4 பிப்ரவரி, 2012

தமிழ்ப் பதிப்புத்துறைக்கு நெருக்கடியான காலம்!

வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம் என்ற அறிஞர் அண்ணாவின் வழியில் வந்த கட்சிகள்தான் மாறி, மாறி மாநிலத்தை ஆளுகின்றன. ஆனால் அரசு நூலகங்களுக்கு கூட கடந்த சில ஆண்டுகளாக நூல்களே வாங்குவதில்லை.

தமிழக அரசின் பொதுநூலகத்துறையின் கீழ் 4028 நூலகங்கள் இயங்குகின்றன. இந்த நூலகங்களுக்கு எந்த நூல்களை தேர்வு செய்வது என்று ஒரு குழு அமைக்கப்பட்டு வருடா வருடம் நூல்கள் தேர்வு செய்யப்படும். ஆரம்பத்தில் 600 நூல்கள் என்றிருந்த எண்ணிக்கையை 2007ல் இருந்து 1000 என்று உயர்த்தி முந்தைய அரசு ஆணையிட்டது. பதிப்பாளர்களும், வாசகர்களும் இந்த ஆணையால் அடைந்த மகிழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு கூட நீடிக்கவில்லை.

2009ல் இருந்து இன்றுவரை நூலகங்களுக்கு அரசு நூல் வாங்குவதில்லை. புதிய நூல்கள் இடம்பெறாததால், அவற்றை படிக்க விரும்பும் நூலகத்துக்கு வரக்கூடிய வாசகர்கள், வேறு வழியில்லாமல் சொந்தக் காசு போட்டு புதிய நூல்களை வாங்க வேண்டியிருக்கிறது. காசு கொடுத்து நூல்களை வாங்க வசதியில்லாதவர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புதிய நூல்கள் சென்று சேருவது தடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மாவட்டங்களில் சொத்துவரியோடு சேர்த்து பத்து சதவிகிதமாய் வசூலிக்கப்படுகிற வரி நூலகவரி. இந்தப் பணம் அந்தந்த மாவட்ட நூலக வளர்ச்சிக்காக மட்டுமே செலவழிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக நெ.து.சுந்தரவடிவேலு இருந்தபோது இந்த விதி அமலுக்கு வந்தது. இவ்வகையில் நூலகவளர்ச்சிக்கு கிடைக்கும் தொகையை ஒட்டுமொத்தமாக, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைக்க அரசு பயன்படுத்திக் கொண்டதாலேயே, புதிய நூல்களை வாங்கவும், மற்ற மாவட்ட நூலகங்களை பராமரிக்கவும் தற்போது நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

கருப்பன் சித்தார்த்தன் என்பவர் பொதுநூலகத்துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில நூல்களை குறிப்பிட்டு இவையெல்லாம் 2006-10 காலக்கட்டத்தில் எத்தனை பிரதிகள் பொதுநூலகத்துறைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது, விபரங்களை தரமுடியாது என்றும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதில்லை என்கிற பிரச்சினை புத்தகப் பதிப்பாளர்களைதான் அதிகம் பாதிக்கும். இருப்பினும் இவர்கள் சார்பான அமைப்புகள் அவ்வப்போது அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுப்பதோடு தமது கடமையை முடித்துக் கொள்கின்றன. பதிப்பாளர்களும் எதிர்கால நலன் கருதி, இதுகுறித்து வெளிப்படையாக வாய்திறக்க அச்சப்படுகிறார்கள்.

உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன், “தமிழ்ப் பதிப்புத்துறைக்கு கடும் நெருக்கடியான காலம் இது” என்று வருத்தப்படுகிறார்.

“தமிழில் புத்தகங்கள் வெளியிடும் பெரும்பாலான பதிப்பகங்கள் பொது நூலகத்துறையைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. புத்தக விற்பனைக்கான போதுமான சில்லறை விற்பனை மையங்கள் இல்லாத பதிப்பாளர்களுக்கு நூலக ஆணைதான் வாழ்வாதாரம். கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகங்கள் வாங்கப்படாததால், எப்போதும் இல்லாத வகையில் தற்போது புதிய நூல்களை வெளியிட முடியாத அளவுக்கு பதிப்புத்துறை முடங்கிப் போயிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையை கவனத்தில் கொண்டு, இந்த அறிவுசார் துறையை காப்பாற்ற முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறார் மனுஷ்யபுத்திரன்.

