31 மே, 2012

பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை

அனேகமாக +2 படிக்கும்போது என்று நினைக்கிறேன். தினத்தந்தியில் அந்த விளம்பரத்தைக் கண்டேன். “கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக் கற்பழிக்கும் கதை!” என்று கேப்ஷன் போட்டு, ஆனந்த் தியேட்டரில் வெளியான ஓர் ஆங்கிலப் படத்தின் விளம்பரம் கால்பக்க அளவுக்கு வந்திருந்தது. கான்செப்டே புதுசாக இருக்கிறதே என்று ‘ஏ’வலோடு, ஸ்கூல் கட்டடித்துவிட்டு நண்பர்களோடு ஆனந்த் தியேட்டருக்கு படையெடுத்தோம். படத்தின் பெயர் மறந்துவிட்டது. பெயரா முக்கியம்?

ம்ஹூம்.

ஒன்று. கட்டழகுக் கன்னி என்று விளம்பர வாசகத்தை எழுதிய எழுத்தாளர் நெஞ்சறிந்து பொய் சொல்லியிருந்தார். தினத்தந்தியில் ‘இளம் அழகி’ என்று செய்தியில் குறிப்பிடப்படுபவர், போட்டோவில் பேரன் பேத்தி எடுத்த கிழவியாக இருப்பதைப் போன்ற ‘ஐரனி’ தான் குறிப்பிட்ட அந்த திரைப்படத்திலும்.

இரண்டு. ஃபாரினிலும் கூட ரேப் சீனை இலைமறை காய்மறையாக – அதாவது இளநீர் வெட்டுவது, மானை புலி வேட்டையாடுவது மாதிரி குறியீடுகளால் உணர்த்துவது – எடுக்கும் பழக்கம் இருக்கிறது போல. ‘பிட்டு’ எதிர்ப்பார்த்து போனவர்கள் பிட்டுக்கு மண் சுமந்து முதுகில் சாட்டையடி வாங்கிய சிவபெருமான் ரேஞ்சுக்கு புண்பட்டு போனோம்.

ஆனாலும், அந்த விளம்பர வாசகம் மட்டும் இத்தனை வருடங்கள் கழித்தும் நினைவடுக்குகளில் இருந்து தொலையாமல் வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.

நேற்று ஏதோ ஒரு சேனலில் யதேச்சையாக ஒரு மொக்கைப்படத்தைக் காண நேர்ந்தது. லேசான ‘கில்மா’ காட்சிகள் இருந்ததால், சுவாரஸ்யத்தோடு முழுப்படத்தையும் காண அமர்ந்தேன்.

என்ன ஆச்சரியம்..? ‘கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக் கற்பழிக்கும் கதை!’ தான் ஒன்லைனர். படத்தின் பெயர் ‘பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை. படுமோசமான மேக்கிங். அதெல்லாம் பிரச்சினையில்லை. கண்டெண்ட் ஈஸ் த கிங்.

நான்கு கயவர்கள் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகவே எல்லா கெட்ட காரியத்தையும் செய்பவர்கள். திருச்சிக்கு செல்லும்போது ஒரு ஓட்டலில் ‘அந்தமாதிரி’ ஃபிகருக்காக வெயிட் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே ஓட்டலின் அடுத்த அறையில் ஒரு கம்பெனியின் இண்டர்வ்யூ நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த இண்டர்வ்யூக்கு வரும் ஒரு ஃபிகர் தவறுதலாக இவர்களது அறைக்குள் நுழைந்துவிட, கடும்போதையில் இருக்கும் நால்வரும் சேர்ந்து...

அடுத்த காட்சியே ஒரு ட்விஸ்ட். நால்வரில் ஒருவனுக்கு திடீர் திருமணம். மணப்பெண்ணின் முகத்தைப் பார்க்காமலேயே தாலி கட்டிவிடுகிறான். முதலிரவில்தான் தெரிகிறது. தான் தாலி கட்டிய பெண், அந்த திருச்சி ஓட்டலில் சின்னாபின்னப் படுத்தப்பட்டவள். வாழ்க்கையே நொந்து கொத்துக்கறி ஆகிறான். போட்டுத் தள்ளவும் முடியாது. புதியதாக மணமான பெண் இறந்துவிட்டால், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வந்து விசாரணை நடத்துவார்கள். வெளியே சொல்லவும் முடியாது. ஏனெனில் கற்பழிப்புக் குற்றம். கவுரவமான குடும்பம். இருதலை கொல்லியாக இல்லாமல் பலதலை கொல்லியாக தினம் தினம் மனதளவில் செத்து செத்து விளையாடுகிறான். நெருங்கிய நண்பர்கள் மற்ற மூவருக்கும் இவளை அறிமுகப்படுத்தவும் முடியாது. அவமானம்.

இப்படியாக நாயகனின் மனக்கொந்தளிப்புகளும், அவனுக்கும் அவனது மனைவிக்குமான கேட் & மவுஸ் விளையாட்டும்தான் படத்தின் பிற்பாதி. நாயகனாக நடித்திருப்பவர் எல்.கே.ஜி. பையன் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் நடித்திருப்பதைப் போன்ற பிரமாதமான ரியாக்‌ஷன்கள் தருகிறார். பான்பராக்கை வாயில் போட்டு குதப்பி, தலையில் துப்பிவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு ஹேர்ஸ்டைலில் கருணாஸ் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அவரே பாடி, ஆடியிருக்கும் ஒரு குத்துப்பாட்டு ஓக்கே. நண்பர்கள் எல்லாம் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் எனும்போது நாற்பதை கடந்த தொப்பை பார்ட்டிகளை நடிக்கைவைக்கும் கலாச்சாரம் என்றுதான் நம்மூரில் ஒழியுமோ. டிவியில் லொள்ளுசபா மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒரு விக்கு மண்டையரும் நான்கு இளைஞர்களில் ஒருவர். ஒரே ஒருவர் மட்டும் ஓரளவுக்கு இளைஞர் மாதிரியிருக்கிறார்.

இந்தப் படத்தையே உருப்படியான இயக்குனர் ஒருவர், கொஞ்சம் சுமாரான பட்ஜெட்டில் மீண்டும் ரீமேக் செய்தால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தரமுடியும். முதல் பாதி நகைச்சுவை, இரண்டாம் பாதி க்ரைம் ட்விஸ்ட்டுகள் என்று நம்மூரின் அச்சு அசல் க்ரைம் ஸ்டோரி ஃபார்முலா. எந்த காலத்துக்கும் ஒர்க் அவுட் ஆகக்கூடிய சப்ஜெக்ட். செண்டிமெண்டுகளை அசைத்துப் பார்க்கும் துணிச்சல் என்று மொக்கைப்படமாக இருந்தாலும் பாராட்டக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கிறது.

படத்தின் பெரிய ஆறுதல் ‘கதை’ என்றால்.. ஆச்சரியம் ஹீரோயின். “சென்னைப் பட்டினம், எல்லாம் கட்டணம்.. கையை நீட்டினா காசுமழை கொட்டணும்” என்றொரு பாடலை பார்த்திருக்கிறீர்களா? ‘அள்ளித் தந்த வானம்’ படத்தில் அப்பாடலுக்கு பிரபுதேவாவோடு ஆடும் குட்டிப்பெண் கல்யாணியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லையென்றால் ‘ஜெயம்’ படத்தில் சதாவின் தங்கையாக நடித்த பாப்பையாவது நினைவிருக்கும். அந்த பாப்பாதான் இப்போ பீப்பாயாக மாறி, ஐமீன் பேபி கல்யாணி குமாரி பூர்ணிதாவாக மாறி கவர்ச்சிக் கடலில் குதித்திருக்கிறார். காட்டன் புடவை அவருக்கு மிக பாந்தமாக இருக்கிறது. குறிப்பாக மஞ்சள் புடவை. பாடல் காட்சிகள் சிலவற்றில் ‘பேட்’ வைத்திருப்பது தெரிகிறது. அதற்கான நிர்ப்பந்தமும் புரிகிறது. மாநிறம், களையான முகம். ஹோம்லியான பாடிலாங்குவேஜ். விடிகாலையில் குளித்து, ஈரத்தலையில் டவல் சுற்றி, பூசை முடித்து, தீபாரதனை தட்டோடு ஒரு காட்சியில் எதிர்படும் பூர்ணிதாவை பார்க்கும்போது இவரையே கல்யாணம் கட்டிக்கலாமா என்கிற எண்ணம் நம்மைப் போன்ற ஒவ்வொரு இளைஞருக்கும் தோன்றும். அவ்வளவு தெய்வீகக்களை முகத்தில். கொஞ்சம் குள்ளம் என்பதுதான் பிரச்சினை.

இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. டிவிடியாவது கிடைக்குமாவென்றும் தெரியவில்லை. எப்போதாவது சன் குழும சேனல்களில் காணும் பாக்கியம் கிடைத்தால் நீங்களும் என்னைப்போல பரமபிதாவால் ஆசிர்வதிக்கப்பட்டவரே.

28 மே, 2012

அழவைத்த இறுதிக்காட்சி


தியேட்டரை விட்டு வெளியேறும்போது உணர்ச்சிகரமாக மூக்கை சிந்திக்கொண்டே, கசியும் கண்ணீரை மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக்கொண்டோ பார்வையாளர்கள் வெளியேறுவது அத்திபூத்தாற்போல சினிமாவில் நடக்கும் அபூர்வ நிகழ்வு. அதிசயங்கள் ஆச்சர்யமானவை. ஆனாலும் அவற்றுக்கு பஞ்சமேதுமில்லை.

1997ல்மென் இன் ப்ளாக்வெளிவந்தபோது பெரிய வரவேற்பை பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முன்பாக அது காமிக்ஸாக வந்து சக்கைப்போடு போட்ட ஃபேண்டஸி கதை. ரோட்டன் டொமாட்டோஸ் போன்ற கறார் விமர்சனத் தளங்கள் தூக்கிவைத்து கொண்டாடியதில் கொட்டோ கொட்டுவென்று வசூல் மழை பேய்மழையாய் கொட்டி தீர்த்தது. இண்டிபெண்டன்ஸ் டே திரைப்படம் வெளியானபோது பலரையும் கவர்ந்த வில் ஸ்மித், மென் இன் ப்ளாக் மூலம் ஓவர்நைட் சூப்பர் ஸ்டார் ஆனார்.

கதை ரொம்ப சிம்பிள். மென் இன் ப்ளாக் என்பது அமெரிக்க அரசின் ஓர் ரகசிய அமைப்பு. பூமியில் இருக்கும் வேற்றுக்கிரகவாசிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு இவ்வமைப்புக்கு இருக்கிறது. இவ்வமைப்பில் பணியாற்றும் ஏஜெண்ட் ஜே (வில் ஸ்மித்), ஏஜெண்ட் கே (டாம்மி லீ ஜோன்ஸ்) இவர்களது சாகஸங்களும், வினோத அனுபவங்களும் தான் கதை. ஏஜெண்ட் ஜே லொடலொடவென வம்படியாக பேசிக்கொண்டேயிருக்கும் பாத்திரம். ஏஜெண்ட் கே அவருக்கு நேரெதிர். வயது தந்த அனுபவங்களின் காரணமாக வேலையில் சின்சியராக, கறாராக, உம்மணாம் மூஞ்சியாக இருப்பவர். நடிகர்கள், கதை, திரைக்கதை மற்ற கந்தாயங்களைவிட கிராஃபிக்ஸ் துல்லியமாக இருப்பது இப்படவரிசைக்கு மிக அவசியம்.

முதல் படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பையடுத்து 2002ல் இரண்டாம் பகுதி வெளிவந்தது. வசூலில் சோடை போகாவிட்டாலும், விமர்சகர்கள் டவுசரை கயட்டி விட்டார்கள். முந்தைய பாகத்தை கொண்டாடிய ரோட்டன் டொமாட்டோஸ் காறித் துப்பிவிட்டது.  இதனால் எல்லாம் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனான வில்ஸ்மித்துக்கு மட்டும் இந்த கான்செப்டில் நல்ல நம்பிக்கை இருந்தது. மூன்றாவது பாகத்தை எடுத்து, பழைய வரவேற்பை பெற்றே தீரவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

போனவாரம் மூன்றாம் பாகம் வெளிவந்துவிட்டது. 1969ல் ஏஜெண்ட் கே, கையை வெட்டி, கைது செய்து நிலவில் சிறைவைத்திருக்கும் போரிஸ் என்கிற கிரிமினல் முப்பதாண்டுகளுக்கும் மேலான கடுஞ்சிறையில் இருந்து தப்பிக்கிறான். தப்புவதோடு இல்லாமல், தான் கைதான 1969க்கு மீண்டும் கடந்தகாலத்தில் பயணித்து, தனது கையை வெட்டுவதற்கு முன்பாகவே ஏஜெண்ட் கே-யை போட்டுத் தள்ள திட்டமிடுகிறான். விஷயத்தை கேள்விப்பட்டு தானும் அதே காலத்துக்குப் பயணித்து ஜே-வை, கே காப்பாற்றுவதுதான் கதை. ஃபேண்டஸிக்கே காதுகுத்தும் மெகா ஃபேண்டஸி. நிலாவுக்கு அப்போலோ விண்கலத்தில் நீல்ஆர்ம்ஸ்ட்ராங் கும்பல் பயணிக்கும் தேதியில் கதை நடக்கிறது. அந்த குழு பயணிக்கும் விண்கப்பலில் ஒரு இன்ஸ்ட்ரூமெண்டை செருகி ஜே-வும், கே-வும் உலகை காப்பாற்றுகிறார்கள். இதன் மூலமாக வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு படையெடுப்பதை தடுக்கும் ஒரு சேஃப்டி ஷீல்டை (கோல்கேட் நம் பற்களை பாதுகாக்க ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு வளையம் மாதிரி) நிறுவுகிறார்கள். இதைத் தடுத்து, கே-வை போட்டுத் தள்ள நினைக்கும் போரிஸையும் போட்டுத் தாக்குகிறார்கள். கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் சிறு கரெக்‌ஷன் செய்துவிட்டு வெற்றிகரமாக நிகழ்காலத்துக்கு திரும்புகிறார் ஜே. டென்ஷனான க்ளைமேக்ஸ். உலகை காப்பதை மட்டுமே தொழிலாக கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் தியாகம். கடைசியாக ‘நாம ஜெயிச்சிட்டோம் என்று ஆனந்தக் கூத்தாடும் அதே வழக்கமான ஹாலிவுட் க்ளைமேக்ஸ். கிட்டத்தட்ட டிபிக்கல் ஹாலிவுட் படமாக மாறிவிட்ட இதை க்ளைமேக்ஸுக்கு பிந்தைய ஒரு சிறிய ட்விஸ்ட் க்ளைமேக்ஸால் ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை மாற்றியமைத்திருக்கிறார்கள். அந்த ஒன்றரை நிமிட காட்சியால் மூன்றாவது பாகம் மட்டுமின்றி, மென் இன் ப்ளாக் சீரியஸுக்கே பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது. காமெடி, ஃபேண்டஸி, காதுகுத்து காட்சிகள் என்று ஜூகல்பந்தியாக கும்மியடிக்கும் மென் இன் ப்ளாக்குக்கு புதுவண்ணத்தை வாரியிறைத்திருக்கிறது இந்த செண்டிமெண்ட் காட்சி. ஜே-வுக்கும், கே-வுக்கும் இடையிலிருக்கும் உறவு வெறுமனே பணி சார்ந்ததில்லை என்கிற ரகசியத்தை போட்டுடைக்கிறது. “உன் அப்பா ஒரு ஹீரோன்னு மட்டும் நினைவு வெச்சிக்க என்கிற வசனம் யாரைத்தான் சிலிர்க்க வைக்காது. திரையில் பாருங்கள் நீங்களும் நிச்சயம் சிலிர்ப்பீர்கள். நம்மூரில் சேரன் எடுத்த ‘தவமாய் தவமிருந்து ஏற்படுத்திய உணர்வுகளை வெறும் ஒன்றரை நிமிடங்களில் பன்மடங்காய் பெருக்கிக் காட்டுகிறது இப்படம்.

மூன்றாவது பாகம் முப்பரிமாணத்தில் வந்திருப்பதும் பெரிய ப்ளஸ். வில்ஸ்மித் 1969க்குப் பயணிக்கும் காட்சியை விஷூவல் ட்ரீட் என்றெல்லாம் வெறுமனே பாராட்டிவிட முடியாது. இக்காட்சியை ஸ்க்ரிப்ட் ரைட்டர் எப்படி எழுதியிருப்பார் என்று கிராபிக்ஸ் செய்துகூட கற்பனை செய்துவிடமுடியவில்லை. ‘ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுத்திருக்கிறோம் என்று நம்மூரில் யாராவது சொன்னால், அதை ‘ஜோக்காகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் 1992ல் வெளியான ‘ஜட்ஜ்மெண்ட் டே தரத்துக்கு கூட நாம் தொழில்நுட்பத்திலோ, கதை சொல்லும் உத்தியிலோ வளரவில்லை என்பதுதான் யதார்த்தம்.

“நம்மூருக்கு இதெல்லாம் தேவையா, நம் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம்பிடித்துக் காட்டவே எமக்கு தாவூ தீருகிறதே? என்று நம் படைப்பாளிகள் கேட்கலாம். ஆனால் எம்.ஐபி.-3 போன்ற பிரும்மாண்ட ஃபேண்டஸி திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகும் அதே நாளில், தமிழ்நாட்டின் குக்கிராமமான கிடாரம் கொண்டானைச் சேர்ந்த முருகேசனும் க்யூப் ப்ரொஜக்‌ஷனில், டி.டி.எஸ். ஒலியமைப்பில் தன் தாய்மொழியான தமிழிலேயே பார்த்துவிடுகிறான் என்கிற சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘எந்திரன் மாதிரி முயற்சிகளை அவன் வரவேற்கிறான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சினிமா நம்மூரில் சர்வநிச்சயமாக வெறும் கலை மட்டும் அல்ல. தயாரிப்பவர்களுக்கு தொழில். பார்வையாளனுக்கு பொழுதுபோக்கு. இதனைப் புரிந்துகொண்டு தமது சிந்தனைத் தளத்தை (ஹாலிவுட்டையோ, கொரியன் படங்களையோ பிட் அடிக்காமல்) விரிவாக்கிக் கொள்வதே நம்மூர் படைப்பாளிகளை வரலாற்றில் இடம்பெற வைக்கும்.

இரண்டாம் பாகத்துக்கு ஏற்பட்ட களங்கத்தை மூன்றாம் பாகத்தில் போக்கிவிட்ட திருப்தி வில்ஸ்மித் க்ரூப்புக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. ரோட்டன் டொமாட்டோஸும் இரண்டாம் பாகம் அளவுக்கு மோசமில்லை, முதல் பாகம் அளவுக்கு சூப்பருமில்லை என்று ரெண்டுங்கெட்டான்தனமாக படத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டிருக்கிறது. பார்வையாளர்களைப் பொறுத்தவரை எம்.ஐ.பி. 3-க்கு பெரிய வரவேற்பு. குறிப்பாக ஆசியாவில் கன்னாபின்னா ஹிட். நான்காவது பாகம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று சொல்லாமல், அதுகுறித்து பரிசீலிப்பேன் என்று ‘ஜோக் அடிக்கிறார் வில்ஸ்மித். இயக்குனருக்கு வில்ஸ்மித்தை விட நகைச்சுவையுணர்ச்சி அதிகம். “ஓக்கே நோ ப்ராப்ளம். நான்காவது பாகத்தில் நிஜமாகவே வில்ஸ்மித் இல்லை. அவரது மகன் ஜேடன் ஸ்மித்தான் நடிக்கப் போகிறார் என்று பதிலுக்கு ஜோக் அடிக்கிறார். இதெல்லாம் ‘ஜோக்காக இல்லாவிட்டாலும் பெரிய பிரச்சினை இல்லை. தன்னுடைய வாய்ப்பை தனது மகன்தானே தட்டிப் பறிக்கப் போகிறான் என்று வில்ஸ்மித் திருப்தி அடைந்துக் கொள்வார். மகனிடம் தோற்பதைவிட சந்தோஷமான விஷயம் ஒரு தகப்பனுக்கு வேறென்ன இருந்துவிடப் போகிறது?

26 மே, 2012

டீ-யா வேலை பார்க்கணும் பாஸ்!

உழைக்கும் மக்களின் பிரியத்துக்குரிய உற்சாக பானமான ‘டீ’
அடுத்த ஆண்டு முதல் தேசிய பானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

பிப்ரவரி 26, 1858ல் மணிராம் திவான், பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பலமாக காலூன்ற ஆரம்பகாலங்களில் செயல்பட்டவர் அவர். ஆயினும் பிற்பாடு முதல் இந்திய சுதந்திரப்போரின் எழுச்சியை அஸ்ஸாமில் பரப்பியவர் என்கிற அடிப்படையில் அவரது உயிர் பறிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கடந்த மாதம் நடந்தது. விழாவில் கலந்துக் கொண்டு பேசிய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், டீ இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்படும்” என்று அறிவித்து பலமான கைத்தட்டலைப் பெற்றார். நம்மூர் டீக்கடை நாயர்களும் இந்த அறிவிப்பால் குஷியாகியிருக்கிறார்கள்.

முதல் பத்திக்கும், இரண்டாம் பத்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் டீ இந்தியாவின் தேசியபானமாக அறிவிக்கப்படப் போவது மணிராம் திவானின் 212வது பிறந்தநாள் அன்றுதான். அஸ்ஸாமில் சிங்போ எனப்படும் பழங்குடியினர் உண்டு. இவர்கள் தேயிலைகளை பயிரிட்டு பயன்படுத்துவதை பிரிட்டிஷாருக்கு முதன்முதலாக தெரிவித்தவர் மணிராம். இதையடுத்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் அஸ்ஸாமில் முகாமிட்டு, தேயிலை எஸ்டேட்களை நிறைய உருவாக்கினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் இங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சீன நாட்டு தேயிலைக்கு சுத்தமாக மவுசு போனது (இந்தியத் தேயிலையும், சீனத் தேயிலையும் வகைரீதியாக வேறுபட்டவை). அதுவரை ‘டீ’ என்பது ஆடம்பரபானமாக இருந்து வந்தது. இந்தியாவில் தேயிலை எஸ்டேட்கள் பெருக, பெருக அடித்தட்டு மக்களும் தங்களுடைய அத்தியாவசியத் தேவையாக ‘டீ’யை ஏற்றுக் கொண்டார்கள்.

பிரிட்டிஷாரின் அஸ்ஸாம் டீ கம்பெனியின் திவானாக மணிராம் நியமிக்கப்பட்டார். பிற்பாடு சுதேசிக் கொள்கைகளில் ஆர்வம் கொண்ட அவர் பணியிலிருந்து விலகி, சொந்தமாக டீ எஸ்டேட் உருவாக்கினார். முதன்முதலாக டீ எஸ்டேட் உருவாக்கிய இந்தியர் என்கிற பெருமையை பெற்றார். இந்த தொழில் மட்டுமன்றி இரும்பு, நிலக்கரி, தங்கம், செராமிக், ஐவரி, கைத்தறி, படகு தயாரித்தல், கட்டுமானம், யானை வர்த்தகம் என்று வகைதொகையில்லாமல் தொழில்கள் செய்து, கொடிகட்டிப் பறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர், பன்தொழில் வித்தகர் என்றெல்லாம் ஏராளமான  சிறப்புகள் இருந்தாலும் ‘டீ’ தான் தீயாய் அவரது புகழை இன்றும் பரப்பி வருகிறது. இன்று நாம் குடிக்கும் ஒவ்வொரு கப் ‘டீ’லும் மணிராம் சர்வநிச்சயமாக கலந்திருக்கிறார். 
 ‘டீ’யின் ரிஷிமூலம் எதுவென்று சரியாக வரலாற்றில் பதியப்படவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சீனர்கள் கப், கப்பாக குடித்துத் தள்ளினார்கள் என்பதில் இருந்துதான் ஓரளவுக்கு சீரான வரிசையில் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே கின் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சீனாவில் ‘டீ’ பிரபலமான பானமாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேயிலைத் தொழிலில் சீனர்கள் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்தியாவில் இத்தொழில் பிரபலமாகும்வரை சீனர்களை இதில் அடித்துக்கொள்ள ஆளே இல்லாத நிலை இருந்தது.

பண்டைய சீனாவில் ‘டீ’யை ‘ச்சா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த பெயர் பாரசீகத்துக்குப் போனபோது ‘ச்சாய்’ என்று திரிந்திருக்கிறது. இப்போதும் நம்மூரில் ‘டீ’யை ‘ச்சாயா’ என்று பாதிபேர் விளிப்பது குறிப்பிடத்தக்கது. தைவான் பக்கமாக இருந்தவர்கள் ‘டே’ என்று இதை அழைக்க, அவர்களோடு வணிகத் தொடர்பில் இருந்த ஐரோப்பியர்களால் ‘டீ’ என்று நாமகரணம் சூட்டப்பட்டது.

தயார் செய்யப்படும் பானங்களில் இன்று உலகளவில் ‘டீ’ தான் லீடர். காபி, சாக்லேட், குளிர்பானங்கள், மதுபானங்கள் என்று மீதியிருக்கும் எல்லா பானங்களையும் அருந்துபவர்கள் நூற்றுக்கு ஐம்பது பேர் அருந்துகிறார்கள் என்றால், மீதி ஐம்பது பேர் அருந்துவது டீ.

உலகிலேயே ‘டீ’ அதிகம் போடப்படுவது இந்தியாவில்தான். சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் முக்கால் கிலோ டீத்தூளை முழுங்குவதாக ஒரு கணக்கெடுப்பு இருக்கிறது. 750 கிராம் x 122 கோடி-யென்று கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்த்தீர்களேயானால், ஒரு வருடத்துக்கு நம்முடைய டீத்தூள் தேவை என்னவென்று துல்லியமாக தெரிந்துக் கொள்ளலாம். துருக்கியர்கள் நம்மைவிட மோசம். வருடத்துக்கு ஆளொன்றுக்கு இரண்டரை கிலோ டீத்தூள் தேவைப்படுகிறதாம். ஆனால் மக்கள் தொகை நம்மை ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்பதால், இவ்விஷயத்தில் நாம் தான் ‘டீ’ம் லீடர். உற்பத்தி அடிப்படையில் சீனா, இந்தியா, கென்யா, இலங்கை, துருக்கி ஆகியவை டாப் ஃபைவ் நாடுகள். 
 டுத்த ஆண்டுதான் ‘தேசிய பான’ முடிசூட்டு விழா நடக்கப் போகிறது என்றாலும், இப்போதே நாட்டில் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.

அமுலின் தாய்மாநிலமான குஜராத்தில் இருந்து ‘பால்தான் இந்தியாவின் தேசியபானம்’ என்று அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுகிறது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு இதை வலியுறுத்துகிறது. “எல்லா நாடுகளிலுமே, எல்லா வயதினருக்கும் பொதுவான பானமாக பால் தான் இருக்கிறது. இத்தனைக்கும் வெண்மைப் புரட்சியை சாதித்துக் காட்டியவர்கள் நாம். இப்போது இந்த தேசிய பானம் என்கிற அறிவிப்பே தேவையற்றது. இந்தியாவின் தேசிய உணவு என்று அரிசி சோற்றையோ, சப்பாத்தியையோ அறிவித்திருக்கிறார்களா என்ன?” என்று பொங்கியெழுகிறார் அந்த கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான ஆர்.எஸ்.சோதி.

பஞ்சாப்பின் ரெஸ்டாரண்டுகளோ ‘லஸ்ஸிதான் நம் நாட்டின் தேசிய பானம்’ என்று களமிறங்கியிருக்கிறார்கள். அதற்காக அரசினை கவருவதற்காக ‘லஸ்ஸி திருவிழா’வெல்லாம் நடத்தி ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் நம்மூர் டாஸ்மாக் குடிமக்கள்தான் களமிறங்கவில்லை.

டயர்டா இருக்கு பாஸ். ஒரு டீ அடிப்போம் வர்றீங்களா?


(நன்றி : புதிய தலைமுறை)

25 மே, 2012

மூங்கில் இலை காடுகளே

மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

இரவு பத்து மணிக்கு மேலே எஃப்.எம். கேட்பவர்கள் நிச்சயம் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள். ‘நல்ல பாட்டாச்சே, ஆனா என்ன படம்னு தெரியலை’ என்றும் நினைத்திருப்பீர்கள். முப்பது வயதை கடந்து காதோர நரை ஆரம்பித்திருப்பவர்களுக்கு இந்தப் படமும் தெரியும். இந்தப் பாடலுக்கு நடித்த நடிகரையும் தெரியும்.

எண்பதுகளில் வந்த லோ-பட்ஜெட் படங்களில், அதுவும் விசு படமாக இருந்தால் நிச்சயமாக திலீப் இருப்பார். காதலனாகவும், பணக்கார இளைஞனாகவும், பாந்தமான புருஷனாகவும்.. பெரிய வெரைட்டி ஏதுமில்லாத பாத்திரங்களில் நடித்தவர். சிவந்த நிறம். பிரவுன் கண்கள். மீசையை அழகாக திருத்தியிருப்பார். இவரது ஹேர்ஸ்டைல் சிறப்பானது. உடைகள் நாகரிகமாக இருக்கும்.

மாப்பிள்ளையில் சூப்பர் ஸ்டாருக்கு மச்சானாக காமெடியில் கலக்கினார். அதற்குப் பிறகு திடீரென்று காணோம். ஏதோ பிஸினஸ் செய்துக் கொண்டிருந்தார் என்று அவ்வப்போது சினிமா துணுக்குகளில் வாசித்திருக்கிறேன். கேஸ் ஏஜென்ஸி எடுத்திருப்பதாகவும், அதில் சினிமாவை விட அதிகம் சம்பாதிப்பதாகவும் செய்திகள் வரும்.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால் தினகரன் வசந்தத்தில் இவரது பேட்டி வந்திருந்தது. படத்தைப் பார்த்ததுமே ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு பெருத்துப் போய் இருந்தார். அழகான அவரது ஹேர்ஸ்டைல் மிஸ்ஸிங். புருவம் கூட நரைத்திருந்தது. வடநாட்டு முதியவர் மாதிரியான தோற்றத்தில் இருந்தார். திமிர்த்தனமாக எதிர்த்துப் பேசும் பொண்டாட்டியை பளாரென்று அறையும் அந்த கோபக்கார இளைஞனை காணவே காணோம்.

உடல் உபாதையால் பெரும் சிரமத்தில் இருப்பதாக அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதும் அவர் பேச்சில் தெரிந்தது. மீண்டும் திரையுலகில் நுழைந்து செகண்ட் இன்னிங்ஸ் ஆட தயாராக இருப்பதாக நம்பிக்கையோடு சொல்லியிருந்தார்.

இன்று அதே தினகரனின் இணையத்தளத்தில் அவரது மரணச் செய்தியை வாசித்தபோது இனம்புரியாத துன்பமும், பீதியும் ஏற்படுகிறது. நம் கண்ணுக்கெதிரே மின்னி, மறைந்த நட்சத்திரங்களின் வாழ்வை ஏதோ ஓர் ஆர்வத்தில் தெரிந்து வைத்துக் கொள்கிறோம். அவர்களது ஏற்றம் நமக்கு மகிழ்ச்சியை அளித்ததோ இல்லையோ, இறக்கம் வருத்தத்தை நிச்சயம் தருகிறது. மரணம் கடுமையான துன்பத்தை ஏற்படுத்துகிறது. மரணம் குறித்த நியாயமான அச்சம், இதுபோன்ற மரணங்களை கேள்விப்படும்போது பன்மடங்கு அதிகரிக்கிறது.

முன்பாக பாண்டியன், முரளி போன்றவர்களின் மரணம் இம்மாதிரியான பீதியை கடுமையாக ஏற்படுத்தியது. போனவாரம் கூட யதேச்சையாக ஏதோ ஒரு டீக்கடையில் ‘துள்ளி எழுந்தது காற்று, சின்ன குயிலிசை கேட்டு’ கேட்டபோது, என்னையறியாமலேயே சிலதுளி கண்ணீர் சிந்தினேன். நாம் பார்த்து, பழகியிராதவர்களுக்கு அழுகிறோமென்றால் அவர்கள் நம்முடைய சிறுவயது நினைவடுக்குகளில் புதைந்துப் போனவர்கள் என்பதே காரணமாக இருக்கக்கூடும். நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

அடுத்தமுறை எங்காவது ‘மூங்கில் இலை காடுகளே’ கேட்கும்போதும் இதேபோல என் கண்களில் ஈரம் கசியும் என்பது நிச்சயம்.

24 மே, 2012

பெட்ரோல், ஐ.பி.எல்

பெட்ரோல் விலை உயர்வு ஏன் என்று இன்றோ, நாளையோ மன்மோகன்சிங்கோ, ப.சிதம்பரமோ அல்லது யாரோ விளக்கம் அளிக்கப் போகிறார்கள். மம்தா, ஜெயலலிதா வழக்கம்போல எதிர்த்திருப்பார்கள். வைகோவின் அறச்சீற்ற எதிர்ப்பு நாளிதழ்களின் ஆறாம் பக்கத்தில் பெட்டிச் செய்தியாக வரும். எதிர்க்கிறாரா இல்லையா என்கிற குழப்பம் கலைஞரின் அறிக்கையில் இருக்கும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பத்து பேர் கூடும் மாபெரும் அறப் போராட்டத்தை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தும். பூப்புனித நீராட்டு விழா மாதிரி இதெல்லாம் வழக்கமாக நடக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள்.

இருபத்து மூன்றாம் புலிகேசி பரம்பரையில் வந்த நமக்கு இந்த சடங்குகளில் ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. அடுத்த முறை பெட்ரோல் போடும்போது மட்டும் இதற்கு காரணமானவர்களின் தாயின் கற்பை பழித்துவிட்டு, பிற்பாடு மறந்துபோய்விடுவோம். ஆனால் பெட்ரோல் விலை உயர்வு என்று கேள்விப்பட்டதுமே, ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தானுக்கு படையெடுத்த அமெரிக்கத் துருப்புகள் மாதிரி பெட்ரோல் பங்குக்கு படையெடுத்து பெட்ரோல் போடுபவர்களின் தாலியறுத்து, மொத்த பெட்ரோலையும் தீர்த்து ‘பெட்ரோல்’ ஸ்டாக் இல்லை என்று பங்க் ஓனரை போர்டு மாட்டவைத்து, பங்குகளின் வாசலில் நீண்ட க்யூவில் கசகசவென நின்று, சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கோயிந்தசாமிகளை பிடித்து குப்புறப் படுக்கவைத்து நாலு சாத்து சாத்தலாமா என்றுதான் ஆத்திரம் வருகிறது.
இரவு 12.01க்கு பெட்ரோல் ரூ.7.50 ஏறுகிறது என்றால், பதினோரு மணிக்கு போய் பெட்ரோல் போட்டு பணத்தைச் சேமித்து பங்களாவா கட்டிதொலைக்கப் போகிறார்கள். ஏழரை ரூபாய்க்கு ஒரு கிங்ஸும், சாந்தி பாக்கும் கூட கிடைக்காது என்று தெரியாத அறிவிலிகளா நம் மக்கள். மிஞ்சிப்போனால் ஒரு டூவீலரை கொண்டுபோய் மூன்று லிட்டர் போடுவார்களா. இருபத்து இரண்டு ரூபாய் பைசா மிச்சப்படுத்தி எலெக்‌ஷனில் நின்று வாக்காளர்களுக்கா துட்டு கொடுக்கப் போகிறார்கள். நம் ஜனங்களின் மிடில் க்ளாஸ் அற்பத்தனத்துக்கு ஓர் அளவேயில்லையா?

நம் சமகாலத்தில் நாம் பார்க்கும் மிகப்பெரிய அநியாயம் மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து அடிக்கும் கொள்ளையென்றால், அதற்கு நம் மக்கள் கொடுக்கும் உடனடி ரியாக்‌ஷன்தான் மிகப்பெரும் அபத்தம்.


போட்டோ உதவி : தோழர் கவாஸ்கர்


*************************

ஐ.பி.எல். திட்டமிட்டு படமாக்கப்படும் ஒன்றரை மாத மெகாசீரியல் என்கிற மனோபாவத்துக்கு எப்போதோ வந்துவிட்டாலும், வாய் நமநமவெனும் போதெல்லாம் மாணிக்சந்த் போடுவதைப் போல ஏப்ரல்-மே மாதங்களில் ஐ.பி.எல்.லுக்கு அடிக்ட் ஆகிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. இறுதிப் போட்டியும், அதற்கு முந்தையப் போட்டியும் சென்னையில் நடக்கிறது என்பதால் மற்ற அணிகள் போட்டி போட்டு கஷ்டப்பட்டு தோற்று, சென்னையை ஃபைனலுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்ததை காணும்போது, ‘அடடா.. இதுவல்லவா விளையாட்டு?’ என்று தோன்றுகிறது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், சில சமயங்களில் மைதானத்தை தாண்டிய ஓரிரு சுவாரஸ்யங்கள் ஐ.பி.எல்.லை மேலும் சுவாரஸ்யப்படுத்துவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மும்பை வீரர் போலார்ட் (மேற்கிந்தியத் தீவுகள்) சென்னை வீரர் பிராவோவுக்கு (இவரும் மேற்கிந்தியத் தீவுகள்தான்) முந்தாநாள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாராம். “மூட்டை கட்டிக்கொண்டு ரெடியாக இரு. நாளைய போட்டியில் சென்னை தோற்றதும் நீ விமானம் பிடித்து நம்மூருக்கு செல்லவேண்டும்”. பிராவோவுக்கு சமர்த்து போதாது. பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை.

மாறாக நேற்றையப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் போலார்டின் விக்கெட்டை பிராவோ வீழ்த்தினார். தலையை தொங்கப் போட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த போலார்டிடம் பிராவோ நேரடியாக சொல்கிறார். “தம்பி, நேரா போய் மூட்டை முடிச்சுகளை ரெடி பண்ணு. இன்னிக்கு நைட்டே கூட நம்மூருக்கு ஃப்ளைட் பறக்குதாம்”. பீமன் சைஸில் இருக்கும் போலார்ட், அவருக்கு எதிரில் தத்தணூண்டாக தெரியும் பிராவோவை உடனடியாக ஒரு அப்பு அப்பியிருந்தால் இன்னும் ஆட்டம் களைகட்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக போலார்ட் ஹர்பஜன்சிங்கும் அல்ல. பிராவோ, வாயை மட்டுமே வைத்து கிரிக்கெட்டில் காலம் தள்ளும் ஸ்ரீசாந்துமல்ல.

22 மே, 2012

+2


+2 ரிசல்ட் வெளியாகும் போதெல்லாம் இந்தப் பரபரப்பை நீங்களும் அனுபவித்திருக்கலாம். அலுவலகத்தில் கணினி இருக்கும் எல்லோரது மேஜையும் காலையிலேயே பரபரப்பாக இருக்கும். அலுவலக உதவியாளர்களில் ஆரம்பித்து மேலதிகாரிகள் வரையும் கூட “என் மச்சினிச்சி எழுதியிருக்கா, இந்தாங்க நம்பர், பாஸ் பண்ணிட்டிருப்பா.. ஆனா மார்க் என்னன்னு பாருங்க” என்பார்கள். நான் +2 தேர்வெழுதியபோது இணையம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. மாலைமுரசு அல்லது மாலைமலர் சிறப்பு பதிவைப் பார்த்துதான் நம்பர் வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

இன்றைய சூழலில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாருமே தேறிவிடுகிறார்கள். அப்போதெல்லாம் பத்துக்கு மூன்று பேர் அல்லது நாலு பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிடுவார்கள். மறுநாள் காலை தினத்தந்தி பார்த்தால் ”மாணவன் தற்கொலை - பெற்றோர் கதறல்!” ரீதியிலான செய்திகளை நிறைய பார்க்கமுடியும்.

பலவருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அப்பா என்னை எழுப்புகிறார். அவர் நாலு, நாலரைக்கெல்லாம் எழுந்து கார்த்திகேயபுரம் பால் பூத்துக்கு சென்று பால் வாங்கிவருவது வழக்கம். நானோ ஏழரை, எட்டு மணிக்கு எழுந்து “அம்மா காப்பி ரெடியா?” என்று கேட்பேன்.

“சீக்கிரம் எழுந்திருடா. இன்னைக்கு உனக்கு ரிசல்ட் வருது!”

“ரிசல்ட் பதினொரு மணிக்கு தாம்பா வரும். கொஞ்ச நேரம் தூங்குறேனே?”

“ச்சீ.. இன்னைக்கு கூட இவனுக்கு தூக்கமா? புள்ளைய பெத்துக்கறதுக்கு பதிலா ஒரு தொல்லைய பெத்து வெச்சுருக்கேன்! எழுந்துர்றா.. கோயிலுக்கு போவணும்!”

வேண்டாவெறுப்பாக எழுந்தேன். குளித்து முடித்து அப்பாவின் சொல்படி பட்டை அடித்துக்கொண்டு தாத்தா - பாட்டி படம் முன்னால் நின்று பிரார்த்தனை செய்தேன். சாமி படங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. அப்போதே எனக்குள் கடவுள் மறுப்பு சிந்தனை இருந்திருக்கிறது என்பதை நினைத்தால் இப்போது பெருமையாக இருக்கிறது. கல்யாண கந்தசாமி கோயிலுக்கு சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போனார் அப்பா.

“கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். பேரு குமரன். இன்னைக்கு ரிசல்ட் வருது. பாஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ சாமி!” அர்ச்சனைத் தட்டில் ஒரு இருபது ரூபாய்.

நான் ஒழுங்காக எழுதி இருந்தால் பாஸ் செய்யப்போகிறேன். இதற்கு போய் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறாரே அப்பா என்று கோபம் வந்தது. வேண்டா வெறுப்பாக நவக்கிரகங்களை அப்பாவோடு சுற்றினேன். கோயிலில் என்னைப் போல நிறைய மாணவர்களும், மாணவிகளும்.. என் அப்பாவைப் போல நிறைய அப்பாக்களும் வந்திருந்தார்கள். அன்றைக்கு கல்யாண கந்தசாமிக்கும், அர்ச்சனை செய்த அய்யருக்கும் நல்ல வசூல்.

வீட்டுக்கு திரும்பும் வழியில் மூர்த்தி எதிர்பட்டார். அவர் ஒரு ஈழத்தமிழர். எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த ஒரு வீட்டில் குடியிருந்தார். சிறுவயதில் எப்போதோ ஒருமுறை அவரிடம் ”பெரியவன் ஆகி பிரபாகரன் மாதிரி துப்பாக்கியெல்லாம் வெச்சுப்பேன், கெட்டவங்களை சுடுவேன்” என்று சொல்லியிருந்தேன். அதனால் அவருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்.

“என்ன சார்? குமாருக்கு இன்னைக்கு ரிசல்ட்டா?” ஜாலியாக கேட்டார்.

“ஆமாம் மூர்த்தி. பையன் விளையாட்டுப் பையன் தான்னாலும், எப்படியாவது பாஸ் பண்ணிடுவான்!”

அப்பாவுக்கு என் மீதிருந்த நம்பிக்கை பயம் கொடுத்தது. என்ன எழுதி கிழித்திருந்தேன் என்பது எனக்குத்தானே தெரியும்? நான் படித்தது காமர்ஸ் க்ரூப். தமிழ், ஆங்கிலம் மொழிகள் தவிர்த்து காமர்ஸ், எகனாமிக்ஸ், மேத்ஸ், அக்கவுண்டன்ஸி சப்ஜெக்டுகள் இருந்தது. பத்தாவது வரை தமிழ்வழிக்கல்வி படித்திருந்த என்னை தேவையில்லாமல் +1 சேரும்போது ஆங்கிலவழிக்கு மாற்றியிருந்தார் அப்பா.

தமிழைப் பொறுத்தவரை எனக்கு பிரச்சினையில்லை. தமிழில் நான் தோல்வியடைந்தால் தான் அது அதிசயம். ஆங்கிலமும் பரவாயில்லை. காமர்ஸ், எகனாமிக்ஸ் இரண்டுமே கதை எழுதி சமாளித்துவிட்டேன். அக்கவுண்டன்ஸி பிட் அடித்திருந்தேன். மேத்ஸ் மட்டுமே எனக்கு பெருத்த சந்தேகத்தை விளைவித்தது, இரண்டு ஆண்டுகளாக மேத்ஸ் க்ளாஸ் அட்டெண்ட் செய்ததாக நினைவில்லை, ட்யூஷனும் வைத்துக்கொள்ளவில்லை. தேர்வெழுதும் போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஆனந்தராஜ் ஒழுங்காக எழுதியிருந்தான் என்றால் நான் தேறிவிடுவேன், என்னைப் பார்த்து எழுதிய சிவராமனும் தேறிவிடுவான்.

எட்டு மணிக்கு அப்பா அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார். பதினொரு மணிக்காக நான் காத்திருக்க ஆரம்பித்தேன். மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு பதினொரு மணிக்கு மாலைமுரசு வந்துவிடும். ஆனால் பத்தரை மணிக்கே செயிண்ட்தாமஸ் மவுண்டுக்கு பேப்பர் வந்துவிடும். சைக்கிளை எடுத்துக்கொண்டு செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு சென்று பேப்பரை வாங்கிவிட தீர்மானித்தேன். உதவிக்கு பக்கத்து வீட்டு கோபாலையும் அழைத்துக் கொண்டேன்.

பத்தேகால் மணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன். அங்கிருந்த நியூஸ் பேப்பர் ஸ்டால் முன் பெரிய கூட்டம். ரஜினிபடத்தை முதல் நாள் பார்க்க க்யூவில் நிற்பதைப் போல டென்ஷன். பத்தரை மணிக்கு மாலைமலர் வந்தது. காசுகொடுத்து வாங்கிய பேப்பர் கசங்கி இருந்தது கொஞ்சம் கடுப்படித்தது. செங்கை-எம்.ஜி.ஆர் மாவட்ட முடிவுகளை பார்க்கத் தொடங்கினேன். என் ரெஜிஸ்டர் எண்ணை நினைவில் வைத்திருந்தாலும், பதட்டத்தில் மறந்துவிடுவேனோ என்று கையிலும் எழுதி வைத்திருந்தேன். கோபாலும் ஆர்வத்தோடு எண்களை பார்த்துக்கொண்டே வந்தான்.

ம்ஹூம்... என் எண் மட்டுமல்ல, என் எண்ணுக்கு அருகிலிருந்த பல எண்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தால் தானே தெரிவதற்கு? வாழ்க்கையிலே முதல் தடவையாக பெரிய தோல்வி. விளையாட்டில் கூட தோற்க விரும்பாத என் மனம் உடைந்து, கண்கள் கலங்கியது. அப்பா எப்படியும் ரிசல்ட் பார்த்திருப்பார். வீட்டுக்கு வந்து மிதிப்பாரா தெரியவில்லை. அப்பா அடிப்பாரோ இல்லையோ கண்டிப்பாக அம்மாவிடம் அடி உண்டு.

சோர்வாக சைக்கிளை மிதித்தேன். என்னைவிட கோபாலுக்கு தான் சோகம் அதிகமாக இருந்தது. வரும் வழியில் ஒரு சூப்பர் ஃபிகர் அவள் அம்மாவோடு எதிரில் வந்துகொண்டிருந்தாள். “தம்பி! ரிசல்ட்டு தானே? கொஞ்சம் பேப்பர் காட்டுப்பா!” என்று அத்தை (அழகான பெண்ணுக்கு அம்மாவெல்லாம் நமக்கு அத்தைதானே?) கேட்க, தாராளமாக பேப்பரை கொடுத்தேன். ஃபிகர் ஆர்வத்தோடு அது எண் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தது.

“அம்மா. நான் பாஸ் ஆயிட்டேன்!” குதூகலமாக அந்த ஃபிகர் சொல்ல, எனக்கு வெறுப்பாக இருந்தது. போலியாக சிரித்தேன்.

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீ பாஸ் ஆயிட்டியா?” அத்தை கேட்க, ஃபிகர் எதிரில் என் கவுரவத்தை காத்துக் கொள்வதற்காக “பாஸ் ஆயிட்டேங்க..” என்று பொய் சொன்னேன்.

நான் ஃபெயில் ஆனது குறித்து கூட எனக்கு பதட்டமில்லை, என்னோடு ஒண்ணாம் வகுப்பில் இருந்து கூட படித்த செந்தில் பாஸ் ஆகியிருக்கக்கூடாது என்று மனதுக்குள் வேண்டிகொண்டேன். அவனுடைய எண் வேறு எனக்குத் தெரியாது. நேராக செந்தில் வீட்டுக்கு சைக்கிளை விட்டேன். நல்லவேளையாக வீட்டில் தான் இருந்தான்.

"மச்சான்.. பேப்பர் வந்துடிச்சாடா?” ஆர்வத்தோடு கேட்டான்.

“ம்ம்.. வந்துருச்சிடா.. உன் நம்பர் என்ன?”

“நானே பார்த்துக்கறேன். கொடுடா!” என்றான். அவனுடைய அம்மா எட்டிப் பார்த்தார்.

”கிருஷ்ணா.. நீ பாஸ் ஆயிட்டியாடா?” அம்மா நிலைமை புரியாமல் கேள்வி கேட்டார்.

எந்த பதிலும் சொல்லாமல், செந்தில் ரிசல்ட் என்ன ஆயிற்று என்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் நிலைமையே பரவாயில்லை. செந்தில் தேடிக்கொண்டே இருந்தான். இருந்த எல்லாப் பக்கங்களையும் புரட்டி, புரட்டி தேடினான். திருவண்ணாமலை மாவட்ட தேர்வு முடிவுகளையெல்லாம் கூட தேடிப் பார்த்தான்.

“மச்சான். அது நம்ப டிஸ்ட்ரிக்ட் ரிசல்ட் இல்லேடா!”

“பரவாயில்லை.. பார்த்துக்கலாம். ஏதாவது ப்ரிண்டிங் மிஸ்டேக் ஆகியிருக்காதா என்ன?” செந்திலின் பதில் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது. பையனும் காலி. சூப்பர்!

“செந்திலு! என்னாடா ஆச்சி?” செந்தில் அம்மா கேட்டார்.

“பார்த்துக்கிட்டே இருக்கேம்மா!”

“எத்தனை தடவை பார்த்தாலும் நம்பர் இருந்தாதானேடா தெரியும்?”

செந்திலுக்கு சொல்ல விடையேதும் இல்லை. எங்கள் வகுப்பில் இருந்த இருபத்தாறு பேர்களில் பத்தொன்பது பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவித்தது. பரவாயில்லை மெஜாரிட்டி எங்கள் பக்கம் தான்.

ஆயினும் பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று. அவனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதிய அப்பாவியான நான் பெற்றதோ இருநூறுக்கு முப்பத்தொன்று. என்னைப் பார்த்து எழுதிய சிவராமன் எழுபது மதிப்பெண் பெற்று வெற்றியே பெற்றுவிட்டான். என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.

21 மே, 2012

ராட்டினம்‘யதார்த்தம், விளிம்புநிலை’ ஆகிய இரண்டு சொற்களை தமிழகராதியில் இருந்து நீக்கினால்தான் தமிழ் சினிமா உருப்படும் என்று தோன்றுகிறது. யதார்த்தமாக எடுக்கிறோம் என்கிற பெயரில் வருடா வருடம் எடுக்கப்படும் தலா நாற்பது மொக்கைப்படங்களில் ஒன்றுதான் ராட்டினமும்.

சுப்பிரமணியபுரம் பாணியில் க்ளைமேக்ஸில் ஒரு ட்விஸ்ட். அதற்கு முன்னால் ஒரு ஷாக். ஒரு யதார்த்த சினிமாவுக்கு இது போதுமென இயக்குனர் முடிவுகட்டி விட்டது பார்வையாளர்களின் துரதிருஷ்டம். இந்த ட்விஸ்ட்டையும், ஷாக்கையும் மட்டுமே தயாரிப்பாளரிடம் கதையாக சொல்லி ‘சான்ஸ்’ வாங்கிவிட்டிருப்பார் போலிருக்கிறது. ‘காதல்’ பார்த்துவிட்டு, அதை பீட் செய்யும்விதமாக ஒரு படைப்பை தரவேண்டும் என்கிற இயக்குனரின் ஆர்வம் நமக்கு புரிகிறது. அதற்காக காதலையேவா மறுபடியும் மோசமாக பிரதியெடுப்பது? அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, லொட்டு லொசுக்கு என்று பிழிந்துப் பிழிந்து டீனேஜ் காதலை படமாக்கிய நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களில் வந்த சப்பைக் காட்சிகளின் மொக்கைத் தொகுப்பாகவே ராட்டினம் இருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த டீமுமே ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளிலிருந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்து திரிந்து இப்போதுதான் படமெடுக்கிறார்கள் போலிருக்கிறது. மொத்தமாக சொல்ல வேண்டுமானால் புளித்துப்போன பழங்கஞ்சி.

ஹீரோ லகுபரனுக்கு விஜயாக உருவெடுப்பதா, கார்த்தியாக உருவெடுப்பதா என்கிற குழப்பம் இருந்திருக்கிறது. நடிப்பென்றால் லிட்டருக்கு எவ்வளவு என்று கேட்கும் விஜயின் அசமஞ்சத்தனத்தை முகத்திலும், உடை மற்றும் தோற்றத்தில் கார்த்தியையும் ‘பிட்டு’ அடிக்கிறார். க்ளைமேக்ஸில் ஒரு ஃப்ரேம் போட்ட கண்ணாடியை மாட்டிக் கொண்டால் நடுத்தர வயது குடும்பஸ்தனாகிவிடலாம் என்று ஐடியா கொடுக்கும் காஸ்ட்யூமர்களின் அறிவே அறிவு.

ப்ளஸ் டூ படிக்கும் பெண்தான் வேண்டும் என்று தேடித்தேடி ஸ்வாதியை செலக்ட் செய்தாராம் இயக்குனர். ஹீரோவுக்கு சித்தி மாதிரி இருக்கிறார் ஹீரோயின். கொடுமை சாமி. வயசுக்கு வந்து பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிய பெண்களை எல்லாம் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு மாணவியாக நடிக்க வைக்கும் தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது இ.பி.கோ செக்‌ஷன் 304(2)-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு தொடர வேண்டும்.

படத்தின் இசையமைப்பாளர், அந்தக் காலத்தில் கே.வி.மகாதேவனிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றி அவருக்கு இப்போதுதான் சான்ஸ் கிடைத்திருக்கிறது என்கிற சந்தேகம் எழுகிறது. அடிக்கடி அவர் போடும் ‘தான்னன்னா’ மியூசிக்கில் தாவூ தீருகிறது.

சரியாக சொல்லப்போனால் இரண்டரை வருடங்களுக்கு இழுக்கப்பட வேண்டிய பாடாவதி மெகாசீரியல் ஒன்றினை இரண்டரை மணி நேரத்துக்கு எடிட்டி சாவடித்திருக்கிறார்கள். சாதாரண நடையில் வசனம் எழுதிவிட்டு, எல்லாவற்றுக்கும் பின்னால் ‘லே’ போட்டுவிட்டால் தூத்துக்குடி பாஷையாகிவிடும் போல. ‘லே’வுக்கு பதில் ‘லூ’ போட்டு டப்பிவிட்டால் தெலுங்கிலும் கல்லா கட்டலாம். வக்கீல் மாமா, திரேஸ்புரத்துக்காரி, ஹீரோவின் அண்ணி என்று சிலர் யதார்த்தமாக(!) இருக்கிறார்கள் என்று கஷ்டப்பட்டு தேடினால் மட்டுமே ஓரிரண்டு சமாச்சாரங்கள் படத்தை பாராட்ட கிடைக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை சாட்டை கொண்டு விளாசக்கூடாது என்பது குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் கொள்கை. குமுதத்தின் கொள்கைகளை முடிந்தவரை கடைப்பிடிப்பவன் என்றாலும் ரொம்ப ரொம்ப சுமாரான இந்தப் படத்தை மீடியாக்களும், இணையதள விமர்சகர்களும், அறிவுஜீவிகளும் ‘ஆஹா, ஓஹோ’வென அர்த்தமேயில்லாமல் தூக்கிவைத்து கொண்டாடுவதில் ஏற்படும் எரிச்சலில் இம்மாதிரி எழுத வேண்டியிருக்கிறது. அசட்டுத்தனமாக இருப்பதே நம்மூரில் அறிவுஜீவித்தனமாக பார்க்கப்படுகிறது. ஊன்னா தான்னா பரிந்துரைக்கும் படங்கள் என்றுமே உருப்படாது என்பதற்கு மீண்டும் நல்ல எடுத்துக்காட்டு.

18 மே, 2012

கலகலப்பு


தொண்ணூறுகளின் மத்தியில் சுந்தர்.சி-க்கு சினிமாவில் இருந்த மவுசு இன்றைக்கும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே ஒரு ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரை இட்டுச்சென்ற உயரம் அப்படியானது. அடுத்தடுத்து வந்த மேட்டுக்குடி, ஜானகிராமன் படங்களெல்லாம் ‘சுந்தர்.சி’ என்கிற பிராண்டுக்காகவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. என் சமவயதுள்ள தோழர்களுக்கு சுந்தர்.சி நடிக்க வருவதற்கு முன்பே ஹீரோ. அவர் இயக்கிய இருபத்தைந்து படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். ‘அருணாச்சலம்’ மட்டுமே சுந்தர்.சி-க்கு திருஷ்டிப்படிகாரம் என்பது என் எண்ணம்.

இத்தனை ஆண்டுகளில் சுந்தர்.சி கொஞ்சமும் மாறவேயில்லை என்பது கலகலப்பு பார்க்கும்போது தெரிகிறது. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கொஞ்சம்கூட வளரவில்லை என்றும் சொல்லலாம். அதே உருட்டுக்கட்டை, அதே சேஸிங், அதே லாஜிக்லெஸ் சீன்கள், அதே வசன-வார்த்தைக் குழப்பங்கள்... உள்ளத்தை அள்ளித்தா பார்முலாவில் இத்தனைப் படம் எடுத்தும் இன்னும் அலுக்காமல், அதையே தொடர்ச்சியாக, ஆர்வமாக அவர் எடுத்துக் கொண்டிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.

‘கலகலப்பு’ 1996ல் வெளியான படத்தை பார்ப்பதைப் போன்ற உணர்வினைக் கொடுக்கிறது. இடைபட்ட ஆண்டுகளில் தமிழ் திரையுலகம் பெற்றிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதையுமே இயக்குனர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. விமர்சனமாக சொல்லவேண்டும் என்றால் சுந்தர்.சி அப்டேட்டாக இல்லை. ஒளிப்பதிவாளர் யூ.கே.செந்தில்குமாரும் அதேகாலத்து தொழில்நுட்பத்தில் முடங்கிவிட்டார் போல. படத்தின் எடிட்டர் கழுவப்பட்ட நெகட்டிவ்களை கத்திரிக்கோலால் வெட்டி, செலபன் டேப் ஒட்டி எடிட்டியிருப்பார் போலிருக்கிறது. இசையும் தொண்ணூறுகளின் இசைதான். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்ததும் காலயந்திரத்தில் பயணித்து பதினைந்து ஆண்டுகள் முன்பாக போய்விட்டது மாதிரி ஃபீலிங்.

ஆனால், இந்தப் பிரச்சினை எதுவுமே ‘கலகலப்பின்’ கலகலப்பை குறைக்கவில்லை. சுந்தர்.சி-யின் படங்கள் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆவதைப் போல ரொம்ப ஸ்லோவாகவே ஆரம்பிக்கும். நான்கைந்து காட்சிகளுக்குப் பிறகு பிடிக்கும் சூடு, அப்படியே பிக்கப்பாகி க்ளைமேக்ஸில் பிரமாதமாக வெடிக்கும். கலகலப்பும் அந்த ஃபார்முலாவுக்கு விதிவிலக்கல்ல. படம் முழுக்க காரணமேயில்லாமல் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்துவிட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ‘ஏன் சிரித்தோம், அப்படி என்ன பிரமாதமான காமெடி?’ என்று தோன்றுகிறது. அதனாலென்ன? ரெண்டு மணிநேரம் வாய்விட்டு சிரித்திருக்கிறோமில்லையா? டிக்கெட்டுக்கு கொடுத்த காசு கண்டிப்பாக செரிக்கும்.

படத்தில் எல்லா சமாச்சாரங்களுமே எல்லாமே அவுட் ஆஃப் பேஷன் என்றாலும், ‘நங்’கென்று புதுசாக ஒரு ‘மேட்டரை’ இறக்கியிருப்பதில் இயக்குனரின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. சுடிதாரிலும், தாவணியிலும் டீசண்ட் ஃபிகராகவே செட்டில் ஆகிவிட்ட அஞ்சலியை பிரமாதமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் காட்டன் புடவையில் வந்தாலும் கூட செம்ம நாட்டுக் கட்டையாகவே தெரிகிறார். இதுவரை எந்த இயக்குனரும் படம்பிடித்திராத லொக்கேஷனான அஞ்சலியின் பேரெழில் தொப்புளை, வாஸ்கோடகாமா கணக்காக கண்டுபிடித்து படமாக்கியிருப்பதில் சபாஷ் வாங்குகிறார் சுந்தர்.சி. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலுமே முக்கால் சாண் இறக்கியே கொசுவம் வைத்திருக்கிறார் அஞ்சலி. இவரது தொப்புள் இயற்கையான தொப்புள்தானா அல்லது கூடுதல் கவர்ச்சிக்காக கிராபிக்ஸ் செய்திருக்கிறார்களா என்கிற குழப்பம் இந்த நொடி வரை எனக்கு நீடிக்கிறது.

அஞ்சலியின் கவர்ச்சி பாராட்டப்பட வேண்டியது என்றால் ஓவியாவின் கவர்ச்சி கண்டிக்கப்பட வேண்டியது. சில காட்சிகளில் அவரது முகம் அழகாக இருக்கிறது. பல காட்சிகளில் ரொம்பவே சுமாராக இருக்கிறார். சாமுத்ரிகா லட்சணம், காமசூத்ரா லட்சணம் என்று எந்த லட்சணத்தின்படி பார்த்தாலும் இப்படியொரு உடல்வாகு ஒரு பெண்ணுக்கு அமைய வாய்ப்பேயில்லை. அவ்வளவு பூஞ்சையான உடம்புக்கும், உடைந்துவிடும் மாதிரி ஒல்லியான இடைக்கும் எப்படி அவ்வளவு பெரிய...? so confusing.

சந்தானம் அலுக்கிறார். விரைவில் அடுத்த விவேக் ஆகிவிடக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளும் இந்தப் படத்தில் தெரிகிறது. அதுபோலவே விமலும் கூட முன்பு எல்லா பாரதிராஜா படங்களிலும் இடம்பெறும் ராஜா என்கிற நடிகர் போல் ஆகிவிடுவார் எனத்தெரிகிறது. இன்னொரு ஹீரோவான சிவா அநியாயம். கம்மி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டதைப் போல ஏனோ, தானோவென்று நடித்திருக்கிறார்.


யோசித்துப் பார்த்தால் இது மொக்கைப்படம். ஆனாலும் இன்னொரு முறை தியேட்டருக்குப் போய் பார்க்கத் தோன்றுகிறது. 


16 மே, 2012

கப்பார்சிங்


இந்திய மசாலா சினிமாவின் உச்சம் என்று ‘தபாங்’கை இந்திக்காரர்கள் சொல்கிறார்கள். பத்து நாட்களில் நூறு கோடி வசூலித்தது என்று காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார்கள். இந்தியாவில் என்ன, உலக மசாலாவுக்கே நாங்கதான் உச்சம் என்று இனி ஆந்திரவாலாக்கள் மார்தட்டிக் கொள்ளலாம். அதே ‘தபாங்’கின் ரீமேக் என்கிற பெயரில் இயக்குனர் ஹரிஷ் ஆடியிருக்கும் ஆட்டம், கப்பார்சிங் எனும் ஊழித்தாண்டவம்.

முதல்வார வசூல் மட்டுமே இருபத்தைந்து கோடியை அனாயசமாக தாண்டிவிடும் என்கிறார்கள். டோலிவுட்டின் முந்தைய எவர்க்ரீன் ரெக்கார்டுகளான தூக்குடு, மகாதீராவெல்லாம் காலியாம். ஆந்திராகாரர்களோடு இதே தொல்லை. ரச்சா, தம்மு, கப்பார் சிங் என்று அடுத்தடுத்து இரண்டு வாரத்துக்கு ஒரு ஓபனிங் ரெக்கார்ட் பிரேக்காவது அவர்களுக்கு சாத்தியமாகிறது. கோலிவுட்டில் எந்திரனின் ரெக்கார்டை உடைக்க இன்னும் நான்கைந்து வருஷமாவது ஆகும். பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது இண்டஸ்ட்ரி எவ்வளவு ஆரோக்கியமாகவும், நம்முடைய இண்டஸ்ட்ரி எவ்வளவு சோனியாகவும் இருக்கிறதென்று. கப்பார்சிங்கின் ஓபனிங் ரெக்கார்ட் தெலுங்குக்கு மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் கூட டாப் டென்னில் இடம்பிடிக்கப் போகிறது.

ரீமேக் என்றால் ஸ்க்ரிப்டை ’ஒஸ்தி’த்தனமாக அப்படியே ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென்பதில்லை என்பதில் இயக்குனர் தெளிவாக இருந்திருக்கிறார். ’தல’ ரசிகரான வெங்கட்பிரபு எப்படி ‘தல’யை அணுஅணுவாக ரசித்து மங்காத்தாவை செதுக்கினாரோ, அப்படியே ஹரிஷூம் பவர்ஸ்டார் பவன்கல்யாணை செதுக்கித் தள்ளியிருக்கிறார். காட்சிக்கு காட்சி மாஸ். ஒட்டுமொத்தமாக சூப்பர் பாஸ்ட்.

மிகச்சரியாக பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக பவன் நடித்த ‘குஷி’ வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட். அதற்கு முன்பு நடித்த அத்தனை படங்களும் கூட ஹிட்தான். தொல்லி பிரேமா சூப்பர் டூப்பர் ஹிட். யார் கண் பட்டதோ தெரியவில்லை. குஷிக்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாக பவன் எதைத் தொட்டாலும் விளங்காமலேயே போய்க் கொண்டிருந்தது. படுதோல்வி அல்லது கையை கடிக்காத சுமார் வெற்றி என்று தடுமாறிக்கொண்டே இருந்தார். நாற்பத்தி இரண்டாவது வயதில் அடித்திருக்கிறது பம்பர் ஹிட். இத்தனை ஆண்டுகளாய் பவன் பொறுமையாக இருந்ததோடு இல்லாமல், அவரது ரசிகர்களும் அவரோடு நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். கப்பார்சிங் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த பவர்ஸ்டாரின் ரசிகர் ஒருவர் தன் ட்விட்டர் தளத்தில் இவ்வாறாக குறிப்பிட்டார். “தலைவா. அடுத்த பதினோரு வருஷத்துக்கு நீ தொடர்ந்து ஃப்ளாப் கொடு. பரவாயில்லை. ஆனா பண்ணிரண்டாம் வருஷம் இதேமாதிரி இன்னொரு கப்பார் சிங் கொடு”

என்னதான் மெகாஸ்டாரின் தம்பியாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவத்தால் நிற்கவேண்டும் என்பதில் உறுதியானவர் பவர்ஸ்டார் பவன்கல்யாண். அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல. இயக்குனர், கதையாசிரியர், ஸ்டண்ட் இயக்குனர், நடன இயக்குனர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர். பவன் அளவுக்கு சின்சியாரிட்டி கொண்ட நடிகர்களை காண்பது அரிது என்பதாலேயே முன்னணி இயக்குனர்கள் அவரோடு பணியாற்ற எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஒருவகையில் டோலிவுட்டின் அஜித் என்றும் இவரை சொல்லலாம்.

தபாங் ரீமேக்குக்கு ஹரிஷ்சங்கரை இயக்குனராக பவன் தேர்ந்தெடுத்தது ஆச்சரியம். ஹரிஷ், பூரி ஜெகன்னாத்திடம் பணியாற்றியவர். தீவிரமான ரவிதேஜா ரசிகர். ரவிதேஜா-ஜோதிகா காம்பினேஷனில் 2006ல் அவர் இயக்கிய ‘ஷாக்’ பாக்ஸ் ஆபிஸ் டிஸாஸ்டர். அடுத்து சித்தார்த்தை நாயகனாக்கி எடுத்த ‘ஆட்டா’வுக்கு டாட்டா சொன்னார்கள் ரசிகர்கள். மீண்டும் ரவிதேஜாவிடமே தஞ்சமடைந்தார். போன ஆண்டு வெளியான ‘மிரப்பாக்காய்’ ரவிதேஜாவின் மாஸுக்காக ஓபனிங்கில் மிரட்டினாலும், படத்தில் சரக்கில்லை என்று விரைவாகவே புறம் தள்ளிவிட்டார்கள் ரசிகர்கள். குருநாதர் பூரிக்கும், குருநாதரின் குருநாதரான ராம்கோபால்வர்மாவுக்கும் மட்டும் ஹரிஷ் சாதிப்பார் என்று நம்பிக்கை இருந்தது (கடந்தாண்டு வெளியான ஆர்.ஜி.வி.யின் ‘தொங்கலா முத்தா’ திரைப்படத்தில் பூரி இணை இயக்குனராகவும், ஹரிஷ் துணை இயக்குனராகவும் கவுரவத்தை விட்டுக் கொடுத்து பணியாற்றினார்கள் என்பது சுவையான துணுக்குச் செய்தி).

பெரிய இயக்குனர்கள் நம்பும் இயக்குனர் என்பதாலேயோ என்னவோ, ஹரிஷ் மீது பாரத்தை போட்டுவிட்டு நடித்தார் பவன்கல்யாண். தன் அபிமான ஹீரோவான ரவிதேஜாவுக்கு எப்படி பார்த்து, பார்த்து ஹீரோயிஸ மாஸ் காட்சிகளை செதுக்குவாரோ, அதேமாதிரி பவனுக்கும் செதுக்க ஆரம்பித்தார் ஹரிஷ். தபாங்கின் ஒரிஜினல் கதை, லாஜிக் என்றெல்லாம் நிறைய இடித்தது. அதைப்பற்றி கவலை எதற்கு? ஒரு சூப்பர் ஹீரோவை கையில் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் சாத்தியமோ, அதையெல்லாம் முயற்சித்துவிடலாம் என்று ஸ்க்ரிப்டில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தார்.

தன்னைப்போலவே தெலுங்கில் அட்டர்ஃப்ளாப் ஆகி, ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட ஸ்ருதியை நாயகியாக ஒப்பந்தம் செய்தார். தபாங்கின் சோனாக்‌ஷி வனப்பு என்ன.. சோமாலியா பெண் மாதிரி வாடி வதங்கி, வற்றிப் போயிருக்கும் ஸ்ருதி எங்கே என்று விமர்சனம் கிளம்பியது. ஒரு கட்டத்தில் ஸ்ருதி படத்தில் இருந்து நீக்கப்படலாம் என்றுகூட பேசப்பட்டது. ஹரிஷ் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டார்.

இப்படியாக மாமாங்கமாக ஹிட்டே இல்லாத ஹீரோ, அட்டர் ஃப்ளாப் இயக்குனர், ராசியில்லாத ஹீரோயின் என்று கப்பார்சிங் பெரியதாக எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லாமல்தான் வெளியானது. முதல் காட்சியிலேயே தெரிந்துவிட்டது படம் பக்கா ஹிட். பவனுடைய ரேஞ்ச் பரபரவென்று ஒரேநாளில் எங்கோ உயர்ந்துவிட்டது. ஹரிஷூக்கு பத்துகோடி சம்பளம் தர தயாராக வரிசையில் நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தென்னிந்தியாவின் ஹாட்கேக் ஹீரோயின் ஆகிவிட்டார் ஸ்ருதி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இவரை அசைக்க ஆளில்லை. ஸ்ருதி தழுதழுத்துப் போய் ஹரிஷிடம் ட்விட்டரில் சொல்கிறார். “உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ஹரிஷ்”. ஹரிஷின் பதில், “நன்றியெல்லாம் எதற்கு.. நீ என்றுமே என்னுடைய பாக்கியலட்சுமிதான்” (படத்தில் ஸ்ருதியின் பெயர் பாக்கியலட்சுமி)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஹிட்டடிக்கும் அளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது? ஒன்றுமேயில்லை என்பதுதான் ஹைலைட் மேட்டர். படத்தின் எண்ட் கார்ட் போடும்வரை கதை எங்கே என்று பார்வையாளன் தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஆனால் பரபரப்பான திரைக்கதை, அதிரடி பஞ்ச் வசனங்கள், துள்ளல் பாடல்கள், நிமிடத்துக்கு நாலுமுறை வாய்விட்டு சிரிக்கவைக்கும் காட்சிகள் என்று ரசிகனை சீட்டில் கட்டாயப்படுத்தி கட்டிப்போடுகிறார்கள். காவல்நிலையத்தில் நடக்கும் ‘அந்தாக்‌ஷரி’ காட்சியைப் பார்க்கும் யாருக்காவது வயிறுவலிக்கவில்லை என்றால், அவரது மனநிலையை நாம் சந்தேகிக்கலாம். இந்தப் படத்தையே மீண்டும் ரீமேக் செய்து, தபாங்கின் அடுத்த பகுதியாக சல்மான் நடிக்கலாம் என்றெல்லாம் பாலிவுட் ஆட்களும் சிபாரிசு செய்யுமளவுக்கு ஒரிஜினலுக்கும், ரீமேக்கும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருந்தார் ஹரிஷ்.

படம் பார்த்த ராம்கோபால் வர்மா சொன்னாராம். “படம் நன்றாக இருந்தால் ஹிட். இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்தால் சூப்பர்ஹிட். ரொம்ப நன்றாக இருந்தால் ப்ளாக் பஸ்டர். அதையும் தாண்டி சொல்லவேண்டுமென்றால் இனி ‘கப்பார்சிங்’ என்று சொல்லிவிடலாம்

ராம்கோபால்வர்மாவே சொல்லிவிட்டார். நாமென்ன தனியாக சொல்வது?