20 செப்டம்பர், 2011

ஈரான் – மர்ஜானே சத்ரபி

‘ஈரான்’ – உடனே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

1. மத அடிப்படைவாதம்
2. பல லட்சம் பேரை பலிகொண்ட நீண்டகால ஈரான் – ஈராக் கொடூர யுத்தம்
3. கோமேனி
4. சல்மான் ருஷ்டிக்கு தூக்குத்தண்டனை
5. சில உன்னத உலகத் திரைப்படங்கள்

சரியா?

இன்னும் யோசித்தால் மேலும் ஐந்து விஷயங்களை அதிகபட்சமாக உடனடியாக சேர்க்க முடியும் என்று தோன்றுகிறது. நமக்கும் இவற்றைத் தவிர வேறொன்றும் புதியதாக இதுவரை நினைவுக்கு வந்ததில்லை. ஈரான் பற்றியும், ஈரானியர்கள் பற்றியும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு மதிப்பீட்டை மீளாய்வு செய்யவைக்கிறது இரு புத்தகங்கள். பெர்சேபோலிஸ் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டவை தமிழில் ‘விடியல்’ வெளியீடாக விடிந்திருக்கிறது.

1969ல் பிறந்த மர்ஜானே சத்ரபி என்ற பெண் குழந்தைப் பருவத்தில் தான் கண்ட ஈரானை எழுத்தாகவும், சித்திரமாகவும் சிரத்தையுடன் வடித்திருக்கிறார். ‘சித்திரமா?’ என்று ஆச்சரியப் படுவீர்களே? ஆம். ஓவியரான மர்ஜி (இப்படி சொல்லுறது ஈஸியா இருக்கில்லே?) காமிக்ஸ் வடிவில் தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். வெகுசீரியஸான காமிக்ஸ். குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளும் படிக்கலாம். தப்பில்லை. ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. முதல் நூலை பிரித்ததுமே பல ஆச்சரியங்கள் புதையலாய் புதைந்திருக்கிறது. கண்டுகளித்து, வாசித்து உணருங்கள். தீவிரவாசிப்பாளர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.

மர்ஜி டெஹ்ரானில் பிரெஞ்சுப் பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியை தொடங்கியவர். பொதுவுடைமை சித்தாந்தங்களில் நன்கு பரிச்சயம் கொண்ட பாரம்பரியத்தில் பிறந்தவர். இஸ்லாம் புரட்சி ஈரானில் ஏற்பட்டபோது மர்ஜிக்கு பத்து வயது இருக்கலாம். திடீர் திடீர் கட்டுப்பாடுகள். பெரும்பாலானவை பெண்ணடிமைத் தனத்தின் உச்சம். சட்டம் அபத்தக் களஞ்சியம்.

ஈரான் கொடுங்கோல் மன்னராட்சி, ஏகாதிபத்திய அடக்குமுறை, சர்வாதிகார அட்டூழியங்கள் என்று மாறி மாறி ஆட்சிமாற்றங்கள கண்ட நாடு. துரதிருஷ்டவசமாக ஒரு ஆட்சியில் கூட மக்கள் நிம்மதியாய், சுதந்திரமாய் உணர்ந்ததில்லை. இப்படியிருந்த நிலையில் தொடங்கிய ஈரான் – ஈராக் யுத்தம் பல பேரின் வாழ்க்கை வரைபடத்தை புரட்டிப் போட்டது. எண்ணற்றவர்கள் அகதிகளாயினர். திக்கற்றவர்கள் தியாகிகளாயினர். அதாவது உயிரை இழந்தனர். இறைவனின் கருணை கொஞ்சூண்டு மிச்சமிருந்தது போலிருக்கிறது. இன்றும் ஈரான் மிஞ்சியிருக்கிறது.

இந்தப் போருக்குப் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் குறுக்குசால் விளையாட்டு இருந்தது. இருநாடுகளும் பலத்த அழிவுக்குப் பின்னரே இதை உணர்ந்தன. ஈராக் இஸ்ரேலுக்கு பாலஸ்தீனிய பிரச்சினையில் அச்சுறுத்தலாக இருந்தது. ஈரான் மத்திய கிழக்கு ஆசியாவிலேயே இராணுவபலம் மிகுந்த நாடாக வலிமைபெற்று திகழ்ந்தது. எட்டாண்டு கால தொடர்போரின் விளைவால் இருநாடுகளிலும் பெருமளவு இராணுவ மற்றும் பொருளாதார‌ வலிமை குன்றியது. குழம்பிய எண்ணெய்க் குட்டையில் மீன் பிடித்தது அமெரிக்காவும், பிரிட்டனும்.

இரு நூல் முழுவதுமே சொல்லப்பட்டிருப்பது மர்ஜியின் வாழ்க்கை என்றாலும், இதன் மூலமாக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால ஈரானையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. ஈரானியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள். ஆனால் திறமையானவர்கள். மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் பலமாக எள்ளல் செய்யப்படுபவர்கள். இந்தியர்களைப் போலவே ஆதிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடு, குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடே பிறக்கிறார்கள். ஆட்சிக்கு வருபவர்கள் மட்டும் மக்குகளாக இருக்கிறார்கள். மாய்க்கன்களாக இருக்கிறார்கள். கூமூட்டைகளாக இருக்கிறார்கள். மதவெறியர்களாக மனிதாபிமானம் கிஞ்சித்துமற்ற காட்டுமிராண்டிகள் ஈரானின் ஆட்சிக்கட்டிலை தொடர்ந்து அலங்கரிக்கிறார்கள். மக்களையும், நாட்டின் வளர்ச்சியையும் அலங்கோலப் படுத்துகிறார்கள்.

