November 23, 2011

சென்னையில் சாக்ரடிஸ்!

ஏதோ ஒரு புத்தகக் காட்சி சீசனின் போது சாரு எழுதியிருந்ததாக நினைவு. ‘எஸ்.ராமகிருஷ்ணனை சுற்றி பத்து இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் எஸ்.ரா பேசுவதையும், அதை உன்னிப்பாக இளைஞர்கள் கவனிப்பதையும் காணும்போது, இப்படித்தானே ஏதென்ஸில் சாக்ரடிஸ் பேசுவதை அரிஸ்டாட்டில், பிளேட்டோ உள்ளிட்ட இளைஞர்கள் கேட்டிருப்பார்கள் என்று நினைத்தேன்’.

சாரு சித்தரித்த அந்தக் காட்சியை நாம் கண்டதில்லை. ஆனால் நேற்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தை கண்டபோது, இது சென்னையா அல்லது பண்டைய ஏதென்ஸா என்கிற சந்தேகம் வந்தது. மேடையில் பேசிக்கொண்டிருந்தவர் சாக்ரடிஸ்தானோ என்கிற மனக்குழப்பமும் ஏற்பட்டது. நல்லவேளையாக அது எஸ்.ரா.தான். அவரது ட்ரேட் மார்க் முன்வழுக்கை மற்றும் முகத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட வால்ட் டிஸ்னி கார்ட்டூன் பாணி புன்னகையை கண்டு உறுதி செய்துக் கொண்டோம்.

இலக்கியம் தொடர்பான நிகழ்வுகளுக்கு சென்னையில் அரங்கம் நிறைவது அரிதிலும் அரிதான விஷயம். சாரு, ஜெயமோகன் மாதிரி சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களின் புத்தக வெளியீடுகள் தவிர்த்து, இலக்கியப் பேருரைகளுக்கெல்லாம் கூட்டம் சேர்வது என்பது நினைத்தேப் பார்க்க முடியாத விஷயம். எஸ்.ரா.வின் ஏழு நாள் உலக இலக்கிய தொடர்பேருரைகளுக்கு கூடும் கூட்டம் ஒரு உலக அதிசயம். நீண்டகாலம் கழித்து தரையில் அமர்ந்து ஒரு பேச்சை கேட்பது இப்போதுதான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இலக்கிய அணி கூட்டங்களில் இவ்வாறான சுவாரஸ்ய உரையை கேட்டிருக்கிறோம். முதல் நாள் உரையில் டால்ஸ்டாயின் அன்னாகரீனா நாவல் பற்றி அமோகமாகப் பேசியதாக, ஷாஜியோடு போனில் பேசும்போது சொன்னார். அன்று போகும் வாய்ப்பு இல்லை என்பதால் இரண்டாம் நாள்தான் செல்ல முடிந்தது. தஸ்தாவேஸ்கியின் ’க்ரைம் & ஃபணிஷ்மெண்ட்’ பற்றி பேசினார் எஸ்.ரா.

இதை வெறும் பேச்சு என்று சொல்வதா, சொற்பொழிவு என்று சொல்வதா, சொல்லருவி என்று சொல்லுவதா என்று மகாக்குழப்பம். மூன்று மணி நேரம் எதிரில் அமர்ந்திருக்கும் கூட்டத்தை மாயக்கயிறு கொண்டு கட்டிப் போட்டார் என்பதே உண்மை. முதல் வரிசையில் அமர்ந்திருந்த மனுஷ்யபுத்திரன் கொஞ்சமும் அசையாமல் சிலையாக சமைந்திருந்தார். மொத்தக் கூட்டமும் கிட்டத்தட்ட இதே மாதிரியான மோனநிலைக்குதான் போயிருந்தது.

நேரடியாக நாவலை மட்டும் பேசாமல், நாவலாசிரியன் அந்நாவலை எழுதுவதற்கான சூழல், பின்னணி, அவசியமென்று எளிய வார்த்தைகளில், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கொஞ்சமும் சுணங்காமல் கொட்டித் தீர்த்துவிட்டார். தஸ்தாவேஸ்கியோடு நாமே வாழ்ந்த அனுபவத்தை எஸ்.ரா தந்தார்.

எஸ்.ரா.வின் பேச்சை வேறு சந்தர்ப்பங்களிலும் நிறைய முறை கேட்டிருக்கிறோம். குறிப்பாக ‘குழந்தைகள்’ பற்றி பேசும்போது அவரும் குழந்தையாக மாறி, கண்கள் மின்ன ஆர்வமாகப் பேசுவார். அந்நிலையில் பார்க்கும்போது உலகின் ஒரே அழகிய ஆணாகவும் அவர் தெரிவார். நேற்றும் அந்த அழகு நான்கைந்து சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.

