4 அக்டோபர், 2011

கரெண்ட் கட்

எங்கள் ஊரில் ‘கரெண்ட் கட்’ என்று சொன்னால் அது சேதியுமல்ல, கதையுமல்ல. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக வழக்கமாகிப் போன விஷயம்தான். ஆனால் கொஞ்ச நாட்களாகவே எல்லை மீறிப்போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் இப்படித்தான் ஒருநாள் நள்ளிரவு, கரெண்ட் கட்.

ஆழ்ந்த உறக்கத்தில் ‘ஹன்சிகா’வோடு கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்தவனின் காதில் ‘ங்கொய்’யென்று ரீங்காரம், தேன் வந்து பாயுது காதினிலே மாதிரி. பாய்ந்தது தேன் அல்ல கொசு என்பதுதான் துரதிருஷ்டம். ஏதோ நினைவில் பட்டென்று என்னை நானே காதில் ஓங்கி அறைந்துக்கொள்ள, மீண்டும் ‘ங்கொய்’. இம்முறை வலியோடு இணைந்த வேறு ‘ங்கொய்’.

எரிச்சலோடு எழுந்தேன். நிஜமாகவே கண் எரிச்சல். தட்டுத் தடுமாறி செல்போனை எடுத்து, ஏதோ ஒரு பட்டனை அமுக்கி, ஸ்க்ரீனில் கிடைத்த குறைந்த ஒளியின் உதவியால், வத்திப்பெட்டி எடுத்து, மெழுகுவர்த்தி ஏற்றி...

கொசுவின் உதவியால் குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்தது. ஒன்று சிரித்தால், மற்றது சிரிப்பதில்லை. ஆனால் ஒன்று அழுதால், இன்னொன்றும் கட்டாயம் அழுகிறது. என்ன லாஜிக்கோ?

ஐந்து நிமிடம் விசிறிக் கொண்டிருந்தேன். ம்ஹூம். சின்னது விழித்துக் கொண்டது. இதன் தொண்டை பஞ்சாலை சங்குக்கு ஒப்பானது. கதற ஆரம்பித்தால், தெருவில் பாதி வீடுகள் விழித்துக் கொள்ளும். பெருசு இன்னும் மோசம். விழிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே மெதுமெதுவாக சிணுங்கிக் கொண்டு, மிகச்சரியாக விழிக்கும்போது அழுகை உச்சஸ்தாயியை எட்டியிருக்கும். குழந்தைகளால் ஒரு தகப்பன் வாழ்வில் உச்சபட்ச மகிழ்ச்சிகளை அடைகிறான் என்பது ஒருபுறம். உச்சபட்ச தொல்லைகளையும் அதே குழந்தைகள் வாயிலாகதான் அடைகிறான் என்பது மறுபுறம்.

மின்சார அலுவலகத்துக்கு போன் செய்தேன். ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறொரு தொடர்பில் இருக்கிறார்’. தொடர்ச்சியாக பத்து, இருபது நிமிடத்துக்கு வேறொரு தொடர்புதான். மீண்டும், மீண்டும் முயற்சிக்க.. இப்போது அவர்கள் ரிசீவரை எடுத்து, கீழே வைத்துவிட்டிருக்க வேண்டும். எங்கேஜ்ட் டோன்.

கொசு, வியர்வை, எரிச்சல்... மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு இதுவே இரவுநேர மின்தடையின் பிரதான பிரச்சினை...

“ஒருநடை ஈ.பி. வரைக்கும்தான் போயிட்டு வந்துடேன்”

பேண்டையும், டீ-ஷர்ட்டையும் மாட்டிக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அதிகாலை ஒரு மணிக்கே மின்வாரிய அலுவலகம் களை கட்டியிருந்தது. குறைந்தது நூறு பேர் குழுமியிருந்தார்கள். ஊரின் சில பகுதிகளில் ஆட்கள் குடியிருக்கிறார்களோ, இல்லையோ ‘குடியிருப்போர் நல சங்கம்’ மட்டும் எப்படியாவது முளைத்து விடுகிறது. அதற்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு கவுரவ ஆலோசகர், பத்து பதிணைந்து செயற்குழு உறுப்பினர்கள்... இம்மாதிரி ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு, மூன்று சங்கங்கள். இந்த சங்கங்களில் ஈடுபடுபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, எங்கள் ஊரின் வாக்காளர் எண்ணிக்கையை விட அதிகம்.

கூட்டத்தைப் பார்த்து பயந்துவிட்ட மின் அலுவலர், போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்திருப்பார் போலிருக்கிறது. வாயிலிலேயே கூட்டத்தை மடக்கிவைத்து, கடமையில் சற்றும் தவறிடாத காவலராக ஏட்டு தலைநிமிர்ந்து நின்றார். ஊரின் சட்டம், ஒழுங்கு அவரது லத்திமுனையில் அடங்கியிருக்கிறது என்கிற பெருமிதம் அவரது முகத்தில் தெரிந்தது.

பார்ப்பதற்கு டிராஃபிக் ராமசாமி தோற்றத்தில் இருந்த சங்க சிங்கம் ஒருவர் அங்கிருந்த எஸ்.ஐ.யிடம் எகிறிக் கொண்டிருந்தார். அவரது நோக்கம் எப்படியாவது ஆபிஸுக்குள் நுழைந்துவிடுவதுதான். நுழைந்து என்ன செய்வார் என்பது அவருக்கே தெரியாது. கடுப்பாகிப் போன எஸ்.ஐ., அந்த ராமசாமியின் தோளில் கொஞ்சம் லேசாக கைவைக்க, அவர் குய்யோ முறையோ என கத்தத் தொடங்கினார். “பிரெஸ்ஸ கூப்பிடுங்கப்பா.. பிரெஸ்ஸ கூப்பிடுங்கப்பா” என்று ஜிந்தாபாத் போட்டார். ‘இவருக்கு யாராவது சோடா வாங்கியாங்க..’ டைப் சத்தம் அது.

என்னுடைய வண்டியில் ‘பிரெஸ்’ ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததைப் பார்த்த மாகானுபவர் எவரோ, ”தோ பிரஸ் வந்துட்டாரே?” என போட்டுக் கொடுக்க, என் நிலைமை தர்மசங்கடம் ஆனது.

“என்ன பிரஸ் சார்?”

நான் பணிபுரியும் பத்திரிகை பெயரை சொன்னேன்.

“ஜோதிடப் பத்திரிகையா?”

என்னை பிரஸ் என்று ஆள்காட்டிவிட்ட ஆள்காட்டியை முறைத்துக்கொண்டே “கிட்டத்தட்ட அதுமாதிரிதான்” என்றேன்.

“அப்போன்னா இவரு வேலைக்கு ஆவமாட்டாரு. தந்தி ரிப்போர்ட்டரை கூப்பிடுங்க”

“சன் டிவி இந்த அநியாயத்தை எல்லாம் படம் புடிச்சி போட மாட்டான்”

“இதுக்கெல்லாம் தினமலர்தான் செட் ஆவும்”

“யாராவது தினமலர் போன் நம்பர் இருந்தா சொல்லுங்களேன்”

ஊடகங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை பெருமிதம் கொள்ளவைத்தது. ‘கோ’ ஜீவா மாதிரி நானும் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்கலானேன்.

இதற்கிடையே மின் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த போலிஸ் படை அங்கிருந்த நாலு பேரை கழுத்தாமட்டையில் போட்டு வெளியே இழுத்துவந்தது. தோற்றத்திலேயே தெரிந்தது அவர்கள் லைன் மேன்கள் என்று.

“த்தா.. குடிச்சிட்டு உள்ளே மல்லாந்துக்கிட்டிருக்கானுங்க...” கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் குன்ஸாக அடித்துவிட்டார்.

அது உண்மைதான். முப்பது அடி தூரத்தில் அவர்கள் இருந்தாலும் ‘குப்’பென்று தூக்கியது சரக்கு வாசனை. நால்வரையும் சாராயம் கடத்தி, மாட்டியவர்கள் ரேஞ்சுக்கு முட்டிபோட்டு உட்காரவைத்து, அவர்களுக்கு பின்னால் சென்று கம்பீரமாக நின்றது காவல்துறை. காவல்துறையின் இந்த அதிரடி ரெய்டு மற்றும் நடவடிக்கை, குழுமியிருந்த கூட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘காவல்துறை மக்களின் நண்பன்’ என்கிற ஸ்லோகத்துக்கு ஏற்ப நடந்துகொண்ட எஸ்.ஐ.யை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் தவித்தார்கள் மக்கள்.

“உடனே இதைப் படம் புடிச்சி கேப்டன் டிவியிலே போடணும். கேப்டன் டிவிக்கு போனை போடுறேன்” ஒரு இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு போனை எடுத்து, ஏதோ நம்பரை டயல் செய்துவிட்டு காதில் வைத்தார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திடீரென ஊரில் முளைவிட்ட தேமுதிக இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவராக அவர் இருக்கலாம்.

“அட நீ வேறப்பா. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு. எப்படியோ இன்னிக்கு கரெண்டு அரோகராதான்” சொல்லிவிட்டு ஒரு பெருசு நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

16 கருத்துகள்:

 1. //“அட நீ வேறப்பா. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு. எப்படியோ இன்னிக்கு கரெண்டு அரோகராதான்” சொல்லிவிட்டு ஒரு பெருசு நடையைக் கட்ட ஆரம்பித்தார்.//

  இன்னும் சிரிச்சுகிடே இருக்கேன்... :))
  உங்கள் எழுத்து நடை அபாரமாக உள்ளது.... Keep writting...

  பதிலளிநீக்கு
 2. கேப்டன் பகல் நேரத்துலேயே சிவந்த கண்ணுக்கு சொந்தக்காரர். ராத்திரியில் கேட்கவே வேண்டாம்.

  ஆனாலும் கடைசி பத்திக்கு உருண்டு சிரிக்காத குறைதான்.

  பதிலளிநீக்கு
 3. “அட நீ வேறப்பா. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு. எப்படியோ இன்னிக்கு கரெண்டு அரோகராதான்” சொல்லிவிட்டு ஒரு பெருசு நடையைக் கட்ட ஆரம்பித்தார். //

  HAHA

  பதிலளிநீக்கு
 4. கலக்கல் லக்கி
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 5. //. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு/

  உண்மைய சொல்லுங்க. இந்த வரிக்காகத்தானே இந்த பதிவு

  பதிலளிநீக்கு
 6. //"ஜோதிடப் பத்திரிகையா?”

  என்னை பிரஸ் என்று ஆள்காட்டிவிட்ட ஆள்காட்டியை முறைத்துக்கொண்டே “கிட்டத்தட்ட அதுமாதிரிதான்” என்றேன்.//

  ஆமாம்னு சொல்லி, இத்தனை மணிக்கு கரண்ட் வரும்னு உங்க ஜோதிட மகிமையை சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் கொஞ்ஜம் பெருமையா இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 7. அம்மாவின் ஆட்சியில் திறம்பட செயல்படும் காவல்துறையை பாராட்ட வார்த்தைகளே இல்லை # பாஸிட்டிவ் அப்ரோச் பாஸ்

  பதிலளிநீக்கு
 8. //அட நீ வேறப்பா. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு. எப்படியோ இன்னிக்கு கரெண்டு அரோகராதான்”//


  ஹா .....ஹா ஃபைனல் கிக்

  பதிலளிநீக்கு
 9. “என்ன பிரஸ் சார்?”

  நான் பணிபுரியும் பத்திரிகை பெயரை சொன்னேன்.

  “ஜோதிடப் பத்திரிகையா?”

  சிரிசிக்கிட்டே இருக்கேன்

  பதிலளிநீக்கு
 10. //“அட நீ வேறப்பா. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு.//


  கலக்கல் காமெடி பாஸ்...

  பதிலளிநீக்கு
 11. கலக்கல் பதிவு சார்.....

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 12. உண்மைக் கதையா இல்ல கற்பனைக் கதையா சார்?

  பதிலளிநீக்கு
 13. உண்மைக் கதையா இல்ல கற்பனைக் கதையா சார்?

  பதிலளிநீக்கு
 14. சூப்பர் காமெடி பாஸ்
  வயிறு வலிக்க சிரித்துகொண்டே இருக்கிறேன்


  உங்கள்
  அருண்

  பதிலளிநீக்கு
 15. //“அட நீ வேறப்பா. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு. எப்படியோ இன்னிக்கு கரெண்டு அரோகராதான்” சொல்லிவிட்டு ஒரு பெருசு நடையைக் கட்ட ஆரம்பித்தார்.//

  இன்னும் சிரிச்சுகிடே இருக்கேன்.

  பதிலளிநீக்கு