19 டிசம்பர், 2011

அழிக்கப் பிறந்தவன் - 4

| அழிக்கப் பிறந்தவன்-1   |   அழிக்கப் பிறந்தவன்-2   |   அழிக்கப் பிறந்தவன்-3 |விடியலுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் பாக்கியிருந்தது. மாரியின் கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சியது. போட் ஓரத்தில் வந்து நின்றுகொண்டு கடலை பார்த்தான். அமைதியாக சந்தடியில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தது. மாரிக்கு விடியல்நேர கடலை வேடிக்கை பார்க்க ரொம்ப பிடிக்கும். அதற்காகவே கடலுக்கு வரும் இந்த வேலையை நேசித்தான்.
முகத்தில் புசுபுசுவென்று ஒரு மாத தாடி. கடல் காற்றில் தலை கன்னா பின்னாவென்று கலைந்திருந்தது. விரல்களை முடிகளுக்குள் சொருகி கோதினான். உப்புக்காற்றின் பிசுபிசுப்பு. கறுப்புநிற டிராயர் தெரிவதுப்போல, பூ போட்ட லுங்கியைத் தூக்கி கட்டியிருந்தான். கட்டம் போட்ட அரைக்கைச் நீலச்சட்டை. டிராயர் பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். ஃபில்டர் வைக்காத சிசர்ஸ். தீப்பெட்டி எடுத்து கொளுத்தி, புகையை ஆழமாக நெஞ்சுக்குள் செலுத்தினான். வாய் மூடி மூக்கு வழியாக வெளியேற்றினான். புகைவாசனை கொஞ்சம் சுறுசுறுப்பு சேர்த்தது.
இன்னும் ஒரு மணி நேரத்துலே கரை கிட்டார போயிடலாம். மத்த ஏற்பாடெல்லாம் ரெடிதானே மாரி?" சுக்கான் பிடித்து படகை செலுத்திக் கொண்டிருந்த சண்முகம் கேட்டான்.
ஆங். அதெல்லாம் பண்ணியாச்சி சம்முவம்! இன்னேரத்துக்கு டெம்போ வந்திருக்கும்
இந்தவாட்டி என்னா சரக்கு மாரி?" இந்த போக்குவரத்துகளில் பெரிய ஆர்வம் இல்லாவிட்டாலும், விடிகாலை அமைதியை சகித்துக்கொள்ள இயலாததால் சும்மா ஒப்புக்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான் சண்முகம். மீனவனான சண்முகத்துக்கு ஒரு மாதம் மீன் பிடிக்க கடலுக்குப் போவதைவிட, மாரி மாதிரி ஆட்களுக்கு ஒரு நைட்டு போட் ஓட்டினால் போதும். ரெண்டு மாச வருமானத்தை ஒரே நாளில் அள்ளி விடலாம்.
யாரோ சினிமாலே புதுசா மீசிக் டைரக்டராம். ஆர்டரு பண்ணியிருந்தாரு. மீசிக் இண்ஸ்ட்ரூமெண்டுப்பா. லேட்டஸ்ட்டு. சிங்கப்பூர்லே இருந்து வருது. மொத்தம் நாலு ஆர்டரு. செலவு கிலவு எல்லாம் போவ, ஒரு ஆர்டருக்கு நாப்பது, நாப்பத்தஞ்சி ரூவா வரைக்கும் லாவம் மட்டுமே நிக்கும். ஏர்போட்டு ரூட்டுலே எடுத்தாந்தா பத்து ரூவா நின்னாலே பெருசு. இன்னாதான் இருந்தாலும் நம்ம தொழிலுக்கு இந்த கடல்ரூட்டு தாம்பா பெஸ்ட்டு." - கவனமாக அமவுண்டு மட்டும் குறைத்து சொன்னான் மாரி. இல்லையென்றால் சண்முகம் ட்ரிப்பு ரேட்டு ஏற்றிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. மீசிக் இன்ஸ்ட்ரூமெண்ட் மட்டுமல்ல. வேறு சில சரக்குகளும் பொட்டியில் உண்டு. மாரி வாயிலிருந்து இந்த விஷயத்தில் மட்டும் உண்மை வரவே வராது என்று சண்முகத்துக்கும் தெரியும்.
நடுக்கடலில் கைமாற்றப்பட்ட சரக்கு இது. QC OK தரச்சோதனையெல்லாம் செய்துப் பார்க்க வாய்ப்பில்லை. பரஸ்பர நம்பிக்கையில்தான் இந்த பொழைப்பு ஓடுகிறது. அவன் கொடுக்கும் சரக்கு சரியாகதான் இருக்கும் என்று இவனுக்கு நம்பிக்கை. இவன் விற்கும் சரக்கு தரமானதாகதான் இருக்கும் என்று இவனிடம் வாங்கும் வாடிக்கையாளருக்கு நம்பிக்கை. கருப்புச் சந்தை உலகம் இயங்க அத்தியாவசியமான கச்சாப்பொருளே இந்த நம்பிக்கைதான்.
