31 டிசம்பர், 2012

bye bye 2012


2012, சொல்லிக் கொள்ளும்படியான வருடமாக இல்லையென்றாலும், நிச்சயமாக மோசமான வருடம் இல்லை.
வருடத்தின் தொடக்கத்தில் திடீரென அர்த்தமில்லாத ஏதோ ஒரு மிதப்பு வந்து ஒட்டிக்கொண்டது. இதுதந்த எதிர்மறையான கூடுதல் உற்சாகத்தில் இலக்கு நோக்கிய பாதையை கொஞ்சம் தவறியிருக்கிறேன். எல்லாமே எனக்குத் தெரியும், என்னைவிட்டா வேறு யார் இருக்கா என்றெல்லாம் கொஞ்சம் முட்டாள்த்தனமாக இருந்திருக்கிறேன். நல்லது, கெட்டதை எடைபோட முடியாமல் குழம்பியிருக்கிறேன். போதாக்குறைக்கு எப்பவுமே இல்லாத ஆசையாக சினிமா ஆசை வேறு. டிஸ்கஷன், லொட்டு, லொசுக்கென்று நிறைய நேரம் தேவையில்லாமல் வீணானது.
நல்ல நண்பர்கள் வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். தவறாக எடுத்துக் கொள்வேனோ என்று நினைக்காமல் சரியான நேரத்தில் இதையெல்லாம் சுட்டிக் காட்டினார்கள். ஆகஸ்ட்டு மாத வாக்கில் ஏதோ ஒரு போதிமரத்தடியில் மல்லாந்து படுத்திருந்தபோது திடீரென்று ஞானம் வந்துவிட்டது. காலத்தை எப்படியெல்லாம் வீணடித்திருக்கிறேன் என்று அடுத்த இருமாதங்களுக்கு பொறுமையாக அசை போட்டேன். எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பது தெளிவாய் புரிந்தது.
வருடத்தின் கடைசி இரு மாதங்களில் கிடைத்திருக்கும் ‘எனர்ஜி லெவல்’ முன்னெப்போதும் இருந்ததில்லை. இதே லெவல் அடுத்த வருடமும் நீடித்தால் நிச்சயமாக ஏதோ ஒரு கோட்டைக்கு ராஜாதான். வருடத் தொடக்கத்தில் ஏற்பட்ட பேரழிவுகளை கடைசியில் வேகவேகமாக சீரமைக்க முடிந்தது. குறிப்பிடும்படியாகவும் பணியாற்ற முடிந்தது. என்ன ஒரே வருத்தம். பதினாறு அடி பாயவேண்டிய இடத்தில் நாலு அடிதான் பாய்ந்திருக்கிறேன். இந்த தூரத்தையும் சேர்த்து அடுத்தாண்டு கூடுதலாக பாய்ந்தாக வேண்டும். 2013 முழுக்க நிற்க நேரமிருக்காது என்று தோன்றுகிறது.
தீவிரமாக யோசித்துப் பார்த்தால் வருடம் முழுக்க மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறேன். இந்த மனநிலையை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததற்கு என்னை சுற்றியிருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

29 டிசம்பர், 2012

என்றும் முதுமை அடையாத கன்னி

படம் : முருகு

தாவணிக் கனவுகள்’ படத்தில் சிவாஜி ஒரு டயலாக் சொல்வார். “சிந்துபாத் கதையா? நான் பட்டாளத்துலே சேர்ந்தப்போ ஆரம்பமாச்சி. இப்போ ரிட்டையரும் ஆயிட்டேன். கதை மட்டும் முடிஞ்சபாடில்லே”.

தாவணிக் கனவுகள் திரைப்படம் வந்தே இருபத்தெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இடையில் நடிகர் திலகம் சிவாஜி கூட காலமாகி விட்டார். ஆனால் சிந்துபாத்தின் கன்னித்தீவுக்கு மட்டும் முடிவேயில்லை.

கன்னித்தீவு கதையை எழுதுபவரின் பெயரை சஸ்பென்ஸாக, சர்ப்ரைஸாக வைத்திருக்க ‘தினத்தந்தி’ விரும்புகிறது. கோகோ கோலா ஃபார்முலா மாதிரி இது டாப் சீக்ரெட். ஐம்பத்தி மூன்று ஆண்டுகளாக ஒரே கதாசிரியர்தான் எழுதி வருகிறார் என்கிறார்கள். ஆனாலும் இதை எழுதுவதற்காக அவர் ஒருமுறை கூட சலிப்பு கொண்டதே இல்லையாம். இத்தனைக்கும் அவர் பத்திரிகையுலக ஜாம்பவான்களில் ஒருவர். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரங்கள் போதாமல் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தவர். கன்னித்தீவுக்கு படம் வரையும் ஓவியர்கள் மட்டும் மாறி வருவதை தொடர்ந்து வாசிக்கும் நாமே அறியமுடியும்.

முடிவே இல்லாத சமாச்சாரங்களுக்கு கன்னித்தீவை ஒப்பிட்டு ஜோக் அடிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம்.

நிருபர் : உங்க வயது பதினாறுன்னு நீங்க சொல்றது அப்பட்டமான பொய்.

நடிகை : எப்படி சொல்றீங்க?

நிருபர் : தினத்தந்தியில் கன்னித்தீவு கதையை ஆரம்பத்திலே இருந்து படிச்சிட்டு வர்றதா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கீங்களே?

1982ஆம் ஆண்டு ‘சாவி’ பத்திரிகையில் வெளிவந்த ஜோக் இது. ஒருவகையில் சொல்லப் போனால் இப்போதெல்லாம் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் இப்போது ஒளிபரப்பப்படும் மெகாசீரியல்களுக்கு முன்னோடியே நம் ‘கன்னித்தீவு’தான்.

நம்முடைய இந்த கிண்டலையெல்லாம் தினத்தந்தி சீரியஸாக பொருட்படுத்தாமல், ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வதால்தான் கன்னித்தீவு பத்தொன்பதாயிரமாவது நாளை நெருங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. “உலகளவில் எந்த ஒரு ‘காமிக்ஸ்’ தொடரும் இத்தனை நாட்களாய் தொடர்ந்ததில்லை. அந்த வகையில் இது ஒரு உலகசாதனை. தினத்தந்தி நிர்வாகம் இந்த சாதனையை கின்னஸுக்கு விண்ணப்பித்தால், நிச்சயம் அப்புத்தகத்திலும் ‘கன்னித்தீவு’ இடம்பெறும்” என்கிறார் காமிக்ஸ் ஆர்வலரான விஸ்வா.

கன்னித்தீவின் கதைதான் என்ன?

கதையின் மூலம் மட்டுமே அரபுக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது. மற்றபடி கதையின் போக்கு முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனைதான். நாயகன் சிந்துபாத் ஓர் அரசனின் தளபதி. கன்னித்தீவு என்பது அழகிகள் நிறைந்த தீவு. உலகின் சிறந்த அழகிகளையெல்லாம் சிறைபிடித்து இத்தீவில் அடைத்து, உல்லாசமாக இருப்பது வில்லனான மந்திரவாதி மூசாவின் பொழுதுபோக்கு. சமகால உலக அழகி யாரென்று அறிய அவன் ஒரு மந்திரக்கண்ணாடி பயன்படுத்துவான். அந்த கண்ணாடி ஒருமுறை கதையின் நாயகி லைலாவை காட்டுகிறது. லைலாவை வழக்கமான முறையில் சிறைபிடிக்க முடியாத மூசா, கடுப்பில் மந்திரசக்தி கொண்டு அவளை அளவில் சிறியவளாக மாற்றி விடுகிறான். மீண்டும் லைலா பழைய உருவத்தை அடையவேண்டுமானால் கன்னித்தீவுக்கு போய் மந்திரவாதி மூசாவை பிடிக்க வேண்டும். இந்த பொறுப்பு அரசனால் தளபதி சிந்துபாத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. முடிவில்லா பயணத்தை நோக்கிச் செல்கிறான் சிந்துபாத். இந்தப் பயணத்தில் அவனுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள்தான் கதை.மொத்தம் ஏழு பயணம். ஒவ்வொரு பயணத்திலும் துண்டு துண்டாக கிளைக்கதைகள் நிறைய தோன்றும். இந்த ஒவ்வொரு கதைக்கும் ஏதோ ஒரு தொடர்ச்சி இருக்கும். இதுதான் கன்னித்தீவின் வடிவம்.

யாரேனும் தொடர்ச்சியாக கன்னித்தீவைப் படிக்கிறார்களா?

“குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து ஒரு சுற்றாக திரும்பத் திரும்ப நடப்பதாக கதை கொண்டுச் செல்லப் படுகிறது. தொடர்ந்து வாசிக்கும்போது ஏற்கனவே வாசித்த நிகழ்வுகள் மீண்டும் வருவதைப் போல இருக்கும். இதனால்தான் பலருக்கும் தொடர்ச்சியாக படிக்க ஆர்வம் இருப்பதில்லை. அதனால் என்ன? என் தாத்தாவும் கன்னித்தீவு படித்திருப்பார். என் அப்பாவும் படித்தார். இப்போது நானும் படிக்கிறேன். கன்னித்தீவு தலைமுறைகளை கடந்தது. அதுதான் இத்தொடரின் மகத்தான சாதனை” என்கிறார் கன்னித்தீவு வாசகரான அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன். கன்னித்தீவு உருவானதில் தொடங்கி, அதன் பின்னணித் தகவல்களையும், எழுத்தாளரையும், ஓவியர்களையும் பற்றிய விவரங்களோடு தனியொரு புத்தகமாக தினத்தந்தி வெளியிட வேண்டும் என்பது இவரது கோரிக்கை.

