19 ஜனவரி, 2012

புத்தகக் காட்சி - நடந்தது என்ன?

புயலடித்து மண்ணை புண்ணாக்கிவிட்டதால், புது வருடத்துக்கு புண்ணியத்தலமான புதுச்சேரிக்கு போகமுடியாத புராண சோகத்தில், புதிய தலைமைச் செயலகம் என்று சொல்லப்பட்ட புது மருத்துவமனைக்கு பின்புறமாக புதுசாக திறக்கப்பட்ட புட்மாலில் புறாக்கறி சாப்பிட்டுவிட்டு புது புல்லட்டில் புர்ரென்று புயல்வேகத்தில் புதுப்பேட்டை வழியாக சேத்துப்பட்டுக்கு போய் சேர்ந்தோம். இந்த ஒரு வாக்கியத்தில் ‘ஏனிந்த ‘பு’லவெறிடி?’ என்று கேட்டால், இது புத்தகச் சந்தையைப் பற்றிய புத்தி... மன்னிக்கவும் பத்தி. ’பு’னாவுக்கு ‘பு’னா போட்டு பேசினால் ஒருமாதிரியாக இலக்கியப் பிரதிக்கான அந்தஸ்து கிடைத்துவிடுகிறது.

மந்தை மந்தையாக மக்கள் நுழைந்துக் கொண்டிருந்த சந்தையின் வாயிலில் கந்தை கந்தையாய் புத்தகங்களை போட்டு ஃப்ளாட்ஃபார வியாபாரம் விந்தையாய் நடந்துக் கொண்டிருந்தது. “இங்கிட்டு வாங்கினா பத்துரூவா. உள்ளே போய் வாங்கினா நூறு ரூவா” என்று மிரட்டியே நடைபாதை வியாபாரிகள் கல்லாவை ஃபுல்லாக்கினார்கள். பெரிய பதிப்பகங்களின் இலக்கியப் புத்தகங்கள் கருக்குலையாமல், புது மெருகோடு அச்சு மை வாசனையோடு கிடைத்தது. நேராக அச்சகத்திலிருந்து பழைய பேப்பர்காரனுக்கு பார்சல் பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.

தமிழக சபாநாயகர் தலைமைதாங்கி துவக்கி வைத்தார். சட்டசபையில் சத்தமும், சபையுமாக தலைவலியால் சோர்ந்துப் போனவருக்கு, எதை சொன்னாலும் விசில் அடிக்கும் கூட்டம் எதிரில் இருந்ததைக் கண்டு ஏகத்துக்கும் குஷி. சென்னை புத்தகக் காட்சியின் நிரந்தர சிறப்புப் பேச்சாளரும், நாடறிந்த இலக்கியவாதியுமான நல்லி குப்புசாமி செட்டியார் வழக்கமான டெம்ப்ளேட் உரையை இவ்வருடமும் வாசித்தார். “ஜெயக்குமார் சாருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு எப்படி நடந்ததுன்னா...” ரீதியில் பேச்சு போய்க்கொண்டிருக்க, ‘கொட்டாவி’ விட்டவாறே பிரும்மாண்ட அரங்கத்துக்குள் கூட்டம் நுழைந்தது. நாதஸ்வரமும், திருமதி செல்வமும் இல்லங்களை ஆளும் நம் சமகாலத்திலும் நம்பிக்கையோடு லட்சக்கணக்கான புத்தகங்களை மொத்தமாக இங்கே கொண்டு வந்து குவித்து வைத்திருக்கும் தமிழ் பதிப்பாளர்களுக்கு தன்னம்பிக்கைக்கான நோபல் பரிசு வழங்கலாம்.

புத்தகச் சந்தைக்குள் நுழைய நுழைவுக் கட்டணம் ரூ.5 மட்டுமே. ஆனால் இருசக்கர வாகனத்துக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.10 (உயிருள்ள மனிதனுக்கு 5, அஃறிணையான பைக்குக்கு 10 என்று இதை நீங்கள் தத்துவர்த்தமாகவும் விரித்து சிந்திக்கலாம்). இதைத்தான் சுண்டக்கா காலணா, சுமைக்கூலி எட்டணா என்பார்கள். பார்க்கிங் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு டாஸ்மாக் வசூல்தான்.

