16 ஜனவரி, 2012

நடுநிசி அழகிகள்!

போன மாசத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழேமுக்கால் மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் வாங்கப் போயிருந்தேன். ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் பொருத்தினேன். காலைக்கடனுக்கான உந்துதலுக்கு சிகரெட்தான் ஒரே கதி. தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அண்ணாச்சி பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.
“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லுய்யா! மேட்டர் கேள்விப்பட்டியா?” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென்று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.
“சொல்லுங்கண்ணே!” தனியார் டிவி ஒன்றுக்கு செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து  (அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம்) எங்கள் ஊரில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள். அண்ணாச்சியும் இப்போது அப்படித்தான் ஏதோ ஒரு மேட்டரை ஆரம்பிக்கிறார்.
“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி தம்பி. நட்டநடு நைட்டுலே என்னென்னவோ அசிங்கமெல்லாம் நடக்குது.. சொல்லவே ஆபாசமா இருக்குது” காதல் பட தண்டபாணி தோற்றத்தில் இருந்த அண்ணாச்சி, வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னபோதும், அந்த காட்சி காண சகிக்கக்கூடியதாக இல்லை.
இருப்பினும், ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. டி.வி.யில் இன்னொரு பேட்டிக்கு சான்ஸு இருக்கே நமக்கு.
“என்னாச்சுண்ணே!”
“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுவளுக்கும், மொள்ளமாறிப் பயலுவளுக்கும் நல்லா வசதியாப் போச்சி”
எங்கள் ஊர் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோழர் காலத்தில் ஈஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பழம் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.
பல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் முன்பை விட மோசமாக அசுத்தமாகிவிடும்.
அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊர்க்குளத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் அதிசயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போய் லம்பாக சம்பாதிக்கிறார்கள் எங்கள் ஊர் பார்ட் டைம் மீனவர்கள்.
ஊரிலிருக்கும் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்து வைத்துவிட்டு (நாய் ஊசி போடும் டாக்டர் செல்வமணியே தன் பினாமியான நர்ஸை வைத்து இந்நாய்களை வளர்ப்பதாக ஒரு தகவல்), இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே தினமும் நடக்கும்.
இத்தகைய வரலாற்று, சமகாலச் சிறப்புகள் வாய்தத குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேடான குளத்துக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாசம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது.
மேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.
“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும். நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”
இந்த நாய்கள் ஊளையிடல் பற்றி கொஞ்சமாவது இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.
கடையை விட்டு பேசிக்கொண்டே வெளிவந்தோம். வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.
“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் ‘டுபுக்கு டுபுக்கு’ன்னு கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கன ஒரு ஷேர் ஆட்டோ நின்னுட்டு இருந்திச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நாய்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க” மேட்டர் சூடுபிடித்தது.
“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ” - ‘உம்’ கொட்டுவதற்குப் பதிலாக சும்மா அண்ணாச்சியை தூண்டிவிட்டேன்.
“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா? பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. ஃபுல் மேக்கப்பு. இருட்டுலே கூட நல்லா முகம் தெரிஞ்சது. ஒரு மாதிரி பொண்ணுதான். அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்” – இத்தனை வயசானாலும் அண்ணாச்சிக்கு அறிவே இல்லை. பிட்டுப்படம் பார்ப்பது போல இதையெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துத் தொலைத்திருக்கிறார்.
“நெஜமாவா அண்ணாச்சி? நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே? யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”
“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். முகத்தைப் பார்த்தா எனக்கு தெரியாதா என்ன?”
“அப்புறம் என்னாச்சி?”
“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.
“நல்ல வேளை செஞ்சீங்க!”
“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. இந்தப் பிரச்சினை நமக்கு தினம் தினம் தொடரும் போலிருக்கு” என்றார்.
“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன். தலைவர் என்றால் பஞ்சாயத்துத் தலைவர். அவர்தான் எங்க ஊரு நாட்டாமை. பார்ப்பதற்கு நட்சத்திர ஆமை மாதிரி இருப்பார்.
 ண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா?) ஏற்பட்டது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்.
ஆனாலும் பராபரியாக குளத்துக்குள் இரவுகளில் நடக்கும் கும்மாங்குத்து பற்றி தினமும் நிறைய செய்திகள் வந்துக் கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் ஆளாளுக்கு தெருவில் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுமாதிரி ஏதாவது விஷயம் சொல்பவர்களிடம் ‘நியூஸ் சோர்ஸ்’ என்னவென்று கேட்டபோது, எல்லோருமே அண்ணாச்சியையே கைகாட்டினார்கள்.
போனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று ஒரு கெத்துக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து, ஊருக்கு பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் நமக்குண்டு.
இரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை போதிய தரவுகளோடு பொதுமக்களுக்கு நிரூபித்தேன்.
அன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத பாலுமகேந்திரா பாணி தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு வழக்கமாக நான் கொடுக்கும் சிக்னலை கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் அந்த மூதேவி. இவனுகளை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன்.
நக்சல்பாரிகளுக்காக ஆதரவாக களமிறங்கும் பழங்குடியினர் கெட்டப்பில் அவன் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி கட்டம் போட்ட ப்ளூ லுங்கி கட்டிக்கொண்டு, வெற்றுடம்பில் சிகப்பு பார்டர் போட்ட கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். விருமாண்டி பசுபதி மாதிரி நெற்றியில் அடர்த்தியான விபூதிப்பட்டை வேறு. பட்டைக்கு நடுவில் பெரிய குங்குமப்பொட்டு. கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாகதான் இருந்தது.
குளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில், அசட்டுத் துணிச்சலில் இருவரும் பயணித்தோம். அதாவது பூனைநடை நடந்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.
அருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.
“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் ஒரு கையில் பீர்பாட்டிலோடும், மறுகையில் சிகரெட்டோடுமாக சொன்னான்.
முரளி குரல் கொடுத்தான். “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி குட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா? உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா?”
“இல்லேண்ணா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து(?) சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.
இதெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்க வேண்டும். ஆனாலும் சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
 ன்று காலை பைக்கில் வந்துக்கொண்டிருந்தேன்.
தெருமுனை சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.

