! கலக்கலான பர்ஸ்பெக்டிவ்..

  இன்னொரு பர்ஸ்பெக்ட்வ்வும் தோன்றுகிறது. ஒருவேளை தவறே செய்யாதவராக தன்னை இயேசுபிரான் கருதியிருந்தபோதிலும் கல்லெறிய விரும்பாதவராக, எறிந்தால் என்னத்தை ஆகப்போகிறது என்று உணர்ந்தவராகவும் இருந்திருக்கலாம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 20. அண்ணே,
  எப்படிண்ணே உங்களால மட்டும் இப்படில்லாம் எழுத முடியுது? டேய் அதுக்கெல்லாம் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி பொறக்கணும்றா. என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு சிந்தனை. உங்க கருத்துக்கு ஆதரவா, மார்க்ஸ், பெரியார்னு ஆதாரத்த எடுத்து டேபிள்ல வைச்சு பேசுறீங்க பாருங்க, உங்க "வாய்மை" எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு. நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்? எனக்கு ரொம்ப சந்தேகமாகவே இருக்கு. குட் யு பிளீஸ் கிளியர் மை டவுட்?

  பதிலளிநீக்கு
 21. அருமையான பதிவு /விவாதம் /எதிர்வாதம் . கண்ணை மூடிக்கொண்டு கல்லெறிபவர்களின் மீதான கோபம், உங்கள் கடுமையான வார்த்தைகளில் தெரிகிறது .

  பதிலளிநீக்கு
 22. லக்கி,

  இங்கே நீங்கள் சொல்லவந்திருக்கும் செய்தி, முதலாளிதுவத்தை பயன்படுத்தி கொள்வது தவறில்லை...

  முதலாளித்துவம் யாரை பயன்படுத்தி கொள்ளும்... சோரம் போனவர்களைதான்... நேர்மையானவர்களை அது பயன்படுத்தி கொள்ள முடியாது...

  நீங்கள் லீனாவை ஆதரிக்க முடிவு செய்து விட்டீர்கள்... அதற்கு துணையாக பெரியாரையும், பைபிளையும் துணையாக எடுத்து காட்டியுள்ளீர்கள் அவ்வளவே...

  ப.சிதம்பரம், கோபால் சுப்ரமணியம், நாரிமன் போன்றவர்கள் எப்படி திறமையாக முதலாளிகளுக்கு வாதாடுகிறார்களோ, கே.கே.வேணுகோபால் எப்படி ஜெவுக்கு மிக திறமையாக வாதாடுகிறாரோ அப்படிதான் இங்கே லீனாவிற்கு மிக திறமையான எழுத்துலக வழக்கறிஞர் ஆகி இருக்கிறீர்கள்...

  ப.சிதம்பரத்திற்கோ, கோபால் சுப்ரமணியத்திற்குகோ, நாரிமனுக்கோ, கே.கே.வேணுகோபாலுக்குகோ எந்த அறமும் தேவையில்லை... பணமே சரணம்...

  இப்போது நீங்கள் எடுத்திருக்கும் எழுத்துலக வழக்கறிஞர் பணிக்கு எதையும் எதிர்பார்த்திருக்கமாட்டீகள் என்பது நன்றாக எனக்கு தெரியும்...

  உங்களை பொருத்தவரை நாளை இதே போல... பாசிஸ்டுகள் மோடி, ஜெயலலிதா, அத்வானி, ராஜபக்சே போன்றவர்கள் நடத்திய படுகொலைகளுக்கு பதில் நலதிட்டம் செய்து விளம்பர படம் எடுத்தாலும், பயன்படுத்தி கொள்வது தவறில்லை என்பீர்கள்... அதற்கு என்ன எழுத்துலக சட்ட ஆதாரங்களை காட்டுவீர்கள் என எனக்கு தெரியாது...

  நான் நம்பும் அறத்தின்படிதான் இந்த மாதிரி கேட்கிறேனே தவிர உங்களுடன் இருக்கும் நீண்ட கால நட்பின் அடிப்படையில் உங்கள் மீது எனக்கு எந்தவித பொறாமையோ வேறு எதுவும் இல்லை... உங்களுட்டைய முன்னேற்றைத்தின் ஒவ்வொரு படியையும் கண்டு மகிழ்ச்சி கொள்பவன் தான்...

