2 மே, 2012

உலகின் முதல் தொழில்

20 - 20 என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் சுவாரஸ்யமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி நூற்று இருபது ரன்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும்.

பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே தூக்க, பவுண்டரி லைனில் இருந்தவர் மிக கவனமாக எல்லைக்கோட்டை தொடாமல் அந்த கேட்சை பிடித்தார். இருப்பினும் ஐந்துவிக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் வைசாக் வென்றுவிடும் என்றே அனைவரும் கருதினார்கள். மாறாக அதே ஓவரில் அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் எல்.பி.டபிள்யூ, போல்டு, ரன் அவுட் என்று பொறுப்பில்லாமல் அவுட் ஆக பதினேழாவது ஓவரில் பதினைந்து ரன்கள் வித்தியாசத்தில் மதுரை கில்லி அணி வென்று தன் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டது. சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய வைசாக் அணியினர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எதிரணியினருக்கு கைகுலுக்கினார்கள்.

பத்திரிகையாளர்கள் வைசாக் அணியின் உரிமையாளரும், ஆசியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான அஜய் புல்லையாவை சூழ்ந்துகொண்டார்கள்.

“என்.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் அணி தான் கோப்பையை வெல்லும் என்று சொன்னீர்களே? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?”

“என் அணி கோப்பையை வெல்லப்போவது இல்லை என்று சொல்லப் போகிறேன்!”

“இருந்த அணிகளிலேயே மிக அதிக விலைக்கு அதாவது ஐநூறு கோடி ரூபாய்க்கு இந்த அணியை வாங்கியிருக்கிறீர்கள். இதர செலவுகளாக ஒரு இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்திருப்பீர்கள். பணம் வீணாகிவிட்டது என்று கவலை கொள்கிறீர்களா?”

“ம்... நான் ஒரு தொழிலதிபர். பண இழப்பு எனக்கு வருத்தத்தை தரவில்லையென்று பொய் சொல்லமாட்டேன். அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவையும், பயிற்சியாளரையும் நம்பி தோற்றுவிட்டேன். நான் தேர்ந்தெடுத்த அணியை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டிருந்தால் என் அணி வென்றிருக்கும்!”

“பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறீர்களே? மீதி இருக்கும் போட்டிகளில் இதனால் உங்கள் அணியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படாதா?”

இதற்குள்ளாக புல்லையாவின் அந்தரங்க பாதுகாவலர்களும், உதவியாளர்களும் அவரை காருக்கு அழைத்துச் சென்றுவிட பத்திரிகையாளர்களின் மற்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க இயலவில்லை. பத்திரிகையாளர்கள் கூட்டமாக வைசாக் அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவை சூழ்ந்தார்கள்.

“உங்களால் தான் வைசாக் அணி தோற்றதாக அணியின் உரிமையாளர் குற்றம் சாட்டுகிறாரே?”

நகுலின் முகம் சிவந்தது. உதடுகள் துடிதுடித்தது. இருப்பினும் ஒரு நொடியில் தன்னை சரிசெய்துகொண்டு புன்னகைத்தவாறே, “அவர் ஒரு நல்ல தொழிலதிபர். இதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை” என்றவாறே மைதானத்தை விட்டு வெளியேறினான்.


ஜய் புல்லையாவின் அந்தரங்க அலுவல் அறை அது. அவரது மகன் தேஜாவை தவிர வேறு யாருக்கும் அந்த அறைக்குள் செல்ல அனுமதியில்லை. தேஜா இருபது வயது இளமைப்புயல். பதினெட்டு வயதிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு தலைவராக பொறுப்பேற்றவன். பிறந்ததிலிருந்தே குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே வாழ்ந்தவன் என்பதால் ரோஜாப்பூ நிறத்திலிருந்தான். தலை கலைந்திருந்ததை கைகளால் சரிசெய்தான். முகம் சற்று வாட்டமாக இருந்தது. கிரிக்கெட் ரசிகன் என்பதால் என்.பி.எல். போட்டிகளில் ஒரு அணியை தங்கள் குழுமம் வாங்குவது என்பது அவன் செய்திருந்த முடிவு.

“அப்பா! விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமானது. தோற்றவுடனேயே நம் அணித்தலைவரின் தலையை நீங்கள் உருட்டியது நாகரிகமானது அல்ல!” கொஞ்சம் சீற்றத்தோடே தந்தையிடம் சொன்னான்.

“வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ள நாம் விளையாட்டு வீரர்கள் அல்ல. தொழிலதிபர்கள். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பல லட்சங்களை பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தது. விவரம் புரியாமல் வார்த்தைகளை விடமாட்டேன் தேஜா!”

“புரியவில்லை அப்பா. இந்தப் போட்டிகளில் வென்றிருந்தால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இருப்பினும் இப்போதே கூட ஸ்பான்ஸர்கள் மூலமாக நாம் ஈட்டிய வருவாயை கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு நஷ்டம் எதுவுமில்லை. அப்படியிருக்க ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை நம் அணி தோல்விகளுக்கு பொறுப்பேற்க செய்ததில் நமக்கென்ன லாபம்?” நகுலின் தீவிர விசிறியான தேஜா தன் அபிமான வீரனுக்கு தன் தந்தையாலே ஏற்பட்ட அவமானத்தால் வருத்தத்தில் இருந்தான்.

கனிவாக தன் மகனைப் பார்த்த புல்லையா, “உலகின் முதல் தொழில் எது தேஜா?”

“விபச்சாரம்!”

“இல்லை.. ஊழல்! சாத்தான் ஆதாம் மூலமாக செய்த ஆப்பிள் ஊழல் தான் உலகின் முதல் தொழில்!”

“சரி!”

“ஊழல் என்ற வார்த்தையை சமூகம் அருவருப்பாக நோக்கினாலும் கூட தொழில் செய்பவர்கள் ஊழல் செய்யாமல் எந்த தொழிலையும் செய்யமுடியாது. உண்மையில் சொல்லப்போனால் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களைவிட பன்மடங்கு தனியார் துறைகளில் ஊழல் செய்து சம்பாதிக்க முடியும். சம்பாதிப்பது தானே நமது தொழில்?”

“புரியவில்லை அப்பா. நம் அணித்தலைவர் அவமானப்படுத்தப் பட்டதற்கும் நீங்கள் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கும் என்ன தொடர்பு?”

“பொறு. அதற்குதான் வருகிறேன். நம் அணியை ஐநூறு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறேன். ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்து விளம்பரப்படுத்தியிருக்கிறேன். நம் அணி வென்றால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் வரும். அதே நேரத்தில் நம் அணி வெல்லும் என்று தொழில்முறை சூதாட்டக்காரர்கள் கட்டியிருக்கும் பந்தயத் தொகை எவ்வளவு தெரியுமா?”

“ஐயாயிரம் கோடி ரூபாய் இருக்கலாம். இருந்ததிலேயே சிறந்த அணி நம் அணி என்பதால் இவ்வளவு பெரிய தொகை பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக பத்துக்கு எட்டு பேர் நம் அணிதான் கோப்பையை வெல்லும் என்றார்கள்”

“நீ சொல்லுவது சரி. ஆனால் நம் அணி தோற்கும் என்று பண்ணிரெண்டாயிரம் கோடிக்கு பந்தயம் கட்டப்பட்டிருப்பது உனக்குத் தெரியுமா?”

“தெரியாது அப்பா”

“ஆம் மகனே. நம் அணி தோற்கும் என்று நம் ஆட்கள் மூலமாக நான் மட்டுமே பத்தாயிரம் கோடி ரூபாய் கட்டியிருக்கிறேன்! இப்போது சொல். நம் அணி தோற்றால் யாருக்கு லாபம்”

வியப்போடு, “லாபம் இருக்கட்டும் அப்பா. நம் அணி வென்றிருந்தால் நமக்கு தானே கவுரவம்?”

“கவுரவத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு. இங்கே சம்பாதிப்பவன் தான் வெற்றி பெற்றவன். நிறைய பணம் சம்பாதித்தவனை கவுரவமும், புகழும் தானே தேடி வரும்! நம் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறப் போகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஆயிரம் கோடி அளவில் நன்கொடை தந்தாக வேண்டும். நான் முப்பது ஆண்டுகளாக பாடுபட்டு சேர்த்தப் பணத்தை தரச்சொல்கிறாயா? ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை தான் ஊழல்வாதிகளுக்கு தரமுடியும்!”

“என்ன இருந்தாலும் நகுலின் பெயர் அசிங்கப்பட்டது எனக்கு நல்லதாகப் படவில்லை. அவர் நம்முடைய நல்ல நண்பர்!”

