16 மே, 2012

கப்பார்சிங்


இந்திய மசாலா சினிமாவின் உச்சம் என்று ‘தபாங்’கை இந்திக்காரர்கள் சொல்கிறார்கள். பத்து நாட்களில் நூறு கோடி வசூலித்தது என்று காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார்கள். இந்தியாவில் என்ன, உலக மசாலாவுக்கே நாங்கதான் உச்சம் என்று இனி ஆந்திரவாலாக்கள் மார்தட்டிக் கொள்ளலாம். அதே ‘தபாங்’கின் ரீமேக் என்கிற பெயரில் இயக்குனர் ஹரிஷ் ஆடியிருக்கும் ஆட்டம், கப்பார்சிங் எனும் ஊழித்தாண்டவம்.

முதல்வார வசூல் மட்டுமே இருபத்தைந்து கோடியை அனாயசமாக தாண்டிவிடும் என்கிறார்கள். டோலிவுட்டின் முந்தைய எவர்க்ரீன் ரெக்கார்டுகளான தூக்குடு, மகாதீராவெல்லாம் காலியாம். ஆந்திராகாரர்களோடு இதே தொல்லை. ரச்சா, தம்மு, கப்பார் சிங் என்று அடுத்தடுத்து இரண்டு வாரத்துக்கு ஒரு ஓபனிங் ரெக்கார்ட் பிரேக்காவது அவர்களுக்கு சாத்தியமாகிறது. கோலிவுட்டில் எந்திரனின் ரெக்கார்டை உடைக்க இன்னும் நான்கைந்து வருஷமாவது ஆகும். பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது இண்டஸ்ட்ரி எவ்வளவு ஆரோக்கியமாகவும், நம்முடைய இண்டஸ்ட்ரி எவ்வளவு சோனியாகவும் இருக்கிறதென்று. கப்பார்சிங்கின் ஓபனிங் ரெக்கார்ட் தெலுங்குக்கு மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் கூட டாப் டென்னில் இடம்பிடிக்கப் போகிறது.

ரீமேக் என்றால் ஸ்க்ரிப்டை ’ஒஸ்தி’த்தனமாக அப்படியே ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென்பதில்லை என்பதில் இயக்குனர் தெளிவாக இருந்திருக்கிறார். ’தல’ ரசிகரான வெங்கட்பிரபு எப்படி ‘தல’யை அணுஅணுவாக ரசித்து மங்காத்தாவை செதுக்கினாரோ, அப்படியே ஹரிஷூம் பவர்ஸ்டார் பவன்கல்யாணை செதுக்கித் தள்ளியிருக்கிறார். காட்சிக்கு காட்சி மாஸ். ஒட்டுமொத்தமாக சூப்பர் பாஸ்ட்.

மிகச்சரியாக பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக பவன் நடித்த ‘குஷி’ வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட். அதற்கு முன்பு நடித்த அத்தனை படங்களும் கூட ஹிட்தான். தொல்லி பிரேமா சூப்பர் டூப்பர் ஹிட். யார் கண் பட்டதோ தெரியவில்லை. குஷிக்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாக பவன் எதைத் தொட்டாலும் விளங்காமலேயே போய்க் கொண்டிருந்தது. படுதோல்வி அல்லது கையை கடிக்காத சுமார் வெற்றி என்று தடுமாறிக்கொண்டே இருந்தார். நாற்பத்தி இரண்டாவது வயதில் அடித்திருக்கிறது பம்பர் ஹிட். இத்தனை ஆண்டுகளாய் பவன் பொறுமையாக இருந்ததோடு இல்லாமல், அவரது ரசிகர்களும் அவரோடு நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். கப்பார்சிங் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த பவர்ஸ்டாரின் ரசிகர் ஒருவர் தன் ட்விட்டர் தளத்தில் இவ்வாறாக குறிப்பிட்டார். “தலைவா. அடுத்த பதினோரு வருஷத்துக்கு நீ தொடர்ந்து ஃப்ளாப் கொடு. பரவாயில்லை. ஆனா பண்ணிரண்டாம் வருஷம் இதேமாதிரி இன்னொரு கப்பார் சிங் கொடு”