  பதிலளிநீக்கு
 23. ஞானி சார்,

  //நம்மில் தவறு செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்ன ஏசு, தானும் கல்லை எறியாமலே போய்விட்டது ஏன் என்பதன் பொருளை சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். தன்னையே அவர் தவறு செய்யாதவராகக் கருதவில்லை என்றே அதற்குப் பொருள்.//

  ஏசு தன்னையே தவறு செய்யாதவராகக் கருதவில்லை என்று பொருள் விளக்கம், தத்துவ விளக்கம் அளிப்பது இருக்கட்டும்.
  (ஏசுவே தன்னை தவறு செய்யாதவராகக் கருதாத போது), அரசியல் விமர்சகராக கருதிக்கொள்ளும் நீங்கள், நீங்கள் மட்டுமே தவறு செய்யாதவர், யோக்கியவான் என்று கருதிக்கொண்டு தான் கருணாநிதியையும் மற்ற பிறரையும் விமர்சித்தீர்களா?

  டாடா போன்ற கார்பரேட்களுக்கு அடியாள் வேலை செய்வதையோ, உலமய சூழலில் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தான் பிழைப்புவாதியாக இருப்பதுடன் அதை நியாயப்படுத்தி மற்றவர்களையும் அதில் சங்கமிக்க அழைப்பதையோ, இந்த சூழலில் பிழைப்புவாதியாக தான் வாழமுடியும் அதனால் அனைவரும் பிழைப்புவாதிகளே என்று மற்றவர்களை இழிவு செய்வதையோ, இப்படி எதைப்பற்றியும் வாய் திறக்காத நீங்கள் (ஒருவேளை நீங்களும் அப்படிப்பட்ட வாய்ப்புக்காக காத்திருக்கிறீர்களோ?) எந்த அடிப்படையில், எந்த யோக்கியதையில் கருணாநிதியை விமர்சனம் செய்தீர்கள் ஞானி சார்?

  1) உங்களுக்கு அப்படி என்ன Special யோக்கியதை இருக்கிறது?
  2) பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் பற்றி உங்கள் கருத்து என்ன? வெளிப்படையாக சொல்லலாமே?

  பதிலளிநீக்கு
 24. // இன்னொரு பர்ஸ்பெக்ட்வ்வும் தோன்றுகிறது. ஒருவேளை தவறே செய்யாதவராக தன்னை இயேசுபிரான் கருதியிருந்தபோதிலும் கல்லெறிய விரும்பாதவராக, எறிந்தால் என்னத்தை ஆகப்போகிறது என்று உணர்ந்தவராகவும் இருந்திருக்கலாம் இல்லையா?//

  எறிந்தால் என்னத்த ஆகபோவுது என்று தெரிந்தவராக இருந்தால், கல் எடுத்து எறிவது பற்றியும் பேசி இருக்க மாட்டாரே.

  பதிலளிநீக்கு
 25. தோழர் அக்காகி!

  என்னைப் பற்றி நீங்கள் உயர்ந்த மதிப்பீடுகள் வைத்திருந்தீர்கள் என்று தோன்றுகிறது. நான் அவ்வளவு ஒர்த் அல்ல என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்தப் பதிவில் பின்னூட்டம் போடுவதற்காகவே ஸ்பெஷல் பிளாக்கர் அக்கவுண்ட் தொடங்கியிருக்கும் உங்களது முயற்சியை பாராட்டுகிறேன்.

  ஒரு ‘ஐரனி’ பாருங்கள். தூய்மைவாதம் பேசக்கூட உங்களது உண்மையான முகத்தோடு வரமுடியவில்லை. அதனால் ஏதேனும் உங்கள் லவுகீகத்துக்கு சிக்கல் வருமோ என்று நீங்கள் அஞ்சுவதை புரிந்துகொள்ள இயலுகிறது. நீங்கள் ஒரு பாம்பு. நான் இன்னொரு பாம்பு. இந்த சுவாரஸ்யமான முரணைதான் இந்தப் பதிவு பேசுகிறது.

  பதிலளிநீக்கு
 26. //இங்கே நீங்கள் சொல்லவந்திருக்கும் செய்தி, முதலாளிதுவத்தை பயன்படுத்தி கொள்வது தவறில்லை...//

  தோழர் தமிழ்க்குரல்,

  எவ்வகையிலும் முதலாளித்துவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டதேயில்லையா என்பதை ஒருமுறை சுயபரிசீலனை செய்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

  நான் ’தவறில்லை’ என்கிற வார்த்தையை எங்கேயும் பயன்படுத்தவில்லை. எல்லோருமே ஒரு சூழலில் சோரம் போய்க்கொண்டிருக்கிறோம் என்கிற யதார்த்தத்தை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன்.

