7 மார்ச், 2012

ஹெல்மெட்

நான் ஹெல்மெட் அணிய விரும்பாததற்கு காரணங்கள் பின்வருமாறு :

1. பைக் ஓட்டப் பழகும்போது ரிவர்வ்யூ மிர்ரர் பார்த்து ஓட்டி பழகவில்லை. திருப்பங்களில் தலையை திருப்பிப் பார்த்தே பழகிவிட்டது. ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையை திருப்புவது கடினமாக இருக்கிறது. வேட்டியே அணிந்துப் பழகியவன் திடீரென ஜீன்ஸ் அணியும்போது ஏற்படும் அசவுகரியத்துக்கு ஒப்பானது இது.

2. பயணத்தின்போது ’ஜில்’லென்று காற்று முகத்தில் அறைவதில்லை. தலைமுடி ஸ்டைலாக பறப்பதில்லை. ஃபேஸ்கட் பர்சனாலிட்டி வெளிப்படையாக தெரிவதில்லையென்பதால், நம்மை அடையாளங்கண்டு சகப்பயணிகளான டூவீலர் ஃபிகர்கள் சைட் அடிப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் ஹெல்மெட் கட்டாயமாக்கியபோது, கலைஞரை சபித்துக்கொண்டே வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஹெல்மெட் அணிந்து ஓட்டியபோது இரண்டு, மூன்று முறை ஏடாகூடமாக பிரேக் அடித்து, பின்னால் வரும் வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானது. கொடுமை என்னவென்றால், ஒருமுறை சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தபோதுகூட பின்னால் வந்த ஸ்கூட்டி சீமாட்டியொருவர் கண்ட்ரோல் இல்லாமல், பத்தடி முன்பிருந்தே வருமுன் மன்னிப்பாக ‘சாரீ... சாரீ...’ என்று கத்திக்கொண்டே வந்து இடித்தார். ம்ஹூம். இது வேலைக்கு ஆகாது. நமக்கு ராசியில்லை. ஹெல்மெட்டால் எனக்கு பாதுகாப்பு ஏதுமில்லை. ஆபத்துதான் அதிகமென்று தூக்கியெறிந்தேன்.

இப்போது மீண்டும் ஹெல்மெட் பிரச்சினை. ஐயாயிரம் ரூபாய் வரை அபராதமென்று அச்சுறுத்துகிறார்கள்.

இவ்வளவு நாட்களாக வெறும் தலையோடு வண்டியோட்டி சமாளிக்க ‘பிரஸ்’ அந்தஸ்தை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். வண்டியிலேயே ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருப்பதால், காவலர்கள் பொதுவாக வண்டியை மடக்குவதில்லை. அப்படியே மடக்கிவிட்டால் கழுத்தில் தாலி மாதிரி தொங்கிக் கொண்டிருக்கும் அடையாள அட்டையை பார்த்துவிட்டு, “எல்லா நல்லது, கெட்டதையும் எழுதற நீங்களே இப்படி பண்ணலாமா சார்?” என்று கொஞ்சிவிட்டு, அனுப்பிவிடுவார்கள்.

ஆனால் ரெண்டு, மூன்று வாரங்களாகவே ‘பிரஸ்’ என்றால் தேடித்தேடி வேட்டையாடுகிறார்கள். காரணம் சக ‘பிரஸ்’ஸான தினகரன். அப்பத்திரிகையின் போட்டோகிராஃபர் காமிராவையும், கையையும் வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், போனமாதம் ஒரு போட்டோவை எடுத்திருந்தார். ஒரு சார்ஜெண்ட் தொப்பியோடு பைக்கில் போவதைப் போல. அதற்கு போட்டோ கேப்ஷன் எழுதியிருந்த உதவி ஆசிரியரோ ‘ஊரையே ஹெல்மெட் போடச்சொல்லி, போடாதவர்களிடம் கப்பம் வாங்கும் போலிஸ் இப்படி தொப்பியோடு போகலாமா?’ என்று அறச்சீற்றத்தோடு குமுறியிருந்தார். கமிஷனர் போட்டோவைப் பார்த்துவிட்டு ஏறு, ஏறுவென்று ஏறியிருப்பார் போல. இப்போது ஊரிலிருக்கும் எல்லா போலிஸ்காரர்களும் சைக்கிளில் போனாலும்கூட ஹெல்மெட்டோடு போகிறார்கள். இந்த அவலநிலைக்கு காரணம் ஒரு ‘பிரஸ்’ என்பதால், ஊரிலிருக்கும் எல்லா ‘பிரஸ்’காரர்களையும் மன்மதன் சிம்பு மாதிரி தேடித்தேடி காண்டு கொண்டு வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள்.

