10 டிசம்பர், 2011

இசை எதிலேருந்து வருது?

சேலம், பிள்ளையார் நகரைச் சேர்ந்த மைக்கேலுக்கு அப்போது வயது பத்து. அரசுப்பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். உணவு இடைவேளையில் சக மாணவர்கள் சினிமாப் பாடல்களை பாடும்போது, தாளம் பிசகாமல் வகுப்பறை மேசையில் தட்டுவார். அடிப்படை இசைஞானம் எதுவுமில்லையென்றாலும், மைக்கேல் ஒரு பிறவிக் கலைஞன்.

இவரது இந்த ஆற்றலைக் கண்ட ஆசிரியர்களும், நண்பர்களும் ‘ஒரு டிரம்ஸ் வாங்கி இசைக்கலாமே?’ என்று மைக்கேலுக்கு ஆலோசனை சொன்னார்கள். மைக்கேலுக்கும் ஆசைதான். அப்பாவிடம் கேட்டார். ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்துக்கொண்டிருந்த அப்பா மோகனுக்கு, பிள்ளை கேட்டதை வாங்கித்தர விருப்பமிருந்தது. ஆனால் கிடைத்த சொற்ப வருமானமோ குடும்பத்தின் பசியைப் போக்கவே போதுமானதாக இல்லை. மைக்கேலின் அம்மா ஒரு தையற்கலைஞர். வீட்டிலேயே ஒரு பழைய தையல் மெஷின் வாங்கி அக்கம் பக்கம் வீடுகளுக்கு துணி தைத்துக் கொடுப்பார்.

டிரம்ஸ் கிடைக்காத மைக்கேல், அம்மாவின் தையல் மெஷினை மூடும் மரமூடியை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். தவிலில் இருந்து வெளிவரும் இசையை தையல் மெஷின் மூடியில் இனம் கண்டார். குறிப்பிட்ட இசை என்பது அது அதற்குரிய வாத்தியங்களில் மட்டுமில்லை. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் கூட இருக்கிறது என்பதை கண்டறிந்தார். வாத்திய இசையை எந்தெந்தப் பொருட்களில் உருவாக்க முடியும் என்கிற தேடலில் ஈடுபட்டார் மைக்கேல்.

சாப்பாடு சாப்பிட உபயோகப்படுத்தும் எவர்சிலவர் தட்டுகளில் மேற்கத்திய டிரம்ஸ் இசையையும், செரலாக் பால் டின்னிலும், மினரல் வாட்டர் கேனிலும் பம்பை வாத்திய இசையையும் உருவாக்க முடிந்ததை கண்டு கொண்டார். இப்படியே நூல் பிடித்து பழைய ஹெல்மெட் மூலம் கடம், அண்டா தூக்கு ஆகிய பொருட்கள் மூலம் தபேலா, வாட்டர் ஃபில்டர் பிளாஸ்டிக் பக்கெட் மூலம் டிரம்ஸ் என்று இசையை உருவாக்கும் நூற்றுக்கணக்கான பொருட்களை அடையாளம் கண்டார். . கல்யாண மேளம், பம்பை, நையாண்டி, சண்ட மேளம் (கதகளி), கடம், மிருதங்கம் தபேலா உள்ளிட்ட கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வகையான beatகளை இக்கருவிகளைக் கொண்டு இப்போது அச்சு அசலாக மைக்கேலால் உருவாக்க முடிகிறது.

“இந்தக் கட்டத்தில் எனக்கு அசல் வாத்தியங்கள் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வமே போய்விட்டது. அந்த வாத்தியங்களின் இசையை எளியப் பொருட்களில் கொண்டுவருவதில் ஒரு சவால் இருக்கிறது. அந்த சவாலை எதிர்கொள்வது எனக்கு விருப்பமான ஒன்று. எந்தப் பொருளில் எந்த இசையைக் கொண்டு வரமுடியும் என்று கண்டுபிடிப்பதில்தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது. சிறுவயதிலேயே எனக்கு இந்த சூட்சுமம் பிடிபட்டுவிட்டது” என்கிறார் மைக்கேல்.

வித்தியாசக் கருவிகள் மூலமாக மைக்கேல் இசையமைப்பது அவரது வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. அவரது பகுதியில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் இக்கருவிகளை வைத்து கச்சேரி செய்ய ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டது. கச்சேரி அமோகமாக அமைய அடுத்தடுத்து சேலம் மாவட்டம் முழுக்க மைக்கேலுக்கு வாய்ப்பு மழை.