  குறிப்பாக ‘லீனா மணிமேகலை’ குறித்த விவகாரத்தில், அவர்மீது கல்லெறிபவர்கள் யாரும் நீங்கள் குறிப்பிடும் தவறை செய்யாதவர்கள் இல்லை என்று தோன்றியதாலேயே, இப்படி எழுதியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. ///ஒரு ‘ஐரனி’ பாருங்கள். தூய்மைவாதம் பேசக்கூட உங்களது உண்மையான முகத்தோடு வரமுடியவில்லை///


  லக்கி இது உங்களுக்கு புதிய விசயமா என்ன ? தோழர் அசுரனை மட்டும் யாருக்கு தெரியும் ? மேலும் அது அவ்வளவு முக்கியமான விசயமா என்பதையும் பரிசீலியுங்கள். அவர் ம.க.இ.க தோழர் என்பது தான் அவருடைய அடையாளம். அரசியல் அடையாளம் இருக்கும் போது சொந்த அடையாளம் எதற்கு ?

  பதிலளிநீக்கு
 28. தோழர் அம்பேத்,

  என் அடையாளத்தை வெளிப்படையாக வைக்காத நிலையில் எத்தகைய புரட்சி கருத்தையும் நான் முன்வைக்க முடியும். இது மிக சுளுவான வழி.

  ஆனால், என் சிந்தனைகளை நானே கடைப்பிடிக்கிறேனா என்பதை மற்றவர்கள் அறியும் உரிமையை அது தடுக்கிறது இல்லையா?

  நாமே கடைப்பிடிக்காத கண்ணியத்தை மற்றவர்களுக்கு வலியுறுத்துவதை விட அப்படி என்ன பெரிய அயோக்கியத்தனம் இருந்துவிடப் போகிறது?

  transparency இல்லாத எந்தவொரு நடவடிக்கையிலும் ஏதோ அயோக்கியத்தனம் நிச்சயம் ஒளிந்திருக்கிறது என்றே பொருள்.

  நான் திருடன்தான் என்று வெளிப்படையாக ஓர் திருடன் சொல்லுவதைவிட பெரிய நேர்மை எதுவும் உலகில் இல்லை.

  பதிலளிநீக்கு
 29. Sorry for not typing in tamil.

  What I understood from this post, there is always some compromise on ideology when it comes to the profession for the sake of survival. According to me, this is unavoidable in this current world.

  And i think yuva sir also conveying this and it is correct. Arguments based on extreme compromises and exceptions does not take anywhere..

  பதிலளிநீக்கு
 30. ///எவ்வகையிலும் முதலாளித்துவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டதேயில்லையா என்பதை ஒருமுறை சுயபரிசீலனை செய்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.///


  உங்களுடைய கேள்விக்கு பதில் னேற்று வெளியான வினவு பதிவிலிருக்கிறது.
  முதலாளிகளுக்கு சொம்படிப்பதும், கைக்கூலிபெற்றுக்கொண்டு விசுவாசமாக வாலாட்டுவதும், அவனுடைய எலும்புத்துண்டுக்காக நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்பதும், முதலாளிகளின் ஆலைகளில் நிறுவனங்களில் வேலை அவனால் உழைப்புச்சுரண்டலுக்குள்ளாகும் தொழிலாளர்களும் ஒன்றா ?

  நான் அறிந்தவரை தோழர் தமிழ் குரலை இவ்வாறு கூறிய முதல் நபர் நீங்களாகத் தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  முதலாளித்துவத்தை பயன்படுத்திக்கொள்வதும் அது நம்மை பயன்படுத்திக்கொள்வதும் என்றால் என்ன ? நீங்கள் இதை எப்படி புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று விளக்கினால் பதிலளிக்க வசதியாக இருக்கும்.


  வினவு பதிவிலிருந்து

  “மா.லெ குழுக்கள் பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நிதி பெறுவதில்லையா“ என்கிறார் கீதா நாராயணன். உலகத்தை சுரண்டும் ஏகாதிபத்திய முதலாளிகளின் எச்சில் எலும்புகள் நிரம்பிய குப்பைத் தொட்டியை வலம் வரும் நாய்களும், அந்த நிறுவனத்தால் சுரண்டப்படும் ஊழியனிடம் நன்கொடை பெறும் மா.லெ குழுக்களும் ஒன்றெனச் சித்தரிக்கும் இந்த “அறியாமையை” எந்த ஆசிட் ஊற்றினாலும் கழுவ முடியுமா?

