October 11, 2011

கோலம்


எனக்கு நினைவு தெரிந்தபோது எங்கள் தெருவில் கோலம் போட ஒரு கொலைவெறி டீமே உருவாகியிருந்தது. அம்மா தலைமையில் பக்கத்து வீட்டு பூசாரி ஆயா, பெரியம்மா, டீவி வீட்டுக்காரம்மா, கடைசி வீட்டு காஞ்சனா அக்கா என்று கோல வீராங்கனைகள் ஃபுல் ஃபிக்கப்பில் இருந்த காலம் அது. எங்கள் தெருவில் அப்போது பண்ணிரெண்டு அல்லது பதினைந்து வீடுகள் இருந்திருக்கலாம். ஒரு வீட்டில் போட்ட கோலம் இன்னொரு வீட்டில் ரிப்பீட்டு ஆகிவிடக்கூடாது என்பதற்காக முதல் நாள் இரவு டிஸ்கஷன் நடத்தி அவரவர் போட வேண்டிய கோலத்தை சீரியஸாக முடிவு செய்துவைத்து விடுவார்கள்.

எங்கள் வீட்டிலும், காஞ்சனா அக்கா வீட்டிலும் தான் கோல நோட்டுபுக்கு இருக்கும். மற்றவர்கள் வீட்டிலெல்லாம் ப்ரிண்ட் செய்யப்பட்ட புக் தான் இருந்தது. அம்மாவும், காஞ்சனா அக்காவும் சிரத்தையாக பத்திரிகைகளில் வரும் கோலங்களையெல்லாம் தங்கள் நோட்டுகளில் வரைந்து வைப்பார்கள். ஒரு கட்டத்தில் அம்மாவிடம் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கோல கலெக்‌ஷன் இருந்தது. மார்கழி மாதம் இந்த நோட்டுகளுக்கு பயங்கர டிமாண்ட் வந்துவிடும். அட்வான்ஸ் புக்கிங் செய்து அக்கம்பக்கங்களில் இரவல் வாங்கிச் செல்வார்கள்.

அப்போதெல்லாம் எல்லார் வீட்டு வாசலிலும் சாணம் தெளித்து (சிலர் வீடுகளில் மொழ மொழவென்று மெழுகி) அரிசு மாவுடன் சேர்க்கப்பட்ட கோலம் போடப்படும். கோலத்தில் அரிசி மாவு இருப்பதால் பகல் வேளைகளில் வாசலெல்லாம் சிகப்பு எறும்புகளாக காணப்படும். கோலமாவில் அரிசி மாவு சேர்ப்பதற்கு காரணம் புண்ணியம் என்று அம்மா சொல்வார். அதாவது கோலத்தில் இருக்கும் அரிசி மாவை உண்டு எறும்புகள் பசியாறுமாம். எனக்குத் தெரிந்து வெறும் கோலமாவில் கோலம் போட்டால் கை விரல்கள் எரியும். மாவு கொஞ்சம் சாஃப்டாக இருக்கவே அரிசிமாவு சேர்க்கிறார்கள்.

மார்கழி மாதம் மட்டும் வண்ணக்கோலம், மற்ற மாதங்களில் வெள்ளை மட்டும் தான். மார்கழி மாதம் சாணத்தை நடுவில் வைத்து பூசணிப்பூ வைக்கும் வழக்கம் இருந்தது. பூசணிப்பூவுக்கு மடிப்பாக்கத்தில் பஞ்சமே இல்லை. இப்போது பூசணிக்கொடியை காண்பது அரிதாகிவிட்டது.

