13 டிசம்பர், 2011

கலைஞரின் நினைவலைகள்!

2004ஆம் ஆண்டு கலைஞர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். “மூச்சை இழுத்துப் பிடியுங்கள்”“ என்று மருத்துவர் கேட்க, கலைஞர் மூச்சை இழுத்துப் பிடிக்கிறார். “இப்போ மூச்சை விடுங்க” என்கிறார் மருத்துவர்.

“மூச்சை விடக் கூடாது என்பதற்காகதான் மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்”“ என்று ஒரு போடு போட்டாராம் கலைஞர்.

* - * - * - * - * - * - * - *

அறிஞர் அண்ணா நினைவு ஹாக்கிப் போட்டி பரிசளிப்பு விழாவுக்கு கலைஞர் வந்திருந்தார். இரு அணிகளும் சமமான ‘கோல்’ போட்டிருந்ததால், ’டாஸ்’ முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. ‘தலை’ கேட்ட அணி தோற்று, ‘பூ’ கேட்ட அணி வென்றது.

கலைஞர் மேடையில் பேசும்போது குறிப்பிடுகிறார். “இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. ‘தலை’ கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனெனில் தலை கேட்பது வன்முறை அல்லவா?”

* - * - * - * - * - * - * - *

முப்பெரும் விழா கவியரங்கம் ஒன்றின்போது நடந்தது. கலைஞர் அப்போது முதல்வர். ஈழத்துயர் பற்றி கவிதை வாசித்த புலவர் புலமைப்பித்தன் துயர்தாங்காமல் “கலைஞரே எனக்கொரு துப்பாக்கி தாருங்கள்!”“ என்று முடிக்கிறார்.

காவல்துறையும் அப்போது கலைஞரின் பொறுப்பில்தான் இருக்கிறது. எனவே கலைஞர் தனது பதிலுரையில் இவ்வாறு சொல்கிறார். “புலவேரே! வேறு ஏதாவது ‘பாக்கி’ இருந்தால் கேளுங்கள். துப்’பாக்கி’ மட்டும் என்னால் தரமுடியாது”

* - * - * - * - * - * - * - *

இப்போது போலவே, அப்போதும் ஒருமுறை திமுக தொண்டர்கள் சோர்வடைந்துப் போய் இருந்தார்கள். எதிர்க்கட்சிகள் திமுக தொண்டர்களை ‘கும்பகர்ணர்கள்’ என்று கேலி செய்கிறார்கள். இச்சூழலில் கலைஞர் கவிதை ஒன்றில் எழுதுகிறார்.

“என் தம்பிகள்
தூங்கினால்
கும்பகர்ணன்
எழுந்தால்
இந்திரஜித்”

* - * - * - * - * - * - * - *

ஜெயலலிதா : நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்.

கலைஞர் : அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய நன்மை. அதைத்தான் அவர் இப்படி கூறுகிறார்.

* - * - * - * - * - * - * - *

இவ்வளவு சுவாரஸ்யமான மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால், எதிர்காலத்தில் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். எவ்வளவு சோதனையான காலக்கட்டத்திலும் நக்கலும், நையாண்டியுமாக வாழ்க்கையை எதிர்கொண்டவர் அவர். இன்னும் சில வருடங்களில் நூற்றாண்டு காணப்போகும் தலைவர், தன்னைப் பற்றி அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அசைபோடும் அளவுக்கு பசுமையான அனுபவங்களை தமிழர்களுக்கு தந்தவர்.

கடந்த நூற்றாண்டுக்கும், இந்த நூற்றாண்டுக்கும் பாலமாக வாழும் தமிழினத் தலைவரின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நூறு நிகழ்வுகளை எளிய மொழியில் பட்டியலிடுகிறது ‘கலைஞரின் நினைவலைகள் 100’.

ஆட்சியில் இருக்கும்போது கலைஞர் வேடந்தாங்கலை ஒத்தவர். நிறைய காக்காய் கூட்டம் அவரை சுற்றி இருக்கும். அச்சமயத்தில் கலைஞரை அட்டையில் அச்சிட்டு காசு பார்க்கும் காக்காய்கள் காணாமல் போயிருக்கும் இன்றைய சூழலில், தைரியமாக இந்த சிறிய நூலை எந்தவித பிரதிபலனும் பாராமல் கொண்டு வந்திருக்கும் நண்பர் குகன் பாராட்டுக்குரியவர்.

இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் நிகழ்வுகளும், செய்திகளும் பெரும்பாலானவை திமுகவினருக்கு தெரிந்த விஷயங்கள்தான். ஆனாலும் கலைஞரைப் பற்றி தெரிந்த விஷயத்தையே எத்தனை முறை வாசித்தாலும் சுகமான வாசிப்பனுபவமே.

கலைஞருக்கு தொண்டர்களை விட ரசிகர்கள் அதிகம். ரசிகர்கள் எல்லாக் கட்சிகளிலும் விரவியிருக்கிறார்கள். கலைஞரின் தமிழை அவரது எதிரிகளும் கூட வியந்துப் போற்றுகிறார்கள். இவர்களெல்லாம் ரசிகர்கள் ரசிக்க தோதான புத்தகம் ‘கலைஞரின் நினைவலைகள்’. செல்வி ஜெயலலிதாவே கூட இப்புத்தகத்தை வாசித்தால் பெரிதும் ரசிக்கக்கூடிய அளவில் சிறப்பான விஷயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.

