12 ஜனவரி, 2012

தமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை?

“பிழைப்போமா, அழிவோமா தெரியாது. வாழ்ந்தோம் என மட்டுமாவது பதிவு செய்ய விரும்புகிறோம்” – ‘பாலை’ என்கிற திரைப்படத்தை இயக்கிய செந்தமிழன், சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் இதை சொன்னார்.

“தமிழகத்தின் சரிபாதி பகுதிகளில் எங்கள் படத்தைத் திரையிட ஒரு அரங்கு கூட கிடைக்கவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் பாதிக்கு மேற்பட்டவையை ஒரு சில படங்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அந்த அரங்களில் வேறு படங்கள் திரையிடப் படாமல் பார்த்துக் கொள்கின்றன” என்றும் செந்தமிழன் ஃபேஸ்புக்கில் குற்றம் சாட்டுகிறார்.

என்னதான் நடக்கிறது?

ஒரு திரைப்படம் தயாரிப்பு, விநியோகம், வெளியீடு என்ற மூன்று கட்டங்களை தாண்டி ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மூன்று கட்டங்களும் வெவ்வேறு நிறுவனங்களால், மனிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிப்பார்கள். விநியோகஸ்தர்கள் அப்படங்களை வாங்குவார்கள். திரையரங்குகள் விநியோகஸ்தர்களிடமிருந்து படங்களை வாங்கி திரையிடும். சமீபகாலமாக சினிமாவில் அசுரத்தனமாக வளர்ந்துவரும் ‘கார்ப்பரேட் கலாச்சாரம்’ இந்த நடைமுறையை முற்றிலுமாக மாற்றி வருகிறது. மூன்று துறைகளையுமே ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதால், பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் அல்லது பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மட்டுமே ரசிகர்களை சென்றடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் வருத்தத்தோடு பேசிக் கொள்கிறார்கள்.

முன்பெல்லாம் தீபாவளிக்கு பத்து, பதினைந்து படங்கள் வெளியாகும் அவற்றில் நான்கைந்து படங்களாவது பெரும் வெற்றி பெறும். தீபாவளியைப் போலவே பொங்கல், கோடைவிடுமுறையை குறிவைத்தும் ஏராளமான படங்கள் வெளிவரும். ஒரு படத்தைத் தயாரித்தாலேயே, அதன் தகுதிக்கேற்ப விலை கிடைக்கும். வெளியிட்ட பின்பு, ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்குகளுக்கும் லாபம் கிடைக்கும். திரைப்படத்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருடம் முழுக்க வேலை கிடைத்தே கொண்டு இருக்கும்.

ஆனால் கடந்த தீபாவளிக்கு வெளியானது இரண்டே இரண்டு படங்கள்தான். அவையும் பெரிய நிறுவனங்கள் தயாரித்து, வெளியிட்டவை என்று இந்தப் போக்குக்கு உதாரணமும் காட்டுகிறார்கள். இதற்கேற்ப தணிக்கை செய்யப்பட்டு, தியேட்டர் கிடைக்காததால் திரையிடப்பட முடியாமல் சுமார் முப்பது தமிழ் திரைப்படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. தமிழ்த் திரையுலகில் முன்னெப்போதும் இதுபோன்ற ஒரு நிலை இருந்ததே இல்லை.

பெரிய நிறுவனங்கள் பெரிய நடிகர்களையும், பெரிய இயக்குனர்களையும் வைத்து மட்டுமே படம் தயாரிக்க முனைகின்றன. புதுமுக நடிகர்களையோ, இயக்குனர்களையோ. புதிய கதைக்கருக்களையோ அறிமுகப்படுத்தி ‘ரிஸ்க்’ எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் புதிய திறமைகள் வெளிச்சத்துக்கு வருவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதே நிலை தொடருமானால் புதிய திறமைகள், இன்னும் அப்பட்டமாகச் சொன்னால் இளைஞர்கள் தமிழ் திரையுலகில் நுழைய இயலாமல் அதன் இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டுவிடும்.

சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட திரைப்படம் ‘வெங்காயம்’. பகுத்தறிவுக் கருத்துகளை மிகத் தைரியமாக, சமரசமின்றி முன்வைத்த திரைப்படம் சங்ககிரி ராஜ்குமார் என்கிற இளைஞர் இயக்கிய இப்படத்தை, தமிழ் திரைப்படவுலகின் பெரிய இயக்குனர்கள் மனதாரப் பாராட்டியிருந்தார்கள்.

மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் வெளியிட மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. சொற்ப அரங்குகளில் போதிய விளம்பரச் செலவுகள் செய்யப்பட முடியாமல் ‘வெங்காயம்’ வெளியானது. திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தைக் கேட்ட மக்கள் இப்படத்தைக் காண ஆர்வம் காட்டினார்கள். துரதிருஷ்டவசமாக இதற்குள் ஒருவாரம் முடிந்து, பெரிய படம் ஒன்று வெளியாக ஏதுவாக எல்லா தியேட்டர்களிலும் ‘வெங்காயம்’ எடுக்கப்பட்டு விட்டது. நல்ல படம் என்பதால் இப்படத்தை மறுவெளியீடு செய்ய, இயக்குனர் சேரன் தாமாகவே முன்வந்து முயற்சிகள் எடுத்தும், இன்னும் வெங்காயத்துக்கு விடிவு கிடைக்கவில்லை.

“படம் எடுப்பது பெரிய விஷயமல்ல. அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் முக்கியம். சிறு பட்ஜெட் படங்கள் போதிய விளம்பரம் இல்லாமல் போய்தான் மக்களைச் சென்று சேரமுடியவில்லை” என்று இந்த நிலைக்கு சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீடு விழாவில் விளக்கம் சொன்னார் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான அர்ஜூன்.

‘சினிமா வியாபாரம்’ என்கிற புத்தகத்தை எழுதியவரும், சினிமாத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருபவருமான சங்கர் நாராயண், “கலை என்று சொல்லுவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே சினிமாவும் ஒரு வியாபாரம் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நஷ்டப்பட்டு கலை வளர்க்க இங்கு யாரும் தயாரில்லை” என்கிறார்.

“காலத்துக்கேற்ப எல்லாத் தொழிலுமே தத்தம் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன. சினிமாவும் அவ்வாறு மாறுவது இயல்பானதுதான். படத்துக்கு பட்ஜெட் ஒரு கோடி ரூபாய் என்றால், விளம்பரத்துக்கு ஐம்பது லட்சமாவது செலவு செய்தாக வேண்டும். நல்ல படமெடுத்திருக்கிறோம், நிச்சயம் ஓடும் என்கிற குருட்டு நம்பிக்கையில், விளம்பரத்தில் சிக்கனம் காட்டிவிட்டால் தியேட்டர்கள் நஷ்டத்துக்கு ‘நல்ல படத்தை’ ஓட்ட முடியாது.

குப்பைப் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கொடுத்தாலும், அது ஓடாது. சமீபத்தில் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் பங்கேற்று வெளிவந்த சில தோல்விப்படங்களையே இதற்கு உதாரணம். நல்ல படம், நல்ல பப்ளிசிட்டி என்பதுதான் இனி வெற்றிப்படத்துக்கான சூத்திரம். படத்துக்கு பட்ஜெட் போடும்போதே, விளம்பரத்துக்கும் பெரும் பங்கு ஒதுக்க வேண்டும்” என்று படமெடுப்பவர்களுக்கு ‘ஐடியா’ கொடுக்கிறார் சங்கர் நாராயண். இவர் தியேட்டர் நடத்தியிருக்கிறார். விநியோகம் செய்திருக்கிறார். இணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். நடிகரும் கூட.

