28 பிப்ரவரி, 2012

திராவிடர்களுக்கு

ஏன் திராவிட இயக்கம் மலர்ந்தது?

1912ல் திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பார்ப்பனர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர்  பார்ப்பனர்கள் . 1496 பொறியாளர்களில் 1096 பேர்  பார்ப்பனர்கள் . 3 சதவீதம் இருந்த  பார்ப்பனர்களில் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள். பார்ப்பனரல்லாத சமூகத்தினருக்கு கல்வி மனுதர்மத்தை காட்டி மறுக்கப்பட்டதின் விளைவாக இந்த அடாத நிலை இருந்தது. மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது.


யாரெல்லாம் திராவிடர்கள்?
”திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் "நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாடால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள்'' என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்” என்று கலைஞர் சொல்கிறார். தனிப்பட்ட முறையில் ‘நாடால் இந்தியர்கள்’ என்கிற பதத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அய்யா சுபவீ அவர்கள் சொல்வதைப் போன்று சமூகநீதித் தளத்தில் ‘திராவிடன்’ என்றும், மற்ற களங்களில் ‘தமிழன்’ என்கிற அடையாளத்தையும் சுமக்க விரும்புகிறேன். எவனெல்லாம் மனிதநேயத்துக்கு எதிரான சனாதன மூட வழக்கங்களை எதிர்க்கிறானோ, எவனெல்லாம் எல்லோரும் சமம் என்று நம்புகிறானோ அவனெல்லாம் திராவிடன் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. திராவிடம் என்கிற சொல் வெறுமனே நிலவியல் பரப்பினையும், மொழியையும் வைத்து மட்டுமே வரையறுக்கப்பட்ட சித்தாந்தம் அல்ல. பாட்டாளிகளுக்காக உருவான சித்தாந்தமான மார்க்ஸின் பொதுவுடைமையைப் போன்றே ஏழை எளியவர்களுக்காகவும், மதம்-சாதியால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்காகவும், கடந்த நூறாண்டுகளாக தென்னிந்திய அறிவுஜீவிகளால் Collective thoughts ஆக உருவான உயரிய கோட்பாடு இது.’திராவிடம்’ என்கிற சொல்லை திகவினரும், திமுகவினரும்தான் உருவாக்கினார்களா?


1847ஆம் ஆண்டிலேயே ‘திராவிட தீபிகை’ என்கிற இதழ் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கியதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே. வங்காள மகாகவியானவரும், இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவருமான ரவிந்திரநாத் தாகூர் ‘திராவிட’ என்கிற சொல்லினை தேசிய கீதத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். இச்சொல்லை பயன்படுத்துங்கள் என்று அவரை பெரியாரோ, அண்ணாவோ வற்புறுத்தவில்லை. இந்திய தேசிய கீதத்திலேயே ‘திராவிடம்’ என்கிற சொல் இடம்பெற்றிருப்பதால், இந்திய தேசியம் திராவிட இனத்தை அங்கீகரிப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம்.

பிறப்பால் பார்ப்பனர்களும் திராவிடர்களாக முடியுமா?

மாநிலக் கல்லூரி வாசலில் இருக்கும் தமிழ்த்தாத்தா சிலையின் கீழ் ’திராவிட வித்யாபூஷணம்’ என்கிற அடைமொழியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களும் உணர்வு அடிப்படையில் திராவிடர்களாக முடியும் என்கிற பரந்த மனப்பான்மை இவ்வினத்துக்கு உண்டு என்பதற்கு இது மிக நல்ல சான்று. பிறப்பின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமே ஒருவன் திராவிடனாக வரையறுக்கப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

திராவிடத்தால் விளைந்த நன்மை என்ன?

சாமானியர்களும் சிந்தித்து, இன்று இக்கேள்வியை கேட்கும் சுதந்திரத்தை திராவிடம் ஏற்படுத்தி தந்திருக்கிறது. திராவிடம் நமக்கு தந்த பரிசு கட்டற்ற கருத்து சுதந்திரம். இவனெல்லாம்தான் கல்வி கற்கலாம், இவனெல்லாம்தான் சிந்திக்கலாம் மாதிரியான பிற்போக்கு சமூகக் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்தது திராவிடம். பிறப்பின் அடிப்படையில் யாரையும் வரையறுத்து, அவனுடைய வாழ்வியலை கட்டுப்படுத்தும் போக்கினை திராவிடம் அகற்றியிருக்கிறது. இந்தியாவின் மகத்தான மாற்றமான இடஒதுக்கீடுக்கு 1920களிலேயே திராவிடம் அச்சாரம் இட்டது. சாதி, மத மறுப்பினை திராவிடம் சாத்தியமாக்கியது. முற்போக்கு சிந்தனைகளுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்கியது.

நான் திராவிடன் என்று உணர்வதில் பெருமை கொள்கிறேன். இதே பெருமித உணர்வு உங்களுக்கும் இருப்பின், தமிழ் மண் உலகுக்கு தந்த மாபெரும் சித்தாந்த கோட்பாடான திராவிடத்தின் நூற்றாண்டினை கொண்டாடுங்கள். கொண்டாட்டத்தின் அடையாளமாக ஃபேஸ்புக் திராவிடத் தோழர்கள் தயாரித்துத் தந்திருக்கும் கீழ்க்கண்ட இலச்சினையை உங்கள் வலைப்பூவிலோ, ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரி சமூகவலைப்பின்னல்களிலேயோ பயன்படுத்துங்கள்.
23 பிப்ரவரி, 2012

என்கவுண்டரை எதிர்ப்போம்!

தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி. பொதுஜனத்துக்கு இப்படியொரு கொலைவெறி இருப்பதுதான் காவல்துறை, இராணுவம் மாதிரி சட்ட அங்கீகாரம் பெற்ற கொலைநிறுவனங்களுக்கு சாதகம். ‘மனித உரிமைகளை தூக்கி குப்பையில் போடு’ என்று துப்பாக்கியில் புல்லட்டுகளை நிரப்பிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

என்கவுண்டர்களுக்கு நியாயம் காட்டும் வகையில் பொதுமக்களின் கொந்தளிப்பினை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், தீவுத்திடல் அருகே சிறுவனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி மீது என்கவுண்டர் பாயவில்லை என்பதை இங்கே நினைவுறுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். போலிஸின் துப்பாக்கிகள் ‘செலக்டிவ்’ ஆகத்தான் தோட்டாக்களை துப்புகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பேர் என்கவுண்டரில் பலியாகியிருப்பதாக செய்திகளில் அறிகிறோம். இங்கே நடைபெறுவது ஜனநாயகமா அல்லது இராணுவ ஆட்சியா என்கிற சந்தேகம் இதனால் உருவாகிறது. குற்றவாளிகள் என்று காவல்துறை சந்தேகப்படுபவர்களை என்கவுண்டரில் போடலாம், அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றங்கள், சட்டப் பணியாளர்களின் இருப்பு அவசியமற்றதாகிறது.

தேசப்பிதாவாக காந்தியை ஏற்றுக்கொள்ளும் தேசம், காந்தியத்தை பின்பற்றுவதாக பாவனை செய்யும் மக்கள் – எப்படி இப்படியொரு சூழல் வாய்க்கப்பட்ட இந்தியாவில் என்கவுண்டர்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. தூக்கு, என்கவுண்டர் என்றதுமே குறிப்பாக மத அடிப்படைவாதிகளின் ஆதரவுதான் விண்ணதிர எதிரொலிக்கிறது. மதங்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எல்லா மதங்களும் ஏதோ ஒருவகையில் அன்பை போதிக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியெனில் இம்மதங்களை தீவிரமாக நம்புபவர்கள், பின்பற்றுபவர்கள் ஏன் அரசக்கொலைகளை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் தமக்கும் உண்மையாக இல்லை. தாங்கள் பின்பற்றும் மதங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சென்னையில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஐவர் கொலையை எடுத்துக் கொள்வோம். வங்கிக் கொள்ளைகளுக்குப் பிறகு ‘துப்பு’ கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ‘வீடியோ க்ளிப்’ கிடைக்கிறது. அதில் இருப்பவன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவன் என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஊடகங்கள் மூலமாக அப்படம் வினியோகிக்கப்படுகிறது. துப்புக் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. நடு இரவில் யாரோ ஒரு முக்கிய அதிகாரிக்கு அனாமதேயமாக ஒரு அழைப்பு வருகிறதாம். அந்த அழைப்பு மூலமாக அடையாளம் காட்டப்பட்டவன் மறைந்திருக்கும் இடம் தெரியவருகிறதாம். துப்பாக்கிகளோடு சுற்றி வளைத்தார்களாம். எச்சரிக்கை விடுத்தார்களாம். அங்கிருந்து பொதுமக்களை சுடுவோம் என்று பதில் வந்ததாம். யோசிக்காமல் இவர்கள் சுட்டுத் தள்ளினார்களாம். உள்ளேப் போய் பார்த்தால் ஐவர் மரணமடைந்திருக்கிறார்களாம். இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு காயமாம்.

