31 அக்டோபர், 2011

கார்ட் கூட கற்பு மாதிரி!

சில நாட்களாக செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். கூரியர் பாய்ஸ் உதவியோடு கிரெடிட்/டெபிட் கார்ட் தகவல்களை திருடும் கும்பலை கண்டுபிடித்து போலிஸார் முட்டிக்கு முட்டி தட்டிவருகிறார்கள். இந்த நூதன மோசடி நம்மூருக்குதான் புதுசு. டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தனியொருவனால் நிகழ்த்தப்பட்டு, நாலு கோடி ரூபாய்க்கும் மேலாக ஆட்டை போடப்பட்டது.


குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘சைபர் க்ரைம்’ தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது, அதில் வெளிவந்த ஒரு அத்தியாயம் இது. பிற்பாடு இத்தொடர் கிழக்குப் பதிப்பகத்தில் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தை இணையம் மூலமாக வாங்க : https://www.nhm.in/shop/978-81-8493-266-9.html


இளமை ஊஞ்சலாடும் இருபதுகளின் மத்தியில் தான் ரவிக்குமாருக்கு வயசு இருக்கும். ஜம்மென்று உடுத்திக் கொண்டு அசெண்ட் காரில் ஏறி எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருப்பான். ஒரு நாள் அவன் அணிந்த ஆடையை இன்னொரு முறை அணிவானா என்பது சந்தேகம். ரவி வருவதற்கு முன்பே தூரத்திலிருந்து பாரின் பர்ப்யூம் வாசம் ஆளை தூக்கும். வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஹோம் தியேட்டரை ஹைடெசிபலில் அலற விடுவான். ஒவ்வொரு அறையிலும் ஒரு எல்.சி.டி. டிவி. கழுத்தில், கையில், விரல்களில் தங்கமயம். மொத்தத்தில் டெல்லிக்கே ராஜா என்பது போல சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

இத்தனைக்கும் அவன் என்ன வேலை செய்துகொண்டிருந்தான் என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது. கேட்பவர்களிடம் எல்லாம் சிட்டி பாங்க், பார்க்ளேஸ் பாங்க் போன்ற சில பெரிய வங்கிகளில் அதிகாரியாகப் பணியாற்றியதாக சொல்வான். ‘வேலையை ரிசைன் பண்ணிட்டு பைனான்ஸ் கன்சல்டண்டா ஒர்க் பண்ணுறேன். நல்ல சம்பாத்தியம் வருது’ என்றும் சொல்லி வைத்திருந்தான்.

ஒருநாள் அவனுடைய கழுத்தா மட்டையில் நாலு போடு போட்டு போலீஸ் இழுத்துக் கொண்டு போய், ஜீப்பில் ஏற்றியபோது தான் தெருவாசிகளுக்கு தெரிந்தது. ‘பையன் ஏதோ ஏடாகூடமா பிசினஸ் செஞ்சிருக்கான்!’. ஏதோ ஓரிரு லட்ச திருட்டு என்று நினைத்து ரவியை விசாரித்த டெல்லி போலீஸ் அசந்துப் போனது. யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் சுருட்டியிருக்கிறான். ‘கில்லாடிப் பய புள்ளடா நீ!’ என்று மனசுக்குள் பாராட்டிவிட்டு கோர்ட்டு முன்பாக ரவிக்குமாரை நிறுத்தியிருக்கிறார்கள். ரவியிடம் ஏமாந்தவர்கள் ஒவ்வொருவராக டெல்லி போலிஸை அணுகி புகார் கொடுத்துவிட்டு ஒப்பாரி வைத்து செல்கிறார்கள்.

அப்படி என்னதான் செய்து இந்த வயதிலேயே தனிமனிதனாக நாலு கோடி ரூபாய் சம்பாதித்திருப்பான்? கத்தியை காட்டி வழிப்பறி செய்தால் கூட ஐநூறு, ஆயிரம் தான் ஒரு தபா ஆட்டையில் இறங்கினால் தேறும். கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டினால் ஒழிய இவ்வளவு லம்பாக கிடைக்காது. ரவி கத்தியை தீட்டுவதற்குப் பதிலாக தன்னுடைய புத்தியைத் தீட்டினான்.