அம்மா கோலம் போடும்போது நான் உதவியது உண்டு. அதை உதவி என்று சொல்லமுடியாது, உபத்திரவம் என்பது தான் சரி. அம்மா ஒரு பக்கமாக கோலம் போட்டுக் கொண்டு வரும்போது நான் இன்னொரு பக்கமாக கோலப்பொடியை வைத்து கிறுக்குவேன். நான் உருவாக்கிய கிறுக்கலையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் கோலம் போட அம்மாவுக்கு கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ எக்ஸ்ட்ரா பிடிக்கும். பொதுவாக அம்மா கோலம் போட்டால் அப்போதெல்லாம் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் ஆகும். அவ்வளவு பெரிய கோலம். அவ்வளவு பெரிய கோலம் போடுமளவுக்கு பெரிய வாசலும் இருந்தது.

எதற்கெடுத்தாலும் என் முதுகில் நாலு சாத்து சாத்தும் அம்மா, கோலத்தில் நான் விளையாடியதற்கு மட்டும் என்றுமே கோபப்பட்டதில்லை என்பது இதுவரை ஆச்சரியம் தான். அந்தக்காலத்திலிருந்தே இன்றுவரை ஐந்து, ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து கோலம் போடுவது அம்மாவின் வழக்கம். சூரியன் உதிப்பதற்கு முன்பாக கோலம் போட்டுவிட வேண்டும் என்பது அவரது பர்மணெண்ட் டார்கெட். இப்போதெல்லாம் முறைவாசல் சிஸ்டம் வந்துவிட்டது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை தான் எங்கள் முறை. எங்கள் முறை வரும்போது மட்டும் அம்மா நாலரை மணிக்கே எழுந்து கோலம் போட்டுவிடுகிறார். அந்தக் காலத்தில் போட்டது போல பெரிய கோலம் இல்லை. அதில் நான்கில் ஒரு பங்கு போடுமளவுக்கு தான் இப்போது வாசல் இருக்கிறது. தெளிப்பதற்கு சாணியும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

கோலங்களிலேயே ரொம்பவும் கஷ்டமான கோலம் தேர்க்கோலம் என்று நினைக்கிறேன். தேர்க்கோலத்தில் ஏகப்பட்ட சங்கிலி இருக்கும். புள்ளிகளும் கோக்கு மாக்காக வைக்க வேண்டும். நினைவாற்றல் குறைந்தவர்களால் பெரிய தேர்க்கோலங்கள் போடமுடியாது. தேர்க்கோலம் பட்டையாகவும் போடக்கூடாது. மெலிதாக போட்டால் தான் லுக்கும், ஃபீலும் கிடைக்கும். தேர்க்கோலங்களுக்கு பொதுவாக வண்ணம் தீட்டமாட்டார்கள். இருப்பதிலேயே சுலபமான கோலம் பொங்கலுக்கு போடும் பானை கோலம் போலிருக்கிறது. கோலம் சுமாராக அமைந்துவிட்டாலும், வண்ணத்தில் அசத்தி விடலாம்.

கோலங்களுக்கு மதம் கிடையாது. மார்கழி மாதத்தில் கிறிஸ்துமசும், நியூ இயரும் வரும். எல்லார் வீட்டிலும் மெர்ரி கிறிஸ்துமஸ், ஹேப்பி நியூ இயர் என்று ஆங்கிலத்தில் வாழ்த்துகள் எழுதப்பட்டிருக்கும். காஞ்சனா அக்கா மட்டுமே கிறிஸ்துமஸ் தாத்தாவை தத்ரூபமாக கோலமாக்குவார். மற்ற வீடுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வீடு படத்தில் வரும் தாத்தா மாதிரி சோணங்கியாக இருப்பார். கேரளா ஸ்டைலில் பூக்கோலம் போடுவதும் காஞ்சனா அக்காவின் ஸ்பெஷாலிட்டி. வீட்டுக்கு அருகில் கிடைக்கும் ஊதாநிற காட்டுப்பூக்களை வைத்தே கோலத்தை ஒப்பேற்றிவிடுவார்.

