20 டிசம்பர், 2011

அழிக்கப் பிறந்தவன் - 5

| அழிக்கப் பிறந்தவன்-1    |    அழிக்கப் பிறந்தவன்-2    |    அழிக்கப் பிறந்தவன்-3  |
| அழிக்கப் பிறந்தவன்-4    |


விஜயஷங்கர் ஃப்ரெஷ்ஷாக இருந்தான். ஏதோ இந்திப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டே, கண்ணாடி முன்பாக தாடியை சீப்பால் வாரினான். தலை வாரிவிட்டு மீண்டும் கையால் லேசாக கலைத்துவிட்டான். பாடி ஸ்ப்ரேவை எடுத்து தாராளமாக ஸ்ப்ரேவிக் கொண்டான். பச்சைநிற டீஷர்ட்டை தலைவழியாக மாட்டினான். பர்ஸ், சீப்பு ஆகியவற்றை ஜீன்ஸ் பாண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். மறக்காமல் செல்போனை கையில் எடுத்துக் கொண்டான். ஆணியில் மாட்டியிருந்த பைக் சாவியை எடுத்தான்.


ரூமை பூட்டிக்கொண்டு வெளியே வந்தான். கிக்கரை ஸ்டைலாக உதைத்து பைக்கை ஸ்டார்ட் செய்தான். பிரசாத் லேப் வழியாக வடபழனி வந்தான். .வி.எம்.முக்கு எதிரில் அந்த பெட்டிக்கடையில் வண்டியை சைட் ஸ்டேண்ட் இட்டுநிறுத்தினான். அரை பாக்கெட் கோல்ட் ஃபில்டரும், ஒரு தினத்தந்தியும் வாங்கினான்.
லைட்டரில் சிகரெட்டை பற்ற வைத்தான். பேப்பரை புரட்டினான்.
பர்மாபஜார் வியாபாரி படுகொலை. குற்றவாளி யார்? போலிஸ் திணறல்!” செய்தியை வாசித்துவிட்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
யார் இந்த விஜயஷங்கர்?
ந்த காலத்தில் விஜயஷங்கரின் அப்பா ஒரு பண்ணையார். செல்வச் செழிப்பான குடும்பம். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிப் பக்கம் சொந்த ஊர். பக்கத்தில் இருந்த டவுனில் ஒரு சின்ன தியேட்டர் வைத்திருந்தார்கள். படிப்பு சரியாக ஏறாத விஜயஷங்கரை, பத்தாவது வகுப்போடு ஏறக்கட்டி தியேட்டரைபார்த்துக்கொள்ள சொல்லி விட்டார் அப்பா.
ஆரம்பத்தில் கவுண்டரில் உட்கார்ந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தான். கொஞ்சநாள் கேண்டீன் சேல்ஸ் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் புரொஜெக்டர் ஓட்டும் ஆசை வந்தது விஜயஷங்கருக்கு. ஆப்பரேட்டர் சொல்லிக் கொடுத்தபடி படம் ஓட்டத் தொடங்கினான். நிறைய படத்தை திரும்ப திரும்ப பார்த்து, இந்தக் கட்டத்தில் அவனுக்கு சினிமா மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. இவர்களது தியேட்டரில் சென்னை, மதுரையில் எல்லாம் ஓடித்தேய்ந்த படங்கள்தான் வரும். ஒரு படம் வெளியாகி ஆறு மாதம் கழித்துதான் விஜயஷங்கரால் பார்க்க முடியும்.
அபூர்வ சகோதரர்கள் ஏன் 200 நாள் ஓடியது? ராஜாதிராஜா ஏன் வெள்ளிவிழா கண்டது என்று ஆராயத் தொடங்குவதில் அவனுக்கு ஆர்வம் மேலிட்டது. தோல்வியடைந்த படங்கள் ஏன் தோல்வி அடைந்தது என்று நாலு பேரிடம் விவாதிப்பான். புதுப்படங்களைப் பார்ப்பதற்காகவே ராமநாதபுரத்துக்கும், மதுரைக்கும், திருச்சிக்கும் படையெடுப்பான்.
ரெண்டு ரீலுக்கு முன்னாடியே படம் முடிஞ்சிடிச்சி. அதுக்கப்புறம் வெச்சு வளவளன்னு இழுத்ததாலேதான் புட்டுக்கிச்சி
