11 ஜூன், 2012

‘காதலி’ காவ்யா


லெட்டரை நீட்டியவன் ஜொள்ளை துடைத்துக்கொண்டே சொன்னான்.

“உடனே பதில் கொடுக்கணும்னு அவசியமில்லை காவ்யா. என் காதலை ஏத்துக்கிட்டேன்னா நாளைக்கு மஞ்சக்கலர் சுடிதார் போட்டுக்கிட்டு வா. புரிஞ்சுக்கறேன்”

மறுநாள் காவ்யா மஞ்சள் சுடிதார் போட்டிருந்தாள். ஆனால் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

இவன் இன்னொருவன்.

“காவ்யா ஐ லவ் யூ”

மையமாக நாணத்தோடு சிரித்தவாறே நகர்ந்தாள். ‘எகிறிக் குதித்தேன், வானம் இடித்தது’ என்று பாடிக்கொண்டே துள்ளிக்கொண்டு சென்றான். அடுத்தடுத்து இவனைப் பார்க்கும்போதெல்லாம் அதேமாதிரி சிரித்து வைக்கிறாள். ஆனால் காதலிக்கிறாளா என்பதை மட்டும் சொல்லித் தொலைக்க மாட்டேன் என்கிறாள்.

இது மற்றுமொருவனின் கதை.

“டேய் எனக்கு வண்டி ஓட்டச் சொல்லித் தர்றியாடா...”“சொல்லிக் கொடுக்கறேன். ஆனா நீ என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கணும்”

இதற்கும் அதே நாணச்சிரிப்பு.

இப்போதெல்லாம் காவ்யா ஹோண்டா ஆக்டிவாவில் அசுரவேகத்தில் பறக்கிறாள். வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுத்தவனோ, இவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பது தெரியாமல், கிருக்கல் அடித்துப்போய் ஃபாலோ செய்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு பெண்ணுக்கு அதிகபட்சம் எத்தனை காதல் கடிதம் வந்திருக்கும்? ஐந்து, பத்து, ஐம்பது.. ஒரு எண்ணிக்கைக்கு நூறு என்றுகூட வைத்துக் கொள்ளலாம். வயதுக்கு வந்த முதல் நாளிலிருந்து, தனது இருபத்தைந்தாவது பிறந்தநாள் வரை காவ்யாவுக்கு வந்த காதல் கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே நாலாயிரத்து எழுநூற்றி நாற்பத்தி ஐந்து. வாய்மொழியாக சொல்லப்பட்ட ‘ஐ லவ் யூ’க்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. சரியான தரவுகளோடு கூடிய ஆதாரங்கள் இல்லாததால் மட்டுமே கின்னஸ் சாதனை புத்தகத்துக்கு காவ்யாவின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

அவளுக்கு முதன்முதலாக காதல் கடிதம் கொடுத்தவன் அருணகிரி. விஜயகாந்த் ரசிகனான அவனது கடிதம் இவ்வாறு தொடங்கியது. ‘வானத்தைப் போல’ மனம் படைத்த ‘சின்னக் கவுண்டரான’ ‘ஹானஸ்ட் ராஜ்’ நான். உன் ‘ஊமை விழிகள்’ பேசும் காதல்மொழியால் ’சக்கரை தேவன்’ ஆனேன். ‘தர்ம தேவதை’யும் ‘நவக்கிரக நாயகி’யும் ஆன உன்னை...” – இப்படியே அச்சுபிச்சுவென ஏதோ எழுதித் தொலைத்திருந்தான். கடிதத்தைப் படித்ததுமே ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள். அந்த சிரிப்பை தனது காதலுக்கான பச்சைக்கொடியாக அவன் எடுத்துக் கொண்டான்.

கோணைமூஞ்சி அருணகிரியின் கடிதத்துக்கே எந்த மறுப்பையும் காவ்யா சொல்லவில்லை என்கிற தைரியத்தில் பள்ளியில் படித்த அத்தனை பேரும் அவளுக்கு இதே ரீதியில் கடிதம் கொடுக்கத் தொடங்கினார்கள். அவளைவிட வயது குறைந்த பயல்கள் கூட காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.


எந்தக் காதலையும் காவ்யா வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நேரடி மறுப்பையும் யாருக்கும் சொன்னதில்லை. நம் காதலர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. கடிதம் கொடுத்தால் குறைந்தபட்சம் செருப்படியோ, கன்னத்தில் அறையோ இவளிடம் கிடைப்பதில்லை.

அவள் கல்லூரிக்கு சென்றபோதும், பிற்பாடு அலுவலகத்துக்குப் போனபோதும் கூட இதே ‘ட்ரெண்ட்’ தொடர்ந்தது. அவளுடன் பழகும் ஒவ்வொரு ஆணுமே, தன்னை காதலிப்பதாக உணர்த்தும் வகையில் தன் இயல்பை வேண்டுமென்றே மாற்றிக் கொண்டாள். நூற்றுக்கணக்கானோரை தன்னை சின்சியராக காதலிக்க வைத்த காவ்யாவுக்கு ஏனோ ஒருவனை கூட திருப்பிக் காதலிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் வந்ததேயில்லை.

போனவாரம் காவ்யாவுக்கு திருமணம் நடந்தது. ஜாதகம், பெயர் ராசி என்று எல்லாப் பொருத்தமும் சோதித்து வீட்டில் பார்த்து வைத்த ‘அரேஞ்ஜ்டு மேரேஜ்’. இப்போது ஊரில் குறைந்தது ஆயிரம் காதலர்களாவது ‘காதல்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி போல ‘ங்கை... ங்கை...’ என்று தலையில் குத்திக்கொண்டே சேது மாதிரி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

7 கருத்துகள்:

 1. " காதலே நிம்மதி " திரைப்படம் வந்த சமயம் . .

  நண்பர் ஒருவர் பெண் பெயரில் அந்த திரைப்படத்தை பாராட்டி

  எழுதிய கடிதம் தினத்தந்தி விளம்பரத்தில் முகவரியுடன் வெளியானது . .

  அவ்வளவுதான் . . .

  நண்பரின் முகவரிக்கு தினமும் இருபது முப்பது காதல் கடிதங்கள்

  வர துவங்கின . .

  அதில் ஒருவர் இவ்வாறு குறிப்பிடிருந்தார் . .

  " சண்டே . . . பஸ்ஸ்டாண்டு வருகிறேன்

  எனக்கு பிடித்த மாம்பழ கலர் சுடிதாரில் காத்திருக்கவும் "


  பழசான நினைவுகளை கிளருகிறது

  உமது பதிவு . .

  நன்றி

  பதிலளிநீக்கு
 2. எனக்கென்னமோ கதை கடைசில இன்னும் ரெண்டு மூணு வரி மிச்சம் இருக்குமோன்னு தோணுது... :-)

  பதிலளிநீக்கு
 3. Attack, summa number of posting increase pannanum kirathukkaga Potta maathiri theriyuthu last 2 articles. You too lucky?

  பதிலளிநீக்கு
 4. இப்போது ஊரில் குறைந்தது ஆயிரம் காதலர்களாவது ‘காதல்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி போல ‘ங்கை... ங்கை...’ என்று தலையில் குத்திக்கொண்டே சேது மாதிரி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். - ஊரில் ஆயிரம், மேடவாக்கத்தில் "யுவா'வா ??

  பதிலளிநீக்கு
 5. நெறையா பொணுங்க அந்தா காவ்யா மாதிரிதான் இருப்பாங்க போல!

  பதிலளிநீக்கு
 6. உங்களின் எழுத்தில் மொக்கையின் தரம் கூடி கொண்டே வருகிறது.

  well written .

  I am jealous of your writing.

  பதிலளிநீக்கு