  பதிலளிநீக்கு
 31. தோழர் அம்பேத்,

  தங்கள் பதில்களின் வாயிலாக தாங்கள் ம.க.இ.க. ஆதரவாளர் என்று நம்புகிறேன்.

  வினவின் பதிவு தெரிவிக்கும் ‘அறியாமை’ என்பது நிதிபெறும் சடங்கை ஜஸ்ட் லைக் தட்டாக கடந்துச் செல்கிறது. ஏனெனில் ம.க.இ.க.வுக்கு ‘லெவி’ செலுத்துபவர்களில் பலர் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.

  சம்பளம் வாங்கலாம். ஆனால் விளம்பரப் படத்தில் பணிபுரிந்து சன்மானம் வாங்கக் கூடாது என்பதை எப்படி புரிந்துக் கொள்வது என்பது நிஜமாகவே எனக்கு புரியவில்லை :-(

  பதிலளிநீக்கு
 32. ///என் அடையாளத்தை வெளிப்படையாக வைக்காத நிலையில் எத்தகைய புரட்சி கருத்தையும் நான் முன்வைக்க முடியும். இது மிக சுளுவான வழி.///


  நீங்கள் புரட்சியாளர்களின் வரலாற்றையும், ரசிய சீனப்புரட்சியின் வரலாற்றையும் ஏற்கெனவே வாசித்திருக்கலாம் எனினும் மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள் அவை உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம். தோழர் லெனினுக்கு மொத்தம் 63 பெயர்கள் இருந்தன என்றால் அது அயோக்கியத்தனமா ? அதே போல யார் கண்ணிலும் படாமல் பல காலமாக தலைமறைவாகவும் வாழ்கிறார். உன்னோட கொள்கை நேர்மையானதுன்னா எதுக்கு தலைமறைவா இருக்க என்று லெனினை கேட்பீர்களா என்ன ?


  ///ஆனால், என் சிந்தனைகளை நானே கடைப்பிடிக்கிறேனா என்பதை மற்றவர்கள் அறியும் உரிமையை அது தடுக்கிறது இல்லையா?///

  ஒருவருடைய வாழ்க்கையை பிளாக் வழி அதாவது மெய்நிகர் உலகின் வழியே உள்ளது உள்ளபடி உண்மையாக அறிந்துகொள்ள முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள் லக்கி ? இங்கு தான் அதிகப்படியாக ஏமாற்ற முடியும்! எனவே நாங்கள் கொள்கைக்கு நேர்மையாக வாழ்கிறோமா என்பது தான் நீங்கள் அறிய விரும்பும் விசயம் என்றால் நீங்கள் எமக்கு மிக அருகில் நின்று தான் கவனிக்க வேண்டும். அதற்கு நாம் நேரில் சந்திப்பது தான் ஒரே வழி. உங்களை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 33. தோழர் அம்பேத்!

  தோழர் லெனின் அவரது சுய அடையாளத்தோடும் இயங்கினார், அதனால் அவர்மீது பலமுறை கொலைமுயற்சிகளும் நடந்தது. அவர் வேறு பெயர்களில் இயங்க அவசியமான காரணங்களும் இருந்தது. தயவுசெய்து இங்கே சுய அடையாளத்தை மறைத்து பின்னூட்டமிடுவதையும், தோழர் லெனினையும் ஒப்பிட்டு அவரை கொச்சைப்படுத்தி விடாதீர்கள்.

  //உங்களை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.//

  ஒருவேளை நீங்கள் என்னை ஏற்கனவே சந்தித்திருக்கலாம். ம.க.இ.க. தோழர்களோடு இணக்கமானவன்தான் நான். பலர் நெருங்கிய நட்பு வட்டத்திலும் இருக்கிறார்கள். எனவே நீங்கள் என்னை சந்தித்து மார்க்சியப் பாடம் எடுக்க அஞ்சவேண்டிய அவசியம் எதுவுமில்லை. yuvakrishna@gmail.comக்கு மடல் அனுப்பினீர்களேயானால் நம் இருவரும் வசதியான நேரத்தில் சந்தித்து மேற்கொண்டு உரையாடலாம்.