புட்டுக்கிட்ட படம் தன் கைக்கு வரும்போது, தனக்கு பிடித்தமாதிரி எடிட் செய்து தியேட்டரில் ஓட்டுவான். “புதுக்கோட்டையிலே பார்த்தப்போ சுமாரா இருந்திச்சி. இங்க பார்க்குறப்போ இந்தப் படம் நல்லாருக்கே?” ரசிகர்களின் ரசனை விஜயஷங்கருக்கு அத்துப் படியானது.
மெல்லத் திறந்தது கதவுவந்தபோது இரண்டாம் பாதியை முதலிலும், முதல் பாதியை இரண்டாம் பாதியிலுமாக ஓட்டி படத்தின் கதையையே மாற்றி வசூலை அள்ளினான்.
எந்த படம் வந்தாலும் இவன் கை வைத்து காட்சிகளை முன்னுக்குப் பின் மாற்றி ஓட்ட ஆரம்பித்தான். தேவையில்லாத காட்சிகளில் கத்தரி வைத்தான். சென்னையிலேயே மரண அடி வாங்கிய படங்கள் கூட விஜயஷங்கரின் தியேட்டரில் இரண்டு வாரத்துக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
பையன் தியேட்டரை நல்லா பார்த்துக்குறான். முன்னை விட நல்லாவருமானம் வருதுஅப்பாவுக்கும் மகிழ்ச்சி.
உள்ளத்தை அள்ளித்தாவந்தபோது படம் பார்த்து அசந்துவிட்டான் விஜயஷங்கர். படம் வெளியாகி மூன்று மாதம் கழித்துதான் உள்ளூருக்கு வந்தது என்றாலும்வசூல் சக்கைப்போடு போட்டது. தியேட்டரில் ஓட்டும் நமக்கே இவ்வளவு லாபம் என்றால், வினியோகஸ்தருக்கும் தயாரிப்பாளருக்கும் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்? நாமும் தயாரிப்பாளர் ஆகிவிட்டால் என்ன? முதல் கட்டமாக ஒரு படத்தை எடுத்து மதுரை, ராமநாதபுரம் ஏரியாவுக்கு வினியோகித்துப் பார்ப்போமா? அப்பாவிடம் சொன்னான். ”நீ கையை வெச்சேன்னா எந்த தொழிலா இருந்தாலும் விளங்கிடும். நல்லாசெய்ப்பாஎன்றார்.
தனக்கு படம் எடுத்துக் கொடுக்கும் மீடியேட்டர் மூலமாக விசாரித்தான். ”மெட்ராஸுலே இதுக்கு தகுந்த ஆளுங்க இருக்காங்க சங்கரு. வேண்ணா ஒருக்கா நேராவேபோய் பார்த்துட்டு வந்துடு?”
திருச்சிக்கு வந்து டிராவல்ஸ் பஸ்ஸில் மெட்ராஸுக்கு வந்தான். பஸ்ஸில் டிவி இருக்கிறதா, படம் போடுவார்களா என்று கேட்டு உறுதி செய்துக்கொண்டான். “புதுப்படம். அதுவும் விஜய் படமே போடுவாங்க. ஏறி ஒட்காரு.” படம் போடாத பஸ்ஸில் அவன் ஏறுவதேயில்லை.
எழும்பூரில் ரூம் போட்டான். விஜயஷங்கருக்கு அதுவரை மெட்ராஸ் பெரிய பழக்கம் இல்லை. ஓரிரு முறை வந்திருக்கிறான். பீச், அண்ணாசமாதி, வண்டலூர் பார்த்திருக்கிறான்.
லாட்ஜ் ரிசப்ஷனில் விசாரித்தான் விஜயஷங்கர். “இங்கே சினிமா படம் விக்குற ஆளுங்க எங்கே இருப்பாங்க?”
ரிசப்ஷனில் இருந்தவன் இவனை மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கிறான். ”நடிக்கணுமா? எடுக்கணுமா? ஒழுங்காச் சொல்லு
இல்லீங்க. ராம்நாட்லே வினியோக யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்
மவுண்ட்ரோடு பக்கத்துலே நரசிங்கபுரம்னு ஒரு தெரு இருக்கும். அங்கேதான் நிறைய டிஸ்ட்ரீப்யூட்டர்ஸ் ஆபிஸ் இருக்கும். ஒரு ஆட்டோ புடிச்சி போயி பார்த்து வாங்க
விஜயஷங்கர் கிளம்பினான். கெயிட்டி தியேட்டரில் ஏதோபடம் ஓடிக் கொண்டிருந்தது. நல்ல கூட்டம். கெயிட்டியை அடுத்து கேசினோ. ஏதோ ஜேம்ஸ்பாண்ட் இங்கிலீஷ் படம். இதுவும்தான். ஆனாலும் கூட்டம் கொஞ்சம் குறைவு. கேசினோவை ஒட்டிய தெருவில் ஆட்டோ நின்றது. “இதான் சார் நரசிங்கபுரம். ஆட்டோக்காரன் கேட்ட காசை கொடுத்து விட்டு தெருவில் இறங்கி நடந்தான்.