நம் மக்களும் சும்மா இல்லை. கார் போட்டுக் கொண்டு, குடும்பத்தின் நண்டு, சுண்டுகளை எல்லாம் அழைத்துக் கொண்டு, ரோட்டையெல்லாம் டிராஃபிக் ஜாம் ஆக்கிக் கொண்டு, சந்தையில் கும்பலாக நடைபாதையை அடைத்துக் கொண்டு, லிச்சி ஜூஸ் குடித்து, மிளகாய் பஜ்ஜியும், அசோகா அல்வாவையும் வெட்டு வெட்டென்று வெட்டிவிட்டு.. கடைசியில் நூறு ரூபாய்க்கு ‘சமைப்பது எப்படி?’யும், ‘ரங்கோலி’யும் வாங்கிச் சென்றார்கள். கண்காட்சி என்கிற வார்த்தையைப் பார்த்ததுமே ஏதோ ‘வித்தை’ காட்டப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தோடு குவிந்துவிடுகிறார்கள். “இங்கன ஒண்ணுமே பார்க்குற மாதிரி இல்லியேப்பா!” என்றொரு டீனேஜ் இளசு தன் அப்பாவிடம் சலித்துக் கொண்ட ஸ்டால் சாகித்திய அகாதெமியுடையது. “நாங்கள்லாம் நாலஞ்சி பேரா சேர்ந்து, விஜய் பாட்டை சவுண்டா போட்டு டேன்ஸ் ஆடி காமிச்சாதான் எங்க ஸ்டாலுக்கு கூட்டம் வரும் போலிருக்கு!” என்று ஒரு தீவிர இலக்கியப் பதிப்பாளர் நம்மிடம் குறைபட்டுக் கொண்டார்.

இந்த வேடிக்கைக் காட்சி ஆர்வலர்களுக்கு சற்றும் குறையாதது இலக்கியப் புத்தக வெறியர்களின் அடாவடி. கூட்டத்தில் நாலு பேரை இடித்து, மிதித்துத் தள்ளி, கண்களில் இலக்கியவெறியும், மூளைக்குள் கொலைவெறியும் சரிசமமாக தாண்டவமாட, இராணுவ அராஜகத்தோடு முன்னேறி, “மொராக்கிய எழுத்தாளர் மெரகேஜ் முராகுஷ் அல்-மஜ்ரிப் அல் அவ்ஸாத்-தோட தமிழ் மொழிப்பெயர்ப்பு இங்கே கிடைக்குமா?” என்று கேட்டு ஸ்டாலில் இருக்கும் விற்பனையாளர்களை தாலியறுத்தார்கள். “இங்கே இரும்புக்கை மாயாவியோட முத்து காமிக்ஸ் தாங்க விற்கிறோம். எங்களுக்கு வேறெதுவும் தப்பு தண்டா தெரியாதுங்க” என்று இன்ஸ்பெக்டர் ஐயாவிடம் பவ்யமாக பதில் சொல்லும் விசாரணைக் கைதியாக ஸ்டால்காரர்கள் பதிலளிக்க வேண்டியிருந்தது. இலக்கியவெறி முத்திப்போன கவிஞர்கள் ஒருவரையொருவர் விரல்கடித்து விளையாடும் விரல்கடி இலக்கியமும் இவ்வருடத்தின் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன்.

சிலருக்கு இலக்கிய வெறியோடு, குடிவெறியும் சேர்ந்து விட்டதால் கிழிந்தது சேத்துப்பட்டு. இம்மாதிரி குடிவெறியர்களுக்கு சைட் டிஷ்ஷாக வெளியே காரம் தூக்கலான மசாலா வேர்க்கடலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் கவனித்த குடிவெறியர் ஒருவர் காதல்பொங்க வாங்கிச்சென்ற புத்தகம் ‘குடி’யின்றி அமையாது உலகு.