தினத்தந்திக்கு சிந்துபாத் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு நிகழ்வு சான்று. அப்பத்திரிகையின் நிறுவனர் ஆதித்தனார் காலமானபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கருத்துப்படம் 1981ல் வெளியானது. அதில் ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை போட்டு, தினத்தந்தியின் சாகாவரம் பெற்ற பாத்திரங்களான சாணக்கியன், ஆண்டியார் ஆகியோரோடு சிந்துபாத்தும் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக வரையப்பட்டிருந்தது.
கன்னித்தீவுக்கு இத்தனை கெளரவம் கிடைப்பதற்கு  முக்கியமான காரணம்  வாசகர்களிடம் அது ஏற்படுத்தியுள்ள மகத்தான தாக்கம் இலக்கியவாதிகளும் கூட இதற்கு தப்பவில்லை. வைரமுத்து எழுதிய ஒரு கவிதையில் ‘கன்னித்தீவு முடியும்வரை ஆயுள் இருக்க வேண்டுமென்று ஆசை பலர்க்கு இருக்கிறது’ என்கிற வரிகள் இடம்பெறுகிறது.

முடிவேயில்லா கதை பற்றிய கட்டுரையை எப்படி முடிப்பது? ஓர் ஒருவரி கதையோடு இக்கட்டுரையை முடிக்கிறோம்.

‘உலகத்தின் கடைசி தினமன்று சிந்துபாத், கன்னித்தீவை வாசித்துக் கொண்டிருந்தான்’.

(நன்றி : புதிய தலைமுறை)

27 டிசம்பர், 2012

நீதானே என் பொன்வசந்தம்


யானை விழுந்தால் எழ முடியாது என்பார்கள். ஒருவேளை எழுந்துவிட்டால் முன்பைவிட கம்பீரமாக நடக்கும். நடுநிசிநாய்களில் விழுந்த கவுதம் நீ.எ.பொ.வில், ராஜாவின் தோளில் கைபோட்டு கம்பீரமாக எழுந்து நின்றிருக்கிறார். கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளில் வந்த அத்தனை காதல் படங்களின் உணர்வுகளையும் ஒரே படத்தில் மொத்தமாக கொட்டித் தந்திருக்கிறார். உருகி, மருகி காதலித்த ஒருவராலேயே இம்மாதிரி படமெடுக்க முடியும். கவுதம் நல்ல காதலன். கொஞ்சம் விட்டாலும் ‘குஷி’யாகி விடக்கூடிய ஸ்க்ரிப்ட்டை லாகவமாகக் கையாண்டிருக்கும் கவுதமின் சாமர்த்தியத்தை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை. லைக் யூ கவுதம்.

‘நீதானே என் பொன் வசந்தம்’ உங்களுக்கு பிடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட சில தகுதிகளில் ஏதேனும் ஒன்றேனும் இருக்க வேண்டும்.

• நீங்கள் ஆணாக இருக்க வேண்டும். அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.

• உங்களுக்கு பார்ப்பதிலோ, கேட்பதிலோ பிரச்சினை இருக்கக்கூடாது.

• குறைந்தபட்சம் ஒரே ஒரு முறையாவது ஒருதலையாகவாவது காதலித்திருக்க வேண்டும்.

• காதலி/காதலன் திருமண ரிசப்ஷனுக்கு தெரியாத்தனமாகப் போய், மனம் நொந்து விடிய விடிய சரக்கடித்து மட்டையாகி இருக்க வேண்டும்.

இதெல்லாம் இல்லாமலேயே கூட பிடிக்கலாம். காதலைப் பிடிக்குமென்றால்...

வருணும், நித்யாவும் மட்டுமே வாழும் ஓர் உலகம். அந்த உலகத்துக்குள் அவர்களுக்கு தெரியாமல் உங்களால் பார்வையாளராக பிரவேசிக்க முடிந்துவிட்டால் போதும். நீ.எ.பொ. ராஜபோதை கொடுக்கும். பின்னணிக்கு ராஜா. போதாதா?

ஐந்தரை நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டாக நீளும் இண்டர்வெல் ப்ளாக் தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மகத்தான சாதனைகளில் ஒன்று. இவ்வாண்டின் சிறந்த நடிகை சமந்தா என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஒரே ஷாட் என்றாலும் குளோசப், மிட், லாங் என்று கேமிராமேன் நிகழ்த்தியிருக்கும் மேஜிக்கை உணரமுடியாதவர்கள் சினிமா பார்ப்பதே வீண். 

இசை ஒரு படத்தை எந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டுச் செல்லும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம். காதலும், இசையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இதை உணர்ந்ததால்தான் கவுதம் ராஜாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். இருபது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் சிலிர்க்கவைக்ககூடிய இசையை இளையராஜா அள்ளித் தெளித்திருக்கிறார். ராஜா இன்றி இப்படம் சாத்தியமாகியிருக்க வாய்ப்பேயில்லை.

சகலகலா வல்லவன், மன்னன் என்று ஆணாதிக்க மனோபாவமாய் ரசித்து வளர்ந்தவர்களுக்கு நாயகன், நாயகி இருவரையும் ஸ்க்ரிப்ட்டில் பேலன்ஸ் செய்து, கழைக்கூத்தாடியாய் கயிற்றில் நடந்திருக்கும் ‘நீ.எ.பொ.’ மாதிரி சப்ஜெக்டுகளை உடனடியாக ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருப்பது இயல்புதான். பெண் பார்வையில் காதலை சொன்ன ‘பூ’வுக்கு நேர்ந்த கதிதான் நமக்கு ஏற்கனவே தெரியுமே?

ஆனாலும், ஐஸ்ப்ரேக்கர் என்கிறவகையில் இது முக்கியமான படம். அனுபவ நிகழ்வுகளை அப்பட்டமாக, கொஞ்சம் கூடுதல் புத்திசாலித்தனத்தோடு திரைக்குக் கொண்டுவந்திருக்கும் பரிசோதனை முயற்சி. பின்னால் வருபவர்கள் இதை பின்பற்றி நிச்சயம் சிகரமேறுவார்கள்.

வெர்டிக்ட் : சான்ஸே இல்லை மச்சான். சச் எ வொண்டர்ஃபுல் மூவி...

26 டிசம்பர், 2012

மரபுநோய் தவிர்

பாவ புண்ணியங்கள் மட்டுமல்ல. நோய்களும் நம்மை தலைமுறை தலைமுறையாக துரத்துகின்றன. வரும் முன் காப்பது எப்படி?

அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்துவைத்து விட்டுப் போவது என்ன?

பரம்பரைச் சொத்து.

அது மட்டுமா? அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது. நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதஸ்வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ஸபோன் வாசிப்பதாக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இவை மட்டுமின்றி அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்கள் விட்டுச் செல்லும் சொத்து மட்டும் வேண்டும். நோய்கள் வேண்டாம் என்றால் எப்படி?

கவலைப்படாதீர்கள். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவும் அறிவியல் ஒரு வழியை கண்டுபிடித்துத் தந்திருக்கிறது.

செர்ஜி மிகாலோவிச் ப்ரின் என்று பெயர் சொன்னால் உடனே தெரியாது. ஆனால் ‘கூகிள்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்று சொன்னால் தெரியுமில்லையா? இந்த செர்ஜியின் மனைவி ஒரு உயிரியல் தொழில்நுட்பப் பட்டதாரி. கம்ப்யூட்டர் விற்பன்னரும், உயிரியல் தொழில்நுட்பம் தெரிந்தவரும் இணைந்தால் என்னாகும்? ஆராய்ச்சிதான். மனித மரபணுக்கள் தொடர்பாக நிறைய துறைசார்ந்த பேராசிரியர்களிடம் நாட்கணக்கில் பேசி, பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது நமது மூதாதையர்களிடமிருந்து நமது மரபணுக்களில் கடத்தப்படும் செய்திகள், கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும் டேட்டாபேஸ் மாதிரி. அவற்றை வாசித்துப் புரிந்துக் கொண்டால் மென்பொருளை திருத்துவது மாதிரி நமக்குத் தேவையான சில திருத்தங்களை செய்துக் கொள்ளலாம்.

இதெல்லாம் பொழப்பத்த வேலை. எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ளாத வாழ்க்கையே ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றெல்லாம் நிறைய பேர் செர்ஜியை விமர்சித்தார்கள்.