கிட்டத்தட்ட மாமல்லபுரத்துக்கு அருகாமையில் இருந்தார்கள். தூரத்தில் நகர வெளிச்சம், கீழ்வானத்தில் தெரிந்தது. மின்விளக்கில் அலங்கரிக்கப்பட்ட கடற்கரை கோயில் மினியேச்சர் மாதிரி இருந்தது. கோவளத்துக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையில் ஒரு ஸ்பாட்டில் சரக்கை கரையேற்றுவதாக திட்டம். அந்த ஸ்பாட் ஒரு இயற்கை துறைமுகம். நேவி ஆட்களுக்கு தெரியவே தெரியாது. போட் கரைவரை வந்து சேருமளவுக்கு நல்ல ஆழம் இருந்தது. பாறைகள் கொஞ்சம் ஜாஸ்தி. கவனமாக ஓட்டினால் பிரச்சினை இல்லை. தென்னைமரத் தோப்புக்கு இடையில் அமைந்த பகுதி என்பதால் சாலையில் இருந்து பார்க்கும் யாருக்கும், இங்கே இருக்கும்  ஆளரவம் சுத்தமாகத் தெரியவே தெரியாது. டெம்போவோ, மினிலாரியோ வந்துச் செல்ல வசதியாகவும் அந்த இடம் அமைந்திருந்தது.
கையில் எவ்வளவுதான் காசு புழங்கினாலும், இதுபோல சரக்கு கொள்முதல் செய்ய நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் மாரிக்கு நிம்மதி. மாரி மட்டுமல்ல. பஜாரில் தொழில் செய்யும் பெரும்பாலான முதலாளிகள் இப்படித்தான். இது ஒருகெத்தும் கூட. "வேலைக்காரனை அனுப்பிட்டு கடையிலே உட்கார்ந்து கோழியாட்டம் முட்டை வெச்சிக்கிட்டிருக்கான் பாருஎன்று கடலுக்கோ, வானத்துக்கோ போகாத முதலாளிகள், பஜார் பையன்களால் கிண்டல் அடிக்கப்படுவார்கள். எனவேதான் எவ்வளவு சோம்பேறியான முதலாளியாக இருந்தாலும், மாதத்துக்கு ஒருமுறையாவது டைரக்டாக தொழில் செய்யப் போய்விடுவார்கள். இதுதான் தொழில் வீரம் என்கிற ரேஞ்சுக்கு ஒரு மூடநம்பிக்கை எப்படியோ இங்கே ஏற்பட்டு விட்டது.
கலாஸலா... கலஸலா... கலாஸலா.. கலஸலா.. மாரியின் செல்போன் கிணுகிணுத்தது. லேட்டஸ்ட் சோனி எரிக்சன். அமெரிக்காவுக்கே இந்த மாடல் புதுசு. ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்தில் பார்த்தான். ஆர்டர் செய்தான். போனை எடுத்து, நம்பர் பார்த்து காதுக்கு கொடுத்தவன்,  “சொல்றா கொசு!” என்றான்.
கொசு என்கிற பிரேம்குமார் கேட்டான். “மாரி எங்கிட்டுடா போய் தொலைஞ்சே? போனை போட்டா நாட் ரீச்சபுள் வருது
சரக்கு ஏத்தியாற கடலுக்கு வந்தேன். பையனாண்ட சொல்ட்டு வந்தேனே. உங்கிட்டே சொல்லலியா? இப்போதான் கரைக்கு வாறேன். உள்ளே சிக்னலே கிடைக்காது. கடலுக்குள்ளாற என்ன ஏர்டெல்லுகாரன் டவரா கட்டியிருக்கான்?”
மாரி. கொஞ்சம் ஜாக்கிரதையை இருந்துக்கடா. விஷயம் தெரியுமா? வாப்பாவையே போட்டுட்டானுங்களாம்.. அவரோட தம்பி மவனுங்க ஜாஹிரும், இஸ்மாயிலும் வெறி வெறின்னு ஏரியாவுலே ஆளுங்களை கூட்டிக்கிட்டு காரை போட்டு திரியறானுங்க. டிக்கி ஃபுல்லா பொருளு. பஜார்லே எவன் எவன் மேலே சந்தேகமோ, எல்லாத்தையும் போட்டுடணும்னு வெறி ஏறிப் போய் கெடக்கானுங்க. இங்கே ஒரே பிரச்சினையா இருக்கு
டேய் இன்னாடா சொல்றே? நம்ம வாப்பாவையே போட்டுட்டானுங்களா? நான் உடனே கிளம்பியாறேன்!
வேணாமுடா. நெடுஞ்செழியனே கூடஎஸ்ஆயிட்டதா கேள்வி. அவன் கிட்டே இல்லாத ஆளு, அம்பு, படைபலமா உனக்கு இருக்கு? அடிபட்ட பாம்பு கொஞ்ச நாளைக்கு சீறத்தான் செய்யும். நீயும் அப்படியே எங்கிட்டாவது அப்ஸ்காண்ட் ஆயிடு. போலிஸும் பஜாருக்குள்ளாற பூந்து சம்பந்தமில்லாத ஆளுங்களை தூக்கிட்டு போயி, பொழைப்பைக் கெடுத்துக்கிட்டு இருக்கானுங்க
கொசு சொல்வதும் சரிதான். போலிஸ் கேஸ் ஆகட்டும். பிசினஸ் பிரச்சினை ஆகட்டும். எப்பவும் பாதிக்கப்படுவது அப்பாவிகள்தான். ‘மேட்டர்செய்தவன், எங்கோ சுகமாக இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
வாப்பாவின் உடல் இரண்டு நாள் கழித்துதான் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ரோந்து போய்க்கொண்டிருந்த அண்ணா சதுக்க காவல்நிலைய கான்ஸ்டபிள் ஒருவர், இயற்கை உந்துதலுக்காக யதேச்சையாக அந்த கட்டிடத்துப் பக்கம் ஒதுங்கியபோது, அங்கே பரவிய துர்நாற்றத்தை மோப்பம் பிடித்து, சந்தேகம் கொண்டு சுற்றிப் பார்த்து, பாடியை கண்டுபிடித்திருந்தார். அந்த கட்டிடத்துக்கு யாராவது கள்ளக் காதலர்கள் ‘அது’க்காக ஒதுங்கினால்தான் உண்டு. இல்லையென்றால் வாப்பா மாதிரி வெள்ளிக்கிழமை இராமசாமிகள் அயிட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்தால்தான் உண்டு.
பர்மாபஜாரின் பீஷ்மர்களில் ஒருவரான வாப்பா போலிஸ் வட்டாரத்திலும் கொஞ்சம் பிரபலமானவர்தான். ஒரு காலத்தில் போலிஸின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி தொழில் புரிந்தவர். ‘போடப்பட்டது ஒரு பிரபலம்என்று போலிசுக்கு தெரிந்ததும், சம்பவம் திருட்டு டிவிடி மாதிரி பரபரவென்று தீயாய் நகருக்குள் பரவியது. வாப்பாவின் குடும்பத்தினர் வெட்டுவோம், கொல்லுவோம் என்று கொதித்தெழுந்தனர். ஆனால் யாரை வெட்டுவது, யாரை கொல்லுவது என்கிற தெளிவுதான் அவர்களிடம் சுத்தமாக இல்லை. ஆட்களை வாரிக்கொண்டு  பஜாருக்குப் போனார்கள். வாப்பாவிடம் சாதாரணமாக முந்தைய காலங்களில் வாய்ச்சண்டை போட்டவன், போட்டி சரக்கு எடுத்தவன் என்று கண்டவனையும் பிடித்து அடித்து நொறுக்கினார்கள். எவன் போட்டிருப்பான்? மாரியா, நெடுஞ்செழியனா? செட்டியாரா? வளர்த்த கடா மார்லே பாயுறதுதாண்டா இந்த தொழிலோட தலையெழுத்து!”
வாப்பாவுக்கு ஒரு காலத்தில் தொழில்ரீதியாக நிறைய எதிரிகள் இருந்ததென்னவோ உண்மைதான். அவர்களில் ஒருவர் கூட இன்று உயிரோடு இல்லை. தெம்போடு இருந்தப்போதே பலரையும் வெட்டிச் சாய்த்தவர் அவர். போலிஸ் செல்வாக்கு வைத்து சிலரை உள்ளே வைத்தார். சிலர் உயிர்பிழைக்க தொழிலைவிட்டு ஓடியே போய்விட்டார்கள். நேற்றுவரை பஜாரில் வாப்பா ஒரு கிங் மேக்கராக இருந்து வந்தார். மாரி, நெடுஞ்செழியன் மாதிரி எத்தனையோ தொழில்காரன்களை உருவாக்கி தந்துக் கொண்டிருந்தார். உருவாக்கப்பட்டவர்களும் சில நேரம் தொழிலில் வாப்பாவோடு மோத வேண்டியிருக்கும். இது சகஜம்தான். பீஷ்மரோடு பாண்டவர்கள் மோதின மாதிரி.
மாரிதான் அதிக முறை மோதியவன். இதனாலேயே ஒன்றரை ரெண்டு வருடங்களாக இவனிடம் வாப்பா முகம் கொடுத்துக்கூட பேசுவதில்லை. குருவையே கொஞ்சம் ஓவராக கலாய்த்துவிட்ட சிஷ்யன் அவன்.
ஆயிரம் தான் வாப்பாவோடு தொழில் மோதல் இருந்தாலும், மாரி ஒரு காலத்தில் அவருடைய நம்பிக்கைக்குரிய, செல்லமான சீடன். கட்டிவாடா என்று சொன்னால் வெட்டிவருவான். திறமையான குருவி. கஸ்டம்ஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு சரக்கை கொண்டு வருவதில் கில்லாடி. கஸ்டமர்களோடுநேக்காகவும் பேசத்தெரிந்தவன்.
காலம் காலமாக வாப்பா கடையில் சரக்கெடுக்கும் பழைய ஆட்கள், அவரிடமே சொல்லியிருக்கிறார்கள். “வாப்பா.. அந்தக் காலத்துலே நீங்களும் மாரி மாதிரி தான் இருந்தீங்க. அவருக்கும் இது தெரியும். மாரியைப் பார்க்கும் போது தன்னையே கண்ணாடியில் பார்ப்பது மாதிரி உணர்ந்தார். ரத்தம் சுண்டும் வரை அவர் உழைக்காத உழைப்பா?
எத்தனை நாடுகளுக்கு போயிருப்பார்.. எவ்வளவு மனிதர்களை சந்தித்திருப்பார்? லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதித்து சம்பாதித்து பணத்தைப் பார்த்தாலே அலுப்பாக ஆகிவிட்டது. ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரம். ஆனாலும் தொழிலை விட முடியவில்லை. இந்தத் தொழில் கஞ்சா, அபின் மாதிரி. உள்ளே நுழைந்தவர்கள், சுலபமாக வெளியே வந்துவிட முடியாது. கவருமெண்டு ஆபிஸர் மாதிரி அம்பத்தெட்டு வயசு ஆனதுமே ரிடையர்ட் எல்லாம் ஆக முடியாது. ரிஸ்க் எடுத்து யாவாரம் செய்வது ஒரு போதை. ஒரு த்ரில். மற்றவர்களெல்லாம் முடியாது என்று சொன்ன விஷயத்தை முடித்துக் காட்டுவதில் ஒரு பெருமை. வயசு இருக்கும்வரை நேரடியாக இறங்கி செய்யலாம். முடியாத பட்சத்தில் தகுந்த ஆட்களை உருவாக்குவதில்தான் ஒரு வியாபாரி, இங்கேடான்ஆகமுடியும்.. சந்தேகமில்லாமல் வாப்பா ஒருடான்!