இம்மாதிரி மற்ற எல்லா வெறிகளையும் விட தலைசிறந்த கொடூர வெறி எழுத்துவெறி. கண்காட்சிக்கு வருபவர்களில் பாதி பேர் எழுத்தாளராகவோ/கவிஞராகவோ இருந்துத் தொலைத்தார்கள். ஓரமாக சிவனே என்று தலையில் துண்டுப்போட்டு நடந்துச் செல்பவர்களை கையைப் பிடித்து இழுத்து, “ஆளப்பிறந்தவன்னு ஒரு சூப்பர் த்ரில்லர் நாவல் சார். சல்லிசு விலையிலே கொடுக்குறோம்” என்று கையில் ஏதோ புக்கை திணித்து ரவுசு விட்டார்கள். புத்தகத்தை திணித்தவர்தான் பின்னட்டையில் சிரித்துக் கொண்டிருக்கும் ஆளப் பிறந்தவனின் எழுத்தாளராக இருப்பார். திணிக்கப்பட்ட புத்தகத்தைக் கையில் வாங்கி பலியாடாக திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவர் பதில்பேச வாய்ப்பே கொடுக்காமல், புத்தகத்தின் கதையை வாயாலேயே மொத்தமாகவே சொல்லிவிடுவார் எழுத்தாளர். கடைசியில் பலியாடு, “சார்! நான் எலெக்ட்ரீஷியனுங்க... நூத்தி பத்தாம் நம்பர் ஸ்டாலிலேயே ஏதோ பீஸ் போயிடிச்சாம்.. சரிபண்ண வந்தேன்” என்று ஹீனமான குரலில் வாக்குமூலம் கொடுக்கும் வரை எழுத்தாளரின் விற்பனைவெறி வூடு கட்டி ஊழித்தாண்டவமாடியது.

கவிதைத் தொகுப்புகளை வாங்காமல் நகர்ந்தோமானால், அங்கேயே மாறுவேடத்தில் அமர்ந்துக் கொண்டு நம்மை சி.ஐ.டி.யாய் கண்காணித்துக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட கவிஞர்கள் கவிதையிலேயே சாபம்விடத் தொடங்கினார்கள். “ஏய் மனிதா (அடுத்தவரி) உனக்கு (அடுத்தவரி) புத்தகக்காட்சி (அடுத்தவரி) ஒரு கேடா? (கேள்விக்குறி)” என்று இன்ஸ்டண்டாக அறச்சீற்றக் கவிதை பாடிவிடுகிறார்கள். இந்தக் கருமாந்திரக் கவிதையும் அடுத்த புத்தகக் காட்சியில் ஏதோ ஒரு தொகுப்பில் இடம்பெற்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இந்த எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஏதோ ஒரு பிளாக்கோ, ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் அக்கவுண்டோ வைத்திருக்கிறார்கள். தினம் தினம் தங்கள் புத்தகங்களுக்கு வரும் ‘செட்டப்’ விமர்சனங்களையும், புத்தகம் எந்த ஸ்டாலில் கிடைக்கும், அந்த ஸ்டாலுக்கு எந்த வழியில் போவது என்றெல்லாம் மொக்கைப் பதிவு போட்டே இனப்படுகொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்த, தெரியாத எல்லோருடைய மெயில் முகவரிகளையும் டேட்டாபேஸாக கலெக்ட் செய்து, ‘உங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா சார்?’ பாணியில் ‘பரபரப்பாக பல லட்சம் காப்பிகள் விற்பனை ஆன என் புத்தகத்தை வாங்கிவிட்டீர்களா? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று மெயில் அனுப்பி டார்ச்சர் செய்கிறார்கள். இணையத்தில் இயங்கும் பலரும் இந்த குபீர்/திடீர் எழுத்தாளக் கவிஞர் பெருமக்களுக்கு பயந்து புத்தகக் காட்சி சீஸனில் சந்நியாஸம் வாங்கிக் கொண்டு எங்காவது தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக இவ்வாண்டிலிருந்து திடீர் மொழியார்வலர்களுக்கு இலக்கிய ஆர்வமும் தூண்டப்பட்டு விட்டது. இதனால் நாளொரு போராட்டமும், பொழுதொரு புரட்சியுமாக புத்தகக்காட்சி அரங்கில் அரசியல் கலகக் கோஷமும் ஆங்காங்கே கேட்டது. இம்மாதிரி கலகங்களால் தங்கள் மவுசின் பவுசு போய்விடுமோ என்று பயந்துவிட்ட, லேட்டஸ்ட் புரட்சியாளர்களான சில சுமார் பிரபலங்கள் அவ்வப்போது அதிரடி விசிட் அடித்து வைக்க, ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ ரேஞ்சில் அவரது ‘அல்லக்ஸ்’ பாண்டியன்கள் பேக்கிரவுண்டில் பின்பாட்டு பாட.. இதுமாதிரி ஏகப்பட்ட தீப்பொறி திருமுகங்களால் அனல் பறந்தது புத்தகக் காட்சியில்...

தலக்காணி சைஸில் நாவல் எழுதினால்தான் விருது என்று பாராளுமன்றத்தில் ஏதாவது சட்டம் போட்டுவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. ஆயிரத்துக்கும் குறையாத பக்கங்களில் ஆங்காங்கே ஸ்டார் எழுத்தாளர்களின் நாவல்கள் வாசகர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒரு ஸ்டாலில் சம்பந்தப்பட்ட புக்கையே தலைக்கு வைத்து தூங்கிக் கொண்டிருந்தார் பதிப்பாளர் ஒருவர். கடந்த ஆண்டில் விருது வாங்கிய இம்மாதிரியான தலக்காணி நூல் ஒன்றினை வாசகர் ஒருவர் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென புத்தகம் கைநழுவி அவரது காலில் விழுந்து கால் உடைந்து, அவர் கவலைக்கு இடமாகிவிட.. பெரும் களேபரம் ஆனது. இவ்வருடம் புதியதாக வந்த இன்னொரு தலக்காணி சைஸ் புத்தகத்தை வாங்கிய வாசகர் ஒருவர் தனது கார் டிக்கியில் வைத்து எடுத்துச் செல்ல, கார் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரம் தாங்காமல், குடைசாய்ந்து கவிழ்ந்துவிட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலால் சென்னையே ஸ்தம்பித்தது. நிலைமை இவ்வாறிருக்க நோபல் பரிசு பெறவிருக்கும் தமிழின் நெ.1 எழுத்தாளர் என்று அவரது ரசிகர்களால் புளகாங்கிதப்பட்டு சிலாகிக்கப்படும் இந்திய ஞான மரபு எழுத்தாளர் ஒருவர் நாலாயிரத்து சொச்சத்து பக்கத்தில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. அடுத்தாண்டு சந்தைக்கு இப்புத்தகம் வந்துவிடுமென கிசுகிசுக்கப்படும் நிலையில், கண்டெய்னர் லாரியை வாடகைக்கு கொண்டுவந்துதான் இப்புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுச்செல்ல நேரிடுமோ என்று எதிர்காலத்தை நினைத்து பீதியடைந்துப் போயிருக்கிறார்கள் வாசகர்கள்.

வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு நேரில் வந்து தனது வாசகர்களுக்கு திருப்பள்ளியெழுச்சி நடத்தி தரிசனம் தரும் அல்டிமேட் ரைட்டர் ஒருவர் இவ்வருடம், புத்தகக்காட்சியில் கக்கூஸ் சரியில்லை என்று புறக்கணித்திருக்கிறார். இதனால் கொதித்துப் போன அவரது வாசகர்கள் சிலர் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட.. தமிழ்நாட்டில் பெரும் கலாச்சாரக் கலவரம் மூண்டுவிடுமோ என மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து எழுத்தாளரோடு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் புத்தகக் காட்சிக்கு எழுத்தாளர் வருகை தரும்போது, அவருக்கு மட்டும் ஏசி குளிர்காற்று வீசும் வண்ணமும், அவருக்கென பிரத்யேகமாக ஐந்து நட்சத்திர விடுதி வசதியிலான கக்கூசும் ஏற்பாடு செய்வதாக மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. இதையடுத்து அல்டிமேட் ரைட்டர் இரண்டு நாட்களுக்கு மட்டும் வாசகர்களுக்கு தரிசனம் தர ஒப்புக் கொண்டார்.

இன்னொரு உச்ச எழுத்தாளரோ வருடாவருடம் தன்னுடைய உச்ச இயக்குன நண்பர் சாரோடு பந்தாவாக வலம் வருவது வழக்கம். எழுத்தாளரைப் பார்க்க வருகிறார்களோ, இல்லையோ இயக்குன சாரைப் பார்க்க கூட்டம் கும்மும். துரதிருஷ்டவசமாக அந்த உச்ச இயக்குனர் சார் ஏதோ படவிவாதத்தில் பிஸியாகிவிட, தனியாகச் சென்றால் ‘ஜிலோ’வென ஈயடிக்குமே, இமேஜ் என்னாவது என்கிற தர்மசங்கடத்தில் புத்தகக்காட்சிக்கு வரவே இல்லை உச்சம்.

இம்மாதிரி நிறைய கூத்துக்கள் குரூப்பு சேர்ந்து கும்மாளமாக கும்மியடித்தாலும் ‘புத்தகக் காட்சி’ தனக்கே தனக்கேயான தணிக்குணத்தோடு வாசகக் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பொன்னியின் செல்வனை இன்னும் தேடி வருகிறான் இளம் வாசகன். ஆராய்ச்சி நூல்களையும், அபுனைவு நூல்களையும், கிளாசிக்குகளை தேடித்தேடி வாசிக்கும் தீவிர வாசகர்கள் எந்தவித ஆரவாரமுமின்றி தங்களுக்குத் தேவையானதை அள்ளிச் செல்கிறார்கள். சிறுபதிப்பாளர்கள் மூச்சுவிட முடிகிறது. எவ்வளவு ஆடம்பரங்கள், அலங்காரங்கள் அலட்டிக் கொண்டிருந்தாலும் சந்தேகமேயில்லாமல் இது வாசகர்களின்/பதிப்பாளர்களின் திருவிழா. தொல்லைக்காட்சிகளும், மொக்கைச் சினிமாக்களும் அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வாசக மனப்பரப்பை மீண்டும் விழிப்படையச் செய்யும் முயற்சி என்பதால் அறிவுலகம் மட்டுமல்ல, அனைவருமே கொண்டாடவேண்டிய நம் விழா.

26 கருத்துகள்:

 1. கடைசிப் பத்தியில் பஞ்ச் வச்சிட்டீங்களே!

  பதிலளிநீக்கு
 2. Like ur comical writing..
  sema...
  -Priya

  பதிலளிநீக்கு
 3. Very Nice. Vizhundu Vizhundu sirithen.

  Sundarvel

  பதிலளிநீக்கு
 4. அந்த மொராக்கோ எழுத்தாளரின் நூலைத் தேடிய இலக்கிய வெறியர் பற்றிய வரிகளிலிருந்து, கவிதைக்காரர்களின் அறச்சீற்றம் வரையிலா ஏரியாவை படித்து முடிப்பதற்குள் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி, கண்ணெல்லாம் கலங்கிவிட்டது யுவா. ஓவர் லந்து...அசத்தல்.

  பதிலளிநீக்கு
 5. லண்டன் புக் ஃபேர், ஃபிராங்கர்ட் புக் ஃபேர் போன்றவற்றில் பதிப்பாளர்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளுக்கு மட்டுமே அனுமதி. சாதாரண வாசகர்களுக்கு நுழைவு அனுமதி இல்லை. அந்த நிலை இங்கும் வரவேண்டும். அதுவரை இதை புக் ஃபேர் என்று அழைக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாதிரி ஏதோ மல்லுக்கட்டு இல்லை, ஃபுல் கட்டு! அவ்வளவுதான்.

  சரவணன்

  பதிலளிநீக்கு
 6. நீங்களும் அதிஷாவும் பேசிவச்சிகிட்டு ஒரே மேட்டர ’போடறீங்க’ போல.. நெஜமாவே ஆளபிறந்தவன் மேட்டர்லாம் உண்மையாங்க?

  பதிலளிநீக்கு
 7. >டு சிலாகிக்கப்படும் இந்திய ஞான மரபு எழுத்தாளர் ஒருவர் நாலாயிரத்து சொச்சத்து பக்கத்தில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது

  ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க!

  பதிலளிநீக்கு
 8. சொல்றதெல்லாம் சொல்லிட்டு கடைசிப் பத்தியில் தப்பிச்சுட்டீங்களே..

  பதிலளிநீக்கு
 9. நேற்று அதிஷா
  இன்று யுவகிருஷ்ணா
  நாளை யார்?
  புத்தக கண்காட்சி பற்றி பதிவு எழுதபோறாங்களோ?!
  இருந்தாலும்...
  நல்ல பதிவு!
  வாழ்த்துக்கள்!
  தொடர்ந்து எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
 10. ’" பு’னாவுக்கு ‘பு’னா போட்டு பேசினால் ஒருமாதிரியாக இலக்கியப் பிரதிக்கான அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. "

  நல்ல வேளை . . .

  அதோட விட்டிங்க . . .


  நன்றி

  பதிலளிநீக்கு
 11. யுவா.... சமூக அக்கறையும் எள்ளல் தன்மையும் உள்ளவனால்தான் மிகச் சிற்ந்த படைப்புகளை தரமுடியும் என்பதை இன்னொரு முறை நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் இலக்கியவாதி மட்டுமல்ல... இலக்கியவாதிகளையே கலக்கியவாதி!

  பதிலளிநீக்கு
 12. இது நல்லாருந்துச்சு பாஸு. கங்காச்சியெல்லாம் பாக்க இந்த வருசம் குடுப்பினை இல்ல. எதோ இந்த மாதிரி எலக்கியசேவ கட்டொர படிச்சுதான் விசயந்தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.

  ஆளப்பொறந்த எளுத்தாளரு ரெம்ப ரவுசு உட்றாரு போல :)

  பதிலளிநீக்கு
 13. எப்படியோ பெரிய விழாவா முடிஞ்சிருச்சு. சிறுசோ பெருசோ பேசுறளவுக்கு வந்திருச்சுல்லீங்க, கல்லா கட்டிருவாங்க

  பதிலளிநீக்கு
 14. எல்லாத்தையும் கலந்து கட்டி சும்மா பூந்து விளையாடி விட்டீர்கள் யுவா ! செம லொள்ளுதான் ! இப்படி எழுத ஒரு ஆளாச்சும் வேணுமல்ல ?
  பிர்தௌஸ் ராஜகுமாரன்.
  கோவை

  பதிலளிநீக்கு
 15. Lot of Otruppizhaikal. Otherwise hilarious article. Nice.

  பதிலளிநீக்கு
 16. உங்களுடைய அழிக்கப்பிறந்தவன் மட்டுமல்ல இந்த வலைபூவும் பனம் செலுத்தி படிக்க தகுதியானது சார்

  பதிலளிநீக்கு
 17. மொராக்கிய எழுத்தாளர் மெரகேஜ் முராகுஷ் அல்-மஜ்ரிப் அல் அவ்ஸாத்-தோட தமிழ் மொழிப்பெயர்ப்பு இங்கே கிடைக்குமா?
  ஹி...ஹி... அந்தப் புத்தகத்த கேட்டது நான் தானுங்கோ... நீங்க பின்னால நிக்கறத கவனிக்கலைங்கோ...

  பதிலளிநீக்கு
 18. அண்ணா பின்னிடிங்க விழுந்து விழுந்து சிரிச்சாலும் 100 வருஷம் ஆனாலும் அப்படியே தான் இருக்கும் போல சென்னை புத்தக காண்காட்சி

  பதிலளிநீக்கு
 19. அருமை...........


  "நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com"

  பதிலளிநீக்கு