வரும் ஞாயிறு வரை, எஸ்.ரா அருவியாகக் கொட்டப் போகிறார். சென்னையில் வசிப்பவர்கள் / ஆர்வமிருப்பவர்கள் ரஷ்ய கலாச்சார மையத்துக்கு வந்து நனையலாம். ரஷ்ய கலாச்சார மையத்தோடு, புஷ்கின் இலக்கியப் பேரவை மற்றும் உயிர்மை இணைந்து இந்நிகழ்வை நடத்துகிறது.

14 comments:

 1. அந்த அரிய வாய்ப்பு சென்னை வாசகர்களுக்கு மட்டும் கிடைத்ததில் மற்ற ஊர்க்காரர்களுக்கு வருத்தம் தான்.பொதுவாக எழுத்தாளர்கள் மேடைபேச்சில் அவ்வளவாய் சோபிக்க மாட்டார்கள்.ஆனால் எஸ்.ரா எழுத்திலும் சரி...பேச்சிலும் சரி.. எஸ்ராவுக்கு நிகர் எஸ்ரா தான்.குடுத்துவைத்த மகராசன்கள் சென்னை வாசகர்கள்!!

  ReplyDelete
 2. S.RAMAKRISHNAN @ his Best!
  Whenever he pronounces Dostoevsky it just rocking @ the arena..! He sounds it completely in different way, his magical words just makes the heart so lite.!

  ReplyDelete
 3. கொடுத்து வைத்தவர்கள் நீங்களெல்லாம்! வீடியோ இணைப்புக் கிடைத்தால், பகிர்ந்துகொண்டால் நாங்களும் பார்க்கலாம் பாஸ்!

  ReplyDelete
 4. கொடுத்து வைத்தவர்கள் நீங்களெல்லாம்! வீடியோ இணைப்புக் கிடைத்தால், பகிர்ந்துகொண்டால் நாங்களும் பார்க்கலாம் பாஸ்!

  ReplyDelete
 5. நானும் கேள்விபட்டு இருக்கேன்

  ReplyDelete
 6. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இலக்கிய அணி கூட்டங்களில் இவ்வாறான சுவாரஸ்ய உரையை கேட்டிருக்கிறோம். "

  இதிலயுமா . . . . ?

  ராமகிருஷ்ணன் தப்பா நெனச்சிக்க போறாரு . . .

  மற்றபடி பயனுள்ள பகிர்வு

  நன்றி . . .

  ReplyDelete
 7. யுவா ஒரு பகல் முழுவதும் ஈரோடு நண்பர்களுடன் அவர் பேசு பேசு என்று பேசிக் கொண்டிருந்தார். அனுபவித்தோம்.

  ReplyDelete
 8. குரங்குபெடல் அவர்களே!

  எஸ்.ராமகிருஷ்ணன் திராவிடப் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்தவர்.

  உங்கள் வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்தால் கமெண்டு போட அனுப்புங்கள் சார்! :-)

  ReplyDelete
 9. உண்மையில் நாங்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்தான்.அருமையான பதிவுகளிடும் யுவாவிற்கு சென்னை நேயர்கள் சார்பாக நன்றிகள்..

  ReplyDelete
 10. கமெண்ட் போட்டவனைப் போய் திட்டிட்டியே கயிதே.... நீ இன்னாத்து ஆத்தரபட (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே?) மாட்டேன்னு எழுதி வச்சிருக்கே

  ReplyDelete
 11. "திராவிடப் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்தவர். "

  யுவக்ருஷ்ணா சார் . . .
  நீங்க பெரியவர்தான் ஒத்துக்குறேன் . . .

  ஆனா திராவிடம் . . . பாரம்பரியம்

  போன்ற சொற்கள் முரண்பட்டு ரொம்ப நாள் ஆச்சு தெரியுமா . . . ?

  பாத்து சார் நீங்க பாட்டுக்கு திராவிடம் . . . பாரம்பரியம்

  அப்படின்னு சொல்லபோயி அவரு மேல போலியா நில அபகரிப்பு கேஸ் போட்டுரபோரங்க

  ReplyDelete
 12. என்னங்கோ, கொஞ்சக்காலமா butter அடிக்கிறீங்கோ? முதலில் சா.நி, இப்ப எஸ்.ரா;

  அடுத்தது ஜெ.மோ'வின் உன்னதம்?

  ReplyDelete
 13. ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்.//
  //கமெண்ட் போட்டவனைப் போய் திட்டிட்டியே கயிதே.... நீ இன்னாத்து ஆத்தரபட (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே?) மாட்டேன்னு எழுதி வச்சிருக்கே//Anani, avar thittavillai,ramakrishnanaipparri oru thakaval sonnaar,romba decenttaa.aanaa neenga?

  ReplyDelete