இந்த மோசடி போலிஸுக்கு புதுசு. ஏன் பிரபல திருட்டுப் பயல்களுக்கு கூட புத்தம்புதுசு. ‘ச்சே நமக்கு இது தோணாமப் போச்சே?’ என்று கேப்மாறிப் பயல்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். இந்தியாவே இதுவரை கண்டிராத நூதனவகை மோசடி இது.

ஏ.டி.எம். கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்களில் ஏதாவது ஒன்றை கட்டாயம் உபயோகித்திருப்பீர்கள். இந்த கார்ட் வங்கியிலிருந்து உங்கள் கைக்கு எப்படி வந்தது என்று நினைவிருக்கிறதா? நிச்சயமாக வங்கி ஊழியர் உங்களிடம் நேரில் கையளித்திருக்க மாட்டார். வங்கியிலிருந்து கூரியர் மூலமாக உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து தனியார் வெளிநாட்டு வங்கிகள் வரை கூரியர் மூலமாக கார்டினை வீட்டுக்கு அனுப்புவதுதான் இன்றுவரை நடைமுறை.

சில வங்கிகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்றிருந்த ரவிக்குமாருக்கு இந்த கூரியர் மேட்டர் ரொம்பவும் பிடித்துப் போனது. திடீரென்று ஏதாவது ஏரியாவில் இருக்கும் கூரியர் ஆபிஸுக்கு போவான். தன்னை ஒரு வங்கி அதிகாரியாக கம்பீரமாக அறிமுகப்படுத்திக் கொள்வான்.
“இந்த ஏரியாவில் என்னோட கஸ்டமர்களுக்கு வரவேண்டிய கிரெடிட் கார்டெல்லாம் ஒழுங்கா வந்துசேரலைன்னு கம்ப்ளையண்ட் வந்திருக்கு. யார் யாருக்கெல்லாம் கார்ட் டெலிவரி பண்ணிங்கன்னு லிஸ்ட் காமிங்க. இல்லேன்னா போலிஸ்லே கம்ப்ளையண்ட் பண்ணி முட்டிக்குக்கு முட்டி தட்டிடுவேன்” என்று டெலிவரி பையன்களை மிரட்டலாக ஏய்ப்பான். டெலிவரி பயல்கள் பயந்துப் போய் கிரெடிட் / டெபிட் / ஏடிஎம் கார்ட்கள் டெலிவரி செய்த அட்ரஸ்களை எல்லாம் அட்சரம் பிசகாமல் ஒப்பித்து விடுவார்கள். எல்லா அட்ரஸையும் அய்யா ஒரு டயரியில் நோட் செய்துக் கொள்வார்.

அடுத்ததாக கோட்டு, டை காஸ்ட்யூமில் ஹூண்டாய் ஆக்சண்ட் கார் எடுத்துக் கொண்டு கார்ட் டெலிவரி ஆன வீடுகளுக்குப் போவார். “நான் பேங்கோட கஸ்டமர் சர்வீஸ்லே இருந்து வர்றேன். உங்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டெலிவரி ஆன கார்ட்லே கோட் ப்ராப்ளம் இருக்கு. சரியா ஒர்க் ஆகாது. வேற கார்ட் மாற்றி இரண்டு மணி நேரத்துலே எடுத்துக்கிட்டு வர்றேன்!” வெள்ளைக்காரன் கூட இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசமாட்டான். கார்ட் வந்த கவரோடு வாங்கிக் கொள்வான் ரவி. சிலரிடம் பின்நம்பர் கூட கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறான். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் நம் இந்திய மனப்பான்மை மோசடி ஆசாமிகளிடம் மட்டும் கன்னா பின்னாவென்று ஏமாந்துத் தொலைக்கிறது.

வங்கி அதிகாரியே வீட்டுக்கு வந்து கஸ்டமர் சர்வீஸ் செய்கிறாரே என்று புளங்காங்கிதப்பட்டு, எதுவும் யோசிக்காமல் கார்டை திக்கைத்தனமாக ரவியிடம் கொடுத்துவிடுவார்கள். அடுத்த இரண்டு நாட்களில் அந்த கார்ட் கன்னாபின்னாவென்று டெல்லி ஷாப்பிங் மால்களில் பல லட்சம் ரூபாய்களுக்கு தேய்க்கப்பட்டிருக்கும். ஏடிஎம்களில் அதிகபட்ச பணமும் எடுக்கப்பட்டிருக்கும். இரண்டு மணி நேரத்தில் மாற்றுக் கார்ட் வரும் என்று நம்பியவர்களுக்கு நாமம்தான் மிச்சம். அடுத்த மாதம் செய்யாத செலவுக்கு ஆயிரக்கணக்கில் வங்கியிடமிருந்து பில் வரும். இதுபோல ஏமாந்தவர்கள் கடந்த ஒரு வருட காலமாக போலிஸிடம் ஆங்காங்கே புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

குப்தா என்பவர் முன்ஜாக்கிரதை முத்தண்ணா. புதியதாக வங்கிக் கணக்கு தொடங்கிய உடனேயே வங்கிப் பரிமாற்றங்கள் அவ்வப்போது தன்னுடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் வகையில் காசு கட்டி எஸ்.எம்.எஸ். சர்வீஸ் செட் செய்து வைத்திருந்தார். அந்த வங்கியிலிருந்து அவருக்கு ஒரு கிரெடிட் கார்ட் வந்தது. கிரெடிட் கார்ட் வந்த இரண்டு மணி நேரத்தில் ஹூண்டாய் ஆக்செண்ட் காரில் நம்ம ரவியும் வந்தார்.

அதே டயலாக்.

“நான் பேங்கோட கஸ்டமர் சர்வீஸ்லே இருந்து வர்றேன். உங்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டெலிவரி ஆன கார்ட்லே கோட் ப்ராப்ளம் இருக்கு. சரியா ஒர்க் ஆகாது. வேற கார்ட் மாற்றி இரண்டு மணி நேரத்துலே எடுத்துக்கிட்டு வர்றேன்!”

முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்தாலும் ரவியின் டிப்டாப் தோற்றத்தில் குப்தாவும் ஏமாந்துவிட்டார். கார்ட், ரசீது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் ரவியிடம் ஒப்படைத்தார். இரண்டு மணி நேரத்தில் மாற்று கார்ட் வரும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். வடிவில் சுனாமி வ்ந்தது. “உங்கள் கார்டில் நாற்பதாயிரம் ரூபாய் இன்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் செலவழிக்கப்பட்டிருக்கிறது”

“ஆஹா மாப்பு. வெச்சிட்டான்யா ஆப்பு” என்று அலறிவிட்ட குப்தா, சில நிமிடங்களில் பதட்டம் குறைந்து என்ன ஆகியிருக்கும் என்று பகுத்தறிவோடு யோசித்துப் புரிந்து கொண்டார். இது கூரியர் டெலிவரி செய்த பயலின் வேலையாகவே இருக்கும் என்று சந்தேகம் கொண்டு போலிஸில் புகார் செய்தார். ஒரு வருடமாக வலைவீசி கிரெடிட் கார்ட் கில்லாடியை தேடிக்கொண்டிருந்த போலிஸுக்கு குப்தா கூறிய இந்த ‘கூரியர் ரூட்டு’ புது ரூட்டை திறந்து வைத்தது. ஏற்கனவே புகார் செய்தவர்களையும் மீண்டும் விசாரித்து சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனங்களை அதட்டி, மிரட்டியதில் ரவியின் பக்கா மாஸ்டர் ப்ளான் தெரியவந்தது.

எலிக்கு மசால் வடை வைப்பது மாதிரி பொறியாக, அடுத்தடுத்து டெலிவரிக்கு தயாராக இருந்த கிரெடிட் கார்ட்களை வைத்து, ரவி என்ற பெருச்சாளியை டெல்லி போலீஸார் கையும், கார்டுமாக பிடித்தார்கள். பிடிபட்ட ரவியிடம் பல பேரின் கிரெடிட் கார்ட்கள், பல்வேறு வங்கிகளில் வேலை பார்ப்பதாக நிரூபிக்க ஏழு வங்கிகளின் அடையாள அட்டை மற்றும் போலி பிளாஸ்டிக் ஏடிஎம் அட்டைகள் என பலவும் கைப்பற்றப்பட்டன.

ரவியைப் போன்ற நூதன மோசடி ஆசாமிகளிடம் ஏமாறாமல் தப்பிப்பது மிகப்பெரிய விஷயம். இவனிடம் ஏமாந்தவர்கள் அனைவருமே படித்தவர்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள். இவர்களின் நிலைமையே இப்படியென்றால் படிக்காத கிராமத்து மனிதர்களிடம் எவ்வளவு மோசடி செய்யமுடியும்? மொபைல் போன் மாதிரி ஏடிஎம் / டெபிட் கார்ட்களும், கிரெடிட் கார்ட்களும் இன்றைய தேதியில் மானாவரியாக எல்லோருக்கும் விசிட்டிங் கார்ட் மாதிரி வங்கிகளால் அள்ளி அள்ளி வழங்கப்படுகின்றன.

இந்த அட்டைகளையும், அதற்கான ரகசியக் குறியீட்டு எண்ணையும் அந்தரங்கத்தை காப்பது மாதிரி எண்ணிப் பாதுகாக்க வேண்டும். “இந்தா கார்ட். தெரு முனையிலே இருக்கிற ஏடிஎம்முலே நாலாயிரம் எடுத்தாந்துடு. பின்நம்பர் தெரியுமில்லே? ஜீரோ ஜீரோ ஜீரோ ஏழு” என்று பொது இடத்தில் கார்டை வைத்து கத்துபவரை மாதிரி முட்டாள் வேறு யாருமில்லை.

இந்தப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கார்டு உபயோகிக்கும் அவரவருக்கே நிச்சயம் தெரியும். தொடர் எழுதி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் ‘கார்டு பத்திரம். அதைவிட பின்நம்பர் ரொம்ப பத்திரம்!’. அசால்டா இருந்துக்காதீங்க. அவ்ளோதாம்பா.

நேரடிக் குற்றங்களை விட இண்டர்நெட் மூலமாக கார்டுகளை வைத்து ரம்மி மாதிரி விளையாடும் சைபர் குற்றங்கள் படா மோசம். மின்வர்த்தகம் இப்போது இந்தியாவில் பெரியளவில் வளர்ந்து வருகிறது. எல்லா மின்வர்த்தக தளங்களும் பாதுகாப்பானவையா என்று கேட்டால் இல்லையென்ற பதிலே வரும். கிரெடிட் / டெபிட் கார்டுகள் மூலமாக இண்டர்நெட்டில் ஏதாவது பொருள் வாங்கவோ, சினிமா டிக்கெட் புக் செய்யவோ நினைத்தால் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல், கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் நம்பர் என்று எல்லா எழவுகளையும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. நாம் இந்த தகவல்களை கொடுக்கும் இணையத்தளம் நம்பகத்தன்மை இல்லாததாக இருந்தால் நம் கதி அதோகதிதான்.

முடிந்தவரை இண்டர்நெட்டில் கார்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு வழியே இல்லை பயன்படுத்தி தொலைத்தே ஆகவேண்டும் என்றாலும் தகவல்களை தரும் படிவத்தில் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் (Save password மாதிரி) ஏதாவது இருந்தால் அதை மறக்காமல் முடக்கி விடுங்கள். மறந்து விடாமல் இருக்க கிரெடிட் கார்ட் எண் மற்றும் இண்டர்நெட் பாஸ்வேர்ட் போன்றவற்றை மெயிலில் வைத்துக் கொள்ளும் வழக்கம் சிலருக்கு உண்டு. அவ்வளவு ஞாபகமறதி இருப்பவர்கள் கிரெடிட் கார்டு மாதிரியான ஆபத்தான வஸ்துவை வைத்திருக்கவே தகுதியற்றவர்கள்.