தமிழக நூலகங்களில் நூல்கள் வாங்கப்படாதது மட்டும் பிரச்சினையில்லை. நூலகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான அடிப்படைப் பணிகள் கூட நடைபெறுவதில்லை என்பதுதான் சோகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்துறையில் காலியாக இருக்கும் சுமார் ஆயிரம் நூலகர் பணியிடங்கள் நிரப்பப்படவேயில்லை. இதே காலக்கட்டத்தில் சுமார் எட்டுநூறு பேர் ஓய்வும் பெற்றிருக்கிறார்கள்.

நூலக வரியாக உள்ளாட்சி அமைப்புகளிடம் வசூலிக்கப்படும் வரியை நூல்கள் வாங்கவும், நூலகங்களை மேம்படுத்தவும் செலவிட்டாலே போதுமானது. தமிழக அரசு இதற்கான நிதி எதையும் தனியாக ஒதுக்க வேண்டியதில்லை. பெரும்பாலான பொது நூலகங்கள் அடிப்படை வசதியற்ற நிலையிலேயே இருக்கின்றன. தமிழக அரசு உடனடியாக புதிய நூலக தேர்வுக் குழுவை அமைத்து, கடந்த மூன்றாண்டுகளுக்கான நூல்களை வாங்குவதின் மூலம் பதிப்பாளர்களை நெருக்கடிச் சூழலிலிருந்து காப்பாற்ற முடியும். இது தமிழ் பதிப்பாளர்களின் தொழில் பிரச்சினை மட்டுமல்ல. எண்ணற்ற எழுத்தாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் கூட.

உடனே கவனிக்குமா அரசு?

8 கருத்துகள்:

 1. கிருஷ்.. 10 சதவீத வரி அல்ல. தகவல்களை சரி பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 2. தி.மு.க. செயற்குழுவில் என்னதான் நடக்கிறது? உங்கள் பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன். பத்திரிகைச் செய்திகளை நம்ப முடியாது! அவற்றுக்கு இல்லாத நம்பகத் தன்மை உங்களுக்கு இருக்கிறது (குறிப்பாக அரசியல் - திமுக பற்றிய பதிவுகளில்)காரணம் இதில் உங்களுக்கு சுய லாபம் எதுவும் இல்லை.

  பதிலளிநீக்கு
 3. இவ்வகையில் நூலகவளர்ச்சிக்கு கிடைக்கும் தொகையை ஒட்டுமொத்தமாக, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைக்க அரசு பயன்படுத்திக் கொண்டதாலேயே, புதிய நூல்களை வாங்கவும், மற்ற மாவட்ட நூலகங்களை பராமரிக்கவும் தற்போது நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது."

  ம்ம்... அருமை.. அருமை....

  உங்கள் இன்றைய பேச்சு அருமை... ஓ காட் விளக்கம் சிம்ப்ளி சூப்பர்ப்

  பதிலளிநீக்கு
 4. கொலைக்களத்தில் உழைக்கும் பத்திரிகையாளர்
  என்ற புத்தகத்தைத் தந்தவர் கருப்பன் சித்தார்த்தன் - இவருடைய முயற்சிகள் ஒட்டுமொத்த தமிழ்ப் பதிப்புத்துறையின் நலன் கருதினதாக அமையும்.

  ஆனால் மனுஷ்யபுத்திரனின் நோக்கம் ஒட்டுமொத்த பதிப்புத்துறையின் நன்மை என்பதைவிட தனிப்பட்ட அவருடைய பதிப்பக புத்தகங்களை நூலகத்திற்கு விற்பனை செய்யும் வியாபார நோக்குடையவை.

  தமிழ்நாட்டில் 1000 இற்கும் அதிமான தமிழ்ப் பதிப்பகங்கள் இருக்கும் சூழலில், சென்னையை மையாகக்கொண்ட ஒரு குறித்த சில பதிப்பகங்கள் மட்டுமே நூலக ஆணையின் பெரும்பங்கினை தமதாக்கிக்கொள்கின்றன.

  \\ ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.உயிர்மையை அழிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு உலக இலக்கிய இதழை நடத்தும் ஆசாமியின் நண்பர்கள் இருவர் ஒருமுறை நூலகத் தேர்வுக் குழுவில் இடம்பெற்றார்கள். உயிர்மை அந்த ஆண்டு விண்ணப்பித்திருந்த அத்தனை நூல்களுக்கும் எதிராக அவர்கள் தங்களது குறிப்புகளை எழுதிவைத்தார்கள். உயிர்மையின் முதுகெலும்பை அதன் மூலம் முறிக்கலாம் என்று நினைத்தார்கள்.வேறு ஒரு நண்பர்மூலம் இதை அறிந்தேன். அடுத்த நாள் அந்தக் குறிப்புகள் அனைத்தும் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தேன். அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்றால் என்னவென்பதை அவர்களுக்கு வேறு வழியில் காட்டினேன். \\

  காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் நூலகத்துறையினுள் எந்த அளவிற்கு ஊடுருவித் தங்கள் புத்தகங்களை விற்கின்றன என்பதற்கு மேலே தரப்பட்டிருக்கும் அகநாழிகையில் வெளியான நேர்காணல் ஒன்றே போதும்.

