23 டிசம்பர், 2011

ஏதாவது தலைப்பு போட்டு படித்துக் கொள்ளுங்கள்!

‘புதுவருஷத்தில் இருந்து தம் அடிக்கக் கூடாது, தண்ணி அடிக்கக் கூடாது’ என்கிற வழக்கமான லவுகீக சடங்குகள் ஒருபுறமிருக்க, பார்ப்பவனிடமெல்லாம் “உங்க ஆபிஸ் டயரி நல்லா பெருசா, வாட்டமா(?) இருக்குமாமே? ஒண்ணு கிடைக்குமா?” என்று பரக்காவெட்டி போல கேட்டுவைப்பதும், “ஜி.ஆர்.டி-லே ரெண்டு சீட்டு போட்டிருக்கீங்களே? அப்போன்னா ரெண்டு காலண்டர் கொடுத்திருப்பானே? ஒண்ணு உங்களுக்கு. இன்னொன்னு யாருக்கு?” என்று அல்பத்தனமாய் அலம்பல் பண்ணுவதுமாக, தன்னுடைய வாழ்க்கை முழுக்கவே கவுண்டமணியாக மட்டுமே வாழ்ந்து கழிப்பது என்பதனை ஒரு சபதமாகவே மேற்கொண்டு வாழ்ந்து வரும் தமிழன்....

யப்பா... எவ்ளோ நீட்டு வாக்கியம்...

ஆகையால் மக்களே, வருட கடைசியில் உங்களுக்கு ஆயிரம் சம்பிரதாயமும், சடங்குகளும் இருக்கலாம். பத்திரிகைகளுக்கும் இதுமாதிரி பாரம்பரிய சடங்குகள் உண்டு. ’கடந்தவை’, ‘நினைவில் நின்றவை’, ‘சென்ற வருடம்’ என்றெல்லாம் ஏராளமான தலைப்பில், எல்லா பத்திரிகையும் ஒரே மேட்டரையே நன்கு நைசாக மாவரைப்பது வழக்கம். படிப்பவர்களுக்கு இது அரைத்தமாவாக தெரிந்தாலும், இதையெல்லாம் தொகுப்பது என்பது தாலியறுக்கும் வேலை. இதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகைக்காரன் ரெண்டு, மூன்று நாள் கண்விழித்து நைட்டு வேலை பார்க்க நேரிடும். அதற்குப் பிறகு கண்ணு பூத்துப்போய் ரோட்டில் போகும்போது கூட அவனை கடக்கும் ஃபிகரை கூட கடந்த வருட ஃபிகராகதான் பார்ப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தினத்தந்தி மாதிரியான பத்திரிகைகள் இந்த கந்தாயத்துக்கெல்லாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்கிற மனோபாவம் கொண்டவை. உதாரணத்துக்கு அவர்களது 1950ஆம் ஆண்டு ஜனவரி 1 பேப்பரை எடுத்துப் பாருங்களேன். முகப்புப் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் இருக்கும். அதில் 1949 என்கிற கிழவன் ஃபிரேமை விட்டு வெளியே போவான். 1950 என்கிற குழந்தை ஃபிரேமுக்குள் வரும். இப்போது 2012க்கு வருவோம். அதே கார்ட்டூன்தான் இப்போதும் முகப்பை அலங்கரிக்கப் போகிறது. என்ன கிழவனுக்கு 2011 என்கிற எண்ணும், குழந்தைக்கு 2012 என்கிற எண்ணும் மட்டும் பலமாக சிந்திக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். தீபாவளி கார்ட்டூன், பொங்கல் கார்ட்டூன் என்றெல்லாம் எல்லா ஸ்பெஷலுமே இதே பாணியில்தான் தினத்தந்தியில் அமையும். என்ன 1958ல் சரோஜாதேவி புதுவருட வாழ்த்து சொல்லியிருப்பார். இப்போது ஹன்சிகா சொல்லுவார். இந்த வித்தியாசம் போதாதா?

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியும் வேலைதான். இருந்தாலும் சொல்கிறேன். பத்திரிகைப் பணி என்பது பெரும்பாலும் இதுமாதிரி ‘ஜல்லி’ அடிக்கும் பணியாகவே செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை எப்போதோ ஓரிரண்டு சுவாரஸ்யமான வேலைகள் வரக்கூடும். அதுவரைக்கும் இதுமாதிரி வழக்கமான மாவரைக்கும் மாவை எப்பாடுபட்டேனும் அரைத்தே ஆகவேண்டும். ஸ்பெஷல் என்றால் விருந்தினர் பக்கம் எல்லாம் வந்தாக வேண்டும் யார்தான் கண்டுபிடித்ததோ தெரியவில்லை. சாதாரணமாக ஈ ஓட்டிக் கொண்டும், ‘உங்க பத்திரிகையிலே என்னோட ஒரு பேட்டி போடுங்களேன்’ என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்த விருந்தினர்கள், எப்படித்தான் இந்த ஸ்பெஷல் போடும் காலத்தில் மட்டும் பிஸியாகித் தொலைக்கிறார்களோ? செய்வது புண்ணாக்குத் தொழில் என்றாலும், காட்டும் பந்தா மட்டும் இவர்களுக்கு குறைச்சல் இல்லை.

டயர்ட்னஸ்ஸில் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறேன். ஸ்பெஷலுக்காக ரொம்ப காத்திரமாக(?) ஏதோ எழுதிக் கொண்டிக்கும் போது, ஒரு ரிலாக்சேஷனுக்காக, எந்த ஃபோகஸும் இல்லாமல், எந்த ரெஸ்ட்ரிக்‌ஷனும் இல்லாமல், எந்த சப்ஜெக்ட்டும் இல்லாமல் எதையாவது ஒரு ஐநூறு வார்த்தையை பைத்தியக்காரத்தனமான மனநிலையில் எழுதித் தொலைக்க முடியுமா என்று பார்ப்பதற்கே இதை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்த சலிப்பான வருடக் கடைசி, புதுவருட சம்பிரதாயங்களை சிலர் மட்டும் எப்படி சுவாரஸ்யமாக அணுகுகிறார்கள் என்று தெரியவில்லை.

இன்றைய தினகரன் வெள்ளிமலர் ஒரு பொக்கிஷம். சினிமா ரசிகர்கள் போற்றிப் பாதுக்காக்க வேண்டிய மலர். கடந்த ஆண்டு மலையாளம், இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் சினிமாவின் நிகழ்வுகளை, முக்கியமானது எதுவும் விடுபட்டு விடாமல் தலா ரெண்டு பக்க கேப்ஸ்யூல்களாக கொடுத்திருக்கிறார்கள். நான் வெள்ளிமலரின் ரெகுலர் ரசிகன். வெள்ளிக்கிழமை காலை எண்ணெய், சீயக்காய் வைத்து தலைக்கு குளிக்கிறேனோ இல்லையோ (இது பெண்கள் வழக்கம்தானே? நான் எந்த கிழமையில் சீயக்காய் தேய்க்கிறேன் என்று மறந்துவிட்டது) வுட்டாலங்கடி, ஹாலிவுட் ட்ரைலர் ஆகியவற்றை வாசிக்கத் தவறுவதில்லை. இப்போது ரவிதேஜா, சுதீப், கரன் ஜோஹர், டாம் க்ரூஸ் மாதிரி பெயர்களை எங்காவது வாசிக்க நேர்ந்தால் ஜெயம் ரவி, சித்தார்த், ஹரி, சிங்கமுத்து மாதிரி பெயர்களை வாசிப்பதைப் போன்ற ஈஸியான அட்டாச்மெண்ட் வர இந்த வுட்டாலங்கடி, ஹாலிவுட் ட்ரைலர்கள் ஒரு முக்கியக் காரணம். இந்த மாதிரி வாரா வாரம் ஒரு படத்துக்கு ப்ரிவ்யூ கொடுப்பவர்கள், இந்த வாரம் கடந்த வருட முக்கிய சினிமா நிகழ்வுகளை அலசியிருக்கிறார்கள். இந்தியில் வசூல் சாதனை புரிந்த படங்கள், தெலுங்கில் டப்பாவுக்குள் முடங்கியவை, கன்னடத்தில் சாதனை, மலையாளத்தில் வேதனை என்று கலக்கல் காக்டெயில். தமிழ் சினிமா பற்றிய அலசல்கள் அடுத்த வாரமென்று நினைக்கிறேன். நிஜமாகவே இந்த கட்டுரைகளை எழுதுவது சவால்தான். அனேகமாக ஐநூறு வார்த்தைகளுக்குள் ஒரு வருட சரித்திரத்தை எழுதியாக வேண்டும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதையெல்லாம் ஐநூறுக்குள் அடக்குவது, அதையும் வறட்சியான கட்டுரைநடையில்லாமல் புனைவு மாதிரி சுவாரஸ்யப்படுத்துவது என்று தினகரன் அசத்தியிருக்கிறது. ஒரே ஒரு குறை. சிங்கம் நிஜமாகவே ஹிட்டுதான். ஒத்துக் கொள்கிறோம். அதை கலாநிதி மாறன் வழங்கும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்தது. அதையும் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டதையெல்லாம் சொல்லும்போது கூட ‘கலாநிதிமாறன் வழங்கும், சன் பிக்சர்ஸ் தயாரித்த’ என்கிற ஸ்லோகனை எல்லா இடத்திலும் மனப்பாடமாக ஒப்பித்தாக வேண்டுமா? கொஞ்சம் விட்டால் இனிமேல் காட்டுக்குள் இருக்கும் சிங்கத்தைப் பற்றி எழுதும்போது கூட ’கலாநிதிமாறன், சன்பிக்சர்ஸ்’ வார்த்தைகளை சேர்த்து எழுதுவார்கள் போலிருக்கிறதே?

எதையோ எழுதவந்து, எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது. டாட்டா. பை.. பை.. ஹேப்பி கிறிஸ்துமஸ்!

10 கருத்துகள்:

 1. எதையோ எழுதவந்து, எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன்

  - பாஸ், இதுதான் பின்நவீனத்துவம் :)

  பதிலளிநீக்கு
 2. //ஹேப்பி கிறிஸ்துமஸ்! //

  நீர்தான் நிஜ பகுத்தறிவாளவர் தமிலுநாட்டின் அக்மார்க் பகுத்தறிவாளர்.

  ஆனால் பகுத்தறிவுன்னா என்ன எழவு அர்த்தமோ எனக்கு இன்னும் விளங்கவில்லை. கடவுளை நம்பாத ஒரு (கிறுத்தவ குடும்பத்தில் பிறந்த)ஜெர்மன் பெண்ணிடமிருந்து வந்த வாழ்த்து... 'ஹேப்பி ஹாலிடேஸ்'. இந்த அம்மணி நம்ம பகுத்தறிவாளர் லிஸ்டில் வரமாட்டார் என நினைக்கிறேன். அதுதான் அவருக்கும் நல்லது. எனிவே ஹேப்பி ஹாலிடேஸ்'!

  பதிலளிநீக்கு
 3. so you have changed your photograph!!! finally!!! thanks to CP senthil kumar.
  AANAALUM ITHTHANAI NAAL OLD PHOTO PHOTTU YELLARAIYUM NALLA YEMATHITHI IRUKEENGA?

  பதிலளிநீக்கு
 4. Hey, this post is great! Especailly the Goundamani matter...I could not control my laugh for 10 minutes..

  பதிலளிநீக்கு
 5. அருமை! நல்வாழ்த்துக்கள்!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  சிந்திக்க :
  "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

  பதிலளிநீக்கு
 6. //கண்ணு பூத்துப்போய் ரோட்டில் போகும்போது கூட அவனை கடக்கும் ஃபிகரை கூட கடந்த வருட ஃபிகராகதான் பார்ப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.//
  :)
  உங்கள் எழுத்தைப் படிக்கும்போது அவ்வப்போது ஒரு புன்முறுவல் வருவதை தவிர்க்க முடிவதில்லை.
  // நான் எந்த கிழமையில் சீயக்காய் தேய்க்கிறேன் என்று மறந்துவிட்டது //
  ஆனால் வாரத்தில் எதாவது ஒரு நாள் சீயக்காய் தேய்த்துக் குளிக்கிறீர்கள் தானே...... :)
  // எதையோ எழுதவந்து, எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது. டாட்டா. பை.. பை.. ஹேப்பி கிறிஸ்துமஸ்! //
  எழுதுங்க எழுதுங்க.. இன்னும் நிறைய எழுதுங்க. ஹேப்பி கிறிஸ்துமஸ்....

  பதிலளிநீக்கு
 7. நெறையா பேருக்கு ''நாளை மற்றும் ஒரு நாளைதான்'' தலைவா.

  பதிலளிநீக்கு