30 ஜனவரி, 2012

இப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது!

'நண்பன்’ திரைப்படம் ஜனவரி 12 அன்று வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் திருட்டு டிவிடி ஜனவரி 1 அன்றே மார்க்கெட்டுக்கு வந்து விட்டது. அதிர்ந்துப் போன இயக்குனர் ஷங்கர் போலிஸ் கமிஷனிரிடம் புகார் கொடுக்க வருகிறார்...

இப்படியொரு அதிரடி தொடக்கத்துடன் ஒரு நாவல் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது. அந்த நாவலின் பெயர் ‘அழிக்கப் பிறந்தவன்’. விலை ரூ. 50. சென்னை கே.கே.நகரில் உள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸில்’ கிடைக்கும் இந்த நாவல், நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் சக்கைப்போடு போட்டிருக்கிறது.

திருட்டு டிவிடி எப்படி தயாராகிறது.. எப்படி கடைக்குச் செல்கிறது.. என்பதில் தொடங்கி பர்மா பஜாரில் இயங்கும் நிழல் உலக வாழ்க்கையை இன்ச் பை இன்ச்சாக தோலுரித்துக் காட்டும் இந்த நாவலை எழுதியிருப்பவர் யுவகிருஷ்ணா. ’வசந்தம்’ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான இவரது முதல் நாவல் இதுதான் என்பது ப்ளசண்ட் சர்ப்ரைஸ்.

”புதுப்படங்களை யாரும் பார்ப்பதற்கு முன்பாக நாம் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாருக்கும் இருக்கும்தான். எனக்கும் இருந்தது. ‘இன்னும் தியேட்டரில் ரிலீஸே ஆகாத புதுப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. பார்க்கிறாயா?’ என்று நண்பன் ஒருவன் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி நான் பார்த்த படம்தான் கார்த்திக் நடித்த ‘சுந்தர பாண்டியன்’. படம் வெளிவருவதற்கு முன்பாக திருட்டு விசிடி வந்துவிட்டதால், அப்படம் திரையரங்குக்கே வரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சினிமா நிறுவனத்தில் வேலை பார்த்தபோதுதான், திருட்டு விசிடி சமாச்சாரம் ஒரு சினிமாத் தொழிலையும், அத்தொழில் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் எவ்வகையில் பாதிக்கிறது என்பதை நேரடியாக உணர்ந்தேன். எங்கள் நிறுவனம் பெரும் முதலீடு செய்து கையகப்படுத்திய ஒரு பெரிய படம், திருட்டு சிடி வந்துவிட்டதால், மிகப்பெரிய நடிகர் நடித்திருந்தும் ஓபனிங் கூட கிடைக்காமல் படுத்துவிட்டது.

இக்காலக்கட்டத்தில்தான் திருட்டு சிடி எந்த வழியிலெல்லாம் தயாராகிறது, எப்படி வினியோகிக்கப்படுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன். இந்த உலகம் விஸ்தாரமானது. உலகளாவியது. அவ்வப்போது காவல்துறையால் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் ரோட்டில் விற்பனை செய்யக்கூடிய அப்பாவிகள்.ஐம்பதுக்கும், நூறுக்குமாக உழைப்பவர்கள். மாஸ்டர் காப்பி போடும் ‘பாஸ்’கள் மாட்டுவதேயில்லை என்பதை தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிப்பவர்கள் உணரமுடியும்.

இப்படிப்பட்ட அப்பாவிகளில் உலகத்தைதான் நாவலில் களமாக்கியிருக்கிறேன். நாவலை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று அடிக்கடி பார்ப்பதற்கும், பஜாரின் பழைய கதைகளை தெரிந்துகொள்வதற்கும் ஒரு மாத காலம் செலவிட்டேன்.

சினிமாத் தொழிலை அழிக்கப் பிறந்த திருட்டு டிவிடியைதான் ’அழிக்கப் பிறந்தவன்’ என்று சுட்டியிருக்கிறேன்” என்கிறார் யுவகிருஷ்ணா.

(நன்றி : தினகரன் வசந்தம் 29.01.2012 இதழ்)

12 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் உங்கள் புக் சக்கை போடு போட்டதற்கு.

  and


  திருட்டு டி வி டி சரி. தியேட்டரில் மட்டும் கொள்ளை ரேட்டுக்கு டிக்கெட் விற்க்கிரார்களே!

