January 28, 2012

கீழ்க்கட்டளை தனலஷ்மி!

பேரும், ஊரும் கிக்காக இருக்கிறதே என்று அவசரப்பட்டு ஜொள்ளுவிட வேண்டாம். கீழ்க்கட்டளை தனலஷ்மி பெண்ணல்ல. தியேட்டர். இப்படிக்கூட சொல்லிவிடமுடியாது. எங்கள் ஊர் மொழியில் கொட்டாய். நகரத்தில் வளருபவர்கள் சினிமா பார்க்க நல்ல தியேட்டருக்கு போயிருப்பீர்கள். கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களைத் தவிர்த்து பலருக்கு கீழ்க்கட்டளை தனலஷ்மி மாதிரியான தியேட்டர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் குழந்தை பருவத்தில் இருந்தபோது தனலஷ்மி மடிப்பாக்கம் பாதாளவிநாயகர் கோயிலுக்கு எதிரில் தான் இருந்தது. இதெல்லாம் தற்காலிக தியேட்டர்கள். தனலஷ்மி போன்ற ’சி க்ளாஸ்’ தியேட்டர்களுக்கு ஐந்து ஆண்டுகள் லைசென்ஸ் கொடுப்பார்கள். லைசென்ஸ் முடிந்ததுமே அதிர்ஷ்டம் இருந்தால் புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையேல் சர்க்கஸ் கூடாரம் போல காலிசெய்து விட்டு போகவேண்டியது தான்.

தரை, பெஞ்ச், சேர் என்று மூன்று வகுப்பு டிக்கெட்டுகள் கிடைக்கும். தரை மணல் பரப்பப் பட்டிருக்கும். பெஞ்ச் என்றால் சவுக்கு கம்புகளுக்கு மேல் பலகை ஆணியால் அடிக்கப்பட்டிருக்கும். சேர் என்பது மடக்கக்கூடிய இரும்பு சேர். இருப்பதிலேயே காஸ்ட்லி சேர் தான். ரெண்டே ஷோ தான். பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ. பர்ஸ்ட் ஷோ என்பது மாலை ஆறு முப்பது மணி. செகண்ட் ஷோ என்பது நைட்டு பத்து மணி. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் மூன்று மணிக்கு மேட்னி காட்சி உண்டு.

படம் ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் "வினாயகனே.. வினை தீர்ப்பவனே..!" என்று உச்சஸ்தாயியில் பாட்டு போடுவார்கள். அந்த சத்தத்தை கேட்டபின்பே அவசர அவசரமாக வீடுகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கொட்டாய் நோக்கி வருவார்கள்.

கூரை அப்போதெல்லாம் தென்னை ஓலைகளில் வேயப்பட்டிருக்கும். அதனால் தான் அதை கொட்டாய் என்பார்கள். ஸ்க்ரீன் ரொம்ப சுமாராக அழுக்காக இருக்கும். ஸ்க்ரீனுக்கு பின்னால் ஒரே ஒரு ஸ்பீக்கர் இருக்கும். ஒளி மோசமென்றால், ஒலி ரொம்ப படுமோசமாக இருக்கும். இதுபோன்ற கொட்டாய்களுக்கு அருகிலிருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் ரொம்ப பாவம். இரவுகளில் தூங்கவே முடியாது.

தனலஷ்மி மடிப்பாக்கத்தில் இருந்தபோது மிகக்குறைவான படங்களே பார்த்திருப்பதாக நினைவு. ஆயிரத்தில் ஒருவன், பூந்தளிர் படங்களை அங்கே பார்த்தது லேசாக நினைவிருக்கிறது. எனக்கு நன்கு நினைவு தெரிந்தபோது அந்த கொட்டாய் இடிந்து பாழடைந்து கிடந்தது.

எப்போதோ ஒருமுறை நான் தூங்கிய பிறகு ஒரு முறை அப்பாவும், அம்மாவும் தங்கையை தூக்கிக் கொண்டு செகண்ட் ஷோ போயிருக்கிறார்கள். என்னை பக்கத்தில் இருந்த பெரியப்பா வீட்டில் தூங்கவைத்திருக்கிறார்கள். நடு இரவில் முழித்துக் கொண்டு, செம கலாட்டா செய்ய, பெரியப்பா என்னை தூக்கிக் கொண்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார். "குழந்தை அழுகிறது, உடனே புரொஜெக்டர் ரூமுக்கு வரவும்" என்று அப்பாவின் பெயர் போட்டு ஸ்லைடு காட்டினார்களாம். அந்த மாதிரியான Facility எல்லாம் அப்போது இருந்திருக்கிறது. இன்றைய மல்டிப்ளக்ஸில் கூட இந்த வசதி இருப்பதாக தெரியவில்லை.

