3 டிசம்பர், 2011

THE DIRTY PICTURE

வாய் வழியாக வழியும் ஜொள்ளை துடைத்துக் கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு பரந்த மார்பையும், சிவந்த இடுப்பையும் ரசிக்கலாம் என்று நாய் மாதிரி அரங்குக்கு வந்த ஆண் ரசிகர்களை செருப்பால் அடித்திருக்கிறாள் சிலுக்கு.

சமீப காலங்களில் இந்திய சினிமா அடைந்திருக்கும் உயரத்துக்கு சரியான சான்று ‘தி டர்ட்டி பிக்சர்’. வாழ்க்கை சரிதை ஒன்றினை ஆவணப்படுத்துகிறோம், நேர்க்கோட்டில் வாழ்க்கையை சொல்கிறோம் என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல் நேர்மையாக ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனர் மிலனுக்கு கிரேட் சல்யூட். படத்தில் சிலுக்கு சொல்லுவது மாதிரி, ‘சினிமா என்றால் எண்டெர்டெயிண்ட்மெண்ட்.. எண்டெர்டெயிண்மெண்ட்.. எண்டெர்டெயிண்மெண்ட்’. இந்த மந்திரச்சொல்லை மறந்துவிடாமல் படமாக்கியிருக்கிறார்கள்.

சிலுக்கின் வாழ்க்கை எழுத்துகளில் ஏராளமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஏ.வி.எம். ஸ்டுடியோ ஏழாவது தளம், மிஸ் மாயா ஆகிய நாவல்களில் நீங்கள் அச்சு அசலான டர்ட்டி பிக்சரை வாசிக்கலாம். உண்மையில் சிலுக்கின் வாழ்க்கை என்பது அவரது வாழ்க்கை மட்டுமல்ல. சினிமா நடிகைகளின் வாழ்க்கை. ஏறத்தாழ ஒரே மாதிரி வாழ்க்கையும், முடிவும் பெரும்பாலான நடிகைகளுக்கு அமைவதுதான் அவலம். ஓரிரு விதிவிலக்குகள் பிறக்கும்போதே வரம் வாங்கி பிறந்தவர்களாக இருக்கக் கூடும்.

சினிமா மோகத்தால் ஊரில் இருந்து ஓடி வருவது. பட்டணத்தில் கெட்டு சீரழிவது. வாய்ப்புகளுக்காக இரவில் பாலியல் ரீதியான உடலுழைப்பு. பகலில் லைட்டுகளின் வெளிச்சத்தில், வெப்பத்தில் உடல் முழுக்க மேக்கப் பூசி உழைப்பது. யாரையாவது காதலித்து ஏமாறுவது. குடி, போதை பழக்கம். உடல் வனப்பு குலைந்தபிறகு தனிமை. சொந்தமாக படமெடுப்பது. நஷ்டம், கடன். கடைசியாக தற்கொலை. இது சிலுக்கின் கதை மட்டுமா?

கதாபாத்திரத்துக்கு பெயர் சிலுக்கு. அவரது வாழ்வின் சில சம்பவங்கள் காட்சியாக்கப் பட்டிருக்கின்றன. மற்றபடி புதியதாக கதை, திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இது நடிகைகளின் கதை.

டர்ட்டி பிக்சர் திரைப்படம் நேரிடையான வசனங்களும், காட்சிகளும் நிரம்பியது. தணிக்கைக்குப் பயந்து எதையும் குறிப்பால் உணர்த்தும் பயந்தாங்கொள்ளித்தனம் இயக்குனருக்கு இல்லை. பாலியல் தொடர்பான வசனங்களை இரட்டை அர்த்தத்தில்தான் கொடுத்தாக வேண்டும் என்கிற சினிமாப் பண்பை உடைத்தெறிந்தவகையில இது ஒரு பச்சையான, அதே சமயம் அவசியமான முன்னெடுப்பாக இருக்கிறது.

சிலுக்குடன் உச்சநடிகர் தனிமையில் இருக்கிறார். அவர் மீது படர்ந்து, சிலுக்கு அவரை இன்பப்படுத்தத் தொடங்குகிறார். கதவு தட்டப்படுகிறது. வெளியே நடிகரின் மனைவி. அவசர அவசரமாக சிலுக்கு, உடைகளை அள்ளிக் கொண்டு பக்கத்து அறைக்கு ஓடுகிறார். இப்போது உள்ளே வந்துவிட்ட மனைவியை நடிகர் கொஞ்சுகிறார். மனைவியை இன்பப்படுத்த அவர் மேல் இவர் படர்கிறார். வித்தியாசத்தைக் கவனியுங்கள். மனைவியையும், வப்பாட்டியையும் ஒரு ஆண் மனம் எவ்வாறு கையாளுகிறது என்பதை இதைவிட சிறப்பாக காட்சியாக்க முடியாது. ‘வேசி எனக்கு இன்பத்தைக் கொடுக்கப் படைக்கப்பட்டவள். மனைவிக்கு நான் இன்பத்தைத் தர கடமைப் பட்டவன்’ என்கிற ஆணின அதிகார வர்க்க பொறுக்கித்தனம்தான் இது.

சிலுக்குகளின் சீரழிந்த கதைகளுக்கு பிண்ணனிக்கு ஆணிவேர் ஆண் சமூகத்தின் பாலியல் வக்கிரம்தான். இது ஏதோ பாவப்பட்ட சினிமா நடிகைகளின் வாழ்க்கைக் கதை, எனவே, நடிகைகளை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் அத்துறையின் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சினிமாக்காரர்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்லி யாரும் தப்பித்துவிட முடியாது. ‘நேத்து ராத்திரி யம்மா’வுக்கும், ‘பொன்மேனி உருகுதே’வுக்கும் விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே.

இறுதிக் காட்சிக்கு முன்பாக உச்சநடிகன் சொல்லும் வசனம் முக்கியமானது. “போய்ச் சேரட்டும். அவளுக்கு இனிமே இங்கே என்ன மிஞ்சி இருக்கு?”

ஆண் இனத்தின் நிரந்தர பாலியல் வறட்சிக்கு சோலைவனமாய் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு ‘சிலுக்கு’ உருவாகிறாள். கடைசியில் அவளைக் கொண்டாடிய அதே ஆண் சமூகத்தால் கொலையும் செய்யப்படுகிறாள். உலகின் கடைசி ஆண், தன் ஆண்குறியை அறுத்துப் போடும் வரை இந்த கொலைப்பழி, ஆணாக பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் பொருந்தும்.

27 கருத்துகள்:

 1. வக்கிரத்தை வெளிப்படையாக காட்டிவிடுவதால் ஒரு சினிமா உச்சத்தில் இருக்கிறது என்று விடலாமா என்பது எனக்கும் புரியாத புதிரே. விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது... :)

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு யுவா !!!
  வாழ்த்துக்கள்...இன்னும் படம் பார்க்கவில்லை..உடனே பார்க்கணும் !!!

  பதிலளிநீக்கு
 3. // ‘வேசி எனக்கு இன்பத்தைக் கொடுக்கப் படைக்கப்பட்டவள். மனைவிக்கு நான் இன்பத்தைத் தர கடமைப் பட்டவன்’ என்கிற ஆணின அதிகார வர்க்க பொறுக்கித்தனம்தான் இது.//

  நச்,,,

  பதிலளிநீக்கு
 4. "இவதாண்டா போராளி . . .
  சசிகுமார் படம்லாம் கோமாளி . . . "

  சம்பந்தம் இல்லன்னாலும்
  பதிவை படிக்கும்போது தோணிச்சி . . .

  நன்றி

  பதிலளிநீக்கு
 5. // உலகின் கடைசி ஆண், தன் ஆண்குறியை அறுத்துப் போடும் வரை இந்த கொலைப்பழி, ஆணாக பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் பொருந்தும்.// சிறப்பான பதிவு..முடிவு..

  பதிலளிநீக்கு
 6. கார்த்திக், மதுரவாயல்8:17 பிற்பகல், டிசம்பர் 03, 2011

  // உலகின் கடைசி ஆண், தன் ஆண்குறியை அறுத்துப் போடும் வரை இந்த கொலைப்பழி, ஆணாக பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் பொருந்தும்.//

  // ‘நேத்து ராத்திரி யம்மா’வுக்கும், ‘பொன்மேனி உருகுதே’வுக்கும் விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே. //

  தேவையற்ற வன்மம்! படத்திலிருந்து தாங்கள் பெறும் take away, inference தவறானது. படத்தில் சில்க் தனது உடலை பயன்படுத்துவதில் unapologetic ஆக இருக்கிறாள். தீதும் நன்றும் பிறர் தர வாரா. பெண்ணின் உடலை பார்த்து இன்பம் கொள்வது ஆணின் அடிப்படை குணம். இதில் ஹிப்பாக்ரஸியும் வன்மமும் இல்லாமல் இருந்தாலே போதுமானது. அடுத்த முறை அநாகரிகம் போன்ற காவியங்களை காணச் செல்லும்போது குற்ற உணர்ச்சியின்றி செல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
 7. //வேசி எனக்கு இன்பத்தைக் கொடுக்கப் படைக்கப்பட்டவள். மனைவிக்கு நான் இன்பத்தைத் தர கடமைப் பட்டவன்’ என்கிற ஆணின அதிகார வர்க்க பொறுக்கித்தனம்தான் இது.//
  பணத்தை வாங்கிவிட்டு உடல் சுகத்தை விற்க வந்தவள் தானே வேசி. அவள் இன்பத்தைக் கொடுக்கத்தானே படைக்கப்பட்டவள். உங்கள் கருத்தை ஏற்க முடியவில்லை. அதிலும் ஒரு மனைவிக்கு கணவன் தானே இன்பத்தைத் தர கடமைப் பட்ட்வன். பின் அது எப்படி ஆணின் அதிகார வர்க்கத்தைக் காட்டுவதாக அமையும்? அப்படி நினைக்காமல் மனைவியை தனக்கு சுகம் கொடுக்க வந்த போகப் பொருளாக நினைப்பவர்கள் தான் ஆண் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் மொத்த ஆண் வர்க்கத்தையுமே இப்படி இழிவாகப் பேசக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

  பதிலளிநீக்கு
 8. Good Review Yuva...long time back Naren wrote about SilkSmitha in his Blog. Your views are also reflects the same.

  Mikka Nandri
  Mayiladuthurai Sivaa

  பதிலளிநீக்கு
 9. /* நேத்து ராத்திரி யம்மா’வுக்கும், ‘பொன்மேனி உருகுதே’வுக்கும் விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே. */
  ஒரு வாரம் முன்பு ஒரு ஆங்கில செய்தி சானலில் சிலுக்கின் சரிதையை புட்டு புட்டு வைத்தனர். நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.

  பதிலளிநீக்கு
 10. முதலில் ராக்ஸ்டார் இப்போ டர்டி பிக்சர்... உங்க திராவிட கலாச்சாரப்படி திரையில் டைட்டில் கார்டு ஓடும்போது அதிலுள்ள இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்க வேண்டும் என்ற அரிப்பை தாண்டி உம்மால் எப்படி படம் பார்த்து விமர்சனம் எழுத முடிகிறது?

  பதிலளிநீக்கு
 11. ஆண்குறியை அறுத்தெடுத்துதான் கொலைப்பழியை தீர்க்கவேண்டும் என்று ஒரு முட்டாள் தான் சொல்வான்! பெண்களை பெண்களாக மட்டும் பாருங்கள்! அதே போல் பெண்கள் பெண்களாக மட்டுமே இருங்கள்! இதுவே பிரச்சனைகளை தீர்த்து விடும்!

  பதிலளிநீக்கு
 12. /* ஆணின அதிகார வர்க்க பொறுக்கித்தனம்தான் இது. */ நீங்களும் ஒரு ஆணாக இருந்தாலும், உண்மையை உரக்க சொல்லியதற்கு பாராட்டுக்கள் யுவா :-)...

  பதிலளிநீக்கு
 13. ....தன் ஆண்குறியை அறுத்துப் போடும் வரை இந்த கொலைப்பழி, ஆணாக பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் பொருந்தும்....

  - தோழர்!! சிவந்த தோலுக்கு சொக்கி திரியும் மன்மத ’குஞ்சு’களுக்கு உரைக்கும்படியாக சொல்லியுள்ளீர்கள்... செவியுள்ளவர்கள் கேட்கக்கடவது..

  பதிலளிநீக்கு
 14. யுவாவிற்குள் இருக்கும் இன்னொரு பர்சனாலிட்டி இந்த விமர்சனம் எழுதியதா?

  பதிலளிநீக்கு
 15. விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே.....அப்படீன்னா பிட்டு படத்தை எல்லாம் பாராட்டி எழுதுவியே நீ தானே பெரிய கொலைகாரன்.அதில் சுரண்டப்படும் பெண்கள் மட்டும் பாவம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 16. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க.

  பெண்ணிய நோக்கில் மட்டும் பார்த்தால் நடிகைகளின் பிரச்சினைகளைப் புரியவும் முடியாது, தீர்க்கவும் முடியாது. கலைஞர்களுக்கு என்று ஒரு உளவியல் இருக்கிறது. அதன் மூலமாகப் பார்த்தால்தான் புரியும். இதிலும் ஆண் கலைஞர்களின் உளவியல் புரிந்த அளவு, பெண் கலைஞர்களின் உளவியல் புரிந்து கொள்ளப்படவில்லை. எனவே கத்திரிக்கோலை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு, புத்தகத்தைத் தூக்குங்கள்.

  பதிலளிநீக்கு
 17. பார்பனர்களின் எச்சில் உணவில் உருளும் மக்கள்

  அசைபட இணைப்பு
  http://in.video.yahoo.com/news-26036098/national-26073656/shaming-country-in-name-of-casteist-ritual-27445180.html

  பதிலளிநீக்கு
 18. ////யுவாவிற்குள் இருக்கும் இன்னொரு பர்சனாலிட்டி இந்த விமர்சனம் எழுதியதா? /////

  I also think so :))

  பதிலளிநீக்கு
 19. படம் பார்த்து விட்டுதான் வந்தேன்.. நீங்கள் சொல்வது போல் அவ்வளவு மோசமாக இல்லை. தன் உடல் அழகால் எதையும் வசியப்படுத்தி வசப்படுத்த முடியும் என முயன்று தோற்ற ஒரு நடிகையின் கதை.. படத்தில் கதாநாயகியின் மேக் அப் கவனித்தீர்களா..! அந்த 'உடல் அழகு' நடிப்புக்கு சம்பந்தம் இல்லாதது..! திறமை இருந்திருந்தால் இன்றும் சரோஜா தேவி போல் மிளிர்ந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 20. நடிகைகள் சிலபல விலைகள் கொடுத்துதான் நினைப்பதை சாதிக்கவேண்டியுள்ளது. ஊசி இடங்கொடுத்தாலொழிய நூல் நுழைய முடியாதென்று தெரிந்த நீங்கள் அதை மறந்து உணர்ச்சிவசப்பட்டு 'ஆணின, பெண்ணின' என சில வாக்கியங்கள் எழுதியிருக்க வேண்டாம். நீங்கள் குடித்துவிட்டு படம் பார்த்திருக்கலாம், அல்லது குடித்துவிட்டு இதை எழுதியிருக்கலாம் என யூகிக்கிறேன்.உங்களைப்போன்றவர்களிடம் தான் வெளிப்படையாக இவ்வாறு சொல்லத்தோன்றுகிறது. நன்றி.
  - புதுவையிலிருந்து.

  பதிலளிநீக்கு
 21. //வேசி எனக்கு இன்பத்தைக் கொடுக்கப் படைக்கப்பட்டவள். மனைவிக்கு நான் இன்பத்தைத் தர கடமைப் பட்டவன்’ என்கிற ஆணின அதிகார வர்க்க பொறுக்கித்தனம்தான் இது.// நல்ல சாட்டையடியாக உள்ளது!

  பதிலளிநீக்கு
 22. "சினிமா மோகத்தால் ஊரில் இருந்து ஓடி வருவது. பட்டணத்தில் கெட்டு சீரழிவது. வாய்ப்புகளுக்காக இரவில் பாலியல் ரீதியான உடலுழைப்பு. பகலில் லைட்டுகளின் வெளிச்சத்தில், வெப்பத்தில் உடல் முழுக்க மேக்கப் பூசி உழைப்பது. யாரையாவது காதலித்து ஏமாறுவது. குடி, போதை பழக்கம். உடல் வனப்பு குலைந்தபிறகு தனிமை. சொந்தமாக படமெடுப்பது. நஷ்டம், கடன். கடைசியாக தற்கொலை. இது சிலுக்கின் கதை மட்டுமா?"

  உங்கள் எழுத்தின் எதார்த்தத்தின் உச்சம் யுவா. நன்றிகள்

  விசித்திரன்..

  பதிலளிநீக்கு