9 ஜனவரி, 2012

இரும்புக்கை மாயாவிக்கு வயது 40

‘முத்து காமிக்ஸ்’, ‘லயன் காமிக்ஸ்’, ‘திகில் காமிக்ஸ்’, ‘மினி லயன்’, ‘ஜூனியர் லயன்’, ‘காமிக்ஸ் கிளாசிக்ஸ்’ என்றெல்லாம் நம் சிறுவயது வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்திய காமிக்ஸ்கள் எத்தனை... எத்தனை? இந்த காமிக்ஸ் பத்திரிகைகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட ‘முத்து காமிக்ஸ்’க்கு இந்த பொங்கலோடு வயது நாற்பது என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.

1972 பொங்கலுக்கு ‘முத்து காமிக்ஸ்’ வெளிவந்தபோது, அதோடு முதல் இதழ் கண்ட இன்னொரு பிரபலமான பத்திரிகை ‘துக்ளக்’!

இந்தியாவிலேயே தொடர்ச்சியாக நாற்பது ஆண்டுகளாக காமிக்ஸ் ஒரு இயக்கமாக வாழ்வது தமிழில் மட்டுமே நடந்துவரும் சாதனை.அந்த நாட்களை மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார் ‘முத்து காமிக்ஸின்’ நிறுவனர் சவுந்தரபாண்டியன்.

"ஐம்பதுகளில் இருந்தே எங்கள் குடும்பம் சிவகாசியில் அச்சு தொடர்பான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து கலர் ஆப்செட் இயந்திரம் ஒன்றினை இறக்குமதி செய்வது எங்கள் திட்டமாக இருந்தது. நமக்கு புதியது என்பதால், அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு பயிற்சி தேவைப்பட்டது. அதற்காக 1967ல் சென்னைக்கு வந்தேன். நாகிரெட்டியின் வடபழனி அச்சகத்தில் அந்த இயந்திரம் இருந்தது. பயிற்சிக்காக இங்கே வந்தபோது துடிப்பான இளைஞனாக இருந்ததால் நாகிரெட்டிக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. குழந்தைகளிடையே பிரபலமான ‘அம்புலிமாமா’ பத்திரிகையை நாகிரெட்டிதான் அச்சடித்து, வெளியிட்டு வந்தார்.

அங்கே அச்சடிக்கப்படும் பத்திரிகைகளை எல்லாம் ஆவலோடு வாசிப்பேன். ‘ஃபால்கன் காமிக்ஸ்’ என்று ஐரோப்பிய காமிக்ஸ்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். அந்த காமிக்ஸ்க்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாத்திரம் ‘இரும்புக்கை மாயாவி’. ஏனோ அவர்களுக்கு இவரைப் பிடிக்கவில்லை. மாறாக என்னை ரொம்பவும் கவர்ந்துவிட்டார் ‘மாயாவி’. பத்து மாத அச்சு இயந்திரப் பயிற்சி முடிந்து ஊருக்குப் போயும் மனம் முழுக்க ‘இரும்புக்கை மாயாவி’ நிறைந்திருந்தார். நாமே ஏன் ஒரு காமிக்ஸை தொடங்கக்கூடாது என்று நினைத்தேன்.

அடுத்த ஆண்டே லண்டனுக்கு பயணித்து ‘இரும்புக்கை மாயாவி’யை தமிழில் வெளியிடுவதற்கான உரிமைகளை பெற்றேன். தகுந்த காலநேரம் பார்த்து 1972 பொங்கலுக்கு ‘முத்து காமிக்ஸி’ன் முதல் இதழை கொண்டு வந்தேன். முதல் இதழை கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கும்போது, என் முதல் குழந்தையை கையில் வாங்கியபோது கிடைத்த பரவசத்தை அடைந்தேன். விளையாட்டாக நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அந்த கணத்தை நினைத்தாலும் சிலிர்க்கிறது..." பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார் சவுந்தர பாண்டியன்.

அப்பாவின் காமிக்ஸ் ஆர்வம் இவரது மகன் விஜயனுக்கும் தொற்றிக் கொண்டது. விளைவு, 1984ல் ‘லயன் காமிக்ஸ்’ அறிமுகம். ‘லயன் காமிக்ஸி’ன் ஆசிரியரானபோது விஜயனுக்கு வயது ஜஸ்ட் பதினேழுதான்.