யார் கேட்டாலும் கார்ட்களின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்துவிடாதீர்கள். கார்டை ஜெராக்ஸ் எடுக்கும் வேலையே வேண்டாம். உங்கள் கார்ட் எண்ணும் கார்டுக்கு பின்னால் இருக்கும் சி.வி.வி. (card verification value) எண்ணும் யாருக்கேனும் தெரிந்தால் போதும். உங்கள் அக்கவுண்டில் செமையாக கும்மு கும்முவென்று கும்மி விடலாம்.

“இந்த லிங்கை க்ளிக்குங்க. ஐநூறு ரூபாய் ப்ரீ” என்று மெயில் வந்தால் ஐநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஆப்பு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வங்கிகளிலிருந்து வரும் மெயில்கள் இதுபோல ப்ரீ ஆபர் எல்லாம் கொடுக்காது. எதுவாக இருந்தாலும் அவர்களது சைட்டுக்கே நேரடியாக வரச்சொல்லி விடுவார்கள். மெயில்களில் கண்டதை க்ளிக்கும் பழக்கம் இருந்தால் அதை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

போன் மூலமாக உங்கள் கிரெடிட் கார்ட் பற்றி யாராவது வங்கிப் பெயர் சொல்லிப் பேசினாலும் கூட உஷாராக இருங்கள். ஒன்றுக்கு இரண்டாக விசாரித்து விட்டே பேசுங்கள். வங்கி ஊழியராகவே கூட இருக்கும் பட்சத்தில் உங்கள் பின் நம்பர், சிவிவி நம்பர் போன்றவற்றை சொல்ல வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.

மாதாமாதம் கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி ஸ்டேட்மெண்ட் சரியாக வருகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்டேட்மெண்டில் நீங்கள் செய்யாத செலவு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று பார்த்து உறுதி செய்துக் கொள்வது மிகவும் அவசியம். கார்ட் தொலைந்துப் போகும் பட்சத்தில் உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை முடக்குதல் முக்கியமானது.

கார்ட் கூட கற்பு மாதிரி. கவனமாக இருந்தால் கவலைகள் இல்லை.

22 கருத்துகள்:

 1. பயனுள்ள உருப்படியான பதிவு. நன்றி, பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 2. கார்ட் தொலைந்துப் போகும் பட்சத்தில் உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை முடக்குதல் முக்கியமானது.

  கார்ட் கூட கற்பு மாதிரி. கவனமாக இருந்தால் கவலைகள் இல்லை./

  எச்சரிக்கைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள உருப்படியான பதிவு. நன்றி, பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 4. அருமையான தகவல்கள்.எப்படி எல்லாம் ஏமாந்து தொலைக்க வேண்டியிருக்கு.

  பதிலளிநீக்கு
 5. மிகவும் பயனுள்ள ஒரு பதிவு. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. இணையத்தில் பணம் செலுத்தவோ, வாங்கவோ இருந்தால் அந்த தளத்தின் முகவரிக்கு முன்னால் https:// என்று ஆரம்பிக்கிறதா என்று ஆராய்ச்சி செய்க...

  Facebook Frienslist Free Caricature Visit: Free caricature

  பதிலளிநீக்கு
 7. உணவகத்துல சாப்பிட்டு கடனட்டை குடுக்கும் போது அழகா லவட்டிடலாமே. அப்ப என்ன பண்ண?

