20 அக்டோபர், 2011

பாம்பு புகுந்த காதை

“நான் ஆளான தாமரை” ரீமிக்ஸ் டூயட்டுக்கு ஹன்சிகா மோத்வானியோடு வளைந்து வளைந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தேன். இடையில் வந்த இசைக்கு வாகாக, தோளை குலுக்கியபடியே என்னுடைய உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, ஹன்சிகாவின் உதடுகளை நோக்கி வேட்கையோடு நெருங்க...

“எழுந்திருங்க. சீக்கிரம் எழுந்திருங்க” தோளை குலுக்கி எழுப்பினாள் இளவரசி. யாரோ ரிமோட்டை ஸ்விட்ச் ஆஃப் செய்தது மாதிரி கனவும் பட்டென்று ஆஃப் ஆனது.

இவளுக்கு இதே வேலையாகப் போகிறது. ஏழு மணி ஆனால் போதும். ‘எழுந்திரு அஞ்சலி, எழுந்திரு’ டைப்பில் அலாரம் அடிக்க ஆரம்பித்து விடுவாள். கண்விழித்து, இமைகளை கசக்கி உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தேன். தலையணைக்கு அடியில் இருந்த செல்போனை எடுத்து நேரம் பார்த்தபோது, ஏழு அடிக்க ஐந்து நிமிடம் பாக்கியிருந்தது. ‘அட, இன்று ஞாயிற்றுக்கிழமை’

“சனியனே. ஞாயித்துக்கிழமை அதுவுமா ஏண்டி காலங்காத்தாலே உயிரை எடுக்கறே?”

“அய்யோ. உங்களாண்டை பெரிய ரோதனையாப் போச்சி. நம்ம ஹால்லே சோபாவுக்கு அடியிலே பெரிய பாம்பு ஒண்ணு போச்சி. சீக்கிரமா எழுந்து வாங்க” அலறினாள்.

‘சட்’டென்று அடிவயிற்றுக்குள் எழுந்த அச்சப்பந்து தலைக்கு ஏறியது. வாரி சுருட்டி எழுந்தேன். கைலியை சரி செய்துக் கொண்டேன். ஹாலுக்கு ஓடினேன். தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தேன்.

அதற்குள்ளாக விஷயம் அறிந்த பக்கத்து பிளாட் மாமா, வினோத உணர்ச்சிகள் தாங்கிய முகத்தோடு நின்றிருந்தார். அவரிடம் குழந்தையை கொடுத்தேன். தோளில் சாய்த்துக் கொண்டார். குழந்தை லேசாக வாய் கோணி சிணுங்கி, மீண்டும் உறங்கத் தொடங்கினாள்.

தலைக்குள் பூச்சி பறந்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்படி ரிலாக்ஸாக ரியாக்ட் செய்யவேண்டுமென்று மனநலப் பயிற்சிகளில் கற்றிருக்கிறேன். இருந்தாலும் பதட்டத்தை தணிக்க முடியவில்லை. லேசாக கைவிரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

இளவரசியும், அம்மாவும் கலவரத்தோடு வாசலுக்கு வந்தார்கள். “அப்பவே சொன்னேன். திருப்பதி பிரார்த்தனை பாக்கியிருக்குன்னு...” அம்மா புலம்ப ஆரம்பிக்க, கைகாட்டி நிறுத்தி கேட்டேன்.

“யாரு பாம்பை பார்த்தது? என்ன ஏதுன்னு தெளிவா சொல்லுங்க!”

“நான் தாங்க பார்த்தேன். வாசல்லே பால் பாக்கெட்டை எடுத்துட்டு திரும்புறப்போ, டிவி ஸ்டேண்டுக்கு அடியிலிருந்து கருப்பா, பெருசா நெளிஞ்சி, நெளிஞ்சி போய் சோபாவுக்கு அடியிலே புகுந்திடிச்சி!”

இளவரசி சொல்வதை முழுமையாக நம்பவும் முடியாது. அவள் மாயயதார்த்தவாத உலகில் வாழ்பவள். நேற்று சன் டிவியில் மதியம் ‘நீயா’ படம் பார்த்ததாக வேறு, முந்தைய பின்னிரவில் காதில் கிசுகிசுப்பாக சொல்லியிருந்தாள். ‘ரொமான்ஸ்’ மூடில் இருக்கும்போது சிலநேரங்களில் இப்படித்தான் அன்று பார்த்த மெகாசீரியல், மொன்னைப் படங்களைப் பற்றி ஏதாவது வளவளவென்று பேசி எரிச்சலைக் கிளப்புவாள்.

ஒருவேளை இவள் நிஜமாகவே பாம்பை பார்த்திருந்தால்?

தவழும் குழந்தை இருக்கும் வீடு. என் அச்சத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது. கருப்புப் பாம்பு என்கிறாள். கருநாகமாக இருக்குமோ?

கறையான் புற்றெடுக்க, கருநாகம் வந்து குடியேறும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ பழமொழிகள் நினைவுக்கு வந்தது. எல்லா பாம்புக்கு விஷமில்லை என்று என்னுடைய அறிவியல்பூர்வமான மூளை சொல்கிறது. ஆனால் கருநாகத்துக்கு விஷம் இருப்பது நிச்சயம். அதுவாக கடிக்காது. அதை நோண்டினால் ஒரே போடாக போட்டுவிடுமாம். டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன். பாம்பை கையில் பிடித்து விளையாடும் வயதில்தான் இருக்கிறாள் குழந்தை. தெரியாத்தனமாக அவள் விளையாடி, ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விட்டால்..? ச்சே.. என்னென்னவோ கற்பனை ஏடாகூடமாக ஓடுகிறது.

அதிருக்கட்டும் இங்கே போய் பாம்பு எப்படி வரும், அது வன விலங்கு அல்லவா? ஹோம் லோன் போட்டு, சிட்டிக்கு நட்ட நடுவில், ஐம்பது லட்ச ரூபாய்க்கு டீலக்ஸ் ஃப்ளாட் வாங்கி, லம்பாக மாதாமாதம் வங்கிக்கு தவணை கட்டிக் கொண்டிருக்கிறேன். பாம்பாவது, கீம்பாவது. ஏதாவது கயிறு அல்லது நாடாவைப் பார்த்துத் தொலைத்திருப்பாள். லாஜிக்கலாக யோசித்தேன்.

“ஏண்டி லூசு. நாலாவது மாடிக்கு பாம்பு எப்படி வரும்? படிக்கட்டு ஏறியா, இல்லைன்னா லிஃப்ட் வழியாவா? காலங்காத்தாலே உசுரை எடுத்துக்கிட்டு. போய் வேலையைப் பாருடீ...”

“அட ஆக்கங்கெட்ட மனுஷா. நெசமாத்தான் சொல்றேன். கதவாண்ட இருந்து வீட்டுக்குள்ளே பாம்பு வளைஞ்சி, நெளிஞ்சு நுழையறதை என் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தேன்” – இப்படித்தான் அவளுடைய நேர்மையை கேள்விக்கு உள்ளாக்கினால், பேச்சில் மரியாதையை குறைத்து விடுகிறாள்.

“அய்யோ, மாரியாத்தா. கடைசியிலே என் வூட்டுக்குள்ளேயே வந்துட்டியா? ஆடி மாசம் கூழு ஊத்தணும், கூழு ஊத்தணும்னு சொன்னா இந்த படுபாவிபய மவன் எங்கே கேக்குறான்? அதை நெனைவு படுத்தத்தான் வந்திருக்கியா?” அம்மாவின் புலம்பலும் எல்லை மீறத் தொடங்கியது.

கோவணம் உடுத்தும் ஊரில் வைகிங் உள்ளாடை அணிபவன் பைத்தியக்காரன். வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே போதும். வீதி முக்கில் இருக்கும் மாரியம்மன் கோயில் பாம்பு புற்றுக்கு ரெகுலராக பால் பாக்கெட் வாங்கி ஊற்றும் மனைவி. மாதம் ஒருமுறை சிகப்புச்சேலை கட்டி மருவத்தூருக்கு நடைப்பயணம் போகும் அம்மா. இப்படிப்பட்ட பக்தி பரவசக் குடும்பச் சூழலில் நாத்திகனாக வாழும் கொடுமை யாருக்கும் வாய்க்கவே கூடாது. துரதிருஷ்டவசமாக எனக்கு வாய்த்திருக்கிறது. ஊருக்கே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முடிந்தாலும், வீட்டுக்குள் தலைவிரித்து ஆடும் ஆன்மீக ஏகாதிபத்தியத்துக்கு அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது.