அகதியாய் வாழ்வது எவ்வளவு அவலம் என்பதற்கு மர்ஜியின் வாழ்க்கையே சாட்சி. விமானங்கள் வீசும் வெடிகுண்டுகளுக்கிடையே ஏது பள்ளியும் கல்வியும்? கல்வி கற்க ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு பயணிக்கிறாள். ஈழத்தமிழர்களின் அவலம் இக்கட்டங்களை வாசிக்கும்போது இயல்பாகவே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

ஐரோப்பியர்களால் தன் மண் கேவலப்படுத்தப்படும் போது மனதுக்குள் குமுறுகிறாள். அடக்கமுடியாத நேரங்களில் அடங்க மறுத்து பொங்கியெழுகிறாள். கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கியிருந்தபோது ஒரு நாள்.

மதர் சுப்பீரியர் : ஈரானியர்களைப் பற்றிச் சொல்லப்படுவது சரியாக இருக்கிறது. அவர்களுக்கு நாகரிகமே தெரியாது.

மர்ஜி : உங்களைப் பற்றி சொல்லப்படுவதும் உண்மைதான். கன்னியாஸ்தீரிகளாக ஆவதற்கு முன்பு நீங்கள் எல்லோரும் வேசியாக இருந்தீர்கள்.

இப்படி வாதிடும்போது மர்ஜிக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கலாம். இவ்வளவு வாயாடியான பெண் ஒரு இடத்தில் நீடிக்க முடியுமா? வீடு வீடாக மாறி எப்படியோ பள்ளிக் கல்வியை முடிக்கிறாள்.

ஈரானிய கலாச்சாரத்தை ஒட்டியும் வாழ முடியவில்லை. ஈர்க்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் பால் முழுவதுமாக விழவும் முடியவில்லை. தடுமாறுகிறாள் மர்ஜி. காதல் வசப்படுகிறாள். நிராகரிக்கப் படுகிறாள். காதலிக்கப் படுகிறாள். போதை வசமாகிறாள். தெருத்தெருவாய் அலைகிறாள். வெறுத்துப் போய் ஈரானுக்கு திரும்புகிறாள்.

இப்படி போகிறது அவளது வாழ்க்கை. ஈரானுக்கு திரும்பியவள் உருக்குலைந்த நாட்டையும், மக்களையும் கண்டு மனம் வெதும்புகிறாள். சோர்ந்து சுருண்டு விடுகிறாள். மீண்டும் பல்கலையில் சேர்ந்து பட்டம் பயில்கிறாள். காதலிக்கிறாள். திருமணம் செய்துகொள்கிறாள். விவாகரத்து செய்கிறாள். பிரான்சுக்கு பறக்கிறாள்.

ஒரே நேர்க்கோட்டில் அமையாதது தான் மர்ஜியின் வாழ்க்கை. அவளது வாழ்க்கையை ஒட்டியே நாட்டின் நடப்பையும் வழிகாட்டி போல சொல்லிக்கொண்டே வருவது நல்ல யுத்தி. சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு இருநூல்களிலும் பஞ்சமேயில்லை. பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம். வாசிக்க வாசிக்க பேரின்பம். சித்திரங்களை திரும்ப திரும்ப காண கண் கோடி வேண்டும்.

மர்ஜானே சத்ரபியின் ஓவியங்கள் தத்ரூபமாக இருப்பதோடு சூழலின் உணர்வை அச்சுஅசலாக பிரதிபலிக்கிறது. தமிழில் அற்புதமாக எஸ்.பாலச்சந்திரன் மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஒரு முழுநீளத் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த இரு தொடர்நூல்களும் நமக்கு ஏற்படுத்துகிறது.

நூல்கள் :

1. ஈரான் – ஒரு குழந்தைப் பருவத்தின் கதை (154 பக்கம்)
2. ஈரான் – திரும்பும் காலம் (188 பக்கம்)

நூலாசிரியர் : மர்ஜானே சத்ரபி

தமிழில் : எஸ்.பாலச்சந்திரன்

விலை : நூலொன்றுக்கு தலா ரூ. 100/-

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு)
கோயம்புத்தூர் – 641 015. தொலைபேசி : 0422-2576772

11 கருத்துகள்:

 1. புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் அருமையான அலசல்.

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 3. வெறும் 100 ருபாய்தானா?
  அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ................

  பதிலளிநீக்கு
 4. புத்தகப் பிரியனான எனக்கு இது பயனுள்ள தகவல். நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 5. //
  manjoorraja said...
  புத்தக அறிமுகத்திற்கு நன்றி.//

  ரிப்பீட்டு

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு பதிவு. எல்லா நாட்டிலேயும் ஆள்பவர்கள் அயோக்கியர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு எந்த நாடும் விலக்கு அல்ல :(
  கிராம்
  http://adhuorukanakalam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு பதிவு. எல்லா நாட்டிலேயும் ஆள்பவர்கள் அயோக்கியர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு எந்த நாடும் விலக்கு அல்ல :(
  கிராம்
  http://adhuorukanakalam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 8. பாகிஸ்தானில் மத துவேஷத்தை காரணம் காட்டி பேஸ்புக் தடை!இதை நம்ம கருப்பு சட்டை கண்மணிகளோ அல்லது பகுத்தறிவு வியாதிகளோ கண்டிக்கவில்லையே!!!இவர்களின் இரட்டை நிலைபாட்டுக்கு இது ஒரு சிறந்த உதாரணம்!

  பதிலளிநீக்கு
 9. >தீவிரவாசிப்பாளர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.

  escape !

  பதிலளிநீக்கு
 10. புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றன உங்கள் விமர்சனம்..

  பதிலளிநீக்கு