1 டிசம்பர், 2011

பிரபலமாவதற்கான விலை - Rock Star

ரஜினி முன்பெல்லாம் படம் முடிந்ததுமே இமயமலைக்கு சென்று விடுவார். இந்த வழக்கம் அவரது ரசிகர்களிடையே பிரபலம். ‘தலைவர் இமயமலைக்குப் போய் தியானமெல்லாம் பண்ணுவாரு’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். ஊடகங்களுக்கோ இது செமத்தியான சரக்கு. அவருடைய இமயமலை போட்டோவை பிரசுரிப்பதற்கு போட்டா போட்டி நடக்கும். உச்சபட்சமாக ஒருவர் ரஜினியின் இமயமலை பயணத்தை முழுக்க வீடியோ செய்து காசு பார்த்ததும் கூட நடந்தது. சூப்பர் ஸ்டாரின் இந்த வழக்கத்தைப் பெரும்பாலும் கேலி செய்பவர்களே அதிகம். பத்திரிகைகளில் ரஜினியை கிண்டலடிக்க இந்த ‘இமயமலை பயணம்’ ஒரு நல்ல சாக்காக கிடைத்தது. ஒருமுறை அவர் அமெரிக்காவுக்கு போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்ததை அரசியல் மேடைகள் வெகுவாக கிண்டலடித்தன.

ஒவ்வொரு படம் முடிந்தவுடன் ரஜினி எங்காவது கண்காணாத தூரத்துக்கு ஓடிவிடுவதன் பின்னால் அவருடைய ‘வலி’ இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்னால் ரஜினியால் சென்னை நகரமெங்கும் ஒரு பழைய லேம்ப்ரட்டா ஸ்கூட்டரில் சுற்றி வர முடிந்தது. நினைத்தவுடனேயே எங்காவது ஒரு மதுபானக் கடை வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மூக்குப் புடிக்க குடிக்க முடிந்தது. நினைத்தால் பெங்களூருக்கு பஸ் ஏறுவார். எந்தப் பெட்டிக்கடை வாசலிலும் நின்று, தன்னை மறந்து ‘தம்’ அடிப்பார். பிற்பாடு ‘ஃபியட்’ வாங்கியவுடன் கூட, ‘அம்மா நானா ஒயின்ஸுக்கு’ வந்து ‘சரக்கு’ வாங்கிச் செல்லுமளவுக்கு எளிமையாகதான் வாழ்ந்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படத்தை முன்பொரு முறை குமுதம் இதழில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு அலுப்பு தீர, ஒரு மரப்பெஞ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த படம் அது. ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்துக்காக, ரஜினி பலி கொடுத்த சுதந்திரங்கள் ஏராளம்.

இன்று ரஜினி விரும்புவது ஒன்றே ஒன்றுதான். சாமானிய ஒரு மனிதனை மாதிரி தான் சாலையில் நடந்துச் செல்ல வேண்டும். தனக்கு விருப்பமானவற்றை யார் கண்காணிப்புமோ, இடையூறோ இல்லாமல் சுதந்திரமாக செய்யவேண்டும். இந்த சுதந்திரம் அவருக்கு இமயத்தில் கிடைக்கிறது. இந்தியர்கள் குறைவாக வசிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களில் கிடைக்கிறது. எனவேதான் குடும்பத்தை, நாட்டை விட்டுப் பிரிந்துச் சென்று வாழ விரும்புகிறார்.


‘நீங்கள் விரும்பும் பிரபலம், கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்றுக்கு உங்களை அடிமையாக்குகிறது, ஆட்கொள்கிறது’ என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது ‘ராக் ஸ்டார்’ திரைப்படம்.

பிரபலமான ராக் ஸ்டார் ஆக விரும்பும் ஜனார்த்தனன் (எ) ஜோர்டானுக்கு கனவுகள் மட்டுமே முதலீடு. பெரிய முயற்சிகள் ஏதுமில்லாமல் சுற்றித் திரிகிறான். ‘வலி இல்லாமல் உன்னால் எவ்வாறு வெல்ல இயலும்?’ என்று கேட்கிறார் அவனுடைய கல்லூரி கேண்டீன் முதலாளி. வெல்வதற்காக வலியை தேடிச் செல்கிறான் ஜனார்த்தனன். கல்லூரியிலேயே அழகான பெண்ணைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்கிறான். அவள் நிராகரித்ததுமே தனக்குள் ‘வலி’ ஏற்பட்டுவிடும், வென்று விடலாம் என்பது அவனது யுக்தி.

ஆரம்பத்தில் நிராகரிக்கும் அழகி, பிற்பாடு அவனுடைய துறுதுறுப்பான குணங்களால் கவரப்பட்டு நட்பாகிறாள். அடுத்த மாதம் கல்யாணம் ஆகப்போகும் அவளுக்கு ஏராளமான ஆசைகள். ‘பிட்டு’ படம் பார்க்க வேண்டும். ‘சரக்கு’ அடிக்க வேண்டும் என்பது மாதிரி குட்டி, குட்டி ஆசைகள். ஜனார்த்தனன் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். துரதிருஷ்டவசமாக அவள் தன்னை காதலிக்கவில்லை என்கிற விஷயம் எவ்வகையிலும் அவனை பாதிக்கவோ, வலி ஏற்படுத்தவோ இல்லை.

அவளுடைய திருமணத்துக்காக காஷ்மீர் போகிறான். அங்கும் அவள் கேட்கும் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறான். திருமணம் முடிந்து ஊர் திரும்பும்போது பிரச்சினை. காஷ்மீர் போய்வந்த செலவுகளுக்காக வீட்டில் பணம் திருடியதாக, வீட்டை விட்டு துரத்தப்படுகிறான். சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் ஒரு தர்காவில் போய் பாடுகிறான். ஒரு மாத காலம் பசிக்கு பிரச்சினையில்லை. இம்மாதிரி பாடுவது அவனுக்கு உற்சாகத்தையும் தருகிறது.

அந்த தர்காவுக்கு வழக்கமாக வரும் பத்மபூஷன் விருது பெற்ற இசைக்கலைஞர் ஒருவர் இவனது பாட்டை கவனிக்கிறார். தனக்குத் தெரிந்த பெரிய இசை நிறுவனம் ஒன்றில் இவனை சிபாரிசு செய்கிறார். ஓரளவுக்கு அங்கே பிரபலமாகிறான். அப்போது அந்நிறுவனத்தில் இருந்து ஒரு இசைக்குழு ஐரோப்பாவில் நிகழ்ச்சி நடத்தச் செல்வதை அறிகிறான். அந்நிகழ்ச்சி நடக்கும் நாட்டில்தான் கல்யாணமாகி அந்த அழகி செட்டில் ஆகி இருக்கிறாள். திடீரென அவளது நினைவு தோன்றவே தானாகவே அந்த இசைக்குழுவில் சேர்ந்து ஐரோப்பா செல்கிறான்.

இதற்கிடைய திருமணமாகி சென்றவள், ஏதோ உளவியல் நோயால் பாதிக்கப்பட்டு தொடர்சிகிச்சை பெற்று வருகிறாள். அவளது உடல்நலம் குன்றிவரும் நிலையில் திடீரென ஜோர்டானை சந்திக்க, பழைய நினைவுகளால் கிளறப்படுகிறாள். இங்கும் அவளுக்கு நிறைய சின்னச் சின்ன ஆசைகள். விபச்சாரிகளை மாதிரி ரோட்டில் நின்று, கஸ்டமரை அழைக்க வேண்டுமென்பது கூட அவளது ஒரு சின்ன ஆசை. அனைத்தையும் வழக்கம்போல நிறைவேற்றி வைக்கிறான்.

இவர்கள் இருவருக்குமான உறவு என்பது நட்பு, காதலாக இல்லாமல் வேறு ஒரு மூன்றாவது கோணத்தில் இயக்குனரால் சித்தரிக்கப்படுகிறது. “நமக்குள் இருப்பது நட்போ, காதலோ இல்லை. இவற்றை விட உயர்வான ஏதோ ஒன்று” என்று ‘குணா’ பாணி வசனம் கூட உண்டு. ‘எனக்கு நீ வேண்டும்’ என்று ஒரு காட்சியில் கூறி முத்தமிடும்போது, திருமணமான அவளோ சமூகவேலிக்குள் இருந்து வெளிவரும் சிக்கலை உணர்ந்து இவனைப் பிரிகிறாள்.

முதன்முறையாக வலியை உணர்கிறான் ஜோர்டான். இந்த வலி, அவனது இசையை வலிமை மிகுந்ததாக மாற்றுகிறது. ஜோர்டான் நடத்தும் நிகழ்ச்சிகளெல்லாம் சூப்பர்ஹிட். எந்தப் பிரபலத்துக்காக டெல்லியில் தவம் கிடந்தானோ, அதைவிட கூடுதல் பிரபலம் அவனுக்கு கிடைக்கிறது. ஆனால் இப்போது ஜோர்டானுக்கு இது தேவையில்லை. தான் இழந்துவிட்ட ‘அவள்’ நினைவாகவே திரிகிறான். ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிறான். அவனது இந்தப் போக்கினையே தனது வணிகத்துக்கு வாகாக ப்ராண்டிங் செய்துக் கொள்கிறது இசை நிறுவனம்.

இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பாக அவளை பார்க்கச் சென்று, அவளது கணவனிடம் சிக்குகிறான். போலிஸில் பிடித்துத் தரப்படுகிறான். இந்த குற்றத்துக்காக நாட்டுக்கு திருப்பி அனுப்பி, சில நாட்கள் சிறையில் கழிக்கிறான். இதையும் வணிகமாக்கி ‘சுதந்திரத்துக்காக ஏங்கும் கலைஞன்’ என்கிறவகையில் மக்களிடம் பிரபலப்படுத்தப் படுகிறான் ஜோர்டான். இந்நிகழ்வுக்குப் பிறகு ஜோர்டான் நடத்தும் நிகழ்ச்சிகளெல்லாம் ‘சுதந்திரம்’ பிரதானப்படுத்தப்படுகிறது. ஒரு போராளிக்குரிய படிமம் இயல்பாகவே ஜோர்டானுக்கு மக்களிடம் கிடைத்துவிடுகிறது.

இப்போது ஜோர்டான் எக்கச்சக்க பிரபலம். அவன் செல்லுமிடமெல்லாம் மைக்கை நீட்டிக் கொண்டு ஊடகங்கள் பின் தொடர்கிறார்கள். மக்கள் கூட்டம், கூட்டமாக அவனைப் பார்க்க வருகிறார்கள். இந்த பிரபலத்துக்கு விலையாக தன்னுடைய சுதந்திரத்தை இழந்துவிட்ட அவன், மனநிலைப் பிறழ்ந்தவனாய் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிறான்.

எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு நாள் எங்கோ ஓடிவிடுகிறான். நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தம் போட்டவர்களும், நிறுவனமும் வலை வீசி தேடுகிறது. அவனோ ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில், அவனை யாரென்றே அறியாத விலைமாதர்கள் மத்தியில் மகிழ்ச்சியாக பாடிக் கொண்டிருக்கிறான். அவனுடைய மேனேஜர் அவனைத் தேடிவந்து கண்டித்து அழைத்துச் செல்கிறார். மனதுக்குப் பிடித்தமான வேலையை செய்யமுடியாத இந்த பிரபலத்தை இக்கட்டத்தில் அறவே வெறுக்க ஆரம்பிக்கிறான் ஜோர்டான்.

அவனுக்குப் பிடித்த அவள் இல்லாத உலகத்தில் வாழ்வதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்துக் கொண்டிருப்பவனுக்கு இந்த பிரபலம் பெரிய இடையூறு. அவனுடைய குழந்தைத் தன்மையை முற்றிலும் சிதைக்கச் செய்துவிட்டது பிரபலம்.

இதற்கிடையே இவனைப் பிரிந்த அவளுக்கு ஏதோ தீர்க்க முடியாத ஒரு விசித்திர வியாதியும் வந்துவிட்டது. இவனைத் தேடி டெல்லிக்கு வருகிறாள். பிரிவுத் துயரால் பரஸ்பரம் பாதிக்கப்பட்ட இருவருக்கும் இந்த நாட்கள் இளைப்பாறக் கிடைத்த சொர்க்கம். ஒருக்கட்டத்தில் உணர்வு மிகுதியில் உடலாலும் இணைகிறார்கள்.

நோய் முற்றி அவள் மரணமடையும் இறுதிக்காட்சி மிக உருக்கமானது. அவள் தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் ஒடிந்து மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறான். இவன் அங்கு வந்திருந்ததை அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களும், ஊடகங்களும் வாயிலில் குவிந்து விடுகிறார்கள். என்ன கருமத்தாலோ போராளி படிமம் பெற்றுவிட்ட இவன், அவர்களுக்கு முன்பாக அழக்கூட முடியாமல் இறுகிய முகத்தோடு நடக்கிறான். மனதுக்கு உகந்தவள் மறைந்ததற்காக மனதுவிட்டு அழக்கூட முடியாத துர்ப்பாக்கிய நிலையே தனது பிரபலத்துக்கு அவன் கொடுக்கும் விலை. வழக்கம்போல இக்காட்சியிலும் கேள்வி கேட்டு நச்சரிக்கும் மீடியாகாரனை அடிக்கிறான். தடுக்க வந்த போலிஸ்காரனை தூக்கிப் போட்டு மிதிக்கிறான். சிறைப்படுகிறான். இதனாலே மேலும் மேலும் பிரபலமாகிறான் இந்த ‘போராளி’.

இந்தியாவின் மாபெரும் இசைக்கலைஞனாக, ராக்ஸ்டாராக உருவெடுத்துவிட்ட ஜோர்டானுக்கு இப்போது அவன் ஆரம்பத்தில் விரும்பிய பிரபலத்துக்கு அளவேயில்லை. ஏனெனில் அளவிட முடியாத, ஆற்றமுடியாத ‘வலி’ அவனுக்குள் நிரந்தரமாய் இருந்துக்கொண்டே இருக்கிறது.