இதற்கிடையே, தங்கள் பள்ளி மாணவன் இவ்வகையில் புகழ்பெறுவது பள்ளிக்கும் பெருமை என்பதால் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் அவரை ஊக்குவித்தார்கள். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த இசைப்போட்டிகளுக்கு மைக்கேலை அனுப்பி வைத்தார்கள். அம்மாதிரியான ஒரு போட்டியில் மாவட்டத்திலேயே முதலிடம் மைக்கேலுக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதிவாணனுக்கு மைக்கேலின் இசை பிடித்துப் போனது. மாவட்ட நிர்வாகம் தொடர்பான அரசு விழாக்களுக்கு இசையமைக்க மைக்கேலை சிபாரிசு செய்தார். ஏற்காடு கோடைவிழாவில் இசையமைக்கும் அரியவாய்ப்பும் மைக்கேலுக்கு இப்படித்தான் கிடைத்தது.

இப்போது மைக்கேல் உள்ளூர் கேபிள் சேனல்களில் பிரபலம். பேட்டி, நிகழ்ச்சி என்று சக்கைப்போடு போடத் தொடங்கினார். சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ‘சிறந்த சாதனையாளர் விருது’ம் பெற்றார். எந்தப் பொருளையாவது வைத்து, எதையாவது தட்டிக் கொண்டிருக்கும் மகனை ஆரம்பத்தில் கவலையோடு பார்த்த அவரது பெற்றோர், இப்போது மைக்கேலை அங்கீகரிக்கவும், ஆதரிக்கவும் தொடங்கினார்கள்.

அடுத்து?

இசைத்துறையில் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி கண்டாயிற்று. அரசு அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதிக்கவும் ஆரம்பித்தாயிற்று. சேலத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பிரபலமாகவும் வளர்ந்தாயிற்று. வேறென்ன? சினிமாதான்.

அதற்கு முன்பாக இசை குறித்து கற்க ஆசைப்பட்டார் மைக்கேல். “எனக்கு போதுமான பிராக்டிக்கல் அறிவு இருந்தாலும், தியரிட்டிக்கலாக இசை கற்க நினைத்தேன். எனக்குத் தெரிந்த கர்னாடக சங்கீதம் முழுக்க முழுக்க கவனிப்பின் அடிப்படையில் அமைந்தது. முறையாக இசையை கற்பது என் எதிர்காலத்துக்கு உதவும் என்பதால், +2 முடித்தவுடனேயே 2008ல் சென்னைக்கு வந்தேன்” தான் சென்னைக்கு வந்த கதையை சொல்கிறார் மைக்கேல்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைப்பள்ளியில் சேருவது மைக்கேலின் அன்றைய லட்சியமாக இருந்தது. ஆனால் அவர் நினைத்த மாதிரியில்லாமல் இங்கே இசை படிக்க நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. மைக்கேலிடம் அவ்வளவு பணமில்லை. மனம் வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவரது செல்போனில் வந்தது ஒரு அழைப்பு.

மைக்கேலின் வாழ்க்கையையே மாற்றியமைத்த அழைப்பும் கூட இது. சென்னைக்கு வந்தபோது ‘எதுக்கும் இருக்கட்டுமே?’ என்று லயோலா கல்லூரியில் சேர வேண்டாவெறுப்பாக விண்ணப்பம் போட்டிருந்தார். மைக்கேலுக்கு வந்த அழைப்பு கல்லூரியிலிருந்து. கணிப்பொறி அறிவியல் இளங்கலை படிப்பில் சேர அவருக்கு அனுமதி கிடைத்திருந்தது. ஒரு கதவு மூடினால், ஓராயிரம் கதவு திறக்குமென்பதை மைக்கேல் உணர்ந்தார்.

சென்னையின் பழமையான, பிரசித்திப் பெற்ற லயோலா கல்லூரி மைக்கேலுக்கு அள்ளி, அள்ளி வழங்கிய வாய்ப்புகள் ஆயிரம் ஆயிரம். கல்லூரி நிர்வாகம் அவரது படிப்புக்கு பொருளாதாரரீதியாக உதவியோடு, இசை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்துக்கொள்ள ஊக்கமும் தந்தது. கல்லூரிகளுக்கு இடையிலான இசைப்போட்டிகளில் தனது வித்தியாசமான இசைக்கருவிகளோடு களமிறங்கி அதகளப்படுத்தத் தொடங்கியதில் மாநிலத் தலைநகரில் பிரபலமானார் மைக்கேல். அடுத்தடுத்து காமராஜர் அரங்கம், ராணி சீதைமன்றம் என்று சென்னையின் பிரபலமான அரங்குகளில் மைக்கேலின் இசை ராஜாங்கம்தான்.

வித்தியாசக் கருவிகளில் ‘டிரம்ஸ்’ இசைப்பதில் ஆர்வம் கொண்ட இசைக்கலைஞர் சிவமணி முன்பாகவும் ஒரு நிகழ்ச்சியில் வாசித்துக் காட்டினார் மைக்கேல். தன்னைப் போன்றே ஒரு கலைஞனை கண்டுகொண்டதில் சிவமணிக்கு மகிழ்ச்சி. கட்டிப்பிடித்துப் பாராட்டினார். இசைக் கலைஞர்களான விக்கு விநாயக், பாலமுரளி கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்று பலரும் மைக்கேலின் வித்தியாச இசையைப் பாராட்டித் தள்ளினார்கள்.