  பதிலளிநீக்கு
 34. ////சம்பளம் வாங்கலாம். ஆனால் விளம்பரப் படத்தில் பணிபுரிந்து சன்மானம் வாங்கக் கூடாது என்பதை எப்படி புரிந்துக் கொள்வது என்பது நிஜமாகவே எனக்கு புரியவில்லை :-(////


  முதலாளியிடம் கூலிக்கு வேலை செய்யும், தனது உழைப்பை விற்கும் ஒரு தொழிலாளியும், உழைப்பைச் சுரண்டிக்கொழுக்கும் முதலாளியை யோக்கியனாக்கி அவனுக்கெதிராக நிற்கும் மக்களை ஊழல்படுத்தி காயடிக்கும் கைக்கூலி வேலையும் ஒன்றா ? எனவே தான் காசு கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எடுத்துத்தருவீர்களா என்று ஏற்கெனவே கேட்டிருந்தேன்.  ////வினவின் பதிவு தெரிவிக்கும் ‘அறியாமை’ என்பது நிதிபெறும் சடங்கை ஜஸ்ட் லைக் தட்டாக கடந்துச் செல்கிறது. ஏனெனில் ம.க.இ.க.வுக்கு ‘லெவி’ செலுத்துபவர்களில் பலர் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.///


  இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். ஹீண்டாய், ஃபோர்ட் ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேர் பணிபுரிகிறார்கள். முதலில் இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள்,முதலாளித்துவ சுரண்டலை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அத்துடன் அதை ஒழித்துக்கட்டவும் விரும்புபவர்கள். கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய தொழிலாளர்களிடம் நிதி வாங்காமல் முதலாளிகளிடமா வாங்க முடியும் ?
  (அப்படி ரெண்டு போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. ஒன்று சீமாட்டி லீனாவின் குடும்ப உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இருக்கும் தா.ப வின் சி.பி.ஐ இரண்டாவது அ.மார்க்ஸ் அடிக்கடி மேடை ஏறும் சி.பி.எம். இந்த இரண்டு போலிகளும் முதலாளிகளிடம் காசு வாங்கி கட்சி நடத்துகிறார்கள்.)

  மேலும் தொழிலாளர்கள் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளட்டும் லக்கி அதுவல்ல பிரச்சினை. அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பது தான் பிரச்சினை. அதாவது முதலாளிக்காக தமது உழைப்புச் சக்தியை விற்கிறார்களா அல்லது லீனாவை போல உழைப்புச் சக்தியை திருடும் முதலாளிக்காக வேலை செய்கிறார்களா என்பது தான் பிரச்சினை. இரண்டும் கூலி தான். தொழிலாளர்கள் பெறுவது கூலி லீனா பெறுவது கைக்கூலி.

  கம்யூனிஸ்ட் கட்சி உலகம் முழுவதும் தொழிலாளர்களின் நிதியில் தான் இயக்கும்.
  இந்தியாவிலேயே எடுத்துக்கொள்வோமே
  1950 களிலிருந்து பிரிட்டனை சேர்ந்த என்ஃபீல்ட், சிம்சன், பிரிட்டானியா போன்ற நிறுவனங்களில் சி.பி.ஐ, சி.பி.எம் தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்றன. அவை இந்தியாவை காலனியாக வைத்திருந்த நாட்டின் கம்பெனிகள். அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் கட்சிக்கு லெவியும் கொடுக்கிறார்கள் ! இதற்கென்ன சொல்ல முடியும் ?

  உங்கள் வரையறையின் படி பார்த்தால் முதலாளித்துவத்தை எதிர்க்கும் யாரும் முதலாளித்துவ சமூகத்திலேயே வாழக்கூடாது என்றும், முதலாளித்துவ சமூகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியே இருக்கக்கூடாது என்றும் சொல்வீர்கள் போலிருக்கிறது.

  இப்போது லெவிக்கு வருவோம். தொழிலாளர்கள் (IT காரங்களும் தான்) தமது உழைப்புச் சக்தியை விற்று சம்பாதித்த பணத்தை தமது வர்க்க கட்சிக்கு கொடுப்பதில் தவறு ஏதேனும் உண்டா ? பாட்டாளி வர்க்கம் தனது வர்க்க கட்சிக்கு நிதியளிப்பதை போல டாடா அம்பானி போன்ற முதலாளிகள் காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க போன்ற தமது கட்சிகளுக்கு கொடுக்கிறார்கள். இதை ம.க.இ.க எதற்காக ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்ல வேண்டும் இதைக்கொண்டு ஒரு பதிவே எழுதலாம் லக்கி.