எனக்கென்னவோ அம்மாவுக்கு ‘அருள்’ வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. உண்மையில் அருள் வந்தது மாதிரி ஆடிக்கொண்டிருந்தவள் இளவரசிதான். ஏனெனில் உள்ளே நுழைந்து விட்டதாக கூறப்படும் பாம்பை பார்த்த பெருமை அவளுக்குதானே கிடைத்தது?

“நிஜமாவே பாம்பை பார்த்தியா இளவரசி?” இம்முறை பரிதாபமாகக் கேட்டேன்.

“அவ என்னடா பொய்யா சொல்லப் போறா? முன்னாடி நாம இருந்த தாம்பரம் வூட்டுலே எத்தனை வாட்டி மனைப்பாம்பை பார்த்திருப்பேன் தெரியுமா? உன்னை மாதிரியேதான் உங்கப்பனும் லூசு. சாவுற வரைக்கும் அந்தாளும் நம்பவேயில்லை” இம்முறை அம்மாதான் நாகப்பாம்பு மாதிரி சீறினாள்.

மனைப்பாம்பு என்பது ஒரு நம்பிக்கை. அதாவது பாம்பினை வணங்கும் பாம்பு பக்தைகள் வீட்டினைக் காக்க, அவர்களது ஒவ்வொரு வீட்டுக்கும் காவலாக ஒரு நாகப்பாம்பு இருக்குமாம். அது அந்த வீட்டின் சுத்த பத்தமான பாம்பு பக்தையின் கண்ணுக்கு மட்டும் அவ்வப்போது தட்டுப்படுமாம். இம்மாதிரி மூடநம்பிக்கைகள் வளர காரணமான, பாம்பை வைத்து படமெடுத்து சம்பாதிக்கும் தமிழ் இயக்குனர்களை தேடிப்பிடித்து உதைக்க வேண்டும்.

ஒருவழியாக என் வீட்டுக்குள் பாம்பு நுழைந்துவிட்டதாக இப்போது நானும் நம்பத் தொடங்கிவிட்டேன். சோபாவுக்கு அடியில் பாம்பு இருப்பதாக இளவரசியின் வெர்ஷன். எப்படி அதை துரத்துவது அல்லது கொல்வது?

இதற்கிடையே ‘விஷயத்தை’ கேள்விப்பட்டு, வீட்டு வாசலில் பெரிய கூட்டம் கூடிவிட்டது.

“என்ன சார், மலைப்பாம்பு உங்க வீட்டுக்குள்ளே புகுந்துவிட்டதா பேசிக்கறாங்களே?” பத்திரிகைக்காரன் பேட்டி எடுப்பது மாதிரி கேள்வி கேட்டான் பி-2 ஃப்ளாட் காலேஜ் பையன்.

“சென்னையிலே ஏதுய்யா மலை?”

“படிக்கட்டெல்லாம் ஏறி வரணும்னாம், அது நிச்சயம் கொம்பேறி மூக்கனா தான் இருக்கணும் சார்” கிரவுண்ட் ஃப்ளோர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்த பெரியவர் டப்பென்று ஒரு போடு போட்டார்.

அவருடைய கருத்தால் உந்தப்பட்ட கூட்டம், பாம்பு பற்றிய பேரறிவு கொண்டவராக அவர் இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையில் மேற்கொண்டு தகவல்களைப் பெற அவரது முகத்தை ஏறிட்டார்கள். அவர் சாவகாசமாக ஆரம்பித்தார்.

“கொம்பேறி மூக்கன்னா தெரியுமில்லையா?”

“தியாகராஜன் படம். போன வாரம் கேடிவியிலே போட்டிருந்தான்” ஏதோ ஒரு அசடு பதில் சொன்னது.

“இல்லை. இது பாம்போட பேரு. புத்திசாலியான பாம்பு. சின்ன வயசுலே கிராமத்துலே இருந்தப்போ நிறைய பார்த்திருக்கேன். மரத்துலே சுளுவா ஏறும். இதை யாராவது கொல்ல முயற்சி பண்ணி, மிஸ் ஆயிடிச்சின்னு வெச்சிக்கோ.. கொல்ல நினைச்சவனை அடையாளம் வெச்சு எப்படியாவது போட்டுத் தள்ளிடும். அதுவுமில்லாமே சுடுகாட்டுக்குப் போயி தன்னாலே கொல்லப்பட்டவனோட உடம்பு முழுக்க எரியுதான்னு கன்ஃபார்மும் பண்ணிக்கும்” பெருசு கப்ஸாவாக அள்ளிவிட, கூட்டம் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாய் தலை ஆட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது. வேகமாக கீழிறங்கி செக்யூரிட்டியை பார்த்து எகிற ஆரம்பித்தேன்.

“யோவ் என் வீட்டுக்குள்ளே பாம்பு புகுந்திடிச்சாம். என்னத்தய்யா வேலை பார்க்குறீங்க?”

“சார்! மனுஷன் வந்தா, யாரு என்னன்னு விசாரிச்சி அனுப்பலாம். மேற்படி சமாச்சாரம் வர்றதுன்னா யாருக்கும் தெரியாமதான் சார் வந்திருக்கும். என்னையப் புடிச்சி ஏறி என்னா பிரயோசனம்?” அவனும் பதிலுக்கு தர்க்கரீதியாக எகிற, என்னிடம் பதில் ஏதுமில்லை.

இவனிடம் பேசியும் பிரயோசனமில்லை. அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். இப்படியும் ஒரு அவலச்சூழல் என்னை மாதிரி மிடில் க்ளாஸ் மாதவனுக்கு வந்து சேரவேண்டுமா? இதை எப்படி எதிர்கொள்வது? பகுத்தறிவோடு சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

இந்தச் சூழலை பெரியார் எப்படி எதிர்கொண்டிருப்பார்? அவர் வீட்டிலும் இதுமாதிரி பாம்பு வந்திருக்குமா? வந்திருந்தால் தடியெடுத்து அடித்திருப்பாரா அல்லது வேறு ஏதேனும் உபாயத்தை கையாண்டிருப்பாரா? சரி. பெரியாரிடம் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஜெயமோகனை வாசிக்க வேண்டும். அவர்தான் காடு என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். நிச்சயமாக பாம்பு வீட்டுக்குள் புகுந்தால், எப்படி சமாளிப்பது என்று இந்திய தத்துவ ஞானமரபின் படி ஏதேனும் வழியை சொல்லியிருப்பார்.

இப்படியே சில நிமிடங்கள் முட்டாள்த்தனமாக யோசித்தேன். இந்தச் சாதாரணப் பிரச்சினையைப் போய், பெரிய சமூகப் பிரச்சினையாக விரித்து சிந்திக்கும் என் மூளையை நானே நொந்துக் கொண்டேன்.

அபார்ட்மெண்டில் இருக்கும் வீரதீர இளைஞர்களை கூட்டி, ஒரு தனிப்படை அமைத்து பாம்பினை வெளியேற்றுவதுதான் சரியென்ற முடிவுக்கு வந்தேன். முதலில் அபார்ட்மெண்ட் செக்ரட்டரியை பிடிக்க வேண்டும். அவர் மூலமாகதான் இளைஞர்களை அழைக்க வேண்டும். நேராக ‘பி’ பிலாக்கில் இருக்கும் அவரது ஃப்ளாட்டுக்குப் போனேன்.

“சார்! வீட்டுலே சின்ன ப்ராப்ளம்?”

“வீடே சின்னது. அதுக்குள்ளேயும் ஒரு சின்ன ப்ராப்ளமா? புருஷன் – பொண்டாட்டின்னா அப்பப்போ பிரச்சினை வரத்தான்யா செய்யும். இதுக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ணுறதா செக்ரட்ரியோட வேலை?” பெரியதாக ஜோக் அடித்துவிட்டதாக நினைத்து, தன் மொக்கை ஜோக்குக்கு அவரே குலுங்கி, குலுங்கிச் சிரித்தார்.

பல் கூட விளக்காமல் ஞாயிற்றுக்கிழமை காலையில் அலைந்துக் கொண்டிருக்கும் என்னுடைய நிலைமையை நினைத்து எனக்கே சுயப்பச்சாதாபம் ஏற்பட்டது. இப்படி ஒரு தேங்காய் மண்டையோடு கூடிய மாங்காய் மண்டையன் எங்களுக்கு செக்ரட்டரியாக வந்து வாய்த்ததற்கு போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ?

பின்னர் விஷயத்தை சுருக்கமாக கூறினேன். அவசரமாக அவரது புராதன டயரியை எடுத்து பக்கம், பக்கமாக புரட்டி “ஆஹா கிடைச்சிடுச்சி” என்றார்.