‘முத்து காமிக்ஸ்’க்கு முகவரி ‘இரும்புக்கை மாயாவி’ என்றால், ‘லயன் காமிக்ஸ்’க்கு ஆரம்பக் காலத்தில் கை கொடுத்த ஹீரோ ‘சிலந்தி மனிதன் ஸ்பைடர்’. வாசகர்களிடையே பரபரப்பான வரவேற்பினை ‘லயன்’ பெற, அடுத்தடுத்து ஜீனியர், மினி லயன்கள் உருவாயின. ‘திகில் காமிக்ஸ்’ என்ற பெயரில் த்ரில்லர் காமிக்ஸ்களையும் வெளியிட்டார்கள். முத்து, லயன் காமிக்ஸ்களின் பழைய கதைகளை, புதிய வாசகர்களுக்கு தருவதற்கு ஏதுவாக ‘காமிக்ஸ் க்ளாசிக்ஸ்’ என்கிற புதிய காமிக்ஸ் பத்திரிகையும் தொடங்கப்பட்டது.

சவுந்தரபாண்டியனைத் தொடர்ந்து அவரது மகன்கள் விஜயன், பிரகாஷ் ஆகிய இருவரும் காமிக்ஸ் தொழிலில் ஈடுபட்டதைப் போலவே, இப்போது மூன்றாவது தலைமுறையாக விஜயனின் மகன் விக்ரமும் இதில் ஆர்வம் செலுத்துகிறார். இவர்களது குடும்பத்துக்கு காமிக்ஸ் என்பது பெரியதாக லாபம் தரும் தொழிலல்ல. ஆர்வத்தின் பேரிலேயே இத்தனை ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள்.

இத்தனை ஆண்டு பயணத்தில் எத்தனையோ சாதனை மைல் கற்களை வாசகர்களின் ஆதரவோடு அனாயசமாக தாண்டியிருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு இவர்கள் 860 பக்க அளவில் வெளியிட்ட ஒரே கதையான ‘இரத்தப் படலம்’ குறிப்பிடத்தக்கது. இந்திய அளவிலேயே இவ்வளவு பிரமாண்டமாக, அதிக பக்கங்கள் அளவில் காமிக்ஸ் வெளியிடப்பட்டது இதுவே முதன்முறை. 200 ரூபாய் விலையிருந்தாலும் ஆயிரத்து இருநூறு பிரதிகளுக்கு மேல் விற்று பெரும் சாதனை புரிந்தது. பெரிய எழுத்தாளர்களின் நாவல்களின் விற்பனைக்கே சவால் விடும் எண்ணிக்கை இது.

"இன்றும் காமிக்ஸ் என்பது சிறுபிள்ளை விளையாட்டாக இங்கே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அளவே இருக்கும் நாடான பிரான்ஸில் ஒரு காமிக்ஸ் வெளியிடப்பட்டால் நாலு லட்சம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. நாங்கள் அதிகபட்சம் ஒரு காமிக்ஸை முப்பத்தி இரண்டாயிரம் பிரதிகள் வரைதான் விற்றிருக்கிறோம். காமிக்ஸ் இங்கே எல்லோருக்குமான கலாசாரமாக உருவெடுக்கவில்லை. எங்களது ‘இரத்தப் படலம்’ போன்ற கதைகள் தரம் அடிப்படையில் எந்தவொரு இலக்கியத்துக்கும் குறைந்ததல்ல. நாற்பதைக் கடந்த வாசகர்கள் எங்களது கதைகளை இன்றும் ரசிக்கிறார்கள். காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கான சமாச்சாரம் என்றில்லாமல், அனைவரும் வாசித்து மகிழ வேண்டியது என்பதை நாம் உணரவேண்டும்’’ என்று ஆதங்கப்படுகிறார் ‘லயன் காமிக்ஸ்’ ஆசிரியர் விஜயன்.

இந்த ஆண்டு முதல் இவர்களது காமிக்ஸ்கள் வடிவம், உத்தி அடிப்படையில் பெரும் மாற்றம் கொள்கிறது. இந்த பொங்கலுக்கு நூறு ரூபாய் விலையில் சூப்பர் ஹீரோக்கள் அசத்தும் அட்டகாசமாக ஒரு கலெக்ஷனை அறிமுகப்படுத்துகிறார்கள். சென்னை புத்தகக் காட்சியிலும் இவர்களது காமிக்ஸ் புத்தகங்கள் இடம்பெற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அவங்க ரெடி, நாம ரெடியா?