  பதிலளிநீக்கு
 35. கல்லெறிபவர்களின் யோக்கியதை குறித்த அற்ப குற்றச்சாட்டில், கல்லெறியப்படவேண்டியவரின் மெகா குற்றச்சாட்டு மறைக்கப்படுவது அல்லது மறுக்கப்படுவது நியாயமாகப்படவில்லை.

  பதிலளிநீக்கு
 36. இந்த பிழைப்புவாத பொழிப்புரையை அங்கீகரிக்காமல் சமூக பொறுப்புணர்வோடு கண்டித்த வவ்வால், அகிடி சித்தர், ஆகாயப்பறவை போன்ற தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....

  total waste article...

  பதிலளிநீக்கு
 37. //* தோழர் தமிழ்க்குரல்,

  எவ்வகையிலும் முதலாளித்துவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டதேயில்லையா என்பதை ஒருமுறை சுயபரிசீலனை செய்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

  நான் ’தவறில்லை’ என்கிற வார்த்தையை எங்கேயும் பயன்படுத்தவில்லை. எல்லோருமே ஒரு சூழலில் சோரம் போய்க்கொண்டிருக்கிறோம் என்கிற யதார்த்தத்தை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன்.

  *//

  நான் முதலாளிகளிடத்தில் வேலை செய்திருக்கிறேன், செய்கிறேன்... அதற்கு சம்பளம் வாங்கி இருக்கிறேன், வாங்குகிறேன்...

  நான் படித்த கல்விக்கும், தொழில் அறிவுக்கும் முதலாளிக்குதான் வேலை செய்ய முடியும், முதலாளிகளை எதிர்ப்பதால் அவர்களிடம் வேலை செய்ய கூடாது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என கூட சொல்லமுடியுமா?

  ஒரு உதாரணம் சொல்ல வேண்டியது என்றால்... 1994இல் முதல் வேலைக்கு செல்லும் முன்னால் ஒரு தனியார் சகாய நிதி நிறுவனத்தில் நண்பர் ஒருவர் மூலம் வேலைக்கு சென்றேன்... அங்கு போடபட்ட அநியாய வட்டி, கொள்ளையை கண்டு 10 நாளில் சம்பளம் வாங்காமல் ஓடி விட்டேன்... என்னை பொருத்த வரை நான் நம்பும் அறத்தின் படியே வாழ்க்கையை அமைத்து கொண்டு இருக்கிறேன்...


  உங்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரிந்திருக்கும் என நம்புகிறேன், நான் எங்கும் சமரசம் செய்து கொள்வதில்லை... நியாயத்தின் பக்கமே இருக்க விரும்புபவன்... இருப்பவன்... இங்கே பொது தளத்தில் உங்களிடம் நீண்ட விவாதம் செய்ய வேண்டியதில்லை...

  பதிலளிநீக்கு
 38. தொழிலாளர்கள் பெறுவது கூலி. லீனா பெறுவது கைக்கூலி.

  you must know the difference..

  பதிலளிநீக்கு
 39. தோழர் தமிழ்க்குரல்,

  நீங்கள் எம்ப்ளாயீ. லீனா ப்ரொஃபஷனல். இது மட்டும்தான் வித்தியாசம்.

  மற்றபடி முதலாளித்துவம் இயங்கும் முறையும், அதை நாம் விரும்பியோ, விரும்பாமலோ சார்ந்திருப்பதும் இருவருக்கும் ஒன்றுதான்.

  பதிலளிநீக்கு
 40. எனக்கும் 10 fake id இருக்குபா. என்னையும் புரட்சி செய்றதுக்கு கூப்புடுங்கப்பா.

  பதிலளிநீக்கு
 41. யுவா,
  இப்போ கேள்வி லீனா விளம்பர படம் எடுத்தது கெடையாது. உங்களோட 'argument' சரிதான். ஆனா இதையே உங்களுக்கு பிடிக்காதவங்க செஞ்சு இருந்தா என்ன மாதிரி எல்லாம் அவதூறு செஞ்சி இருப்பிங்க.

  பதிலளிநீக்கு