“என்ன சார் கிடைச்சிடிச்சி?”

“இது பாம்பு பண்ணை நம்பர். இங்கே போன் போட்டு விஷயத்தைச் சொல்லு. அவங்களே வந்து பாம்பை புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க”

போன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். “சார் எங்க வீட்டுக்குள்ளே பாம்பு புகுந்திடிச்சி. அடிக்கறதுக்கு மனசு வரலை. நீங்க வந்து புடிச்சிக்கிட்டு போயிடுவீங்களா?”

எதிர்முனையில் இருந்த வன அலுவலர் மிரட்டும் தொனியில் சொன்னார். “கதவை மூடிட்டு எல்லாரும் வெளியே வந்துடுங்க. பாம்பை கீம்பை யாராவது அடிச்சி கிடிச்சி கொன்னுட்டீங்கன்னு வெச்சிக்கோங்க. உங்க மேலே வனவிலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலே கேஸை போட்டு உள்ளே தள்ளிடுவோம். இன்னும் ஒன் அவர்லே எங்க ஆளு வந்துடுவாரு”

வீட்டு முன்பாக கூடியிருந்த கூட்டத்திடம் இந்த நற்செய்தியைச் சொன்னேன். எல்லோருமே பாம்பை பிடிக்க வரும் மாவீரனுக்காக ஆவலோடு காத்திருந்தோம்.

கொம்பேறி மூக்கன் பெருசு மறுபடியும் பாம்பு குறித்த தனது அறிவினை பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். “நல்ல ஐடியா பண்ணியிருக்கீங்க. அவங்க ஒரு மிஷின் மாதிரி வெச்சிருப்பாங்க. அதை எடுத்தாந்து வூட்டு நடுவுலே ஒரு ரவுண்டு போட்டு, வாசிக்க ஆரம்பிச்சாங்கன்னா, ஒரு ம்யூசிக் வரும். நம்ம ஏரியாவுலே இருக்குற எல்லா பாம்பும் அந்த ரவுண்டுக்குள்ளாற வந்து உட்காந்துடும்”“. ஏதோ இங்கிலீஷ் படத்தில் இப்படியொரு காட்சியை அவர் பார்த்திருந்தாராம்.

‘இயேசு வருகிறார்’ மாதிரி வன அலுவலர் வந்தார். முதுகில் ஒரு கருப்பு பேக் மாட்டியிருந்தார். அந்த பேக்குக்குள்தான் பெருசு சொன்ன இன்ஸ்ட்ரூமெண்ட் இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தோம். “எல்லாம் எடுத்துக்கிட்டு வந்திருக்கீங்க இல்லே?”

“என்ன எல்லாம் எடுத்துக்கிட்டு வந்திருக்கீங்க?” வடிவேலு பாணியில் திருப்பிக் கேட்டார்.

“இல்லை சார். பாம்பு புடிக்கிற இன்ஸ்ட்ரூமெண்ட்”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை. கையாலேதான் புடிக்கணும். உங்களை மாதிரிதான் நானும். பாம்பு கண்ணுக்கு அகப்பட்டா புடிப்பேன். இல்லேன்னா அவ்ளோதான்” ஒருமாதிரியாக வயிற்றுவலிக்காரர் மாதிரியே பேசினார்.

கதவை மெதுவாக திறந்தார்.

“பாம்பு எவ்ளோ பெருசு?”

பூவை முழம் போடுவது மாதிரி, ரெண்டு மூணு முழம் போட்டுக் காட்டினாள் இளவரசி.

“என்னா கலரு?”

“நாகப்பளம் கலரு”

“சரியா டீடெயில் சொல்லணும். ஏன்னா மூணு, நாலு அடி சைஸு இருந்தாதான் பாம்பு படியெல்லாம் ஏறும். சின்ன பாம்புங்க சமதளத்துலேதான் உலாவும்” ஹாலில் அங்குமிங்குமாக மெதுவாக பார்வையை ஓட்டியபடியே பேசினார்.

“சார்! இந்தியாவுலே நாகப்பாம்புக்கு மட்டும்தான் விஷமிருக்கு. மத்தப் பாம்புகளுக்கு விஷமில்லை. அதனாலே ஆபத்தில்லைன்னு புஸ்தகத்துலே படிச்சிருக்கேன். நெசம்தானே?” கேட்டேன்.