இருபது வயது முடிவடைவதற்குள் தான் விரும்பியத் துறையில் சொல்லிக் கொள்ளத்தக்க பெயர் பெற்றுவிட்டார் மைக்கேல். இவ்வருடம் கல்லூரிப் படிப்பும் முடிந்துவிட்டது. மாநிலம் முழுக்க கிட்டத்தட்ட நூறு தனி மேடை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியாயிற்று.

மைக்கேலின் அடுத்த திட்டம் என்ன?

சினிமாதான். அதற்கு முன்பாக தான் ஆசைப்பட்ட இசைப்படிப்பை படித்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார். தனக்கு இசை தெரியும் என்று சொல்லிக் கொள்வதற்கான உறுதிச் சான்றிதழாக படிப்பை கருதுகிறார்.

“என்னுடைய லட்சியம் ஆஸ்கர்தான் சார். இப்போது எனக்கு முறையான வாத்தியக் கருவிகளை வாசிப்பதிலும் நல்ல பயிற்சியுண்டு. இருந்தாலும் புதுப்புதுக் கருவிகளில் புதுப்புது இசையை தேடிக்கொண்டே இருக்கிறேன். இப்போது கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது கருவிகளை கொண்டு இசையமைக்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அதைச் சரியாக அடையாளம் கண்டு போராடுவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. நான் வெற்றிப் பெற்றுவிட்ட மமதையில் இதைச் சொல்லவில்லை. போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான என் சகோதரர்களுக்காக இதை சொல்கிறேன்” என்று தத்துவார்த்தமாக பேச்சை முடித்துக் கொள்கிறார்.

வறுமையை திறமை வென்றதற்கு ஏற்கனவே கோடி உதாரணங்கள் உண்டு. மைக்கேல் ஒரு கோடியே ஒன்றாவது உதாரணம்.

(நன்றி : புதிய தலைமுறை)

14 கருத்துகள்:

 1. intha pathivu miga thevayana ondru ippothulla valkai poratathirku mikka nandri yuva

  www.astrologicalscience.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பார்கள். அறிமுகம் மகிழ்ச்சியைத் தந்தது. திறமையை மறைக்க இயலாது.

  பதிலளிநீக்கு
 3. மைக்கேலு வாழ்த்துகள். நானும் லயோலா கல்லூரியில் படித்தவன் . "ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அதைச் சரியாக அடையாளம் கண்டு போராடுவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது." அருமை.

  பதிலளிநீக்கு
 4. இல்லாத ஒன்றை நினைத்து ஏங்காமல்,இருப்பதை வைத்து சாதித்த
  மைக்கேல் சந்தேகமில்லாமல் ஒரு ஜீனியஸ்.
  மைக்கேல் இசைத்துறையில் ஒரு மைல்கல்.
  வாழ்த்துக்கள் அவருக்கு.

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு.
  வாழ்த்துகள் மைக்கேல்.
  யுவகிருஷ்ணாவிற்கு மனப்பூர்வ நன்றி.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. அருமை!
  பகிர்வுக்கு நன்றி நண்பா!
  (தலைப்பை படித்தவுடன் வடிவேலு ஜோக்ஸ் ஞாபகம் வந்தது)

  பதிலளிநீக்கு
 7. //ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அதைச் சரியாக அடையாளம் கண்டு போராடுவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. நான் வெற்றிப் பெற்றுவிட்ட மமதையில் இதைச் சொல்லவில்லை. போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான என் சகோதரர்களுக்காக இதை சொல்கிறேன்//

  அருமையான அறிமுகத்துக்கு நன்றி யுவா!

  பதிலளிநீக்கு
 8. If interest is there any field one become like this boy search is more important any field update ur self

  பதிலளிநீக்கு
 9. Thalaivare,
  Morhalla unga padaththa maaththunga.
  Pazhaya padame 'amaithiyaa irukku'
  Intha padathil oru kolaveri theriyuthu.
  Aaththirappadathavar nnu nambamudiyala
  Unmaiyile unga writing sujathaava ninaivupaduththuthu.

  Good Luck
  Dr Siva

  பதிலளிநீக்கு
 10. Thalaivare,
  Morhalla unga padaththa maaththunga.
  Pazhaya padame 'amaithiyaa irukku'
  Intha padathil oru kolaveri theriyuthu.
  Aaththirappadathavar nnu nambamudiyala
  Unmaiyile unga writing sujathaava ninaivupaduththuthu.

  Good Luck
  Dr Siva

  பதிலளிநீக்கு