  கருப்பன் சித்தார்த்தன் இந்த அகநாழிகை நேர்காணலை முன்வைத்து நீதிமன்றத்திற்கு போகலாம்.

  நூலகத்துறையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கேட்டால், ஒட்டுமொத்த தமிழ்ப் பதிப்புத்துறைக்கு நன்மை கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 5. மூன்று வருடங்களாக நூலகத் துறையில் நாங்கள் குரல் கொடுத்து ஓய்ந்துவிட்டோம். நூலகத்தை காப்பாற்றும் நிலைமையில் இருக்கும் நாம் நூலக ஆணையைப் பற்றி யோசிக்க முடியாது.

  2006- 2008 வரை நூலக ஆணை முன்னனி பதிப்பகங்களுக்கு தான் அதிகம் கிடைத்தது. நவீன இலக்கியத்தின் முன்னனி பதிப்பகம் என்று மார்தட்டி சொல்லும் பதிப்பகத்துக்கு ஐம்பது லட்சம் மேல் ஆர்டர் கிடைத்துள்ளது. வார இதழ் நடத்தும் பதிப்பகத்திற்கு ஒரு கோடி வரை ஆணை கிடைத்ததாக செய்தியுள்ளது. அரசு நூலக ஆணையில் கவனம் செலுத்தினாலும், அதில் அதிகம் லாபம் சம்பாதிக்க போவது இவர்கள் தான் என்பது மறுக்க முடியாது.

  சிறு பதிப்பாளர்களுக்கு ஐந்து புத்தகங்களுக்கு ஆணை கிடைத்திருந்தாலே பெரிய விஷயமாக் இருந்தது. இது வரை 13 நூல்கள் வெளியீட்டுள்ளேன். ஒரு புத்தகத்திற்குக் கூட நூலக ஆணை கிடைக்கவில்லை என்று பெருமையாக சொல்வேன்.

  புது புத்தகங்கள் வெளிவாராததற்கு நூலக ஆணை மட்டும் காரணமல்ல.... சென்ற வருடம் பேப்பரின் விலை 20 - 30 % வரை ஏற்றம் கண்டுள்ளது. இந்த சுமையை வாசகர் மீது சுமத்தினால் தான் நூல்களை வெளியீட வேண்டிய நிலைமை உள்ளது.

  பதிலளிநீக்கு
 6. அரசியல் பாராமல், சொந்த நலன்கள் பாராமல், அரிய விஷயங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகத்தார் எத்தனை பேர் இருக்கின்றார்கள் தமிழகத்தில்? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் யுவா?

  உதாரணம் துரை குமரேசனின் பின்னூட்டம். அரசியல் செய்தே நூல்கள் விற்பனை செய்ய வேண்டுமென்றால், அந்த நூல்களின் தரம் பற்றி நீங்கள் பேச வேண்டும்.மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரத்தைச் செலவழித்து வாசகன் படிக்கின்றான் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  இக்காலத்தில் வெளியாகும் நூல்களின் தரங்கள் பற்றிய ஆய்வொன்றினை நீங்கள் நிகழ்த்திப்பாருங்கள். உண்மை புலப்படும்.

  இவ்வகையான போலிகளை மக்கள் வரிப்பணத்தில் வாங்கிக் குவித்து வைக்க வேண்டுமா அரசாங்கம்?

  தமிழ்ப் பதிப்புத்துறைக்கு நெருக்கடியான காலம் என்பதை விட, தமிழக வாசகர்களுக்கு நல்ல காலம் என்று தான் சொல்வேன்.

  பதிலளிநீக்கு
 7. நியூட்ரினோ ஆராய்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன ?

  http://siragu.com/?p=1733

  நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தைப் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதைக் காணமுடிகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி என்றால் என்ன? இந்த ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது? இந்த ஆராய்ச்சியால் கிடைக்கும் முடிவு பலன் யாது? போன்ற கேள்விகளுக்கு தேனி மாவட்ட மக்கள் விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை பொது மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்கு அரசு சிரத்தை எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இந்த அறிவியல் விளக்கங்கள் மக்களுக்குப் புரியாது என்று அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்களோ என்னவோ?

  பதிலளிநீக்கு