“அப்படில்லாம் இல்லே சார். நிறைய விஷப்பாம்பு வகையிருக்கு. உங்க வீட்டுக்குள்ளே வந்தது கூட விஷப்பாம்பா இருக்கலாம்” அந்த ஆள் காப்ரா கிளப்புவதிலேயே குறியாக இருந்தார்.

பாம்பு நுழைந்ததாக சொல்லப்பட்ட சோபாவை மெதுவாக நகர்த்தி அடியில் பார்த்தார். சோபாவை மூன்று பேர் உதவியோடு மெதுமெதுவாக மல்லாக்கப் போட்டு ஆராய்ந்தார். ஷெல்ப், பீரோ, டிவி ஸ்டேண்ட், கிச்சன் சிங்க் ஒரு இடம் விடவில்லை. எல்லா இடமும் தீவிரமாக ஆராய்ந்தார். பெட்ரூமில் இருந்த கப்போர்டுகளை கூட விட்டு வைக்கவில்லை. வீட்டையே தலைகீழாக இரண்டு, மூன்று மணி நேரத்தில் புரட்டிப் போட்டார்.

கடைசியாக கைவிரித்தார். “சார்! என் கண்ணுக்கு பாம்பு ஆப்புடலை. உங்க கண்ணுக்கு திரும்பவும் தெரிஞ்சதுன்னா என் செல்போனுக்கு போன் பண்ணுங்க... முடிஞ்சா உங்க ஒய்ஃப், அம்மா, குழந்தைகளை வேற யாராவது சொந்தக்காருங்க வீட்டுலே ஒரு வாரத்துக்கு தங்க வெச்சிடுங்க.. நீங்க மட்டும் வீட்டுலே இருங்க. சுவர் ஓரமாதான் பாம்பு பொதுவா போவும். ஒன் அவருக்கு ஒருமுறை செக் பண்ணிக்கிட்டே இருங்க. பார்த்தீங்கன்னா உடனே போன் அடிங்க” அவர் எதை சொல்லக்கூடாது என்று விரும்பினேனோ, அதையே சொன்னார்.

ஐம்பது ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து அனுப்பி வைத்தேன். அவர் சொன்னபடியே வீட்டில் இருந்த எல்லாரையும் தங்கச்சி வீட்டுக்கு ‘பார்சல்’ செய்துவிட்டு, தனியே வீட்டில் இருக்க ஆரம்பித்தேன். ஆபிஸுக்கும் ஒரு வாரம் லீவு சொன்னேன். ‘வீட்டில் பாம்பு புகுந்தது’ என்கிற காரணத்தைச் சொல்லி, இதுவரை யாருமே லீவ் அப்ளை செய்ததில்லை என்றும், இந்த புதுமையான ஐடியா எனக்கு வந்ததற்காகவும் எம்.டி. ரொம்பவே பாராட்டினார்.

அந்த ஒருவார இரவு கொடுமையானது. பாம்பு பீதியால் தூக்கம் வராமல் நான் பட்ட அவதியை சொல்ல வார்த்தைகள் காணாது. விடியற்காலையில் தூக்கம் வரும். கனவும் வரும். கனவில் ஹன்சிகா வருவதில்லை. மாறாக ‘நீயா’ ஸ்ரீப்ரியா வந்து திகிலூட்டினார். இராம நாராயணன் படக்காட்சிகளாக வந்து துன்புறுத்தியது.

எல்லாமே ஒரு வாரம்தான். பாம்பு வசிப்பதற்கான எந்த அறிகுறியும் என் வீட்டில் இல்லை. எனக்கு இப்போது பாம்பு குறித்த எந்த பயமும் இல்லை. இந்த ஒரு வாரத்தில் வீட்டை முழுக்க நானே பார்த்து, பார்த்து அலங்கரித்தேன் (எங்காவது பாம்பு தட்டுப்படுமா என்று பார்ப்பதுதான் இதன் நிஜமான ஐடியா).

ஒரு நல்ல நாள் பார்த்து, மீண்டும் குடும்பத்தை மீள்குடியேற்றம் செய்தேன். அம்மாவின் ஏற்பாட்டில் ஏதோ நாகயாகம் எல்லாம் நடந்தது. எல்லாம் முடிந்தது. இப்போது மீண்டும் கனவுகளில் ஹன்சிகா வருகிறார். டூயட் பாடுகிறேன்.

