13 டிசம்பர், 2011

முயலுக்கு மூணு கால்!

ஷோபாசக்தி ‘கப்டன்’ என்றொரு கதையை தெரியாத்தனமாக எழுதித் தொலைத்து விட்டார். பிற்பாடு இணையத்தில் ‘கொலவெறிடி’ பாட்டு ரேஞ்சுக்கு அது ஹிட்டாகுமென்று எழுதும்போது நினைத்திருக்க மாட்டார். குறிப்பாக மச்சி சார், சிரம் உயர்த்தி ஷோபாவை கும்பிட்டபிறகு எக்கச்சக்க ஹிட்டுதான். இன்னும் யூட்யூப் கோல்டு விருது கிடைக்காததுதான் பாக்கி.

இங்கேதான் ஷோபாவுக்கு பிடித்தது ஏழரை நாட்டு சனி. குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவரான மச்சி சாரே, ஷோபாவின் கையைப் பிடித்து முத்தமிட்டு விட்டதால் கொதித்து விட்டனர் சக புலிகள். சஜீவனின் ‘ஷோபாசக்தி அடித்த ஆட்லரி’யில் ஆரம்பிக்கிறது போர். இது தொடர்பாக ஃபேஸ்புக்கில், சஜீவனின் பக்கத்தில் நடந்த வாத, பிரதிவாதங்களை மச்சி சார் என்சைக்ளோபீடியாவாக தொகுத்து, அவரது தளத்தில் இரண்டு மூன்று பதிவுகளாக இட்டிருக்கிறார். இலக்கியத் தாகம் மிகுந்தவர்கள் சோடாவாக அந்தப் பதிவுகளை குடித்து மகிழ்ந்துக் கொள்ளலாம்.

இருதரப்பு வாதங்களை வைத்துப் பார்க்கும்போது ‘கப்டன்’ கதையில் ஒரு தகவல் பிழை இருப்பதாகவே எம்.டி.எம். உள்ளிட்டவர்கள் கருதுகிறார்கள். காலமயக்கத்தில் ஷோபாவும் பிழை விட்டிருக்கலாம் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனாலும் அப்பிழை எவ்விதத்திலும் ‘கப்டன்’ ஒரு மாபெரும் கலைப்படைப்பாக உருவாகியிருப்பதை தடுத்துவிட்டதாக நினைக்கவில்லை. எதிர்காலத்தில் தமிழின் சிறந்த கதைகள் பட்டியலிடப்படும்போது, ஷோபாவின் ‘கப்டன்’ நிச்சயமாக இடம்பெறும் என்றே நம்புகிறேன். அவருடைய தீவிரவாசகன் என்கிற முறையில் எனக்கு இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணமே.

அதேநேரம் இந்த விவகாரத்தில் மச்சிசாரின் விடாப்பிடி இலக்கிய மல்லுக்கட்டுதான் என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறது. ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் எழுதும் கதைகளிலோ, கட்டுரைகளிலோ சாதாரணமான ஒற்றுப்பிழை வந்தால் கூட ருத்ரதாண்டவம் ஆடிவிடும் சிவபெருமானாகதான் மச்சிசாரை இதுவரை பார்த்திருக்கிறோம். எஸ்.ராவின் சமீபத்தில் இலக்கியச் சொற்பொழிவு ஒன்றினில், அந்நியன் நாவலைப் பற்றிப் பேசும்போது துப்பாக்கியால் சுட்டது என்பதற்குப் பதில் கத்தியால் குத்தியது என்று பேச்சுக் களைப்பில் தெரியாத்தனமாக பேசிவிட்டார். சாதாரணமாகவே தப்பாங்கூத்து ஆடும் மச்சி சாருக்கு அன்று அடித்தது லக்கி ப்ரைஸ். சலங்கை கட்டிய கண்ணகியாய் ஊழித்தாண்டவம் ஆடித் தீர்த்துவிட்டார்.

இலக்கியம் என்றால் தர்க்கம், மொழி, பயன்பாடு, லொட்டு, லொசுக்கு என்று எல்லாவற்றிலும் எழுத்தாளன் சுத்தபத்தமாக ஆச்சாரமாக இருக்க வேண்டும் என்கிற அவரது எதிர்ப்பார்ப்பினை பெரிதும் மதிக்கிறேன். அதே நேரம் தனக்கு ஒரு படைப்பு பிடித்துவிட்டது என்பதற்காக, அப்படைப்பில் தர்க்கரீதியான பிழைகளை சுட்டிக் காட்டுபவர்களை எப்பாடு பட்டேனும் மறுத்தாக வேண்டும், தன் கட்சிக்கு ஈர்த்தாக வேண்டும் என்று ஏன்தான் மச்சிசார் இவ்வளவு மெனக்கெடுகிறாரோ தெரியவில்லை. தனது மெனக்கெடலுக்கு அவர் செலுத்தும் உழைப்புதான் நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. தமிழ்மகனின் ‘ஆண்பால், பெண்பால்’ நாவலில் மச்சிசாரின் பிடிவாதத்தை ஒத்த பிரியா என்றொரு கதாபாத்திரத்தை இப்போது வாசித்துக் கொண்டிருப்பது தற்செயலானதுதான். எந்த விக்கிப்பீடியாவை வைத்து ஒரு காலத்தில் ஜெயமோகனின் டவுசரை இவர் அவிழ்த்தாரோ, இப்போது அதே விக்கிப்பீடியாவை ஆதாரமாகக் காட்டி, தன் தரப்பை நிறுவுமளவுக்கு இறங்கி அடித்துக் கொண்டிருக்கிறார்.

இணையத்திலும், நூல்களிலும் பலமுறை ஈழத்துத் தோழர்கள் ‘ஆட்லரி’ எனும் பிரயோகத்தை பயன்படுத்தும்போது, அது என்னவென்று கேட்டுத் தெரிந்துக் கொண்டதில்லை. ஷோபாவின் கதையை வாசிக்கும்போதும் கூட ‘ஆட்லரி’ என்பது என்னவென்று தெளிவாக தெரியவே தெரியாது. ஏதோ ஒரு ஆயுதம், மெஷின் கன்னாக கூட இருக்கலாம் என்கிற மேலோட்டமான மேனாமினுக்கித்தனமான வாசிப்புதான் என்னுடையது. எனவே அது பிழையென்று சுட்டிக்காட்டப்பட்ட பிறகும், அக்கதையின் மீதான என்னுடைய பிரேமை எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் இலக்கியம் என்பதை கற்புக்கு நிகராக மதிக்கும் மச்சிசார், நியாயமாக ஷோபாவிடம் இதுகுறித்த விளக்கங்களை வினவியிருக்க வேண்டும். அதற்கு நேர்மாறான நிலையை எடுத்திருப்பது, தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்கிற மனோபாவத்தில் அவர் இயங்குவதையே காட்டுகிறது.

நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று பராசக்தியில் ஒரு வசனம் வரும். இலக்கியமும் நீதிமன்றம் மாதிரிதான். விசித்திரமான விவாதங்கள் நடைபெறும். மாமல்லன் சார் இந்த மன்றத்தில் நல்ல வக்கீல். ‘தெய்வத் திருமகள் பாஷ்யம்’ மாதிரி தான் எடுத்துக்கொண்ட வழக்குக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கிச் சென்று குத்து குத்துவென குத்தித்தள்ள முடியுமோ, அந்த அளவுக்கு குத்துவார்.

எதிர்கால சந்ததிகள் இந்த இலக்கியக் கல்வெட்டுகளையெல்லாம் வாசித்து இன்புறுவார்கள் என்பதால், நம் பெயரையும் அவர்கள் வாசித்து கிளுகிளுப்படையும் பொருட்டு, நமது பங்காக இங்கே இந்த சின்னக் கல்வெட்டை மச்சிசாரின் உபயத்தில் பொறித்து வைக்கிறோம்.

6 கருத்துகள்:

 1. ப்டன் கதை வாசிப்பவரை அப்படியே ஈழம், பிரான்ஸ் எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றது என்றால் அது மிகை அல்ல

  அப்பிழை எவ்விதத்திலும் ‘கப்டன்’ ஒரு மாபெரும் கலைப்படைப்பாக உருவாகியிருப்பதை தடுத்துவிட்டதாக நினைக்கவில்லை.

  மிகவும் சரி.

  காலம் இதழ் மீதும் பலருக்கு விரோதமோ?

  பதிலளிநீக்கு
 2. லக்கி, மாமல்லனை எதற்கு மச்சி சார் என்கிறார்கள்? தயவு செய்து விளக்குங்களேன். அவரே சூட்டிக்கொண்டது என்றால் சுட்டி தாருங்களேன்.

  சரவணன்

  பதிலளிநீக்கு
 3. அவரோட அந்த நீ...ண்ட கட்டுரைய படிச்சா தல கிறுகிறுக்குது பா. மனுஷன் ஜெமோவை மிஞ்சிவிடுவார் போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. கப்டனில் ஷோபாசக்தி எழுதிய ஆட்லறி தகவல் பிழை மட்டுமே! கதையின் தரத்தை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை!
  அவ்வளவு பெரிய சிறுகதையில் ஒரு ஆட்லறி இவ்வளவு பிரச்சினையைக் கொண்டுவந்திருப்பது....முதன்முறை வாசிக்கும்போது கதையின் சுவாரஸ்யத்தில் ஆட்லறியைக் கவனிக்கவில்லை!

  பதிலளிநீக்கு
 5. எனக்கும் மேல் மாடி காலியாக இருக்கப் போய்த்தான் கப்டன் கதை பிடித்து விட்டது போலும். சோபாவின் இந்தக் கதையில் பொன்ராசாவின் சித்திரம் கால ஓட்டத்தில் வாழ்க்கையின் மாறுபாடுகளை மெல்லிய எள்ளலுடன் வாசகனும் நேரடியாக அனுகமுடிகிறது. கதையைப் படித்து முடித்தவுடன் எனக்கான முதல் சித்திரமும் அதுவே. அதை மாமல்லன் எம் டி எம்முக்கான "படிப்பாளிகளும் படிப்பும்" எதிர்வினையில் மிக நன்றாக எடுத்து வைத்து இருக்கிறார். ஒரு கதையை அணுகும்போது மற்றவர்கள் நிலைப்பாடுகளை மண்டையில் ஏற்றி வைத்துக்கொண்டு என் வாசிப்பை நான் அணுகுவதில்லை. அதற்காகவே அந்தக் கதைகள் வைக்கும் எதிர் பிரதிகளை காலம் தாழ்த்தி வாசித்து வந்திருக்கிறேன்.அதுவும் கூட என் வாசிப்பு ஆபத்தில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கான சரிபார்த்துக் கொள்ளலே!

  கப்டன் கதையில் இரண்டு வதை முகாம்களுக்குமான சமநிலை சற்றே குறைந்திருப்பதும், அது சோபா சக்தி எழுதி இருப்பதுவும் அதன் தொடக்கப் புள்ளியாக ஆட்டிலறி இருப்பதுவும், அதை ஈழத்து சூழ்நிலையில் வாசிப்பவர்கள் எதிர் கொள்ளும் முறையும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அதற்கு மாமல்லன் விக்கியை துணைக்கு அழைத்ததை சற்று நெருடலாகவே பார்க்கிறேன்[ கிண்டலான தொனியிலேயே எழுதி இருந்தாலும் கூட]. விக்கியை யாரும் எப்பொழுதும் எடிட் செய்ய முடியும் என்றாலும் அது மிகப்பெரிய உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதை அவரே பலமுறை சுட்டிக்காட்டியும் இருக்கிறார். ஒரு தகவல் பிழையின் மூலம்[கதையின் மைய நோக்கத்தை குலைக்காத] இலக்கியப் பிரதி வெற்று அரசியல் பிரதியாகத் தேங்கி விடுமா என்பது எனக்கு குழப்பத்தையே தருகிறது. எஸ் ராவின் பைசைக்கிள் தீவ்ஸ்ன் தகவல் பிழை மூலப் பிரதியை பாதித்ததால் மாமல்லன் எழுதிய எதிர்வினையும் மனதில் கொண்டே இந்தக் குழப்பத்தை முன்வைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. //எதிர்கால சந்ததிகள் இந்த இலக்கியக் கல்வெட்டுகளையெல்லாம் வாசித்து இன்புறுவார்கள் என்பதால், நம் பெயரையும் அவர்கள் வாசித்து கிளுகிளுப்படையும் பொருட்டு, நமது பங்காக இங்கே இந்த சின்னக் கல்வெட்டை மச்சிசாரின் உபயத்தில் பொறித்து வைக்கிறோம். //

  நீர் ரொம்ப நல்லவர்... யாருமே கேட்காமல்....உமது நோக்கத்தை பதிவிட்டுள்ளீர்கள்! உங்கள் நேர்மை எனக்கு எப்போதும் பிடிக்கும்!

  பதிலளிநீக்கு