வீட்டு வாசலில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் கோலம் போடும் பழக்கம் அம்மாவுக்கு இருந்தது. சிமெண்ட் தரையில் வெள்ளை மற்றும் சிகப்பு பெயிண்டில் சிரத்தையாக கோலம் போடுவார். வீட்டின் ஓரங்களில் காவிக்கலர் அடித்து வைத்திருப்பார். வாசற்படியில் நிறைய பேர் பெயிண்டால் மஞ்சள் வண்ணம் அடித்து சிகப்பு பொட்டு வைத்திருப்பார்கள். அம்மாவுக்கு வாராவாரம் வெள்ளிக்கிழமை ஒரிஜினல் மஞ்சளும், குங்குமமும் வாசற்படியில் வைத்தால் தான் நிம்மதி. இன்றும் இது மட்டும் தொடருகிறது. வீட்டில் மொசைக்கும், டைல்ஸும் வந்துவிட்டதால் வீட்டுக்குள் கோலம் போட முடியவில்லை என்பது அம்மாவுக்கு ஒரு குறைதான். அதனால் இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை மட்டும் ஹாலில் ஒரு தாம்பாளத் தட்டில் நீர்நிரப்பி தாமரை உள்ளிட்ட பூக்களை வைத்து அலங்கரித்து கோலமாவு இல்லாமலேயே நீர்க்கோலம் போடுகிறார்.

அம்மா வெளியே எங்காவது போயிருந்தால் நானும் கூட சிறுவயதில் கோலம் போடுவேன். வாசற்படிக்கு முன்னால் மட்டும் ஒரு நாளைக்கு இரு கோலங்கள். காலையில் ஒன்று, மாலையில் விளக்கு வைப்பதற்கு முன்பாக இன்னொன்று. எனக்கு தெரிந்தது ஸ்டார் கோலம் தான். புள்ளி வைக்காமலேயே சுலபமாக போடலாம். மாலை ஐந்து, ஐந்தரை மணியளவில் தங்கச்சி பாப்பாவுக்கு காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு நான் பலமுறை போட்ட அந்த ஒரே ஒரு மாடல் அவசரக் கோலத்தை அம்மாவும், அப்பாவும் என்றுமே பாராட்டத் தவறியதில்லை.

முன்பெல்லாம் யார் வீட்டிலாவது கோலம் போடப்பட்டிருந்தால் சில நொடிகள் நின்று கோலத்தை ரசித்துவிட்டு செல்பவர்களை பார்க்க முடிந்தது. சைக்கிளிலோ, நடந்தோ செல்பவர்கள் கோலம் அழிந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார்கள். இப்போது கோலத்தை ரசிக்க யாருக்கும் நேரமில்லை. கோலம் அழிவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதும் இல்லை. கோலம் போட மண் தரை கிடைப்பதும் அரிதாகிவிட்டது. கான்கிரீட் தரையாக இருப்பதால் மிக லேசாக தண்ணீர் தெளித்து சின்னதாக ஸ்டார் கோலம் போடுகிறார்கள். அதன் ஆயுளே அதிகபட்சம் பத்து நிமிடம் தான்.

மயிலாப்பூரில் கோலப்போட்டி நடக்கும்போது பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது. வீடுகளில் கோலம் போட முடியாத மாமிகள் அந்நேரத்தில் ஒட்டுமொத்தமாக படையெடுத்து தங்கள் திறமைகளை காட்டுகிறார்கள். வடக்கு மாடவீதியில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் போடுவார் பாருங்கள் கோலம். என்ன வேகம்? என்ன நேர்த்தி? என்ன அழகு?

13 comments:

 1. PULLI VACHCHA KOLAM PODARUTHU NKRATHU IDHUTHANO...KOLAM PATRI EM PONNU KATTURAI KETTA ITHAI ROYALTY KODUKKAMAL USE PANNIRUVEN...RAJSIVA

  ReplyDelete
 2. கோலங்கள் இன்று அலங்கோலங்களாகி விட்டன.பழைய நினைவுகளில் கோலங்களை பார்த்து கொள்ள வேண்டியது தான்.

  ReplyDelete
 3. அது எல்லாம் ஒரு காலம்.