செர்ஜி மெனக்கெட்டு இவ்வளவு ஆராய்ச்சிகளுக்குள் தன்னை உட்படுத்திக்கொள்ள ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது. அவரது தாயாரை பார்கின்சன் நோய் தாக்கியிருந்தது. இது பரம்பரையாக தாக்கக்கூடிய நோய் என்று அவர் நினைத்தார். இதிலிருந்து தன்னை எப்படி எதிர்காலத்தில் காத்துக் கொள்வது என்கிற தேடலில் மூழ்கியதின் விளைவே இதெல்லாம் (பிற்பாடு அந்த நோய் பரம்பரையாக கடத்தப்படுவதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தது வேறு கதை).

இப்படியாகதான் 23andMe என்கிற மரபணு பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிற ஒரு நிறுவனத்தை தம்பதிசமேதரராய் தொடங்கினார்கள். 23 என்கிற எண் நம்முடைய குரோமோசோம் ஜோடிகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.

2007ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மரபுரீதியாக நமக்கு என்ன நோய்கள் வரும் என்பதை அறிந்துக்கொள்ள ஓர் எளிமையான முறையை கண்டறிந்தது. அதாவது நம் எச்சிலை துப்பினால் போதும். அதில் இருக்கும் டி.என்.ஏ.க்களை ஆராய்ந்து, அவர்கள் வாசித்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வரக்கூடிய மரபார்ந்த நோய்களை அறிவார்கள். இவற்றை தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ எப்படி என்று மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை சொல்வார்கள். 2008ஆம் ஆண்டு இந்த சோதனை முறையை வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக டைம் பத்திரிகை அறிவித்தது. அமெரிக்கர்கள் பலரும் கடந்த ஐந்தாண்டுகளில் இச்சோதனையை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நோய்களின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா.. அவர்களுக்கு மட்டும்தான் பரம்பரை நோய்கள் வருமா.. இந்த நவீன சோதனைமுறை அவர்களுக்கு மட்டும்தானா என்று அவசரமாக மனம் குமுறாதீர்கள்.

நமக்கும் இந்த வசதி வந்துவிட்டது. அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரபணு நோய்களை முன்கூட்டியே கண்டறியும் சோதனையை செய்யும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்கோட் லைஃப் சயின்சஸ் என்கிற நிறுவனம் இந்த குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள மட்டுமே பெரும் முதலீட்டில் களமிறங்கியிருக்கிறது. அதற்காக சோதனைக்கு நம்முடைய சொத்தையே எழுதி வாங்கிவிடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. சோதனைக் கட்டணம் ரொம்பவும் அதிகமல்ல, அதே நேரம் ரொம்பவும் குறைவுமல்ல.

இச்சோதனையை மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

www.xcode.in என்கிற இணையத்தள முகவரிக்குச் சென்று உங்கள் மரபணுக்களை சேகரிக்க வேண்டிய kitஐ கோரலாம். இரண்டு நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். எச்சிலை சிறிய ட்யூப்பில் துப்பிவிட்டு, அவர்கள் குறிப்பிடுவதைப் போல தயார் செய்துவிட்டு போன் செய்தால் போதும். கூரியர் மூலமாக அவர்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள். மருத்துவமனைக்கோ, பரிசோதனைக் கூடத்துக்கோ அலைய வேண்டியதில்லை.

மொத்தமே அவ்வளவுதான். உங்களுடைய ரிப்போர்ட்டை நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக உங்கள் வீட்டுக்கே அனுப்பிவிடுவார்கள்.

சர்க்கரை நோய், கொழுப்பு, இதயநோய், வாதம் தொடர்பான நோய்களுக்கான சோதனைமுறைகள்தான் இப்போதைக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் மரபுரீதியாக வரக்கூடிய மற்ற நோய்களை கண்டறிவதற்கான வசதியும் இங்கே கிடைக்கும். உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடுமென்று சொல்லுவதோடு, அவற்றை தவிர்க்கவோ கட்டுப்படுத்தவோ என்னென்ன மாதிரியான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவ ஆலோசனையும் தருகிறார்கள். இப்போது இருக்கும் சோதனை முறைக்கு அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்வரைதான் செலவாகும்.

அப்புறமென்ன? என்னென்ன நோய் வருமோ என்று அஞ்சி நடுங்காமல், ஒரு சோதனையை எடுத்துவிட்டு வருமுன் காக்க தயாராகுங்கள்.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் இளைஞரான டாக்டர் சலீம் முகம்மது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். நண்பரோடு இணைந்து தொடங்கியிருக்கிறார். 2007ல் அமெரிக்காவில் பட்டமேற்படிப்பு படிக்கும்போதே, இந்தியாவிலும் இத்தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த விரும்பினார். ஆனால் சோதனைமுறைக்கு அப்போது செலவு மிக அதிகம். இப்போது இந்தியர்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு தொழில்நுட்பம் சகாயம் ஆகியிருப்பதால், தைரியமாக களத்தில் குதித்திருக்கிறார்.

(நன்றி : புதிய தலைமுறை)

24 டிசம்பர், 2012

காலத்தின் அடையாளம்!


ஒரு துறையில் இருபத்தி மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை என்பதே சாதனைதான். அதிலும் சாத்தியமான உச்சபட்ச சாதனைகளோடு நீண்டகால சேவை என்பது “இனிமேல் ஒருத்தன் பிறந்துதான் வரணும்” என்கிற வார்த்தைக்கு மிகப் பாந்தமாக பொருந்துகிறது.

இதனால்தான் சச்சின் தான் வாழும் காலத்தின் அடையாளமாக வரலாற்றில் அறியப்படப் போகிறார். கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் பாக்கியம் அது. கலைஞர்-எம்.ஜி.ஆர், ரஜினி-கமல், இளையராஜா-ரகுமான் என்று அவரவர் காலக்கட்டத்தின் அடையாளங்களாக மாறிப்போனவர்களுக்கு சமமான இன்னொரு எதிர்போட்டியாளரும் சமகாலத்தில் இருந்திருப்பார். சச்சினுக்கு நிகராக மட்டுமல்ல, அவரை நெருங்கக்கூடியவர்களும் கூட அவர் காலத்தில் இல்லை. அவ்வாறு சச்சினுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டவர்களும் கூட கடைசியில் சச்சினுக்கு சரணகோஷம் போட்டுவிட்டு ஓய்வெடுத்ததுதான் வரலாறு.

‘கிரிக்கெட் ஒரு மதமென்றால், சச்சின்தான் அதன் கடவுள்’ என்கிற வாக்கியம் சும்மா போகிறபோக்கில் சொல்லப்பட்டதல்ல. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்ப்பது இந்தியர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம்தான். ஏனெனில் இங்கே ஒரு தலைமுறைக்கு சச்சின் என்றால் கிரிக்கெட், கிரிக்கெட் என்றால் சச்சின். “கவாஸ்கரும், ஸ்ரீகாந்தும் ஓபனிங் இறங்குறப்போ...” என்று பழம்பெருமை பேசும் பெருசுகளும் அவரை ரசித்தார்கள். சைக்கிள் ட்யூப் பால், தென்னை மட்டை பேட்டோடு தெருவில் கிரிக்கெட் ஆட இறங்கிய வாண்டுகளும் அவரை ரசித்தார்கள்.

நண்பன் ஒருவன் அவனைவிட கூடுதலாக ஒரு வயதுள்ள பெண்ணை காதலித்தான். கல்யாணம் என்று வரும்போது அது ஆட்சேபணைக்குரிய அம்சமாக அவனது பெற்றோரால் முன்வைக்கப்பட்டது. “சச்சினைவிட அஞ்சலி அஞ்சு வயசு பெருசுப்பா” என்று அவன் சொன்ன சமாதானம்தான், சச்சின் ரசிகரான அவனுடைய அப்பாவை கன்வின்ஸ் செய்தது.

அவரது கேரியரின் கடைசிக்கட்டங்களில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் எக்காலத்திலுமே மோசமாக விளையாடியவர் அல்ல என்பதே நிம்மதியாக இருக்கிறது.

குட்பை சச்சின்!


11 டிசம்பர், 2012

அழியப் போகிறதா உலகம்?


கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஜாதகம், பெயர்ராசி எல்லாம் பார்க்காமல், வத்தலோ தொத்தலோ கிடைத்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள்.

யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாக் மார்க்கெட், பொருளாதார மந்தம், வேலை இழப்பு, இடைத்தேர்தல், மின்னணு இயந்திரம் குளறுபடி, ஜெயலலிதா, கொடைநாடு, கலைஞர் கடிதம், பெட்ரோல் விலை உயர்வு, துவரம்பருப்பு விலை உயர்வு, தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, எண்கவுண்டர், ஈழம், அல்குவைதா, அமெரிக்கா, கியூபா, எதிர்வீட்டு பிகர், பக்கத்து வீட்டு நாய்க்குட்டி, தெருமுனை பிள்ளையார் கோயில், 23சி பஸ், லேடீஸ் காலேஜ், பார்க், பீச், இத்யாதி.. இத்யாதி பிரச்சினைகள், மகிழ்ச்சிகள், கோபங்கள் எல்லா கருமத்தையும், கந்தாயத்தையும் மறந்துடுங்க. வாழும் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள்.

ஏனெனில், உங்களுக்கு இன்னமும் இருப்பது இரண்டேகால் வருடம் மட்டுமே. 2012 டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது. இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.

மாயா என்றால் நமீதா நடிக்கும் கிளுகிளு படம் மட்டுமல்ல. மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

மாயர்களைப் போலவே உலகில் வாழ்ந்த பல இனத்தவர்களுக்கும் பிரத்யேக காலண்டர்கள் இருக்கிறது. அந்த காலண்டர்களும் கூட உலகம் அழியப்போவதாகவே பயமுறுத்துகிறது. என்ன ஆண்டுதான் கொஞ்சம் முன்னே, பின்னே 2011, 2013 என்று மாறியிருக்கிறது.

உண்மையில் 2012ல் என்னதான் நடக்கப் போகிறது?

எதிர்காலம் குறித்து சீட்டுக்கட்டிலிருந்து கிளி எடுத்துப்போடும் சீட்டை வைத்து சொல்லப்படும் பலன்களை நீங்கள் நம்புகிறீர்களா? இரத்தமும், சதையும், எலும்பும், மூளையும், சிந்தனைகளுமாய் வளர்ந்த உங்களின் எதிர்காலம் ஒரே ஒரு நெல்லுக்காக கிளி அவசரமாக எடுத்துப்போடும் சீட்டில்தான் இருக்கிறதா என்ன? கிளிஜோசியரின் கிளி மாதிரி தான் ஆளாளுக்கு புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள். நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து சரியாக பத்து வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?

உலகம் தோன்றியதிலிருந்தே உலகின் கடைசிநாளான ஜட்ஜ்மெண்ட் டே பற்றி பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள். உண்மையில் இன்று நம் பூமிக்கு அச்சுறுத்தலாக இருப்பது புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்). மனிதர்களுக்கு மூளை வீங்கிப்போய் அறிவியலில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, எக்குத்தப்பாக கண்டுபிடித்து தொலைத்த கண்டுபிடிப்புகள், நவீன வசதிகள் தான் (குறிப்பாக வாயுமண்டலம் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலைகள், ஏசி இயந்திரங்கள்) மனிதகுலத்துக்கு வினையாக தோன்றியிருக்கிறது.

நாம் எப்போது அழிவோம், எப்படி அழிவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அழியவேண்டிய நேரத்தில் நிச்சயமாக அழிவோம். அது நிச்சயமாக இப்போது அல்ல. ஆகையால் இப்போதைக்கு உலகம் அழிவதைப் பற்றிய பழைய கணிப்புகளை வாசிக்காமல், ப்ரீயாக விடுவதே நம் மனநிம்மதிக்கு உத்தரவாதம் தரும் செயலாக இருக்க முடியும்.

2012 டிசம்பர் மாதம் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் முடிவடையும் என்று ஒக்கேனக்கல் செயல்பாட்டு கால அட்டவணைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் முடிவடைந்தாலும் சரி, முடிவடையா விட்டாலும் சரி. ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்த புலனாய்வுக் கட்டுரை ஒன்றினை 2013 ஜனவரி மாத குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்களும், நானும் படித்துக் கொண்டிருக்கப்போவது மட்டும் உறுதி.

(குமுதம் ரிப்போர்ட்டர், 08-08-2009)

7 டிசம்பர், 2012

கமல் விஸ்வரூபம்!

கமல் எப்போதுமே மந்தையிலிருந்து பிரிந்து தனியே செல்லும் ஆடுதான். இந்த தோற்றத்தை அவர் வலிந்து உருவாக்குகிறார் என்றொரு விமர்சனம் உண்டு. எனக்கென்னவோ அவரது இயல்பே இதுதானென்று தோன்றுகிறது.
சாரு சொல்வதைப் போல ஒருவகையில் கமல் ‘நிகழ மறுத்த அற்புதம்’தான். அவருக்கு பலவருடம் பின்னால் வந்தவர்களெல்லாம் அவரை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் தமிழ் சினிமாவுக்கு புது இரத்தம் பாய்ச்சும் பணியை அவர் தவம் போல மேற்கொண்டு வருவதை மறுக்க முடியாது. குறிப்பாக அதிசமீபத்திய தொழில்நுட்பங்களை தமிழில் அறிமுகப்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்கிற அவரது வெறி முக்கியமானது. இதனால் கமலுக்கு தனிப்பட்ட முறையில் ஏராளமான பொருளிழப்பு என்றாலும், சினிமாவுக்கு லாபம்தான்.
திருட்டு வீடியோ கேசட் காலத்திலிருந்தே தொழில்நுட்பங்களை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப சினிமாவில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். தொழில்நுட்பத்தை சபிக்கக்கூடாது. அதை நமக்கு வாகாக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சிந்திக்க வேண்டும் என்பது அவரது கட்சி.
லேட்டஸ்ட்டாக விஸ்வரூபம் பிரச்சினை. கிட்டத்தட்ட கோவணத்தை கூட அடகுவைத்து படம் எடுத்திருக்கிறார். இப்போதிருக்கும் வியாபார முறையை வைத்துக்கொண்டு இப்படத்தை காட்சிப்படுத்தினால், தலையில் துண்டை போட்டுக்கொண்டு காசி, இராமேஸ்வரம் என்று தயாரிப்பாளர் கமல் போயாகவேண்டும். ‘வீடியோ ஆன் டிமாண்ட்’ மூலமாக வெளியிடுவதின் மூலம் பெரிய லாபத்தை காணமுடியுமென்று சொல்கிறார். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டி பழகிய தமிழ் திரையுலகினர் வழக்கம்போல குதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இன்று குதித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இதே முறையில் பல கோடிகளை குவிக்கப் போகிறார்கள். ஏனெனில் கமலின் ராசி அப்படி. அவர் அறிமுகப்படுத்தும் விஷயங்களின் அறுவடையை மற்றவர்கள்தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு உழக்குதான் மிச்சம்.
சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் திரும்பத் திரும்ப சினிமாவிலேயே முதலீடு செய்யும் கமல்ஹாசன், சினிமாவை அழிக்கும் முயற்சிகளில் இறங்கமாட்டார் என்று நம்பலாம். படமெடுக்கும் முதலாளி என்கிற அடிப்படையில் அவர் ‘லாபம்’ எதிர்ப்பார்ப்பது நியாயம்தான். கமல் வெறும் கலைஞன் மட்டுமல்ல.
சினிமா என்பது சர்வநிச்சயமாக வணிகம்தான். இதை சினிமாக்காரர்கள் ஒப்புக்கொள்வதில் ‘ஈகோ’ இருக்கலாம். கலை, பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை தாண்டி, சினிமாவின் குறிக்கோள் பணம் ஈட்டுவதே. ஹாலிவுட்டுக்கு நெருக்கமாக தொழில்நுட்பரீதியாக நாம் வளரும் அதே நேரத்தில், அவர்களது வியாபார யுக்திகளையும் கைக்கொண்டாக வேண்டும். இன்றைய தினகரன் வெள்ளிமலரில் (டிச.7, 2012) ‘தயாரிப்பாளரே இல்லாமல் சினிமா’ என்றொரு கட்டுரை வெளியாகியிருக்கிறது (சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் வாசித்தே ஆகவேண்டிய கட்டுரை). தயாரிப்பாளரே இல்லாமல் பலரும் சேர்ந்து முதலீடு செய்து படம் தயாரிப்பது என்கிற முறையை குறித்து அக்கட்டுரை ஆழமாக அலசுகிறது. சினிமாத்தொழில் இப்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் கமல்ஹாசன் கலையை அழிக்கிறார், இண்டஸ்ட்ரியை பாழாக்குகிறார் என்றெல்லாம் பேசுவது பிற்போக்குத்தனம்.
முதல் போடுபவர்கள் லாபத்தை எடுத்தாக வேண்டும். பணம் எடுக்க என்னென்ன யுக்திகள் இருக்கிறதோ, அத்தனையையும் பிரயோகித்துப் பார்த்தாக வேண்டும். சூதாட்டம் மாதிரியில்லாமல் மற்ற தொழில்களைப் போலவே பணம் போடுபவர்களுக்கு, குறைந்தபட்ச உத்தரவாதத்தை சினிமா வழங்கியாக வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
இன்று சினிமா என்பது திரையிடுதலில் மட்டும் காசு எடுக்கும் தொழில் அல்ல. ‘பாக்ஸ் ஆபிஸ்’ என்பதை டி.சி.ஆர் எனப்படும் டிக்கெட் கலெக்‌ஷன் ரெக்கார்டை மட்டுமே வைத்து கணக்கிடுகிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதிக்கும் கட்டணம், எஃப் & பி எனப்படும் உணவு மற்றும் பானங்களை விற்பதன் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றையும் சேர்த்தே ஒரு படத்தின் வசூலாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா முழுக்க மல்ட்டிஃப்ளக்ஸ் கலாச்சாரம் பெருகி வருவதற்கு வெறுமனே திரையில் காட்டப்படும் சினிமா மட்டுமே காரணமல்ல. சினிமாவோடு மறைமுகமாக வருமானம் கொழிக்கும் மற்ற விஷயங்களும்தான் காரணம். இதெல்லாம் சாத்தியம் ஆனதால்தான் இன்று தென்னிந்திய திரைப்படங்கள் கூட நூறு கோடியை தாண்டி வசூலிக்க முடிகிறது.
கமல் விதை போட்டிருக்கிறார். விஸ்வரூபம் எடுத்து விருட்சமாக வளர சினிமாக்காரர்கள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நாம் கனிகளை எதிர்ப்பார்க்க முடியும்.

4 டிசம்பர், 2012

அபிமானங்கள் உடையும் காலம்

2012. என்னுடைய பழைய ‘ஐடியல்’ பலரையும் ஒழித்துவிட்டது. வயது காரணமா என்று தெரியவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாய் கமலுக்காக யாரிடமாவது எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன். இப்போது கமல் அபிமானிகளிடம் நானே சண்டை போடுமளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. அதையெல்லாம் விடுங்கள். ரசனை, பார்வைக் கோளாறாக இருக்கலாம்.
தனிப்பட்ட முறையில் மிக அதிகமாய் பாதிக்கப்பட்டிருப்பது டாக்டர் ராமதாஸ் அவர்களின் சமீபகால செயல்பாடுகளால்தான். கமலை மாதிரியே நினைவுதெரிந்த காலத்தில் இருந்து இவர் என்னுடைய ஹீரோ.
பலரும் அவரை சாதிவெறியர் என்றோ, அரசியல் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தி என்றோ விமர்சித்தபோதெல்லாம் அதெல்லாம் பெரியதாக இம்பேக்ட் ஏற்படுத்தியதில்லை. வடமாவட்டங்களில் வஞ்சிக்கப்பட்ட சாதியாக வன்னியர்களை நான் கருதியதும் ஒரு காரணமாக இருக்கலாம். சாராயம் காய்ச்சுகிற சாதி என்று வன்னியர்களை கீழ்மைப்படுத்திப் பேசியவர்கள் என்னைச் சுற்றி நிறைய இருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமூகத்தில் பிறந்து தன்முயற்சியால் அந்த காலத்திலேயே டாக்டருக்கு படித்து வளர்ந்தவர். நாம்தான் மேலே வந்துவிட்டோமே என்கிற சுயநலத்துக்கு இடம்தராமல் தான் பிறந்த சமூகத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். உயிரைக் கொடுத்து போராடி ‘எம்.பி.சி. கோட்டா’ கொண்டுவர காரணமாக இருந்தவர். கல்வி குறித்த விழிப்புணர்வை ஊட்டி பல்லாயிரம் இளைஞர்கள் பட்டதாரிகளாக பரிணமிக்க கலங்கரை விளக்காய் நின்றவர். ராமதாஸை கொண்டாட இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளிலேயே வித்தியாசமான கட்சியாக பா.ம.க.வை உருவாக்கியவர். எளிய மக்களுக்கு இடம் தருவதோடு, அறிவுஜீவிகள் எளியவர்களோடு கலக்க அருமையான களம் அமைத்துத் தந்தவர். அரசின் பிரச்சினைகளை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வை அறிவுபூர்வமான முறையில் முன்வைப்பவர். வருடா வருடம் நிபுணர்களின் அறிவுறுத்தலில் அவர் போடும் ‘மாதிரி பட்ஜெட்’ போன்ற முயற்சிகள் இந்திய அளவில் எந்த கட்சியும் செய்யாத சாதனை.
மிகச்சரியான சந்தர்ப்பத்தில் வன்னியர் சங்கத்திலிருந்து பா.ம.க உருவானது. எம்.ஜி.ஆரின் இல்லாமையை அதிகம் பயன்படுத்திக்கொண்டது ஜெ.வா அல்லது டாக்டரா என்றால் டாக்டர்தான் என்று தோன்றுகிறது. ராஜீவ் மரண அனுதாபத்திலும் சட்டமன்றத்தில் தன் கணக்கை சரியாகவே துவக்கியது பா.ம.க., என்ன, ஒரு அரசியல் கட்சியாக மலர்ந்தபின் கொள்கை, கோட்பாடுகள் குறித்த குழப்பம் எல்லோரையும் போலவும் டாக்டருக்கும் வந்தது. ஆரம்பத்தில் தன்னை திராவிடக் கட்சிகளின் நீட்சி போல காட்டிக் கொண்டார். பிற்பாடு அறுபதுகளில் திமுக கைவிட்ட கொள்கைகளை கையில் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட திராவிட தமிழ் தேசியம் மாதிரி. ஒருகட்டத்தில் தீவிரமான தமிழ்தேசியக் கட்சியைப் போன்ற தோற்றத்துக்கு பா.ம.க., வந்தது. ஆனால் இக்கட்டத்தில் அடைந்த தேர்தல் தோல்விகள் பா.ம.க.வின் எதிர்காலம் குறித்த குழப்பத்தை அதன் தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் பழைய திண்ணை அரசியலுக்கு மாறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டதாக அக்கட்சியின் தலைமை கருதுகிறது. எவ்வகையிலும் இது பரிணாம வளர்ச்சியாக இருக்காது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரம்பரியப் பெருமைகளை இழப்பதாக நாம் கருதினாலும் திராவிடக் கட்சிகளின் இருத்தலியல் என்பது, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை நிலைப்படுத்துவது, அதன் மூலமாக தாம் நம்பும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது வழக்கமாக இருக்கிறது. பா.ம.க. சந்தர்ப்பத்தங்களை பயன்படுத்தியதுண்டு. ஆனால் ‘கொள்கைகள்’ என்று தாம் நம்பியதை சந்தர்ப்பங்களுக்காக பலி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களோடு பகை போதும் என்கிற முடிவுக்கு இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்த கொள்கை முடிவை இன்று டாக்டர் ராமதாஸ் காற்றில் பறக்க விட்டிருப்பது இதைத்தான் காட்டுகிறது. திருமாவளவனோடு இணைந்து இரவும் பகலுமாக அவர் பாடுபட்ட முயற்சிகள் எல்லாம் இன்று விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. சமூக நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை என்று டாக்டரும் நம்பத் தொடங்கிவிட்டதையே தர்மபுரிக்கு பிறகான அவரது செயல்பாடுகள் உணர்த்துகிறது. மேலும் கட்சியின் பிடி டாக்டரிடம் இல்லாமல், காடுவெட்டி குரு போன்றவர்கள் கைக்கு போய்விட்டதையும் உணர்ந்து வருத்தப்பட வேண்டியிருக்கிறது.
கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் பெரியாரியக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாகவே டாக்டரின் சமீபக்கால நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பா.ம.க., பண்பட்ட அரசியல் கட்சியல்ல, இன்னமும் அதே சாதிச்சங்கம்தான் என்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே டாக்டரும், பா.ம.க., தலைவர்களும் நடந்துக் கொள்கிறார்கள். கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் ஹீரோ, இன்று ‘காதல்’ படத்து வில்லனாய் தெரிவது காலத்தின் கோலம். சகிக்க முடியாத கொடுமை.

3 டிசம்பர், 2012

நடுவுலே திடீர்னு ஜட்டியைக் காணோம்

“கொடியிலே காய வெச்சிருந்தது எங்கப் போச்சி? இதைப் போயி காக்காவா தூக்கிட்டுப் போயிருக்கும்?”

“ஒழுங்கா தேடுங்க. கருமம். தலைதீபாவளிக்கு வந்த மாப்புள்ளை மோதிரம் காணோம், செயினைக் காணோம்னு சொன்னாலாவது கெத்தா வெளியே சொல்லிக்கலாம்”

“ஏண்டி. எது காணோமோ அதை தானேடி காணோம்னு சொல்ல முடியும். இதுக்காக செயினையும், மோதிரத்தையும் தொலைச்சிட்டு, காணாம போனது என்னோட ஜட்டி இல்லே.. செயினும் மோதிரமும்னு சொல்ல சொல்றீயா?”

“எதுக்கு இப்போ நாய் மாதிரி கத்தறீங்க. தொலைஞ்சது தம்மாத்தூண்டு ஜட்டிதானே? அதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு?”

“அதென்னடி நாய் மாதிரி.. நாய்னு டைரக்டாவே சொல்லிட்டு போவவேண்டியது தானே?”

“அய்யோ.. அய்யோ.. விடுங்க வேற ஜட்டியை எடுத்து போட்டுட்டு நீட்டா வெளிய வாங்க. யாரு காதுலேயாவது விழுந்ததுன்னா ஆயுசுக்கும் கேலி, கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க!”

“ஹேய்.. அது காஸ்ட்லி ஜட்டிடீ. தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வர்றமே, கொஞ்சம் கவுரவமா இருக்கட்டும்னு காஸ்ட்லியா வாங்கனேன். இதுவரைக்கும் இவ்வளவு விலை கொடுத்து வாங்குனதே இல்லை!”

“என்ன சத்தம்.. என்ன சத்தம்? என்ன மாப்புள்ளே. எம்பொண்ணு பஜாரி மாதிரி கத்துறாளா?”

“இல்லை மாமா.. அதெல்லாம் ஒண்ணுமில்லே!”

“இல்லையே ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சத்தம் போடுறா மாதிரி கேட்டுதே?”

“அப்பா. அவரோட ஜட்டியை காணோமாம். நேத்து காலைலே குளிச்சிட்டு மாடியிலே இருந்த கொடியிலே காயப்போட்டு வெச்சிருந்தது”

“பச்சை கலரு ஜட்டியா?”

ஆர்வத்தோடு “ஆமாம் மாமா. நீங்க பார்த்தீங்களா?”

“அடடே அதே மாதிரி என்கிட்டேயும் ஒண்ணு இருக்கறதாலே என்னோடதுன்னு நெனைச்சி காலையிலே எடுத்து போட்டுக்கிட்டேன். கொஞ்சம் டைட்டா இருக்கறப்பவே டவுட் வந்தது..”

“கருமம்.. என்ன மாமா இது? ஒரு ஜட்டி கூட உங்களோடதா உங்களோடது இல்லையான்னு உங்களுக்கு தெரியாது?”

“மாப்ளே.. ஓவரா பேசாதீங்க. வேணும்னா இப்பவே நான் கயட்டி துவைச்சி கொடுத்துடறேன். சும்மா சத்தம் போடுற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க!”

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம். சகிக்க முடியாத இந்த துயரச் சம்பவத்தைச் சந்தித்த மாப்பிள்ளை என்னுடைய அண்ணன். சம்பந்தப்பட்ட மாமனார் வெற்றிகரமாக பொண்ணு கொடுத்து மொகலாயப் படையெடுப்பு மாதிரி எங்கள் குடும்பத்தின் மீது படையெடுத்து தவிர்க்க முடியாத சக்தியாக இப்போது விளங்கிக் கொண்டிருக்கிறார். எங்கள் குடும்பத்தின் நல்லது கெட்டது எதுவுமே இவரின்றி இன்று அணுவும் அசையாது. ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ ஜனகராஜ் மாதிரி லவ்வபிள் மாமனார். எழுபத்தாறு வயதாகிறது. இன்னமும் ஸ்பீடாக சைக்கிளில் டபுள்ஸ் மிதிக்கிறார். வாராவாரம் ஞாயிறுக்கிழமை காலையிலேயே சைக்கிளோடு வந்துவிடுவார். முன்பெல்லாம் ஷெட் கிணறுகளில் குளிக்கப் போகும்போது, எங்களோடு வந்து டைவ் அடிப்பார். 

அண்ணனின் சோக வரலாறு இந்த தம்பிக்கும் தொடர்கிறது. அந்த துயரச்சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழித்து, மாமனார் அவருடைய தம்பிமகளை பிடித்துதான் எனக்கும் கட்டிவைத்தார்.

1 டிசம்பர், 2012

தி போலிஸ் ஸ்டோரி

கடந்த அக்டோபர் 27 அன்று மருதுபாண்டியர் நினைவு தினத்தின் போது வேம்பத்தூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார் திருப்பாச்சேத்தி காவல் நிலைய துணை ஆய்வாளர் ஆல்வின் சுதன். அங்கு இரண்டு தரப்பினருக்கான மோதல் ஏற்பட்டது. அதுகுறித்த விசாரணைக்கு சென்ற ஆல்வின் சுதனை சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். சிவகங்கை மாவட்டம் முழுக்க காவல்துறையினர் கடுமையான அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தார்கள்.

நவம்பர் 6 அன்று துணை ஆய்வாளரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபு, முத்துக்குமார், மகேஷ் மூவரும் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பிரபு, பாரதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் சிவகங்கை கோர்ட்டில் மனுதக்கல் செய்தனர்.

இதற்கிடையே பிரபு, பாரதி இருவர் மீதும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தீண்டாமை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது இருவருமே போலிஸிடமிருந்து தப்பித்து விட்டார்களாம். தப்பித்தவர்கள் சும்மா தப்பிக்காமல் நான்கு போலிஸாரை தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றிருக்கிறார்கள்.

உடனடியாக போலிஸ் உஷாராகி எல்லா இடங்களிலும் வலைவிரித்து குற்றவாளிகளை பிடிக்க தயாரானது. பக்கத்து மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு எட்டே முக்கால் வாக்கில் மானாமதுரை அருகே மேலமேல்குடி என்கிற இடத்தில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த குற்றவாளிகளை வாகனச்சோதனை நடத்திக் கொண்டிருந்த போலிஸார் மடக்கியிருக்கிறார்கள். அங்கேயும் போலிஸார் மீது பயங்கர ஆயுதங்களோடு இருவரும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இங்கும் மூன்று போலிஸார் காயமடைந்தனர்.

இந்த தகவல் அப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. வெள்ளைத்துரைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வெள்ளைத்துரைதான். என்கவுண்டருக்கு என்றே எம்பெருமானால் படைக்கப்பட்ட ‘வீரப்பன் புகழ்’ வெள்ளைத்துரையேதான். அவர் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அதுவரை குற்றவாளிகள் அதே இடத்தில் தேவுடு காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதிரடிப்படையை கண்டதுமே வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் போலிஸ் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்திருக்கிறது. படுகாயமடைந்த இருவரும் மதுரை மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருக்கிறார்கள்.

காவல்துறை ஆய்வாளர்களை கொன்ற நரகாசுரர்கள் இருவரும், அடுத்த ஒரே மாதத்தில் போலிஸாரால் (வேறு வழியில்லாமல்) சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தி பரவியதும், சிவகங்கை அரண்மனை அருகே போலிஸார் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடினார்கள்.

சுபம்.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்துக்கு சவால் விடும் விறுவிறுப்பான இந்த திரைக்கதையில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடித் துல்லியம் கொண்டவையாக இருக்கிறது. க்ளைமேக்ஸில் வெள்ளைத்துரை எண்ட்ரி ஆனதுமே ரசிகர்கள் விசில் அடித்து கரகோஷம் செய்கிறார்கள். ‘காக்க காக்க’வில் சூர்யாவுக்கு கூட இவ்வளவு அப்ளாஸ் கிடைத்திருக்காது. ஆனால் என்ன பிரயோசனம். இதே கதையைதான் ஆயிரத்து சொச்சமுறையாக போலிஸ் ரைட்டர்கள் எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. வாசிக்கும் நமக்கே இவ்வளவு ‘போர்’ அடிக்கிறது என்றால், திரும்பத் திரும்ப இதே பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு போர் அடிக்கும்?

வழக்கம்போல நடுத்தர வர்க்கத்து மொக்கைகள் ‘சபாஷ் போலிஸ்’ என்று பூங்கொத்து கொடுக்கப் போகிறார்கள்.

சமூக விரோதிகளான நாமும்ம் வழக்கம்போல நாம் அடிக்கிற அதே ஹாரனை திரும்பவும் பாம் பாம்மென ஒலியெழுப்பி இன்னொரு முறை அடித்துத் தொலைப்போம்.

நெ. 1 : எட்டு ஆண்டுகளாக ஒரு தீண்டாமை வழக்கு புயல்வேகத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில்தான், ‘திடீரென்று’ அவ்வழக்கில் ஆஜர்படுத்த குற்றம் சாட்டப்பட்டவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றோம் என்று காவல்துறை கூறுவதை அரசு நம்பலாம். கோர்ட்டு நம்பலாம். மனித உரிமை அமைப்புகளும் நம்பலாம். காது இருப்பவர்கள் எல்லோருமே நம்பிவிட முடியாது இல்லையா?

நெ. 2 : என்கவுண்டர் என்று கேள்விப்பட்டதுமே மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு செய்தியாளர்கள் கேட்டதற்கு உடனடியாக தங்கள் பகுதியில் அப்படியேதும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பிற்பாடு மறுப்பு தெரிவித்த ராமநாதபுரம் ஐ.ஜி.யே ஸ்பாட்டுக்கு வந்ததோடு, என்ன நடந்தது என்கிற ‘கதை’யையும் சொல்லியிருக்கிறார். ஏனிந்த குழப்பம்?

நெ. 3 : காவல்துறையில் சேர்ந்து படிப்படியாக முன்னுக்கு வந்து டி.எஸ்.பி. ஆகியிருக்கும் வெள்ளைத்துரை அவர்களுடைய மக்கள் சேவையையும், கடின உழைப்பையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் என்கவுண்டர் நடக்கும் இடங்கள் பெரும்பாலும் இவர் போஸ்டிங்கில் இருக்கும் இடங்களாக அமையும் யதேச்சையின் மர்மம் என்ன?

நெ. 4 : திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடையும்போதே குற்றவாளிகள் நீதிபதியிடம் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். “எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. போலிஸார் என்கவுண்டரில் எங்களை போட்டுத் தள்ளிவிடுவார்கள்” என்று அம்மனுவில் அச்சப்பட்டிருக்கிறார்கள். தீண்டாமை வழக்கில் உங்களை முப்பதாம் தேதி ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப் போகிறார்கள். போலிஸாரை தாக்கிவிட்டு நீங்கள் தப்பிக்கப் போகிறீர்கள். வெடிகுண்டுகளால் வெள்ளைத்துரை தலைமையிலான அதிரடிப்படையினரை தாக்கப் போகிறீர்கள். அவர்கள் உங்களை போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்கால சம்பவத்தை எந்த ஜோசியரோ துல்லியமாக கணித்து என்கவுண்டரில் போடப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும்.

எவ்வளவு ஓட்டைகளை சுட்டிக் காட்டினாலும், செத்தவன் என்ன மகாத்மாவா என்று புறந்தள்ளிவிட்டு போலிஸுக்கு சல்யூட் அடிக்கத்தான் போகிறீர்கள். எப்படிப்பட்ட உத்தம ஆத்மாக்களையும் கொடூரமான குற்றவாளிகளாக காட்டி, போட்டுத்தள்ள முடியும் என்பதற்கு கடந்தகாலத்திலேயே ஏராளமான சம்பவ சாட்சிகள் உண்டு. என்றாவது ஒருநாள் நம்ம வீடும் பற்றிக்கொள்ளத்தான் போகிறது. அப்போது யார் வந்து அணைக்கப் போகிறார்களோ?

27 நவம்பர், 2012

லைஃப் ஆஃப் பை

ஈசாப் ஏன் விலங்குகளை வைத்து குட்டிக்கதைகள் எழுதினார்?

ஏனெனில் விலங்குகள் ‘அவதூறு கேஸ்’ போடாது. 66-ஏ பாயாது.

இதே டெக்னிக்கில்தான் யான் மார்டேலும் ‘லைஃப் ஆஃப் பை’ எழுதினார். பாராட்டுகள் குவியும்போது தாங்க முடியாவிட்டாலும் தலைதாழ்த்தி, சிரமேற்கொண்டு வாங்கிக் கொள்கிறோம். விமர்சனம் என்றதுமே காததூரம் ஓடுகிறோம். திரும்ப ஓடிவந்து விமர்சகர்களின் முகத்தில் நாலு குத்தும், குத்தினால்தான் தூக்கம் வருகிறது.

உள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்). இல்லாத ஒன்றை அடக்கி, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாழ்க்கை முழுக்க கொடூரமான போர் நடத்திக்கொண்டே இருந்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. உள்ளம் என்கிற உருவகத்துக்கு ஓர் உருவம் கொடுத்துப் பார்த்தால் என்ன? எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா? சாது மிரண்டால் காடு கொள்ளாது. பார்க்க சப்பையாக இருப்பவர்கள் கூட அவர்களை, அவர்களே சூப்பர்மேனாகதான் கருதிக் கொள்கிறார்கள். எனவே புலியாக பொதுமைப்படுத்தி உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் தத்துவக் கருமாந்திரங்களை எல்லாம் சிந்திக்க அவகாசமின்றி, கடாசிப் போட்டுவிட்டாலும் லைஃப் ஆஃப் பை மிகச்சிறந்த திரைப்படம்தான். ஒரு புலியும், மனிதனும் மட்டும் இருநூற்றி இருபத்தியேழு நாட்கள் நடுக்கடலில் சிறிய படகில் உயிரை கையில் பிடித்து வாழ்கிறார்கள். survival of the fittest தோற்கிறது. இந்த சுவாரஸ்யமான ஒன்லைன் போதாதா?

தைவானில் பிறந்து ஹாலிவுட்டில் படமெடுப்பவராக இருந்தாலும் இந்தியக் களத்தில் இந்தியர்களைவிட சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதில் ஆங் லீ தனித்துத் தெரிகிறார். நாற்பதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி இப்படித்தான் இருந்திருக்கும் என்று ரெஃபரென்ஸ் பார்த்து சித்தரித்து விடலாம். ஆனால் மனிதர்களை அசலாக தோற்றத்திலும், செயலிலும் காட்டுவது ராட்சஸ வேலை. யாரும் எளிதில் நினைத்துப் பார்த்துவிட முடியாத சாதனைகளை அனாயசமாக செய்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.

மனிதர்களை விடுங்கள். விலங்குகளுக்கு வருவோம். இயக்குனர் நினைத்தமாதிரியாக நடிக்கும் விலங்குகள் சாத்தியமா என்ன? ஒரு காட்சியில் கூட அனிமேஷன் உருவம் என்கிற எண்ணம் வந்துவிடாதபடி படம் முழுக்க புலி உறுமுவதிலும், பாய்வதிலும், கம்பீரநடை நடப்பதிலுமாக தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

‘எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிக்கிட்டிருக்கு’ எனும் அரதப்பழசான பஞ்ச் டயலாக்கை அடிக்காத ஆளே இல்லை. படமும் அதைதான் சொல்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புலி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது முழிக்கும்போது, ரிங்மாஸ்டராக மாறி அதை அடக்கிப்பழக வேண்டும். இல்லையேல் அப்புலி உங்களை கொன்றுவிடும். கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரி கொஞ்சம் பிசகினாலும் ‘பாபா’ மாதிரி பக்திப்படம் ஆகிவிடும் ஆபத்து இந்த கதைக்கு உண்டு. இந்த கதையும் கூட ஒரு ‘புலி’தான். ரிங்மாஸ்டரான இயக்குனர் அதை எப்படி தனக்கு வாகாக பழக்கியிருக்கிறார் என்பதை திரையில் பாருங்கள். நீங்களே அறியாத உங்கள் உள்ளத்தில் மறைந்துக் கிடக்கும் ரகசிய அறைகளின் ஆச்சரியக் கதவுகளை நிச்சயம் திறந்துவிடும். இப்படம் உங்களை விமர்சிக்கிறது. உங்களுக்கு கோபம் வந்துவிடக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் புலியை வைத்து கதை சொல்கிறது. யாருமே தவறவிடக்கூடாத படம் என்று மட்டும் பரிந்துரைக்கிறோம்.

இப்படம் மூலமாக ஆஸ்கர் ஜூரிகளிடம் அனாயசமாக தன்னுடைய விசிட்டிங் கார்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார் ஆங் லீ.

தொடர்பில்லாத பதிவு :  துரத்துதலும், ஓட்டமும்!

23 நவம்பர், 2012

வீரபாண்டியார்


கலைஞரின் 80வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் என்று நினைவு. சென்னை சின்னமலையில் நடந்தது. பேசியவர்கள் எல்லாருமே கலைஞரை வானளவு புகழ்ந்து அமர்ந்தார்கள். வீரபாண்டியார் எழுந்தார். “எங்களுக்கு நீங்கள் எல்லாமே செய்திருக்கிறீர்கள். ஆனால் பெரியார், அண்ணா சொன்னதைத் தவிர்த்து புதிய சிந்தனைகளை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்று சுயபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்க சிந்தனைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி, புதிய சிந்தனைகளை உருவாக்கும் பணியை நீங்கள்தான் செய்யவேண்டும். நீங்களும், பேராசிரியரும் அவற்றை உருவாக்கும் பணிகளை இனி மேற்கொள்ள வேண்டும்”

கலைஞரின் முகத்தில் மகிழ்ச்சியா, வருத்தமா என்று தெரிந்துக்கொள்ள முடியாத ரியாக்‌ஷன். மேடையில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். கட்சி, ஆட்சி போதும். தமிழ் சமூகத்துக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக கலைஞரை நோக்கி வீரபாண்டியார் தைரியமாக சொன்னார்.

இந்த தைரியம் கட்சியில் வீரபாண்டியாருக்கு அதிகம். தலைவரோடு அடிக்கடி முரண்படும் மூத்த கட்சிக்காரர். ஆனால் அதே நேரத்தில் தலைவரை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. கலைஞரின் முரட்டு பக்தன். எழுபதுகளின் இறுதியில் அதிமுக திமுகவை அதிகமாக குற்றம் சாட்டியது பூலாவரி சுகுமாரன் கொலை சம்பவத்தில்தான். அதில் நேரடியாக தொடர்புடையவர் என்று வீரபாண்டியாரால் தலைமைக்கு தர்மசங்கடம். சொத்துப் பிரச்னை. பங்காளிகளுக்குள் பகை. அது கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிட்டதே என்று வீரபாண்டியாருக்கு மனவருத்தம். பூலாவரியில் இன்றுவரை வீரபாண்டியாரின் பங்காளிகள்தான் அவரது கண்களில் விரல்விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த ஊரான பூலாவரி கிராமம் தொடங்கி, வீரபாண்டி ஒன்றியம், சேலம் மாவட்டம் வரை இவரும், இவருடைய உறவுக்காரர்களும்தான் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆள்வது வழக்கம். இம்மாதிரியான தனிப்பட்ட நிரந்தர நெருக்கடியையும் தாண்டிதான் கட்சியை சேலம் மாவட்டத்தில் அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் ‘சேலம்’ என்கிற பெயரையே அம்மாவட்ட திமுகவினர் மறந்துவிட்டார்கள். கலைஞரின் வருகையின் போது “வீரபாண்டியாரின் மாவட்டத்துக்கு வரும் தலைவரே வருக” என்று பேனர் வைத்து அமர்க்களம் செய்வார்கள். 