“கவலைப்படாதே நகுலின் பெயர் பாதிக்கப்படாது. கடைசி இரு போட்டிகளில் அவன் சதம் அடிப்பான், இழந்த பெயரை மீட்டுக் கொள்வான். அதற்கும் நான் ஏற்பாடு செய்துவிட்டேன்!”

“அதற்கும் கூடவா ஏற்பாடு?”

“ம்ம்.. நகுல் நம் அணியின் தலைமை பொறுப்பேற்க நாலு கோடி பேசியிருந்தோம் இல்லையா? நமக்கு பத்தாயிரம் கோடி அளவிலான லாபத்தை அவன் தந்திருப்பதால் அவனுக்கு பேசியிருந்த தொகையை விட நூறு மடங்கு அதிகம் தருவதாக உறுதியளித்திருக்கிறேன். உனக்கு சந்தோஷம் தானே?”

“சந்தோஷம் அப்பா!” நகுல் ஏன் தன் தந்தையை நல்ல தொழிலதிபர் என்று சொன்னான் என்று புரிந்ததால் அர்த்தத்தோடு சிரித்தான் தேஜா!

(நன்றி : குமுதம்)

12 கருத்துகள்:

 1. நல்ல விறு விறுப்பான பதிவு வாழ்த்துக்கள் ...jokin

  பதிலளிநீக்கு
 2. எல்லா கிருக்கெட்டு பைத்தியங்களும் படிக்கவேண்டிய பகிர்வு. இதுபற்றி சுஜாதாகூட எழுதிய நினைவு.
  நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. குமுதத்திலே படித்து விட்டேன்.
  நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. குமுதத்தில் வந்தபோதே வாசித்திருக்கிறேன். கதையை விட ஃப்ளோவில்தான் சுவாரஸ்யம் அதிகம்!

  பதிலளிநீக்கு
 5. இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும்.
  .
  .
  .
  கடைசி இரு போட்டிகளில் அவன் சதம் அடிப்பான், இழந்த பெயரை மீட்டுக் கொள்வான். அதற்கும் நான் ஏற்பாடு செய்துவிட்டேன்!”

  How?

  பதிலளிநீக்கு
 6. லக்கி சார்,

  இந்தக் கதை குமுதத்தில் வந்த போது அதில் போட்டிருந்த படம் கதைக்கு மேலும் அழகூட்டியது!

  நன்றி!

  சினிமா விரும்பி

  பதிலளிநீக்கு
 7. பல முறை பல பேர் அரைத்த மாவு.. உங்கள் எழுத்து நடை உதவி இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 8. அரைத்த மாவு..

  பதிலளிநீக்கு
 9. thalaivare ithu repeat kathai madhiri irukke..aerkanave unga blogla padichatha niyabagam

  பதிலளிநீக்கு
 10. யுவா,
  தங்களின் கிரிகெட் பற்றிய கட்டுரை/கதை மிகவும் சரியான ஒன்று. இது போலவே சினிமா மற்றும் அரசியல் பற்றியும் பதிவுகள் எழுத வேண்டும். கிரிக்கெட் என்றதும் நிருபிக்கப்படாத ஒன்றை கரு பொருளாக்கி எழுதுகிறீர்கள். ஆனால் அரசியலில் குற்றம் செய்தார் என்றும் செய்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டால் மட்டும் உங்களின் சார்பு முகம் வெளியே வந்து விடுகிறது. என் இப்போது எல்லாருமே அரசியலில் ஆதாயத்திற்காக இல்ல்லாமல் வேறு எதற்காகவும் இல்லை என்று சொல்வதால் என்ன நட்டம். அங்கே மட்டும் உங்களின் முகமூடி வெளியி வந்து விடுகிறது. எல்லோரும் அரசியலில் ஒரு கைத்தடி வைத்திருக்கிறார்கள். வை கோ, திருமா போண்டோருக்கு புரட்சியாளர்களின் முகமூடி, ஜெயலலிதாவுக்கு எம் ஜி ஆர் முகமூடி, கருணாநிதிக்கு தமிழ் முகமூடி, காங்கிரசுக்கு காமராஜ் முகமூடி இன்னும் பல சமயதிருக்கு தகுந்தாற்போல. இதை இந்த பதிர்விற்கான பதிலாக எடுத்துக்கொள்ளாமல் ஒட்டுமொத கருத்தாக கொள்ளவும். நன்றி.
  சாதாரண கிராமத்தான்

  பதிலளிநீக்கு