என்னதான் மெகாஸ்டாரின் தம்பியாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவத்தால் நிற்கவேண்டும் என்பதில் உறுதியானவர் பவர்ஸ்டார் பவன்கல்யாண். அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல. இயக்குனர், கதையாசிரியர், ஸ்டண்ட் இயக்குனர், நடன இயக்குனர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர். பவன் அளவுக்கு சின்சியாரிட்டி கொண்ட நடிகர்களை காண்பது அரிது என்பதாலேயே முன்னணி இயக்குனர்கள் அவரோடு பணியாற்ற எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஒருவகையில் டோலிவுட்டின் அஜித் என்றும் இவரை சொல்லலாம்.

தபாங் ரீமேக்குக்கு ஹரிஷ்சங்கரை இயக்குனராக பவன் தேர்ந்தெடுத்தது ஆச்சரியம். ஹரிஷ், பூரி ஜெகன்னாத்திடம் பணியாற்றியவர். தீவிரமான ரவிதேஜா ரசிகர். ரவிதேஜா-ஜோதிகா காம்பினேஷனில் 2006ல் அவர் இயக்கிய ‘ஷாக்’ பாக்ஸ் ஆபிஸ் டிஸாஸ்டர். அடுத்து சித்தார்த்தை நாயகனாக்கி எடுத்த ‘ஆட்டா’வுக்கு டாட்டா சொன்னார்கள் ரசிகர்கள். மீண்டும் ரவிதேஜாவிடமே தஞ்சமடைந்தார். போன ஆண்டு வெளியான ‘மிரப்பாக்காய்’ ரவிதேஜாவின் மாஸுக்காக ஓபனிங்கில் மிரட்டினாலும், படத்தில் சரக்கில்லை என்று விரைவாகவே புறம் தள்ளிவிட்டார்கள் ரசிகர்கள். குருநாதர் பூரிக்கும், குருநாதரின் குருநாதரான ராம்கோபால்வர்மாவுக்கும் மட்டும் ஹரிஷ் சாதிப்பார் என்று நம்பிக்கை இருந்தது (கடந்தாண்டு வெளியான ஆர்.ஜி.வி.யின் ‘தொங்கலா முத்தா’ திரைப்படத்தில் பூரி இணை இயக்குனராகவும், ஹரிஷ் துணை இயக்குனராகவும் கவுரவத்தை விட்டுக் கொடுத்து பணியாற்றினார்கள் என்பது சுவையான துணுக்குச் செய்தி).

பெரிய இயக்குனர்கள் நம்பும் இயக்குனர் என்பதாலேயோ என்னவோ, ஹரிஷ் மீது பாரத்தை போட்டுவிட்டு நடித்தார் பவன்கல்யாண். தன் அபிமான ஹீரோவான ரவிதேஜாவுக்கு எப்படி பார்த்து, பார்த்து ஹீரோயிஸ மாஸ் காட்சிகளை செதுக்குவாரோ, அதேமாதிரி பவனுக்கும் செதுக்க ஆரம்பித்தார் ஹரிஷ். தபாங்கின் ஒரிஜினல் கதை, லாஜிக் என்றெல்லாம் நிறைய இடித்தது. அதைப்பற்றி கவலை எதற்கு? ஒரு சூப்பர் ஹீரோவை கையில் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் சாத்தியமோ, அதையெல்லாம் முயற்சித்துவிடலாம் என்று ஸ்க்ரிப்டில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தார்.

தன்னைப்போலவே தெலுங்கில் அட்டர்ஃப்ளாப் ஆகி, ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட ஸ்ருதியை நாயகியாக ஒப்பந்தம் செய்தார். தபாங்கின் சோனாக்‌ஷி வனப்பு என்ன.. சோமாலியா பெண் மாதிரி வாடி வதங்கி, வற்றிப் போயிருக்கும் ஸ்ருதி எங்கே என்று விமர்சனம் கிளம்பியது. ஒரு கட்டத்தில் ஸ்ருதி படத்தில் இருந்து நீக்கப்படலாம் என்றுகூட பேசப்பட்டது. ஹரிஷ் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டார்.

