3 அக்டோபர், 2011

புள்ளி

முழுமையாக வெள்ளையாக விரிந்த மனத்திரை பரப்பில் நட்டநடுவில் அணுவளவே வளர்ந்திருந்தது கரும்புள்ளி. முன்பொரு காலம் கண்டதைக் காட்டிலும் கருமையின் அடர்த்தி குறைந்திருந்தது. அல்லது குறைந்தது போல தெரிந்தது. இருந்தாலும் அழுத்தமாகவே பதிந்திருந்தது புள்ளி. புள்ளியின் வடிவம் என்பது வட்டம்தானா அல்லது எப்போது வைக்கப்பட்டாலும் வட்டவடிவிலேயே புள்ளி அமைவது யதேச்சையானதா என்று தெரியவில்லை.

கொஞ்சம் உற்று உன்னிப்பாய் கவனித்தால் தெரியும், புள்ளி மெதுவாய் வளர்பிறை போலவே வளர்ந்து வருவதை. வளர வளர கருமையின் அடர்த்தி குறையும். பழுப்பு நிறமாகும். அனிச்சையாய் இமைமூடி மீண்டும் திறக்கும்போது பாதி திரையை பழுப்பு வண்ணம் மறைக்கும். வட்டவடிவில், ஓரங்கள் மட்டும் கூர்மையாய் இல்லாமல் வெண் திரையோடு விளிம்பில் கரைந்து மறைவதாய் பரிணாமம் பெறும்.

இப்போது திரைமுழுக்க நிறைந்திருக்கும் பழுப்பு நிறத்தை நீங்கள் எங்கேயோ கண்டிருக்கலாம். தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமாக இருக்கலாம். தேநீர்க்கடை வாசலில் வாலை ஆட்டும் வெள்ளையும் சாம்பலும் கலந்த நாயின் நிறமாகவும் இருக்கலாம். நினைவுபடுத்தி பார்க்க இயலாமல் மூளையெங்கும் கருந்திரையில் மஞ்சளும், பச்சையும், ரத்தச் சிவப்புமாக பூச்சி போன்ற வடிவத்தில் குறுக்கும் நெடுக்குமாய், மேலும் கீழுமாய் ஏதோ ஒரு வஸ்து நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில்.. இல்லையில்லை கோடிக்கணக்கில் ஓடிக்கொண்டேயிருக்கும்.

வெள்ளைத்திரை எப்போது பழுப்பானது, பழுப்பு எப்போது அடர்கருப்புக்கு மாறி வண்ண வண்ண பூச்சிகளாய் ஓடத்தொடங்கியது என்பது தெரியாது. ஓரிரு பூச்சிகளின் வடிவத்தை உற்றுநோக்கும்போது தெரிகிறது. இவ்வடிவத்தை இதற்கு முன்னால் கண்டிருக்கிறோம். ம்ம்ம்... நினைவுக்கு வருகிறது. தவளையின் அழுக்கான பஞ்சுப்பொதி போன்ற வெள்ளை முட்டையில் புதியதாய் பிறந்த தலைப்பிரட்டைகளின் வடிவமது. அறிவியலார் விந்துக்களில் இருக்கும் உயிரணுவும் இதே வடிவம் என்று படம் வரைந்து பாகம் குறித்திருப்பார்கள். சிறிய வாலுக்கு சற்றும் பொருந்தாத பெரியதலை, உடல் இருக்கிறதா, அல்லது தலைக்கு அடுத்ததுமே வாலா என்று யூகிக்க முடியாத வடிவம்.

தலைப்பிரட்டைகளின் இயங்கும் வேகம் மெதுவாக இயல்பாக அதிகரிக்கிறது. ஒவ்வொரு தலைப்பிரட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து குறுக்கும் நெடுக்கும், மேலும் கீழும் வேகவேகமாக இயங்க தலைப்பிரட்டை வடிவம் மாறி வண்ண ஒளிக்கீற்றுக்கள் மட்டும் திரைநெடுக ஓட, எந்த ஒரு புள்ளியிலும் கவனம் செலுத்த இயலாவண்ணம் எல்லாப் பக்கமும் ஒளிக்கீற்றுகள். பின்னணியில் இருந்த கருந்திரை எங்கே? எண்ணங்களை விட வேகமான ஒளிக்கீற்றுகள். காதடைப்பதைப் போன்று உணர்ந்தாலும் சத்தம் எதுவும், எங்கிருந்தும் வரவில்லை.

ஒளிக்கீற்றுகள் எதுவும் இப்போது குறுக்கும், நெடுக்குமாக ஓடவில்லை. ஒரே நேர்க்கோட்டில் எண் திசைகளிலும் பயணிக்கிறது. நேராக வரையப்பட்ட கோடுகளைப் போல பல வண்ணங்களில் ஒரே சீராக பல வண்ணக்கோடுகள். எந்தெந்த கோடு என்ன நிறம் என்பதை கவனிக்கும் முன்னர் கோடுகள் வளைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வளையும் கோடுகள் முற்றிலும் வளைந்த பின்னர் வட்டநிறமாகிறது.

