May 12, 2012

ரீங்காரம்


நேற்று இரவு சரியாக தூக்கம் வரவில்லை. ஆனாலும் தூங்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். கண்களை மூட கடுப்பாக இருந்தது. இருப்பினும் மூடினேன். ‘ங்கொய்..’ என்று ரீங்காரம் கேட்டது. தொலைக்காட்சியை அணைத்தேனா என்று சந்தேகம் வந்தது. எழுந்து சென்று பார்த்தேன். அணைந்திருந்தது. ‘ங்கொய்..’ இப்போது கேட்கவில்லை. படுக்கையில் சாய்ந்தேன். கண்களை மூட முயற்சித்தேன். மீண்டும் அதே ‘ங்கொய்..’. கண்களை இமைகளால் மூட முடிவதைப் போல, காதுகளை மடல்களால் மூட முடிந்தால் எத்தனை சுளுவாக இருக்கும். இயற்கைக்கு படைப்பாற்றல் போதவில்லை. கடவுள் ஒரு எழுத்தாளனாக இருந்திருக்கும் பட்சத்தில் காதை மட்டுமல்ல, மூக்கை மூடவும் ஏதேனும் வசதி படைத்திருப்பான்.

‘ங்கொய்..’ சத்தத்தை கூர்ந்து கவனித்தேன். என்னுடைய முப்பதாண்டுகால வாழ்வியல் தரிசன கவனத்தை மொத்தமாய் குவித்ததின் மூலமாக அது என்னவென்று உணரமுடிந்தது. கொசு. கொசுவின் ரீங்காரம். கொசுவுக்கு வாய் உண்டா? வாய் இருப்பின் ஏன் இப்படி சத்தமிடுகிறது? துணை தேடுகிறதா? பசிக்கிறதா? தாகமெடுக்கிறதா? அல்லது சக கொசு ஏதேனும் அதை பாலியல் வன்முறை செய்ததா? இவ்வாறாக ஓர் உயிரினத்துக்கு சக உயிரினத்தாலோ அல்லது தன்னாலேயோ ஏற்படும் தொல்லைகள் குறைந்தது ஆயிரத்தை பட்டியலிட்டேன்.

அந்த கொசுவை என் கண்களால் பார்க்க முற்பட்டு தலையை திருப்பினேன். சத்தம் நின்றது. கொசு பறந்தது. இருட்டில் முழுமையாக அதனுடைய உடலுருவை காண இயலவில்லை. போர்வையை விலக்கினேன். எழுந்தேன். அறையிலிருந்த அறுபது வாட்ஸ் சக்திகொண்ட குண்டுவிளக்கினை போட முற்பட்டு, சுவரில் சுவிட்ச் தேடினேன். தடவினேன். போட்டேன். மஞ்சள் வெளிச்சம் அறையில் விரவியது. மெல்லிய ஊதாநிற சுண்ணாம்புப் பூச்சு சுவர்களில் வெளிச்சம் பட, மஞ்சளும் ஊதாவும் இணைந்து உருவாக்கிய புதிய நிறம் மனதை கொள்ளை கொண்டது.

ஒரு படைப்பாளியின் பிரச்சினையே இதுதான். எதை நோக்கி நகர்ந்தாலும், அவனது நகரல் குறிப்பான இலக்கினை நோக்கிய பயணத்தினூடே நேர்க்கோட்டில் பயணிக்காமல், பரவலாகி பக்கத்து இலக்குகளையும் கவனித்து, குறிபார்க்கப்பட்ட இலக்கினை தேடி சேர்வது தாமதமாகும். அவ்வாறாகவே ரீங்கரித்த கொசுவினை காணும் என்னுடைய நோக்கம் அறையில் பரவிய ஒளி, சுவரில் பூசப்பட்ட வண்ணம் என்று கல்லெறிந்து நொறுங்கிய கண்ணாடியாய் சிதறியது. எங்கே கொசு?

பத்துக்கு பதினைந்து அளவில் கட்டப்பட்ட அறை முழுக்க துல்லியமாய் அங்குலம் விடாமல் தேடினேன். ரீங்கரிப்பு சங்கீதம் காதுகளில் விழுகிறதா என்று உன்னிப்பாய் அவதானித்தேன். மின்விசிறி சுழலும் சத்தம் மட்டுமே கேட்கிறது. தூரத்தில் எங்கோ நாய் அழுகிறது. அதற்கு பசியாக இருக்கலாம். அல்லது துணை தேடலாம். இல்லையேல் இரவுக்காட்சி முடித்துவந்த யாரையோ பார்த்து குலைத்திருக்கலாம். குலைக்கப்பட்டவன் குரோதத்தில் கல்லெறிந்து காயப்படுத்தியிருக்கலாம். வலி தாங்காமல் அந்த நாய் அழுதிருக்கலாம். மின்விசிறியை அணைத்தேன்.