இப்படியாக மாமாங்கமாக ஹிட்டே இல்லாத ஹீரோ, அட்டர் ஃப்ளாப் இயக்குனர், ராசியில்லாத ஹீரோயின் என்று கப்பார்சிங் பெரியதாக எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லாமல்தான் வெளியானது. முதல் காட்சியிலேயே தெரிந்துவிட்டது படம் பக்கா ஹிட். பவனுடைய ரேஞ்ச் பரபரவென்று ஒரேநாளில் எங்கோ உயர்ந்துவிட்டது. ஹரிஷூக்கு பத்துகோடி சம்பளம் தர தயாராக வரிசையில் நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தென்னிந்தியாவின் ஹாட்கேக் ஹீரோயின் ஆகிவிட்டார் ஸ்ருதி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இவரை அசைக்க ஆளில்லை. ஸ்ருதி தழுதழுத்துப் போய் ஹரிஷிடம் ட்விட்டரில் சொல்கிறார். “உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ஹரிஷ்”. ஹரிஷின் பதில், “நன்றியெல்லாம் எதற்கு.. நீ என்றுமே என்னுடைய பாக்கியலட்சுமிதான்” (படத்தில் ஸ்ருதியின் பெயர் பாக்கியலட்சுமி)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஹிட்டடிக்கும் அளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது? ஒன்றுமேயில்லை என்பதுதான் ஹைலைட் மேட்டர். படத்தின் எண்ட் கார்ட் போடும்வரை கதை எங்கே என்று பார்வையாளன் தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஆனால் பரபரப்பான திரைக்கதை, அதிரடி பஞ்ச் வசனங்கள், துள்ளல் பாடல்கள், நிமிடத்துக்கு நாலுமுறை வாய்விட்டு சிரிக்கவைக்கும் காட்சிகள் என்று ரசிகனை சீட்டில் கட்டாயப்படுத்தி கட்டிப்போடுகிறார்கள். காவல்நிலையத்தில் நடக்கும் ‘அந்தாக்‌ஷரி’ காட்சியைப் பார்க்கும் யாருக்காவது வயிறுவலிக்கவில்லை என்றால், அவரது மனநிலையை நாம் சந்தேகிக்கலாம். இந்தப் படத்தையே மீண்டும் ரீமேக் செய்து, தபாங்கின் அடுத்த பகுதியாக சல்மான் நடிக்கலாம் என்றெல்லாம் பாலிவுட் ஆட்களும் சிபாரிசு செய்யுமளவுக்கு ஒரிஜினலுக்கும், ரீமேக்கும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருந்தார் ஹரிஷ்.

படம் பார்த்த ராம்கோபால் வர்மா சொன்னாராம். “படம் நன்றாக இருந்தால் ஹிட். இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்தால் சூப்பர்ஹிட். ரொம்ப நன்றாக இருந்தால் ப்ளாக் பஸ்டர். அதையும் தாண்டி சொல்லவேண்டுமென்றால் இனி ‘கப்பார்சிங்’ என்று சொல்லிவிடலாம்

ராம்கோபால்வர்மாவே சொல்லிவிட்டார். நாமென்ன தனியாக சொல்வது?

16 கருத்துகள்:

 1. சூப்பர். படம் பரபரப்பா இருக்கா இல்லையாங்றத அப்புறம் பார்க்கலாம்.. விமர்சனம் செம செம செம்ம்ம்ம பரபரப்பு..

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் டூப்பர் ‘கப்பார்சிங்!
  விமர்சனமும்தான்.....!

  பதிலளிநீக்கு
 3. பிரமாதமான விமர்சனம் பாஸ்... அடி தூள்...

  பதிலளிநீக்கு
 4. பவர்ஃபுல் கம்பேக் பை பவர்ஸ்டார்...

  பதிலளிநீக்கு
 5. அவர்களது இண்டஸ்ட்ரி எவ்வளவு ஆரோக்கியமாகவும், நம்முடைய இண்டஸ்ட்ரி எவ்வளவு சோனியாகவும் இருக்கிறது. ஏன் இந்த கொழுப்பு...