வீரபாண்டியாரின் அரசியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம். ஐந்து ஆண்டுகள் உச்சியில் இருப்பார். ஐந்து ஆண்டுகள் மிகமோசமான பள்ளத்தில் வீழ்ந்துக் கிடப்பார். சாகும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டுமென்பது அவருக்கு விதிக்கப்பட்ட விதி. எப்படிப்பட்ட நெருக்கடியிலும் கட்சியையும், தலைவரையும் விட்டுக் கொடுத்ததில்லை என்பது அவரது வாழ்நாள் சாதனை. எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் வீரபாண்டியாருக்கு ஒரு சோதனை என்றால் கலைஞர் நொறுங்கி விடுவார். வீரபாண்டியாரின் மகனுடைய அகால மரணத்தின் போதும் சரி. அநியாய வழக்குகளால் சிறைக்கொடுமையை வீரபாண்டியார் சந்திக்க நேரும் போதும் சரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவதிப்படும்போதும் சரி. கலைஞரின் கண்கள் உடனடியாக கலங்கி விடும். முரட்டுத் தொண்டன் மீதான தலைவரின் விவரிக்க முடியாத ஒரு வகை காதல் அது. அதனால்தான் என்னவோ கலைஞரின் மனச்சாட்சியான முரசொலி மாறன் மறைந்த அதே நவ.23லேயே அவருடைய பிரியத்துக்குரிய தம்பியான வீரபாண்டியாரும் மறைந்திருக்கிறார்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறையும் நேரம் இது.

21 நவம்பர், 2012

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

ஐ.நா. சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வில் மனிதநேயம் தொடர்பான பிரச்னைகளை கவனித்துக் கொள்ளும் குழு இது. இந்தக் கூட்டத்தில் ஒரு வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. “மரணத்தண்டனை விதிக்கப்படுவது உலகம் முழுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்”

நிறவெறி தேசங்கள் என்று கருதப்படும் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. தீர்மானத்தை முழுமூச்சாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மரணத் தண்டனையை எதிர்த்த காந்தியை தேசப்பிதாவாக கொண்டாடும் நாடுமான இந்தியாவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இன்னொரு ஜனநாயக நாடு அமெரிக்கா. அகிம்சையைப் போதித்த புத்தபகவானை வணங்கும் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளும் எதிர்த்திருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் எதிர்த்து வாக்களித்திருப்பதாக தெரிகிறது.

ஏன் எதிர்த்தோம் என்பதற்கு இந்தியா விளக்கமும் கொடுத்திருக்கிறது. “ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சட்ட நடைமுறைகளை வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இதில் குறுக்கிடுவது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்” என்று இந்தியா தனது எதிர்ப்புக்கான நியாயத்தை பேசியிருக்கிறது. அவ்வப்போது அண்டை நாடுகளிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசியாவின் தாதா ‘இறையாண்மை’ குறித்துப் போதிப்பது கருப்பு நகைச்சுவைதான்.

“மரணத்தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்கிற ஒருவரி தீர்மானம் தவிர்த்து பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இத்தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் போன்ற வலியுறுத்தல்கள் குறித்து இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை ‘மரணத் தண்டனை’ என்பது ஊடகங்களுக்கு தரும் ஃப்ளாஷ் நியூஸ். அரசோ, எதிர்க்கட்சிகளோ சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் மக்களை மடைதிருப்ப ‘மரணத்தண்டனை’ உதவிக் கொண்டிருக்கிறது. மாநில அளவில் கலைஞர் ஆட்சியாகட்டும், ஜெயலலிதா ஆட்சியாகட்டும். இவர்களுக்கு ‘என்கவுண்டர்’ எப்படி உதவுகிறதோ அதுபோல மத்திய ஆட்சியாளர்களுக்கு மரணத்தண்டனை. மனித உரிமை, கருத்தியல், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்ப்பை அரசோ, மரணத்தண்டனைக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடும் குடிமக்களோ முன்வைப்பதில்லை. ‘தீவிரவாதிகளை எப்படி கட்டுப்படுத்துவதாம்?’ என்று ‘வெயிட்’டான காரணத்தை முன்வைத்து, மூளையை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு தூக்குத்தண்டனைக்கு ‘ஜே’ போடுகிறார்கள். வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இராணுவத்துக்கும், மற்ற பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறதே.. அவற்றுக்கு முறையான கணக்கிருக்கிறதா.. அவர்கள் ஒழுங்காக வேலைபார்த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மாட்டார்களா.. தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முன்பாக நம் உளவு அமைப்புகள் தூங்கிக் கொண்டிருந்தனவா.. என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப நமக்கு துப்பில்லை.

எனவேதான் கிட்டத்தட்ட திருட்டுத்தனமாக திடீரென்று கசாப்பை தூக்கிலிட்டிருக்கிறார்கள். மரணத்தண்டனை என்பது நியாயமான நீதியென்று பெருமிதமாக மார்தட்டிக் கொள்பவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் அவசியமில்லை. கசாப்பை தூக்கிலிடும் தேதியை வெளிப்படையாக அறிவித்தால் தீவிரவாதிகள் ஜெயிலைத் தகர்த்து கசாப்பை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம் அரசு அஞ்சியதா என்ன.. அவ்வளவு பலவீனமாகவா இந்தியா இருக்கிறது? கசாப்பின் தூக்குத்தண்டனையை ரகசியமாக நிறைவேற்றியதற்கு ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை இந்தியா சொல்ல வேண்டும்.

விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக குஜராத் தேர்தலில் பாஜகவோடு பலப்பரிட்சை நடத்தியாக வேண்டும். இத்தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலின் ‘ட்ரைலர்’ என்று பாஜக பிரச்சாரம் செய்யும். அரசின் மீது தொடர்ச்சியாக ஊழல் கணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிர்க்கட்சியான பாஜக இனி ஊழலைப் பற்றிப் பேச அருகதையில்லை என்பதை அக்கட்சியின் தலைவர் கட்கரி நிரூபித்துவிட்டார். எனவே அடுத்து அவர்கள் எய்யப்போகும் அம்பு ‘கசாப்’தான் என்பதை பா.ஜ.க.வின் அரசியலை எடைபோடுபவர்கள் எளிமையாக யூகிக்க முடியும். அந்த வாய்ப்பை தர காங்கிரஸ் தயாராக இல்லை. ஒத்த வீட்டுக்கு துண்டு போட்டு போகும் பெரிய மனுஷன் கணக்காக அசிங்கமான முறையில் கசாப்பை தூக்கிலிட்டு விட்டது. மும்பையில் தெருவெங்கும் கொண்டாட்டமாம். கொஞ்ச நாட்களுக்கு தேசியவெறி தலைக்கேறி மக்கள் அரசு சார்பாக சிந்திக்கத் தொடங்குவார்கள். முன்பு இதேபோன்ற தேசியவெறியை கார்கில் போர் வாயிலாக கிளப்பி பாஜக ஆட்சிக்கு வந்தது நினைவிருக்கலாம். இவையெல்லாம் வெளிப்படையாக யூகிக்கக்கூடிய விஷயங்கள். காங்கிரஸுக்கு கசாப்பை தூக்கிலிட்டதன் மூலமாக கிடைக்கக்கூடிய மறைமுக பலன்கள் என்னவென்று தெரியவில்லை.

எனவேதான் பதறிப்போய் குஜராத் படுகொலை புகழ் நரேந்திரமோடி அவசர அவசரமாக ‘அப்சல் குருவுக்கு எப்போ?’ என்று கேட்கிறார். காங்கிரஸ் அதையும் உடனடியாக செய்ய தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் பேச்சின் வாயிலாக அவர்களது ‘மூட்’ புரிகிறது. “கசாப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது. கசாப்போடு நாம் நின்றுவிட முடியாது. அப்சல் குருவுக்கான தண்டனையையும் விரைவுப்படுத்த வேண்டும்” என்கிறார். பேசுவது காங்கிரஸ் பொதுச்செயலரா அல்லது பாஜகவின் தலைவர்களில் ஒருவரா என்பதே தெரியாத அளவுக்கு திக்விஜய்சிங்கின் பேச்சு அமைந்திருக்கிறது. சிறுபான்மையினர் விஷயத்தில் பாஜகவோடு ஒப்பிட்டு காங்கிரஸை தூக்கிப்பிடிக்க இனி நமக்கு காரணங்கள் எதுவுமில்லை. இது இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை என்று பிரச்சாரப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜகவும், காங்கிரஸும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வி, “நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளான்” என்று கருத்து சொல்லியிருப்பதின் மூலம் இதை புரிந்துக் கொள்ளலாம். ஒருவகையில் கசாப்பின் தூக்கு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நிம்மதியையும் தந்திருக்கலாம். தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாய் கசாப் அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தான்.

நாட்டின் பாதுகாப்பை விட, அரசியல் பிரதிபலன்கள்தான் இங்கே மரணத்தண்டனையை தீர்மானிக்கின்றன. மரணத்தண்டனையை விட ஆபத்தான அம்சம் இது. மனிதநேயத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்துக் கொண்டே இருப்பது நமது கடமை.

தொடர்புடைய முந்தையப் பதிவுகள் :