அபாரமான கதை, திரைக்கதை கொண்ட இத்திரைப்படத்தின் சர்ப்ரைஸ் போனஸ் ஏ.ஆர்.ரகுமானின் இசை. இசைக்கலைஞனின் வாழ்க்கை என்பதால் உருகிப்போய் செதுக்கி, செதுக்கி இசைத்திருக்கிறார் ரகுமான். பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள். சங்கராபரணத்தின் சமகால நவீன வடிவம் மாதிரி எதிர்காலத்திலும் மறக்கப்படாத திரைக்காவியமாக நிச்சயமாக நினைவு கூறப்படும் இந்த ‘ராக் ஸ்டார்’

18 கருத்துகள்:

 1. நிச்சயமாய் பார்க்க வேண்டும். வெளியே சிரிக்கும் பிரபலங்களின் உள்மனம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
 2. நல்ல எழுதி இருக்கிங்க நண்பரே, அவசியம் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. யுவா ,சான்சே இல்லை ! சூபர்ப் விமர்சனம் ! இந்த படத்த நான் பார்த்ததிலிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை !! முக்கியமாக இயக்குனர் இம்தியாஸ் , ரஹ்மான் ,கேமரா ,எடிட்டிங் எல்லோரும் இந்த வாழ்க்கை பயணத்திற்கு உள்ளேயே அழைத்து கொண்டு சென்று விட்டார்கள் !! ரன்பீர் அந்த கதாபாத்திரமாகவே மாறி விட்டார் !!!கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு ,வலியும் வேதனையும் சேர 'நாதா பரிந்தே கர் ஆஜா...' என்று பாடுவது இப்பவும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது !!மற்றுமொரு பெரிய பலம் இந்த படத்தில் பெரும்பான்மை பாடல்களை பாடிய மோஹீத் சவுஹன் !!அவர் குரலில் பாடல்களில் எல்லா ரசங்களும் உள்ளன !தும் ஹோ என்னுமோர் காதல் பாடலை எத்தனை முறை வேண்டுமானால் கேட்டு கொண்டே இருக்கலாம் !!படம் ரிலிஸ் ஆன வெள்ளிகிழமை பார்த்தது ...ஆனால் இன்னமும் அந்த தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது ! ரன்பீர் என் மனம் விருப்ப நாயகன் ஆகிவிட்டார் ! -Bloorockz

  பதிலளிநீக்கு
 4. Good . Interesting to read . Only the rajinikanth part i didnt like .

  பதிலளிநீக்கு
 5. Ungalukku intha padam pidithathu enakku aacharyamaaga irukkirathu.. Nice Review..!

  பதிலளிநீக்கு
 6. மிக அழகான மற்றும் ஆழமான விமர்சனம்.முன்னரே பாடல்களை கேட்ட பரவசத்தில் திரைப்படத்தினை மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கையில் உங்கள் விமர்சனம் அருமை.மலேசியாவில் இன்னும்(ஜொஹொர் பாரு) வெளிவரவில்லை.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. Intresting Narration . . .

  Mainly . . . . you Mingle Rajini in this review is . . .

  no chance . . . .

  Thanks

  பதிலளிநீக்கு
 8. what skill does the the protagaonist have as per the story? -
  singing ?
  lyrics?
  music?
  guitar?
  all the above?

  பதிலளிநீக்கு
 9. அற்புதமான பதிவு யுவா !!!
  உங்களின் புரிதல் மிக அருமை !!!

  பதிலளிநீக்கு
 10. இந்த படத்துக்கு அப்டியே நேர்மாறான wrestler படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது..

  பதிலளிநீக்கு
 11. No mentioning about the actor who was the main reason for the feel you got ... Not Good Yuva

  பதிலளிநீக்கு
 12. சூப்பரா எழுதி இருக்கீங்க! என்ன வசனம்கிறதெக் கூட எழுதி இருக்கிறதெப் பார்த்தா, நல்லா ஹிந்தி தெரியும் போல இருக்கே!

  நாயகனா நடிச்சிருக்கிறவர், ஆரம்பத்துல, பட்டிக்காட்டான் மிட்டாயியெப் பார்க்குற எக்ஸ்ப்ரஸ்ஸன்ல நாயகியெ ஜொள்ளுவார்ல அது எனக்கு ரெம்பப் புடிச்சிருந்திச்சு.

  முன்னுரை ரஜினி மேட்டரும் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 13. நீங்கள் சொல்வதை படம் பார்த்தபோது உண்ரமுடிந்தது

  பதிலளிநீக்கு