20 டிசம்பர், 2011

மெளன குரு

குதிரைப் பந்தயத்தில் எப்போதாவது ஒருமுறை கருப்புக் குதிரை அதிசயமாக வெல்வதுண்டு. ‘மெளன குரு’ ஒரு கருப்புக் குதிரை. திறமையாக இக்குதிரையை ஓட்டிய புதுமுக இயக்குனர் சாந்தகுமார், தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார். துரதிருஷ்டவசமாக இதுமாதிரி நட்சத்திரங்கள் மீண்டும் மின்னுவதேயில்லை. ‘குள்ளநரிக் கூட்டம்’ என்கிற யதார்த்தமான ‘நல்ல’ திரைப்படத்தை எடுத்த இயக்குனரின் பெயர் அதற்குள்ளாக மறந்தே போய்விட்டது. ‘ஈரம்’ என்கிற அட்டகாச த்ரில்லரை எடுத்த இயக்குனர் அடுத்த படம் இயக்குகிறாரா என்றே தெரியவில்லை. இல்லையேல் இதுபோல முதல் படத்தை சிறந்த படமாக எடுத்த இயக்குனர்கள், அடுத்த படத்துக்காக இளைய தளபதி, புரட்சித் தளபதி, சின்னத் தளபதி மாதிரி மொன்னைகளுக்காக மொக்கைப்படம் எடுத்து நூறோடு நூற்றி ஒன்றாக சேர்ந்துக் கொள்கிறார்கள். தமிழ் சினிமாவின் சாபக்கேடு இது.

அதிகாரங்களுக்கு சாமானியங்கள் பகடைக்காய் என்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளிலேயே திரைப்படங்களாக்கப்பட்ட ஒருவரி. இதற்கு இந்தியன், ரமணா மாதிரி ஃபேண்டஸிகள்தான் நம் இயக்குனர்கள் முன்வைக்கும் தீர்வு. நான்கு காவல்துறை அதிகாரிகளின் வெறியாட்டத்துக்கு வாழ்க்கையை பலி கொடுக்கும் மெளன குரு, கதையின் போக்கிலேயே மிகைப்படுத்தப்படாத அவனுக்கான பிரத்யேக வழிமுறையில் தீர்வு காண்கிறான். சாமானியன் வெகுண்டெழுந்தால் புரட்சியெல்லாம் வந்து விடாது. அவனால் அதிகபட்சமாக என்ன முடியுமோ, அதைதான் செய்வான் என்று தர்க்கம் மீறாமல் படத்தை முடிக்கிறார் இயக்குனர். கொடுமை, பாருங்கள். இயல்பாக சொல்லப்பட்ட ஒரு கதையையே ‘வித்தியாசம்’ என்று நினைக்குமளவுக்கு நமது மனப்போக்கு மாசுபடிந்து போயிருக்கிறது.

நடிக்கவே தெரியாத ஒரு ஹீரோ. அவரது அப்பாதான் தயாரிப்பாளர். தனக்கு முதல் படம் இயக்க இதுதான் அனேகமாக கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடும். இந்த உண்மையை புரிந்துகொண்டு திரைக்கதையை பின்னியிருக்கிறார் சாந்தகுமார். தமிழினத் தலைவரின் பேரன் என்பதால் ‘ஹீரோயிஸம்’ அவசியம். அதே நேரம் இளைய, புரட்சி தளபதிகள் ரேஞ்சுக்கு காதுக்குத்து காட்சிகளை அமைத்தால் மக்கள் வாய்விட்டு சிரிக்கலாம். அல்லது திரையை கிழிக்கவோ, எரிக்கவோ செய்யலாம். ரஜினி, கமலுக்கு சிலிர்த்ததைப் போல இப்போதெல்லாம் யாரும் சிலிர்த்துக் கொள்வதில்லை. புத்திசாலித்தனமாக, அதே நேரம் ஆணித்தரமான ஹீரோயிஸத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். போலிஸின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயந்து, மறியலில் இருக்கும் மொத்தக் கூட்டமும் சிதறியோட, ஒரே ஒருவன் மட்டும் வெறித்த பார்வையோடு சாலையில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கிறான். இதைவிட பெரிய ஹீரோயிஸம் என்ன வேண்டிக் கிடக்கிறது?

நம் படங்களுக்கு ஹீரோயினும், பாடல்களும் தேவையா என்பது பெரிய கேள்வி. கதையோடு எந்த சம்பந்தமுமில்லாமல் சதைக்காக ஹீரோயின். பல லட்சங்கள் ஹீரோயினுக்கு கொட்டியழுது விட்டோமே என்கிற பரிதவிப்பில் மூன்று டூயட், ஒரு குத்துப் பாட்டு. அதில் இரண்டு பாடல்கள் சுவிஸ்ஸிலோ, ஆஸ்திரேலியாவிலோ படமாக்கம் என்று அனாவசியமான பொருட்செலவு. இந்தப் படத்தில் ஹீரோயின், ஹீரோயினாகவே இருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். அதுபோலவே வில்லனும், வில்லனாக இருக்கிறார். ஜான் சுந்தர் ஒரு குட்டி எம்.ஆர்.ராதா. துரதிருஷ்டவசமாக இவர் இன்னமும் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்படாத நல்ல நடிகர். தேவையில்லாத சதை எதுவுமே திரையில் இல்லை. லென்ஸ் வைத்துத் தேடினாலும் தர்க்க மீறல் எதுவும் கண்ணில் படவேயில்லை. குறிப்பாக இடைவேளை காட்சி, ஓர் இலக்கியம்.

துரதிருஷ்டவசமாக இந்த அற்புதமான திரைப்படத்துக்கு போதுமான அரங்குகள் கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. அடுத்த வெள்ளிக்கு திரையில் இருக்குமாவென்பதே சந்தேகம். சென்னை நகரிலேயே கூட மாலைக்காட்சி பார்க்க வேண்டுமானால், மூன்றே மூன்று வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது. திரை ரசிகர்கள் அனைவரும் அவசியம் அரங்கில் கண்டுகளித்து, ஆதரிக்க வேண்டிய படமிது. மசாலா என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பதமாக உருவாக்கப்பட்ட உருப்படியான, சுவையான த்ரில்லர் மசாலா.

வறட்சியான களங்களும், கதைகளும், ஆமைவேக திரைக்கதையோடு சொல்லப்பட்டால் மட்டுமே நல்லப் படமென்று ஒருபுறம் அறிவுஜீவிகளின் அராஜகம். ஹீரோயிஸமும், நம்பமுடியாத அபத்தமான ஃபேண்டஸி காட்சிகளுமாக மசாலாதோசை இயக்குனர்களின் அஜால்குஜால் மறுபுறம். இவற்றுக்கிடையில் மலர்ந்திருக்கும் குறிஞ்சி மலர் இந்த மெளன குரு.

15 கருத்துகள்:

 1. பட விமர்சனத்தைக் காட்டிலும் தங்களின் எழுத்துகளுக்காகவே படிக்கலாம்.. பகிர்வுக்கு நன்றி யுவகிருஷ்ணா அவர்களே..!!!

  பதிலளிநீக்கு
 2. யதார்த்தமான தங்களின் எழுத்துநடையை ரசிக்கும் ரசிகர்களில் ஒருவன்.

  பதிலளிநீக்கு
 3. எப்படியோ அடித்து பிடித்து இந்த ஐந்து வருடங்களில் ஒரு ஐந்து படங்கள் ஹிட் கொடுத்து அட்லீஸ்ட்
  சிம்பு இடத்தையாவது பிடித்து விட்டால் அடுத்த தேர்தலில் பிரச்சாரத்துக்கு கைகொடுக்கும். இவராவது இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டார். இவர் அண்ணன் உதயநிதி என்ன செய்கிறார். அவருடைய படம் எப்பொழுது வரும்?

  பதிலளிநீக்கு
 4. படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

  பதிலளிநீக்கு
 5. நானும் வந்திருந்தேன் ஈரோடுக்கு உங்களையும் பார்த்தேன். உங்களுக்கு நான் யார் என்று தெரியாததால் தான் வந்து அறிமுகம் செய்து கொள்ளவில்லை. மற்றபடி உங்கள் எழுத்துக்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். மற்றவர்கள் பார்வை வேறு. எப்படி எழுதணும் என நீங்கள் கேஆர்பி அண்ணன் அவர்களிடம் சொல்லும் போது உங்களி்ன் பின்புறம் நான் அமர்ந்து இருந்தேன். இதனை நீங்கள் எங்களைப் போன்ற புதியவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் எங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமல்லவா. நான் எழுதுவது எப்படி எனவே தெரியாமல் சில நாட்கள் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எழுதத் துவங்கினேன். அது தான் வளர்ச்சி. இதற்கு அடுத்தகட்டமாக உங்களைப் போன்ற சீனியர்கள் உங்களின் அறிவுரை உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. ஆரூர் மூனா அண்ணே! எதையும் சொல்லிக் கொடுக்கற லெவலுக்கு எனக்கு வயசாயிடில்லைண்ணா... வேணும்னா நமக்கு தெரிஞ்ச விஷயங்களை ஒருத்தருக்கு ஒருத்தரு பகிர்ந்துக்கலாம் :-)

  பதிலளிநீக்கு
 7. லக்கி! ஈரம் பட இயக்குநர்தான் இப்படத்தின் இயக்குநரும். நேத்து பிரமோ பாக்கலையா !

  பதிலளிநீக்கு
 8. எதையும் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு உங்களுக்கு மூளை இல்லை என்று நேரடியாக கூறலாமே ? ஏன் இப்படி சொல்ல வேண்டும் ?

  பதிலளிநீக்கு
 9. //லக்கி! ஈரம் பட இயக்குநர்தான் இப்படத்தின் இயக்குநரும். நேத்து பிரமோ பாக்கலையா !//

  இல்லையே? ஈரம் படத்தின் இயக்குனர் பெயர் அறிவழகன் தானே?

  இவர் சாந்தகுமார். தரணிசாரின் அசோசியேட் என்றார்கள்.

  பதிலளிநீக்கு
 10. ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் என்னுடைய கல்லூரி தோழர். அவர் அடுத்த படம் எதுவும் தற்போது இயக்கவில்லை. ஓரிரு வருடங்கள் கழித்து எடுக்கலாம் என்று இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 11. பாலை படத்துக்கும் தியேட்டர் கிடைக்கவில்லை.

  சரவணன்

  பதிலளிநீக்கு
 12. பாலைக்கு கிடைச்ச தியேட்டரே அதிகம்.

  லக்கி.. படம் நல்ல டாக் வந்து ஓரளவுக்கு பிக்கப் ஆகிக் கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. கிருஷ் உங்கள் விமர்சனத்துக்கு பின் படம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று புரிகிறது
  வாத்தியார்
  www.malartharu.com

  பதிலளிநீக்கு
 14. may be this year good script , good movie very neat film, john vijay and reyanskhan wife (lady police) every police character acted well. 2011 dec month good movie bad movie rajapattai

  பதிலளிநீக்கு