அய்யா, அடையாளம் காட்டப்பட்டவன் ஒருவன் தான். மீதியிருக்கும் நான்கு பேரும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதை எப்படி காவல்துறை ’ஸ்பாட்’டிலேயே முடிவுகட்டி, துப்பாக்கிச்சூடு வரை போனது? கொள்ளையடித்தபோதே ’ஏர்கன்’ வைத்து ஏமாற்றியவர்கள், பதுங்கியிருந்தபோது ஒரிஜினல் துப்பாக்கி வாங்கிவிட்டார்களா? சுற்றி வளைக்கப்பட்டவர்கள் அடுத்த ஃப்ளாட்டுகளுக்குப் போய், தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி எப்படி சுடமுடியும்? ஒருவேளை ஜனநெரிசல் மிகுந்த பகுதியில் பட்டப்பகல் வேளையில் பொதுமக்களின் தலையில் இவர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருந்தால் இந்தக் கதை வலுவாக இருந்திருக்கும்.

தமிழகக் காவல்துறை, லாஜிக் மீறாமல் என்கவுண்டர் கதைகள் எழுதக்கூடிய நல்ல புனைவெழுத்தாளர் ஒருவரை உடனடியாக பணிக்கு அமர்த்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்ளையர்களை உயிரோடு பிடித்து நீதிமன்றம் முன்பாக நிறுத்தியிருந்தால் கூட அவர்களுக்கு சிறைத்தண்டனைதான் கிடைத்திருக்கும். காவல்துறை தீர்ப்பில் மரணத்தண்டனை ஐவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அச்சு அசலான சட்டமீறல். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலுவாக இருப்பின் இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைவழக்கு தொடரப்பட வேண்டும்.

தமிழக மனித உரிமை அமைப்புகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. கொள்ளை என்பது குற்றம். கொள்ளைக்கு தண்டனை கொலை என்பது அதைவிட பெரிய குற்றம். அதை மக்கள் கரகோஷத்துடன் வரவேற்பது அநியாய கொடூரம். சகிப்புத்தன்மை மிகுந்தவர்களாக அறியப்பட்ட தமிழர்கள், சவுதி அரேபியர்களாக பரிணாமம் அடைந்து வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவு : கொலை செய்ய விரும்பு!

21 பிப்ரவரி, 2012

அம்புலி

தமிழில் உருப்படியாக வந்திருக்கும் முதல் முப்பரிமாண படம். முப்பரிமாணத்தில் எடுக்கிறோம் என்பதற்காக கிராஃபிக்ஸுக்கும், இதர கந்தாயங்களுக்கும் தண்ணீராக பணத்தைக் கொட்டாமல், சிக்கனமாக சிறப்பாக எடுத்திருக்கும் படக்குழுவினரிடம் கைவலிக்க கைகுலுக்கலாம்.
படத்தின் மொத்தக் கதையையும் இரண்டு நிமிட டைட்டிலிலேயே ஸ்டோரிபோர்டாக சொல்லியிருக்கும் இரட்டை இயக்குனர்களின் தைரியம் அசாத்தியமானது (மைக்கேல் மதனகாமராஜன் ‘கதை கேளு, கதை கேளு’ டைட்டில் நினைவிருக்கிறதா?). ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் டைட்டிலுக்கு முந்தைய – கதைக்கு நேரடியாக தொடர்பில்லாத – பிட்டு அபாரம். வெள்ளைக்காரராக சித்தரிக்கப்படும் அந்த வேட்டைக்காரர் வெள்ளையாக இருக்கிறாரே தவிர வெள்ளைக்காரர் இல்லை. பட்ஜெட் சிக்கனத்துக்கு நல்ல உதாரணம் இது.

1980ல் நடைபெறும் கதை என்பதால் பேக்டிராப்புக்காக இயக்குனர்கள் அளவுக்கு கலை இயக்குனரும் கடுமையாக உழைத்திருக்கிறார். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பர்ஃபெக்‌ஷன் மிளிர்கிறது. கமலஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட ஒரு சிலருக்கே இந்தளவுக்கு தரம் இங்கே சாத்தியமாகியிருக்கிறது. கேமிரா, எடிட்டிங், பின்னணி இசை என்று சகலமும் சரியாக கலக்கப்பட்ட காக்டெயில் இப்படம்.

த்ரில்லர் ஃபேண்டஸியில் லாஜிக் பார்க்க முற்படுவது பைத்தியக்காரத்தனம். ஆனாலும், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படம் தொடங்கியதிலிருந்தே உறுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கல்லூரி – சோளக்காடு – ஏரி – பூமாடத்திபுரம் தொடர்பான நிலவியல் வரைபடம் குழப்பிக்கொண்டே இருக்கிறது.

அம்புலியின் ஆளுகைக்கு உட்பட்ட சோளக்காடு இருபது வருடமாக அப்படியே அழியாமல் இருக்குமா, சோளம் என்பது குறுகியகாலப் பயிர் இல்லையா? மக்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தினால்தான் காட்டுக்கு நடுவே பாதை சாத்தியம். யாரும் வராத காட்டில் ஒரு ஆட்டோ போகுமளவுக்கு பர்ஃபெக்டான பாதை எப்படி சாத்தியம்? சோளக்காடு வழியே ஊருக்கு அசால்ட்டாக ஹீரோக்கள் வந்து போகிறார்கள். ஆனால் ஊர்மக்கள் உள்ளே நுழைய சுவற்றை வெடிவைத்து தகர்க்க வேண்டியிருக்கிறது.

மைல் கல் என்பது பெயருக்குதானே தவிர, அக்கல்லில் இத்தனை மைல் என்று எங்காவது நெடுஞ்சாலைத்துறை எழுதிவைத்திருக்கிறதா? கி.மீ தானே இந்தியக் கணக்கு? ஊருக்கு போக வேண்டுமானால் ஏரியை கடக்கவேண்டும் என்கிற நிலையில் ஹீரோயின்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு வருவது எப்படி சாத்தியம்? சோளக்காட்டுக்குள் மனிதவாசம் தென்பட்டாலே மரணம் எனும்போது பார்த்திபன் மட்டும் எப்படி அங்கேயே வசிக்க முடிகிறது? ஏதோ ஒரு ‘பூ’ வீட்டை சுற்றி வளர்க்கப்படும் பட்சத்தில் அம்புலி வராது என்றால், அந்தப் பூவை பறித்துக்கொண்டு சோளக்காட்டுக்குள் யார் வேண்டுமானாலும் தைரியமாக போய்வரலாமே (பார்த்திபன் வீட்டில் அந்த பூ கூட இல்லை).

அம்புலி என்று நினைத்து வேறு யாரையோ தவறுதலாக பார்த்திபன் போட்டுத் தள்ளிவிடுகிறார், அதுபற்றி போலிஸ் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பார்த்திபன் ஹீரோயினை மடக்கி பண்ணை வீட்டுக்குள் கட்டி போட்டு வைப்பதில் ஆகட்டும், பிற்பாடு ரெண்டு ஹீரோ மற்றும் ரெண்டு ஹீரோயின்களை தூண்டிலாக அம்புலியிடம் அழைத்துப் போவதில் ஆகட்டும்... முழம் முழமாக லாஜிக் பூ ரசிகர்களின் காதில் மைல் கணக்கில் சுற்றப்படுகிறது. இதெல்லாம் திரைக்கதையின் மூலமாகவே சரிசெய்துவிடக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள்தான்.

முழுநீள சுவாரஸ்யப் படத்தில் உறுத்தும் விஷயங்கள் பாடல்கள்தான். தமிழ்ப் படமென்றால் பாடல்கள் இருந்தே ஆகவேண்டுமென்று ஃபெப்ஸியிலோ, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலோ ஏதேனும் சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? ‘நறுக்’கென்று வரவேண்டிய திரைப்படம் தேவையில்லாத பாடல்களால் ‘ஜவ்’வாக இழுத்துக்கொண்டே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓடுகிறது.