ஒவ்வொரு கட்டிடத்தின் முன்பாகவும் ஏதோ ஒரு சினிமாக் கம்பெனியின் பெயர் பலகை. தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே இந்த தெருதான் தீர்மானிக்கிறதோ?
யார் யாரையோ விசாரித்து ஒருவனை பிடித்தான். மெயின் டிஸ்ட்ரிப்யூட்டரையும், மற்ற மாவட்டங்களில் இருக்கும் குட்டி, குட்டி டிஸ்ட்ரிப்யூட்டர்களையும் இணைக்கும் ஒரு சின்ன மீடியேட்டர் இவன். பெயர் முருகன்.
மெனக்கெட்டு ஒவ்வொரு கம்பெனியாக அழைத்துப் போனான். மலையாள, தெலுங்கு, கன்னடப் படங்கள்தான் ஈஸியாக கிடைக்கிறது. கிடைக்கும் பாதி தமிழ்ப் படங்களும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போயிருக்கும் உப்புமா படங்கள்.
ஆஸ்கர் பிலிம்ஸுன்னு ஒரு கம்பெனி இருக்கு சார். ஜாக்கி சான் படம் மொத்தமா வாங்கி வெச்சிருக்காங்க. சிட்டி, என்.எஸ்.சி.லேலாம் ஜாக்கிசான் படங்க செம்ம அள்ளு அள்ளுது. மவுண்ட் ரோடு அலங்கார் தியேட்டருலே வெள்ளிவிழா கூட ஓடிச்சின்னா பார்த்துக்குங்களேன். உங்க ஏரியாவுக்கு ட்ரை பண்ணிப் பார்க்கறீங்களா?”
இல்லீங்க. நம்ம ஊருலே மலையாளப் படம் போட்டா கூட தியேட்டரு காத்தாடும். இங்கிலீஷு நெனைச்சே பார்க்க முடியாது. தமிழ் தான் நமக்கு வேலைக்கு ஆவும்
சரிங்க. அப்பன்னா திருவிளையாடல், சரஸ்வதி சபதம், உலகம் சுற்றும் வாலிபன்னு நிறைய கிடைக்கும். கோயமுத்தூருக்கு கூட நாந்தான் முடிச்சித் தாந்தேன். சீப்பா புடிச்சிடலாம். பார்க்கலாமுங்களா?”
பழைய படம்லாம் வேணாங்க
சரி. ஷகீலான்னு ஒரு புதுப்பொண்ணு. கேர்ள் பிரண்ட்ஸ்லே சிலுக்கோட இண்ட்ரட்யூஸ் ஆச்சி. அந்தப் பொண்ணு நடிச்ச நாலைஞ்சி படம் மலையாளத்துலே சூப்பர் ஹிட். தமிழ்லே பிரண்டு ஒருத்தர் டப் பண்ணி வெச்சிருக்காருங்க. கட்டை ரேட்டுக்கு வாங்கித்தாரேன். மதுரையிலேயே நல்லா பெருசா காசு பார்க்கலாம்
இல்லீங்க. அப்படியாப்பட்ட படமெல்லாம் வேணாங்க. அப்பாவோட பேரு கெட்டுப் போயிடும். கொஞ்சம் கைக்காசு செலவானாலும், நல்லப் படமா புதுப்படம் ஒண்ணை பெருசா இறக்கிடனும்னு தான் ஆசை
ரஜினி, கமல் படம் மாதிரி இருந்தாலும் சரிங்களா?” கொஞ்சம் நக்கலாக தான்கேட்டான்.
கிடைச்சா சந்தோஷம்தான். காசு ஒண்ணும் பிரச்சினை இல்லை- இந்தப் பதிலை முருகன் எதிர்ப்பார்க்கவில்லை. குஷியானான்.
யார் யாருக்கோ போனை போட்டான். அரை மணி நேரம் போனில் பலரிடமும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினான். “ரசினி படம் வேணும்யா. காசைப்பத்தி கவலையில்லை... கன் பார்ட்டி கையிலிருக்கும்ஹூம். முருகனுக்கு ராசியில்லை.
ரஜினி அருணாச்சலம் பண்ணிக்கிட்டிருக்காரு. எம்.ஆர். பூசை போட்ட அன்னிக்கே பெரிய ரேட்டுக்கு வித்துடிச்சாம். கமலோட அவ்வை ஷண்முகி புரொட்யூஸரோட ஓன் ரிலீஸா இருக்கும் மாதிரி தெரியுது. விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் படம் ஏதாவது பார்க்கலாமுங்களா?”
விஜயஷங்கருக்கு சட்டென்று பல்ப் எரிந்தது. “கார்த்திக் படம் ஏதாவது கிடைக்குமான்னு பாருங்க!” உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடியென்று அடுத்தடுத்து அப்போது ஹிட் கொடுத்திருந்தார் கார்த்திக்.