நான் ஆறாம் வகுப்போ, ஏழாம் வகுப்போ படிக்கும் போது தனலஷ்மி கீழ்க்கட்டளையில் மீண்டும் புதுப்பொலிவோடு திறக்கப்பட்டது. புதுப்பொலிவென்றால் வேறு ஒன்றுமில்லை ஓலைக்கூரைக்கு பதிலாக தார்பாய். மற்றபடி அதே தரை, பெஞ்ச், சேர் என்ற நவீனவகுப்பு டிக்கெட்டுகள். டாய்லெட் எல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஒரு மறைப்பு மட்டும் இருக்கும்.

கீழ்க்கட்டளைக்கு போன தனலஷ்மியில் நிறைய படம் பார்த்திருக்கிறேன். அப்பா அழைத்துக் கொண்டு போனால் சேர். நண்பர்களோடு போனால் தரை டிக்கெட். பாயும்புலி, சகலகலா வல்லவன், சட்டம் ஒரு இருட்டறை, நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, திருவிளையாடல் என்று வகைதொகையில்லாமல் ஏராளமான படங்கள். செகண்ட் ஷோ பார்க்கத்தான் ரொம்ப பிடிக்கும். செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது மறக்காமல் டிக்கெட்டை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நைட் ரவுண்ட்ஸ் வரும் போலிஸ்காரரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கவேண்டியிருக்கும்.

தனலஷ்மியில் புதுப்படம் என்பதெல்லாம் சான்ஸே கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களை தான் போட்டுத் தொலைப்பார்கள். ஓரளவுக்கு புதுப்படம் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது - பார்க்க வேண்டுமென்றால் நங்கநல்லூர் ரங்கா, ஆதம்பாக்கம் ஜெயலஷ்மி மற்றும் மதிக்கு தான் போக வேண்டும்.

இதுபோன்ற கொட்டாய்களில் அதிகமாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களே ஓடிக்கொண்டிருக்கும். எம்.ஜி.ஆர் படத்துக்கு கவுண்டரில் கூட்டம் அலைமோதி க்யூவுக்காக பொருத்தப்பட்டிருக்கும் சவுக்கு கொம்புகளை உடைத்து விடுவார்கள். வாத்தியார் ஸ்க்ரீனில் வரும் காட்சியெல்லாம் விசில் பறக்கும். லாட்டரி டிக்கெட்டுகளை கிழித்து ஸ்க்ரீன் முன்னால் பறக்க விடுவார்கள். தரை டிக்கெட் வகுப்பில் வரும் ஆண்கள் பொதுவாக மப்பில் இருப்பார்கள் என்பதால் அடிதடிக்கு அந்த ஏரியாவில் பஞ்சமிருக்காது.

முன்னால் உட்கார்ந்திருப்பவன் கொஞ்சம் உயரமாக இருந்தால் ஸ்க்ரீன் மறைக்கும் என்பது நியூட்டனின் விதி. அவனை கொஞ்சம் குனியச் சொன்னால் நல்லவனாக இருந்தால் குனிந்து விடுவான். கொலைவெறியனாக இருந்தால் அடிதடி தான். இந்தப் பிரச்சினையெல்லாம் எதுக்கு நாம் கொஞ்சம் உயரமாகிவிடுவோம் என்ற எண்ணத்தில் தரையிலிருக்கும் மணலை கொஞ்சம் உயரமாக குவித்து அதன்மேல் உட்கார்ந்தால்.. நமக்கு பின்னால் இருக்கும் இரத்தவெறியனிடமிருந்து கொலைமிரட்டல் வரும். இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து தான் படம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும்.

ஊர்த்தலைவரோ அல்லது முக்கிய பிரமுகரோ படம் பார்க்க வந்தால் அவருக்காக ஸ்பெஷலாக படம் போடுவதை நிறுத்தி வைப்பார்கள். ஓடத் தொடங்கிய படத்தையே முக்கிய பிரமுகருக்காக திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து ஓட்டிய சம்பவங்களும் நடந்ததுண்டு. முக்கிய பிரமுகர்களுடன் வரும் பிகரை சைட் அடிப்பதற்காகவே சில தரை டிக்கெட் பார்ட்டிகள் பெஞ்ச் அல்லது சேர் டிக்கெட்டுகளுக்கு அடாவடியாக செல்வதும் உண்டு.

இதெல்லாம் அந்தக் காலம். இப்போது கீழ்க்கட்டளை தனலட்சுமியின் தோற்றமே மாறிவிட்டது. நகரமயமாக்கப்பட்ட எங்கள் பகுதி தனலட்சுமியையும் விட்டுவைக்கவில்லை. நகரத்தின் தேவைக்கேற்ப தன் ஒப்பனையையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டுவிட்டது தனலஷ்மி. சில ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமிக்கு சில நண்பர்களுடன் சென்றேன். படத்தின் பெயர் குத்து.

தரை டிக்கெட்டு இப்போதும் இருக்கிறது. ஆனால் சிமெண்டு தரை. தார்ப்பாய் வேயப்பட்ட கூரையில்லை. பாதுகாப்பான ஆஸ்பெஸ்டாஸ் ஷீட். ஏகப்பட்ட பேன் ஓடுகிறது. டாய்லெட் எல்லாம் கொஞ்சம் (ரொம்ப கொஞ்சம்) டீசண்ட் ஆகியிருக்கிறது. அதையெல்லாம் விட அதிர்ச்சி. "சார் பால்கனி டிக்கெட் வேணுமா?" என்ற கேள்வி தான். ம்ம்ம்... பால்கனி தனலஷ்மிக்கும் வந்துடிச்சி. அதை பால்கனி என்று சொல்லமுடியாது. பால்கனி மாதிரி.

ஒளி, ஒலி தரம் இப்போது பரவாயில்லை. முன்பைப் போல அடிதடி, வெட்டு குத்தெல்லாம் இல்லை. மக்களுடைய Attitude மாறியிருக்கிறது. ஓரளவுக்கு புதுப்படங்களாக போடுகிறார்கள். தியேட்டருக்குள் பீடி பிடிப்பதெல்லாம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் செய்திருக்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் கூம்பு ஸ்பீக்கரில் சாமி பாட்டு போடுவதில்லை. கரெண்ட் கட் ஆனாலும் கூட ஜெனரேட்டர் உதவிகொண்டு படத்தை தொடர்கிறார்கள். தியேட்டரில் சைடு ஸ்பீக்கர் எல்லாம் வைத்திருப்பது கொட்டாய் வரலாற்றிலேயே அதிகபட்ச தொழில்நுட்ப வளர்ச்சி.

ம்ம்ம்... என்னதானிருந்தாலும் அந்தக் காலத்து தனலஷ்மி மாதிரி வருமா?

18 comments:

 1. மிக நன்று!சார் என்னுடைய
  பிரெண்ட் ரெக்வஸ்ட்டை பேஸ்புக்கில் அக்செப்ட் செய்யவும் ப்ளீஸ்

  ReplyDelete
 2. இந்த மாதிரி டெண்டு கொட்டாய்களுக்கே உரித்தான தனி வடிவத்தில் போஸ்டர் உண்டு .
  போஸ்டர் பச்சை மற்றும் ரோஸ் கலரிலும் எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும் .

  அந்த போஸ்டரில் நடிக நடிகர்களின் படங்கள் இருக்காது. படத்தின் பெயர் பெரிதாக இருக்கும் கதாநாயன், கதாநாயகி, வில்லன் மற்றும் காமடியன் பெயர்கள் மட்டும் இருக்கும்.

  அந்த போஸ்ட்டரின் கீழ் பாகத்தில் ''பாடல்கள் ,சண்டைகள் நிறைந்தது'' என்ற வாசகங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். ஒரு சில போஸ்ட்டர்களில் ''பாடல்கள் சண்டைகள் சூப்பர் ''என்று எழுதப்பட்டிருக்கும்.

  எங்கள் ஊரில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு தூரத்தில் இருக்கும் கொட்டகைக்கு சென்றதுண்டு.

  ReplyDelete
 3. கா.பா. EFFECT தெரியுது...

  ReplyDelete
 4. இந்த மாதிரி திரை அரங்குகளில் படம் பார்க்கும் சுகமே அலாதியானது...