கண்டேன் கொசுவை. ஒருவழியாய். ஒன்றல்ல, இரண்டு. இப்போது என் குழப்பம் அதிகரித்தது. என் காதில் கத்தியது எந்த கொசு. இரண்டு கொசுவும் அளவில் ஒரே மாதிரியாக இருக்கிறது. இரண்டுக்குமே இறக்கைகள் இருக்கிறது. கண்களும், காதுகளும், மூக்கும், வாயும், உதடுகளும், பற்களும் இருக்கிறதா என்று என்னுடைய வெறும் கண்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் உயிர் இருக்கிறது. ஓர் உயிரினத்துக்கு முக்கியமானது உயிர். நான் பார்த்த இரண்டு கொசுவுக்கும் உயிர் இருந்தது.

மின்விசிறியை அணைத்ததால் அந்த கொசுக்களால் இயல்பாக பறக்க முடிந்தது. கொசுக்கள் பறவைகள் அல்ல என்றபோதிலும் அவற்றால் பறக்க முடிவது படைப்பாற்றலுக்கே உரிய தனித்துவம். இந்த இரு கொசுக்களும் காதலர்களாக இருக்கலாம். கணவன் மனைவியாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம். எதிரிகளாக இருக்கலாம். ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும்.. இல்லையேல் இரண்டுமே ஆணாகவும்.. இரண்டுமே பெண்ணாகவும் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். நிகழ்கால நிகழ்தகவு இதைதான் கற்பிக்கிறது.

இந்த இரண்டு கொசுக்களில் ஏதோ ஒரு கொசு என் காதில் சற்றுமுன் ரீங்கரித்தது. அல்லது இரண்டுமே தலா ஒரு காதினை வாடகைக்கு பிடித்து ரீங்கரித்திருக்கலாம். அந்த ரீங்கார மொழியின் மூலம் இக்கொசுக்கள் என்னிடம் சொல்ல முயல்வது என்ன?

நான் கொசு. நீ மனிதன். உன்னுடைய ஒருநாள் உறக்கத்துக்கு எங்கள் உயிரை கொல்லாதே என்றா? அல்லது அவை என்னிடம் அவற்றின் இருப்பை வெளிப்படுத்தி நாங்களும் உயிர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று சொல்ல முயற்சித்தனவா? குறிப்பாக இதையெல்லாம் சொல்ல அவை என்னை தேர்ந்தெடுத்தது எதனால்? படைப்பாளி என்பதால் எனக்கு கொசுக்களின் மொழி புரியலாம் என்று அவை நினைத்திருக்கலாம்.

உண்மையை சொல்லப்போனால் சில நேரங்களில் என்னுடைய மொழியே எனக்கு சமயங்களில் புரிவதில்லை. அவற்றை வாசித்து புரிந்துகொள்ளும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதாலேயே மட்டுமே இன்னமும் நான் எழுத்தாளனாக எழுத முடிகிறது.

நடு நிசி தாண்டி நாலு மணி நேரம் ஆகிவிட்டது. மனம் சுறுசுறுப்பாக இயங்கினாலும், கண்கள் ஓய்வை வேண்டியது. குண்டு விளக்கை அணைத்தேன். மின்விசிறியை சுழல செய்தேன். படுக்கையில் விழுந்தேன். ரீங்காரம் கேட்காதா என்று ஏங்கியது என் காதுகள். அந்த கொசுக்கள் என்ன நினைத்தனவோ, அதற்குப் பிறகு என்னை தொல்லைப்படுத்தவேயில்லை.

நாளை காலை என்னுடைய இணையத்தளத்தில் நான் படைக்க வேண்டிய இலக்கியம் ஒருவாறாக இவ்வாறு தயாராகிவிட்டது. எப்படியும் ஒரு ஐநூறு வார்த்தைகள் தேத்திவிடலாம் என்கிற நினைப்பே எனக்கு நிம்மதி தந்து துயில ஆரம்பித்தேன்.

(Thanks : Inspiration to achieve this ilakkiyam from முறையீடு)

20 comments:

 1. unmaiyai wilakkum kathai...... nanraaga ullathu

  ReplyDelete
 2. ஒரு படைப்புக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ...
  நன்று..

  ReplyDelete
 3. உங்களின் சிந்தா நதி நன்றாக உள்ளது

  ReplyDelete
 4. உங்களின் சிந்தா நதி நன்றாக உள்ளது

  ReplyDelete
 5. நான் படைப்பாளியோ,எழுத்தாளனோ அல்ல.ஆனால் எனக்கும்
  நேற்று ரீங்காரம் கேட்டது.பை தி வே தீவிர இலக்கியவாதி
  ஆகும் முயற்சியின் முதல் படியா இது?

  ReplyDelete
 6. சிந்திப்பவன்10:23 PM, May 12, 2012

  "முறையீடு"="Titanic";
  "ரீங்காரம்"="ஆயிரத்தில் ஒருவன்".(MGR நடித்தது)

  இரண்டிலும் கப்பல் வருகிறது என்பதே ஒரே ஒற்றுமை.

  ReplyDelete
 7. ஒரு சின்ன விஷயத்தை வைத்துகொண்டு இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா?குறிப்பாக-'நிகழ்கால நிகழ்தகவு'. இதுக்கெல்லாம் காரணம் என் தலைவனிடம் நீங்கள் குடித்த ஞானப்பால்தான் .

  ReplyDelete
 8. // கடவுள் ஒரு எழுத்தாளனாக இருந்திருக்கும் பட்சத்தில் காதை மட்டுமல்ல, மூக்கை மூடவும் ஏதேனும் வசதி படைத்திருப்பான். //

  இதென்ன உள்குத்து...

  ReplyDelete
 9. சே..! ஒரு படைப்பாளியா இலக்கியவாதியா எழுத்தாளரா இருக்குறது எவ்வளவு கஷ்டமான விஷயம் னு இப்போ புரியுது பாஸ் ..
  இவ்வோ கஷ்டப்பட்டு இப்படி ஒரு இலக்கியத்த நீங்க படைத்து எங்களுக்கு அளித்ததுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி .

  அப்புறம் வாழ்வியல் தரிசனம் , வாழ்வியல் ஆதாரம் னு சொல்றீங்களே , இயல் அப்படீனா ஏதாவது ஒன்றைப் பற்றிய படிப்பு ,
  சமூகம் + இயல் = சமூகவியல் இந்த மாதிரி.

  வாழ்வியல் ஆதாரம் அல்லது வாழ்வியல் தரிசனம் என்பது சரியான பதம் அன்று. வாழ்க்கை தரிசனம்தான் சரி.

  ReplyDelete
 10. Now you are Ilakiyavathi (viyathi?) like JM & Charu

  ReplyDelete
 11. அதை சிலர் நிராகரிப்பதன் மூலம், இத்தகைய இயைமையை இகழ்ந்திடும் பறிப்பு பெட்ட்ரவராகியும் விடுகிறார். கரித்தேர்செர்ப்பு என்றும், விருத்தக்கியைபு எனவும் அறியப்படும் விளுதநிக்கொடாவியினால் அறியப்படுவதேதனில் "எவரும் ஈயந்தும் பணிந்தும் பலன் பெரும் சாய்ந்து மடல் கொணர்ந்து பார்" என்று திருகூடல் கவிந்த மலர் என்ற நூலில் பரிந்தாய்ந்திருக்கிறார் விருத்தச்சனார்.

  ReplyDelete
 12. என்ன எழுதினாலும் லைக் பண்ண ஒரு கூட்டம் இருக்கு என்கிற தகிரியம்!!!ம்ம்...

  ReplyDelete
 13. உங்கள் பதிவுகளில் இது ஒரு மைல்கல்.

  ReplyDelete
 14. முதல்வன் இறுதி டயலாக் தான்!

  ReplyDelete
 15. Narayanaa.. kosu thollai thanga mudiyala.. ;) :)

  Vaazhga ungalul reengaaramidum padaippaali/elakiyavaathi!!

  ReplyDelete
 16. மக்களே .. இவரு ஜெயமோகனை கலாய்ச்சிருக்காராம் .. வேற ஒண்ணும் இல்ல..

  ReplyDelete
 17. //சுவரில் சுவிட்ச் தேடினேன். தடவினேன். போட்டேன். மஞ்சள் வெளிச்சம் அறையில் விரவியது. மெல்லிய ஊதாநிற சுண்ணாம்புப் பூச்சு சுவர்களில் வெளிச்சம் பட, மஞ்சளும் ஊதாவும் இணைந்து//

  நுண் இலக்கியம் கண்டு ரசிச்சேன். :-)))

  ReplyDelete