நேற்று மாலை தி.நகரில் மாட்டினோம். ‘பிரஸ்’ ஸ்டிக்கர் இல்லாத வண்டிகளை கண்டுக்கொள்ளாத சார்ஜண்ட், எங்களைப் பார்த்ததுமே வடமாநில கொள்ளையர்களை என்கவுண்டரில் போடும் வேகத்தோடு பாய்ந்துவந்து நிறுத்தினார்.

“லைசென்ஸ் காமிங்க”

காமித்தோம்.

“இன்சூரன்ஸ்?”

காமித்தோம்.

“ஹெல்மெட்?”

“இனிமேதான் சார் வாங்கணும்” என் நாக்கில் சனி.

அவர் விறுவிறுவென்று ஆகி, கன்னாபின்னவென்று கத்த ஆரம்பிக்க.. ஆசுவாசத்துக்காக இடையில் “எங்கே வேலை பார்க்குறீங்க?” என்றார்.

பத்திரிகையின் பெயரை சொன்னோம். நல்லவேளையாக எங்கள் பத்திரிகை மீது அவருக்கு பெருமதிப்பு இருந்தது. “நல்ல பத்திரிகை சார். ஆனா நீங்கதான் இப்படியிருக்கீங்க. மீட்டிங்குலேயே கமிஷனர் நாலஞ்சிவாட்டி உங்களை பாராட்டியிருக்கார்” சொல்லிவிட்டு, கடைசியாக அதே டயலாக் “நீங்களே இப்படி பண்ணலாமா?”

என்னால் தாங்க முடியவில்லை. இரவு தூங்கும்போது கனவில் வந்த சார்ஜெண்ட் ஒருவர் “நீங்களே இப்படி பண்ணலாமா?” என்கிறார். காலையில் வண்டியில் வரும்போது போலிஸ்காரர்கள் யாராவது பிடித்துவிடுவார்களா என்று என்றுமில்லாத அச்சத்தோடே அலுவலகம் வந்தேன்.

மதியம் ஒரு சிறுவேலையாக வெளியே கிளம்ப, ஏர்போர்ட் அருகே மிகச்சரியாக குறிவைத்து என்னைப் பிடித்தார் அந்த போலிஸ்காரர். அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தேன். ஒரு கடையில் ஹெல்மெட் தொங்கிக் கொண்டிருந்தது. வண்டியை லாக் செய்தேன். ‘ஹலோ, ஹலோ’ என்று போலிஸ்காரர் அழைக்க, கண்டுகொள்ளாமல் கடைக்குள் நுழைந்து, கைக்கு கிடைத்த ஹெல்மெட்டை வாங்கி தலையில் அணிந்தேன். நேராக சார்ஜண்டிடம் சென்றேன். சிரித்துக்கொண்டே, “போய்ட்டு வாங்க சார்” என்றார்.

இனி வண்டி ஓட்டும்போது காற்று முகத்தில் அறையாது. முடி ஸ்டைலாக பறக்காது.

12 கருத்துகள்:

 1. அரசங்கத்திற்கு டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாம் அதை சரிகட்ட இந்தஹெல்மேட் ரெய்டு போலும்

  பதிலளிநீக்கு
 2. அது என்ன,பிரஸ்,வக்கீல்,டாக்டர் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டால் எந்த விதியையும் மதிக்ககூடாது என்ற மனப்பான்மை