  பதிலளிநீக்கு
 8. credit/debit card ungal kan ethiril swipe pannuvathaga irunthal mattume card kodukkavum. petrol bunk, hotels etc avoid pannuvathu nallathu

  பதிலளிநீக்கு
 9. http://nnvijaytv.blogspot.com/
  An opportunity for you to express your views on the "நீயா நானா?" program on vijay TV

  பதிலளிநீக்கு
 10. தமிழ், டெக்னாலஜி இரண்டிலும் சும்மா பூந்து விளையாடுரீங்கண்ணா! வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. **
  முடிந்தவரை இண்டர்நெட்டில் கார்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு வழியே இல்லை பயன்படுத்தி தொலைத்தே ஆகவேண்டும் என்றாலும் தகவல்களை தரும் படிவத்தில் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் (Save password மாதிரி) ஏதாவது இருந்தால் அதை மறக்காமல் முடக்கி விடுங்கள்.
  **

  தற்போது CVV எண் போக visa-ம், mastercard-ம் தங்களுக்கென்று ஒரு கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) வைத்திருக்கிறார்கள். அதையும் தாண்டினால்தான் இணைய ட்ரான்ஸாக்ஷன் முழுமையடையும்.

  இந்தக் கடவுச்சொல்லை யாருக்கும், எக்காரணத்திற்காகவும் வெளியில் கூற வேண்டியதில்லை.

  பதிலளிநீக்கு
 12. **
  உணவகத்துல சாப்பிட்டு கடனட்டை குடுக்கும் போது அழகா லவட்டிடலாமே. அப்ப என்ன பண்ண?
  **

  கடனட்டை = டெபிட் கார்டா இல்ல க்ரெடிட் கார்டா?

  ஒரே ட்ரான்ஸாக்ஷனில் லவட்டியிருந்தால் கையெழுத்துப் போடும்போதே செக் செய்து விடலாமே?

  இன்னொரு (போலியான) ட்ரான்ஸாக்ஷனில் உங்கள் கார்டைத் தேய்த்திருந்தால் உங்கள் கையெழுத்திட்ட ரசீதைக் காட்டுமாறு கார்டு கம்பெனி கேட்டாலே உணவகத்தின் குட்டு வெளிப்படுமல்லவா?

  பதிலளிநீக்கு
 13. credit/debit card fraud pathi solirunkinga.

  Netbanking fraud enaku vandha email!

  HDFC bank la account illa but net banking password thirudura group ta irundhu oru msg vandhuchu.

  This email was sent by the HDFC bank server to verify your e-mail address

  first na andha link enga correct ah nu check pane. full details inga link paniruke
  Net Banking Email fraud

  Bank la irundhu endha mail vandhalu correct ah nu check panunga! "password ah email la share panathinga"


  (. . ✫ . . Nice Blog !! Keep it up.. :)
  `.¸¸ . ✶*¨*. ¸ .✫*¨*.¸¸.✶l
  90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here

  பதிலளிநீக்கு
 14. You need to provide your account details for verification purpose only when you call bank or credit card company. If they are calling you , you dont need to provide any details even if it is legitimate call . Set SMS Alerts for your Account and Credit Card Transactions , alerts will come within 2 - 5 secs .

  பதிலளிநீக்கு
 15. அருமையான பயனுள்ள பதிவு.
  கிரிடெட் / டெபிட் அட்டைகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பதிவு. இன்றேல் எப்படி ஏமாற வேண்டியதிருக்கும் என்பதற்கான விழிப்புணர்வு பதிவு.
  எனது முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா.

  பதிலளிநீக்கு
 16. யுவா, save password option எல்லாம் கிரெடிட் கார்ட பொறுத்தவரை யூஸ் பண்றது, not advisable. ஏன்னா, Cybercrime பொறுத்தவரை தகவல திருடணும்னு முடிவு பண்ணிட்ட இப்படித்தான் திருடணுனு இல்ல, எப்படியும் திருடலாம். ஒரு சின்ன Trojan உங்க கணினில இறங்குனா போதும், உங்க formல save ஆகி இருக்க எல்லா தகவலும் நொடில கடத்தப்படும்.

  So, using save form data is a vulnerability and a risk too. Please do not advise the same to the readers

  பதிலளிநீக்கு
 17. பஜார்ல உஷாரா இல்லாட்டி நிஜார உருவீடுவாங்க.
  நன்றி யுவா

  பதிலளிநீக்கு
 18. migavum ubayogamaana pathivu ithu (www.astrologicalscience.blogspot.com)

  பதிலளிநீக்கு