இப்போது சிறிதும், பெரிதுமாய் திரையை நிறைத்திருப்பது வண்ண வட்டங்கள். திரை நன்கருமையை மறந்து களங்கமில்லாத வெண்மையாகிறது. வட்டங்களோடு வட்டங்களாய் ஒவ்வொரு வட்டமும் மற்ற வட்டத்தில் இணைந்து ஒரே பெரிய வட்டமாய் மாற, வட்டத்தின் உட்புறம் முழுக்க பழுப்பு வண்ணம். பழுப்பு வண்ணத்தின் அடத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, இந்த வண்ணத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோம்? தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமா? தேநீர்க்கடை வாசலில் வாலை ஆட்டும் வெள்ளையும் சாம்பலும் கலந்த நாயின் நிறமா?

வட்டத்தின் சுற்றளவு குறைந்துகொண்டே போக வட்டத்தின் பழுப்புநிற வண்ணமோ தன் தன்மையை இழந்து கருப்பாகி கொண்டு வருகிறது. வட்டம் என்பது இப்போது வட்டமாக இல்லாமல் வெறும் கரும்புள்ளி. சென்ற முறை இருந்ததை காட்டிலும் கருமையின் அடர்த்தி குறைந்திருந்தது போல இருந்தாலும் அழுத்தமாகவே பதிந்திருந்தது புள்ளி.

22 கருத்துகள்:

 1. யோவ் புரியுற மாதிரி எழுதுய்யா. புண்ணியமா போவட்டும்

  பதிலளிநீக்கு
 2. கன்கிராட்ஸ் யுவா!! நீங்க இலக்கியவாதியா ஆயிட்டீங்க!!

  பதிலளிநீக்கு
 3. நம்முடைய நிகழ்கால சிந்தனைகளே எதிர்கால வாழ்வாதாரத்திற்கு அடிப்படை என்பதை கடந்த கால நினைவுகளை தூண்டும் வகையில் சிறப்பாக எழுதியதற்கு நிரம்ப நன்றி தோழர்.

  ஆனால் அடிப்படை உண்மைகளை பற்றிய விளிம்பு நிலை மாந்தர்களின் கொள்கைகளை சற்றே கிண்டலடிப்பதை குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. என்னதான் சொல்லறிங்க இப்போ?

  பதிலளிநீக்கு
 5. இலக்கியபேதி புடுங்கிவிட்டதா?

  பதிலளிநீக்கு
 6. Respected Yuvakrishna Sir, Please close your blog account.

  பதிலளிநீக்கு
 7. Offer Company-- இலக்கியவாதி இல்லை இலக்கியவியாதி

  பதிலளிநீக்கு
 8. yuvakku ennamo ayiduchu... doctor sikkirama vanthu parungayuvakku ennamo ayiduchu... doctor sikkirama vanthu parunga

  பதிலளிநீக்கு
 9. ஒன்னும் விளங்கல

  பதிலளிநீக்கு
 10. தம்பீஈ... போனமுறை கண்டபோது நல்லாத்தானே இருந்தீங்கள்? இப்படி ஆச்சே?

  பதிலளிநீக்கு
 11. உங்களின் தளத்தை படிக்கும் என்னைப்போன்றோர் சாதாரணர். ஒண்ணுமே புரியல. தயவு செய்து இப்பதிவை முடிந்தால் விளக்கவும்.

  பதிலளிநீக்கு
 12. பாசு ,அந்த ஓவியத்தை வரையுரப்ப ,உங்க மனசுல இதெல்லாம் வந்துச்சா , இல்ல, வரஞ்சபுரம் இதெல்லாம் வந்துச்சா?

  இந்த கொம்மென்ட் படிக்கும் அன்பு வாசகர்களே,என்னோட கன்னி முயற்சில , யுடான்ஷ் நடத்துற சவால் சிறுகதைப் போட்டி -2011 க்கு இந்த கதைய எழுதிருக்கேன், படிச்சு , ஓட்ட போடுங்க:

  B L A C K D I A M O N D

  பதிலளிநீக்கு
 13. தக்காளி சூப்பில் பாஞ்சாமிர்தம் கலந்த மாதிரி சூப்பரோ சூப்பர்

  பதிலளிநீக்கு
 14. இதுதான் பின் நவீனத்துவ இலக்கியமா ?

  பதிலளிநீக்கு
 15. இலக்கியம்! .. இலக்கியம்!!
  யண்ணே..! எங்க ரேஞ்சிக்கு ஒரு தெளிவுரை போடுங்கண்ணே ...

  பதிலளிநீக்கு
 16. உண்மையாவே புரியல....

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 17. யுவா ! ஒரு புள்ளியை வைத்து இவ்ளோ பெரிய கோலம் போட்டிருக்கீங்களே...
  //இந்த படைப்பு ,ஒரு புள்ளியை காகிதத்தில் வைத்துவிட்டு அதை பார்த்துக்கொண்டே இருக்கையில் உங்கள் மனதில் தோன்றிய விசயங்களா??//
  (பி.கு:கண்டிப்பாக பதில் தேவை)

  பதிலளிநீக்கு