எழுதியவர் : அணில் :-)

நன்றி : தினகரன் வசந்தம் (08-01-2012 இதழ்)

26 கருத்துகள்:

 1. பலநாட்கள் காத்திருந்து, ஓடர் பண்ணி கொழும்பில் இரத்தப்படலம் பெற்றுக்கொண்டேன்! கிடைத்தபோது பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!அனாலும் சிறிது ஏமாற்றம்தான். தனிதனி இதழ்களாக வெளிவந்தபோது இருந்த தரம், படங்களின் துல்லியம் மிஸ்ஸாகி இருந்தது!சில இடங்களில் படங்கள் தெளிவில்லாமல்! :-(
  முத்து, லயன் காமிக்ஸின் ஸ்பெஷாலிட்டியே அசத்தலான ஓவியங்கள்தான் இல்லையா?
  விலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அப்படிச் செய்திருக்கலாம்.
  விலையை அதிகரித்திருந்தாலும் இன்னும் தரமாக வெளியிட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. ஆமாங்க சரவணன். அப்படித்தான் பத்திரிகையில் போட்டிருந்தது.

  பதிலளிநீக்கு
 3. யெப்பப்பா..... ரத்தப்படலத்துக்காக லயனின் உழைப்பே உழைப்பு.... ராயல் சல்யூட்! ( ரத்தப்படலத்திற்கு விமர்சனம் எனது ப்ளாக்கில்....)

  பதிலளிநீக்கு
 4. இந்த மாதிரி மறந்து போன பல நல்ல தகவல்கலை ''போடறதுக்கெல்லாம்'' உங்களை விட்டா வேற ஆளே இல்லை.

  நல்லா ''போடுறீங்க''

  :-))) அட , பதிவ சொன்னம்ப்பா..

  பதிலளிநீக்கு
 5. ”அணில்” என்கிற புனைபெயரில் எழுதியிருந்தாலும் யுவகிருஷ்ணா சார் உங்கள் நடை, அது நீங்கள்தான் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறதே! ;-)

  பதிலளிநீக்கு
 6. //1972 பொங்கலுக்கு ‘முத்து காமிக்ஸ்’ வெளிவந்தபோது, அதோடு முதல் இதழ் கண்ட இன்னொரு பிரபலமான பத்திரிகை ‘துக்ளக்’!//

  த்கவல் பிழை. துக்ளக்கின் முதல் இதழ் 1970 பொங்கல் தினத்தில்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 7. sir RATHAP PADALAM BOOK FAIRLA VANGINEN....SEMA SEMA...ALIKKAP PIRANTHAVAN vangiachu padichutu solren...

  பதிலளிநீக்கு
 8. வசந்தம் படித்திடாதவர்களுக்காக "எடுத்து"ப் போட்டமைக்கு நன்றி! நீங்கள்தான் அணிலா -கேள்விக்கு பதில் வரவில்லையே?

  பதிலளிநீக்கு
 9. எண்பதுகளின் ஆரம்பத்தில் 'ராணி காமிக்ஸ்'சும் மறக்கமுடியாததே. எங்கள் நண்பர் வட்டத்தில் இந்த வகையான காமிக்சையை மாறி மாறி படித்ததை இன்று நினைத்தாலும் இனிமைதான். ஆனால் இன்று சாதாரணமாகவே படிக்கும் ஆர்வம குறைந்திருக்கிறது. அதுவும் பத்தாக வடிவில். எனக்கு இன்றும் 'மாண்ட்ரேக்' பற்றி தினமணியில் தினசரி வரும் படக்கதை நினைவில் நிற்கிறது. அது ஒரு வசந்த காலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் எந்த புக்கு இருந்தாலும் தயவுசெய்து எனக்கு வேனும் தயவுசெய்து போன் பன்னியாவது சொல்லுங்கள் வாங்கி கொள்வேன்

   நீக்கு
 10. இதைப் படித்தபோது எனக்குள்ளும் சிறுவயது நினைவுகள் ஒடியது. நண்பர் ஒருவரிடம் சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும் காமிக்ஸ் பண்டிலை வாங்க சொல்லியிருக்கிறேன்.
  ஒரு முறை சேர்த்து வைத்த காமிக்ஸ் பொக்கிசம் சிதறிப்போனது. இதை நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மீண்டும் சேகரிக்கப் போகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. எனக்கு பிடித்த முத்து காமிக்ஸ் ஹீரோ மாயாவிதான். அடுத்ததாக வருபவர், கேப்டன் டைகர்.