“எழுந்திருங்க. சீக்கிரம் எழுந்திருங்க. பாம்பு இன்னும் நம்மளை விட்டு போகலை” தோளை குலுக்கி எழுப்பினாள் இளவரசி. பதறிக்கொண்டு எழுந்தேன்.

“கதவாண்ட இருந்து வளைஞ்சி, நெளிஞ்சி.. சோபாவுக்கு அடியிலே போனதை பார்த்தேன். நல்லா கருப்பா, நீளமா...” அவள் சொல்லிக்கொண்டே போக, “அட தேவுடா. மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா?” என்று வாய்விட்டு முணகிவிட்டு, அந்த பாம்பு புடிக்கும் வனஅலுவலரை போனில் பிடித்தேன்.

“சார். நான் நாகராஜன் பேசறேன்...”

25 கருத்துகள்:

 1. ஆர். கே. நாராயணன் எழுதிய ஆங்கில சிறுகதையின் லேட்டஸ்ட் வெர்சன் போல இருந்தாலும் சுவாரஸ்யமாக தான் உள்ளது. இன்னும் வேற மாதிரி முயற்சிக்கலாம். ஆபீஸ்க்குள் பாம்பு வந்த மாதிரி, ஏசி பஸ்சிற்குள் பாம்பு வந்த மாதிரி.

  பதிலளிநீக்கு
 2. //“கொம்பேறி மூக்கன்னா தெரியுமில்லையா?”

  “தியாகராஜன் படம். போன வாரம் கேடிவியிலே போட்டிருந்தான்” ஏதோ ஒரு அசடு பதில் சொன்னது//

  "செம பல்பு.."

  நல்ல எழுத்து நடை..நான் இந்த கட்டுரைய படித்த கொஞ்ச நேரத்திலே என்னோட கால்கள் அதுவா பின்னால இழுத்துகிச்சு..
  (எதுக்கும் பாம்பு இருக்கானு நானும் தேடி பாக்குறேன் )

  பதிலளிநீக்கு
 3. கிருஷ்..கட்டூரை அருமை. கருநாகம் என் மக்கள் அழைப்பது கருப்பு நிற சாரைப்பாம்பு .உண்மையாகவே கருநாகபாம்பு வட்மேற்கு எல்லை புற இந்தியாவில் மட்டுமே உள்ளது கரிய பளப்ளப்பான உடலின் விரிந்த கழுத்தின் முன் பின் வரி வடிவமோ எந்தப் பட்மோ குறியமைப்போ இல்லாம்லிருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமையான பகிர்வு....
  தொடர்ந்து எழுதுங்கள்......

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 5. யுவா, நீங்கள் எழுதியவற்றில் சிறந்தவற்றுள் சிறந்தது.. களம், சொல்நடை, வர்ணனை (தேவையான தேவையாய் மட்டும்), அருமை.. மிக்க அருமை. Beautiful.

  பதிலளிநீக்கு
 6. எனாது இது? வர வர அனிமல்ஸ் பத்தியே பதிவு போடுறீங்க.

  பதிலளிநீக்கு
 7. அட ஆண்டவா. இது கட்டுரையா? :-(

  நான் இன்னும் நிறைய கத்துக்கணும் போலயிருக்கு.

  பதிலளிநீக்கு
 8. இது தான ஸ்டேடஸ்ல வந்த கதை.. நல்லா இருக்கு....

  பதிலளிநீக்கு
 9. "பாம்பு புகுந்த காதை"
  கண்ணை ஏமாற்றும் தலைப்பு.
  முதலில் கதை என்று தான் படித்தேன்!

  பதிலளிநீக்கு
 10. //ஊருக்கே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முடிந்தாலும், வீட்டுக்குள் தலைவிரித்து ஆடும் ஆன்மீக ஏகாதிபத்தியத்துக்கு அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது.//

  nice

  பதிலளிநீக்கு
 11. //வீட்டில் பாம்பு புகுந்தது’ என்கிற காரணத்தைச் சொல்லி, இதுவரை யாருமே லீவ் அப்ளை செய்ததில்லை என்றும், இந்த புதுமையான ஐடியா எனக்கு வந்ததற்காகவும் எம்.டி. ரொம்பவே பாராட்டினார்.//

  சூப்பர் சூப்பர்! இந்த வரியிலிருந்து அடுத்த வரி போக 2 நிமிடம் பிடித்தது.(சிரித்து சிரித்து வயிறு வலித்தது)

  பதிலளிநீக்கு
 12. சார். நான் நாகராஜன் பேசறேன்...” இதுதான் பஞ்ச்..