  ReplyDelete
 4. //இப்போது கோலத்தை ரசிக்க யாருக்கும் நேரமில்லை. கோலம் அழிவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதும் இல்லை. கோலம் போட மண் தரை கிடைப்பதும் அரிதாகிவிட்டது//
  உண்மைதான் யுவா...
  கோலம் போடுவதற்கும் ஆட்கள் இல்லை.காலையில் கன்னிப் பெண்கள் கோலம் போடுவதை ரசிக்கவே ஒரு தனிக்கூட்டம் இருக்கும்.அவசர உலகில் கோலத்தின் அவசியம் குறைந்து விட்டது.வித்தியாசமான பதிவு.

  ReplyDelete
 5. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  ReplyDelete
 6. நான் பலமுறை போட்ட அந்த ஒரே ஒரு மாடல் அவசரக் கோலத்தை அம்மாவும், அப்பாவும் என்றுமே பாராட்டத் தவறியதில்லை.


  Nice..

  ReplyDelete
 7. நான் எழுத நினைத்தை மிக சிறப்பாக எழுதி இருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  நான் ஒவ்வொரு வீடு வாசலுக்கும் சென்று கோலத்திற்கு மதிப்பெண்கள் போடுவேன்.

  என் அம்மாவின் இருபத்தைந்து வருட கோலப் புத்தகம் இன்னமும் பழுப்பேறி பழையதாய் வீட்டில் இருக்கிறது.

  ReplyDelete
 8. "கோலங்களுக்கு மதம் கிடையாது"

  அருமையா சொன்னீங்க.......

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 9. நேற்று Halloween காக pumpkin Patch சென்று கொண்டுவந்த இரண்டு பெரிய பூசணிக்காய்களை வீட்டு வாசல் படிக்கட்டுகளில் வைக்கும் போது, என்மனைவி கிருஷ்ணா ஜெயந்திக்கு போட்ட அரிசிமா கோலம் இன்னும் அழியாமல் இருப்பது என்மனதில் வந்தது. என் கிராமத்து வாழ்நாட்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. நல்ல மலரும் நினைவுகள். நாங்களும் இதுபோல மார்கழி மாதத்தில் செய்வதுண்டு. எங்கள் வீட்டில் அக்கா. காலை ஐந்தரைக்கு எழுந்து கலர்பொடிகளோடு அமர்ந்தால் கிட்டத்தட்ட ஆறரை ஏழுக்குத்தான் எழுவோம்.

  பொங்கலுக்கு மாடு, கரும்பு கோலங்கள் கண்டிப்பாக இடம்பெறும்.

  இதில் பதினொரு புள்ளி ஏழு வரிசை, நேர்புள்ளி, இடுக்கு புள்ளி என்றெல்லாம் technical jargons உண்டு. :)

  ReplyDelete
 11. எதிர் வீடு, பக்கத்து வீடு என்று நூற்று கணக்கில் புள்ளி வைத்து ரோட்டில் இடைவெளியே இல்லாமல் கோலம் இடுவோம்.கால ஓட்டத்தில் அவை எல்லாம் ஓடி விட்டது..மலரும் நினைவுகளுக்கு நன்றி..

  ReplyDelete
 12. எங்கள் கிராமத்தில் இன்றும் தெரு முழுவதும் சாணத்தால் பூசப்பட்டதுப் போல் இருக்கும்.இன்றும் அங்கு எல்லோரும் மார்கழி மாதத்தில் 4.30 எழுவதுண்டு.நம் நகரங்கள்தான் கால் வைக்க இடம் இல்லாமல் இருக்கிறது

  ReplyDelete
 13. enaku vayasu 29.engal ooril(Trichy) nangal margali mathathil 4.30 manikey
  elunthu kolam poduvom. adhuvum potti potu poduvom.Aanal nan marriage aanadum chennai vandhu viten.ippodhu kolam poda vasaley illay.ungal moolam malarum ninaivu vandhu vittadhu

  ReplyDelete