  பதிலளிநீக்கு
 3. ஹெல்மெட் போட்டால் தலை உடையாது ஆனால் விபத்துகள் அதிகமாகும். தலை வலி அதிகமாகும். ஹெல்மெட் பல கலரிலும் கிடைக்கும் . ஓட்டுபவர்களின் தலை வழுக்கை ,வெள்ளை முடி தெரியாது. இருக்கும் முடியும் போய்விடும் .
  வியாபாரம் பெருகும் லஞ்சமும் அதிகமாகும் . ஹெல்மெட் அணிவதை விரும்புவோர் மிகவும் சிலரே .அந்த சட்டத்தினை கொண்டுவந்தவரை ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டச் சொன்னால் அடுத்த நாளே அந்த சட்டத்தினை
  எடுத்து விடும்படி ஒரு சட்டம் வர முயல்வார். காரில் அமருவோர் பெல்ட் அணியும் சட்டம் எந்த அளவில் உள்ளது . அப்பொழுது தெரியும் சட்டத்தின் மகத்துவம். சட்டம் போடும் முன் அதனை மீறுவோர் அதிகமாகும்போது சட்டத்திற்கே மதிப்பில்லாமல்போய் விடுகின்றது. அமெரிக்காவில் மது விலக்கு சட்டம் கொண்டுவந்தார்கள் அதனை மீறுவோர்கள் அதிகமானதால் சட்டத்திற்கு மதிப்பு இல்லாமல் போய் விடும் என்ற காரணத்தினால் அந்த சட்டத்தினை உடனே எடுத்து விட்டார்கள் . நம் நாட்டில் எத்தனையோ அமெண்ட்மென்ட் வந்துவிட்டது .இதற்கும் ஒரு விதி விலக்கு வரலாம் .பால் கேட்டு அழும் குழந்தையை ( பால் இல்லாமையால்) தாய் தன் மார்பக காம்பை பூச்சி பூச்சி என சொன்னதாக பாரதிதாசனார் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றது . மின்சாரம் கேட்டால் ஹெல்மெட் அணி என்பது.

  பதிலளிநீக்கு
 4. Your life will be save krishna..thats more important than hair..and air

  பதிலளிநீக்கு
 5. என் கண் முன்னே லாரி மோதி பைக்கில் இருந்து கீழே விழுந்த ஒருவர் லாரியின் ஆக்ஸில் மோதி உயிரிழந்தார். அவரின் உடம்பில் தலையில் மட்டுமே அடி. வேறு எங்கும் ரத்தம் கூட வரவில்லை. ஒருவேளை ஹெல்மெட் போட்டிருந்தால் பிழைத்திருக்க கூடும்

  பதிலளிநீக்கு
 6. ஒரு சாதாரண நிகழ்வை அசாதாரணமாக அரைபக்க கட்டுரையாக எழுத உங்களால் மட்டுமே முடியும் யுவா. அதை சுவாரஸ்யம் குறையாமல் தருவது சூப்பர்.

  பதிலளிநீக்கு
 7. All it needs is one accident to take you away (forever) from your loved ones. So, even though it is inconvenient, for the sake of your family, friends, and blog-followers :), please wear the helmet. And while you are at it, start using your rear-view mirror as well.

  Drive safe!
  -Vinoth

  பதிலளிநீக்கு
 8. ஹெல்மெட் போட்டுருங்க யுவா. அசௌகரியங்கள் கொஞ்ச நாளில் பழகிரும். உங்கள் எழுத்து எங்களுக்கும், உங்கள் இருப்பு உங்கள் குடும்பத்துக்கும் முக்கியம்.

  பதிலளிநீக்கு
 9. There are advantages and disadvantages in all theories and concepts;also in rules.Please weigh them.when it was introduced during M.G.R.regime,I felt very bad and lost my dense and curl hair.In order to take revenge and feeling jealous of dense haired people(?),I wrote a letter to the then CoP suggesting to collect Rs.200 and issue a helmet.so you will be having your drawing room filled with helmets eqivalent to the no.of times you commited the offence.It is an indirect way of imposing rules and avoiding non-receipted collection by the law enforcing authority.Sirippu Varudhaa? It was the mistake,I did,before understanding the reality.

  பதிலளிநீக்கு
 10. பல முறை விபத்துக்கு பிறகு நாம் கெட்பது " helmet போட்டுறுந்தா தப்பிச்சுருக்கலா sir ".. பட்டறிவும் உண்டு
  http://checkmysecrets.blogspot.in/

  பதிலளிநீக்கு
 11. நானும் இதேபோல் ஹெல்மட் வெறுப்பில் இருந்தேன். ஆனால் கட்டாய சட்டத்தினால் அணிந்தேன். அதுவே என்னுடைய உயிரை காத்தது.

  பதிலளிநீக்கு