“விளம்பரம், பிரம்மாண்ட தயாரிப்பு என்றெல்லாம் இருந்தாலும் கூட பெரிய படங்களுக்கும் சில நேரங்களில் சிக்கல் ஏற்படுவதுண்டு. தொடர்ச்சியாக தோல்விப் படங்களைத் தந்தவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். நடிகர் விஜய்யின் காவலன் திரைப்படத்துக்கு இம்மாதிரி சிக்கல் ஏற்பட்டது. இப்போது சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்துக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது. சிறுபடங்களுக்கு மட்டும் தியேட்டர் ஆதரவு இல்லை என்று சொல்வது நிஜமல்ல. தியேட்டர் நடத்துவதின் சிரமம் தியேட்டரை நடத்துபவர்களுக்குதான் தெரியும். எத்தனை திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டரை இடித்துவிட்டு கல்யாண மண்டபமோ, ஷாப்பிங் காம்ப்ளக்ஸோ கட்டுகிறார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத திரையரங்கு நிர்வாகி ஒருவர்.

இந்தப் பிரச்சினையை அலசும்போது ஒருமாதிரியாக தமிழ் திரையுலகை இருள் கவிழ்ந்திருப்பதைப் போன்ற தோற்றம்தான் தெரிகிறது. ஆனாலும் ஒரு சில வெளிச்சக் கீற்றுகளும் இல்லாமல் இல்லை.

ஓராண்டுக்கு முன்பு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ பெரும் வணிக வெற்றி கண்ட சிறு முதலீட்டுப் படம். தரமான படமாக எடுத்ததால், பெரிய நிறுவனம் ஒன்று தானே முன்வந்து இப்படத்தை நன்கு விளம்பரப்படுத்தி, நிறைய திரையரங்குகளில் திரையிட்டு பிரம்மாண்டமான வெற்றியை கண்டது. நல்ல படம் எடுத்தால் மட்டும் போதாது, அதை நல்ல முறையில் வியாபாரமும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ‘மைனா’ ஓர் எடுத்துக்காட்டு.

சாட்டிலைட் டிவிக்களை நிர்வகிக்கும் நிறுவனங்களே சினிமா நிறுவனங்களாகவும் உருவெடுத்து வருவது சமகாலப் போக்கு. இப்போது விமர்சனத்துக்குள்ளாகும் ‘பெரிய நிறுவனங்கள்’ பெரும்பாலும் இவைதான். இவர்களது டிவிக்களுக்கு புதிய படங்களைப் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்தே, இந்த தொழிலுக்குள் இவர்களும் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்நிறுவனங்களே தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தரமற்ற படங்களை இந்நிறுவனங்கள் நினைத்தாலும் ஓடவைக்க முடியாது என்பதுதான் உண்மை.

பெரிய நிறுவனங்களுக்கான பிரச்சினைகளே வேறு. பட்ஜெட்டில் பாதியை பெரிய ஹீரோவுக்கோ, பெரிய இயக்குனருக்கோ ஒதுக்கியாக வேண்டியிருக்கிறது. ஹீரோக்களுக்கே பதினைந்து கோடி, இருபது கோடி கொட்டியழுதுவிட்டு, படத்துக்கும் பிரம்மாண்டமாக செலவிட்டுவிட்டு, நிறைய திரையரங்குகளில் வெளியிட்டால்தான் கையைக் கடிக்காமலாவது பார்த்துக்கொள்ள முடியும்.
பிழைப்புக்கே வழியில்லை என்று பட்ஜெட் பட இயக்குனர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் இதே தமிழ் சினிமாவில்தான், இன்று இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய எந்திரனும் வெளிவந்திருக்கிறது. நன்கு திட்டமிடப்பட்ட சினிமா, வசூலை வாரிக்குவிக்கும் என்பதுதான் எளிய சூத்திரம். இது எந்திரனுக்கும் பொருந்தும், மைனாவுக்கும் பொருந்தும்

சிறிய படங்களுக்கு அரங்குகள் கிடைக்காத பிரச்சினை என்பதற்கு பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே காரணம் என்றில்லை. அதுவும் ஒரு காரணம் மட்டுமே. சினிமாத் தொழில் மாறிக் கொண்டிருக்கிறது என்கிற யதார்த்தத்தை சிறு முதலீட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் முதலில் உணரவேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)