  ReplyDelete
 5. லக்கி,

  இது போல டூரிங்க் டாக்கீஸ்ல நானும் நிறையப்படம் பார்த்து இருக்கேன். இப்போ கூட கேளம்பாக்கத்தில் கொஞ்ச காலம் முன்னர் ஒரு டூரிங் டாக்கிஸ் பார்த்தேன் இன்னும் இருக்கா தெரியலை.

  ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி எல்லாம் பிட் தியேட்டர் ஆச்சே ? இப்போவும் ஆலந்தூர் ராஜா/ராமகிருஷ்ணா டூரிங் தியேட்டர் போல பெஞ்ச் இருக்குமே. சாய்வு பெஞ்ச் கொஞ்சம் முன்னேற்றம்.கில்மா படமா போடுவாங்க :-)) மேடவாக்கம் கிட்டே கூட ஒரு டூரிங் தியேட்டர் ரேஞ்சில் ஒன்று இருக்கு என நினைக்கிறேன்,

  இப்போ எல்லாம் தொ.காவில் எல்லாப்பழையப்படமும் போட்டுவிடுவதால் டூரிங்க் கொட்டாய்க்கு கூட்டம் போவதில்லை.

  (இந்தப்பதிவு மீள்பதிவா?)

  ReplyDelete
 6. அருமையான பதிவு.

  ReplyDelete
 7. என்னுடய மலரும் நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றி

  ReplyDelete
 8. முடியில,
  சேம் எபக்ட் 198௦~1985 க்கே அனுபிட்டீங்க லக்கி

  ராஜ்மோகன்

  ReplyDelete
 9. Ultimate yuvakrishna!!!

  ReplyDelete
 10. இது மாதிரியான தியேட்டர்கள் டிஜிட்டல் கியூப் சினிமா முறைக்கு மாறி விட்டால் உண்மையாகவே தரமான ஒளி - ஒலி வசதி தரலாம்.

  சரவணன்

  ReplyDelete
 11. யுவா...எப்பிடி இருக்கே!!

  வீக் எண்ட் பூரா இ.சி.ஆர் ரோட்டிலும் பீச்சிலும் கழிச்சு முடிச்சு அந்த அலுப்பு தீர ஞாயிற்று கிழமை மூனு மணிக்கு எழுந்ததும் .... எனக்கு வந்த முதல் நினைப்பு நம்ம லக்கி சைட்-ல என்னா இருக்குன்னு பார்க்கனும்கிறது தான்.......

  லக்கி இங்க வந்து ஒரு கமெண்ட் போட்டாதான் வீக் எண்ட் கொண்டாட்டமே கொண்டாடுனது மாதிரி கீது......

  எத்தனை தான் நேரில் பேசினாலும் .....

  ReplyDelete
 12. இன்னும் இப்படிப்பட்ட தியேட்டர்கள் இருக்கின்றனவா?!

  அதிசயம் ஆனால் உண்மை

  ReplyDelete
 13. எங்கள் ஊரில் இதே போல் ஒரு தியேட்டர் உண்டு ! தியேட்டர் பெயர் அடிக்கடி மாறும் ! அதனால் வேடபட்டி தியேட்டர் ! நீங்கள் சொன்ன அத்தனை விசயத்தையும் அன்பவித்து உள்ளேன்.! அந்த சந்தோசமே தனி! ...ம்... பகிர்வுக்கு நன்றி சார் !

  ReplyDelete
 14. இது உங்க தளத்திலேயே ஏற்கனவே படிச்சது போலிருக்கே..
  மறு ஒளிபரப்பா இது?

  ReplyDelete
 15. லக்கி, எந்த ஊரில் இருக்கிறீர்கள் ?? தனலட்சுமியில் படம் போட்டு 6 மாதங்கள் ஆகிறது !! நக்கீரன்.

  ReplyDelete
 16. this artical remember all village boys there school age life , i am also but 15 years back that kottai close because Television.now also i am remembering that place and moments

  your are artical always like every man biography. good yuvaki

  ReplyDelete
 17. அருமையாக எழுதி இருந்தீர்கள் நண்பரே! குரோம்பேட்டையில் வசித்து வந்து நான் ராதாநகர் வேந்தர் கொட்டகையில் படம் பார்த்ததுண்டு, அதெல்லாம் எனக்கு நினைவுக்கு வந்தது, தொடரட்டும் உமது பணி! வாழ்க வளமுடன்!!!

  ReplyDelete
 18. மிகவும் அருமை .,.,.


  "நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com"

  ReplyDelete