எது எப்படியாக இருந்தாலும் த்ரீ-டி த்ரில்லர் படத்தில் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்ப முயற்சித்த வகையில் அம்புலி ஒரு முக்கியமான ஆக்கமாக படுகிறது. இன்றைய திரைப்படங்களில் திராவிடச் சிந்தனைகளுக்கு போதிய களம் இல்லாத நிலையில், மிகத்தைரியமாக ஜெகன் பாத்திரம் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைக்கிறார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள். ஜெகன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதை நேரடியாகக் கூறாமல், அவரது கருப்புச்சட்டை, வீட்டில் தந்தை பெரியார் படம் போட்ட காலண்டர் என்று காட்சிகளால் உணர்த்துகிறார்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிடைக்கும் இடத்தை மேடையாக்கி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது அய்யாவுடைய தொண்டர்களின் பாணி. இறுதிக்காட்சிக்கு முந்தைய காட்சிகளில் இது மிகச்சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. காரின் மீது ஏறி பொதுமக்களிடம் ஜெகன் பேசும் வசனங்கள் கூர்மையானவை.

‘பகுத்தறிவே இறுதியில் வெல்லும்!’ என்கிற கருத்தை ஒரு வணிகப்படத்தில் ஆணித்தரமாக நெற்றிப்பொட்டில் அடித்து ’நச்’சென்று சொல்லியிருப்பதால் அம்புலியை ஆரத்தி சுற்றி வரவேற்கலாம்.

16 பிப்ரவரி, 2012

முதல் காதல், முதல் கவிதை

காதல் தொடர்பான சொற்கள் நான்கைந்தை வரிசையாக சொல்லிப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன். ‘கவிதை’ என்கிற சொல்லை கண்டிப்பாக சொல்லியிருப்பீர்கள். காதலுக்கும், கவிதைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கவிதை எழுதாத அல்லது எழுத முயற்சிக்காத காதலன் எவனுமே உலகில் இல்லவே இல்லை. உலகின் முதல் காதலன் மட்டுமல்ல. முதல் கவிஞனும் ஆதாமாகத் தான் இருக்கக்கூடும்.

பெண்களுக்கு நிஜமாகவே கவிதை பிடிக்குமா என்கிற சந்தேகம் எனக்குப் பல வருடங்களாக உண்டு. கடும் குளிரடித்த, வெக்கையால் தொப்பை தொப்பலான, கோரஸாக கொசுக்கள் ரீங்காரமிட்ட.. என்று பலவகைகளில், காலப்பருவங்களில் வேறுபட்ட ஏராளமான இரவுகளை வீணடித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்து, அடித்துத் துவைத்து யோசித்ததில் ஒரே ஒரு உண்மை சட்டென்று பல்பிட்டது. நியாயமாக பார்க்கப் போனால் ‘யுரேகா’ என்று கத்திக்கொண்டு அம்மணமாக அன்று இரவு நான் தெருவுக்கு ஓடி வந்திருக்க வேண்டும். மாறாக ‘காயத்ரீ’ என்று அப்போது லவ்விக் கொண்டிருந்த ஃபிகரின் பெயரை உரக்கச் சொல்லிக் கொண்டே ஓடினேன். அதிர்ஷ்டவசமாக லுங்கி மட்டுமாவது இடுப்பில் இருந்தது. “மாரியாத்தா எம்புள்ளைக்கு பேய் புடிச்சிடிச்சி” என்று என் பின்னாலேயே அம்மாவும், “கிறுக்குப்பய மவனே!” என்று அப்பாவும் ஓடிவந்ததும் நினைவிருக்கிறது.

நான் கண்டறிந்த உண்மை யாதெனில் பெண்களுக்கு ‘பாவனை’ அதிகம். சில விஷயங்களைப் பிடிக்கிறதோ இல்லையோ ரொம்பப் பிடிப்பதைப் போலவே பாவனை செய்வார்கள். சிவாஜி, மார்லன் பிராண்டோவையெல்லாம் மிஞ்சக்கூடிய நடிப்பு பெண்களுக்கு உண்டு. குறிப்பாக காதல் விவகாரங்களின் போது ஓவர் ஆக்டிங்குக்கு போய்விடுவார்கள். பெண்களுக்கு teddy bear பிடிக்கும் என்று கண்டறிந்து, காதலர் தினத்துக்கு பரிசாக முதன்முதலாக பரிசளித்த காதலன் எவனென்று கண்டுபிடித்து அவனைச் செருப்பால் அடிக்க வேண்டும். காதலனிடம் குழந்தைத்தனமான குணம் கொண்டவள் என்று வெளிப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு காதலியும் தனக்கு teddy bear பிடிப்பதாக நடிக்கிறாள். ஒரு பொம்மையின் விலை அநியாயத்துக்கு ஐநூறு ரூபாய் விற்கிறது சார். ஐஸ்க்ரீமே பிடிக்காத பெண் கூட “ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாமா?” என்று காதலித்ததும் கொஞ்சத் தொடங்கி விடுகிறாள். ‘அ ஆ இ ஈ’ படிக்கத் தெரியாத சர்ச்பார்க் பெண் கூட “ஐ லைக் பாலகுமாரன் ஸ்டோரீஸ்யா” என்று ஃபிலிம் காட்டுகிறாள். இதுமாதிரியான பாவனைகளில் ஒன்றுதான் அவர்களுக்குக் கவிதை பிடிப்பதும்கூட. அது எப்படி சார்? ஸ்டெல்லாவுக்கும் கவிதை பிடிக்கிறது, ஃபாத்திமாவுக்கும் கவிதை பிடிக்கிறது, பத்மினிக்கும் கவிதை பிடிக்கிறது. பெண்கள் எல்லோருக்கும் கவிதையைப் பிடிக்குமென்றால், கவிதைத் தொகுப்புகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி கவிஞர்கள் எல்லாம் அம்பானி ஆகியிருக்க வேண்டுமா, இல்லையா?

கவிதை மீது இவ்வளவு obsession எனக்கிருப்பதை வைத்து, நான் ஒரு கவிஞனாகவோ அல்லது தீவிர கவிதை வாசகனாகவோ இருக்கக்கூடும் என்று இந்நேரம் நீங்கள் யூகித்திருக்கக்கூடும். உங்கள் மூளையில் தோன்றிய இந்த படிமத்தை உடனே delete keyயைத் தட்டி தயவுசெய்து அழித்துவிடுங்கள். குறிப்பாகக் காதல் தொடர்பான கவிஞர்களைக் கழுவில் ஏற்றவேண்டும், அந்தக் கவிதைத் தொகுப்புகளை நடுத்தெருவில் கொட்டி போகி எரிக்கவேண்டும் எனுமளவுக்கு நான் ஒரு கவிதை அந்நியன். இப்படிப்பட்ட என்னையே ஒருத்தி கவிதை மாதிரி எதையோ கிறுக்க வைத்துவிட்டாள் என்கிற கோராமையை எங்கு போய் சொல்வது?

அது என்னுடைய வெற்றிகரமான முதல் காதல். முதல் முத்தமும் கூட என்று நினைக்கும்போது பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும்.. சனியன்.. இப்போது வெட்கம் பிடுங்கித் தொலைக்கிறது. மிகச்சரியாக பதினாறு வயதில் மலர்ந்த காதல். அந்த வயதில் வசீகரப்படுத்த வைக்கும் தோற்றப் பொலிவு எனக்கு இல்லாத நிலையில், அதை ஈடுக்கட்டும் வகையில், அவளை வசியப்படுத்த செய்த கோமாளித்தனங்களுக்கு அளவேயில்லை.

பதிமூன்று வயதுப் பெண்ணுக்கு காதல் கவிதை பிடிக்கும் என்று யாராவது என் எதிரில் இப்போது சொன்னால், இடுப்பிலிருக்கும் ரிவால்வரை எடுத்து நெற்றிப்பொட்டை குறிவைத்து ‘டுமீல்’ என்று சுட்டுவிடுவேன். துரதிருஷ்டவசமாக காதல்வசப்பட்டிருந்த நான் அப்போது நம்பித் தொலைத்தேன். எனக்குள் இல்லாத கவிஞனை, இருப்பதாக எண்ணி பேப்பரும், பேனாவுமாக பாத்ரூம் போய் உட்கார்ந்தேன். அப்போது ஹைக்கூ பிரபலமாகிக் கொண்டிருந்த காலக்கட்டம். சுலபமாக எழுதிவிடக் கூடிய வடிவமென்பதால் ஹைக்கூவில் அவளை அசத்தலாம் என்பது என் திட்டம். எவ்வளவோ சிந்தித்தும், அவ்வப்போது சிறுநீர் வந்ததே ஒழிய, கவிதை வந்து தொலைத்தபாடில்லை. இரவு முழுக்க என் படைப்பாற்றலை பால் கறந்து முயற்சித்தும், படைப்புக்காம்புதான் இரத்தம் கட்டிக் கொண்டதே தவிர கவிதை சுரக்கவேயில்லை.