7 கருத்துகள்:

 1. //பெரிய நிறுவனங்களுக்கான பிரச்சினைகளே வேறு. பட்ஜெட்டில் பாதியை பெரிய ஹீரோவுக்கோ, பெரிய இயக்குனருக்கோ ஒதுக்கியாக வேண்டியிருக்கிறது. ஹீரோக்களுக்கே பதினைந்து கோடி, இருபது கோடி கொட்டியழுதுவிட்டு, படத்துக்கும் பிரம்மாண்டமாக செலவிட்டுவிட்டு, //

  முதலில் எல்லா தயாரிப்பு நிறுவனங்களும் இரண்டு வருடங்களுக்கு படம் தயாரிப்பதியே நிறுத்தி விட்டால்
  இந்த முதலமைச்சர் கனவில் இருக்கும் பல கோடி சம்பளம் பெரும் புடுங்கிகளின் கொட்டத்தை அடக்கி விடலாம்.மேலும் நாங்க கொடுக்கறதுதான் சம்பளம் நடித்தால் நாடி இல்லை என்றால் மூட்டையை கட்டு என்று சொன்னார்களே யானால் மட்டுமே இதற்க்கு -- அதிக சம்பளம் பெரும் புடுங்கிகளிடம் இருந்து - விடுதலை கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 2. போகிற போக்கில், அட்வான்ஸ் புக்கிங் ஃபுல்லாக இருந்தால் மட்டுமே படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என்ற நிலைமை வந்தாலும் வரும்போல...

  அஞ்சலி அல்லது பவர்கட் - சுஜாதா

  ராதிகா - சீரியல் ரஜினி

  பதிலளிநீக்கு
 3. Dish TV, TATA Sky ஆகியவை சமீபத்திய படங்களை கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் தொடர்ந்து காட்டி வருகிறார்கள். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும் அந்த வழியை நாட வேண்டும். வருமானமும் கிடைக்கும், படமும் எளிதில் மக்களிடம் சென்று சேரும்.

  சரவணன்

  பதிலளிநீக்கு
 4. // தரமான படமாக எடுத்ததால், பெரிய நிறுவனம் ஒன்று தானே முன்வந்து இப்படத்தை நன்கு விளம்பரப்படுத்தி, நிறைய திரையரங்குகளில் திரையிட்டு பிரம்மாண்டமான வெற்றியை கண்டது.//
  தரமான படமாக இருந்தாலும், பெரிய நிறுவனம் முன்வந்து நிறைய திரையரங்குளில் வெளியிட்டதால் தானே 'மைனா' வும் வெற்றி பெற்றது. இல்லையென்றால் 'வெங்காயம்' படத்திற்கு ஏற்பட்ட நிலைமைதான் 'மைனா'வுக்கும் ஏற்பட்டிருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. இன்னாபா காதுல‌ பூ சுத்துற‌.

  "நிதி"க‌ளின் கையில் சினிமா மாட்டிக்கொண்டு இருக்கிற‌து. அம்மா வ‌ந்தால் விடியும் என்று முழ‌ங்கினார்க‌ள். அம்மா ஆட்சிக்கு வ‌ந்து ப‌ல‌ மாத‌ம் ஆகிவிட்ட‌தே. நாட்டில் தேனும் பாலும் பொங்கி வ‌ழிந்தோடும் நிலையில் இப்ப‌டி ஒரு பொய்யான‌ க‌ட்டுரை வெளியிட்டு இருப்ப‌து திராவிட‌ ச‌தி.

  பதிலளிநீக்கு
 6. need new thoughts , old style marketing waste of money and time.

  பதிலளிநீக்கு
 7. ”அழிக்கப்பிறந்தவன்” புத்தகக் கண்காட்சியில் வாங்கி படிச்சாச்சு.விறுவிறுப்பா,நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு