6 ஜனவரி, 2012

தினகரன் வெள்ளி மலர்

எண்பதுகளின் இறுதியும், தொண்ணூறுகளின் தொடக்கமும் கலந்த காலக்கட்டம் வெகுஜன வாசகர்களுக்கு பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். குமுதம், விகடன் இதழ்கள் முழுவீச்சோடு இயங்கிக் கொண்டிருந்த அக்காலக் கட்டத்தில் புதிய வார இதழ்கள் பலவும், புதுப்புது கான்செப்டுகளில் நல்ல சர்க்குலேஷனோடு சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது.

எங்கள் வீட்டில் குமுதம்தான் மெயின் பத்திரிகை என்றாலும், வேறு சில பத்திரிகைகளையும் அவ்வப்போது அப்பா வாங்குவார். ‘கலைப்பூங்கா’ மாதிரி முழுமையான சினிமாப் பத்திரிகைகளை அப்போது வாசித்திருக்கிறேன். மாத இதழ் என்றாலும் ஒரு மாதம் ரஜினி ஸ்பெஷல், அடுத்த மாதம் கமல் ஸ்பெஷல் என்று கலக்கல் கட்டுரைகள், துல்லிய தகவல்களோடு நல்ல மிக்ஸிங்கில் எடிட் செய்யப்பட்ட புத்தகம் அது. குறிப்பாக அட்டைப்படம் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கும். அதே காலக்கட்டத்தில் ‘கலைப்பூங்கா’ மாதிரி ஒரு குறைந்தது ஒரு டஜன் சினிமாப் பத்திரிகைகளாவது நல்ல தரத்தோடு வந்துக் கொண்டிருந்ததாக நினைவு.

போகியை ஒட்டி பரணை சுத்தம் செய்யும்போது பழைய ‘பேசும்படம்’, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்களை காணமுடியும். பெரும்பாலும் அவை எண்பதுகளின் துவக்கத்தில் வந்த இதழ்களாக இருக்கும். அட்டைப்படத்திலேயே ஏதோ வெளிவரவிருக்கும் சினிமாப் படத்தின் விளம்பரம்தான் இடம்பெறும் (முத்து எங்கள் சொத்து என்கிற சொத்தைப்படத்தின் விளம்பரம் இடம்பெற்ற இதழ் இன்னும் நினைவில் மிச்சமிருக்கிறது).

யோசித்துப் பார்த்தால் வெகுஜன சினிமாப் பத்திரிகைகள் தரத்திலும், விற்பனை அடிப்படையிலும் 90களின் துவக்கத்தில் உச்சத்தில் இருந்திருக்கின்றன என்று புரிகிறது. ஆனால் இன்றைய நிலையில் நார்மல் பத்திரிகையே சினிமாப் பத்திரிகை லெவலுக்கு மாறிவிட்டதால், ‘பேசும் படம்’ மாதிரி ஒரு பத்திரிகைக்கு வாய்ப்பில்லையோ என்றும் நினைக்கத் தோன்றும். ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ வருகிறதுதான். ஆனால் பழைய தரம் இருப்பதாக தோன்றவில்லை. சினிக்கூத்து, வண்ணத்திரையெல்லாம் ’திரைச்சித்ரா’ லெவலுக்கு இறங்கிவிட்டதால் போட்டியில் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை. காட்சிப்பிழை, படப்பெட்டி என்று புதியதாக சில மாத இதழ்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவை ‘ஒலக’ சினிமாவைப் பேசுவது என்பதால், தமிழ்நாட்டின் முன்னூத்தி சொச்சத்துக்கும் குறைவான அறிவுஜீவிகளுக்கான இதழ்களாக ஆகிப்போயிருக்கிறது.

என்னைப் போன்ற வெகுஜன சினிமா ரசிகனுக்கு என்று பிரத்யேகமாக சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு சினிமாப் பத்திரிகை கூட இல்லையென்பது சோகம்தான். முன்பெல்லாம் தினமலர் வாரமலரின் இருபக்க ‘துணுக்கு மூட்டை’ ஓரளவு திருப்திபடுத்தும். இப்போது து.மூ.வும் கச்சடாவாகி விட்டது.

சினிமாக்காரர்களுக்கு ஜால்ரா தட்டாமல் சினிமா குறித்த செய்திகள் மற்றும் அலசலோடு ஏதேனும் பத்திரிகை கிடைக்குமாவென்று தேடிக்கொண்டிருந்தவனுக்கு யதேச்சையாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது தினகரன் வெள்ளிமலர். நாளிதழோடு வரும் இணைப்புகள் பொதுவாக ’தலையெழுத்தே’ என்று தற்போது வந்துக்கொண்டிருக்க, வெள்ளி மலரில் மட்டும் ஏதோ சிரத்தையாக நடந்து வருவதை அறிய முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான வடிவத்தை தானே உருவாக்கி, இன்று ஒரு முழுமையான சினிமாப் பத்திரிகையாக உருவெடுத்திருக்கிறது வெள்ளி மலர். இதுதான் இப்போது தமிழின் நெ.1 சினிமா பத்திரிகை என்று தயங்காமல் சொல்லலாம். சந்தேகமிருப்பவர்கள் இன்றைய தினகரனை வாங்கி வெள்ளிமலர் வாசித்துப் பார்த்துக் கொள்ளலாம். இன்றைய வெள்ளிமலர் ஒரு பென்ச்மார்க் இஷ்யூ (2011 புத்தாண்டு இதழும் இதேமாதிரி ஒரு கிளாசிக்). வெள்ளிமலர் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!


வெள்ளிமலரின் சிறப்பு என்னவென்றால் தமிழ் சினிமாவையும் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் சினிமாக்களையும், அங்கு பணியாற்றும் நடிகர்-நடிகைகள் மட்டுமின்றி இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களையும் எளிய முறையில் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதுதான். தொடர்ச்சியாக இதை வாசித்து வருவதால், இன்று கன்னடத்தில் சுதீப்தான் சக்கைப்போடு போடும் ஹீரோ என்று தெரிகிறது. சிரஞ்சீவி குடும்பத்தில் பிரச்சினை, தில்லாலங்கடியை ரீமேக் செய்து சல்மான் நடிப்பது, மம்மூட்டியும் மோகன்லாலும் தொடர்ச்சியாக பல்பு வாங்குவது என்று எல்லா விஷயமுமே அத்துப்படியாகிறது. வெள்ளிமலர் தருவது வெறும் தகவல்களை மட்டுமல்ல. அத்தகவல்களின் பின்னணி, ஃப்ளாஷ்பேக் உள்ளிட்ட விஸ்தாரமான அலசல்களையும் கூட.

வெள்ளி மலரின் ஒரே குறையாக நான் கருதுவது, அதில் வாராவாரம் மூன்று பக்கங்களுக்கு வெளிவரும் ‘மேஷராசி நேயர்களே!’ டைப் ஜோசியம்தான். முழுமையான சினிமாப் பத்திரிகையாக மலர்ந்திருக்கும் மலருக்கு ‘ஜோசியம்’ சற்றும் பொருந்தவில்லை. சன் குழுமத்திலிருந்து அடுத்தடுத்து பக்தி, மகளிர் பத்திரிகைகள் வரவிருப்பதாக தெரிகிறது. வெள்ளி மலரை தனிப் பத்திரிகையாக கொண்டுவந்தால் ‘பேசும்பட’ காலத்திய பொற்காலம் மீண்டும் மலரும்.

3 கருத்துகள்:

 1. இதுவரை காட்சிப்பிழைதிரை ஒரு இதழில் கூட ஒலக சினிமா பற்றிய கருத்துகள் வந்ததில்லை. தவறாக எழுதியிருக்கிறீர்கள் தோழரே. அப்படியாக வந்திருப்பினும் அது தமிழ்சினிமாவின் ஒரு ஒப்பீடுக்காக மட்டுமே இருந்திருக்கலாம். மற்றபடி காட்சிப்பிழை முழமையான தமிழ்சினிமா பற்றிய ஆய்வு இதழாக கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட தினகரன் வெள்ளி மலர் எங்கள் பத்திரிகையை பாராட்டி எழுதியிருப்பதும் மற்றும் தமிழ்சினிமா பற்றிய அறிவார்ந்த உரையாடலுக்கு ஒரு தளமாகவும் இருப்பதாக எங்கள் காட்சிப்பிழையை பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. காட்சிப்பிழை சார்!

  ஒன்றை உயர்த்திப் பிடிக்கும் போது மற்றொன்றை நமக்கு தெரியாமலேயே தாழ்த்தி விடுகிறோம் :-(

  மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் சொல்வது உண்மைதான் யுவா நிறைய முறை நான் பைத்தியாக்காரனுக்கு போன் செய்து பாராட்டி இருக்கின்றேன்.. அதே போல அதில் உலக சினிமா எழுதும் வள்ளிக்கும் போன் செய்து பாராட்டி இருக்கின்றேன்...

  என்னை போன்ற சினிமா ஆர்வலர்கள் வெள்ளிதோரும் தினகரன் வெள்ளி மலர் மறக்காமல் வாங்கி விடுகின்றேன்.

  பதிலளிநீக்கு