சில காலம் முன்பு விழாக்களில் உடன்பிறப்புகள் யாருக்கும் பொன்னாடை போர்த்த வேண்டாம். பதிலுக்கு புத்தகங்களை அன்பளிப்பாக தரவேண்டும் என்று கலைஞர் கேட்டுக் கொண்டார். சில நாட்களுக்கு மட்டும் கலைஞரின் வேண்டுகோளை நடைமுறைப்படுத்திய உடன்பிறப்புகள் மீண்டும் பொன்னாடை கலாச்சாரத்துக்கு திரும்பி விட்டார்கள். கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, உடன்பிறப்புகள் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க விரும்பினால் கலைஞரின் நினைவலைகளை வழங்கலாம். திருமணம், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு வருபவர்களுக்கும் இதை வினியோகிக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு கலைஞரின் தொண்டனும்/ரசிகனும் அவசியம் வைத்திருக்க வேண்டிய/வாசிக்க வேண்டிய கையேடு இப்புத்தகம். திமு கழகத்தின் பேச்சாளர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கக்கூடிய சிறுநூல் இது.

நூல் : கலைஞரின் நினைவலைகள் நூறு
தொகுப்பாசிரியர் : குகன்
விலை : ரூ.35/-
பக்கங்கள் : 64
வெளியீடு : நாகரத்னா பதிப்பகம்
3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,
பெரம்பூர், சென்னை-600 011
தொலைபேசி : 9940448599

இணையம் மூலமாக வாங்குவதற்கு, இங்கே அழுத்தவும்!

ஜனவரியில் நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியிலும் இப்புத்தகம் கிடைக்கும்.

10 கருத்துகள்:

 1. அரசியல் தவிர்த்து, கலைஞரை பிடிக்கும் என்றால், அதன் காரணம் அவரின் சிலேடைத்தமிழ்.

  பதிலளிநீக்கு
 2. தன்னை திட்டமிட்டு வளர்த்துக் கொண்ட தலைவர்களில் கலைஞர் முதன்மையானவர். அவரால் தமிழுக்கும் தமிழருக்கும் பலம். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. இந்த ஜோக்கையெல்லாம் மத்தவங்க சொன்னா அது ’கடிஜோக்’, கலைஞர் சொன்னா அது சிலேடை. உங்க ஜால்ராவுக்கு ஒரு அளவே இல்லையா.. இருந்தாலும் \\அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய நன்மை. அதைத்தான் அவர் இப்படி கூறுகிறார்.\\ இந்த ரிபீட்டுக்கு ஒரு ‘அட’ போடலாம்...

  பதிலளிநீக்கு
 4. நன்றாகத்தான் இருக்கிறது.குடும்ப நலனை மட்டுபடுத்தி
  தமிழர்களின் தாலி அறுக்கும் தங்க தாரகையின்
  ஆட்சி மீண்டும் வரவிடாமல் செய்திருந்தால்
  இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. நானும் கலைஞரின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
  மீண்டும் அவர் முதலமைச்சர் ஆவார் என்பது உறுதி.
  இப்பொழுது துன்பப்படும் மக்கள் மீண்டும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதும் உறுதி.

  பதிலளிநீக்கு
 6. எக்காலமும் நிலைத்து நிற்கக் கூடிய கலைஞர் எழுத்தை எத்தனை முறை வாசித்தாலும் சுகமான வாசிப்பனுபவமே.
  தினம் அன்புத் தம்பிக்கு மடல் முரசொலியில் எழுதுவார் . பல வேலையின் காரணமாக அவர் மடல் வர தாமதித்தால் அவருக்கு தெரிவித்தால் உடன் எழுதி முரசொலி பத்திரிகைக்கு அனுப்புவார்.அவர் தன் கைப்பட எழுதிய எழுத்தில் அடித்தல் திருத்தல் காண முடியாது.

  பதிலளிநீக்கு
 7. கலைஞரை பற்றி கேட்க கேட்க மகிழ்ச்சியே .........

  பதிலளிநீக்கு
 8. ஒரு சமயம் வீரப்பன் தன் கூட்டத்தினரோடு உணவு உண்ணும போது உடும்பு கறியை ரசித்து உண்ட ஒரு தம்பி,"எனக்கு இன்னும் கொஞ்சம் உடும்பு" என கேட்க சட்றெண்டு வீரப்பன் சொன்னான்.."ஜாக்கிரதை,தம்பி! அதிக உடும்பு, உடம்புக்கு கெடுதல்!"
  =================================
  காட்டில் ஒரு கூத்து நிகழ்ச்சி:
  அதன் தொடக்கத்தில் "வந்தனம் வந்தனம் வந்தனம் "என பாடல் ஒலிக்க,ஒரு கண்சிமிட்டலுடன் வீரப்ப்ன் சொன்னான்:"சந்தன்த்திற்கே வந்தனமா?"
  ==================================
  ஒரு சமயம் போலீஸ் துரத்தும்போது,வீரப்பன் தன் காரோட்டியிடம் "உடனே லெப்ட் இன்டிகேட்டரைப்போடு" என்று சொல்லி பிறகு "இப்போ ரைட்டில் திரும்பு!"என ஆணையிட,துரத்திய போலீசார் இடது பக்கம் திரும்பி போய் விட,வீரப்பன் தன் குழுவுடன் தப்பினான்.இந்த சமயோசித புத்தி பலராலும் வியந்து பேசப்பட்டது!
  ===================================
  இவ்வாறு பல சுவையான தகவல்களுடன்:
  " வீரப்பனின் வீரமொழிகள்"
  ஒரு மேற்குப்பதிப்பக வெளியீடு:
  பக்கம்: 420 விலை: ரூ.111

  பதிலளிநீக்கு
 9. கலைஞரின் ரசிகனாக இருந்து தான் இந்த நூலை தொகுத்துள்ளேன். அதை மேற்கொள் காட்டி அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள். நன்றி யுவா.

  பதிலளிநீக்கு