10 அக்டோபர், 2011

சதுரங்கம்

இத்தனை வருடங்கள் கழித்து வெளியாகியிருந்தாலும் ‘சதுரங்கம்’ காண விரும்பியதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று : அறிவுமதி எழுதிய ‘விழியும் விழியும் நெருங்கும்பொழுது’ பாடல்.

இரண்டு : நாயகன் ஒரு செய்தியாளன் என்று கேள்விப்பட்டதால்.

ஏற்கனவே ‘கோ’ குறித்து எழுதியிருந்தோம். பத்திரிகைத்துறை பணிகளை மிகைப்படுத்தி, ஃபேண்டஸைஸ் செய்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருந்தோம். நல்லவேளையாக கரு.பழனியப்பன், ஓரளவுக்கு பத்திரிகை அலுவலகத்தை சரியாகவே காட்ட முயற்சித்திருக்கிறார். குறிப்பாக ‘போஸ்டரில் என்ன போடுவது?’ என்று ஒருவர் நாயகனிடம் ஆலோசனை கேட்பதும், அதற்கு அவர் சொல்லும் பதிலும் அட்டகாசம்.

இருப்பினும் அவர் பத்திரிகையாளராக இருந்தும் சில விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார். நாளிதழின் மூன்றாவது பக்கத்தை வாசகர்கள் யாரும் வாசிக்கமாட்டார்கள் என்கிறமாதிரி காட்சியமைப்புகள் இருக்கிறது. படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் விஷயம் இது.

மூன்றாவது பக்கத்தை ‘செகண்ட் ஃப்ரண்ட் பேஜ்’ என்பார்கள். வலதுபுற பக்கங்கள் எல்லாமே வாசகர்களை ஈர்க்கக் கூடியவை என்பது இதழியலின் பாலபாடம். விளம்பரதாரர்களும் 3, 5, 7 பக்கங்களில் தங்கள் விளம்பரங்கள் வெளிவரவேண்டும் என்பதை விரும்புவார்கள். அதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தவும் தயாராக இருப்பார்கள்.

அப்புறம் ஒரு காட்சியில் பதவியிழந்த அமைச்சரை பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள். ஒரு கேள்வி : ‘திருப்பதிசாமி எழுதின கட்டுரையாலேதான் உங்களுக்கு அமைச்சர் பதவி போச்சுன்னு சொல்றாங்களே?’. இப்படி ஒரு கேள்விக்கு வாய்ப்பேயில்லை. வேண்டுமானால் இப்படி கேள்வி கேட்கப்பட்டிருக்கலாம் ‘திசைகள் பத்திரிகையில் வந்த கட்டுரையாலேதான் உங்க அமைச்சர் பதவி போயிடிச்சின்னு சொல்றாங்களே?’

மற்றபடி படம் ஓக்கே ரகம்தான். ஐந்து ஆண்டுகள் கழித்து வந்திருந்தாலும் நாட் பேட். உண்மையில் இடைவேளை காட்சியில்தான் படமே தொடங்குகிறது. இது முதல் காட்சியாக வைக்கப்பட்டு, மற்ற காட்சிகள் தெலுங்கு இயக்குனர் சுரேந்தர் ரெட்டி பாணியில் ஷார்ட் ஃப்ளாஷ்பேக் சீன்களாக வந்திருந்தால் படம் பட்டையைக் கிளப்பியிருக்கும்.

இந்தப் படத்தில் மட்டுமன்றி கரு.பழனியப்பனின் அனைத்துப் படங்களிலுமே நம்மை வெறுப்பேற்றும் சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களுமே இண்டெலெக்சுவல்களாகவே இருப்பார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் ஏதோ ஒரு ‘மெசேஜ்’ சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால், வசனங்களில் நிறைய விஷயங்களை சொருகவேண்டுமென்கிற அவரது ஆவல் புரிகிறது. துரதிருஷ்டவசமாக படம் பார்க்கும் ரசிகர்களில் ஐந்து அல்லது ஆறு சதவிகிதத்தினர் மட்டுமே இண்டெலெக்சுவல்களாக இருக்கும் சூழலில், ‘படம் இழுத்துக்கிட்டே போவுது’ என்கிற கமெண்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் ஒரு தவறான தேர்வு என்று நினைக்கிறோம். அவர் ஜான் ஆப்ரகாம் மாதிரி. கம்பீரமான தோற்றம் கொண்டவர் என்பது உண்மைதான். ஆயினும் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, காமாசோமோவென்று இருக்கிறார்.

‘விழியும் விழியும்’ பாடலுக்கான ‘லீட்’ காட்சியில், சோனியா அகர்வாலின் தொப்புள் அழகியல் உணர்வோடு படமாக்கப்பட்டிருக்கிறது. அவரது தொப்புளுக்கு கொடுக்கப்பட்ட ‘லைட்டிங்’, கேமிரா கோணங்கள் என்று அக்காட்சியில் கரு.பழனியப்பன் சதுரங்கம் ஆடாமல், மங்காத்தா ஆடியிருக்கிறார்.

ஹீரோவோடு, வில்லன் தான் சதுரங்கம் ஆடுகிறார். ஹீரோ திருப்பி ஆடவேயில்லை என்பதால் படத்தின் ‘தலைப்பு’க்கான நியாயம் எடுபடவேயில்லை. க்ளைமேக்ஸில் மட்டுமாவது ஹீரோ ஆடியிருக்கலாம். ஆனால் வழக்கமான தமிழ்ப்படங்களைப் போலவே அடிக்கிறார், அடிவாங்குகிறார், திருப்பி அடிக்கிறார், வெல்கிறார்.

பத்திரிகையாளனால் மறைமுகமாக பாதிக்கப்படும் வில்லன், தன் பாதிப்புக்கு ஆற்றும் எதிர்வினைகள் சுவாரஸ்யமானவை. செய்தியாளன் செய்திக்காக தேர்ந்தெடுக்கும் ‘ப்ரியாரிட்டி’ குறித்த வில்லனின் விவாதங்கள் முக்கியமானவையும் கூட.

சதுரங்கம் – ஒரு தடவை விளையாடலாம்.

6 கருத்துகள்:

 1. சுடச் சுடச் விமர்சனம், சற்று சூடான விமர்சனம்.

  பதிலளிநீக்கு
 2. படம் பார்த்தேன் .. பரவாயில்லை

  பதிலளிநீக்கு
 3. எழுதியிருந்தோம், நினைக்கிறோம்.. றோம்.. றோம் ன்றீங்களே யார் அந்த இன்னொருவர்?

  பதிலளிநீக்கு
 4. நல்ல விமர்சனம்
  வாழ்த்துக்கள்
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  பதிலளிநீக்கு
 5. நல்ல விமர்சனம்.......

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு