14 மார்ச், 2012

வீரவணக்கம்


அந்த கொடுநாள் நன்றாக நினைவிருக்கிறது.

தலை பிளக்கப்பட்ட உடல் என்.டி.டி.வி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட, இது உண்மையாக இருக்கக்கூடாதே என்கிற பதட்டம் விரல் நடுங்கவைத்து, மனசமநிலை குலைந்து, இறுதியில் அழுகைக்கு கொண்டு சென்றது. பயமறியாத அந்த கண்கள், அடர்த்தியான மீசை.. இது அவரேதான் என்று மூளை அறிவுறுத்தினாலும், மனசு நம்ப மறுத்தது.

ஆறுதலாக சில தலைவர்கள் அவர் உயிரோடிருக்கிறார் என்று அறிக்கை விட்டார்கள். ஒரு பத்திரிகை ஒருபடி மேலே போய் அந்த வீடியோவை அவரே எங்கோ அமர்ந்து டிவியில் பார்ப்பதைப்போல ‘கிராபிக்ஸ்’ செய்து வெளியிட்டது. அவருக்கெல்லாம் சாவு வராது என்று உடனடியாக பகுத்தறிவை மறுத்து, உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அந்த வீடியோவை மறந்தேன். அவரது மாவீரர் நாள் உரைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

தொடர்ச்சியாக தமிழக மேடைகளில் சில தலைவர்கள் அவர் உயிரோடிருக்கிறார், தக்க சமயத்தில் வெளிவருவார் என்று ஆணித்தரமாக பேசியதைக் கேட்டு ஆறுதலடைந்தேன். ஒருவேளை அவரேகூட இவர்களை தொடர்புகொண்டு பேசியிருக்கலாம் என்றும் குருட்டுத்தனமாக நம்பினேன்.

தொடர்ச்சியாக மூன்று மாவீரர் தினங்களாக அவரது உரை வெளிவரவில்லை. அவர் உயிரோடு இருக்கிறார் என்று நெஞ்சத்தின் மூலையில் எங்கோ பதுங்கிக்கிடந்த நம்பிக்கை இன்று சற்றுமில்லை.

முப்பதாண்டுகளாக உலகையே எதிர்த்துப் போராடிய மாவீரம் அவரைத்தவிர உலகில் வேறு யாருக்கும் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. ஈழப்போராட்டத்தின் ஒவ்வொரு தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி கவுரவித்த அந்த மாவீரனுக்கு தமிழர்கள் வீரவணக்கம் செலுத்தமுடியாத நிலையை ஏற்படுத்தியவர்கள் யார், யாரெல்லாம் என்று ஒவ்வொருவராக இன்று நினைவுகோர வேண்டியது அவசியமாக இருக்கிறது. அவ்வப்போது இதையெல்லாம் எழுதவோ, பேசவோ நினைத்தாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்துக் கொண்டேயிருக்கிறது. இன்று காலை இணையத்தளம் ஒன்றில் அந்த வீடியோக் காட்சியை கண்டபிறகும் பேசாமல் இருக்கமுடியவில்லை.

அவரை கோடாலியால் வெட்டிக் கொன்றவர்கள் சிங்களச் சிப்பாய்களாக இருக்கலாம். அவர்கள் வெறும் ஆயுதம். ஏவியது ஒட்டுமொத்த உலகம். குறிப்பாக என் தேசம். நான் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட இனத்துரோகிகள். புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை தந்த உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள்.

கடந்த ஆண்டு வெளியான நார்வே அறிக்கை மிகச்சரியாகவே அனைத்தையும், அனைவரையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

• 2004ல் காங்கிரஸ் மீண்டும் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழர்கள் மீதான சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.

• புலிகளுக்கு ஆதரவான போக்கு நார்வேக்கு இருப்பதாக தனிப்பட்ட சந்திப்புகளில் இந்தியா கடிந்துக் கொண்டிருக்கிறது. மேலும் புலிகளை ஒடுக்குவதற்கான இந்திய தரப்பு ‘நியாயங்களை’ திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறது.

• ராடார் வழங்கியதோடு மட்டுமின்றி, உளவுத் தகவல்களையும் இந்தியா இலங்கை ராணுவத்துக்கு அளித்து உதவியது. ஆபத்தான ராணுவ ஆயுதங்களை இந்தியா, இலங்கைக்கு அளிக்காவிட்டாலும், இலங்கை அவற்றை வேறு நாடுகளிடம் வாங்கியதை எப்போதுமே ஆட்சேபிக்கவில்லை.

• 2008 இறுதியில் இராணுவத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கக்கோரி பல்வேறு தரப்புகள் வேண்டுகோள் விடுத்த நிலையிலும், இந்திய அரசு புலிகளைத் தோற்கடிக்கும் சிங்கள இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவினைத் தொடர்ந்தது.

• இந்திய கேபினட் அமைச்சர் பி.சிதம்பரம், புலிகளின் தலைவர் பிரபாகரனை போர் நிறுத்தத்துக்காக தொடர்புகொண்டு ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தார். இந்த ஒப்பந்தத்தின் முன்வரைவில் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க வேண்டும் என்கிற அம்சம் முக்கியமானதாக இருந்தது.

• ஆனால் இந்தியாவின் இந்த முயற்சி அதிகாரப்பூர்வமற்ற முறையில் சிலருக்கு வெளியானது. உடனடியாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தலையிட்டு இந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததோடு, இது காங்கிரஸின் தந்திரம். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்லப் போகிறது. புலிகள் காப்பாற்றப்படுவார்கள் என்கிற செய்தியினை புலிகளுக்கு முன்வைத்தார். இது நடைபெறவில்லை. கடைசியாக தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

ஈழப்போராட்டத்து மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட்டதில் இந்தியாவின் வஞ்சகம் வெளிப்படையானது. அதே நேரம் ஆதரவு சக்திகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்களுக்கும் இந்த பச்சைப் படுகொலையில் கணிசமான பங்கிருக்கிறது. பிரபாகரனின் மறைவு உறுதிப்படுத்தப்பட்ட பிறகும், அவர் உயிரோடு இருக்கிறார் என்கிற தகவலை திரும்பத் திரும்பச் சொல்லுவதின் பின்னிருக்கும் ஆதாயம் என்ன என்பதை யூகிப்பதில் பெரிய சிரமமில்லை. புலிகளால் கடந்த காலத்தில் வசூலிக்கப்பட்டு, கடைசிக் காலத்தில் அவர்களுக்கு உதவாத பலநூறு கோடிக்கணக்கான பணம் யார், யாரிடம் இருக்கிறது. யார் யாருக்கு, எது எதற்கு இன்று செலவளிக்கப்படுகிறது என்கிற உண்மைகளும் எதிர்காலத்தில் வெளிவரத்தான் போகிறது.

போர் நடந்துக்கொண்டே இருந்தால் யாருக்கெல்லாம் என்ன லாபம் இருந்திருக்க முடியும் என்பதை நாம் திறந்தமனதோடு யோசித்துப் பார்க்க வேண்டும். 2001 செப்டம்பர் 11-ஐ அடுத்து உலகநாடுகளிடையே, ‘போராட்டம், புரட்சி’ குறித்து மாறிவந்த மனோபாவம் எவ்வகையிலும் புலிகளால் உணரப்பட்டதில்லை. அவர்களை உசுப்பேத்தி, ஆயுதமேந்த வைத்து அரசியல் செய்தவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் உணர்ந்திருந்தாலும், அதை புலிகளுக்கு நேர்மையாக உணர்த்தவும் அவர்களுக்கு வக்கில்லை.

இலங்கையின் போர்க்குற்றத்துக்கு சாட்சியாக சேனல்-4 அடுத்தடுத்து பிரபாகரனின் மகன் இறந்த வீடியோ காட்சிகளையும், பிரபாகரனின் இறப்பு குறித்த வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்றுகூறி அரசியல் செய்துவருபவர்கள் இந்த சாட்சியங்களை மறுக்கப் போகிறார்களா? பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று ஐ.நா. படியேறி வாதாடப் போகிறார்களா?

துரோகிகள் என்று யாரையேனும் சுட்டிக் காட்டி தூற்றவும், விசுவாசிகள் என்று மார்தட்டிக் கொள்ளவும் யாருக்கும் இனி யோக்கியதையில்லை. எல்லோரைப் போல நானும் துரோகிதான் என்றபோதிலும் குற்றவுணர்ச்சியோடு இப்போதாவது என் வீரவணக்கத்தை அம்மாவீரனுக்கு செலுத்திக் கொள்கிறேன்.

‘இந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் துரோகிகளே, சுயநலமிகளே’ என்றுதான் வரலாறு எதிர்காலத்தில் தனது குறிப்பினில் இந்த காலக்கட்டத்தை பதிவு செய்துக்கொள்ளப் போகிறது.

37 கருத்துகள்:

 1. என்னுடைய அந்த நம்பிக்கை தகர்ந்து சில பல நாட்களாகிவிட்டன யுவா... குற்ற உணர்ச்சி அழுந்தும் மனநிலையில் தான் இருக்கிறேன்.. ஒப்பற்ற தலைவனை கொல்லும் வரை கை கட்டி வேடிக்கை பார்த்த துரோகி தான் நானும் என்பதை நினைக்கும் போது செத்துவிடலாம் போல் இருக்கிறது. அடுத்த தலைமுறை துரோகிகள் என்று சொல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
 2. //துரோகிகள் என்று யாரையேனும் சுட்டிக் காட்டி தூற்றவும், விசுவாசிகள் என்று மார்தட்டிக் கொள்ளவும் யாருக்கும் இனி யோக்கியதையில்லை. எல்லோரைப் போல நானும் துரோகிதான் என்றபோதிலும் குற்றவுணர்ச்சியோடு இப்போதாவது என் வீரவணக்கத்தை அம்மாவீரனுக்கு செலுத்திக் கொள்கிறேன்.// நானும் இதே நிலையிலே இருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. ‘இந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் துரோகிகளே, சுயநலமிகளே’ என்றுதான் வரலாறு எதிர்காலத்தில் தனது குறிப்பினில் இந்த காலக்கட்டத்தை பதிவு செய்துக்கொள்ளப் போகிறது.

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் என்ன வைகோவை குற்றம் சாட்ட நினைக்கிறீரா? உங்கள் பாசத்தலைவன் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே உண்ணாநோன்பு இருந்து போரை நிறுத்தியதை தமிழ்
  இனம் என்றும் மறக்காது.

  பதிலளிநீக்கு
 5. வெற்றி அவர்களே! நார்வேக்காரனிடம் போய் முட்டிக் கொள்ளுங்கள். இறுதிக்கட்டப்போரில் வைகோவின் பங்கு என்னவென்பதை அம்பலப்படுத்தியது நார்வே அறிக்கை.

  கலைஞரது உண்ணாவிரதத்தால்தான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று நீங்கள் நினைத்தால், உங்களது மூளையை உடனே நூறு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் 'டக்கு' எனக்கு ரொம்ப பிடிக்கும். இறுதி போரின் கடைசி நேரத்தில் பிரபாகரனுடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது இணைய தரவுகளில்( உங்கள் சொல்லாடல் தான்) கிடைகின்றன. உங்களுக்கு கிடைக்கவில்லை போலும்!

  பதிலளிநீக்கு
 7. >>நான் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட இனத்துரோகிகள்.<<
  இதை படித்து நான் ஏமாந்து போனேன்..
  அப்பாடா இப்பொழுதாவது இளைய கிருட்டினனுக்கு கருணாவின் சுயரூபம் தெரிந்ததே என!
  ஆனால் "வெற்றி"க்கு நீங்கள் இட்டுள்ள பின்னூட்டம்,உம்மை திருத்த யாராலும் முடியாது என தெளியவைத்தது.
  ஒன்று பிரபாகரனுக்கு வீர வணக்கம் செலுத்துங்கள் அல்லது கருணாவின் ஆதரவாளராக தொடருங்கள்.இரண்டையும் ஒருங்கே செய்வது அபத்தம்!

  பதிலளிநீக்கு
 8. மனதைத் தொட்ட நிஜமான கட்டூரை யுவா. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கல்லா கட்டும் கூட்டத்தினரின் முகத்திரை விரைவில் கிழிபட வேண்டும் ! புலிகளை அளவிற்கு மேலே உசுப்பேற்றி, கடைசியில் அந்த தியாக இயக்கத்தையே மண்ணோடு மண்ணாக்கிய பெருமை நம்முடைய போலித் தலைவர்களையும், அவர்களை ஊக்குவித்த பத்திரிக்கைகளையுமேச் சேரும் !

  பதிலளிநீக்கு
 9. யுவகிருஷ்ணா அவர்கள், குறிப்பிடும் நார்வே அறிக்கை "Pawns of peace" http://www.soas.ac.uk/development/news/file72788.pdf

  (pg-67) //. Indian Home Minister Chidambaram contacts Prabhakaran and suggests
  the LTTE agrees to a pre-drafted statement that they will lay down their weapons.
  The document leaks to Vaiko, a radical but marginal Eelamist politician in Tamil
  Nadu, who rejects it as a Congress trick and assures the LTTE that BJP will win the ongoing Indian elections and come to the Tigers’ rescue.// -அருண் சொக்கன்

  பதிலளிநீக்கு
 10. "உலகம் ஒரு நாடக மேடை அதில் ஒவ்வொரு மனிதனும் நடிகன்" ஆனால் இந்த நாடகக் கதை படிக்கவே பயமாக இருக்கின்றது .இப்படியும் நடக்குமா! மற்றவர்களை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்களா அல்லது பணம் பிரட்டினார்களா.அம்பு எய்தவனை நோவாமல் அம்பை நோவும் போக்குதான். வலை விரித்தவன் ஒருவன் வலையில் மாட்டியவன் மற்றொருவன். மக்கள் உணர்சிகளை தூண்டி விளையாடுபவர்கள் .மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர்களாக மாறும் நிலைமை. "போனால் போகட்டும் போடா" "பிள்ளையை பெத்தா கண்ணீரு தென்னையை வளர்த்தா இளநீரு" "கடைசி வரை யாரோ' என்ற கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருகின்றது.

  பதிலளிநீக்கு
 11. \\2004ல் காங்கிரஸ் மீண்டும் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழர்கள் மீதான சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.\\

  2004ல் காங்கிரஸ் ஆட்சி செய்தது திமுகவின் தயவில்.. அப்போது இலங்கை தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்தால் ஆதரவு வாபஸ் என ஒரே ஒரு அறிக்கை விடக்கூட துப்பு கெட்ட தமிழனத்துரோகியின் அன்பு உடன்பிறப்பின் வீரவணக்கம் பாராட்டுக்குரியது...

  காந்தி என்றவுடன் நினைவுக்கு வரும் கோட்சேயை போல பிரபாகரன் என்றதும் உங்கள் தலைவரின் பெயரும் கண்டிப்பாக ஞாபகம் வந்தே தீரும்..

  \\ஒன்று பிரபாகரனுக்கு வீர வணக்கம் செலுத்துங்கள் அல்லது கருணாவின் ஆதரவாளராக தொடருங்கள்.இரண்டையும் ஒருங்கே செய்வது அபத்தம்!\\

  வழிமொழிகிறேன்...

  பதிலளிநீக்கு
 12. பாஸ்...லிங்க் கொடுங்க...
  அப்பத்தான் உங்க போஸ்ட்
  முழுமை அடையும்...

  பதிலளிநீக்கு
 13. தோழர் நாய்-நக்ஸ்,

  http://tamilenn.net/moreartical.php?newsid=2224&cat=srilanka&sel=current&subcat=6

  பதிலளிநீக்கு
 14. WELL SAID. Yuva. You are the one always writing about maaviran.

  பதிலளிநீக்கு
 15. I hate "fucking India" on this issue.....

  same feeling as of yours.

  பதிலளிநீக்கு
 16. I have never commented in any blog as i dont have an account to login. But after reading this post, I am unable to resist. உங்க தலைவர் கட்சி காரர்களுக்கு நல்லவராகவே இருக்கட்டும் . அதற்காக அவரால் (அவர் நம்பிக்கை துரோக செயலால் ) கொல்ல பட்ட ஒரு மாவீரனுக்கு வணக்கம் செலுத்த அவரது ஆதரவாளன் என்ற பெயரில் வருவது மிகவும் கேவலம் . நீங்க எல்லாம் ஷகிலா பற்றி post போடுவதோடு நிறுத்தி கொள்ளலாம் . நாங்களும் படித்து விட்டு உங்கள் எழுத்தை மெச்சி விட்டு போய் விடுவோம். தயவு செய்து கருணாநிதி பிரபாகரன் விஷயத்தில் தவறே செய்யாதவர் போல் பேசாதீர்கள். உங்கள் மேலும வெறுப்பு தான் வருகிறது.

  பதிலளிநீக்கு
 17. வைகோவை விடுங்கள்.. .. இந்த விடயத்தில் முகவை நம்பியது போல் வேறு எந்த அரசியல் தலைமையையும் நம்பவில்லை. ஆனால் அவரும் திமுக எம்பிக்களும் (கனிமொழி உட்பட) நடத்திய நாடகம் மிகவும் கேலிக்கூத்தானது.. உங்கள் தனிப்பட்ட அரசியல் சார்பு நிலை எதுவகவேணா இருக்கட்டும்.. ஆனால் வீரவணக்கம் போன்ற serious-ஆன பதிவில் கூட அதை பற்றி ஒரு வரி குறிப்பிடாமல், உங்கள் அரசியல் நிலையை இதிலும் காண்பித்திருப்பது எரிச்சல்.
  துரோகிகளை மறைப்பதும்(மறப்பதும்) துரோகமே!

  பதிலளிநீக்கு
 18. இவர் பொருந்துகிறாரா இல்லையா
  http://www.youtube.com/watch?v=6_pvpHH3tWY&feature=related

  பதிலளிநீக்கு
 19. >>>>>>>
  sudharsan said...
  I have never commented in any blog as i dont have an account to login. But after reading this post, I am unable to resist. உங்க தலைவர் கட்சி காரர்களுக்கு நல்லவராகவே இருக்கட்டும் . அதற்காக அவரால் (அவர் நம்பிக்கை துரோக செயலால் ) கொல்ல பட்ட ஒரு மாவீரனுக்கு வணக்கம் செலுத்த அவரது ஆதரவாளன் என்ற பெயரில் வருவது மிகவும் கேவலம் . நீங்க எல்லாம் ஷகிலா பற்றி post போடுவதோடு நிறுத்தி கொள்ளலாம் . நாங்களும் படித்து விட்டு உங்கள் எழுத்தை மெச்சி விட்டு போய் விடுவோம். தயவு செய்து கருணாநிதி பிரபாகரன் விஷயத்தில் தவறே செய்யாதவர் போல் பேசாதீர்கள். உங்கள் மேலும வெறுப்பு தான் வருகிறது
  >>>>>>
  repeat.. thoonguravana ezhupidalam..aana thoongara maathiri nadikuravanae ezhupavae mudiyathu.. neenga continue panung naa..
  -Raji

  பதிலளிநீக்கு
 20. http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.change.org%2Fpetitions%2Fprime-minister-of-india-vote-against-srilanka-at-unhrc-sessions-in-geneva&h=uAQGnFaS2


  - Raji

  i would request everybody to take few seconds out to sign this..
  after everything is over atleast one last step against ruthless genocide..

  பதிலளிநீக்கு
 21. மாவீரர் திலகம் அவர்கள் தங்களின் பிரதிநிதியாக யாரையும் தமிழகத்தில் நியமிக்கவில்லை. இறுதிக் கட்டப் போர் வரை நிகழ்த்தியது அவர்கள் தானே தவிர, இந்திய காங்கிரஸ் அரசு ஆயுதம் வழங்கி போர் நடத்தும் பொழுது எந்த உதவியும் இறுதிக் கட்டத்தில் கிடைக்காது என்பது மாவீரர் திலகத்திற்கு தெரிந்து இருக்கும்.

  பதிலளிநீக்கு
 22. channel 4.. சுயநல நரிகள் தலைமை வகித்ததால் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை .. http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od

  பதிலளிநீக்கு
 23. உண்ணாவிரத நாடகம்: போட்டு உடைக்கிறார் கோத்தபாய
  புலிகளை தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் பேட்டியில் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய கூறியிருப்பதாவது: கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம்.

  http://tamil.webdunia.com/newsworld/news/international/1004/30/1100430023_1.htm

  பதிலளிநீக்கு
 24. A different photograph would have been appropriate, while saluting the great hero. The chosen photograph leads to a feeling of hidden agenda.

  krishnamoorthy

  பதிலளிநீக்கு
 25. Why dont we organize a fast unto death in chennai untill india supports US in this regard.
  Iam ready..
  - Raji

  பதிலளிநீக்கு
 26. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதில் ராஜபக்‌ஷே தண்டிக்கப்பட வேண்டும் என நாம் விரும்புவதில் தவறு இல்லை. ஆனால் சந்தடி சாக்கில் பிரபாகரன் நல்லவன், வல்லவன் என்கிறார்களே அது எப்படி? ராஜபக்‌ஷே தமிழர்களை கொன்றதால் மட்டும் பிரபாகரன் புனிதர் ஆகி விடுவாரா? அல்லது பிரபாகரன் தன் பங்கிற்கு தமிழர்களை கொன்றாரே அது மறந்து விடுமா? அல்லது நமது முன்னாள் பிரதமர் ராஜீவை கொன்றது இல்லை என ஆகி விடுமா?

  பதிலளிநீக்கு
 27. உங்க ”டக்கு” - சூப்பர்.
  நீங்க என்ன துருவக்கரடியா? அப்படிக்கூட 3 வருசம் தூங்குனீங்களா? நீங்க தூங்கும்போது உங்க தலைவர் என்ன நாடகம் போட்டர்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா? உங்க கட்சிக்கு இப்ப ஒரு போராட்ட மேடை வேணுமாக்கும். ... நா.தேர்தல் வருதுல்ல... அப்பிடித்தான் இருக்கும்.
  இன்னுமாசார் உங்களுக்கு எங்க கேனத்தனத்தின் மீது நம்பிக்கை?

  பதிலளிநீக்கு
 28. சந்தடிச் சாக்கில் சாணி வாரித் தூற்றுகிறார்கள் பலர்...

  அரசியல் கட்சித்தலைவர்களோ, மானில முதல்வரோ, ஒரு நாட்டு ராணுவ நடவடிக்கை எடுப்பதையோ, வெளினாட்டு கொள்கை முடிவுகளை மாற்றுவதையோ செய்ய முடியும் என்று அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்ததை, அறியாமை என்று சொல்வதா, முட்டாள்தனம் என்று சொல்வதா...

  போராடலாம்.. அறிக்கைகள் விடலாம், ஊர்வலம் நடத்தலாம்... ஒரு ஜனநாயக நாட்டில் அது தான் செய்ய முடியும். அதைத்தான், ஜெயலலிதா, வைகோ உட்பட கருணாநிதியும் செய்தார்கள்.

  இவர்கள் ஒன்றும் செய்யாததால்தான் பிரபாகரன் இறந்தார் என்று இன்றைக்கு இவர்கள் சொல்வது பைத்தியக்காரத்தானமாக உள்ளது.

  எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள்தான் கிடைத்திருக்கிறார்கள்.

  இந்திய வம்சாவளித் தமிழர்களை அடித்து விரட்டிய போது அந்த தொப்புள்கொடி இவர்களுக்குத் தெரியாமல் போனது. இப்போது உதவ வில்லை என்று கோபம் கொள்கிறார்கள்.

  கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது மாதிரி, பிரபாகரன் மாண்டார். நாம் வீரச்சாவு என்று பெருமிதம் கொண்டு பேசி விட்டு, ஒரு வீரவணக்கம் கொண்டாடிவிட்டு, வரலாற்றில் நம் பிள்ளைகள் படிப்பதற்காக ஒரு அத்தியாயத்தை எழுதிவிட்டு போகத்தான் போகிறோம்.

  இனி என்ன என்று, யாராவது யோசிக்கிறார்களா என்றால் இல்லை. சொகுசாக வெளி நாடுகளில் வசிப்போர்கள், பழிக்குப்பழி வாங்க துடிக்கிறார்கள். ஏனென்றால் நேரடியாக பாதிக்கப் படப்போவது இவர்களில்லை என்ற தைரியத்தால்.

  சம உரிமை தரப்படவில்லை என்றுதான் போராட்டமே ஆரம்பித்தது. தனி நாடு ஆசை காட்டி சில நாடுகள் குளிர் காய்ந்தன. ரொட்டித்துண்டுக்கு ஆசைப்பட்டுப்போன மாதிரி விடுதலைப் போராட்ட வரலாறு தொடங்கியது. ஆயுதந்தாங்கிய போராட்டம் வல்லரசுகள் துணையின்றி ஜெயித்ததாக எங்காவது வரலாறுண்டா?. உதவிய நாட்டையும் பகைத்துக் கொண்டு தான் உயிர் விட்டதுமில்லாமல், ஒரு இனத்தின் போராட்டத்தையும் சாகடித்துவிட்டு போய்விட்டார் பிரபாகரன்.

  எஞ்சிய மக்களின் நிலை என்ன? அவர்கள் இனி வாழ் நாள் முழுவதும் பிறந்த மண்ணிலேயே இரண்டாந்தர குடிமக்களாக வாழ்ந்து மடிந்து போக வேண்டியது தானா?

  என்று விடியும் ஈழத்தமிழனின் இருள்?

  அதற்கு பதில் யாரிடமாவது இருக்கிறதா?

  நெஞ்சில் உரமுமின்றி
  நேர்மைத் திறமுமின்றி
  வஞ்சனை சொல்வாரடி... கிளியே
  இவர்
  வாய்ச் சொல்லில் வீரரடி...

  பதிலளிநீக்கு
 29. துரோகிகள் பட்டியலில் உங்களது இனமானத் தலைவரை சேர்க்காமல் இருந்து விசுவாசத்தைக் காட்டிவிட்டிர்கள்! ஒரு தமிழராக முதலைமைச்சர் பதவியில் இருந்துகொண்டு காங்கிரசிற்கு கூழக் கும்பிடு போட்ட கருணாநிதியையும் வரலாறு மன்னிக்காது யுவா! மழை முடிந்து தூவானம் மட்டுமே என்ற பொய்ப்புரை விடும் நேரத்தில் கொத்து கொத்தாக நம் சமூகம் அங்கே மாண்டது உங்களுக்கு மறந்திருக்குமே! புலிகளுக்காக வேண்டாம்! அப்பாவி தமிழ் மக்களுக்காவது பரிந்து பேச உங்கள் முத்தமிழ் அறிஞருக்கு திராணி இல்லையே! 2 -ஜி சொத்துப் பங்கீட்டில் குவிந்திருக்கும் மனதிற்கு இதிலெங்கு அக்கறை வந்துவிடப் போகிறது?

  பதிலளிநீக்கு
 30. முதல் தடவையாக எழுதுகிறேன் ..

  நான் உங்கள் எழுத்தின் பரம ரசிகன் . உங்களது அரசியல் தவிர்ந்த அனைத்து எழுத்துகளையும் ரசிப்பவன் .

  ஆனால் பிரபாகரனை மதிப்பவர்கள் எவரும் இப்படியோரு படத்தை பார்க்க விரும்ப மாட்டார்கள் . பெரும்பாலான இலங்கை தமிழர்களுக்கு எப்போதே தெரியும் பிரபாகரன் மாவீரனாகி விட்டார் என்று .

  மற்றது ...
  இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கும் பொது , பிரதமருக்கு தந்தி அடியுங்கள் என்று கூறிவிட்டு ,தனது மகன் அழகிரிக்கு அமைச்சர் பதவி வேணும் என்பதற்காக
  டெல்லிக்கு பறந்த சுயநலவாதி கருணாநிதி . அவர் நடத்திய உண்ணாவிரதம் உலக பிரபலம் . போரை நடத்தி கொண்டிருந்த சோனியா வை தியாக செம்மல் என்று வாழ்த்தி கொண்டிருந்தவர் . போரை நிறுத்தும் சகல வல்லமைகளையும் தமிழ் நாடு மக்கள் அவருக்கு வழங்கி இருக்க , தமிழர்களின் உயிரை விட மத்திய அரசின் இருப்பே முக்கியம் என்று ,கொலைகளை வேடிக்கை பார்த்தவர் . இப்பிடி பட்ட கேவலமான ஒரு தலைவனின் விசுவாசியாக இருந்து கொண்டு பிரபாகரனுக்கு வீர வணக்கம் செலுத்துவது , அசல் திருமாமளவன் தனமானது . கேவலமானது .

  நீங்கள் உண்மையான ஒரு பத்திரிகையாளனாக இருந்தால், போரின் இறுதி கட்டத்தில் கருணாதியின் செயற்பாடுகள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் . இது உங்கள் ரசிகர்கள் பலரது வேண்டுகோளாக இருக்கலாம்.  "ஒன்று பிரபாகரனுக்கு வீர வணக்கம் செலுத்துங்கள் அல்லது கருணாவின் ஆதரவாளராக தொடருங்கள்.இரண்டையும் ஒருங்கே செய்வது அபத்தம்!"

  பதிலளிநீக்கு
 31. யுவா... ஏன் இங்கு அனைவரும் கலைஞர் மேல் இவ்வளவு கோபமாய் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பிரபாகரன் கூட கலைஞரை இவர்கள் திட்டுமளவிற்கு நம்பவில்லையே...

  திட்டுவதற்கு ஒரு ஆள் வேண்டுமென்று திட்டுவதாகவே எனக்குத் தெரிகிறது.

  பிரபாகரன் இறந்ததற்கும் போர் முனையில் மக்கள் மாண்டதற்கும், கருணாநிதி நினைத்தால் தடுத்திருக்க முடியும் என்று வாதிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது ஏற்கனவே ஒருவர் எழுதியிருக்கிறார்.

  அந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் போர்விமானங்கள் மூலம் மட்டுமே போரை நிறுத்தியிருக்க முடியும். அது அடுத்த முழு வீச்சு போராகப் போய் முடிந்திருக்கும்.

  இந்தியாவிற்கு எந்த லாபமுமில்லாத ஒரு போரை வழி நடத்த இந்திய அரசு முன்வந்திருக்காது.

  பிற போராளி இயக்கத் தலைவர்களை புலிகள் கொன்ற போதும், அப்பாவி முஸ்லிம்களை வரிசையாக சுட்டுக் கொன்ற போதும், அவர்களுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்.

  தினை விதைத்தவன் தினை அறுப்பான்..
  வினை விதைத்தவன்..???

  பதிலளிநீக்கு
 32. உங்க ”டக்கு” - சூப்பர்.
  நீங்க என்ன துருவக்கரடியா? அப்படிக்கூட 3 வருசம் தூங்குனீங்களா? நீங்க தூங்கும்போது உங்க தலைவர் என்ன நாடகம் போட்டர்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா? உங்க கட்சிக்கு இப்ப ஒரு போராட்ட மேடை வேணுமாக்கும். ... நா.தேர்தல் வருதுல்ல... அப்பிடித்தான் இருக்கும்.
  இன்னுமாசார் உங்களுக்கு எங்க கேனத்தனத்தின் மீது நம்பிக்கை?
  Do u eat with salt yuwa...?..

  பதிலளிநீக்கு