  பதிலளிநீக்கு
 13. 250 - 500 சொற்களுக்குள் பதிவு இருக்க வேண்டும் என்று எங்களுக்கு சொல்லித்தந்த நீங்களா இந்த நீளமான பதிவை எழுதியது... ஸ்க்ரோல் பண்ணிவிட்டேன்...

  பதிலளிநீக்கு
 14. யுவா அண்ணே.. கதை நீங்க சொல்ற மாதிரி இருந்தது. அதில் கட்டுரை மாதிரி எழுத்து நடை, அனுபவம் கலந்து இருந்தது..எந்த ரகத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை.. ஆனால் சூப்பர்..( நீங்க ஏன் "கட்டுரைக்கும் கதைக்கும் என்ன வித்தியாசம்?னு " பதிவு போடக்கூடாது?)...

  பதிலளிநீக்கு
 15. //அட ஆண்டவா. இது கட்டுரையா? :-(//
  யுவா அண்ணே ..உங்க அக்கவுண்டை யாரும் ஹேக் பண்ணிட்டாங்களா ??

  பதிலளிநீக்கு
 16. அருமை Yuva you have a great sense of humour. Wish to read more humor posts.

  Thanks
  Arun

  பதிலளிநீக்கு
 17. பாம்பு புகுந்த வீடு! மிக எதார்த்தமான எழுத்து நடை. குடும்பங்களில் கொள்கை உடன்பாடுகளுக்கு படும்பாடு.வருவோர் போவோர் சொல்லும் இலவசமான விளக்கங்கள். யுவாவுக்கே உரிய ஓடையாக ஓடும் வார்த்தைகள். மிக அருமை!
  ///கோவணம் உடுத்தும் ஊரில் வைகிங் உள்ளாடை அணிபவன் பைத்தியக்காரன். வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே போதும். வீதி முக்கில் இருக்கும் மாரியம்மன் கோயில் பாம்பு புற்றுக்கு ரெகுலராக பால் பாக்கெட் வாங்கி ஊற்றும் மனைவி. மாதம் ஒருமுறை சிகப்புச்சேலை கட்டி மருவத்தூருக்கு நடைப்பயணம் போகும் அம்மா. இப்படிப்பட்ட பக்தி பரவசக் குடும்பச் சூழலில் நாத்திகனாக வாழும் கொடுமை யாருக்கும் வாய்க்கவே கூடாது. துரதிருஷ்டவசமாக எனக்கு வாய்த்திருக்கிறது. ஊருக்கே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முடிந்தாலும், வீட்டுக்குள் தலைவிரித்து ஆடும் ஆன்மீக ஏகாதிபத்தியத்துக்கு அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது./// இங்கு மட்டும் ஒரு சிறிய கருத்து! ஆன்மிகம் வேறு, ஏகாதிபத்தியம் வேறு! ஆன்மீகத்தை அரவணைத்து அறிவு புகட்ட வேண்டும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீழ்த்த வேண்டும்! ஏதோ தோன்றியது, எழுதினேன், சரி என்றுதான் கருதுகிறேன்!

  பதிலளிநீக்கு
 18. சர சரன்னு ஒரு நடை...

  சுவாரஸ்யமான கட்டுரைன்னே....

  இல்ல...கட்டுரைதானே...

  பதிலளிநீக்கு
 19. superbbbbbbb

  அட ஆக்கங்கெட்ட மனுஷா!!!. .. i liked it..

  பதிலளிநீக்கு
 20. காதைன்னு ஆரம்பிச்சப்பவே நெனெச்சேன்.

  அப்புறம் முக்கியமான விஷயம்... அன்பான வேண்டுகோள். தலையணைக்குக் கீழே அலைபேசியை வைத்து விட்டுத் தூங்குவதைத் தவிருங்கள். எட்ட வைத்து விட்டுத் தூங்கிப் பாருங்கள். ஹன்சிகாவிடம் நீங்க பண்ண நினைத்ததைப் பண்ணியே விடும் அளவுக்குத் தூக்கம் அட்டகாசமாக வரும்.

  பதிலளிநீக்கு