  பதிலளிநீக்கு
 12. 'இரத்தப்படலம்' எங்கேக்கிடைக்கும் நண்பா? தபாலில் கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
 13. சைக்கிளில் சென்று போடி நகரில் பேருந்து நிலயத்தில் உள்ள புத்தக கடையில் முத்து காமிக்ஸ் வாங்கி , அங்கேயே நின்று படித்தபின் வீட்டிற்கு திரும்பியது இன்னும் நினைவுகளில் பதிந்திருக்கிறது....அத்ற்கு முன் இருந்த இந்திரஜால் காமிக்ச்ஸின் மாயாத்மாவும்,,,மாண்ட்ரேக்கும் கலரில் வந்திருந்தாலும்....இரும்புக்கை மாயாவி சட்டென மனதில் புகுந்து கொண்டார்.....எப்ப பாரு காமிக்ஸ் வாங்கிற வேலைதானா? என சொல்லிக்கொண்டே மொதல்ல எனக்கு கொடு படிச்சிட்டு கொடுத்திறுரேன்..என அப்பா வாசலிலே வாங்கிக்கொள்வார் பார்க்கலாம்....அது தான் காமிக்ஸின் வெற்றி...காமிக்ஸ்படிக்க வயசு எதுக்கு...எவன் சொன்னான்..சிறுவர்களுக்கானது என.......அது எல்லோருக்க்குமானதுதான்

  பதிலளிநீக்கு
 14. i am also remembering, 20 years back, i have studied, mayavi, still i like character, thank u for remembering yuva

  பதிலளிநீக்கு
 15. என் சிறுவயது முழுதும் நிரம்பியிருந்தவர் இரும்புக்கை மாயாவிதான்.

  பதிலளிநீக்கு
 16. புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் கிடைக்குமிடம் சம்பந்தமான விவரம் கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். காமிக்ஸ் அனுபவங்களை/நினைவுகளை அப்பப்ப கிளறிவிட்டு சந்தோஷப்பட வைக்கறீங்க. இரும்புக்கை மாயாவி மறக்கமுடியாத கதாபாத்திரம். என்னோட முதல் காமிக்ஸ் வாசிப்பு ஆரம்பமானது அங்கிருந்துதான்.

  பதிலளிநீக்கு
 17. All these comics are available in stall 372 in Chennai book fair.. South Indian publishers is the stall name..

  பதிலளிநீக்கு
 18. Details about the stall in book fair: http://lion-muthucomics.blogspot.com/2011/12/372.html

  பதிலளிநீக்கு
 19. Dear sir

  I am a long time fan of lion comics, I am from Srilanka and i got to
  know that you published full version of XIII comics (chapter 1 to 19)
  in one big mega comics book. I have been collecting lion and muthu
  comics from my small age and i really love those comics books. I have
  read the XIII Comic English Scanlations and wish to have the big mega
  comic book of XIII so how could i purchase to get the XIII Mega comic
  book in srilanka is there any way please let me know.

  Thank you

  sincerely

  v.janan

  my address- no 25/b1 atallagoda road wattegama srilanka

  postal code- 20810

  telephone no- 0776512849

  பதிலளிநீக்கு
 20. Sir, where to buy these books? either the chennai stores/online..want to introduce them to my kids...

  பதிலளிநீக்கு
 21. மறக்கவே முடியாத காமிக்ஸ் நாட்கள் அவை. அப்பா அம்மா தரும் பாக்கெட் மணியை என் தங்கை ஸ்னாக்ஸ் வாங்கி தின்று தீர்க்க, நான் தீரா பசியுடன் காமிக்ஸ் வாங்கி வந்து மொட்டை மாடியில் அல்லது படிக்கட்டில் உட்கார்ந்து ஒரே மூச்சில் படித்துவிடுவேன். முத்து காமிக்சில் எனக்கு எப்போதும் பிடித்தது ’இரும்புக் கை மாயாவி’ தான். இன்ஸ்பெக்டர் ஆசாத் துப்பறியும் என்று ஒரு தொடர் வரும். மற்ற எல்லாவற்றையும் விட இரும்புக் கை மனதுக்கு நெருக்கமாகி விடும். அது மின்சாரம் தேடும் சமயங்களில் நமக்கு பதை பதைத்துவிடும். அருமையான பதிவுக்கு நன்றி யுவா (ஆமா முக நூலில் காண முடிவதில்லையே ஏன்?

  பதிலளிநீக்கு