கார்த்திக் படமா? ராவு வெசாரிச்சி நாளைக்கு காலாம்பற சொல்றேன். லாட்ஜ் போன் நெம்பர் கொடுத்துட்டுப் போங்க!” அரை நாளிலேயே டயர்ட் ஆகிவிட்டிருந்தான் முருகன்.
பின்னர் விஜயஷங்கர் பிலால் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டான். தேவி தியேட்டரில் இங்கிலீஷ் படம் பார்த்தான். சாந்தி தியேட்டர் பக்கத்தில் விசாரித்து காபரே பார்த்தான். ‘ஒட்டகத்தை கட்டிக்கோ. கெட்டியாக ஒட்டிக்கோ. ஒல்லியாக இருந்த ஒருத்தி, இல்லாத தனது மார்பை குலுக்கி , குலுக்கி ஆடினாள். ஆல்பட்டில் நைட் ஷோ. நாலு மணி நேர உறக்கம். முருகனின் போனுக்காக லாட்ஜில் விடிந்ததில் இருந்தே காத்துக் கிடந்தான்.
ஷங்கரு சாருங்களா? முருகன் பேசுறேன். கார்த்திக் படம் ஒண்ணு மாட்டியிருக்கு. ரேட்டு தான் கொஞ்சம் அதிகமா சொல்லுறாப்புள. இருந்தாலும் அடிச்சிப் புடிச்சி வாங்கிடலாம். பார்ட்டியை நேர்லே பார்த்து பேசலாமுங்களா?”
ஆர்வத்தோடு ஆட்டோவைப் பிடித்தான் விஜயஷங்கர்.
படம் பேரு சுந்தரப் பாண்டியன். வி.கே.ராமசாமி தயாரிப்பு சார். உள்ளத்தை அள்ளித் தா மாதிரியே நல்ல காமெடி சப்ஜெக்ட்டு. முந்தா நேத்து தான் சென்ஸார் சர்ட்டிவிகேட் வாங்கி இருக்காங்க. பார்த்தவங்க சொல்றாங்க. படம் சந்தேகமில்லாமே சூப்பர் ஹிட்டாம். மொதல்லே நாம படத்தைப் பார்ப்போம். அப்புறம் ரேட்டு பேசிக்குவோம். நீங்க என்னா சொல்றீங்க?”
தி.நகர்தேவி ஸ்ரீ தேவியில் மற்ற விநியோகஸ்தர்களோடுபிரிவ்யூ பார்த்தார்கள். விஜயஷங்கருக்கு படம் பிடித்திருந்தது. முருகன் சொன்னமாதிரி நிச்சயமாய் இது சூப்பர் ஹிட்தான். சந்தேகமேயில்லை.முருகன். இந்தப் படத்தையே முடிச்சிடலாம்.ரேட்டு மட்டும் கொஞ்சம் பார்த்து பேசிக் கொடுங்க
படத்தை மொத்தமாய் வாங்கியிருந்தவர் ஏரியா பிரித்து விற்றுக் கொண்டிருந்தார். முதலில் ரஜினி பட ரேட்டு சொன்னார். முருகன் அடித்து பிடித்துப் பேசினான். அவர்கள் சொன்ன ரேட்டுக்கும், முருகன் கேட்ட ரேட்டுக்கும் ஒட்டவே இல்லை. முருகனுக்கு விஜயஷங்கரை ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது. இந்தப் படத்தை முடித்துக் கொடுத்து, அவன் பெரியாளாகி விட்டால், தானும் கூடவே சேர்ந்து, அவனோடு கொஞ்சம் வளர்ந்துவிட முடியும் என்று நம்பினான். இதுநாள் வரைக்கும் இவனை மாதிரி ஒருவனைதான் அவன் தேடிக் கொண்டிருந்தான்.
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்தார்கள். முருகன் கொஞ்சூண்டுமேலே ஏறிப் போனான். நகம் கடித்து விஜயஷங்கர் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 'முருகன் ஏன் இவ்வளவு கறாராகப் பேசுகிறான். கடைசியாக அவர்கள் படம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடப் போகிறார்கள்' என்று இவர்களுக்கு டென்ஷன். ஆனால் நடந்தது வேறு. அவர்கள் முதலில் கேட்ட ரேட்டில் பாதி ரேட்டுக்கு கடைசியில் ஒத்துக் கொள்ள வைத்தான் முருகன்.
ஆனால், அந்தப் பணமே கூட விஜயஷங்கரைப் பொறுத்தவரை கொஞ்சம் பெரிய பட்ஜெட்தான். இவ்வளவு பணம் அப்பாவிடம் இருக்குமா?

(தொடரும் - 5)

15 கருத்துகள்:

 1. you increasing lot of Expectation to up coming part ,this episode totally related to film distribution, previous gray market, what next lucky?

  பதிலளிநீக்கு
 2. அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்., சீக்கிரம் பதிவு பண்ணுங்க

  பதிலளிநீக்கு
 3. Great Story flow Mr.lucky, waiting for upcoming part, previous part related to gray market,now film distribution industry,please update as soon as possible ,very difficult to wait.

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொருப் பகுதியும் புதுசா வித்தியாசமா இல்லே இருக்கு.... தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. மூணு நாலு கதை ஒண்ணா சேருமா ?? இந்த கிளைல இன்னும் கொஞ்சம் டுவிஸ்ட் ...

  பதிலளிநீக்கு
 6. இளைய கிருட்டினரே!
  உங்கள் எழுத்து நடை அபாரம்;மிகவும் தனித்தன்மையுடன் இருக்கிறது.தொய்வு என்பது அறவே இல்லை.இது Jeffrey Archer பாணியாகும்.உங்களுக்கு இது இயல்பாகவே அமைந்துள்ளது.
  நிறைய எழுதுங்கள் நண்பரே!
  உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் காத்துள்ளது

  பதிலளிநீக்கு
 7. செம இண்டெரெஸ்டிங்கா போகுது லக்கி,
  தொய்வில்லாத நடை, அருமையான விவரணை, கதைகள் எங்கே கூடப் போகின்றன என்பதை அறிய ஆவல் - சொல்லிக் கிட்டே போகலாம்.

  குமுதத்தில் தொடராகவோ, க்ரைம் நாவல் போன்ற பத்திரிக்கைகளில் குறு நாவலாகவோ வந்திருக்க வேண்டியது - எங்க அதிர்ஷ்டம், உங்க நஷ்டம் - ஓசில படிக்கறோம்.

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 8. You should not have mentioned Sundara Pandian. Now I believe I guessed the remaining part and climax.

  பதிலளிநீக்கு
 9. ஹலோ பாஸீ சும்மா பிச்சு உதறுது உங்க கதை....படம் பார்க்கறா மாதிரி இருக்கு பாஸீ ......கலக்குங்க... அடுத்த பகுதி எப்படா வரும்னு ஏங்க வைக்கிறீங்க

  பதிலளிநீக்கு
 10. லக்கி சார்,

  >>>>>>>யார் இந்த விஜயஷங்கர்?<<<<<<

  இந்த வரி இல்லாமலே இன்னும் நல்லா இருக்குமே?!

  நன்றி!

  சினிமா விரும்பி

  பதிலளிநீக்கு
 11. ”ஸ்பிரேவிக் கொண்டான்”.... சுஜாதா...?

  பதிலளிநீக்கு
 12. திரைக்கு பின்னால்,பின்னால் என்று நிறைய விசயங்கள் கேள்விப்பட்டிருக்கன்.
  இப்பொழுதுதான் திரையிட முன்னால்....விசயங்களை படிக்கிறேன்.

  வாழ்த்துக்கள் யுவா! தொடர்ந்து எழுதுங்கள்.

  http://kurukkaalapovaan.blogspot.com/search/label/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81

  பதிலளிநீக்கு