(தொடரும் - 4)

13 கருத்துகள்:

 1. ஒவ்வொரு எபிசோடும் படிக்கும் ஆர்வத்தை அதிகமாக்குகின்றன., ரொம்ப நல்லா போயிகிட்ருக்கு சார்

  பதிலளிநீக்கு
 2. கதை அருமையாக செல்கிறது... அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்!:-)

  பதிலளிநீக்கு
 3. விறுவிறுப்பாக போகிறது. தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 4. பேராசிரியர் க.அன்பழகன் அவர்களைப் பற்றி எழுத வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. atith padam maathiri irukku... :) keep it up...

  பதிலளிநீக்கு
 6. Dear lucky i'm fan of u'r posts please create exclusive post abt jeya sasi problem, and sasikala's family hierarchy which is shown in pudhiya thalaimurai TV it'll be very useful for us(DMK Fans) please,please,
  please,
  please.

  பதிலளிநீக்கு
 7. வர வர நாயகனை அதிகம் நினைவுபடுத்துகிறது. அதுசரி, பர்மா பஜாரில் உண்மையில் இவ்வளவு வெட்டுக்குத்து இருக்கா?

  பதிலளிநீக்கு
 8. படிக்க படிக்க ரொம்ப நல்ல போயிட்டு இருக்கு.
  தினம் ஒரு பகுதி போடவும், ஒரே முட்டில் படித்துவிட ஆசை

  பதிலளிநீக்கு
 9. யுவா!
  கலக்கிறேல் போங்க.

  http://kurukkaalapovaan.blogspot.com/2011/07/blog-post.html

  பதிலளிநீக்கு