தூக்கமின்றி எரிச்சலடைந்து சிவந்த கண்களோடு வகுப்பறைக்குச் சென்றால் மேத்ஸ் மாஸ்டர் எதையோ சுவற்றில் கிறுக்கி தாலியறுத்துக் கொண்டிருந்தார். கடைசி பெஞ்ச் என்பதால், டேபிளில் தலைவைத்து தூங்கிவிட்டேன். தூக்கம் வரத் தொடங்குவதற்கு முன்பே கனவு வந்துவிட்டது. கனவுக்கு நிறம் கருப்பு வெள்ளை. ஆனால் காதலிகள் வரும் கனவுகள் மட்டும் வண்ணமாய் தெரிவதாய் காதலன்களுக்கு அப்படியொரு மூடநம்பிக்கை. அன்றைய கனவில் வெள்ளுடையில் அவள் வந்தாள். அசத்தலான குரலில், மொழியில் ‘ஐ லவ் யூ’ சொன்னாள். பறக்கும் முத்தம் தந்தாள். ஒரு கதாநாயகனைப் போல ஸ்டைலாக அவளை நெருங்கினேன். கண்களாலேயே பேசினேன். அவள் நாணினாள். கோணினாள். உதட்டோடு உதட்டை நெருக்கமாக கொண்டுச் செல்ல அவள் விலகினாள். வற்புறுத்தினேன். ‘ணங்’கென்று மண்டையில் கொட்டு வைத்தாள். கனவென்றால் வலிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சுறாத்தனமாக வலித்தது. அனிச்சையாக ‘அனிதா’வென்று கத்திக் கொண்டு தலையைத் தடவ, இன்ஸ்டண்ட் பூரி மாதிரி டீக்கடை பொறை சைஸில் நடுமண்டை வீங்கியிருந்தது. கனவு எது, மெய் எது என்று புரியாத தருணம் அது. கண் திறந்துப் பார்த்தால் கட்டை டஸ்டர் வைத்து என் நடுமண்டையை பதம் பார்த்திருந்தார் மேத்ஸ் மாஸ்டர்.

(அதையடுத்து நடந்த சோக நிகழ்வினை சொன்னால் இக்கட்டுரையின் காதல் சுவை கெடக்கூடும். என்னுடைய ரொமான்ஸ் மூட் ஸ்பாயில் ஆகும். எனவே அடுத்த மூன்று பாராகிராப்புகளை இங்கே தணிக்கை செய்கிறேன்)

அந்தக் கனவால் விளைந்த பயன் யாதெனில், ஓரிரவு செலவிட்டும் என்னால் எழுத முடியாத கவிதையை ஓரிரு நொடிகளில் கண்டுகொண்டேன். அவள் பெயரைவிட சிறந்த கவிதையை என்னால் எழுதிவிட முடியாதென்று தெளிவு கண்டேன்.

வகுப்பறைக்கு வெளியே முட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், குப்பையாக கீழேக் கிடந்த ஒரு காகிதத்தில் என்னுடைய முதல் காதல் கவிதையை எழுதினேன்.

அனிதா..
இரு இமைகளை
இறுகமூடி
தேன்சுளை உதடு விரித்து
Honey தா!

(சுபம்)

கட்டுரை ஆசிரியரின் பின்குறிப்பு : வாசகர்களே! இந்தக் கவிதை அனிதாவுக்கு பிடிக்கவில்லை, வாசித்துவிட்டு நம் இன்ஸ்டண்ட் கவிஞரின் முகத்தில் கொத்தாக காறி உமிழ்ந்திருப்பாள் என்பதையெல்லாம், அச்சு பிச்சுவென்று இம்மாதிரி ஆரம்பத்தில் சில காதல் கவிதைகளை எழுதிய நீங்களே இன்னேரம் யூகித்துவிட்டிருப்பீர்களே? விடுங்க பாஸூ. ALL IS WELL.

(நன்றி : பண்புடன்.காம் காதலர்தின ஸ்பெஷல்)

15 பிப்ரவரி, 2012

’தாலியக் கட்டு!’ - காதலர்தின எச்சரிக்கை!

ஏதோ ஒரு காதலர் தினத்துக்கு அடுத்தநாள் எழுதியது இது. இனி எல்லா காதலர் தினத்துக்கும் அடுத்தநாள் இதை அப்படியே பதிந்துவிடலாம் போல தெரிகிறது. வாழ்க காதல்!


நேற்று காதலர் தினம் தமிழகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட வில்லை என்றாலும் ஏதோ பரவாயில்லை என்ற அளவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதுவரை பிகர் கிடைக்காமல் அல்லல்பட்ட கொலைவெறி காதலர்கள் ஏதோ ஒரு தைரியத்தில் நேற்று சூப்பர் பிகர்களை பிரபோஸ் செய்து, அந்த பிகர்களும் பாவப்பட்டு காதலை ஏற்றுக் கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவருகிறது.

இவ்வாறாக மக்கள் மகிழ்ச்சியோடு காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்ததை கண்டு வயிறெரிந்து குழப்பத்தை விளைவித்திருக்கிறார்கள் பொந்துமுன்னணியினர். தங்களை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக் கொள்ளவும், சாதிமறுப்பு - மதமறுப்பு திருமணங்கள் காதலால் விளைந்து தாங்கள் இதுவரை கட்டிக் காத்த வருணாசிரமக் கோட்டை இடிந்துவிடுமோ என்ற பயத்தில் நூதனப் போராட்டம் என்ற பெயரில் காதலர்களையும், பொதுமக்களையும் துன்புறுத்தியிருக்கிறார்கள்.


கும்பகோணம் பகுதியில் தெருவில் அதுபாட்டுக்கு காதலர் தினத்தை கொண்டாடி அலைந்துகொண்டிருந்த ஜோடி நாய்களை பிடித்துவந்து அந்த நாய்களின் கழுத்தில் பிப்ரவரி-14 காதலர் தினம் என்று போர்டு மாட்டி துன்புறுத்தியிருக்கிறார்கள். இதனால் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அலைந்துகொண்டிருக்கும் தெருநாய்கள் பொந்துமுன்னணியினரை கண்டாலே கிலி பிடித்து, குலைத்து ஓடுவிடுகின்றன. இச்செய்தியை கேள்விப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தெருநாய்களும் அதிருப்தியடைந்திருப்பதாக தெரியவருகிறது. நாய்களுக்கு கூட தமிழ்நாட்டில் காதல் செய்ய உரிமையில்லையா என்று மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் காதலர் தினம் கொண்டாடி மகிழ்ந்த காதலர்களை 'தாலி கட்டிக் கொள்ளுங்கள்' என்று கூறி மஞ்சள் கயிறு ஒன்றை கொடுத்து காதலர்களை மறித்து வன்முறை வெறியாட்டம் ஆடித்தீர்த்திருக்கிறார்கள் பொந்துமுன்னணியினர். காதலர் தின சிறப்பு பூஜை செய்யவந்த காதலர்கள் தாலி கட்டிக் கொண்டுதான் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறி கோயில் வாசலில் அராஜகம் செய்திருக்கிறார்கள் இந்த காவாலிகள்.

எங்கே தங்கள் காதலிகளின் கழுத்தில் இவர்களே மஞ்சள் கயிறு கட்டிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பல காதலர்கள் காதலிகளை கூட்டிக்கொண்டு சிதறிஓடியிருக்கிறார்கள். திருச்சி மலைக்கோட்டை, முக்கொம்பு போன்ற இடங்களுக்கு காதலர்தினத்தை கொண்டாடி மகிழ வந்த ஜோடிகள் இதனால் பாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.


அதுபோலவே காதலர்தின வாழ்த்து அட்டைகளை விற்ற கடைகளை சூறையாடி, வாழ்த்து அட்டைகளையும் கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

மாறாக பொந்துமுன்னணியினரின் இந்த செயல்கள் கள்ளக்காதலர்களுக்கு வசதியாக அமைந்திருக்கிறது. அடுத்தவன் மனைவியை தள்ளிக் கொண்டு வந்தவன், பொருந்தாக்காதல் செய்தவன் போன்ற காமக்கொடூரன்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பொந்துமுன்னணியினர் அளித்த மஞ்சக்கயிற்றை தங்கள் ஜோடிகளுக்கு கட்டி தங்கள் இழிச்செயல்களுக்கு அங்கீகாரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இவர்கள் மீது காவல்துறை எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது என்று தெரியவில்லை. காதலர்களுக்கு தனி இடஒதுக்கீடே தரவேண்டும் என்ற ரேஞ்சில் சிந்தனையாளர் ஞாநி போன்றவர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற கேலிக்கூத்தான விஷயங்களை நடத்திய பொந்துமுன்னணியினரின் போராட்டங்கள் குறித்து துக்ளக்கின் அட்டைப்படத்தில் கேலிச்சித்திரம் வரையப்படுமா? தலையங்கம் எழுதப்படுமா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.


நானும் கூட கவர்ச்சி பெருங்கடல் சன்னி லியோனை உயிருக்குயிராக காதலித்து வருகிறேன். பொந்துமுன்னணியினர் என்னை கட்டாயப்படுத்தி சன்னியின் கழுத்தில் மஞ்சக்கயிறு கட்டவைத்துவிடுவார்களோ என்று இன்பமாக பயந்துபோயிருக்கிறேன் :-(

13 பிப்ரவரி, 2012

இதற்குப் பெயர் தான் காதலா?

நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலாத கவர்ச்சியான மாநிறம். அழகு சொட்டுகிறது என்று உடனடியாக சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான் அவள்.

பார்த்ததுமே
மனசில் பச்சக்கென்று ஃபெவிஸ்டிக் மாதிரி ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது. லொக்… லொக்… லொக்… தொடர்ச்சியாக ஐம்பது நொடி இருமல்.

கண்களில் நீர் கோர்த்தது. என்னவளை அடையாளம் கண்டுக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா? இல்லையென்றால், அவ்வழியாக கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான். என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்பு போல் மாறினேன்.

நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா, முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள், முதன்முதலாய் காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.

கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்தது என் இளமை. நந்தனத்தில் பார்த்த அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது. மின்னலே மாதவன் மாதிரி அந்த ஒரு நொடி தரிசனத்தில் முற்றிலுமாய் மாறிவிட்டேன்.

அவள் தான் என் காதலி என்று இப்போது தீர்மானமாக முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை போய் தேடுவது?

பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், பிள்ளையார் கோயில்களுக்கு ஏன் இளம்பெண்கள் அதிகம் வருகிறார்கள்?

ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால், சிட்டி சென்டர் ப்ளாஸா பக்கமாக செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மைனா மாட்டுவாளா என்று கண்களால் சலிக்கிறேன்.

அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் ஏற்பட்டிருக்கலாம். அவளைக் காணவே முடியாத பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. நிச்சயமாக பெண் ஒரு போதை. கண்ணதாசன் சரியாகதான் சொல்லியிருக்கிறார். 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் நிறைய வருகிறது.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன். இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. ச்சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?

எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு. வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி.. அய்யோ கடவுளே! எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?

உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு கேன்சர் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?

11 பிப்ரவரி, 2012

பிட்டு பார்த்தது ஒரு குற்றமா?

கடந்த வாரம் முழுக்க கர்நாடக அமைச்சர்கள் பிட்டுப்படம் பார்த்தது ஒரு தேசத்துரோக குற்றம் என்பதைப் போல மக்களிடம் விவாதம் நடந்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஏசு சொன்னதைதான் இரண்டாயிரம் வருஷம் கழித்தும் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. “உங்களில் எவன் யோக்கியனோ, அவன் முதல் கல்லை எறியலாம்”.

பொதுவாக இதுமாதிரி ‘மேட்டர்’களில் கேரள அமைச்சர்கள்தான் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று யூகித்திருந்தேன். என் யூகத்துக்கு மாறாக கர்நாடக அமைச்சர்களும் – அதிலும் கலாச்சாரக்காவல் இயக்கமான பாஜகவின் அமைச்சர்கள் - முன்னோடிகளாக இருக்கிறார்கள் என்பது அறிந்து மெத்த மகிழ்ச்சி.

பிட்டுப்படம் பார்ப்பது ஒரு கலாச்சாரச் சீரழிவு என்பதாக வெறும் வாய் வார்த்தையில்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம் ஒவ்வொருவருக்கும் ‘செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ இருந்தாலும் கூட ‘பிட்டு’ பார்ப்பதில் இருக்கும் குறுகுறுப்பு எழுபது, எண்பது வயசானாலும் அடங்குவதில்லை. பெண்களுக்கு ‘பிட்’டில் ஆர்வமில்லை என்றுதான் ஒரு காலத்தில் அப்பாவியாக நினைத்திருந்தேன். அதுவும் வெத்து யூகம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பாக அனுபவப்பூர்வமாக உணரமுடிந்தது.

பிட்டு பார்ப்பதில் போய் என்னத்தை குற்றவுணர்ச்சி என்பது புரியவில்லை. சுய இன்பம் மாதிரி இதுவும் இயல்பான ஒரு சமாச்சாரம்தான். வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. பிட்டு என்றில்லை. பரபரப்பான எந்த விஷயமாக இருந்தாலும் வேடிக்கை பார்ப்பது மட்டும் நமக்கு சலிப்பதேயில்லை. செக்ஸ் சர்வநிச்சயமாக பரபரப்பான விஷயம். எனவே பிட்டு பார்த்தவர்கள் அதற்காக தாம் தரமிறங்கி நடந்துகொண்டோமே என்று சுயகழிவிரக்கம் கொள்வதோ, பிட்டு பார்த்தவர்களை நோக்கி ‘அயோக்கியர்கள்’ என்று பழிப்பதோ அநியாயம்.

‘பிட்டு’ எடுப்பதுதான் குற்றம், பார்ப்பது ஒன்றும் பெரிய பாவமல்ல என்பது என் வாதம். பிட்டுக் கலாச்சாரத்துக்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் பெண்கள். குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்கப் பெண்கள். பணத்துக்காக விருப்ப அடிப்படையில் பெர்ஃபாமன்ஸ் காட்டுபவர்கள் போய், கட்டாயத்துக்காக இதில் ஈடுபடுத்தப்படுபவர்கள், கேண்டிட் முறையில் மறைவாக கேமிரா வைத்து எடுக்கப்பட்டு வினியோகிக்கப்படும் பிட்டுகள் என்று இத்துறை நாம் எவ்வளவு பெரிய அயோக்கியர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத படுமோசமான அயோக்கியத்தனமான முறையில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. ‘பிட்டு’ விவகாரத்தை எதிர்ப்பதாக இருந்தால், இந்த அரசியல் அடிப்படையில்தான் எதிர்க்க வேண்டும்.

பிட்டு மாதிரி எந்த சமகாலப் பிரச்சினையாக இருந்தாலும் உலகமயமாக்கலின் விளைவு மற்றும் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதைதான் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. உலகமயமாக்கல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுப் படுத்தியிருக்கிறது. அதன் பலனாக விளையும் சாதகங்களோடு, பாதகங்களையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இன்றைய தேதியில் இணையத்துக்கு இருக்கும் அகோரப்பசிக்கு, இந்த ‘பிட்டுகள்’ பெரும் தீனியைப் போட்டு வருகின்றன.

இந்தியக் கலாச்சாரத்தில் முதன்முதலாக கோயில்களில் சிற்பவடிவில் ‘பிட்டுகள்’ காட்டப்பட்டன என்பது வரலாற்றில் அழுத்தமாக பதிவான ஒன்று. பிற்பாடு தொழில்நுட்பம் முன்னேற முன்னேற புகைப்படங்களில், சினிமாக்களில், வீடியோக்களில், விசிடிக்களில், இணையத்தில் என்று வளர்ந்து இன்று மொபைல் போன்களில் வந்து நிற்கிறது. இது ‘பிட்டு’களை விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி தவிர்க்க இயலாத சூழல். இக்கலாச்சாரம் ஜூராசிக்தனமாக வளர்ந்து எதிர்காலத்தில் நடுத்தெருவில் யாராவது இருவர் (ஆண் + ஆணாக இருந்தாலும் கூட) லைவ்ஷோ காட்டி, அதை சுற்றிலும் ஒரு ஐம்பது, நூறு பேர் வேடிக்கைப் பார்ப்பதாக இருந்தாலும் நாம் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அடையத்தேவையில்லை. ஏதேனும் ஒரு சேனல் இதை நேரடி ஒளிபரப்பாகவும் ஸ்பான்ஸர்கள் உதவியோடு ஒளிபரப்பக்கூடும்.

அபத்தமான, ஆபாசமான இந்தக் கட்டுரை மீண்டும் கர்நாடக அமைச்சர்களுக்கே வருகிறது. ஏதோ இரண்டு அமைச்சர்கள் ஆர்வத்தில் ‘பிட்டு’ பார்த்துவிட்டார்கள். ஒரு அமைச்சர் தன் மொபைலையே முல்லைக்கு தேர் கொடுத்த பாரியாய் கொடுத்து உதவியிருக்கிறார். இதையெல்லாம் குற்றமென்று சொல்லமுடியுமாவென தெரியவில்லை. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் இம்மாதிரி செல்போனில் பிட்டு பார்ப்பார்கள் என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கருக்கு தெரியாது. எனவே இதுகுறித்த சட்டப்பிரிவு எதையும் அவர் வரையறுத்திருக்க வாய்ப்பில்லை. நம்மிடம் இருக்கும் அரைநூற்றாண்டுக்கும் மேலான கிழடு தட்டிப்போய்விட்ட சட்டத்தை வைத்து அவர்கள் மீது கிரிமினல் குற்றமாக வழக்கு தொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பப்ளிக் நியூசன்ஸ் மாதிரி ஏதாவது கேஸுதான் போடமுடியும். அவ்வாறு இதற்கு முன்பாக ‘பிட்டு’ பார்த்தவர்கள் யார்மீதாவது என்ன பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் யாராவதுதான் சொல்லியாக வேண்டும்.

இந்த விஷயத்தில் அமைச்சர்கள் செய்த குற்றத்தைவிட, அதை ‘ஜூம்’ செய்து உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கேமிராமேன் செய்த குற்றத்தின் அளவுதான் பெரியது என்று கருதுகிறேன். இரண்டு பேர் பார்த்ததை இப்போது உலகமே பார்க்க ஆசைப்படுகிறது. பர்மாபஜாரில் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ‘மினிஸ்டர் பார்த்த பிட்டு கொடுப்பா’ என்று கேட்டு, டிவிடி வியாபாரிகளை ‘டார்ச்சர்’ செய்துக் கொண்டிருக்கிறார்களாம். அவசரத்துக்கு கையில் கிடைக்கும் ஏதோ மொக்கைப் பிட்டை கொடுத்து ‘இதைத்தான் மினிஸ்டர்கள் பார்த்தார்கள்’ என்று அவர்களும் வாடிக்கையாளர்களை ‘திருப்தி’ செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ‘பிட்டுவெறி’ சமூகம்தான் அப்பாவி அமைச்சர்களை ‘ராஜினாமா’ லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

10 பிப்ரவரி, 2012

அற்புதம், ஆனால் உண்மை!

வடஇந்தியாவில் ஜமால்புரி என்றொரு நகரம். அதற்கு பக்கத்தில் பக்காரா என்றொரு கிராமத்தில் ஷங்கிமங்கீஸ்வரர் என்றொரு ஆலயம். ஒரு சமயம் இந்த ஆலயத்துக்கு திடீரென ஒரு நல்ல பாம்பு வந்தது. இதைப் பார்த்த பூசாரி பயந்து ஓட முயற்சித்தார். உடனே பாம்பு மனிதக் குரலில் பேசியது.

“நான் சில நாட்கள் பூமியில் அவதாரம் எடுப்பேன். தர்மத்தை யார் கெடுக்கிறார்களோ அவர்களை அழிப்பேன். இங்கே நடந்த அதிசயத்தை யார் கதையாக எழுதி அவர்களது வலைப்பூவில் பதிவிடுகிறார்களோ, அவர்களுக்கு 24 நாட்களில் நினைத்ததை எல்லாம் தீர்த்து வைப்பேன். இந்த கதையை படித்துவிட்டு இன்று, நாளை என்று நாட்களை கடத்துபவர்களை தெருநாயை விட்டு கடிக்கச் செய்வேன்”

இவ்வாறாக கூறிவிட்டு நல்ல பாம்பு மறைந்துவிட்டது.

விஷயத்தை கேள்விப்பட்ட முகர்ஜி என்பவர் தன்னுடைய பெங்காலி பிளாக்கில் இந்தக் கதையை எழுதினார். இருபத்து ஐந்தாவது நாள் அவருக்கு திருமணம் ஆனது. அமெரிக்காவில் ஜார்ஜ் பராக் என்பவர் கூகிள் டிரான்ஸ்லேட்டரில் முகர்ஜியின் கதையை மொழிமாற்றி வாசித்து, தனது வலையில் ஒரு கதையாக போட்டார். இருபத்தி ஆறாவது நாள், நீண்டநாட்களாக தொல்லை கொடுத்து வந்த அவரது மனைவியிடமிருந்து அவருக்கு விவாகரத்து கிடைத்தது.

உகாண்டாவைச் சேர்ந்த அடிஜமீன் என்பவர் இந்தக் கதையை கேள்விப்பட்டு கேலியும், கிண்டலும் செய்தார். அவர் ஜெர்மனிக்குக்கு போயிருந்தபோது, பெர்லின் தெருவிலிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் நான்கு அவரைப் பாய்ந்து பிடித்து, கடித்துக் குதறிப் போட்டது. தொப்புளைச் சுற்றி ஊசியே போடமுடியாத அளவுக்கு தொப்புள் எது, மார்பு எதுவென்று அடையாளம் தெரியாத அளவுக்கு நாய்க்கடி படு கோரமாக அமைந்துவிட்டது.

விஷயத்தை கேள்விப்பட்டு, நான் இந்தக் கதையை எழுதி டிராஃப்டில் போட்டு மிகச்சரியாக நேற்றோடு, இருபத்தி நான்கு நாட்கள் முடிந்துவிட்டது. இன்று அதுவாகவே பப்ளிஷ் ஆகிவிட்டது. இருபத்தி ஐந்தாவது நாளான இன்று, நீங்கள் இதைப் படித்துவிட்டு என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கதையை வாசித்துவிட்ட பாவத்துக்காக இதை கட் & பேஸ்ட் செய்து உங்கள் வலைப்பதிவில் இடாமல் அலட்சியப்படுத்தும் பட்சத்தில், அடிஜமீனுக்கு நேர்ந்த கோராமை உங்களுக்கும் நேரலாம். ஜட்டி போட கூட இடமில்லாத அளவுக்கு நாய்க்கடி மோசமாக அமையலாம் என்றும் எச்சரிக்கிறேன்.

7 பிப்ரவரி, 2012

கதிரேசன் செட்டியாரின் காதல்

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அழகான வடிவமைப்பு கொண்டவை என்கிற ஒரே காரணத்துக்காகவே சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று மா.கிருஷ்ணன் எழுதிய ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’. அவரே வரைந்த முகப்பு ஓவியத்தோடு, கவர்ச்சிகரமான தலைப்போடு.. அதேநேரம் மனதை மயக்கக்கூடிய vintage feelingஐ உருவாக்கியது இந்த நூலின் அட்டைப்படம். அட்டையிலேயே subcaption ஆக ‘ஒரு துப்பறியும் நவீனம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பழையநூல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் என்கிற எண்ணத்தோடு, வேறெதுவும் பெரிய எதிர்ப்பார்ப்புகள் இன்றியே புரட்டினேன்.

இந்நூலின் அட்டையை வடிவமைத்த சந்தோஷ் தற்போது உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பிரபல பதிப்பகங்களின் பெரும்பாலான நூல்களின் மேலட்டையை அலங்கரித்து வருகிறார். ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ நூலில் உள்ளே இடம்பெற்ற படங்களை மிக சுமாரான தரத்தோடு இவர்தான் வரைந்திருக்கிறார். என்னை மாதிரியே சந்தோஷும் இது நாற்பதுகளிலோ, ஐம்பதுகளிலோ நடைபெறும் கதையென்று நினைத்து வரைந்திருப்பார் போல. போலிஸ்காரர்கள் டவுசர் அணிந்திருக்கிறார்கள்.

மாறாக இது 1989ல் நடக்கும் கதையென்று நாவலின் பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1995ல் இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது நூலாசிரியரின் வயது 83. அடுத்த ஆண்டே காலமாகிறார். அதே ஆண்டுதான் இந்நூலும் முதல் பதிப்பு பெறுகிறது. உலகளவில் பிரபலமான சூழலியலாளரான மா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் முதல் நாவல் இது. 1970லேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர் இவர். எனக்கென்னவோ நாவலை விட இந்த பின்னுரை ஏகத்துக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

கதிரேசன் செட்டியாரின் வீட்டு வேலைக்காரன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்படுகிறான் என்று முதல் அத்தியாயம் தொடங்குகிறது. நேரடியாக கதைக்குள் இறங்கிவிடும் ஆசிரியர், அடுத்தடுத்து ஏராளமான பாத்திரங்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்தி நிதானமாக டெஸ்ட் மேட்ச் ஆடியிருக்கிறார். விறுவிறுப்பான நடையிலேயே துப்பறியும் நாவல்களை வாசித்து பழகிய நமக்கு இது ஒரு புதுவித அனுபவம்தான்.

ஒரு கொலை மட்டுமே முழுநீள நாவலுக்கு போதுமான சரக்கில்லை என்பதை நாவல் எழுத முயற்சிப்பவர்கள், எழுதியவர்கள் அறிந்திருப்பார்கள். மா.கிருஷ்ணனும் எழுதத் தொடங்கும்போது உணர்ந்திருப்பார். எனவே ஊரில் நடைபெற்ற ஒரு கோயில் கொள்ளையையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறார். விவேக், நரேன், கணேஷ்-வசந்த் என்று ஆக்‌ஷன் ஹீரோக்களையே பெரியளவில் வாசித்த நமக்கு இந்நூலில் ஆற, அமர விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரிகள் ‘திக்கை’யாக தெரிவதில் ஆச்சரியமேதுமில்லை.

நூலின் மிகப்பெரிய பலம் மா.கிருஷ்ணனின் மொழி. இவ்வளவு வசீகரமான மொழியை சமீபத்தில் நான் வாசித்ததேயில்லை. விசாரணை அதிகாரியான முகைதீன் என்கிற பாய் கூட ‘அவா ஊதுனா, இவா வருவா’ ஸ்டைலில் பிராமண பாஷைதான் பேசுகிறார். இந்த மாதிரி ‘லாஜிக்’கெல்லாம் பெரிய பொருட்டல்ல என்று நினைக்கக்கூடிய வாசிப்பின்பப் பிரியர்களுக்கு இந்நூல் சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் சைட் டிஷ்ஷாக கொண்ட மட்டன் பிரியாணி விருந்து.

ஏகத்துக்கும் கேரக்டர்களை அறிமுகப்படுத்திவிட்டு ஆசிரியர் திணறுவதாக சில இடங்களில் தோன்றுகிறது. முடிச்சு மேல் முடிச்சு போட்டுவிட்டு அவிழ்ப்பது என்பதுதான் க்ரைம் தில்லர்களின் அடிப்படையே. மாறாக எங்கே முடிச்சுப் போட்டோம், அதை எங்கே அவிழ்க்கப் போகிறோம் என்கிற திட்டமிடல் க்ரைம் நாவல்களை எழுதுபவர்களுக்கு அவசியம். மசலா கதைகளுக்கு லாஜிக் பார்ப்பது பாவம்தானென்றாலும், 89ல் மதுரைக்கு அருகிலிருக்கும் ஒரு சிறுநகர காவல்நிலையத்தில் போன் கூட இருக்காதா என்றெல்லாம் எடக்குமடக்காக யோசிக்கத் தோன்றுகிறது. இந்நாவலை மட்டும் லாஜிக் லபக்குதாஸூகளான விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் வாசித்தால், கிழித்து தோரணம் மாட்டி, வூடு கட்டி குத்தாட்டம் போடுவார்.

இருபத்தாறு அத்தியாயங்கள் வரை சாவகாசமாக வெத்தலைப்போட்டு அன்னநடை நடந்துக் கொண்டிருந்த நாவலாசிரியர் திடீரென முடிக்கும் பொருட்டு சஸ்பென்ஸை மொக்கையாக கட்டுடைக்கிறார். அதன் பிறகு திடீரென கதைக்கும், கதையின் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று யோசித்திருப்பார். நாவலின் கடைசி மூன்று பாராகிராப்புகளில் அட்டகாசமாக சம்பந்தப்படுத்தி முடிக்கிறார். இந்த ‘யூ’ டர்ன்தான் இந்நாவலை ஒரு கலைப்படைப்பாக மனதுக்குள் நிறுத்துகிறது. இதுவரை வாசித்த கதையின் பரிமாணத்தை அப்படியே ஒட்டுமொத்தமாக வேறு பரிமாணத்துக்கு அள்ளிச் செல்லுகிறது. இந்த புதிய பரிமாணத்தில் மீண்டும் ஒருமுறை உடனே வாசிக்க வைக்கத் தூண்டுகிறது.


நூல் : கதிரேசன் செட்டியாரின் காதல்

ஆசிரியர் : மா.கிருஷ்ணன்

பக்கங்கள் : 244

விலை : ரூ.125/-

வெளியீடு : மதுரை பிரஸ்
60-பி, கோதண்டராமர் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.
மின்னஞ்சல் : maduraipress@gmail.com

4 பிப்ரவரி, 2012

தமிழ்ப் பதிப்புத்துறைக்கு நெருக்கடியான காலம்!

வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம் என்ற அறிஞர் அண்ணாவின் வழியில் வந்த கட்சிகள்தான் மாறி, மாறி மாநிலத்தை ஆளுகின்றன. ஆனால் அரசு நூலகங்களுக்கு கூட கடந்த சில ஆண்டுகளாக நூல்களே வாங்குவதில்லை.

தமிழக அரசின் பொதுநூலகத்துறையின் கீழ் 4028 நூலகங்கள் இயங்குகின்றன. இந்த நூலகங்களுக்கு எந்த நூல்களை தேர்வு செய்வது என்று ஒரு குழு அமைக்கப்பட்டு வருடா வருடம் நூல்கள் தேர்வு செய்யப்படும். ஆரம்பத்தில் 600 நூல்கள் என்றிருந்த எண்ணிக்கையை 2007ல் இருந்து 1000 என்று உயர்த்தி முந்தைய அரசு ஆணையிட்டது. பதிப்பாளர்களும், வாசகர்களும் இந்த ஆணையால் அடைந்த மகிழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு கூட நீடிக்கவில்லை.

2009ல் இருந்து இன்றுவரை நூலகங்களுக்கு அரசு நூல் வாங்குவதில்லை. புதிய நூல்கள் இடம்பெறாததால், அவற்றை படிக்க விரும்பும் நூலகத்துக்கு வரக்கூடிய வாசகர்கள், வேறு வழியில்லாமல் சொந்தக் காசு போட்டு புதிய நூல்களை வாங்க வேண்டியிருக்கிறது. காசு கொடுத்து நூல்களை வாங்க வசதியில்லாதவர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புதிய நூல்கள் சென்று சேருவது தடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மாவட்டங்களில் சொத்துவரியோடு சேர்த்து பத்து சதவிகிதமாய் வசூலிக்கப்படுகிற வரி நூலகவரி. இந்தப் பணம் அந்தந்த மாவட்ட நூலக வளர்ச்சிக்காக மட்டுமே செலவழிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக நெ.து.சுந்தரவடிவேலு இருந்தபோது இந்த விதி அமலுக்கு வந்தது. இவ்வகையில் நூலகவளர்ச்சிக்கு கிடைக்கும் தொகையை ஒட்டுமொத்தமாக, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைக்க அரசு பயன்படுத்திக் கொண்டதாலேயே, புதிய நூல்களை வாங்கவும், மற்ற மாவட்ட நூலகங்களை பராமரிக்கவும் தற்போது நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

கருப்பன் சித்தார்த்தன் என்பவர் பொதுநூலகத்துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில நூல்களை குறிப்பிட்டு இவையெல்லாம் 2006-10 காலக்கட்டத்தில் எத்தனை பிரதிகள் பொதுநூலகத்துறைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது, விபரங்களை தரமுடியாது என்றும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதில்லை என்கிற பிரச்சினை புத்தகப் பதிப்பாளர்களைதான் அதிகம் பாதிக்கும். இருப்பினும் இவர்கள் சார்பான அமைப்புகள் அவ்வப்போது அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுப்பதோடு தமது கடமையை முடித்துக் கொள்கின்றன. பதிப்பாளர்களும் எதிர்கால நலன் கருதி, இதுகுறித்து வெளிப்படையாக வாய்திறக்க அச்சப்படுகிறார்கள்.

உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன், “தமிழ்ப் பதிப்புத்துறைக்கு கடும் நெருக்கடியான காலம் இது” என்று வருத்தப்படுகிறார்.

“தமிழில் புத்தகங்கள் வெளியிடும் பெரும்பாலான பதிப்பகங்கள் பொது நூலகத்துறையைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. புத்தக விற்பனைக்கான போதுமான சில்லறை விற்பனை மையங்கள் இல்லாத பதிப்பாளர்களுக்கு நூலக ஆணைதான் வாழ்வாதாரம். கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகங்கள் வாங்கப்படாததால், எப்போதும் இல்லாத வகையில் தற்போது புதிய நூல்களை வெளியிட முடியாத அளவுக்கு பதிப்புத்துறை முடங்கிப் போயிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையை கவனத்தில் கொண்டு, இந்த அறிவுசார் துறையை காப்பாற்ற முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறார் மனுஷ்யபுத்திரன்.

தமிழக நூலகங்களில் நூல்கள் வாங்கப்படாதது மட்டும் பிரச்சினையில்லை. நூலகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான அடிப்படைப் பணிகள் கூட நடைபெறுவதில்லை என்பதுதான் சோகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்துறையில் காலியாக இருக்கும் சுமார் ஆயிரம் நூலகர் பணியிடங்கள் நிரப்பப்படவேயில்லை. இதே காலக்கட்டத்தில் சுமார் எட்டுநூறு பேர் ஓய்வும் பெற்றிருக்கிறார்கள்.

நூலக வரியாக உள்ளாட்சி அமைப்புகளிடம் வசூலிக்கப்படும் வரியை நூல்கள் வாங்கவும், நூலகங்களை மேம்படுத்தவும் செலவிட்டாலே போதுமானது. தமிழக அரசு இதற்கான நிதி எதையும் தனியாக ஒதுக்க வேண்டியதில்லை. பெரும்பாலான பொது நூலகங்கள் அடிப்படை வசதியற்ற நிலையிலேயே இருக்கின்றன. தமிழக அரசு உடனடியாக புதிய நூலக தேர்வுக் குழுவை அமைத்து, கடந்த மூன்றாண்டுகளுக்கான நூல்களை வாங்குவதின் மூலம் பதிப்பாளர்களை நெருக்கடிச் சூழலிலிருந்து காப்பாற்ற முடியும். இது தமிழ் பதிப்பாளர்களின் தொழில் பிரச்சினை மட்டுமல்ல. எண்ணற்ற எழுத்தாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் கூட.

உடனே கவனிக்குமா அரசு?

2 பிப்ரவரி, 2012

இந்த பொழைப்புக்கு…?

இன்று காலை செய்தித்தாளைப் பிரித்ததுமே கடுமையான அதிர்ச்சி. முப்பதாவது நாளிலேயே காற்று வாங்கிக் கொண்டிருந்த ‘வேலாயுதம்’ நூறு நாட்கள் ஓடியதாக ஒரு விளம்பரம்.

சரி, விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள தியேட்டர்களில் நிஜமாகவே இப்படம் ஓடுகிறதாவென்று ஆராய்ந்துப் பார்த்ததில், இது அப்பட்டமான புளுகு என்று தெரியவருகிறது. வேண்டுமானால் இந்த தியேட்டர்களின் இணையத்தளத்துக்கு சென்று நீங்களே வேலாயுதம் ஓடுகிறதா என்று பார்வையிட்டுக் கொள்ளுங்கள். ஒரு தியேட்டரில் கூட ஓடாத ஒரு படத்துக்கு ஏன் நூறாவது நாள் போஸ்டர்.. அதுவும் பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில்? விஜய்யின் சொந்த தியேட்டர் என்று சொல்லப்படும் ஃபேம் நேஷனலில் கூட வேலாயுதத்தை தூக்கி ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது.

ஊத்தி மூடப்பட்டுவிட்ட ஒரு படம் நூறு நாள் ஓடுகிறது என்கிற பில்டப்பை மக்களுக்கு பொய்யாக ஏற்படுத்தி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? கடந்த ஐந்து வருடங்களாக தயாரிப்பாளர்களுக்கு பல நூறு கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்திவரும் விஜய்யின் சம்பளத்தை மட்டும் ஒவ்வொரு தோல்விப்படத்துக்குப் பிறகும் சில கோடிகள் ஏற்றுவதைத் தவிர்த்து வேறென்ன சாதனையை இம்மாதிரி விளம்பரங்கள் கொடுத்து செய்யப் போகிறார்கள்?

இம்மாதிரி பொய் விளம்பரம் கொடுத்தவர்களை, மக்களுக்கு தவறான தகவல் கொடுத்ததாக கூறி உள்ளே தள்ளுவதுதான் சட்டப்படி சரியான செயலாக இருக்க முடியும். இந்த விளம்பரத்தைப் பார்த்த கோயிந்தசாமி யாராவது சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு வேலாயுதம் பார்க்கச் சென்று, அதைவிட மொக்கையான ஏழாம் அறிவையோ, தேனி மாவட்டத்தையோ பார்த்துத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், இந்த பேரிழப்பு யார் ஈடு செய்வது? ஏற்கனவே காவலன் என்கிற படா மொக்கைப் படத்தையும் இப்படித்தான் நூறு நாள் ஓடவைத்தார்கள்.

போதாக்குறைக்கு இப்போது இந்த தோல்விப்பட ஹீரோவின் அப்பாதான் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் கூட. நியாயமாக நன்றாக வசூலிக்க வேண்டிய ‘நண்பன்’, தனது மகனது அநியாய சம்பளத்தால் பெரிய பட்ஜெட்டாக எகிறி, மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தும் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போட்ட பணத்தையாவது திருப்பி எடுக்க தாவூ தீர வைத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான், “ஏப்ரல் வரை எந்த பெரிய படமும் வெளியிடப்பட்டு விடக்கூடாது” என்று தன்னுடைய பதவியை தவறாக உபயோகித்து அடாவடியாக ஒரு விதியைப் போடுகிறார். அப்படியாவது ‘நண்பன்’ நூறு நாள் ஓடுமா என்கிற ஆதங்கம்தான் அவருக்கு. அப்படியும் கூட ‘நண்பன்’ ஓடும் தியேட்டர்கள் வாரயிறுதி தவிர்த்து மற்ற நாட்களில் ஈயடித்துக்கொண்டு இருக்கிறது. இதே மாதிரி மோசடிப் போஸ்டர் ஒட்டியாவது நண்பனையும் வெள்ளிவிழா காண வைப்பார்கள் என்பது உறுதி.

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நூறு, நூற்றியைம்பது சம்பளம் ஏற்ற வேண்டுமென்றால் ரோஷம் பொத்துக்கொண்டு வரும் தயாரிப்பாளர்கள் இதுமாதிரி லெக் தாதா ஸ்டார்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு பதினைந்து கோடி, இருபது கோடியென்று கொட்டியழுவதால்தான் சினிமாத்துறை நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நான்கு கோடி செலவழித்தாலேயே உருப்படியாக ஒரு படத்தை எடுத்துவிட முடியும். ஏழு எட்டு கோடிகள் வரை வியாபாரம் செய்யமுடியும் என்பதுதான் யதார்த்தம். மாறாக விஜய் மாதிரி தொடர் தோல்விப்பட ஹீரோக்களுக்கு மட்டுமே இருபது கோடி ரூபாய் கட்டியழுதால், அப்படத்தை இயக்கும் இயக்குனர் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்குக்கும் சில கோடிகளை சாப்பிட, இடி மொத்தமாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகள் மீது விழுகிறது. தம் மேல் விழுந்த பாரத்தை ரசிகர்கள் மீது அவர்கள் சுமத்த... தொடர்ச்சியாக ஸ்டார்களின் மொக்கைப் படங்களை நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிப் பார்த்து ஆப்பு வாங்கிக் கொண்ட ரசிகனோ திருட்டு டிவிடியை ஆதரிக்கத் தொடங்கிவிடுகிறான்.

இளைய தளபதியை ஒப்பிடுகையில் நம் பவர் ஸ்டார் ஆயிரம் மடங்கு தேவலாம். மகாலட்சுமி திரையரங்கில் நேர்மையாக காசு கொடுத்தாவது தன் படத்தை இருநூற்றி ஐம்பது நாள் வரை ஓட்டினார். ஓடாத படம் ஓடுவதாக விஜயை மாதிரி டுபாக்கூர் விளம்பரம் கொடுத்து தனக்கு ‘பில்டப்’ ஏற்றிக்கொள்ளவில்லை.