  பதிலளிநீக்கு
 6. //பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது இண்டஸ்ட்ரி எவ்வளவு ஆரோக்கியமாகவும், நம்முடைய இண்டஸ்ட்ரி எவ்வளவு சோனியாகவும் இருக்கிறதென்று. //

  ஓஹோ......இதைத்தான் நீங்க ஆரோக்கியாம்னுசொல்லுவீங்களோ?

  அப்டி என்ன குறஞ்சு போச்சு தமிழ் சினிமா உருப்படாம போனதுல?
  இன்னும் சொல்லப்போனா எவ்வளவுக்கு எவ்வளவு சினிமா நாசமா போகுதோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்கள் உறுப்படுவாங்க.

  பதிலளிநீக்கு
 7. சிந்திப்பவன்9:01 முற்பகல், மே 17, 2012

  இதுவே பாலாஜி சக்திவேல்/
  மிஸ்கின்/பாண்டியன் போன்றோர் தமிழில் எடுத்திருந்தால்,
  இதே கை,இம்மாதிரி மசாலா படங்களை தமிழ் திரையுலகம் எத்தனை ஆண்டுகள் பொறுத்துக்கொள்ளவேண்டுமோ என மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கும்.

  அப்புறம் யுவா,பதிவுகளுக்கு மட்டும்தான் பின்னூட்டமிடும் வசதியா?சுவரொட்டிகளுக்கு கிடையாதா?(ஆயிரம் கைகள்...)அருமையான poster for an imposter..உங்க கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

  பாவம் சந்தன கடத்தல் வீரப்பன்! 1980 களில் அவன் மட்டும் கழக உறுப்பினராக சேர்ந்திருந்தால்...இந்நேரம் அவன்தான் நம் மத்திய வனத்துறை அமைச்சர்.
  நீரும் "வீரமே வருக!சத்தியமே வருக" என வலைத்தளம் முழுக்க
  poster ஒட்டியிருப்பீர்!

  பதிலளிநீக்கு
 8. இந்த மாதிரியான படங்கள் பல நல்ல கதையம்சம் கொண்ட, எளிய மனிதர்களை நாயகர்களாக கொண்ட கதைகளை மறைமுகமாக தடை செய்கிறது. படத்தை ஆஹோ! ஓஹோ! என எழுதுவது எல்லாம், மகா எரிச்சல்.

  பதிலளிநீக்கு
 9. கோலிவூட் "நாஸ்தி" பண்ணுண தபாங்க் மானத்தை டோலிவூட் காப்பாத்திருச்சுன்னு சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 10. I wonder how you are comparing such a multi-talented Pawan with Ajit who cannot even speak Tamil properly!!!

  பதிலளிநீக்கு
 11. யுவா, மூச்சுக்கு மூச்சு பவன் கல்யாணை பவர் ஸ்டார்னு சொல்றீங்களே... ஒரிஜினல் பவர்ஸ்டார் சீனிவாசன் கோவிச்சுக்கப் போறாரு..!

  பதிலளிநீக்கு
 12. பாஸ்! அடி பின்னிஎடுதிட்டீங்க, அமர்க்களமான விமரிசனம், உங்க விமர்சனத்திர்க்காகவே படம் பார்க்க போறேன்

  பதிலளிநீக்கு
 13. எழுத்துநடை காட்டாற்று வெள்ளம் போல் இருக்கிறது.
  ~~~~~~~~~~~~~~~~~
  சல்மான் இடத்தில் வேறுயாரையும் என்னால் வைத்துபார்க்கமுடியவில்லை பாஸ்!

  பதிலளிநீக்கு
 14. @ravi

  யெஸ் பாஸ் ... டோலிவுட் T.R ஐ போயி அஜீத்துடன் கம்பேர் பண்ணுவதா?நானும் வன்மையாக கண்டிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 15. dont blame yuva , wat he feel he wrote her, this one individual review, if u see shruthi wat should i say ( this read tamil pronunciation " kaammam thondrath azhagu")

  பதிலளிநீக்கு