  பதிலளிநீக்கு
 2. நாங்க எங்க புக் வாங்கிறது? கொழும்பு வாசகர்கள்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள்
  தொடர்ந்து எழுதுங்கள்

  ஆனால் ஆளப்பிறந்தவன், அழிக்கப்பிறந்தவன் என்று சிறுபிள்ளதனமா தலைபிடுவதை மட்டும் தவிர்த்தல் நன்று.
  ஏனெனில் உங்க வலைப்பதிவுகளில் நிறைய சரக்கு இருக்கு. ஆனால் லேபில்தான் ரொம்ப சின்னப்புள்ளதானமா இருக்கு சார்!

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள். அழிக்கப்பிறந்தவன் தலைப்பு பொருத்தமாகத் தானே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. அட்டைப் படம் கோரம்!

  சரவணன்

  பதிலளிநீக்கு
 6. அரசியலில் மட்டுமல்ல வலையிலும் நிரந்தர எதிரிகள் யாரும் இல்லை என்பதை வசந்தமாக புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சொல்லும் அதே வேளயில் வன்னநிலவன் கதைகளில் வரும் சார்பாளன் போன்ற கதாபாத்திர வடிவங்கள் நன்று என்றும் சரிவிகத சமத்துவ முத்திரை பதித்திருப்பது அருமை என்று கூறும் போதே தத்துவ விளக்க சமுத்திரத்தில் நீங்கள் கால் பதிக்காமல் வழுவிக் கொண்டு எழுதியிருப்பதை தப்பென்றும் கூற இயலாது என்பதையும் இங்கே சுட்ட விளைகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஒரு டிக்கட் ரூபாய் 120, 150 என்று வைப்பதை நிறுத்தச் சொல்லுங்கள். மக்கள் திருட்டு டிவிடி வாங்குவதை நிறுத்துவார்கள். சென்னையில் ஒரு மல்டி ப்ளெக்ஸில் பார்க்கிங்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாயாம். அங்குள்ள தியேட்டரில் படம் பார்த்தால் மூணு மணி நேரத்திற்கு (parking fee)60 ரூபாயாம். இதில் அவன் தியேட்டரில் வாங்கித் தின்னும் செலவை சோ்க்கவில்லை

  பதிலளிநீக்கு
 8. "‘சுந்தர பாண்டியன்’. படம் வெளிவருவதற்கு முன்பாக திருட்டு விசிடி வந்துவிட்டதால், அப்படம் திரையரங்குக்கே வரவில்லை. '"  Andha padam relesse anadhu . . . .

  Thanks

  பதிலளிநீக்கு
 9. தெருக்கூத்தை அழித்து நாடகம் வந்தது.
  நாடகத்தை அழித்து சினிமா வந்தது.
  பர்மா பஜாரில் வாங்கிய அந்நிய மொழிப் படங்களில் சுட்டுத்தான் பெரும்பாலான தமிழ் சினிமா வருகிறது. தொழிலாளிக்கு கூலி கொடுக்கும் விஷயத்தில் மட்டும் அதற்கு எதிராக ஒன்று கூடும் தயாரிப்பாளர்கள் ஸ்டார்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய ஒன்று கூடுவார்களா ? அப்படி என்ன இவர்கள் தமிழில் ஒரு அவதார் அல்லது டைட்டானிக் எடுத்து விட்டார்கள். விடுங்க யுவா. தொழில் நுட்பம் வளரும் போது பைரஸி தவிர்க்க முடியாதது. எத்தனை சினிமா ஜாம்பவான்கள் ஒரிஜினல் மைக்ரோசாஃப்ட் இதர ஒரிஜினல் மென்பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். அவன் தொழில் நுட்பத்தை இவன் திருடினால் இவன் தொழில் நுட்பத்தையும் இன்னொருவன் திருடத்தான் செய்வான். இதைத் தடுக்கவோ தவிர்க்கவோ வேறு தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தால் தான் உண்டு. அதுவும் தற்காலிகம் தான்.

  பதிலளிநீக்கு
 10. அது சரி இந்த புத்தகம் எங்கேயாவது இணையதளத்தில் திருட்டு மின் புத்தகமாக (PDF )கிடைக்குமா ?

  பதிலளிநீக்கு
 11. அருமை .,.,.,


  "நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com"

  பதிலளிநீக்கு