“ஹேப்பி நியூ இயர் அண்ணாச்சி!”
“அத வுடுப்பா. விஷயம் தெரியுமா? நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”
“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே?”
“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன்! நேத்து அவங்களும்தான் பாத்தாங்க!”
ஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.
(நன்றி : சூரிய கதிர் - பொங்கல் 2012 இதழ்)

9 கருத்துகள்:

 1. சுவாரஸ்யம்.

  விறு விறு நடை. ( இன்னும் கொஞ்சம் வேகமாக நடந்திருந்தால் டெல்லிக்கே போய் சேர்ந்திருப்பேன் )

  மனிதன் ரஜினி கெட்டப்புகள் குறித்த‌ விவரணைகள் புன்னகைக்க வைத்தன.

  குட் ஒன் யுவா.

  பதிலளிநீக்கு
 2. என்னுடைய கட்டுரைகள் எல்லாம் ஒவ்வொரு கதைகள் போலத்தான்.
  - ''தல'' சாரு.

  இது உங்களுக்கும் பொருந்தும் போலிருக்கே!!!

  நல்லாத்தான் இருக்கு!

  ஆனா ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் வர்ணிக்கும் பொழுது சினிமா கேரக்ட்டர்களை உதாரணம் காட்டுவதுதான் கொஞ்சம் அதிகமாக தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 3. நடை மிக அற்புதம். இதை போன்ற படைப்புகளை படிக்கும் போது, எனக்கு மேலும் படிக்கவும், படைக்கவும் ஆர்வம் வருகிறது. அவ்வாறு செய்தமைக்கு மிக்க நன்றி!

  எழுதிக்கொண்டே இருங்கள் :)

  பதிலளிநீக்கு
 4. sir...ALIKKAP PIRANTHAVAN PADITHEN...OK THAN...AANA ORU ORU CHAPTERUM KONJAM ILAKINRI(KATUPPADU)ILLAMA PORA MATHIRI IRUKU..ADUTHA BOOKLA SHARP PANNUNGA ..INNUM SUPER A IRUKUM...

  பதிலளிநீக்கு
 5. நல்ல பொங்கல் விருந்து ! சக்கரை பொங்கலாய் இனித்தது! அண்ணாச்சிதான் கேரக்டர் தான் டாப்!

  பதிலளிநீக்கு
 6. வழமை போல் நல்ல பதிவு (கதை)
  தொடர்ந்து எழுதுங்கள்!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்....// அண்ணாச்சிக்கு பதிலா நீங்க தண்ணி அடிச்சிட்டு யோசிக்கிறீங்க போல் இருக்கு சும்மா கிக் ஏறுது....கலக்கல் யுவா..:)

  பதிலளிநீக்கு